இன்னம்பூரான்

“எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ்

சொன்முறை தொடுப்பது நன்மையாகும்.” (தண்டியலங்காரம்: 2)

தண்டியலங்காரத்தின் முதன்மை ஸ்தானம் தன்மையணிக்கே. உள்ளது உள்ளபடி. அவ்வாறு அமைந்துள்ள திருமதி. விசாலம் ராமனின் மூன்று தொடர்கட்டுரைகளை படித்த போது பல எண்ணங்கள் மனதில் வந்து போயின. எங்கள் புதுக்கோட்டை சமஸ்தானம், விராலிமலையும், சித்தன்ன வாசலும், குடுமியான் மலையும், ஆதிரங்கன் கோயிலும், திருகோகர்ணமும், பேரையூரும் ஆக ஒரு சிற்ப சாம்ராஜ்யமே. பேரையூரில் ஒரு பெரிய ஜலதரங்கம், நாகநாதசுவாமி கோயில் புஷ்கரணி. தவழும் வாயு தேவன் அபூர்வமாக அங்கு இசைப்பதுண்டு. அது ஒரு நினைவு. வல்லமை இதழின் வாசகர்களை பற்றி யான் அறியேன். கபிலரும், பரணரும் வந்து எழுதினால் கூட, படித்ததைக் காட்டிக்கொள்ளமாட்டார்கள். அத்தனை பரவசம், மவுனத்தின் மீது! அந்த மரபை மீறத் துணியாதே என்று மனம் அடித்துக்கொண்டது. (மனத்தின் ஈசான்ய மூலை,‘இதைப் படித்தாலும் சொல்லமாட்டார்கள்.’ என்று சவால் விட்டது.) இது நிற்க.

திருமதி. விசாலம் ராமனின் கோர்வையான கட்டுரைத் தொடர், அரிய செய்திகளின் தொகுப்பாகவும் அமைந்துள்ளது. அவர் சொல்வது போல இசை பாடும் சிற்பங்கள் எங்கெங்கெல்லாம் இருக்கின்றன என்பதை நாம் கண்டறிய வேண்டும். அப்படிப்பட்ட ஒரு குதிரை சிற்பம் சிதைந்து கிடப்பதாக, படித்ததும் நினைவில் வந்தது. ‘…அங்கிருக்கும் தெய்வத்தைக் குஷிப்படுத்த தகுந்த சமயத்தில் இசை, நடனம், நாடகம் என்ற கலைகளும் வெளிப்படுத்தப்படுகின்றன…’ என்று அவர் சொல்வதை மனதார ஆமோதிக்கிறேன். முதலிடம் இசைக்கு. ‘ஓம்’ என்று ஒலித்தது உடுக்கு. அந்த ஓசையை அசைத்து இசையாக்கியது மனிதனின் ரசனை. அது இறைவனின் வரம். பாறைக்கும் நாபி உண்டு; ஆத்மா உண்டு; இறையருள் உண்டு. டில்லிவாசியாக இருந்த விசாலத்துக்குத் தெரிந்து இருக்கும், உத்தர சுவாமி மலை மூலவர் சிற்பத்திற்கு உரிய கல்லை தேட காஞ்சி பெரியவர் அளித்த ஆலோசனை பற்றி. விசாலத்தின் கட்டுரையின் நேர்த்தியே, அவர் கூறும் செய்திக்களஞ்சியம். வட இந்தியகோயில்களில் நாமே அபிஷேகம் செய்யலாம் என்பதிலிருந்து ஆகம சாத்திரங்கள் வரை.

ஒரு கற்பனை: வெள்ளைத்தாமரையில் அமர்ந்தவள் கையில் மாசிலா வீணை: சங்கராபரணம். மூங்கில் குழலோதும் மாயக்கூத்தன்: கதனகுதூகலம். உடுக்கொலி: தேவகாந்தாரம். மத்தளத்தில்லானா. பரமாத்வாவும் ஜீவாத்மாவும் சுயநினைவிழந்த ராகமாலிகை நேரம் இது. அற்ப மாந்தர்களாகிய நாம் தள்ளி நிற்கவேண்டும். திருமதி விசாலம் ஓவியங்களை பற்றி மிக குறைவாக எழுதியிருக்கிறார். அவர் நிறைய எழுதவேண்டும், அது பற்றி. அக்காலத்தில் சுவரோவியங்கள் வீடுகளிலும் உண்டு. புதுக்கோட்டையில் நாங்கள் இருந்த வீட்டில் ஒரு மாபெரும் ஶ்ரீராமபட்டாபிஷேக வர்ண ஓவியம். என்ன ஆச்சோ? தஞ்சை பெரியகோவிலில் அம்பாள் சன்னதி விமானத்தில் இருக்கு அதியற்புத ஓவியங்கள் மீது புகை மண்டலம். இதுவா பக்தி?

‘ஸ்வரித்தா, உதத்தா, அனுதத்தா’ எல்லாம் நமக்கு புதிய செய்திகள். நன்றி, விசாலம்.

‘… வேதங்கள் எல்லாமே ஒரு நியதியுடன் ஸ்வரஸ்தானங்கள் பிசகாமல் சொல்ல வேண்டும். அதனால் எழும்பும் ஒவ்வொரு ஒலிக்கும் மந்திர சக்தி உண்டு. அவை காற்றுடன் கலந்து நல்ல அதிர்வலைகளை உண்டு செய்யும்…’ என்கிறார், அவர். அதனால் பேரையூர் ஜலதரங்கம் நினைவுக்கு வந்தது. தமிழ் செய்யுள் இலக்கணத்தில் கலிப்பாவின் துணை உறுப்புகளில் ‘அம்போதரங்கம்’ ஒன்று. நாற்சீரடி இரண்டு அடியால் இரண்டு, நாற்சீரடி ஓரடியால் நான்கு, முச்சீர் ஓரடியால் எட்டு, இரு சீர் ஓரடியாக பதினாறு என்று சொல்லும்போதே, அலை அலையாக என்ற எண்னம் உமக்கு எழுகிறதல்லவா! அந்த நீர்த்தரங்கம் (கடல் அலை) எம்மனதை விட்டு அகலவில்லையே.

பஜனை: பாபநாசம் சிவன் அவர்களின் விடியற்காலை பஜனையைப் பற்றி என்றோ ஒரு நாள் எழுதினேன். அதை சமீபத்தில் தான் என வலைப்பூவில் பதிவு செய்தேன். ரஷ்யா, ஈரான், பெரு ஆகிய நாடுகளிலிருந்து தமிழ் வாசகர்கள். விசாலத்தின் இந்தத் தொடரும் அவ்வாறு விரவி வரவேண்டும். எனக்குப் பிடித்த பஜனை புதுக்கோட்டை கோபாலகிருஷ்ண பாகவதர் பந்ததி.

நாதசுரம் என்றவுடன் ஞாபகம் வருவது: புதுக்கோட்டை கீழராஜவீதி, வடக்கு ராஜ வீதி சந்திப்பில் நடு ராத்திரி ஒரு மணிக்கு வெள்ளப்பெருக்கு எடுத்தோடிய டி.என்.ராஜரத்னம் பிள்ளையவர்கள் வாசிப்பும், ஐம்பது வருடங்கள் கடந்து பாகவதமேளாவுக்காக, நிலவொளி வெள்ளத்தில் நடந்து போகும் போது, காற்றில் வந்த கீதம்: கம்பீர நாட்டை. ‘ஆன்மீக நற்றலை’ விசாலம் சொல்லில்.

மணியோசை மண்டைக்கு லாஹிரி. மாதாகோயில்களில் மாபெரும் மணி. ஒவ்வொரு மணிக்கும் தனியொரு நாதம். பக்கம் பக்கமாக வரலாறு, இங்கிலாந்தில். அவற்றை தொகுத்து வைத்த சீ.டி. அகப்படவில்லை. போகட்டும். விசாலம் தான் பக்க வாத்தியங்களின் வரலாறு படைத்து விட்டாரே.

இசை பாடும் தூண்களைப் பற்றி அவர் எழுதிய மூன்றாவது கட்டுரையின் நிறைவை மெச்சத்தான் வேண்டும். அவர் பெருமையுடன் கூறுவது சாலத்தகும்.

‘…இசை கடவுளிடம் செல்ல ஒரு பாலமாக அமைகிறது. பழங்குடி மக்கள் தங்கள் திருவிழாவில் பலவிதமான வாத்தியங்களை உபயோகித்து வந்திருக்கின்றனர். ஆன்மீக வழிபாட்டின் போது தாரை தப்பட்டை ,மேளம் என உபயோகித்து இயற்கையைப் பூசித்திருக்கின்றனர் தேவாலயங்களிலும் பியானோ வாசிக்கப்பட்டு கரோல் என்ற இசை பாடப்படுகிறது. ஆன்மாவை உயர்ந்த நிலைக்கு அழைத்துப்போகும் சக்தி இசைக்கு உண்டு என்பது எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட உண்மை…’

என்கிறார் திருமதி.விசாலம். ஒவ்வொரு சொல்லும் இறையாண்மையின் பிரதிபலிப்பு. பல புது தகவல்களை இவருக்கு கொடுத்து உதவிய,இசை மேதையும் சங்கீத வித்துவானும் ஆன அவரது சகோதரர் திரு வெங்கட் அவர்களுக்கும் வல்லமை வாசகர்கள் சார்பில் (!) நன்றி தெரிவிக்கும்,

இன்னம்பூரான்

11 06 2013

சித்திரத்துக்கு நன்றி: http://upload.wikimedia.org/wikipedia/ta/2/2c/Tanjai1000.jpg

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தன்மையணி. இசையும் கோயிலும் 1,2,3…

  1. அன்பு சகோதரர் இன்னபூரான் ஜி  நான் எழுதிய மூன்று பாகங்கள் கொண்ட  ‘இசையும் கோயிலும்;  பற்றி உங்கள்  பொன்னான நேரத்தையும் ஒதுக்கி படித்துமேலும்  பல அருமையான  தகவல்களைக்கொடுத்ததற்கு மிக்க நன்றி .இசை பாடும் குதிரை சிற்பம் பற்றி  அறிய எனக்கும் ஆவல் தான்  கோயில் . சிற்பங்களைப் பற்றி தனியாக எழுதும் எண்ணம் இருக்கிறது . நீங்கள் என் கட்டுரையைப்படித்து பின்னூட்டமும் இட்டதில் என் மனம் நிறைந்து விட்டது . அதுவும் நீங்கள் எழுத நான் பாக்கியசாலியாகவே என்னைக்கருதுகிறேன்  அன்புடன்   விசாலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.