Author: ஜெயராமசர்மா

  • குடிகொண்டே இருக்கின்றார்!

    எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    பார்வியக்கப் பாரதத்தை
    பார்க்கவைத்த பேராக
    பாரததத்தின் பிரதமராய்
    நேருவந்து நின்றாரே!

    பார்நடுங்க வைத்தபெரும்                     jawaharlal-nehru
    பேர்போன வெள்ளையரை
    வேர்பிடுங்கி எடுத்தாரே
    வித்தகராம் நேருமகான்!

    ஊர்விடுங்கி உலையிலிட்டு
    ஊர்கோலம் போனஅந்தப்
    பார்பிடுங்கும் வெள்ளையரின்
    படைநடுங்க வைத்தாரே!

    ’சேர்’போட்டு அழையென்று
    சிரச்சேதம் செய்தவரை
    ஊர்விட்டு விரட்டியதை
    உலகமே வியந்ததுவே!

    பணம்படைத்த குடும்பமதில்
    பண்டிதர் பிறந்தாலும்
    பாரதத்தாய் விடுதலைக்காய்ப்
    பலவிதத்தில் உழைத்தாரே!

    ஏவலுக்கும் காவலுக்கும்
    எத்தனைபேர் இருந்தாலும்
    எங்கள்நேரு அதைவிடுத்து
    ஏற்றனரே சிறைவாசம்!

    சிறைசென்ற போதுமவர்
    பொறையிழந்து போகாது
    குறியொன்றே மனங்கொண்டு
    நெறியுடனே செயற்பட்டார்!

    சிறையிருந்து எழுதியவை
    சிறப்புடைய நூலாச்சு
    அனைவருமே படிப்பதற்கு
    அறிவுநிறை கருத்தாச்சு!

    காந்திமகான் வழிநடந்து
    காணநின்றார் பாரதத்தை
    சாந்தி சமாதனம்காண
    ஏங்கிநின்றார் நேருமகான்!

    வழித்தடங்கள் மாறிடினும்
    மனதுமட்டும் மாறவில்லை
    மாநினைப் போடுநின்று
    மகான்நேரு செயற்பட்டார்!

    யாரெதிர்த்து நின்றாலும்
    பாரதத்தின் விடிவுக்காய்
    நேருவைத்த திட்டங்கள்
    நீண்டநாள் நிலைத்தனவே!

    பதினேழு வருடங்கள்
    பாரததத்தின் பிரதமராய்ப்
    பண்டிதர் நேருமகான்
    பக்குவமாய் இருந்தாரே!

    குழந்தைகள் தினமதிலே
    குதூகலமாய் இருப்பவர்தான்
    குடும்பமாம் பாரததத்தின்
    குலவிளக்காம் நேருமகான்!

    ரோஜாவாய் இருக்குமெங்கள்
    ராஜாவாம் நேருமகான்
    குழந்தைமனம் எல்லாமே
    குடிகொண்டே இருக்கின்றார்!

    Share
  • திருமுறைகள் கூறும் வழிபாட்டு நெறி

    — எம்.ஜெயராமசர்மா. 

    சிவா

     

    “திரு” என்றால் உயர்ந்தது … பெருமை மிக்கது …. சிறந்தது …. மேன்மையானது …. தெய்வீகத்தன்மையானது எனப் பலநிலைகளில் பொருளைக் கொண்டிருக்கிறது. அதே வேளை செல்வம், அழகு, பொலிவு, நல்வினை என்னும் பொருள்களையும் உணர்த்தி நிற்கிறது. முறை என்றால் … நூல் என்னும் பொருளும், முறைப்படுத்துவது, நெறிப்படுத்துவது என்னும் பொருளும் அடங்கியிருக்கின்றதை காணலாம்.

    எனவே “திருமுறை” என்றால் … உயரிய சிவஞானச் செல்வத்தை மக்கள் அடைவதற்குரிய வழிகாட்டும் நூல் என்றும், பரம்பொருளை அடைந்து அருள் பெறுவதற்கு உயிர்களை நெறிப்படுத்துவது என்றும் பொருள் கொள்ளலாம். இந்தவகையில் திருமுறையானது நமது சமயத்தின் உயிர்நாடியாக விளங்குகின்றது எனலாம். திருமுறைகள் பெரும் பொக்கிஷமாகும். சமயத்தை, வாழ்வியலை, இறை அனுபவத்தை எல்லாம் யாவருக்கும் எடுத்துக்காட்டப் பெருந்துணையாகி நிற்கின்றன. இத்திருமுறைகளில் வழிபாடு பற்றி பலவித நெறிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவையாவும் நமது ஈடேற்றத்துக்கு உதவுவனவாக இருகின்றன.

    வழிபாடு என்றால் என்ன? ஒருவன் தனக்கு நன்மைகளை அளிக்கவேண்டி இறைவனை வாழ்த்தி வணங்குவது வழிபாடு ஆகும். வணங்குதல், போற்றுதல், பிரார்த்தனை என்றும் இதற்குப் பொருளை எடுத்துக் கொள்ளலாம். உலகிலே உள்ள உயிர்கள் இறைவனை சேர்வதற்கு ஏதுவாக இருப்பது வழிபடுதலேயாகும். அவ்வாறுவழிபடும் பொழுதுதான் துன்பத்துக்குக் காரணமாகிய பிறவியினின்றும் நீங்கி இன்பக்கடலான இறைவனை அடையமுடியும்.

    வழிபாடு என்பதை இறைவனிடம் செலுத்தப்படும் அன்பாகவும் கருதலாம். அன்பின் காரணமாக இறைவனைப்பற்றிய சிந்தனை உண்டாகிவிடும். அந்தச் சிந்தனையை திருமுறைகள் பலவிதமான வழிப்பாட்டின் மூலம் நமக்கெல்லாம் காட்டி நிற்கின்றன. திருமுறைகளில் பலவிதமாக வழிபாட்டு நெறிபற்றி கூறியிருப்பினும் அவைகளில் நமக்கு எது உகந்ததோ அதனை நம் வாழ்வில் நாம் கடைப்பிடித்து ஒழுகவும் கூட வாய்ப்பும் இருக்கிறது.

    சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற படிமுறையிலும் வழிபாடுபற்றி திருமுறைகளில் சொல்லப்பட்டிருக்கிறது. சற்புத்திர மார்க்கம், தாசமார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் என்னும் வகையிலும் திருமுறைகள் வழிபாட்டைக் காட்டிநிற்கின்றன. நமக்கு எது பொருத்தமாக இருக்கின்றதோ அதனைக் கைக்கொள்வதிலும் தவறில்லை.

    திருமுறைகளில் இடம்பெறுகின்ற அடியார்கள் ஒவ்வொருவரும் ஒரே நிலையில் இருந்து வழிபட்டார்கள் என்று சொல்லமுடியாது. அவரவர் விருப்பப்படி இறைவனை வழிபட்டு தமது ஈடேற்றத்துக்கு அடிகோலினார்கள் என்றே எண்ண வேண்டியுள்ளது.

    ஞானசம்பந்தரை கிரியைக்கும், அப்பரை சரியைக்கும், சுந்தரரை யோகத்துக்கும், மணிவாசகரை ஞானத்துக்குமாக எடுத்துக்காட்டுவதும் வழக்கமாகிவிட்டது. ஆனால் இவர்கள் நால்வரது வழிபாட்டிலும் கூட எல்லாவிதமான வழிபாடுகளும் கலந்து இருப்பதனை அவர்களது திருமுறைப் பாடல்கள் வாயிலாக அறிந்து கொள்ளவும் கூடியதாக இருக்கிறது.

    நால்வரோடு சேர்ந்து ஏனைய அடியவர்களும் திருமுறைகளில் இடம்பெறுகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் பலவிதமான சூழல்களில் இருந்து வந்தவர்கள். அதனால் அவர்களும் தமக்கு எது ஏற்றதோ அப்படியான வழிபாட்டு முறையினையே தேர்ந்தெடுத்து இருந்தார்கள் என்பதையும் திருமுறைகள் வாயிலாக அறியலாம்.

    மிகவும் இலகுவாக இருப்பது சரியை வழிபாடுதான் என்பதை திருமுறையில் நாம் கண்டுகொள்ளலாம். அந்த வழிபாட்டை எப்படிச்செய்ய வேண்டும் என்பதை மிகவும் அழகாக அப்பர் பெருமான் நமக்கெல்லாம் காட்டும்பாங்கு அவருக்கே உரியதனித்துவம் ஆகும்.

    நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
    நித்தலு மெம்பிரானுடைய கோயில்புக்குப்
    புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டுப்
    பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
    தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடிச்
    சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
    அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதியென்றும்
    ஆரூரா என்றென்றே அலறா நில்லே

    என அப்பர் பெருமான் சரியைத்தொண்டை மிகத்தெளிவாக திருமுறை வாயிலாகத்தந் துள்ளார். நெஞ்சமே நீ நிலை பெற வேண்டுமானால் தவறாமல் எம்பெருமான் உறையும் கோவிலுக்குப் “போ” என்கின்றார். முதலாவது நிலை கோவிலுக்குப் போவதுதான். அதன்பின்பு எம்பெருமான் இருக்குமிடத்தை விடியமுன் கூட்டிப்பெருக்கி கழுவிச் சுத்தம் செய்து பூக்களைக்கொண்டு பூமாலைகட்டி இறைவன புகழ்ந்து நெக்குருகப்பாடி, தலைமேற் கைகுவித்து ஆனந்தப்பரவசப்பட்டு ஆடி அவனது நாமங்களைச் சொல்ல வேண்டும் இதுதான் சுகமான இனிமையான வழிபாடு என்று அப்பர் காட்டுகின்றார்.  இதையே …

    “காதலாகிக் கசிந்துகண்ணீர்மல்கீ
    ஓதுவார்தமை நன்நெறிக்குய்ப்பதும்
    வேத நான்கினும் மெய்ப்பொருளாவது
    நாதன் நாமம் நமச்சிவாயவே”

    என்று சம்பந்தப்பெருமானும் சொல்லி நிற்கின்றார்.

    இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
    இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
    துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
    தொழுகையர் அழுகையர் துவழ்கையர் ஒருபால்
    சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
    திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
    என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
    எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

    என்று மணிவாசகப் பெருமானும் இந்த வழிபாட்டை ஆதரித்து கூறிநிற்பதை திருமுறையின் வாயிலாக நாம் கண்டு தெளியலாம்.

    இவர்களோடு சுந்தரரும் சேர்ந்து இறைவனை
    “பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா” என்று ஏற்றி போற்றி பாடிப்பரவி நிற்கின்றார்.

    “சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
    நலந்தீங்கிலும் உன்னைமறந்தறியேன் உன்நாமம் என்நாவில் மறந்தறியேன்”
    என்று அப்பர் சொல்லுவதும் இலகுவான சரியைமுறைவழிபாடுதானே.

    பத்தாம் திருமுறையாக இருப்பது திருமந்திரமாகும். திருமந்திரத்தைத் தந்தவர் சித்தரான திருமூலராவார். அவரும் சரியை வழிபாடுபற்றிக்கூறி இருக்கின்றார்.

    “நாடும் நகரமும் நற்றிருக் கோவிலும் தேடித் திரிந்து சிவபெரு மானென்று
    பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சக் கோயிலாய்க் கொள்வனே”

    என்று சொல்லி இறைபுகழ் பாடிப்பரவுவதை நல்ல வழிபாடு எனச் சுட்டிக்காட்டுகின்றார் .இவ்வாறு பாடிப்பரவி நிற்கின்ற வேளையிலே என்ன நடக்கும் என்பதனை

    “விம்மும் வெருவும் விழம் எழும் மெய்சோருந்
    தம்மையுந் தாமறி யார்கள் சதுர்கெடுஞ்
    செம்மை சிறந்த திருஅம் பலக் கூத்துள்
    அம்மலர்ப் பொற்பாதத் தன்புவைப் பார்கட்கே”

    என்று ஆகிவிடும் நிலை வந்து விடும் என்கிறார் திருமூலர். இவரது கூற்று மணிவாசகரின் “இன்னிசை வீணையருடன்” ஒத்ததாக அமைந்து இருக்கிறதல்லவா?

    சரியை நெறியில் திருவிளக்கிடுதல் மிகச்சிறந்த ஒரு வழிபாட்டு நெறியாக இருப்பதை பனிரெண்டாம் திருமுறை வாயிலாகக் காணமுடிகிறது. திருவொற்றியூரில் கலிய நாயனாரும், திருவாரூரில் நமிநந்தி அடிகளும், தில்லையில் கணம்புல்லரும் திருவிளக்கிட்டே சிவகதிஅடைந்தனர் என்பதனை பெரியபுராணம் காட்டிநிற்கிறது. திருவிளக்கிட்டுவந்த நமிநந்தி அடிகளை அப்பர் பெருமான்போற்றிப் பாடும் திருமுறைப் பாடல்வாயிலாக திருவிளக்கிடுவதன் பெருமை எமக்கெல்லாம் ஒரு வழிகாட்டியாகவும் நல்லஒரு வழிபாட்டு நெறியாகவும் அமைந்து இருக்கிறதெனலாம்.

    பெரும்புலர் காலை மூழ்கி பித்தர்க்குப் பத்தராகி
    அரும்பொடு மலர்கள் கொண்டு ஆர்வத்தையுள்ளே வைத்து
    விரும்பினால் விளக்குத் தூபம் விதியினா லிடவல்லார்க்கு
    கரும்பினிற் கட்டிபோலவார் கடவூர் வீரட்டனாரே

    விளக்கினாற் பெற்றவின்ப மெழ்கினாற் பதிற்றியாகும்
    துளக்கினன் மலர்தொடுத்தாற் றூயவிண் ணேறலாகும்
    விளக்கிட்டார் பேறுசெல்லின் மெஞ்நெறி ஞானமாகும்
    அளப்பில் கீதஞ்சொன்னார்க் கடிகடாம் அருளுமாறே.

    திரு அங்கமாலை அப்பரின் முக்கிய வாய்ப்பாடாகும். இதில் வழிபாடு எப்படி நடைபெறவேண்டும் …அதற்கு உதவுவன என்ன என்பதை அட்டவணைப்படுத்தி
    இலகுவான வழிபாட்டை எல்லோருக்கும் காட்டியுள்ளார்.

    “தலையே நீவணங்காய்
    கண்காள் காண்மின்களோ
    செவிகாள் கேண்மின்களோ
    மூக்கே நீ முரலாய்
    வாயே வாழ்த்து கண்டாய்
    நெஞ்சே நீ நினையாய்
    கைகாள் கூப்பித் தொழீர்
    ஆக்கையாற் பயன் என்
    கால்களாற் பயன் என்”

    … இது ஒரு பாலபாடம் மாதிரி இருக்கிறது அல்லவா? இதைவிட இலகுவாக வழிபாட்டை எப்படிச்சொல்லுவது.

    கண்ணப்பரின் வழிபாடு ஒரு விதம். குங்கிலியக்கலயநாயனாரின் வழிபாடு இன்னொருவிதம். எறிபத்தர் வழிபாடோ முற்றிலும் வேறுபட்டது. அப்பூதியார் வழிபாடு இன்னொருவிதமானது. சிறுத்தொண்டர் செய்கையும் வழிபாடும் நினைத்தே பார்க்கமுடியாதது. மெய்ப்பொருள் நாயனாரின் செயலும் அவரின் வழிபாட்டின் போக்கும் பெரும் வியப்பையும் ஆச்சரியத்தையும் தருவிப்பது. பூசலார் நினைப்பும் வழிபாடும் மிகவும் மேலோங்கியது.

    குளம்வெட்டுதலும், குங்குலியம் தூபம் போடுதலும், அடியவர்க்கு அன்னமிடுதலும் அடியவர்க்கு வேண்டிய உபசரணைகள் செய்வதும், கோவில்கட்டுதலும், அதனைப் பரிபாலிப்பதும், இவையெல்லாம் ஒரு விதத்தில் இறைவனுக்கு அர்ப்பணமாகும் வழிபாடு என்றே திருமுறைகள் வாயிலாக எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.

    தினமும் கோவிலுக்குச் சென்று இயன்ற திருப்பணிகளைச் செய்வதுதான் நமக்குப் பொருத்தமானதாய் இருக்கும் என்று நினைப்போமாயின் அதனையும் செய்யலாம் என திருமுறைகள் எமக்கு வழிகாட்டி நிற்கின்றன. நமது சமயம் மிகவும் சுதந்திரமானது. செய் அல்லது ஓடிவிடு என்று ஓர் நாளும் எமது சமயம் சொன்ன வரலாறே இல்லை.
    “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
    எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை” என்று தைரியம் கூறிநின்றதுதான் எங்கள் சமயத்தின் பெருமையும், எங்கள் சமயத்தை வளர்த்தஅடியார்களின் சிந்தனையுமாகும்.

    எவர் எவர்க்கு எத்தகைய வழிபாட்டுமுறை உகந்ததாக இருக்கிறதோ அதனை அவர்கள் கைக்கொண்டு இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.

    “வேண்டத் தக்கது அறிவோய் நீ
    வேண்ட முழுதும் தருவோய் நீ
    வேண்டும் அயன் மாலுக்கு அரியோய் நீ
    வேண்டி என்னைப் பணிகொண்டால்
    வேண்டி நீ யாது அருள் செய்தாய்
    யானும் அதுவே வேண்டின் அல்லால்
    வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்
    அதுவும் உன் தன் விருப்பு அன்றே.”

    இதுவும் மணிவாசகர் காட்டும் ஒருவித வழிபாட்டு நிலையன்றோ!

    “முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
    ………………………………………………………………………..
    தன்னை மறந்தாள் தன்நாமங் கெட்டாள்
    தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே “

    இந்த நிலை வழிபாட்டில் ஞான நிலையாகும். இதற்குள்ளும் நாம் வரலாம். ஆனால் அதற்கு எங்கள் மனம் மிகுந்த முயற்சியை எடுக்க வேண்டும். வழிபடுவதில் முக்கியம் கடவுள் மீது உண்மை அன்புடன் வழிபடுவதே ஆகும்.

    “கங்கை யாடிலென் காவிரி யாடிலென்- கொங்குதண் குமரித்துறை யாடிலென்
    ஓங்குமாகடல் ஓதநீராடிலென் – எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே”
    இதுதான் உண்மையான வழிபாடு என்று திருமுறை வாயிலாக அப்பர் எமக்கெல்லாம் அறிவுறுத்தி நிற்கின்றார். உள் அன்போடு வழிபடுதல்தான் உண்மையான வழிபாடு என்பதை மனத்தில் பதிய வைக்கவேண்டும். இதனையே திருமுறைகளும் வலியுறுத்துகின்றன.” அன்பே சிவம் என்பதை “திருமூலரும் வலியுறுத்தி நிற்கின்றார்.

    எம்.ஜெயராமசர்மா B.A (Hons) Dip.in Edu , Dip.in Soc , M.Phil Edu ,SLEAS
    (முன்னாள் கல்விப்பணிப்பாளர்)

    படம் உதவிக்கு நன்றி: http://www.meditationbangles.com/shiva_wallpaper.php

    Share
  • எம்மோடு இணைந்துவிட்டார்!

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

     இத்தாலி நகர் பிறந்த
     இனிய பெஸ்க்கிப் பாதிரியார்
     இன்பத் தமிழைக் கற்று
     எம்மோடு இணைந்து விட்டார்!              Beschi

     முப்பது வயதில் வந்தார்
     முயற்சியால் தமிழ் படித்தார்
     எப்போதும் நாம் நினைக்க
     எழுதி வைத்தார் தமிழ்நூல்கள்!

     மதம் பரப்பும் நோக்கோடு
     வந்த பெஸ்க்கிப் பாதிரியார்
     மனதைப் பறி கொடுத்தார்
     வாழுகின்ற தமிழின் இடம்!

    தாம் படித்த தமிழ்மொழியைத்
    தலைமீது வைத்து அவர்
    தேம்பாவணி தந்து
    திரும்பிநாம் பார்க்க வைத்தார்!

    தமிழ் மொழியைக் கற்றதனால்
    தன்பெயரை மாற்றிக் கொண்டு
    வீரமா முனி ஆகி
    வேட்கையுடன் பணி செய்தார்!

    தமிழரே தமிழ் எழுதத்
    தயங்கி நிற்கும் வேளையிலே
    தமிழர் அல்லாப் பாதிரியார்
    தமிழ் எழுதித் தலைநிமிர்ந்தார்!

    அமிழ்தான தமிழ் கற்று
    அதில் திருத்தம் பலசெய்து
    அனைவரது உள்ள மெலாம்
    அமர்ந்து விட்டார் பெஸ்க்கியவர்!

    இத்தாலி நகர் தந்த
    இனிய தமிழ் வரவாய்
    என்றுமே எண்ணி நிதம்
    எம்மனதில் போற்றி நிற்போம்!

     

    Share
  • சேக்கிழார் சிறப்பும் உயர்வும்!

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    chekkizhar“பக்திச் சுவை நனி சொட்ட சொட்ட”ப் பாடியதால் சேக்கிழார் சிறப்புப் பெறுகிறாரா? புதிய உத்தியைக் கையாண்டதால் சேக்கிழார் உயர்ச்சி பெறுகின்றாரா? முதலமைச்சர் ஆகவிருந்தமையால் சிறப்புப் பெறுகின்றாரா? புரட்சிகரமான கருத்துக்களை முன் வைத்தமையால் சிறப்பும் உயர்வும் பெறுகின்றாரா? அல்லது பெரியபுராணத்தைத் தந்தமையால் சிறப்பும் உயர்வும் பெறுகின்றாரா? என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா?

    பேரரசு உருவாகி அந்தப்பேரரசுக்கு புகழ்மாலைகள் பெருகும் பொழுது ஆட்சியாள ர்கள் தம்மை மறப்பது இயல்புதான். ஆனால் இந்த நிலையைத் தொடரவிட்டால் குறிக்கோள்கள் இல்லாமலே கெட்டழிந்தும் போய்விடலாம். போர் வெற்றியாலும், அதனால் ஏற்படும் பேராசையினாலும் அந்தப்பேரரசு தன்னை ஒருநாளும் தளர்வடையச் செய்யும்படி நடந்து கொள்ளவும் கூடாது. ஆனால் இதனை எந்தவொரு அரசும் நோக்கியதாகத் தெரியவில்லை. தளர்வுறும் வேளை அந்த நாட்டுமக்களையும் அப்போது உள்ள அரசர்களையும் நல்வழிப்படுத்துதல் மிகவும் முக்கியமானதாகும். இதனை முதலமைச்சராக இருந்த அனுபவம் மிக்க சேக்கிழார் தம்வசம் எடுத்துக்கொண்டார். இதனால் பெரியபுராணம் பிறந்தது எனலாம்.

    பிற்காலச் சோழ மன்னரது போக்கைச் சேக்கிழார் விரும்பவில்லை. அவர்களின் மனோபாபம் வேறுவிதமாகப் போவதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு நல்ல வழியைக் காட்டினால்தான் மக்களும் நாடும் மீண்டும் பழைய நிலைய அடையமுடியும் என்று கருதினார். எனவே மன்னர் மனம் மாற, மக்கள் விழிப்புப் பெற, அவர் கையாண்டவழிதான்—ஆண்டவன் அடியாரை அறிமுகப் படுத்தும் அதி உன்னதப் பணியான பெரிய புராணமாக அமைந்தது. “குடிஉயரக் கோனுயர்வான்” இதை நன்கு அறிந்தவராகச் சேக்கிழார் இருந்தபடியால் குடிகள் உயர்வுபெற வேண்டுமானால், கோன் — அதாவது அரசர்களை உயிர்ப்பூட்டவேண்டும் என எண்ணினார். அதனால் மன்னர் மனத்தில் இறையுணர்வை ஊட்டுவதே மிகச் சிறந்தவழி என்று அதனை மையமாகக் கொண்டு சுவைபட ஒருகாவியத்தை ஆக்கினார்.

    மந்திரிகள் என்றாலே ஊழலும், பித்தலாட்டமும், நேர்மையீனமும், ஏமாற்றுதலும்தான் எங்களுக்கெல்லாம் தற்போது ஞாபகத்துக்கு வரும். அந்த அளவுக்கு மந்திரிகள் நிலை இருக்கிறது. ஆனால் சேக்கிழாரோ மன்னனையும் மக்களையும் நல்வழிப்படுத்துவதற்காக அந்தஸ்தும் அதிகாரமும் மிக்க முதலமைச்சர் பதவியினையே துறந்து விடுகின்றார். அதிகாரத்தில் இருந்து ஆண்டவன் புகழ் பாட அவர் விரும்பவில்லை. இதனால்தான் அவர் வாயினினின்றும் “கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் – ஓடும் செம்பொனும் ஒக்க நோக்குவார்” என்று வரிகள் வந்தனபோலும்.

    சேக்கிழாரின் புலமை சாதாரணமானதல்ல. கம்பரைப் போல கவிபாடும் ஆற்றல் மிக்கவர். அவர்மட்டும் வேறு துறையில் காவியம் பாடியிருந்திருந்தால் சில வேளைக் கம்பராமாயணத்தைக் கூட விஞ்சியும் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அவர் நோக்கம் அதுவல்ல. அதனால்தான் அடியார்கள் வரலாற்றைத்தேடிப் பிடித்து அதனை எப்படிக் கொடுக்க வேண்டுமோ அப்படிக் கொடுத்து நின்றார்.

    சேக்கிழார் காவியம் பாடுவதற்கு எடுத்துக்கொண்ட பொருள் வித்தியாசமான தாகும். சிலம்பு மட்டுமே உயர்திணை அல்லா ஒன்றைப் பாடுபொருளாகக் கொண்டிருந்தது. அதனை மனத்திற்கொண்ட காரணத்தால் சேக்கிழாரும் “தொண்டை” கருப்பொருளாக வைத்துத் தனது காவியத்தை படைத்து விடுகின்றார். அறுபத்துமூன்று அடியவர் கதைகளை வைத்துக்கொண்டு ஒரு காவியத்தைப் புனைவது என்பது இலகுவான காரியமல்ல.   இதனை நன்கு மனத்திற்கொண்ட காரணத்தால் எப்படியும் இந்த அடியார்களை இணை ப்பதற்கு ஒரு மார்க்கம் கிடைக்காதா என்று சிந்தித்த பொழுதுதான்…அடியார்கள் எவ்வாறு இருப்பினும் அவர்கள் யாவரிடமும் தொண்டு மனப்பாங்கு இருப்பதை அவரால் புரிந்து கொள்ளமுடிந்தது எனலாம். எனவே இப்பொழுது அடியார்கள் தொகை அவருக்குப் பெரிதாகப்படவில்லை. அங்கே தொண்டுதான் தலைமை வகித்தது. எனவே தொண்டை மையமாக வைத்துத் தொண்டர் பெருமையைப் பறைசாற்றும் காவியத்தை எளிதாகப் புனைந்து எமக்கு அளித்துவிட்டார். இது சேக்கிழாரின் பெருமைதானே!

    சுந்தரமூர்த்தி சுவாமிகளும், நம்பியும், பெரியபுராணம் பாடச் சேக்கிழாருக்குப் பெரிதும் உதவிய போதும்….சேக்கிழார் அவற்றோடு மட்டும் நின்றுவிடாமல், அடியார்கள் பற்றிய விஷயங்களையெல்லாம் ஆதாரத்துடன் எடுக்க வேண்டும் என்னும் எண்ணத்தால் ஊர்கள் தோறும் சென்று பல தகவல்களையும் எடுத்துக்கொள்கின்றார். அமைச்சராக இருந்த காரணத்தால் அவர் ஊர்கள்தோறும் சென்று பல வரலாற்றுத் தகவல்களையும், கல்வெட்டுப் போன்றவற்றையும் ஆராயும் நுண்மாண் நுழைபுலத்தைத் தன்னகத்தே கொண்டவராக விளங்கினார். இதனால் அவரின் காவியமான பெரியபுராணம் தலை நிமிர்ந்து நிற்கின்றது. இது அவருக்கு உயர்வையும் சிறப்பையும் தராமல் இருக்கத்தான் முடியுமா?

    பக்தியை ஊட்டுவதற்குப் பெரிய புராணத்தைச் சேக்கிழார் பயன்படுத்தினாலும் அதன் ஊடாகப் பல சமூக சீர்திருத்தங்களையும் துணிந்து செய்ய நினைக்கின்றார். இது அவரின் சமூக அக்கறையினையே காட்டுகிறது எனலாம். பல விஷயங்களையும் கற்றுத் தேர்ந்தவர் என்ற காரணத்தால்தான் சோழ மன்னனே அவருக்கு முதல் அமைச்சர் பதவி வழங்கிப் பெருமைப்படுத்துகின்றான். ஆட்சியில் அதிகாரத்தில் இருந்து வேலை பார்த்தவருக்கு நாட்டின் நிலை, அங்கு வாழும் மக்களின் நிலை பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வாய்ப்பிருந்தது. தனக்குக் கிடைத்ததை அனுபவங்களின் வெளிப்பாடாகப் பெரிய புராணத்தில்…அவரின் சமூக அக்கறையாக வந்து நிற்கிறது எனலாம்.

    பெரிய புராணத்தில் இடம்பெறுகின்ற அடியவர்கள் யாவரும் வெவ்வேறு சமூக நிலையில் இருந்து வந்தவர்கள். அந்தணர், அரசர், புலையர், வேட்டுவர், மீன்பிடிகாரர், வண்ணார், குயவர், மரமேறுபவர்கள், செக்கார், ஆதிசைவர், வேளாளர் இப்படிப் பல சாதிப் பிரிவினரையும் தமது ஒப்பற்ற காவியமான பெரியபுராணத்தில் காட்டி அவர்களை வணங்கத்தக்க நிலைக்குக் கொண்டுவந்தமை சேக்கிழாரின் துணிவுதானே!

    ஆண், பெண், பொருளாதார ஏற்றத்தாழ்வு, கல்வியறிவு, சாதி எதையுமே கருத்தில் கொள்ளாமல் சமயம் என்பதற்குள் இவர்கள் அனைவரையும் கொண்டுவந்து…இவர்கள் அனைவரும் இறைவனுக்குத் தொண்டு செய்கின்ற நிலையில் போற்றப்பட வேண்டியவர்கள் என்று காட்டிய துணிச்சலால் சேக்கிழார் சிறப்பும் உயர்வும் பெற்றே நிற்கிறார் எனலாம்.

    சேக்கிழார் காலத்தில் சாதிக் கட்டுப்பாடு மிக இறுக்கமாக இருந்திருக்கிறது என்பதற்கு அவரின் காவியத்தில் வருகின்ற அடியார்களே சான்றாகும். தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் சென்று வணங்கமுடியாத நிலை காணப்பட்ட காலம். இதனைச் சேக்கிழார் மனித தர்மம் அற்றது எனக் கருதியதால்தான் அறுபத்து மூவரையும் இறைவன் அடியார்களாக்கி விடுகின்றார். பெரிய புராணத்தில் வருகின்ற அடியார்கள் பல சாதிகளைச் சேர்ந்த்திருந்த போதிலும் யாவரும் சிவமயமாக நின்று தொண்டையே தம் மன த்தில் இருத்திய காரணத்தால் சாதி அடிபட்டுப் போவதையே நாம் இதன் மூலம் கண்டுகொள்ள முடிகிறது. “ஆண்டவன் சன்னிதானத்தில் அனைவரும் சமம்” என்னும் அரிய கருத்தை அகில உலகமும் அறியச் செய்த காரணத்தால் சேக்கிழார் சிறப்புக்கும் உயர்வுக்கும் உரியவர் ஆகிறார் அல்லவா?

    ஒதுக்கி வைக்கப்பட்டவர்களை இன்று கோவில்கள்தோறும் சிலை வடிவில் உள்ளே வைத்துப் பூசனைகள் செய்தும், பெருவிழா எடுத்தும், குருபூசை என்று குறித்துக் கொண்டாடியும் வருகின்றோம் என்றால்…அந்தப் பெருமைக்கும் சிறப்புக்கும் சேக்கிழார்தான் காரணம் என்பதை எவருமே மறந்து விடமுடியாது.

    எமது சமயத்தின் தொண்டர் பற்றிக் கூறவந்தாலும்… ஆயிரம் ஆண்டுகால தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றினையும், மொழி பற்றிய நிலையும், சமயங்களின் நிலையையும் முதன்முதலாகப் பதிவு செய்து எமக்கெல்லாம் தந்து நிற்கின்றார் சேக்கிழார்.

    வீரம் என்றால் பொதுவாக …. புஜபல பராக்கிரமம் கொண்டவர்களையும், பல போர்களில் வெற்றி கண்டவர்களையுமே சொல்லுவது வழக்கம். ஆனால் சேக்கிழாரோ வீரத்துக்கும் வீரர்களுக்கும் வித்தியாசமான விளக்கத்தை அளித்து வியக்கவைகின்றார். முதலமைச்சராகவிருந்தவர். பல போர்களைக் கண்டவர். ஆனாலும் அவற்றில் ஈடுபட்டவர்களை ’வீரர்’ என்றோ அவர்கள் பெற்றது ’வெற்றி’ என்றோ அவர் மனம் ஏற்கவில்லை. அதாவது புறத்தே நடக்கும் போரைவிட அகத்தே நடக்கும் போரும் அதனை வெற்றி கொள்ளுதலுமே வீரமும் வெற்றியும் எனக் கருதினார். இதற்கு எடுத்துக்காட்டாகத் திருநீலகண்டரைக் காட்டுகின்றார். புலனடக்கம் பெற்றவர்தான் உண்மையான வீரர் என்பதைச் சேக்கிழார் காட்டுவது எத்துணை அரிய பெரிய தத்துவமாக இருக்கிறது! இந்திரியங்களை வென்றவர்களால்தான் பகையின்றி வாழமுடியும். பகையை ஒழித்தவர்களால் தான் தொண்டுள்ளத்தோடு செயற்படமுடியும். இதுதான் வீரமும் அதற்கான வெற்றியும் என்று புதிய விளக்கத்தைச் சேக்கிழார் தந்து சிறப்பு மிக்கவராகி விடுகின்றார். பற்றை நீக்கிக் குறிக்கோளுடன் துறவு மனப்பான்மை கொண்டு வாழும் தொண்டர்களின் “வீரம் என்னால் விளம்பும் தகையதோ ?” என்ற சேக்கிழார் வாக்கை நோக்கவேண்டும்.

    அதேவேளை “ஈர அன்பினர் யாதுங் குறைவிலார் — வீரம் என்னால் விளம்பும் தகையதோ “சிறுத்தொண்டர், எறிபத்தர், வீரம் படைத்தவரானாலும் ஈரமும் கொண்டவர்கள். நாவுக்கரசர், குங்கிலியக்கலையர், கண்ணப்பர், வீரத்தையெல்லாம் எளிதில் சொல்லிவிடமுடியாது என்று சேக்கிழார் காட்டுவது அவரின் புதுச் சிந்தனையை வெளிப்படுத்துவதாக இருக்கிறதல்லவா? வீரத்துக்கு இவ்வளவு விளக்கமா என எண்ணத் தோன்றுகிறதல்லவா? வீரம் மிக்கவர்கள் ஆனாலும் ஈரமும் மிக்கவர் என்பதுதான் முக்கியம். இதனை ” ஈர அன்பினர் யாதும் குறையிலார் ” என்று சேக்கிழார் சுட்டுவது நோக்கத் தக்கது.

    பெண்களைப் பெருமைப்படுத்துவதில் அக்கறை காட்டுகின்றார் சேக்கிழார். அவள் வந்தாள் என்று பெண்களைச் சமகால இலக்கியங்களால் பெண்கள் விளிக்கப்பட்ட வேளை…பெண்களுக்கு மரியாதை கொடுத்து “அவர்” என்றும் “வந்தார் ” என்றும் தமது காப்பியத்தில் அழைப்பதும் ஒருவித புதுமைதானே!

    “சிவலிங்கத்துக்கு” அருமையான விளக்கத்தைச் சேக்கிழார் தந்து நிற்கின்றார். காணாத “அருவனுக்கும்” “உருவனுக்கும்” காரணமாய் நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்” அதாவது கண்ணால் காணும் நிலை— உருவம். காணாநிலை — அருவம். இதனை ’அருவுருவம்’ என்று சேக்கிழார் காட்டுகின்றார். ஒரு உருவத்தில் இறைவனைக் காண்பது தொடக்க நிலை. உருவமே இல்லாத சிவனை மனதுக்குள் கொண்டுவருவது ஞானநிலை. இரண்டுக்கும் இடைப்பட்ட “அருவுருவ நிலை” சைவத்தின் உயர்தத்துவ நிலையாகும். இதனையே மிக நுட்பமாகச் சேக்கிழார் காட்டுவது அவரின் திறத்தை வெளிப்படுத்தி நிற்கிறதல்லவா?

    ஆலயத்தில் ஆண்கள் எப்படி வணங்க வேண்டும் , பெண்கள் எப்படி வணங்க வேண்டும் என்பதையும் சேக்கிழார் காட்டுவது நோக்கத்தக்கது. “அட்டாங்க பஞ்சாங்கமாக முன்பு முறையினால் வணங்கி “எட்டினொடு ஐந்தாகும் உறுப்பினால் பீடு நிலத்தின் மேல் பெருக்கப் பணிந்து”
    இவை எல்லாம் சேக்கிழாரின் அறிவுறுத்தல்கள்தானே!

    ” உலகெலாம் ” என்று இறைவன் அடி எடுத்துக் கொடுக்கும்வரை பல காலம் காத்திருந்தார் சேக்கிழார். பெரிய புராணம் வந்தால் உலகுக்கு நன்மை பயக்கும் என்று சேக்கிழார் நினைத்தார் என்றே எண்ணமுடிகிறது. சமயத்தை, தொண்டை, பக்தியை, கலாசாரத்தைப் பாடவந்தாலும் அவரிடம் உலகம் தழுவிய உயர்ந்தநோக்கு இருந்திருக்கிறது என்பதையே பெரிய புராணம் மூலமாக நிலைநாட்ட முயன்றுள்ளார்.

    பக்தர்கள், தொண்டர்கள், அடியார்கள் என எப்படி அழைத்தாலும் அவர்கள் யாவரும் உலகில் பொதுமையானவர்களே!

    அகில காரணர் தாள் பணிபவர், கைத்திருத்தொண்டு செய்கடப்பாடினர், உள்ளும் புனிதர்கள், கோதிலாக் குணப் பெருங்குன்றனார், கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார், ஓடும் செம்பொனும் ஒக்க நோக்குவார், கும்பிடலேயன்றி வீடும் வேண்டாதவர், பாரம் ஈசன் பணி அலது ஒன்றிலார், ஈர அன்பினர் யாதும் குறைவிலார், வீரர்.

    மேலே கூறிய அடைமொழிகளை உற்று நோக்கும் பொழுது இவை யாவும் உலகந் தழுவிய ஒரு நிலையையே உணர்த்தி நிற்கிறது அல்லவா? “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் குரலும் இதனுடன் ஒத்துவருவதையும் பார்க்க முடிகிறதல்லவா? “தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! ” என்பதைச் சேக்கிழார் தெளிவாக அறிந்தவர் என்பதும் புலனாகிறதல்லவா?

    அன்பின் உயர்வுக்கு முன்னால் வேறு எதுவுமே இருக்கமுடியாது என்பது சேக்கிழார் எண்ணமாகும். இதனை விளக்க வரும்பொழுதுதான் கண்ணப்பரையும் சிவகோசரியாரையும் எமக்குக் காட்ட வருகின்றார். சிவகோசரியார் விதி மார்க்கத்தில் நிற்க– கண்ணப்பரோ பக்தி மார்க்கத்தில் நிற்கின்றார். விதி மார்க்கத்தோர் அறிவின் துணைகொண்டு இறைவனை அறியமுயல்பவர்கள். பக்தியில் நிற்பவர்கள் உணர்வு மய மானவர்கள். அவர்கள் அறிவை நாடுவதில்லை. இதனையே கண்ணப்பனிடம் காண்கின் றோம். விதி மார்க்கத்தில் செல்பவர்கள் இறைவனைக் கனவில்தான் காணமுடியும். ஆனால் பக்தி அப்படியன்று. கண்ணப்பனுக்கு ஆறாவது நாளே இறைவன் காட்சிகொடுத்து அருள்புரிகின்றான். இங்குதான் அன்பு எவ்வளவு உச்சமானது எனச் சேக்கிழார் காட்டுகின்றார். இதனால்தான் ” கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் — என்னப்பன் என் ஒப்பில் என்னையும் ஆட்கொண்டருளி” என்று மணிவாசகப் பெருமானே வியந்து நிற்பதைக் காண்கின்றோம். சேக்கிழார் வழிபாடுகளைப்பற்றி காணும் பாங்கு வியந்து நிற்க வைக்கிறதல்லவா?

    அன்பு என்பதில்” நான்” இருக்கக்கூடாது. நான் இல்லாத அன்புதான் கண்ணப் பனது அன்பாகும். கண்ணப்பன் அன்பு பயன் கருதாததாகும். இதைத்தான் ” கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா நிலை” என்பதாகும். அன்பின் உயர்வை – இறைவனை அடைவதற்கு எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை எடுத்துச்சொல்லும் விதத்தால் சேக்கிழார் ஈடிணையற்றவராக நிற்கிறார் எனலாம்.

    இப்படிப் பல்வேறுவிதமான நிலைகளில் நின்று சிந்தித்துப் பெரிய புராணம் என்னும் பொக்கிஷத்தை எமக்குத் தந்தமையால் சேக்கிழார் என்றுமே சிறப்புக்கும் உயர்வுக்கும் உரியவர் ஆகி நிற்கின்றார். அவர் பக்திச்சுவையோடு தமிழ்ச்சுவையினையும் தரத் தவறவில்லை.” சொற்றமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார்” என இறைவனே தமிழில்தான் பாடவேண்டும் என்று விரும்பினான் என்னும் செய்தியையும் தெரிவித்துத் தமிழின் பால் தாம் கொண்டிருந்த ஆராக் காதலையும் சேக்கிழார் வெளிப்படுத்தி நிற்கின்றார்.

     

    Share
  • உலவுறாய் வாலி நீயும்!

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    வாலியுன் பாட்டைக் கேட்டால்
    வலியெலாம் பறந்தே போகும்
    போலிநீ இல்லை ஐயா
    பொங்கிடும் தமிழின் ஊற்று!                         Vaali

     நூலெலாம் ஆக்கித் தந்து
     நுகர்ந்திடச் செய்தாய் ஐயா
     நாலுபேர் உன்னைப் போற்ற
     நயமிகு கவிதை தந்தாய்!

     ‘வாலிபக் கவிஞன்’ என்று
      வரம்வாங்கி வந்தாய் ஐயா
      வைரமாய் வரிகள் பாடி
      மனங்களில்  பதிந்தே விட்டாய்!

     தெருவெலாம் உந்தன் பாடல்
     தினமெமைக் கேட்கச் செய்தாய்
     தமிழிலே மூழ்கி நாளும்
     தரமுடைக் கவிதை தந்தாய்!

     நரைதிரை வந்த போதும்
     நாளெலாம் பாடி நின்றாய்
     உரமுடைக் கவிஞன் ஆக
     உலவுறாய் வாலி நீயும்!

    Share
  • எழுத்து நாகரிகம்!

    -எம்.ஜெயராம சர்மா – மெல்பேண்

     

    paper-penஎழுதத்தெரிந்துவிட்டால் எழுதிவிடலாம் எனப்பலபேர் நினைக்கிறார்கள்.
    அப்படி நினைத்தபடியால்தான் எப்படியோ எல்லாம் எழுதியும் விடுகிறார்கள்.

    எழுதிய விஷயங்கள் எப்படி இருந்தாலும் அவர்களுக்கு அதைப்பற்றி எந்தவித வருத்தமோ கவலையோ வருவதேயில்லை. மற்ற‌வர்கள் என்ன சொன்னாலும் என்ன எண்ணினாலும் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவே மாட்டார்கள். எழுதிக்கொண்டே இருப்பார்கள்.

    நாங்கள் எதைச்செய்தாலும் அந்தச் செயல் மற்றவர்களை எந்தவிதத்திலும் பாதித்து விடவே கூடாது. எங்களது விருப்பு வெறுப்புக்களைப் பகிரங்கப்படுத்தும் பொழுது மிகக் கவனமாகவே வெளிப்படுத்தவேண்டும். எங்களுக்குப் பிடித்த விஷயம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நினைக்கலாமா?அப்படி நினைக்கவே கூடாது.

    சாதாரணமாக வீட்டிலே இருக்கின்ற அம்மா அப்பா பிள்ளைகளிடையேயே சாப்பாட்டில் கூட வித்தியாசம் இருப்பதை காணமுடியும். அப்பாவுக்கு நல்ல‌ காரம் பிடிக்கும். அம்மாவோ எதிர்மாறாக இனிப்பையே விரும்புபவராக இருப்பார். பிள்ளைகள் ஒவ்வொன்றுமே வித்தியாசமான சுவையை விரும்பலாம்.

    அவர்களை பார்த்து…இனிமேல் நீங்கள் எல்லோரும் காரம்தான் சாப்பிட வேண்டும் என்று அப்பா கட்டளை இட்டாலோ வற்புறுத்தினாலோ அது நாகரிகமாக இருக்குமா?அது சர்வாதிகாரமாகவும் காட்டுமிராண்டித்தனமாக‌வுமாகவே இருக்கும் அல்லவா?

    வீட்டிலேயே இப்படி இருக்கையில் வெளியில் உள்ளவர்கள் நிலையைச் சிந்திப்பது முறையான செயல்தானே. ஒவ்வொருவருக்கும் விருப்புக்களும் விருப்பம் இல்லாத தன்மையும் நிறையவே இருக்கிறது. அது அவரவர் சுதந்திரம். அதில் தலையிட எவருக்கும் உரிமை இல்லை. ஆனால் அவர் விருப்பத்தினை மற்றவர் மீது திணிக்க முயற்சிக்க நினைப்பதுதான் நாக‌ரிகமற்ற செயலாகி விடுகிறது எனலாம்.

    சினிமா பார்ப்பதை அந்த நாள்தொட்டு இன்றுவரைப் பலர் நல்லதென்று
    எடுத்துக்கொள்வதேயில்லை. ஆனால் நல்ல சினிமாக்களும் வந்துதான் இருக்கின்றன. அதற்காக ஒட்டுமொத்த சினிமாவையும் அது சார்ந்தவர்களையும் திட்டித் தீர்ப்பதோ வசை பாடுவதோ முறையா? இதனை பலர் எழுத்தால் செய்யும்பொழுது எழுத்து நாகரிகம் சற்று யோசிக்கின்றது.

    சமயம் பக்தி கடவுள் இவையெல்லாம் பொதுவானவை. இவை பற்றி பல‌ கருத்து முரண்பாடுகள் காலத்துக் காலம் இருந்துதான் வந்திருக்கிறது. ஆனால் சமயங்களோ பக்திமார்க்கங்களோ கடவுள்பற்றிய நம்பிக்கைகளோ உலகைவிட்டு மறைந்து விடவில்லை.

    இதுபோலத்தான் உயர்வு தாழ்வு என்னும் சாதிப் பாகுபாடும். என்னதான் சமத்துவம் பேசினாலும் சாதியென்பதை ஒழிக்கமுடியவில்லை. அது ஒருபக்கத்தில் தனது வேலைகளைச் செய்தபடியே இருக்கிறது.

    புத்தர் வந்தார்; இயேசு வந்தார்; காந்தியும் வந்தார்; ரமணர்வந்தார்; ராமகிருஷ்ண‌ பரமஹம்சர் வந்தார்; அவரது வாரிசாக சுவாமி விவேகானந்தரும் வந்தார். இவர்கள் அனைவருமே மிக மிக நயமாகவும் அதேவேளை வெகு நாகரிகமாகவுமே நல்லவற்றைச் சொன்னார்கள் எழுத்தாயும் தந்தார்கள். யாரையும் குறை சொல்லவும் இல்லை. யாரையும் புண்படும்படிச் செய்யவும் முயல‌வில்லை. இது எமக்கெல்லாம் பெரியதொரு பாடமாகும்.

    இப்படி இவர்கள் எல்லாம் நடந்து காட்டிய பின்னரும் கூட நாகரிகம்
    இல்லாமல் இங்கிதம் என்றால் என்ன என்று தெரியாமல் புரியாமல்
    எல்லோர் மனத்தையும் நோகடிக்கும் வகையில் எழுதுவது என்பது
    இவர்களிடம் எப்படித்தான் வந்ததோ?

    வீட்டுக்குள் இருந்தால் அது அவர்களுக்கு மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும். வீட்டை விட்டு வெளியில் வரும்பொழுது அது பல பேரைப் பாதிக்கும் அல்லவா? இதை ஏன் இவர்கள் உணர்கிறார்களில்லையோ தெரியவில்லை. விமர்சனம் என்பது தேவைதான். அதனை நாகரிகமாகச் செய்ய வேண்டும்.

    வாரியார் சுவாமிகள் பல இடக்கு முடக்கான கேள்விக் கணைகள் வந்தபோதெல்லாம் யாருக்கும் எந்தவித மனநெருடல்களும் ஏற்படாவகையில் மிகவும் நாகரிகமாக அதனைக் கையாண்டுள்ளார் என்பதை அறிகின்றோம்.

    எழுத்து என்பது மிகவும் வல்லமை வாய்ந்த ஆயுதமாகும். அதனை
    மிகவும் லாவகமாகக் கையாளாவிட்டால் அது தாக்கிச் சேதப்படுத்திவிடும். கத்தியால் பழத்தையும் வெட்டலாம். அதேவேளை ஒரு ஆளையும் வெட்டிவிடலாம். நாகரிகம் அற்ற எழுத்துக்கள் மற்றவரை வெட்டிக்காயப்படுத்திவிடும்.

    எனவே எழுத்தால் காயப்படுத்தாது…கருத்துக்களைக் கொடுப்போம்.
    எழுத்தால் கண்ணியத்தைக் காப்போம். எழுத்தால் யாவரையும் இதமாக வருடிக்கொடுப்போம். அப்பொழுது எழுதும் எழுத்தில் நிச்சயமாக நயத்தகு நாகரிகம் வந்தே சேரும். நல்ல எழுத்தால் நாடும் வளரும். வீடும் வளரும். நட்பும் வளரும். உறவுகளும் மலரும். உள்ளமெல்லாம் உயர்வு பெறும். கண்ணியத்தைக் கடைப்பிடித்துக் கருத்துக்களை எழுதுவோம்.

     

    Share
  • சீக்கிரம் அருள்வாய் கந்தா!

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    கருவிலை கருணை வேண்டும்
    கல்வியில் உயர்வு வேண்டும்
    தெருவெலாம் அலையா வண்ணம்              Murugan
    தினமெனைக் காக்க வேண்டும்

    ஒருமனம் கொண்டு உன்னை
    உவப்புடன் வணங்க வேண்டும்
    பெருமனம் கொண்டு என்னைப்
    பேணுவாய் கந்த வேளே!

    கருணைகூர் முகங்கள் ஆறும்
    காத்திட வேண்டும் ஐயா
    வறுமையில் வாடி நாளும்
    வதங்கிடா திருக்க வேண்டும்!

    தரமுடை மனத்தைப் பெற்றுத்
    தரணியில் வாழ வேண்டும்
    சிரமதில் அகந்தை போகச்
    சீக்கிரம் அருள்வாய் கந்தா!

    நரை திரை வந்திடாமல்
    நலமுடன் வாழ வேண்டும்
    நாளுமுன் நாமம் சொல்லி
    நானுனைப் பாட வேண்டும்

    குறையுடை வாழ்க்கை தன்னைக்
    குமராநீ அகற்ற வேண்டும்
    நெறியுடன் நின்று வாழ
    நீயெனக் கருள்வாய் ஐயா!

    Share
  • இடைவெளி தேவையா?

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    grandparentsமுதியவர்களை இளையவர்கள் தமக்கு முட்டுக்கட்டைகள் என்று எண்ணுகிறார்கள். அவர்களுக்கு அவசரம்; இவர்களுக்கு ஆறுதல். அவசரம் என்பது சிந்திக்க விடாது. எதையும் ஆறுதலாக எடுக்கும் பொழுது பல தெளிவுகள் ஏற்பட வாய்ப்புண்டு அல்லவா? இதனை இளமை ஏற்க மறுக்கிறது. இதைப்பார்க்க முதுமை மறுகுகிறது. எடுத்ததற்கெல்லாம் ஏதாவது சொல்லியபடியே இருக்கிறார்களே என எரிச்சல்படுகிறார்கள் இளையவர்கள். அவர்கள் அப்படிச் சொல்வதற்குக் காரணம் அவர்களுக்கு முன்பு கிடைத்த பாடமாகும். தமக்கு ஏற்பட்ட கசப்புகள், மனச்சங்கடங்கள், மீண்டும் இளையவர்களுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்னும் நல்ல எண்ணமே இதற்கான காரணமாக இருக்கிறது எனலாம்.

    பாட்டிகள், தாத்தாக்கள் எல்லாம் பிள்ளைகளுக்கு நல்ல கதைகளை எல்லாம் சொல்லிக் காட்டுவார்கள். அந்தக் கதைகளில் அருமையான பயனுள்ள செய்திகள் எல்லாம் உள்ளே இருக்கும். அவையாவும் வாழ்க் கையில் பிரச்சினைகள் வரும் பொழுது தீர்வு காண்பதற்கு உதவி நிற்கும் தன்மை வாய்ந்தனவாகும். எனவே பாட்டி தாத்தாவை ஒதுக்கிவிடுவது என்பது முறையற்ற செயலேயாகும்.

    ஒளவை பாட்டிதான்…ஆனால் அவரை ஒதுக்கினோமா? அவரின் “அறஞ்செய விரும்பு“ தொடர்தரும் அருங்கருத்துக்கள் எமக்கெல்லாம் அரணாக இருக்கிறதல்லவா?

    பாட்டி வைத்தியம் பலவித பக்குவத்தை அளிப்பதையும் பார்க்கிறோம் அல்லவா? குழந்தைகள் அழும்; ஏன் அழுகின்றன என்று சில வேளைகளில் கண்டுபிடிக்கவே முடியாது போய்விடும். வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் விக்கி விறைத்துவிடுவார்கள். அங்கு ஒரு பாட்டி இருந்தால்…அவருக்கு அதற்கான காரணமும் தெரியும். அதற்கான பரிகாரமும் தெரியும். பாட்டியின் பக்குவத்தால் பதறித் துடித்த குழந்தை பக்குவமாவதுடன் சிரித்து விளையாடவும் தொடங்கிவிடும். வீட்டில் உள்ளவர்களும் ஆறுதல்பட்டு நிற்பர்.

    இரவில் தயிர் சாப்பிடக்கூடாது. இரவில் கீரை சாப்பிடக்கூடாது என்று முதியவர்கள் எச்சரிப்பார்கள். அதனை இளையோர் கிண்டல் பண்ணி அவர்களின் எச்சரிக்கையையும் புறந்தள்ளி விட்டுச் சாப்பிடுவார்கள். அதன் பின்பு அவர்கள் அவஸ்தைப்படும் பொழுதுதான் முதியோரின் எச்சரிக்கை பற்றி உணர்ந்து கொள்ளுவார்கள்.

    முதியவர்கள் சொல்லுவது அத்தனையும் மூடப்பழக்கம் என்றும், தேவையற்றன என்றும் எண்ணுவதே இளையவர் வழக்கமாகி விட்டது. அதனால் அவர்கள் எதைச் சொன்னாலும் காரண காரியம் பாராது உடனே ஒதுக்கித்தள்ளி விடுவதை வழக்கமாக்கிக் கொண்டுவிட்டார்கள்.

    Share
  • மலர்ந்திடுமே தீபாவளி!

           -எம். ஜெயராம சர்மா- மெல்பேண்

           தீபாவளி என்றால்
           தித்திப்பு மனதில் வரும்
           தெருவெங்கும் மக்களெலாம்                deepavali
           பெருமகிழ்வு கொண்டிடுவார்!

           கோபங்களைத்  தவிர்த்து
           குற்றங்களை மறந்து
           தீபமிட்டு வழிபட்டு
           சிறப்புடனே மகிழ்ந்து நிற்பார்!

           அடக்கி ஒடுக்கி நின்று
           ஆணவத்தின் தலை ஏறி
           அமைதியைக் குலைப்பதிலே
           ஆருக்கு என்ன பயன்?

            மற்றவரை வாழவிட்டு
            வம்புதும்பு தனையொதுக்கி
            நற்கருணை யோடிருந்தால்
            நலந்தானே யாவருக்கும்?

            இக்கருத்தை உள்ளடக்கி
            எங்கள் தீபாவளியுளதை
            எல்லோரும் மனதிற்கொளின்
            இனித்திடுமே தீபாவளி!

            ஏழ்மை நிலை ஒழியவேண்டும்
            இரக்ககுணம் ஓங்கவேண்டும்
            தாழ்வுமனம் ஓடவேண்டும்
            தலைநிமிர்ந்து வாழவேண்டும்!

            ஊழ்வினையை நம்பிநம்பி
            ஒதுங்கிநாம் நின்றிடாமல்
            வாழும் மனம் வந்துவிடின்
            மலரும் நல்ல தீபாவளி!

             பட்சணமும் செய்ய வேண்டும்
             பட்டாசும் வெடிக்க வேண்டும்
             கஷ்டமின்றி வாழ நாங்கள்
             கடவுளிடம் வேண்ட வேண்டும்!

             இஷ்டமுடன் யாவரையும்
             ஏற்று நிற்கும் மனமும்வேண்டும்
             துஷ்டரையும் துணிவுகொண்டு
             தூயராக்க முயலவேண்டும்!

             மட்டில்லா மகிழ்ச்சி என்றும்
             வந்துகொண்டே இருந்துவிடின்
             வாழுகின்ற நாட்களெல்லாம்
             மலர்ந்திடுமே தீபாவளி!

             பெண்ணடிமை போகவேண்டும்
             பெண்பிறந்தால் போற்றவேண்டும்
             மண்ணிலவர் நல்லவண்ணம்
             வாழும்நிலை வளரவேண்டும்!

             உண்ணுகின்ற உணவுமுதல்
             ஊற்றெடுக்கும் ஆறுவரை
             பெண்ணாகப் போற்றுகிறோம்
             பிறகுதான் தூற்றுகிறோம்!

             மனக்கதவைத் திறவுங்கள்
             மங்கையரை மதியுங்கள்
             மங்கையர்கள் மகிழ்ந்திட்டால்
             மலர்ந்திடும் நற்தீபாவளி!

             மஞ்சளொடு குங்குமமும்
             மல்லிகையும் அலங்கரிக்க
             மங்களமாய் பெண்கள்வரின்
             மலர்ந்திடுமே தீபாவளி!

            பெண்ணவளின் பெருமையினைப்
            பேணிவிடும் வேளையிலே
            மண்ணுலகில் தீபாவளி
            மலர்ந்திடுமே நாளெல்லாம்!

    Share
  • கவிதையில் வாழுகின்றாய்!

       -எம். ஜெயராம சர்மா- மெல்பேண்

    kannadasan     கற்பனைக் கடலுள் மூழ்கி
         கணக்கில்லா முத்தெடுத்து
         அற்புதக் கவிதை தந்து
         அனைவரின் கவிஞன் ஆனாய்!

         சொற்சுவை அனைத்தும் சேர்த்து
         சுந்தரத் தமிழில் தந்த
         பொற்புடைக் கவிதையாலே
         புவியெலாம் புகழுதுன்னை!

         காவியம் செய்து நின்ற
         கவி கண்ணதாசனே நீ
         கவிதையால் உலகையாண்டு
         காவியம் ஆகி விட்டாய்!

         ஓவியம் போல  நீயும்
         ஒவ்வொரு கவிதை தந்தாய்
         பாவிடைத் தோய்ந்தாய் நாளும்
         பாட்டுக்கே அரசனானாய்!

         ஊரெலாம் உன்னைப் போற்ற
         உன்கவி உதவிற்றன்றோ
         வாரிநீ தந்து நின்றாய்
         வளமுடைத் தமிழை நாளும்!

         கார்முகில் போல நீயும்
         கவிமழை பொழிந்து நின்றாய்
         கவி கண்ணதாசனே நீ
         கவிதையில் வாழுகின்றாய்!

    Share
  • இடைவெளி தேவையா?

    எம்.ஜெயராமசர்மா

    பாட்டிகளும் தாத்தாக்களும் பகுத்தறிவு இல்லாதவர்கள் என்று எண்ணிவிடுதல் ஏற்றதல்ல. பகுத்து அறிந்து இருந்தபடியால் தான் அவர்கள் புத்தி சொல்ல வருகிறார்கள். இளமையில் உள்ளோர் அதனை ஏற்றுவிட மறுக்கிறார்கள். காரணம் பகுத்து அறிவதற்கு அவர்கள் விரும்புவதில்லை. அதனை அவசியமானது என்றும் எண்ணுவதும் இல்லை. இளமையின் வேகம் எதையும் ஏற்க விரும்புவதில்லை. இந்த நிலை தொடர்ந்து கொண்டே வருகிறது. இதனைப் பற்றி கட்டாயம் சிந்தித்துப் பார்க்கவே வேண்டும்.

    இளமையும் — முதுமையும் மோதக்கூடாது. இளமையென்பதும் தேவை. அதே வேளை முதுமையும் தேவையானதே. எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கே இவை இரண்டும் இணைந்து இருப்பதைக் காணமுடியும். அனுபவமும் வேகமும் தான் அவைகள்.

    எங்களது சைவசமய வரலாற்றை எடுத்துக்கொண்டால் இது நன்கு புலப்படும். சம்பந்தர் இளமையில் இருக்கிறார். அப்பர் பெருமானோ முதுமையில் இருக்கிறார். இவர்கள் இருவரும் எந்தப் பிணக்குமின்றி இணைந்த காரணத்தால்தான் சைவம் என்பது பேரெழுச்சி பெற்றது எனலாம். சம்பந்தர் இறைவனது அருளை இளம் வயதிலேயே பெற்றுக் கொண்டவர். உயர் வகுப்பைச் சேர்ந்தவர். அப்பரோ சமயம் விட்டுச் சமயம் வந்தவர். ஆனால் சம்பந்தரின் பல்லாக்கை சுமந்துவந்த வேளை சம்பந்தர் அதனை அறிந்து ” அப்பரே ” என அழைத்து உயர்ந்த கெளரவத்தை வழங்கினார் என்று வரலாற்றின் வாயிலாக அறிகின்றோம்.

    அப்பரோடு சம்பந்தர் இணையாவிட்டால் இன்று சைவசமயமே கேள்விக் குறியாகத் தானிருந்திருக்கும். ஆனால் இங்கே இளமையான சம்பந்தர் அப்பரை மதிக்கின்றார். அதேவேளை அனுபவத்தில் முதிர்ந்த அப்பரோ சம்பந்தர் சொல்லைப் பெரிதும் போற்றுகின்றார். இருவரும் இணைய அவர்களுடன் மக்களும் இணைய சைவ பக்தி இயக்கம் வீறுகொண்டு எழுந்து வருகிறது.

    இது சமய எழுச்சி. இதே மாதிரி சமூக எழுச்சியிலும் இளமையும் முதுமையும் இணைந்து நின்றதையும் நாம் மறந்து விடக்கூடாது. இந்திய சுதந்திரப் போரில் மகாத்மா முதுமையானவர். அவருடன் நேரு என்னும் இளமை கைகோர்க்கிறது. அங்கே சுதந்திரப் போராட்டம் முன்னேறுகின்றது. காந்தி என்னும் முதுமையுள் பல லட்சக்கணக்கான இளமைகள் இணைகின்றன. சில வேளைகளில் முரண்பாடுகள் தென்பட்டாலும் காந்தி என்னும் முதுமை தனது பொறுமை என்னும் குணத்தைக் கடைப்பிடித்து முரண்பட்ட இளமைகளையும் தன்னோடு இழுத்தணைத்து நின்றுவிடுகின்ற பக்குவத்தைக் காண்கிறோமல்லவா? காந்தியுடன் பல முதுமைகளும், இளமைகளும் இணைந்த காரணத்தால் அன்னிய ஆதிக்கம் அகன்றுவிடுவதைக் கண்டோமல்லவா?

    ஸ்ரீ ராமகிருஷ்ணர் முதுமை. நரேந்திரன் என்னும் இளமை அங்கே இணையும் வேளை அற்புதமான சிருஷ்டி ஏற்படுகிறதல்லவா? நரேந்திரன் என்னும் இளமை ஸ்ரீ ராமகிருஷ்ணரைப் புறந்தள்ளி விடவில்லை. உதாசீனப் படுத்தவில்லை. மூலையில் படுக்க வைக்க எண்ணவில்லை. விவேகத்துடன் செயலாற்றி விவேகானந்தராக வீறுகொண்டு எழுந்து நிற்பதைக் காண்கிறோம் அல்லவா?

    ஞானானந்தர் என்னும் மகானால் உருவாக்கப் பட்ட ஆன்மீக அமைப்புத்தான் ஞானானந்த சமாஜம். ஞானானந்தர் என்னும் முதுமையுடன் ஆங்கிலம் படித்த விஞ்ஞானச் சிந்தனைமிக்க ஹரிதாஸ் என்னும் இளமை இணைகின்றது. குரு முதுமையானவர் என் அந்த இளமை நினைக்கவில்லை. குருவின் பாதத்தைப் பற்றிக்கோண்டு சுவாமி ஹரிதாஸ் என்னும் பெயருடன் நாம சங்கீர்த்தத்தால் உலகம் முழுவதும் சென்று ஆன்மீகம் தழைக்கச் செய்ததை நாடே அறியும்.

    Share
  • ஆராய்ந்து தேர்ந்திடுவீர்!

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

      அடியார்களின் இலக்கோ
      ஆண்டவனை அடைவது
      அரசுள்ளார் இலக்கோ
      அனைத்தையும் அள்ளுவது!

       ஆணவத்தின் இலக்கோ
       அனைத்தையுமே அழிப்பது
       ஆதலால் இலக்குதனை
       ஆராய்ந்து தேர்ந்திடுவீர்!

       வள்ளுவனார் இலக்கோ
       வாழ்வை வளமாக்குவது
       தெள்ளுதமிழ் பாரதிக்கோ
       தேசமதின் விடுதலையே!

       உள்ளமதில் நல்லவெண்ணம்
       ஊற்றெடுத்து நின்றுவிடின்
       நல்லநல்ல இலக்குகளை
       நாம்பெற்று நிற்போமே!

       கத்தியின்றி ரத்தமின்றி
       யுத்தம்செய்யும் இலக்கு
       காந்திமகான் உள்ளமதில்
       தோன்றி நின்றதன்று!

       வெற்றியென்னும் பெயரைக்கொண்டு
       வீழ்த்தல் வீரமன்று
       சத்தியத்தைக் கையில்கொண்டு
       சாதித்தாரே காந்தி!

       உத்தமரின் இலக்கைக்கண்டு
       உயிர்ப்புப் பெற்றவுலகு
       உண்மையான இன்பம்பெற்று
       உதிர்த்ததே நல்லுவகை!

    Share
  • அருவி!

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    வள்ளுவரின் குறள் படித்தால்
    மனமாசு அகன்று விடும்                                  kural
    தெள்ளுதமிழ் மூலம் அவர்
    தேடி எமக் களித்துள்ளார்
    அள்ள அள்ளக் குறையாத
    அத்தனையும் தந்த அவர்
    அருவி எனப் பாய்ந்தோடி
    அனைவரையும் விழிக்கச் செய்தார்!

    ஆண்டவனை நினைப்பதற்கும்
    அமைதியாய் வாழ்வதற்கும்
    வேண்டுகின்ற கருத்தெல்லாம்
    விதம்விதமாய்த் தந்த குர்ஆன்                                                            Jesus
    நீண்டதொரு அருவியென
    நீள்புவியில் ஓடிநிதம்
    ஆண்டவனின் குரலாக
    அனைவருக்கும் இருக்கிறது!

    பைபிள் எனும் வேதநூல்
    பலமொழியில் வந்துளது
    உள்ளமெலாம் ஒளிஊட்ட
    உரமாக நிற்கிறது
    தெள்ளுதமிழ் பைபிளிப்போ
    சிறப்பான அருவியென                                                                          Lord-Krishna
    கள்ளமெலாம் கரைந்திடவே
    காத்திரமாய் ஓடுதிப்போ!

    கண்ணனது கீதையினால்
    கசடரெலாம் விழிப்புற்றார்
    எண்ணமெலாம் சிறப்படைய
    எல்லோரும் படிக்கின்றார்
    கீதையெனும் அருவியிலே
    கிடந்தெழுந்து வந்துவிடின்                                                                 mosque
    போதையெலாம் தெளிந்துவிடும்
    பொறிபுலனும் ஒடுங்கிவிடும்!

    சமயங்கள் பல அருவி
    சாத்திரங்கள் பல அருவி
    சன்மார்க்கம் குலைந்துவிடின்
    சகதியாய் ஆகிவிடும்
    அருவிகள் ஓடவேண்டும்
    ஆணவம் அழியவேண்டும்
    உணர்விலே நல்லெண்ணம்
    ஓடிடட்டும் அருவிகளாய்!

    கண்ணனும் அருவியானார்
    கர்த்தரும் அருவியானார்
    எண்ணியே பார்க்கும்போது
    எம்நபியும் அருவியானார்
    மண்ணிலே உள்ளாரெல்லாம்
    மாண்புறவே வாழ்வதற்கு
    புண்ணியர்கள் யாவருமே
    புனிதநீர் அருவியானார்!

    Share
  • ஆண்டாண்டு போற்றிடுவோம்!

        -எம். ஜெயராம சர்மா- மெல்பேண்

        muvaஇலக்கியத்தை இலக்கணத்தை
        இங்கிதத்தை நானறிய
        நிலைத்தவொரு அறிஞரென
        நின்றிருந்தார் ’முவ’வே !

        தலைக்கனமும் இல்லாமல்
        தனதுநிலை பிறழாமல்
        எடுத்தபணி செய்தனரே
        எங்களது ’முவ’வும்!

        தனித்தமிழால் கதைகள் சொன்னார்
        தரமுடைய நாவல் தந்தார்
        பொறுப்புடனே தமிழ் படித்தார்
        பொறுமைநிறை ’முவ’வும்!

        மொழிநூலை நான்கற்க
        முன்னானார் ’முவ’வும்
        தெளிவாகத் தமிழெழுத
        சிறந்தகுரு ஆனாரே!

        எங்கள்தமிழ் இலக்கியத்தை
        எல்லோரும் அறிவதற்காய்
        எழுதுகின்ற பணிதன்னை
        ஏற்றவரும் ’முவ’வே!

        பாரததத்தின் பிரதமரே
        பணிகொடுத்து நின்றாரே
        ’முவ’வின் முயற்சியினால்
        முத்தமிழைப் பலர்பார்த்தார்!

        அமுதத் தமிழ்மொழியை
        அரவணைக்க வழிசெய்த
        அறிஞராம்  ’முவ’வை
        ஆண்டாண்டு போற்றிடுவோம் !

        ’முவ’வின் பெயர்கேட்டால்
        யாவருமே தமிழ்படிப்பார்
        தாமாகக் கற்றுணர்ந்து
        தலைநிமிர்ந்து நின்றாரே!

        சாவாத மருந்தெனவே
        தரமுடைய நூல்களெலாம்
        ’முவ’வின் மதியினின்று
        முகிழ்த்தெழுந்து வந்தனவே!

        ஆலமரமாக அவரிருந்தாரப்போது
        அவருடைய நிழலினிலே
        அறிஞரெலாம் இருந்தனரே
        ஞாலமெலாம் சென்றுஅவர்
        நம்பெருமை சொன்னாரே
        சீலநிறை ’முவ’வை
        சிந்திப்போம் எந்நாளும்!

       {இன்று (அக்டோபர் 10) மு.வரதராசனாரின் நினைவு நாள்.}

    Share
  • “சென்றிடுவீர் எட்டுத்திக்கும்” – நூல்விமர்சனம்

    எம்.ஜெயராமசர்மா.

    சென்றிடுவீர் எட்டுத்திக்கும்பல்வேறு காரணங்களால் தமிழர்கள் தமது நாட்டைவிட்டு அன்னிய நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். நாட்டைவிட்டு வாழ்ந்து வந்தபோதிலும் அவர்களில் பலர் தங்களது மொழியை கலாச்சாரத்தை மறக்காமல் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சம் எனலாம். அவர்களின் வாழ்க்கை என்னவோ அன்னிய நாட்டிலே அமைந்துவிட்டாலும் கூட அவர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்த இடத்தையோ, அங்கிருக்கும் உறவுகளையோ மறக்காமலும் இருக்கிறார்கள். அவர்களைப்பற்றிய சுகங்கள் துக்கங்கள் எல்லாம் அன்னிய நாட்டில் வாழ்கின்றவர்மனத்தில் ஏதோ ஒரு பக்கத்தில் இருக்கத்தான் செய்கிறது. அந்த எண்ணம் அவர்களைவிட்டு என்றுமே அகலமாட்டாது. இதைத்தான் தொப்புள் கொடி உறவு என்பதா? அல்லது பாசப்பிணைப்பு என்பதா? எப்படியும் எடுத்துக் கொள்ளலாம்தானே!

    இந்தளவு விளக்கம் ஏன் என்று நீங்கள் எண்ணுவது எனக்குப் புரியாமல் இல்லை. ஒரு முக்கிய விஷயத்தை தொட விரும்பியதால்தான் இந்த விளக்கம் எல்லாம். புலம்பெயர் வாழ்க்கையை நடத்தும் திரு கே.எஸ்.சுதாகர் ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’  என்னும் சிறுகதைத்தொகுதியை எங்கள் கைகளிலே தவழ விட்டிருக்கிறார். அந்தத் தொகுதியில் உள்ள கதைகளை வாசிப்பவர்களுக்காகவேதான் இந்தவிளக்கம் சொல்ல நேர்ந்தது.

    பன்னிரெண்டு சிறுகதைகள் கொண்டதே இந்தத்தொகுதி. இதில் இலங்கையைக் களமாகக் கொண்ட கதைகள், இலங்கையையும் அன்னியநாட்டையும் களமாக இணைத்து நிற்கும் கதைகள், அன்னிய நாட்டை மட்டும் களமாகக் கொண்ட கதைகள் என இக்கதைகள் எழுதப் பட்டிருக்கின்றன.

    ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ சிறுகதைத்தொகுதிக்கு ஒரு விமர்சனம் தேவைதானா? என்னுள் எழுந்து நின்ற கேள்வி! நல்ல விஷயத்தை வாசித்தால், நல்ல விஷயத்தைப் பார்த்தால், அதைப்பற்றி மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவே வேண்டும். சுவையான ஒரு உணவை உண்ணுகின்றோம். அதனைப்பற்றிக் கட்டாயம் நம் கருத்தைச் சொன்னால் குறைந்தா போய்விடுவோம். ஆனால் பலபேர் எந்தவிதமான அவிப்பிராயமும் அற்றவர்களாக இருந்துவிடுவதும் உண்டு. பிடித்தால் பிடித்திருக்கிறது. ஏன் பிடித்திருக்கிறது? என்ன என்ன விதத்தில் சுவையை ஏற்படுத்தித் தந்திருக்கிறது? இதை மனம் திறந்து சொல்லிப் பாருங்கள்! சமைத்தவரும் சந்தோஷப்படுவார். சுவைத்தவர்களும் சுகத்தை அடையலாம்தானே!

    கதைத்தொகுதியைப் பற்றிச்சொல்ல வந்துவிட்டு சாப்பாடுபற்றிச் சொல்லுகிறேன் என்று மனத்துள் நினைக்காதீர்கள்! கதைகளும் எங்களுக்கு நல்ல சுவையான உணவுதானே! “செவிக்கு நல்ல உணவு கிடைத்தால்“ அது மகிழ்ச்சிதானே! அந்த மகிழ்ச்சிதான் என்னுள் எழுந்த விமர்சனம் ஆகும்.

    கே.எஸ்.சுதாகரை விமர்சனம் செய்வதா அல்லது அவரது கதைகளை விமர்சனம் செய்வதா? வள்ளுவரை விமர்சனம் செய்தால் குறளை விமர்சனம் செய்தமாதிரி. குறளை விமர்சனம் செய்தால் வள்ளுவரும் அதில் வந்துவிடுவார். ஆனால் நான் — சுதாகரைப் பற்றியும் சொல்லப்போகிறேன். அவரது கதைகளைப் பற்றியும் சொல்ல ஆசைப்படுகின்றேன். சுதாகர் கலைத்துறை சம்பத்தப்பட்டவர் அல்ல. அவர் படித்தது பொறியியல் துறை. பெரும்பாலும் கலைத்துறை சார்ந்தவர்களே எழுத்துத் துறையில் புகுந்து வெளுத்துக்கட்டுவார்கள். ஆனால் விதிவிலக்கானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சுஜாதாவை தமிழ் எழுத்துலகில் மறந்துவிடமுடியாது. அவர் விஞ்ஞானத்துறையைச் சார்ந்தவர். பேராசிரியர் நந்தி, பேராசிரியர் சிவசேகரம், டாக்டர் இந்திரகுமார், டாக்டர் ஞானசேகரன் இவர்கள் துறை வேறாக இருந்தபோதும் அவர்களும் கலை இலக்கியத்துறையில் தம்மை இணைத்துக் கொண்டவர்களாகவே விளங்குகிறார்கள். இவர்களது வரிசையிலே பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரியான சுதாகரும் இணைந்து கொள்கின்றார்.

    சுதாகரை நேரே பார்ப்பார்களுக்கு—இவரா இக்கதைகளை எல்லாம் எழுதியிருப்பார்? என்னும் ஐயம் கூட ஏற்பட்டுவிடும். அந்த அளவுக்கு ஒன்றுமே தெரியாதவர் போல இவரின் தன்மை காணப்படும். அந்த அளவுக்கு அடக்கமானவர். “அடக்கமுடையார் அறிவிலர் என்றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டாம்“ என்பது இவரைப் பார்த்தால் பொருத்தமாக இருக்கும் என்றே தோன்றும்.

    அநேகமான நூல்கள் வரும்பொழுது அதில் இடம்பெறும் ஏதாவது ஒரு விஷயத்தின் பெயரே தலைப்பாகப் போடுவது வழக்கமாக இருக்கிறது. ஆனால் சுதாகரின்  ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ என்னும் பெயரில் எந்தக்கதையையும் நீங்கள் உள்ளே காணவே முடியாது. இது ஒரு வித்தியாசமான சிந்தனை. பொறியியலாளராக இருந்து பொறுமையுடன் நல்ல கதைகளைத் தந்தமைக்கு ஒரு பாராட்டு. புதியமுறையில் தலைப்பைத் தேர்ந்து வைத்தமைக்கு மேலும் ஒரு பாராட்டு.

    சுதாகரின் கதைகளைப்பற்றி விமர்சனம் செய்வதற்கு முன் …. அவரது தமிழ் பற்றியும் அதனை அவர் எவ்வாறு கையாண்டுள்ளார் என்பதைப்பற்றியும் சொல்லியே ஆகவேண்டும். அவர் படித்தது ஆங்கிலத்தில். ஆனால் அவரின் தமிழ்நடையோ நல்லதோர் தமிழ்ப்புலமை கொண்டவரது நடைபோன்று அமைந்திருக்கிறது. இது அவரின் தமிழ் வாசிப்பால்ல வந்ததோ அல்லது அவர் வாழ்ந்த குடும்பச் சூழலாலோ எனத் தெரியாது. இதுவும் அவரின் வெற்றிக்கு ஒரு காரணம் எனலாம்.

    வாசிக்கின்றவர்கள் மனத்தில் அலுப்புத்தட்டாமல் செய்கிறது அவரது தமிழின் போக்கு. சம்பவங்களை அவர் சொல்லும் பொழுது வாசகர்களையும் கூடவே கூட்டிச் சென்று விடுகிறார். அவரின் கதை மாந்தர்கள் அழுதால் நமக்கும் அழுகை வருகிறது. அவர்கள் கோபப்பட்டால் நமக்கும் கோபம் வந்து விடுகிறது. அவர்களது — சிரிப்பு, அவலம், அன்பு, பாசம், பரிவு — எல்லாம் எங்களுடனும் வந்து ஒட்டிக்கொள்கிறது. கதையல்ல … நிஜம் என்னும் ஒரு வித உள்ளுணர்வை ஏற்படுத்திவிடுகிறது. இந்த மாயத்துக்குக் காரணம் சுதாகர் கையாண்ட எழுத்து நடையாகும்.

    கதைக்கு, கவிதைக்குக் கட்டாயம் கற்பனை வேண்டும். ஆனால் கற்பனையே முழுவதும் ஆகிவிட்டால் அந்தக்கதை உயித்துடிப்பு சற்றுக்குறைந்தது போலக்கூட ஆகிவிடலாம். சுதாகரும் கற்பனை வளம் மிக்கவரானாலும் அவரின் கதைகளில் அவரும் வருகின்றார். அவர் அனுபவித்த வாழ்க்கையும் வந்து நிற்பதையும் காணலாம். நடந்த சம்பவங்கள் நல்ல எழுத்தாளின் கற்பனையில் கலக்கும் பொழுது யாவரையும் தன்னுள் ஈர்க்கும் வல்லமையைப் பெற்றுவிடும். அப்படி ஒரு ஈர்ப்பை தனது கதைகள் வாயிலாக சுதாகர் வரச்செய்துள்ளார். இது அவரது எழுத்து ஆளுமையையே காட்டி நிற்கிறது எனலாம்.

    புலம் பெயர்ந்து வருபவர்கள் படும் சோதனையும், வேதனையும், விரக்தியும்… சுதாகரின் கதைகளில் நாம் பார்க்கலாம். புலம்பெயர்வால் … உறவுகளின் இன்பத்திலோ, துன்பத்திலோ, கூடப் பங்கு கொள்ள முடியாதநிலை ஏற்படத்தான் செய்யும். அப்படி ஏற்படும் பொழுது அதற்குள் அகப்பட்டவர் மனம்படும் பாட்டை சுதாகர் காட்டும் பாங்கு அவருக்கே உரித்தான உத்தியாகும்.

    புலம்பெயர்ந்தவர்கள் அந்த நாட்டவரைப்பார்த்து பயப்படுவது இயல்புதானே! அது மட்டுமல்ல அவர்களை முழுவதுமாக நம்பியும் விடுவார்கள். இதனால் அங்குள்ளவர்கள் நேர்மையின் பிறப்பிடம், இருப்பிடம், எனவும் எண்ணியும் விடுகிறார்கள். ஆனால் அவர்களும் நம்மைப்  போன்றவர்கள்தான். நிறத்தால் வேறுபட்டு இருந்தாலும் எல்லாரும் ஒன்றுதான். ஏமாற்றுதல், பணம்பண்ணுதல், பித்தலாட்டம் செய்தல், யாவும் எங்கும் உள்ள இயல்பான குணங்கள்தான். இதனைக் காட்டுகிறது ’விளக்கின் இருள்’ என்னும் முதலாவது கதை. ‘ரியல் எஸ்டேட்‘ வியாபாரம் ஆஸ்திரேலியாவில் கொடிகட்டிப்பறக்கிறது. மக்களை எப்படியெல்லாம் மயக்குமொழி பேசி மடக்க முடியுமோ அப்படியெல்லாம் மடக்கி தமது வலைக்குள் விழப்பண்ணிவிடுவார்கள். வீடுவாங்கியவர்கள் பின்னர் படும் அவஸ்த்தையினை கண்டுகொள்ளவே மாட்டார்கள். வீடு வாங்கிய பகுதிகளில் ஏதாவது விபரீதங்கள் ஏற்பட்டாலும் வியாபாரம் செய்தவர்களோ அல்லது அது சம்பத்தப்பட்ட அதிகாரிகளோக் கூட காணாததுபோலவே இருந்தும் விடுவார்கள். வாங்கிய வீட்டில் இருக்கவும் முடியாமல், அதனை விற்கவும் முடியாமல் வாங்கியவர்கள் படும் வேதனையை நரகவேதனை என்றுதான் எடுக்கவேண்டும். அந்த வேதனையினை வெளிப்படுத்தும் பாங்கில்த்தான் “ விளக்கின் இருள் “ கதை எழுதப்பட்டிருக்கிறது.

    வீடு வாங்கினாலே எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் வீடுவாங்கிய சிலநாளில் …. அங்கு வசிப்பதே பெரிய ஆபத்து என்று வந்தால் எப்படி இருக்கும்? கஷ்டப்பட்டு உழைத்துச் சேமித்த பணத்தை வைத்து வங்கியில் கடன் பட்டு வீடு வாங்கியவர்கள் படும், பட்ட, மனக் குமுறலை — உண்மையின் அடிப்படையில் சொல்லி நிற்கும் கதைதான் “ விளக்கின் இருள் ‘ கதையாகும். என்ன என்ன புதைத்தார்களோ தெரியாது. எப்படி முன்னர் இருந்ததோ தெரியாது. ஆனால் வீடுகளைக் கட்டிக்குவித்து விடுவது நடைமுறையாக இருக்கிறது. அதனை வியாபாரம் செய்கின்றவர்களும் கொஞ்சமேனும் — அதனைக் கருத்தில் கொள்ளாமல் செயல்படுகின்றனர். மாட்டிக்கொள்பவர்கள் வீடுகளை வாங்கியவர்கள்தான்.

    இந்தக்கதை அறிவு பூர்வமான அணுகுமுறை கொண்ட ஒரு கதையாகும். இனிமேல் வீடு வாங்க இருப்பவர்களுக்கு நல்ல ஒரு அறிவுறுத்தலைத் தரும் வகையில் இக்கதை எழுதப்பட்டிருக்கின்றது. மிகச்சிறந்த கதை என இதனை எடுத்துக் கொள்ளலாம். இந்தப் புத்தகத்தின் முதற்கதையாக அதாவது திறவு கோலாக இக்கதையை முதல் வைத்தமைக்குக் கட்டாயம் சுதாகரைப் பாராட்டியே ஆகவேண்டும்.

    பேராதனைப் பல்கலைக்கழகம் படிப்பின் உச்சமாயும் இருக்கும். மற்றும் பலவேளை இடிப்பின் உச்சமாயும் மாறிவிடும். இனத்துவேஷம் கல்விக்குள் நுழையக்கூடாது. நுழைந்துவிட்டால் அது ஒரு புற்று நோய்தான். அன்றும் இருந்தது. இன்றும் அது அங்கு இருக்கிறது.

    பல்கலைக்கழகம் என்றாலே கிண்டலும் கேலியும் மலிந்து காணப்படுவது இயல்பு. அவற்றை “இரண்டு சம்பவங்களில்“ அனுபவித்து சுதாகர் வெளிப்படுத்தி இருகிறார். பல்கலைகழக மாணவர்கள் ஒன்று சேர்ந்தால் பேசும் வார்த்தைகள் கூட வில்லங்கமானதாகவே இருக்கும். அவையெல்லாம் அனுபவமாக பரவிக்கிடக்கிறது. சண்டைக்காரன் கூட சமயத்தில் மாறி உதவிக்கரம் நீட்டுவதும் உண்டு என்பதை மிகவும் நயத்தோடு காட்டியிருப்பதை படிப்பவர்கள் கண்டுகொள்ளலாம். இக்கதையை வாசித்ததும் — முன்பு பல்கலைக்கழகத்தில் இருந்த காலமே படமாக மனத்தில் ஓடியது. தங்களின் அரசியல் ஆதாயத்துக் காக அன்று முதல்  இன்றுவரை படிக்கும் மாணவர்களைப் பகடைக் காயாக்குவது அரசியல் வாதிகளின் ஒரு ராஜதந்திரமாகவே இருந்து வருகிறது. அதனை ”இரு சம்பவங்களில்” சுதாகர் சுட்டிக்காட்டுகின்றார்.

    புலம்பெயர்ந்தவர்களுக்கு வேலை தேடும் படலம் என்பதே ஒரு திருவிளையாடற் படலம்தான். முன் அனுபவம், பின் அனுபவம், உள்ளூர் அனுபவம் என்று வேலை தேடுபவர்களை கதிகலங்கச் செய்துவிடுவார்கள் வேலை கொடுக்கும் நிலையில் உள்ளவர்கள். அதனை அனுபவித்தரால்தான் இப்படி ஒரு கதையை எழுதமுடியும். அந்தக் கதைதான் “இருவேறுபார்வைகள்“.  இந்தக்கதையை நகர்த்திச்செல்லும் பொழுது அதனை நோயாளி ஒருவர் வைத்தியரோடும் வைத்திய நிலையத்தோடும் படும் அவதிகளைத் தொடுத்து–  வேலைக்கான அனுபவத்தை விளக்கிக்காட்டும் பாங்கை ரசிக்காமால் இருக்கவே முடியாது. இது நல்ல ஒரு உத்தியாக அமைகிறது.

    இலங்கையும் புலம்பெயர் பகுதியும் கதைக்களமாக அமையும் கதைதான் “காட்சிப்பிழை”. இடம் மாறினாலும் வயது ஏறினாலும் .. இருக்கும் நிலையில் மாற்றம் வந்தாலும் இயற்கைக் குணம் என்பது மனிதனை விட்டு மாறவே மாட்டாது. அது நல்லதாக இருந்தால் அதனை வரவேற்கலாம். ஆனால் அது ஆணவநிலை ஆனால் எப்படி அனுமதிப்பது? இலங்கையில் இருந்த குணம் எங்கு போனாலும் மாறிவிடவில்லை. தான் என்னும் முனைப்பு சாகும் தறுவாயில்கூட மாறமறுப்பதையும் — அதே நிலையில்த்தான் இளமையும் மாறாது இறுமாப்புடன் நிற்பதையும் இக்கதை காட்டி நிற்கிறது.

    ஒவ்வொருவரும் காணும் காட்சி அவரவர் பிழைகளை அடையாளப்படுத்தியே விடும். அப்படி ஒரு நிலையைத்தான் “காட்சிப்பிழை“ தெரிவிக்கிறது. அதில் வரும் “தெமட்டக்கொட” அங்கிள்கள் இன்னும் நம்மிடையே இருக்கின்றார்கள். அவர்கள் இக்கதையைப் படிக்கட்டும். ஏன் … பாலகிருஷ்ணர்களும் படித்தாலும் நல்லதுதானே!
    இலங்கையின் துயரம் —- எவ்வளவு தூரத்துக்குப் போனாலும் நம்மனதை விட்டு அகலே மாட்டாது. கண்ணீரும், கம்பலையும், கலந்த சோகம்தான் பலரது வாழ்வாகி விட்டது தமிழர் வாழ்வில். அந்தச் சோகத்தைச் சொல்லவே முடியாது என்றாலும் ஒரு துளியை துணிவாக சொல்லிவிடுகிறார் சுதாகர். அதுதான் “ஒர்கடிதத்தின் விலை”. தமிழ்த்தாயின் வேதனை, சோதனை இக்கட்டான சூழ்நிலை … யாவற்றையும் இக்கதை மிகவும் திறம்பட எடுத்துச் சொல்கிறது. வாசித்துப் பாருங்கள்! அழாமல் இருக்கவே மாட்டீர்கள்.

    கண்டபாவனையில் கொண்டைமுடித்தல், கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி பொல்லாச் சிறகை விரித்தாடிய நிலை, இதைப்பற்றி நாம்ள் அறிந்திருப்போம்.இப்படி இருப்பவர்கள் நம்மில் அநேகம் பேர். விடுப்புப் பார்ப்பதும், மற்றவர் எதைச் செய்தாலும் அதற்கு எதிராகப் போட்டி போடுவதும், பின்பு தேவையில்லாமல் மூக்கு உடைபடுவதும்  காணக்கூடிய சம்பவங்களே. இதில் தெரியாதவர்கள் சிக்கல் பல்பட்டாலும் அதை வேறுவிதமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் நெருக்கமான குடும்பங்களே ஏட்டிக்குப் போட்டியாக எண்ணம் கொண்டு செயல்பட நினைப்பதும் அந்த நினைப்பால் சிலவேளை அவமானமும், மனக்குமுறலும், வந்து சேருவதையும் … நகைச்சுவையோடு தரும் கதைதான் ’சேர்ப்பிறைஸ் விசிட்’.  கதை முழுவதும் சிரிப்பாய்க் குவிகிறது. இதனை ஒரு நகைச்சுவைக் குறும்படமாக எடுத்தாலும் மிகச்சிறந்த வரவேற்பைப் பெறும்.

    நிர்ப்பந்தம் காரணமாக வெளிநாடுவருபவர்கள் ஒரு வகையினர். வேலையைத் தேடிக்கொண்டு வெளிநாடு வருபவர்கள் மற்றொருவகயினர். நாட்டின் அசாதாரண  நிலையினால் தம்நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடு வந்தவர்கள் தாம் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் தங்களது குடும்பத்தாருடன் படும் சோகவரலாறு சொல்லுந்தரமன்று. அந்தச் சோகவரலாற்றை தனக்கே உரித்தான பாணியில் ஓரளவு உண்மையும் கற்பனையும் கலந்து சொல்லுவதுதான் “பறக்காத பறவைகள்“ எந்த வேலை கிடைத்தாலும் அதனை ஏற்றுச்செய்யும் மனோ நிலை வந்தேயாக வேண்டும் என்று இக்கதையைப் படிப்பவர்கள் அறிந்துகொள்வார்கள்.

    காலநிலை முற்றிலும் மாறுபட்டது. அதனைச் சமாளித்தே ஆகவேண்டும். பேப்பர்  போடுவது தொடக்கம் பாரம் தூக்குவது வரை எதையும் எப்போதும் செய்வதற்குத் தயாரானால்த்தான் தன்னையும் பார்த்துக் குடும்பத்தையும் பார்க்கமுடியும். இதில் ரோஷம், மானம், பார்க்கவே கூடாது. எனது படிப்பென்ன நானிருந்த நிலை என்ன  என்ற எண்ணம் அந்த நேரத்திலும் வந்துவிடவே கூடாது. அப்படி வந்தால் வருமானம் பாடு திண்டாட்டம்தான். அரசாங்கம் கொடுக்கும் உதவிப்பணத்தில் அடங்கி ஒடுங்கிப் போகவேண்டியதுதான். இதுதான் வெளி நாட்டு உண்மை வாழ்க்கை நிலை என்பதை தனக்கே உரித்தான தமிழ்நடையைக் கையாண்டு காட்சிப்படுத்துகின்றார் சுதாகர்.

    வேலைதேடும் படலம், வேலைகிடைத்ததும் அதில் வரும் அடுத்தபடலம், அந்தவேலை கூடநிரந்தரமற்றது என்று ஏங்கவைக்கும் பரிதாபப் படலம், இவற்றுக்கிடையே …..  பிள்ளை பற்றியோ, மனைவி பற்றியோ, ஏன் தன்னைப்பற்றியோ எண்ணமுடியாத ஒரு சிக்கலான நிலை அத்தனையும் சொல்லிநிற்பதுதான்  “பறக்காதபறவைகள்”. ஆசைமகள் அன்போடு கேட்ட பறவை பற்றி சொல்ல மறந்த– சொல்லவே முடியாமல் உருவாகிய இக்கட்டான நிலைதான் இந்தக்கதை. பறக்க முடியாப் பறவைகள் ஆகிவிட்டோம் என்று குடும்பத்தின் தலைவன் சொல்லும் பொழுது கூடவே நாமும் அந்தக்குடும்பத்துக்குள் நுழைந்துவிடுகிறோம்

    வெளிநாட்டில் வாழ்ந்தால் சந்தோஷமாக வாழலாம் என்பதும் ஒருவித கனவுதான். அந்தக்கனவு உண்மையானது அல்ல. இங்கும் பல் உருவங்களில் பிச்சுப்  பிடுங்கல் களும் வரத்தான் செய்யும். பெரும்பாலும் பொருளாதாரம் சம்பந்தப்பட்டதாகவே இந்தச் சச்சரவுகள் ஏற்படுகின்றன. கணவன் வேலைசெய்ய மனைவி வேலை செய்யாது வீட்டில் இருக்கும் பொழுது தேவையற்ற செலவுகள் செய்யக் கணவன் சம்மதியான். மனைவிக்குத் தேவையானது என நினைப்பது கணவனுக்குத் தேவை அற்ற ஒன்றாக கண்ணில்படும். அங்கே வாக்குவாதம் வரும். அது சிலவேளை விஸ்வரூபம் எடுத்தாலும் ஆச்சரியம் அல்ல. அப்படி ஒரு விஸ்வரூபம் எடுத்த நிலையைத்தான் “ ஒருவகை உறவு “ கதை காட்டுகிறது.

    கணவன் மனைவி உறவு இறுக்கமானது. அந்த உறவுகூட பொருளாதாரம் சம்பந்தம் படும் பொழுது எப்படி முறுக்கமாக மாறுகிறது என்பதை அனுபவமாக்கி தரும் கதைதான் “ ஒருவகைஉறவு”. கணவன் மனைவி முறுகல் முற்றி கடைசியில் குடும்பமே இரண்டுபட்டு நிற்கும் நிலையை சுதாகரின் எழுத்து படமாக்கித்தருகிறது. சிவாஜியும் பத்மினியும் போட்டி போட்டு நடித்த பல நல்ல தமிழ்ப்படங்கள் வந்திருக்கின்றன. அதில் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காது பாத்திரமாகவே வாழ்ந்து ( நடிப்பால் ) காட்டியிருப்பார்கள். அப்படித்தான் இந்தக் கதையின் நாயகியும் நாயகனும் சுதாகர் என்னும் கைதேர்ந்த எழுத்தாளரால் உருவாக்கப் பட்டிருக்கிறார்கள். நடைமுறை வாழ்க்கையின் தோற்றம் இப்படித்தான் இருக்கும் என்பதை காட்டி இருக்கும்  இக்கதையும் ஒரு முத்துத்தான். பெரும்பாலான ஆண்களும் பெண்களும் சமயத்தில் இப்படி ஆகிவிடுகிறார்கள் என்பதை மிகவும் அற்புதமாகச் சித்திரித்துள்ளார் சுதாகர் அவர்கள்.

    இலங்கையும் வெளிநாடும் சங்கமிக்கும் சோகக்கதைதான் “அசலும் நகலும்“ இது நடந்து முடிந்த கதையல்ல. இப்போதும் இக்கதை ஈழத்தைப் பொறுத்தவரை தொடர்கிறது என்றுதான்  சொல்ல வேண்டும்.

    வெளிநாட்டில் இருப்பவர்கள் எல்லாம் இருந்தும் …. பல வேளைகளில் எதுவுமே இல்லாதவர்கள் ஆகியும் விடுவார்கள். ஆனால் வெளிநாட்டில் உள்ள உறவுகளின் நட்புகளும், சுற்றி இருப்போரும் — சோகத்தைக்கூட சுறு சுறுப்பான கேளிக்கையாக்கியும் விடுவார்கள். அதையே நவநாகரிகம் என்று எடுத்தும் கொள்வார்கள். அவர்கள் மத்தியில் எல்லாமே ஒருவித நாடகம்தான். ஆனால் ஊரில் இருப்பவர்களோ பழைய பஞ்சாங்கங்கள் ஆகவே இருந்துவிடுவார்கள். எல்லாமே கானல் நீர்தான் என்பதை “ அசலும் நகலும் “ சொல்கிறது. நன்மைக்கோ தின்மைக்கோ ஊருக்கு வரமுடியாத ஒரு சோகமும் ஊரில் உள்ளவர்கள் அங்குள்ள அசாதாரண சூழலில் சிக்குண்டு சாவிலும் கூட — தனிமைப்படுத்தப்பட்டுத் தத்தளிக்கும் பரிதாபமும் படமாக ஓடுகிறதுதான் “ அசலும் நகலும் “ கதையாகும்.

    கிண்டலும் கேலியுமாக ஆரம்பித்து சீரியசாகி நிற்கும் கதைதான் “கற்றுக் கொள்வதற்கு” கற்றுக்கொள்வதற்கு — என்று தலைப்பு வைத்ததுகூட மிக மிகப் பொருந்தம்தான். சிலரை நாம் சாதாரணமாக எடை போட்டுவிடுவோம். ஆனால் அவர்களோ நம் நினைவுக்கு அப்பால் செயற்படுபவர்களாக இருப்பார்கள் அதைப் பார்க்கும் பொழுது நம்மையே நாம் நம்பமுடியாத ஒரு நிலைக்குள் வந்து நிற்போம். அப்படி ஒரு நிலையைத்தான் இக்கதையில் காண்கின்றோம். பின்தங்கியவர்கள் படிப்பறிவற்றவர்கள், என்று ஒதுக்கிவிட முடியாது. அவர்களும் சில விஷயங்களில் நம்மைவிடத் தீவிரமானவர்களாக இருந்தும் விடுவார்கள். அப்பொழுது நாம் நினைப்போம் … இவர்களிடம்  கற்றுக்கொள்வதற்கு .. நிறைய இருக்கிறது … என்ற உண்மை நிலையாகும். கதைக்களமும், கருப்பொருளும் , புதிதாக இருப்பதால் இந்தக் கதை ஒரு புதுக்கதைதான். ஏனென்றால் நாங்கள் அனைவரும் நல்லபடி “ கற்றுக் கொகோள்வதற்கு”.

    அக்கா என்பவள் குடும்பத்தின் அம்மாதான். அருமையான, அன்பான, பாசமான, பரிவான,பு ரிந்த உணர்வுள்ள, அக்கா வாய்த்தால் –அதைவிட மேலான குடும்பம் இருக்கவே முடியாது. அப்படியான ஒரு அக்காவை தேடிக்கொண்டுவந்து விடுகிறார் சுதாகர்.” எதிர்கொள்ளல்” கதையில்தான் அந்த அக்கா வருகிறார். அக்காவை பன்மையில் சுட்டுவதற்குக் காரணம் அவர் தாயாக, தந்தையாக, உற்றநல்ல  துணையாக வருவதே காரணமாகும்.

    பழனி என்றொரு தமிழ்ப் படம் வந்தது. அதைப்பார்த்தால் அழதாவர்கள் இருக்கவே முடியாது. அதே போல் துலாபாரம் என்றொரு படமும் வந்தது மனத்தை அழவைத்தபடம். அதே போன்ற ஒரு உணர்வுதான் “ எதிர்கொள்ளல் “ கதையை வாசித்ததும் வரும். பாசமிக்க அக்காவும் — பரிதவிக்கும் தம்பியும்– கதிகலங்கி நிற்கும் கணவனும்… நஎம்முடனே வந்துவிடுகிறார்கள். தம்பியாலும் எதிர் கொள்ள முடியவில்லை. அக்காவின் கணவனாலும் எதிர் கொள்ள முடியவில்லை. படிக்கும் எங்களாலும் அந்தச் சோகத்தை எதிர்கொள்ளும் தைரியமும் வரவே இல்லை.

    நாட்டுச்சூழல் வாட்டுவதும், துன்பத்தைக் கூட கிட்ட நின்று பார்க்க முடியாத வெளி நாட்டு வாழ்க்கையின் பரிதாபமும், “ எதிர்கொள்ளல்” கதையிலே சங்கமிக்கிறது. அதே நேரம் அக்கறையான செய்தி ஒன்றையும் இக்கதை வாயிலாக நமக்கெல்லாம் சொல்லி நிற்கிறார் சுதாகர். தம்பியும் அழுகிறான். அத்தானும் கலங்குகிறார். வாசிக்கும் நாம் எம்மாத்திரம். நாங்களும் கண்கலங்குகின்றேம். அப்படி ஒரு உருக்கத்தைக் காட்டுவதுதான் “எதிர்கொள்ளல்” கதையின் சிறப்பாகும்.

    இந்தக் கதைத் தொகுப்பில் நிறைவாக இருக்கும் கதைதான் “புதியவருகை”. வெளி நாட்டில்  நடக்கும் பிரசவம் பற்றி இவ்வளவு சுவையாகவும் விஸ்த்தாரமாகவும் எப்படித்தான் சுதாகரால் சொல்ல முடிந்ததோ என நினைக்கையில் பிரமிப்பே ஏற்படுகிறது. ஒரு மருத்துவரோ அல்லது  மகப்பேற்றுத் தாதியோ சொல்லுவது போல இந்தக் கதையின் போக்கு செல்கிறது. ஒரு பிரசவத்தைப் பார்த்த உணர்வுதான் ஏற்படுகிறது. குழந்தை பற்றியும், பிரசவம் பற்றியும் உள்ள கருத்து நிலையும் சூசமாகச் சொல்லப் படுகிறது. கதையோடு நாங்களும் போகிறோம். பிள்ளைகள் பற்றியும், குடும்பம் பற்றியும் ஒப்பீடும் நடத்தப்படுகிறது.

    ஒரு புதுக்கரு இக்கதையில் உருவாகி நிற்கிறது. ஏனென்றால் இது பிரசவம் பற்றிய நோக்குத்தானே! வெள்ளைக்கார மாது ஒரு நல்ல பாத்திரம். அந்தப்பாத்திரம் கதையோடு ஓடிவரும் விதம் சுதாகரின் நகாசுவேலை என்றுதான் சொல்ல வேண்டும். வெள்ளைக்கார மாது இந்தக்கதையில் ஏன் என்று எண்ணும் பொழுது … அந்த மாதுதான் கதையை நிறைவு செய்யும் கைங்கரியத்தில் பங்கேற்கிறார் என்பதும் புலப்படுகிறது.

    புதுக்கரு. புதுக்கதை. புதிய முடிவு. இதுதான் “புதிய வருகை” பன்னிரெண்டு முத்துக்களைக் கொண்டு கோர்க்கப்பட்ட அழகிய — இலக்கியம் என்னும் ஆரம்தான் சுதாகரின் “சென்றிடுவீர் எட்டுத்திக்கும் “ என்ற கதைத் தொகுதியாகும். பன்னிரெண்டும் பலவற்றை சொல்லி நிற்கின்றன.

    இலக்கியம் படைப்பது என்பது ஒரு பிரசவம்தான். கருவைச் சுமப்பதும், அதனை நல்ல முறையில் பெற்றெடுப்பதும் சாதாரண காரியமல்ல. அப்படியொரு பிரசவம்தான் இக்கதைத் தொகுதியும். கருவைச் சுமந்து அதை நல்லமுறையில் காத்து அழகிய பிள்ளையாக அனைவருக்கும் விரும்பக் கூடிய பிள்ளையாகத் தந்த சுதாகரை மனமாரப் பாராட்டியே ஆகவேண்டும்.

    அவசரம், அவசரம், எதற்குமே நேரம் போதவில்லை என்ற நிலையில் உள்ள சூழலில் பொறுமையாக பொருள்பொதிந்த கதைகளை எப்படித்தான் இவரால் எழுதமுடிந்ததோ என்பதே ஆச்சரியம்தான் என்றாலும் கிடைத்த நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்தி நல்ல கதைகளை தந்த எழுத்து மன்னன் சுதாகரை வாழ்த்துகிறேன். அவர் இன்னும் இது போன்ற பல நல்ல படைப்புகளைப் படைக்கவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி மீண்டும் எனது மனம் உவந்த வாழ்த்துக்களைக் கூறி நிறைவு செய்கின்றேன்

    Share