சந்தர் சுப்ரமணியன்

 

சொல்லுக்குள் கருத்தில்லை; சுவைசேர் பேச்சில்

.. சொற்கோத்த முழுஅடியே சொல்லும் சேதி;

கல்லுப்பு புளிமிளகாய் காரம் சேர்த்துக்

.. காண்க ருசி; தனித்தனியாய் ருசி ஏதங்கு?

பல்லுக்குப் புரியாத பண்டம் யாவும்

.. பட்டவுடன் பகுத்தறியும் பழகும் நாவே;

எல்லைக்குள் அடங்காத இனிக்கும் நல்ல

.. இலக்கியத்தைச் சுவைஞருளம் இயல்பாய் ஏற்கும்.

 

இன்றரங்கின் தலைப்பாக ‘ஏடா தம்பி

.. எடடாபேனா’ என்றோர் தொடரைக் கொண்டோம்

அன்றவரின் கருத்துகளை அள்ளித் தந்த

.. அண்ணாவின் சொற்றொடரே; அதனால் இன்றும்

மன்றமமர் அன்பர்தம் செவியைச் சேர்ந்து

.. மதிக்கின்ற கருத்தாக மாறி உள்ளம்

சென்றமரும் விதமாக செய்தி சேர்த்து

.. செழுமியதாய்த் தமிழ்க்கவிதை சேர்க்க வேண்டும்!

 

(தலைமைக்கவிதை):-

 

கற்கொண்டான் கண்ணகிக்காய்; கப்பல் ஏறி

.. கடற்கடந்து போர்வென்று கடாரம் கொண்டான்;

விற்கொண்டான் வேற்கொண்டான் வேந்தன் மண்ணை

.. விந்தியத்தை எல்லையாக்கி விரித்துக் கொண்டான்;

கற்கண்டாய்ப் பாவமைத்து காலம் வென்றான்;

.. கருத்தமைந்த காவியங்கள் காத்துத் தந்தான்;

நிற்கின்றோம் இவையிழந்தே, ஏடா தம்பி

.. நிலையதனை இன்றியம்ப எடடா பேனா (1)

 

பட்டதெலாம் போதுமிந்த பாழும் வாழ்வில்,

.. பழங்கதைகள் இனிவேண்டாம்; பழமை தன்னை

வெட்டிடுவோம்; அன்பென்னும் விதையை மண்ணில்

.. விதைத்தன்பை விளைவாக வேண்டி நிற்போம்;

கொட்டறைந்து முரசதனை, கூடும் வையம்

.. கொள்ளுமிதைக் கொள்கையாக, கொண்ட பின்னர்

எட்டும்வான் அதன்புகழே; ஏடா தம்பி

.. எழுதிடுவாய் அந்நிலையை; எடடா பேனா (2)

 

கரையில்லாக் கடலொத்தத் தமிழைக் கற்க

.. கற்பவர்க்கு மொழியறிவு நிறைய வேண்டும்;

உரையின்றிப் புரியாத உயர்ந்த நூல்கள்

.. உளபோதும் விளங்கிடுமோ உதவி இன்றி?

வரையறையை உடைக்கின்ற வடிவம் தன்னில்

.. வளமான தமிழ்சேர்த்து வனப்பாய் அண்ணா

உரைநடையாய் அன்றுரைத்தார்; ஏடா தம்பி

.. உணர்ந்தவரின் புகழெழுத எடடா பேனா (3)

 

ஆங்கிலமே அறிவென்ற அகந்தை கொண்ட

.. அளவற்ற மோகத்தின் அணைப்பில் முன்பு

தூங்கிநின்ற தமிழகத்தின் துயரம் தீர

.. தெருவெல்லாம் தமிழோசை சேர்த்தார் அண்ணா;

தேங்கு மது தானுருகி சொட்டச் சொட்ட

.. தெளிவான தமிழ்நதியாய் தெருவில் ஓட

ஏங்கிடுவார் தமிழரெலாம் ஏடா தம்பி

.. இன்றந்தப் புகழ்பாட எடடா பேனா (4)

 

ஆதிவழி அதையின்றும் அணைத்து வாழ்தல்

.. அறியாமை எனவுணர்ந்த அண்ணா நான்கு

சாதிவழி முறையதனைச் சாடிச் சாடி

.. சரித்திரத்தின் சரித்திரத்தை சரியாய்ச் செய்யும்

போதனையை வாழும்வரை போதித் தன்பே

.. பொதுவென்னும் பொருட்தந்தார்; பாரில் சாதி

ஏததனை விலக்கவழி ஏடா தம்பி

.. இயன்றிடவே இன்றேனும் எடடா பேனா (5)

 

ஆயினகாண் வருடங்கள் ஆயும் என்ன?

.. அவரெதிர்த்தப் பழக்கமதன் அவலம் யாவும்

போயினவா எனும்கேள்வி புதைந்து நிற்க

.. பொய்யான போலியதே பொலியும் இன்றும்;

சாயுங்காண் நீதியின்றும் சாதி போற்றும்

.. சங்கங்கள் அரசியலைச் சார்ந்து நிற்பின்;

ஏயமவை இனியெதற்கோ ஏடா தம்பி

.. இவ்வெண்ணம் ஒழித்திடவே எடடா பேனா (6)

(ஏயம் – தேவை இல்லாதது)

 

அகத்திரையில் ஆயிரமாய் ஆன சிந்தை

.. அகமுடைத்து புறநிஜத்தை அடைய வேண்டும்

சகத்திலினி எழுச்சிவொன்றே, சரிவே இல்லாச்

.. சரித்திரத்தை சமுதாயம் தேட வேண்டும்

பகுத்தறிவின் பயன்பாட்டால் பாரில் யார்க்கும்

.. பலனனைத்தும் பெற்றுவக்கும் பங்கு வேண்டும்

இகத்திலினி இவைவேண்டும் எடா தம்பி

.. இவைகாணும் வழிகாட்ட எடடா பேனா (7)

 

தவணைமுறை தொழுகைமுறை தேவை இன்று

.. தலமனைத்தும் சமத்துவமே தவழ வேண்டும்;

குவளைமுறை இன்னுமிங்கே குறையவில்லை,

.. கொடிபிடித்தே இதைத்தடுப்பார் யாரு மில்லை;

அவலநிலை அடிதடிகள் அனைத்தும் இன்றும்

.. அடங்காது தொடர்கையிலே அமைதி யேது?

துவளுமவர் துயர்துடைக்க ஏடா தம்பி

.. துணிச்சலுடன் திரைகிழிக்க எடடா பேனா (8)

 

 

இடைக்கவிதைகள் (எல்லோரும் இந்நாட்டு மன்னர்):-

 

தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களில் ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ எனும் கட்டுரையில் அண்ணா எழுதிய ஒரு கதையின் கவி வடிவம்:

 

மன்னவன்றன் உள்ளத்தில் கவலை போலும்

.. மலையாகி அமர்ந்திருந்தான் மன்றம் ஓர்நாள்

கன்னியர்கள் ஆடல்மேல் கவனம் இல்லை

.. காதல்விளை யாட்டிலிலும் கண்கள் இல்லை

முன்குழுமி முத்தமிழால் முனைந்து பாவை

.. முழங்குகின்ற கவிஞரினால் மாற்றம் இல்லை

என்னவழி செய்யமன்னன் எண்ணில் மீண்டும்

.. இன்பமது சேருமென்றே அமைச்சன் சொன்னான் (1)

 

முன்னோர்நாள் போர்க்களத்தின் முன்னர் நின்ற

.. மூவைந்து தளபதிகள் தலைகள் கொய்தோன்

முன்னின்ற பதினாறு வீரர் கைசேர்

.. வேல்தட்டி அவர்பற்கள் வீழச் செய்தோன்

தன்னாட்டின் போர்வீரர் தழைக்கச் செய்த

.. தரம்வாய்ந்த குருவைமண் தழுவச் செய்தோன்

பின்னிற்கும் கரிப்படையின் தலைவன் கண்ணை

.. பிடுங்கியவன் வந்துள்ளான் காண வென்றான் (2)

 

என்னஇது விந்தையன்றோ இத்திரு நாட்டில்

.. இத்தகைய வீரனவன் இருந்த போதும்

முன்னர்யாம் கண்டதில்லை; முரட்டு வீரர்

.. முன்னிற்கும் எம்படையை வென்ற வீரன்

இன்றவனை யாம்காண யாவும் செய்வீர்

.. என்றதுமே அமைச்சரவர் சென்றார்; வந்தார்

மன்றமெலாம் வீரன்றன் வரவை நோக்க

.. வரவேற்கும் பணியாளர் வாழ்த்தும் பாராக் (3)

 

கரைகண்ட வீரன்றன் காட்சி காண

.. காத்திருந்த மன்னன்தன் கையால் மெல்லத்

திரைநீக்க திடுக்கென்று கழுதை ஒன்று

.. தெரிந்திடவே சபையோடு சிரித்து விட்டான்

சரியிதுதான் முன்னோர்நாள் சாயும் வேளை

.. தலைப்படையை உதைத்தெடுத்தச் சரிதம் தானே

சிரித்தபடி வினவுகின்ற மன்னன் தன்னை

.. சிரித்தசபை பார்த்ததுகாண் சிந்தை யோடே (4)

 

இடைக்கவிதைகள் (அண்ணாவின் வாழ்க்கை):-

 

கல்வியென்றும் வளர்ந்தோங்கும் காஞ்சி ஈந்த

.. கலைச்செல்வம் பன்னோக்குக் கலைஞன் அண்ணா

கல்லூரி நாட்களிலே கல்வி ஒன்றே

.. கடமையென்று கற்றுவந்த கர்ம வீரர்

செல்வமாக அவர்படித்துச் சேர்த்த தொன்றே

.. சீர்மிகுந்த பொருளியலில் சிறந்த பட்டம்

இல்லறத்தைக் கடைபிடிக்க ஏற்ற நேரம்

.. இணையாக வந்தவர்தான் இராணி அம்மை (1)

 

மொழியாக்க செயற்றனையே முதலில் கற்றார்

.. முயற்சியதன் விளைவாலே முன்னர் நின்றார்

தொழிற்சங்கத் துறைதன்னில் தொடர்ந்தார் வாழ்வை

.. தோழர்கள் பலரோடு தொண்டும் செய்தார்

விழைவாக பொதுவாழ்வை விரும்பிப் பின்னர்

.. விடுதலையின் ஆசிரியப் பணியும் ஏற்றார்

அழியாத புகழ்பெற்றார் அண்ணா அன்றே

.. அவர்காலம் கடந்தாலும் அதுகாண் வாழும் (2)

 

ஓரிரவு வசனத்தால் உலகை ஈர்த்தார்

.. உரைநடையால் உணர்வென்னும் உலையை ஊதி

காரிருளில் பெரும்வெப்பக் கதிரைப் பாய்ச்சி

.. கருத்தமைந்த கனவுகளைக் காணச் செய்தார்

போரொத்த பகுத்தறிவுக் கொள்கை யோடே

.. பொதுவுடமைக் கொள்கையையும் போற்றிக் காத்தார்

பேரறிஞர் எனும்மொழியால் புகரப் பட்டு

.. பொதுசனத்தின் நிஜமனத்தில் பொதிந்து நின்றார் (3)

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க