-எம்.ஜெயராம சர்மா – மெல்பேண்

 

paper-penஎழுதத்தெரிந்துவிட்டால் எழுதிவிடலாம் எனப்பலபேர் நினைக்கிறார்கள்.
அப்படி நினைத்தபடியால்தான் எப்படியோ எல்லாம் எழுதியும் விடுகிறார்கள்.

எழுதிய விஷயங்கள் எப்படி இருந்தாலும் அவர்களுக்கு அதைப்பற்றி எந்தவித வருத்தமோ கவலையோ வருவதேயில்லை. மற்ற‌வர்கள் என்ன சொன்னாலும் என்ன எண்ணினாலும் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவே மாட்டார்கள். எழுதிக்கொண்டே இருப்பார்கள்.

நாங்கள் எதைச்செய்தாலும் அந்தச் செயல் மற்றவர்களை எந்தவிதத்திலும் பாதித்து விடவே கூடாது. எங்களது விருப்பு வெறுப்புக்களைப் பகிரங்கப்படுத்தும் பொழுது மிகக் கவனமாகவே வெளிப்படுத்தவேண்டும். எங்களுக்குப் பிடித்த விஷயம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நினைக்கலாமா?அப்படி நினைக்கவே கூடாது.

சாதாரணமாக வீட்டிலே இருக்கின்ற அம்மா அப்பா பிள்ளைகளிடையேயே சாப்பாட்டில் கூட வித்தியாசம் இருப்பதை காணமுடியும். அப்பாவுக்கு நல்ல‌ காரம் பிடிக்கும். அம்மாவோ எதிர்மாறாக இனிப்பையே விரும்புபவராக இருப்பார். பிள்ளைகள் ஒவ்வொன்றுமே வித்தியாசமான சுவையை விரும்பலாம்.

அவர்களை பார்த்து…இனிமேல் நீங்கள் எல்லோரும் காரம்தான் சாப்பிட வேண்டும் என்று அப்பா கட்டளை இட்டாலோ வற்புறுத்தினாலோ அது நாகரிகமாக இருக்குமா?அது சர்வாதிகாரமாகவும் காட்டுமிராண்டித்தனமாக‌வுமாகவே இருக்கும் அல்லவா?

வீட்டிலேயே இப்படி இருக்கையில் வெளியில் உள்ளவர்கள் நிலையைச் சிந்திப்பது முறையான செயல்தானே. ஒவ்வொருவருக்கும் விருப்புக்களும் விருப்பம் இல்லாத தன்மையும் நிறையவே இருக்கிறது. அது அவரவர் சுதந்திரம். அதில் தலையிட எவருக்கும் உரிமை இல்லை. ஆனால் அவர் விருப்பத்தினை மற்றவர் மீது திணிக்க முயற்சிக்க நினைப்பதுதான் நாக‌ரிகமற்ற செயலாகி விடுகிறது எனலாம்.

சினிமா பார்ப்பதை அந்த நாள்தொட்டு இன்றுவரைப் பலர் நல்லதென்று
எடுத்துக்கொள்வதேயில்லை. ஆனால் நல்ல சினிமாக்களும் வந்துதான் இருக்கின்றன. அதற்காக ஒட்டுமொத்த சினிமாவையும் அது சார்ந்தவர்களையும் திட்டித் தீர்ப்பதோ வசை பாடுவதோ முறையா? இதனை பலர் எழுத்தால் செய்யும்பொழுது எழுத்து நாகரிகம் சற்று யோசிக்கின்றது.

சமயம் பக்தி கடவுள் இவையெல்லாம் பொதுவானவை. இவை பற்றி பல‌ கருத்து முரண்பாடுகள் காலத்துக் காலம் இருந்துதான் வந்திருக்கிறது. ஆனால் சமயங்களோ பக்திமார்க்கங்களோ கடவுள்பற்றிய நம்பிக்கைகளோ உலகைவிட்டு மறைந்து விடவில்லை.

இதுபோலத்தான் உயர்வு தாழ்வு என்னும் சாதிப் பாகுபாடும். என்னதான் சமத்துவம் பேசினாலும் சாதியென்பதை ஒழிக்கமுடியவில்லை. அது ஒருபக்கத்தில் தனது வேலைகளைச் செய்தபடியே இருக்கிறது.

புத்தர் வந்தார்; இயேசு வந்தார்; காந்தியும் வந்தார்; ரமணர்வந்தார்; ராமகிருஷ்ண‌ பரமஹம்சர் வந்தார்; அவரது வாரிசாக சுவாமி விவேகானந்தரும் வந்தார். இவர்கள் அனைவருமே மிக மிக நயமாகவும் அதேவேளை வெகு நாகரிகமாகவுமே நல்லவற்றைச் சொன்னார்கள் எழுத்தாயும் தந்தார்கள். யாரையும் குறை சொல்லவும் இல்லை. யாரையும் புண்படும்படிச் செய்யவும் முயல‌வில்லை. இது எமக்கெல்லாம் பெரியதொரு பாடமாகும்.

இப்படி இவர்கள் எல்லாம் நடந்து காட்டிய பின்னரும் கூட நாகரிகம்
இல்லாமல் இங்கிதம் என்றால் என்ன என்று தெரியாமல் புரியாமல்
எல்லோர் மனத்தையும் நோகடிக்கும் வகையில் எழுதுவது என்பது
இவர்களிடம் எப்படித்தான் வந்ததோ?

வீட்டுக்குள் இருந்தால் அது அவர்களுக்கு மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும். வீட்டை விட்டு வெளியில் வரும்பொழுது அது பல பேரைப் பாதிக்கும் அல்லவா? இதை ஏன் இவர்கள் உணர்கிறார்களில்லையோ தெரியவில்லை. விமர்சனம் என்பது தேவைதான். அதனை நாகரிகமாகச் செய்ய வேண்டும்.

வாரியார் சுவாமிகள் பல இடக்கு முடக்கான கேள்விக் கணைகள் வந்தபோதெல்லாம் யாருக்கும் எந்தவித மனநெருடல்களும் ஏற்படாவகையில் மிகவும் நாகரிகமாக அதனைக் கையாண்டுள்ளார் என்பதை அறிகின்றோம்.

எழுத்து என்பது மிகவும் வல்லமை வாய்ந்த ஆயுதமாகும். அதனை
மிகவும் லாவகமாகக் கையாளாவிட்டால் அது தாக்கிச் சேதப்படுத்திவிடும். கத்தியால் பழத்தையும் வெட்டலாம். அதேவேளை ஒரு ஆளையும் வெட்டிவிடலாம். நாகரிகம் அற்ற எழுத்துக்கள் மற்றவரை வெட்டிக்காயப்படுத்திவிடும்.

எனவே எழுத்தால் காயப்படுத்தாது…கருத்துக்களைக் கொடுப்போம்.
எழுத்தால் கண்ணியத்தைக் காப்போம். எழுத்தால் யாவரையும் இதமாக வருடிக்கொடுப்போம். அப்பொழுது எழுதும் எழுத்தில் நிச்சயமாக நயத்தகு நாகரிகம் வந்தே சேரும். நல்ல எழுத்தால் நாடும் வளரும். வீடும் வளரும். நட்பும் வளரும். உறவுகளும் மலரும். உள்ளமெல்லாம் உயர்வு பெறும். கண்ணியத்தைக் கடைப்பிடித்துக் கருத்துக்களை எழுதுவோம்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *