இலக்கியம்கவிதைகள்

ஆராய்ந்து தேர்ந்திடுவீர்!

-எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

  அடியார்களின் இலக்கோ
  ஆண்டவனை அடைவது
  அரசுள்ளார் இலக்கோ
  அனைத்தையும் அள்ளுவது!

   ஆணவத்தின் இலக்கோ
   அனைத்தையுமே அழிப்பது
   ஆதலால் இலக்குதனை
   ஆராய்ந்து தேர்ந்திடுவீர்!

   வள்ளுவனார் இலக்கோ
   வாழ்வை வளமாக்குவது
   தெள்ளுதமிழ் பாரதிக்கோ
   தேசமதின் விடுதலையே!

   உள்ளமதில் நல்லவெண்ணம்
   ஊற்றெடுத்து நின்றுவிடின்
   நல்லநல்ல இலக்குகளை
   நாம்பெற்று நிற்போமே!

   கத்தியின்றி ரத்தமின்றி
   யுத்தம்செய்யும் இலக்கு
   காந்திமகான் உள்ளமதில்
   தோன்றி நின்றதன்று!

   வெற்றியென்னும் பெயரைக்கொண்டு
   வீழ்த்தல் வீரமன்று
   சத்தியத்தைக் கையில்கொண்டு
   சாதித்தாரே காந்தி!

   உத்தமரின் இலக்கைக்கண்டு
   உயிர்ப்புப் பெற்றவுலகு
   உண்மையான இன்பம்பெற்று
   உதிர்த்ததே நல்லுவகை!

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க