திருமுறைகள் கூறும் வழிபாட்டு நெறி
— எம்.ஜெயராமசர்மா.
“திரு” என்றால் உயர்ந்தது … பெருமை மிக்கது …. சிறந்தது …. மேன்மையானது …. தெய்வீகத்தன்மையானது எனப் பலநிலைகளில் பொருளைக் கொண்டிருக்கிறது. அதே வேளை செல்வம், அழகு, பொலிவு, நல்வினை என்னும் பொருள்களையும் உணர்த்தி நிற்கிறது. முறை என்றால் … நூல் என்னும் பொருளும், முறைப்படுத்துவது, நெறிப்படுத்துவது என்னும் பொருளும் அடங்கியிருக்கின்றதை காணலாம்.
எனவே “திருமுறை” என்றால் … உயரிய சிவஞானச் செல்வத்தை மக்கள் அடைவதற்குரிய வழிகாட்டும் நூல் என்றும், பரம்பொருளை அடைந்து அருள் பெறுவதற்கு உயிர்களை நெறிப்படுத்துவது என்றும் பொருள் கொள்ளலாம். இந்தவகையில் திருமுறையானது நமது சமயத்தின் உயிர்நாடியாக விளங்குகின்றது எனலாம். திருமுறைகள் பெரும் பொக்கிஷமாகும். சமயத்தை, வாழ்வியலை, இறை அனுபவத்தை எல்லாம் யாவருக்கும் எடுத்துக்காட்டப் பெருந்துணையாகி நிற்கின்றன. இத்திருமுறைகளில் வழிபாடு பற்றி பலவித நெறிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவையாவும் நமது ஈடேற்றத்துக்கு உதவுவனவாக இருகின்றன.
வழிபாடு என்றால் என்ன? ஒருவன் தனக்கு நன்மைகளை அளிக்கவேண்டி இறைவனை வாழ்த்தி வணங்குவது வழிபாடு ஆகும். வணங்குதல், போற்றுதல், பிரார்த்தனை என்றும் இதற்குப் பொருளை எடுத்துக் கொள்ளலாம். உலகிலே உள்ள உயிர்கள் இறைவனை சேர்வதற்கு ஏதுவாக இருப்பது வழிபடுதலேயாகும். அவ்வாறுவழிபடும் பொழுதுதான் துன்பத்துக்குக் காரணமாகிய பிறவியினின்றும் நீங்கி இன்பக்கடலான இறைவனை அடையமுடியும்.
வழிபாடு என்பதை இறைவனிடம் செலுத்தப்படும் அன்பாகவும் கருதலாம். அன்பின் காரணமாக இறைவனைப்பற்றிய சிந்தனை உண்டாகிவிடும். அந்தச் சிந்தனையை திருமுறைகள் பலவிதமான வழிப்பாட்டின் மூலம் நமக்கெல்லாம் காட்டி நிற்கின்றன. திருமுறைகளில் பலவிதமாக வழிபாட்டு நெறிபற்றி கூறியிருப்பினும் அவைகளில் நமக்கு எது உகந்ததோ அதனை நம் வாழ்வில் நாம் கடைப்பிடித்து ஒழுகவும் கூட வாய்ப்பும் இருக்கிறது.
சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற படிமுறையிலும் வழிபாடுபற்றி திருமுறைகளில் சொல்லப்பட்டிருக்கிறது. சற்புத்திர மார்க்கம், தாசமார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் என்னும் வகையிலும் திருமுறைகள் வழிபாட்டைக் காட்டிநிற்கின்றன. நமக்கு எது பொருத்தமாக இருக்கின்றதோ அதனைக் கைக்கொள்வதிலும் தவறில்லை.
திருமுறைகளில் இடம்பெறுகின்ற அடியார்கள் ஒவ்வொருவரும் ஒரே நிலையில் இருந்து வழிபட்டார்கள் என்று சொல்லமுடியாது. அவரவர் விருப்பப்படி இறைவனை வழிபட்டு தமது ஈடேற்றத்துக்கு அடிகோலினார்கள் என்றே எண்ண வேண்டியுள்ளது.
ஞானசம்பந்தரை கிரியைக்கும், அப்பரை சரியைக்கும், சுந்தரரை யோகத்துக்கும், மணிவாசகரை ஞானத்துக்குமாக எடுத்துக்காட்டுவதும் வழக்கமாகிவிட்டது. ஆனால் இவர்கள் நால்வரது வழிபாட்டிலும் கூட எல்லாவிதமான வழிபாடுகளும் கலந்து இருப்பதனை அவர்களது திருமுறைப் பாடல்கள் வாயிலாக அறிந்து கொள்ளவும் கூடியதாக இருக்கிறது.
நால்வரோடு சேர்ந்து ஏனைய அடியவர்களும் திருமுறைகளில் இடம்பெறுகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் பலவிதமான சூழல்களில் இருந்து வந்தவர்கள். அதனால் அவர்களும் தமக்கு எது ஏற்றதோ அப்படியான வழிபாட்டு முறையினையே தேர்ந்தெடுத்து இருந்தார்கள் என்பதையும் திருமுறைகள் வாயிலாக அறியலாம்.
மிகவும் இலகுவாக இருப்பது சரியை வழிபாடுதான் என்பதை திருமுறையில் நாம் கண்டுகொள்ளலாம். அந்த வழிபாட்டை எப்படிச்செய்ய வேண்டும் என்பதை மிகவும் அழகாக அப்பர் பெருமான் நமக்கெல்லாம் காட்டும்பாங்கு அவருக்கே உரியதனித்துவம் ஆகும்.
நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலு மெம்பிரானுடைய கோயில்புக்குப்
புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதியென்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே
என அப்பர் பெருமான் சரியைத்தொண்டை மிகத்தெளிவாக திருமுறை வாயிலாகத்தந் துள்ளார். நெஞ்சமே நீ நிலை பெற வேண்டுமானால் தவறாமல் எம்பெருமான் உறையும் கோவிலுக்குப் “போ” என்கின்றார். முதலாவது நிலை கோவிலுக்குப் போவதுதான். அதன்பின்பு எம்பெருமான் இருக்குமிடத்தை விடியமுன் கூட்டிப்பெருக்கி கழுவிச் சுத்தம் செய்து பூக்களைக்கொண்டு பூமாலைகட்டி இறைவன புகழ்ந்து நெக்குருகப்பாடி, தலைமேற் கைகுவித்து ஆனந்தப்பரவசப்பட்டு ஆடி அவனது நாமங்களைச் சொல்ல வேண்டும் இதுதான் சுகமான இனிமையான வழிபாடு என்று அப்பர் காட்டுகின்றார். இதையே …
“காதலாகிக் கசிந்துகண்ணீர்மல்கீ
ஓதுவார்தமை நன்நெறிக்குய்ப்பதும்
வேத நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே”
என்று சம்பந்தப்பெருமானும் சொல்லி நிற்கின்றார்.
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவழ்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே
என்று மணிவாசகப் பெருமானும் இந்த வழிபாட்டை ஆதரித்து கூறிநிற்பதை திருமுறையின் வாயிலாக நாம் கண்டு தெளியலாம்.
இவர்களோடு சுந்தரரும் சேர்ந்து இறைவனை
“பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா” என்று ஏற்றி போற்றி பாடிப்பரவி நிற்கின்றார்.
“சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னைமறந்தறியேன் உன்நாமம் என்நாவில் மறந்தறியேன்”
என்று அப்பர் சொல்லுவதும் இலகுவான சரியைமுறைவழிபாடுதானே.
பத்தாம் திருமுறையாக இருப்பது திருமந்திரமாகும். திருமந்திரத்தைத் தந்தவர் சித்தரான திருமூலராவார். அவரும் சரியை வழிபாடுபற்றிக்கூறி இருக்கின்றார்.
“நாடும் நகரமும் நற்றிருக் கோவிலும் தேடித் திரிந்து சிவபெரு மானென்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சக் கோயிலாய்க் கொள்வனே”
என்று சொல்லி இறைபுகழ் பாடிப்பரவுவதை நல்ல வழிபாடு எனச் சுட்டிக்காட்டுகின்றார் .இவ்வாறு பாடிப்பரவி நிற்கின்ற வேளையிலே என்ன நடக்கும் என்பதனை
“விம்மும் வெருவும் விழம் எழும் மெய்சோருந்
தம்மையுந் தாமறி யார்கள் சதுர்கெடுஞ்
செம்மை சிறந்த திருஅம் பலக் கூத்துள்
அம்மலர்ப் பொற்பாதத் தன்புவைப் பார்கட்கே”
என்று ஆகிவிடும் நிலை வந்து விடும் என்கிறார் திருமூலர். இவரது கூற்று மணிவாசகரின் “இன்னிசை வீணையருடன்” ஒத்ததாக அமைந்து இருக்கிறதல்லவா?
சரியை நெறியில் திருவிளக்கிடுதல் மிகச்சிறந்த ஒரு வழிபாட்டு நெறியாக இருப்பதை பனிரெண்டாம் திருமுறை வாயிலாகக் காணமுடிகிறது. திருவொற்றியூரில் கலிய நாயனாரும், திருவாரூரில் நமிநந்தி அடிகளும், தில்லையில் கணம்புல்லரும் திருவிளக்கிட்டே சிவகதிஅடைந்தனர் என்பதனை பெரியபுராணம் காட்டிநிற்கிறது. திருவிளக்கிட்டுவந்த நமிநந்தி அடிகளை அப்பர் பெருமான்போற்றிப் பாடும் திருமுறைப் பாடல்வாயிலாக திருவிளக்கிடுவதன் பெருமை எமக்கெல்லாம் ஒரு வழிகாட்டியாகவும் நல்லஒரு வழிபாட்டு நெறியாகவும் அமைந்து இருக்கிறதெனலாம்.
பெரும்புலர் காலை மூழ்கி பித்தர்க்குப் பத்தராகி
அரும்பொடு மலர்கள் கொண்டு ஆர்வத்தையுள்ளே வைத்து
விரும்பினால் விளக்குத் தூபம் விதியினா லிடவல்லார்க்கு
கரும்பினிற் கட்டிபோலவார் கடவூர் வீரட்டனாரே
விளக்கினாற் பெற்றவின்ப மெழ்கினாற் பதிற்றியாகும்
துளக்கினன் மலர்தொடுத்தாற் றூயவிண் ணேறலாகும்
விளக்கிட்டார் பேறுசெல்லின் மெஞ்நெறி ஞானமாகும்
அளப்பில் கீதஞ்சொன்னார்க் கடிகடாம் அருளுமாறே.
திரு அங்கமாலை அப்பரின் முக்கிய வாய்ப்பாடாகும். இதில் வழிபாடு எப்படி நடைபெறவேண்டும் …அதற்கு உதவுவன என்ன என்பதை அட்டவணைப்படுத்தி
இலகுவான வழிபாட்டை எல்லோருக்கும் காட்டியுள்ளார்.
“தலையே நீவணங்காய்
கண்காள் காண்மின்களோ
செவிகாள் கேண்மின்களோ
மூக்கே நீ முரலாய்
வாயே வாழ்த்து கண்டாய்
நெஞ்சே நீ நினையாய்
கைகாள் கூப்பித் தொழீர்
ஆக்கையாற் பயன் என்
கால்களாற் பயன் என்”
… இது ஒரு பாலபாடம் மாதிரி இருக்கிறது அல்லவா? இதைவிட இலகுவாக வழிபாட்டை எப்படிச்சொல்லுவது.
கண்ணப்பரின் வழிபாடு ஒரு விதம். குங்கிலியக்கலயநாயனாரின் வழிபாடு இன்னொருவிதம். எறிபத்தர் வழிபாடோ முற்றிலும் வேறுபட்டது. அப்பூதியார் வழிபாடு இன்னொருவிதமானது. சிறுத்தொண்டர் செய்கையும் வழிபாடும் நினைத்தே பார்க்கமுடியாதது. மெய்ப்பொருள் நாயனாரின் செயலும் அவரின் வழிபாட்டின் போக்கும் பெரும் வியப்பையும் ஆச்சரியத்தையும் தருவிப்பது. பூசலார் நினைப்பும் வழிபாடும் மிகவும் மேலோங்கியது.
குளம்வெட்டுதலும், குங்குலியம் தூபம் போடுதலும், அடியவர்க்கு அன்னமிடுதலும் அடியவர்க்கு வேண்டிய உபசரணைகள் செய்வதும், கோவில்கட்டுதலும், அதனைப் பரிபாலிப்பதும், இவையெல்லாம் ஒரு விதத்தில் இறைவனுக்கு அர்ப்பணமாகும் வழிபாடு என்றே திருமுறைகள் வாயிலாக எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.
தினமும் கோவிலுக்குச் சென்று இயன்ற திருப்பணிகளைச் செய்வதுதான் நமக்குப் பொருத்தமானதாய் இருக்கும் என்று நினைப்போமாயின் அதனையும் செய்யலாம் என திருமுறைகள் எமக்கு வழிகாட்டி நிற்கின்றன. நமது சமயம் மிகவும் சுதந்திரமானது. செய் அல்லது ஓடிவிடு என்று ஓர் நாளும் எமது சமயம் சொன்ன வரலாறே இல்லை.
“மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை” என்று தைரியம் கூறிநின்றதுதான் எங்கள் சமயத்தின் பெருமையும், எங்கள் சமயத்தை வளர்த்தஅடியார்களின் சிந்தனையுமாகும்.
எவர் எவர்க்கு எத்தகைய வழிபாட்டுமுறை உகந்ததாக இருக்கிறதோ அதனை அவர்கள் கைக்கொண்டு இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.
“வேண்டத் தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாலுக்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டால்
வேண்டி நீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்
அதுவும் உன் தன் விருப்பு அன்றே.”
இதுவும் மணிவாசகர் காட்டும் ஒருவித வழிபாட்டு நிலையன்றோ!
“முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
………………………………………………………………………..
தன்னை மறந்தாள் தன்நாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே “
இந்த நிலை வழிபாட்டில் ஞான நிலையாகும். இதற்குள்ளும் நாம் வரலாம். ஆனால் அதற்கு எங்கள் மனம் மிகுந்த முயற்சியை எடுக்க வேண்டும். வழிபடுவதில் முக்கியம் கடவுள் மீது உண்மை அன்புடன் வழிபடுவதே ஆகும்.
“கங்கை யாடிலென் காவிரி யாடிலென்- கொங்குதண் குமரித்துறை யாடிலென்
ஓங்குமாகடல் ஓதநீராடிலென் – எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே”
இதுதான் உண்மையான வழிபாடு என்று திருமுறை வாயிலாக அப்பர் எமக்கெல்லாம் அறிவுறுத்தி நிற்கின்றார். உள் அன்போடு வழிபடுதல்தான் உண்மையான வழிபாடு என்பதை மனத்தில் பதிய வைக்கவேண்டும். இதனையே திருமுறைகளும் வலியுறுத்துகின்றன.” அன்பே சிவம் என்பதை “திருமூலரும் வலியுறுத்தி நிற்கின்றார்.
எம்.ஜெயராமசர்மா B.A (Hons) Dip.in Edu , Dip.in Soc , M.Phil Edu ,SLEAS
(முன்னாள் கல்விப்பணிப்பாளர்)
படம் உதவிக்கு நன்றி: http://www.meditationbangles.com/shiva_wallpaper.php
உயர்திரு ஜெயராம சர்மா அவர்களே,
தங்களது தமிழ்த் திருமுறை வழிபாடு அமிழ்தப் பெருக்கில் மூழ்கித் திளைத்துக் களிபேருவகை அடைந்தேன். இம்மாதிரியான கட்டுரைகள் பல எழுதி எங்களைச் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மதிப்பிற்குரிய ஐயா,
மிகவும் பொருள் செறிந்த கட்டுரை. நான் பலமுறை யோசித்ததுண்டு; நாம் செய்யும் சில செயல்கள் எல்லாம் கடவுள் வழிபாட்டுடன் பொருந்துமா என்று. தங்கள் கட்டுரை எல்லா ஐயங்களுக்கும் விடை பகருகின்றது. தயை கூர்ந்து இது போன்ற கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வழங்கி எங்கள் சிந்தனையை மேலும் செப்பனிடச் செய்யுங்கள்.
ஐயா
நமசிவாய. அற்புதமான கட்டுரை ஆக்கம். வழிபாடு என்பது என்ன? ஏன் வழிபட வேண்டும்’ ? வணங்கினால் என்ன பயன் ? மிக சிறப்பாக விளக்கியிருந்தீர்கள். நன்றி. இறைவனை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.