-எம். ஜெயராம சர்மா- மெல்பேண்

       தீபாவளி என்றால்
       தித்திப்பு மனதில் வரும்
       தெருவெங்கும் மக்களெலாம்                deepavali
       பெருமகிழ்வு கொண்டிடுவார்!

       கோபங்களைத்  தவிர்த்து
       குற்றங்களை மறந்து
       தீபமிட்டு வழிபட்டு
       சிறப்புடனே மகிழ்ந்து நிற்பார்!

       அடக்கி ஒடுக்கி நின்று
       ஆணவத்தின் தலை ஏறி
       அமைதியைக் குலைப்பதிலே
       ஆருக்கு என்ன பயன்?

        மற்றவரை வாழவிட்டு
        வம்புதும்பு தனையொதுக்கி
        நற்கருணை யோடிருந்தால்
        நலந்தானே யாவருக்கும்?

        இக்கருத்தை உள்ளடக்கி
        எங்கள் தீபாவளியுளதை
        எல்லோரும் மனதிற்கொளின்
        இனித்திடுமே தீபாவளி!

        ஏழ்மை நிலை ஒழியவேண்டும்
        இரக்ககுணம் ஓங்கவேண்டும்
        தாழ்வுமனம் ஓடவேண்டும்
        தலைநிமிர்ந்து வாழவேண்டும்!

        ஊழ்வினையை நம்பிநம்பி
        ஒதுங்கிநாம் நின்றிடாமல்
        வாழும் மனம் வந்துவிடின்
        மலரும் நல்ல தீபாவளி!

         பட்சணமும் செய்ய வேண்டும்
         பட்டாசும் வெடிக்க வேண்டும்
         கஷ்டமின்றி வாழ நாங்கள்
         கடவுளிடம் வேண்ட வேண்டும்!

         இஷ்டமுடன் யாவரையும்
         ஏற்று நிற்கும் மனமும்வேண்டும்
         துஷ்டரையும் துணிவுகொண்டு
         தூயராக்க முயலவேண்டும்!

         மட்டில்லா மகிழ்ச்சி என்றும்
         வந்துகொண்டே இருந்துவிடின்
         வாழுகின்ற நாட்களெல்லாம்
         மலர்ந்திடுமே தீபாவளி!

         பெண்ணடிமை போகவேண்டும்
         பெண்பிறந்தால் போற்றவேண்டும்
         மண்ணிலவர் நல்லவண்ணம்
         வாழும்நிலை வளரவேண்டும்!

         உண்ணுகின்ற உணவுமுதல்
         ஊற்றெடுக்கும் ஆறுவரை
         பெண்ணாகப் போற்றுகிறோம்
         பிறகுதான் தூற்றுகிறோம்!

         மனக்கதவைத் திறவுங்கள்
         மங்கையரை மதியுங்கள்
         மங்கையர்கள் மகிழ்ந்திட்டால்
         மலர்ந்திடும் நற்தீபாவளி!

         மஞ்சளொடு குங்குமமும்
         மல்லிகையும் அலங்கரிக்க
         மங்களமாய் பெண்கள்வரின்
         மலர்ந்திடுமே தீபாவளி!

        பெண்ணவளின் பெருமையினைப்
        பேணிவிடும் வேளையிலே
        மண்ணுலகில் தீபாவளி
        மலர்ந்திடுமே நாளெல்லாம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *