Author: திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி

  • சேக்கிழார் பா நயம் – 25

     திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி

    சிவபிரான் முதிய அந்தணனாகி ,சுந்தரர் திருமணம் நடந்த  புத்தூர்  நோக்கி  வந்த சிறப்பை முன்பு கண்டோம்!  இங்கே அவர் சுந்தரரைத் தடுத்தாட்கொள்ள ஆடிய அழகிய நாடகத்தின் தொடக்கத்தைக் காண்போம்.  சுந்தரர் புத்தூர் சிவவேதியர் சடங்கவியார் மகளைத் திருமணம் செய்துகொள்ள  வந்த திருமண மண்டபத்தில் எழுந்தருளிய முதிய அந்தணர், ‘’யாவரும் கேளுங்கள்! இங்கே திருமணம் புரிந்துகொள்ளும்  நாவலூரருக்கும் எனக்கும் இடையே ஒருவழக்கு உள்ளது! அதனை முடித்துக்கொண்டு இவர்  திருமணம் புரிந்துகொள்ளட்டும்’’    என்றார்! இதைக்கேட்ட அந்தமண்டபத்தில்  கூடியிருந்த சான்றோர்கள் மிகவும் வியப்படைந்தனர். ‘’அந்தணர்  குலத்திருமகன்! அரசரின் வளர்ப்புப்பிள்ளை! அவருடன் இவர்க்கு எப்படி வழக்கு இருக்கக்கூடும்?  இதென்ன புதிய இடையூறு!’’  என்று எண்ணினர்.

    முறைப்படி அந்த  மூத்த அந்தணரை வரவேற்று , ‘’உங்கள்வரவு எங்கள் தவப்பயன்! நீங்கள் உங்கள்கருத்தைக்  கூறுங்கள் ‘’ என்றுஒப்புதல்அளித்தனர். பழங்கால முறைப்படி அந்த  அவையினரிடம் ஒப்புதல் பெற்ற மூத்த அந்தணர்,

    கூறிய வாசகம் கேட்ட  சபையினர்  மிகவும் வியந்தனர்!  சுந்தரர் சிரித்தார் முதியஅந்தணரிடம்  ‘’எனக்கும்  உங்களுக்கும்  இடையில் உள்ள  வழக்கை முடித்தபின்னரே, திருமணம்புரிந்துகொள்வேன்! ‘’ என்றார் .

    அவையில் தம்மை இகழ்ந்து சிரித்த சுந்தரரிடம், தம் உத்தரியத்தைத் தோளில் அணிந்தபடி சென்று’’ அந்தக் காலத்தில் உன்தந்தைக்குத் தந்தையாகிய பாட்டனார்   உங்கள்   பரம்பரைக்கே எழுதிக்  கொடுத்த அடிமைச்சாசனம் இது!’’

    இதனைக் கண்டு,  அடே  , சிறுவா! சிரித்தது ஏனடா?’’ என்றார்! அவையினர்  அதிர்ச்சியடைந்தனர் சுந்தரரோ, ‘’அந்தணர்  இன்னோர் அந்தணருக்கு  அடிமையாதல் உண்டோ? இக்கிழவன் பித்தனோ?  ‘’ என்றனர்!

    உடனே மூத்தஅந்தணர்,  ‘’ நீ எத்தகைய தீச்சொற்களையும் அபவாதத்தையும் சொன்னால்,  அதற்கெல்லாம் யான்   வெட்கமடைய மாட்டேன்! அந்தஅளவுக்குப் பெரியனாகிய நீ என்னை  நன்றாக அறிந்துகொண்டிருந்தால்,  இப்படி அறிந்தவன்போல்  என்னெதிரில்  நின்று அறிவுவாசகம் பேசவேண்டா!  நீ எனக்கு  இப்போதே  அடிமைப்பணி  செய்ய வேண்டும்!’’ என்றார்!

    இதனை  அந்த அந்தணர் கூறும்போது,’’நீ என்னை நன்றாக அறிந்துகொள்ளவில்லை ! ‘’ என்றுகூறித் தம்  உத்தரியத்தைத் தோளில்  அணிந்துகொள்வது போல், தம் நஞ்சுண்ட  கண்டத்தைக் காட்டினார்! அந்தஅளவுக்கு நீ  இந்த இளம்பெண்மேல் மையல் கொள்ளும் மானுடமாய், மயங்கி,  என்னை நோக்கி, இழிந்த  சொல்லாகிய ‘’பித்தன்’’ என்றாய்! அவ்வாறே நான்  பித்தனும், பேயனும் ஆகிறேன்!  இப்போது உன்  பழைய  நினைவு வந்து என்னை அறிந்து கொள்ள வில்லை! ஆதலால் வித்தகம்பேசுகிறாய்!’’ என்றார் .  சுந்தரர் தம் அரசவாழ்வு,  அந்தணப் பெருமை இவற்றால் உயர்வு மனப்பான்மை   மயக்கத்தில், தம்நிலை அறியாமல் இருந்தார்! ‘’உடனே, எனக்கு அடிமைப்பணி செய்!’’ என்று  ஆணையிட்டார்! இவற்றையெல்லாம் விளக்கும் வகையில் சேக்கிழார் பெருந்தகை ,

    “பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக நீ இன்று
    எத்தனை தீங்கு சொன்னால் யாது மற்று அவற்றால் நாணேன்
    அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்று
    வித்தகம் பேச வேண்டாம் பணி செய வேண்டும்” என்றார் 

    என்று பாடியுள்ளார்! உள்ளாழ்ந்த   பெருந்தன்மையும் ,  பெருமையும்   சற்றே மோதிக்  கொண்ட  அரிய நிகழ்ச்சிஇது!  தொடர்ச்சியை மேலும்காண்போம்!

    Share
  • சேக்கிழார் பா நயம் – 24

    -திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி

    கயிலாயத்தில் சுந்தரருக்கு வரமளித்தவாறே தென் திசையில் தமிழ்நாட்டில் மையல் மானுடமாய் மயங்கும்போது தடுத்தாட் கொள்ள , சிவபெருமான் புத்தூரில் எழுந்தருளினார். அப்போது   ஒரு மூத்த அந்தணர் வடிவு  கொண்டு சுந்தரர் திருமணம் நடைபெறும் இடத்தில் தோன்றினார்!  அவ்வாறு தோன்றும்  பொழுது, மேலே மிகவுயர்ந்து , கீழே மிகவும் தாழ்ந்து  பிரமனும் திருமாலும் மிக முயன்றும் அடி  முடி  தேடவரிய,  மிகப்பெரிய அனல் உருவத்துடன் வந்த சிவபிரான்,எளிய அந்தக் கோலத்தில் தம்மை ஒடுக்கிக் கொண்டு தோன்றினார்.

    மிகப்பெரிய படைப்புக் கடவுளும், காக்கும் கடவுளும் அறிந்து கொள்வதற் கரியவர்,  எளிய மானிடர்கள் அறிந்து கொள்வதற்கரிய முதிய அந்தணராகத் தோன்றினார்! அவரை ஊர்மக்கள் அறிந்து கொள்ளவில்லை என்பதைக் காட்டும் வகையில்,முன்பு வானையும் மண்ணையும் அளந்த அனற்பேருருவுடன்

    தோன்றிய சிவபிரான் என்றுகூறிய சேக்கிழார், இக்கதையைப் படித்தறியும்  நமக்கு மட்டும்  புலப்படும் வகையில் முதிய அந்தணராய்த் தோன்றினார், என்று பாடுகிறார்!

    இங்கே அந்தப் புத்தூர் மக்களுக்குப்புலப்படாத அந்தண வடித்துவத்துடன் சிவபிரானே  தோன்றினார் என்று கூறுவதில்தான் சேக்கிழாரின் திறமை புரிகிறது! நமக்குத் தெரிந்த சிவபெருமான், புத்தூர் மக்கள் மட்டுமே  புரிந்து கொள்ள இயலாத, முதிய  அந்தணராய்த் தோன்றினார், என்று சேக்கிழார் பாடுகிறார்! இதனை சிவக்கவிமணி,

    ‘’பெருந்தேவர்க்கும் அரியனாகிய பெருமான் அன்புசெய்வார்க்கு  எளியவன்  என்பதை ,

    நல்லசிவ தன்மத்தால் நல்லசிவ யோகத்தால்

    நல்லசிவ ஞானத்தால் நானழியவல்லதனால்

    ஆரேனு மன்புசெயி னங்கே தலைப்படுங்காண்

    ஆரேனுங் காணா வரன்

    என்ற சாத்திரத்தால் அறியலாம். அகந்தை கொண்ட இருவர்க்கும் அரியவர், தாமே அன்புடைய ஒருவர்க்கு எளியவராயினமையும், அவர்கள் தேடவும் ஒளித்தவர் இவர் மறுப்பவும் விடாது வழக்கிட்டுப் பற்றியமையும் குறிப்பு.’’

    என்று எழுதுகிறார்! ஆகவே தம்பால்  மிகவும் அன்புகொண்ட சுந்தரர் அறியாமல் வாதாடிய போதும் தம்மை அறிவித்துக்  கொள்ள வந்தார்! இதனை மேலும் சுவைபட , அவர் கொண்ட அந்தண  வடிவத்தை விளக்குகிறார்!

    தம் நெற்றிக்கண்ணை மறைத்த துணிப்படலம் போலக் குழைத்த திருநீறணிந்த நெற்றியும், அதனருகே மிகவும் மூத்தமையால் தளர்ந்து நெற்றியில்  விழும் நரைத்த சடையும், காதில் உருத்திராட்சக் குழைகளும், மார்பில் பழைய மெலிந்த பூணூலும், அதனை மறைத்த வெண்மையான உத்தரீயமும், வெயிலை மறைப்பதற்கு உரிய குடையும், வயிற்றின் கீழே சரிந்த பழைய கோவணமும்,  அதனை மூடிய பழைய ஆடையும் உடையவராய் வந்தார். அவர் கரத்தில் வெண்மையான துணியைச் சுற்றி, தர்ப்பைக்கயிற்றால் கட்டிய சிறுமூங்கில் கழியை ஏந்திக்கொண்டு , தள்ளாடிய நடையுடன் வந்தார்!

    அவ்வாறு வந்த மூத்த அந்தணரின் வடிவத்தை நோக்கி, ஓர் இளைஞனின் பேரழகு    காலப்போக்கில் அகவை முதிர்ந்தால் உண்டாகும் சுருக்கங்களுடன் தோன்றுவது போல இருக்கிறதே  என்று அவ்வூர் மக்கள் ஐயம் கொண்டார்கள்! மேலும் பேரழகே  மூப்படைந்தால் அவ்வடிவம்  இப்படித்தான் இருக்குமோ என்றும் ஐயம் கொண்டார்கள்! திருவிளையாடற்புராணத்தில் சிவபிரான் விருத்தராக வந்தார். அதனை,

    “கரிந்தநீள் கயல்உன்னின் அரையும்முது  திரைகவுளும் கனைக்கும் நெஞ்சும்
    சரிந்தகோ  வணஉடையும்  தலைப்பனிப்பும்  உத்தரியம்  தாங்கும்  தோளும்
    புரிந்தநூல் கிடந்தலையும்  புண்ணியநீ றணிமார்பும்  பொலிய  நீழல்
    விரிந்ததோர் தனிக்குடையும் தணடூன்றிக் கவிழ்ந்தசையும் மெய்யும் தாங்கி.

    ஒருத்தராய் உண்டிபல  பகல்கழிந்த  பசியினர்போல்  உயங்கி  வாடி
    விருத்தவே   தியராய்வந்து  அகம்புகுத”

    என்று பாடுகிறது. அங்கு  மெலிந்து  தளர்ந்த  திருமேனி வருணிக்கப் பெற்றது.  பெரியபுராணத்திலும் முதியவராக வந்த திருக்கோலம் வருணிக்கப்   பெறுகிறது. ஆனால்  அந்த முதுமையிலும் ஓர் அழகு விளங்கியதைச்  சேக்கிழார் கூறுகிறார்!   வேதியராகிய இவருடைய தோற்றம், உண்மை வைதிக நெறியே உருவாகி   விளைந்த மூலப்பொருளோ, என்றும் ஐயுற்றார்கள். இந்த வடிவுடன், திருமண மண்டபத்துள்  தோன்றிய முதிய அந்தணரை அனைவரும் வியப்புடன் பார்த்தனர்! இதனைச் சேக்கிழார்,

     ‘’மொய்த்து வளர் பேரழகு மூத்தவடி வேயோ

     அத்தகைய மூப்பெனும் அதன் படிவ மேயோ

     மெய்த்த நெறி வைதிகம் விளைந்த முதலேயோ 

     இத்தகைய வேடம் என ஐயமுற எய்தி ‘’

    என்று பாடினார். ஒருவருடைய உடலழகு மூப்படைய, மூப்படைய அழகை  இழப்பது உலகின் இயல்பு! ஆனால்,  இந்த வடிவம் பேரழகே மூத்த வடிவமோ? என்று மக்கள் நினைத்தனர்! முதுமையின் படிவமே  அழகுதானோ? என்றும் எண்ணினர். வேதம் ஓதுவதால் அக அழகு,  முக அழகாக ஒளிவீசும்! வேதம் ஓதியும், சமுதாயத் தொண்டாற்றியும், தமிழின் இனிமையை எங்கும்  கூறியும், இசைபாடியும் வயதில் மூத்த பெரியோர்களாகிய மகாபெரியவர், காந்தியடிகள், வாரியார் சுவாமிகள், எம்.எஸ்.சுப்புலட்சுமி , கஸ்தூரிபா  ஆகியோரின் அழகு, அவர்களின் முதுமையிலும்  பார்த்துக்கொண்டே இருக்கத்  தோன்றுகிறதல்லவா? இதுதான் மூப்பின் அழகு! வேதத்தின் சிறப்பை ஓதி ஓதி உணர்ந்தமையால் பூசலார் நாயனாரின் அழகு மிகுந்தது  என்பதைப் பூசலார் நாயனார் புராணத்தில்,

    ‘’வாய்மைப்   பொருள்பெறு    வேதநீதிக்   கலையுணர்   பொலிவின்    மிக்கார் ‘’

    என்று பாடுகிறார்!  ஆகவே அகத்தின்  அழகுதான்  புறத்தின்  அழகாகப்  பொலியும்!  அத்தகையோர் அகவை ஏற ஏற, அழகும் ஏறும். ஆதலால் இப்பாடலில்  அழகின்  முதிர்வு, மூப்பு, கலையுணர்வு ஆகிய  முப்பரிமாணங்களும் கூறப்பெறுகின்றன. இங்கே இளமை அழகின்  கர்வத்தினை, முதிய,  அறிவுநிறைந்த , கலையுணர்வு மிக்க அழகு எளிதில்  வென்றடக்கிய  சிறப்பு,   நயம்படக் கூறப்பெறுகிறது.

    Share
  • சேக்கிழார் பா நயம் – 23

    -திருச்சி புலவர் இரா,இராமமூர்த்தி

    சடையனார் மாதினியர் மைந்தராகத் தோன்றி, நரசிங்க முனையரையர் வளர்ப்பு மகனாகத் திகழ்ந்த சுந்தரர் மணப்பருவம் அடைந்தார். அவர்தம் பெற்றோர் விருப்பத்தின் வண்ணம் புத்தூர் சடங்கவி சிவாச்சாரியார் திருமகளை மணம் பேசினர். அவ்வாறே திருமண ஏற்பாடுகளை அரசரும் செய்தார்!

    முன்பே திருக்கயிலையில் சுந்தரர் இறைவனுக்கு மலர்கள் பறிக்க நந்தவனம் வந்தபோது, அங்கு வந்த அம்மையின் தோழியர் இருவர்பால் மனம்போக்கினார்! அதனால் அவர்களை இறைவன் தென்திசையில் பிறந்து, இல்லற இன்பம் துய்த்து, பின்னர் கைலை வந்தடையுமாறு அருள் புரிந்தார்! திருக்கயிலை மலை வாழ்வை இழந்து , மானுடராகி , மையல் வலைப்பட்டு மயங்காமல் தடுத்தாட் கொள்ள வேண்டும் என்று சுந்தரர் இறைவனை வேண்டினார்! அப்போது அங்கே இறைவன் ‘’அவ்வாறே தடுத்தாள்வோம்!’’ என்று திருவாய் மலர்ந்தார்! வேதங்கள் ஒலிக்கின்ற கயிலைமலையில் செப்பியருளிய வாக்குறுதியைக் காக்க சுந்தரரரைத் தடுத்து வழிவழியாக அடிமைகொண்டு வாழ்விப்பதற்காக சிவபிரான் சுந்தரர் திருமணம் நிகழ்ந்த ஊருக்கு வந்தருளினார்! அவ்வாறு அவர் மணம்வந்த புத்தூருக்கு எழுந்தருளிய தண்மையைச் சேக்கிழார் பெருமான் பாடுகிறார்.

    எப்போதும் வேதத்தின் ஓசையே ஒலித்துக் கொண்டிருக்கும் சூழலை உடையது திருக்கயிலைமலை! இதனைத் திருஞானசம்பந்தர் ,

    தாதார் கொன்றை தயங்கும் முடியர் முயங்கு மடவாளை
    போதார் பாகம் ஆக வைத்த புனிதர் பனி மல்கும்
    மூதார் உலகில் முனிவர் உடனாய் அறம்நான்கு அருள்செய்த
    காதார் குழையர் வேதத் திரளர் கயிலை மலையாரே!

    என்றும் ,

    ‘’சுற்றும் மணி பெற்றது ஒளி செற்றமொடு குற்றம் இலது எற்று என வினாய்
    கற்றவர்கள் சொல் தொகையின் முற்றும் ஒளி பெற்ற கயிலாய மலையே!’’

    என்றும்,

    ‘’ஏதம் இல பூதமொடு கோதை துணை ஆதி முதல் வேத விகிர்தன்
    கீதமொடு நீதிபல ஓதிமற வாதுபயில் நாதன் நகர்தான்
    தாதுபொதி போதுவிட ஊதுசிறை மீதுதுளி கூந்தல் நலிய
    காதல்மிகு சோதிகிளர் மாதுமயில் கோதுகயி லாயமலையே!’’

    என்றும்,

    ‘’நிலைமை சொல்லு நெஞ்சே தவம் என்செய்தாய்
    கலைகள் ஆயவல் லான்கயி லாயநல்
    மலையன் மாமயி லாடுது றையரன்
    தலையின் மேலும் மனத்துளும் தங்கவே!’’

    என்றும் திருமுறைகள் பாடுகின்றன! இத்தகைய வேதவொலி எப்போதும், எங்கும் கயிலை மலையில் கேட்கின்றது! இதனைக் கேட்டுக்கொண்டே இருக்கும் சிவபிரான் அதனையே மீண்டும் கூறுகிறார்! அதனைத் தென்திசைத் தமிழ் மொழியில் ஈசன் வழங்கி மகிழவே, தம் கண்ணாடிப் பிரதிபலிப்பாகிய ஆலால சுந்தரரை அனுப்பினார்! அவரைத் தடுத்தாட்கொண்ட போது,

    ‘’அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மைச்
    சொற்றமிழ் பாடுக என்கிறார், தூமறை பாடும் வாயார்!’’

    என்று பணித்தார். இதனையே இங்கு சேக்கிழார் ,

    ‘’ஆலுமறை சூழ்க்கயிலை யின்கண்அருள் செய்த
    சாலுமொழி யால்வழி தடுத்தடிமை கொள்வான்!’’

    என்று பாடுகிறார்! அன்று கையிலை மலையின்கண் சுந்தரரைத் தடுத்து ஆட்கொள்வதாக அருள்செய்த மொழியே சாலும் மொழி! அவ்வாறே சுந்தரர் மையல் மானுடமாய் மயங்கி , இறைநெறி நீங்கித் திருமணம் செய்துகொள்ள முயன்றபோது அவரைத்தடுத்து வழி வழியாய் அடிமை கொண்டார்! இதனைத் ‘’தடுத்து வழியடிமை அடிமை கொள்வான்!’’ எனப் பாடினார்! கொள்வான் என்பது கொள்ளும்பொருட்டு, என்ற வான் ஈற்று வினையெச்சமாகவும், கொள்பவனாகிய சிவபெருமான் என்ற வினையால் அணையும் பெயராகவும் விளங்குகிறது! வினைகருதி அணைபவன் தானே சிவபெருமான்?

    அத்தகைய வாக்குத் தவறாத சிவபிரானை அடுத்த அடிகளில் உலகிற்கே அறிமுகம் செய்கிறார்! சிவபிரானை நாம் கண்டு அளந்தறிவோம் என்று திருமாலும் , பிரமனும் முன்வந்தனர்! அப்போது சிவபெருமான் அக்கினி வடிவில் அண்ணாமலையாராக மேலும் கீழும் வளர்ந்தார்! திருமால் சிவபெருமான் திருவடியைக் காணக் கீழ் நோக்கிப் பன்றி வடிவில் தோண்டித்தோண்டிச் சென்றார்; பிரமனோ அவர் முடியைக் காண, அன்னப் பறவை வடிவில் மேலே மேலே பறந்து சென்றார்! ‘’மாலறியா நான்முகனும் காணாமலை ‘’ என்று மாணிக்க வாசகர் பாடினார்! அவரை நம் சேக்கிழார் ,

    ‘’மேலுற எழுந்து மிகு கீழுற அகழ்ந்து
    மாலும் இருவர்க்கும் அரியார் , ஒருவர் வந்தார்!’’

    என்று பாடுகிறார்! படைப்புக் கடவுளான பிரமனும், காக்கும் கடவுளான திருமாலும் இறைவனின் அடி,முடி தேடி மயங்கினர்! இதனை, ‘’மாலும் இருவர்க்கு ‘’ என்கிறார் சேக்கிழார்! மாலும் என்பதற்கு மயக்கம் கொள்ளும் என்பது பொருள்! அவர்களாலேயே அறிந்துகொள்ளுதற்கு அரியவரான ஒருவர்! என்று சேக்கிழார் கூறியதன் நுட்பம் உணர்ந்து மகிழ்தற்கு உரியது! அவர் உருவத்தாலும் பெரியவர் மட்டுமல்ல; காலத்தாலும் முதியவர்! எந்தக் காலத்திலும் இறுதி இல்லாத சிவபெருமானின் காலத்தை மிக எளிதாக அப்பர் சுவாமிகள்,

    ‘’நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
    ஆறு கோடி நாராயணர் அங்ஙனே
    ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்
    ஈறு இல்லாதவன் ஈசன் ஒருவனே !’’

    என்று பாடித் தலைக்கட்டுவார்! அத்தகைய நீளாயுளும் பேருருவமும் படைத்த ஈசனை யாவராலும் அளக்கவியலாது.இதனைத் திருமூலர்,

    ‘’ஆர் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை
    ஆர் அறிவார் இந்த அகலமும் நீளமும்
    பேர் அறியாத பெரும் சுடர் ஒன்றதின்
    வேர் அறியாமை விளம்புகின்றேனே!’’

    என்று வியந்து போற்றுகிறார்! இவ்வாறெல்லாம் அளவிட இயலாத பெருமை உடையவன் ஈசன் என்று சேக்கிழார் கூறுவதன் காரணம் அடுத்த நிகழ்வுகளில் புலப்படும்! ஆம், யாருக்கும் அவர் பெருமை புலப்படாத நிலையில், ஓர் ஓலையைக் காட்டிச் சுந்தரர் திருமணத்தைத் தடுத்த செயலால் சிவபெரு மானின் ‘அகடித கடனா’ சாமர்த்தியத்தையும் புரிந்து கொள்ள வியலாமல் புத்தூர் அந்தணர்களே திகைக்கின்றனர்! இவர்களைத் திகைக்க வைத்த ஈசனின் அருள் விளையாடலை அடுத்து நாம் காணப் போகிறோம். இப்போது சேக்கிழாரின் பெரிய புராணப் பாடலை முழுமையாகக் கற்றறிவோம்!

    ஆலுமறை சூழ்க்கயிலை யின்கணருள் செய்த
    சாலுமொழி யால்வழி தடுத்தடிமை கொள்வான்
    மேலுற வெழுந்துமிகு கீழுற வகழ்ந்து
    மாலுமிரு வர்க்குமரி யாரொருவர் வந்தார்!

    இப்பாடலில் ஒருவர் என்ற சொல், ஒப்பற்றவர் என்ற பொருளில் அமைந்து இறைவனின் நிகரற்ற சிறப்பை எடுத்துக் காட்டுகிறது!

    Share
  • சேக்கிழார் பா நயம் – 22

    -திருச்சி புலவர். இரா. இராமமூர்த்தி

    சுந்தரருக்குத் திருமணக்கோலம் புனைவித்து, உயர்ந்த குதிரையின் மேலேற்றி ஊர்வலம் வந்தார்கள்! அந்த ஊர்வலத்தில் உறவினரும், நட்பினராகிய அரசரைச் சார்ந்தோரும் தொடர்ந்து வந்தனர்! அவ்வாறு வந்தோர் தத்தமக்கு உரிய தேர், யானை, குதிரை முதலிய வாகனங்க ளிலும், வண்டிகளிலும் வந்தார்கள்!

    சிறந்த திருமணக் கோலத்துடன் திருமணம், நிகழும் புத்தூரை நோக்கி அனைவரும் வந்தனர்! புத்தூர், மணமகளின் தந்தை சடங்கவி சிவாசாரியாரின் ஊர் ஆதலால் அங்கேதான் திருமணம் புரிவித்தனர்! இங்கே சேக்கிழார் ஒருகுறிப்பைத் தருகிறார்! அன்றுமுதல் புத்தூரின் பெயர்’’மணம் வந்த புத்தூர் ‘’ எனப்பட்டது, என்று எழுதுகிறார்! சுந்தரர் திருமணத்தின் அடையாளமாக எஞ்சப்போவது, அந்தப் பெயரே ஆதலால் அவ்வாறு கூறினார்! ஆனால் காலப்போக்கில் அவ்வூர் ‘’மணம் தவிர்ந்த புத்தூர் ‘’ என்று மாறியது!

    அவ்வூர் நோக்கி வந்த சுந்தரர் சுற்றத்தினரை பூரண கும்பம் கொடுத்துப் புத்தூர் அந்தணர்கள் வரவேற்றனர்! அவ்வாறு ஊர்வலத்தில்வந்த சுந்தரரைக் குறித்தும் , திருமணப் பெண் குறித்தும், தம்மைக் குறித்தும் பெண்கள் உரையாடியதை அடுத்த பாடலில் நயம்படக் கூறுகிறார்!

    திருமணத்தில் பேரழகர் சுந்தரரின் அலங்காரத் தோற்றத்தைக் கண்ட ஊர்வலப் பெண்டிர், ‘’ கண்கள் எண்ணிலாத வேண்டும் காளையைக் காண ‘’ என்றார்கள்! சுந்தரரைக் ‘’காளை’’என்று கூறிய சேக்கிழாரின் சொல்லாட்சி தனித் தன்மை வாய்ந்தது! திருமண நங்கை சடங்கவி பேதை!அவளுடன் காளையை இணைப்பது சற்றுத் தயக்கம் தருகிறது! திருமணத்துக்கு மணம்பேசிய அளவில் திருமணத்தகுதி வந்துவிட்டது என்றாலும் , அவர்கள் திருமணத்தைப் பெருமான் தடுத்தாட்கொண்டார்! ஆதலால் கண்கள் எண்ணில்லாத வேண்டும் என்று சுந்தரரரைக் காண விரும்பியவர்கள், நங்கையாகிய சடங்கவி திருமகளின் அழகு குறித்து ஏதும் கூறாமல், ‘’பெண்களில் உயர நோற்றாள் சடங்கவி பேதை! என்பார்!’’ என்று சேக்கிழார் கூறுகிறார்! சுந்தரர் என்னும் சிவனடியாருடன் திருமணம் என்ற அளவிலேயே சடங்கவி மகள் சிவலோகப் பேறு பெற்றாள். ஆதலால் ‘’பெண்களில் சிவலோகப்பேறு பெற்று உயர நோற்றாள், சடங்கவி பேதை ‘’ என்று சேக்கிழார் பாடுகிறார் ‘சடங்கவி பேதை’ என்ற தொடர் அவர்தம் அஞ்ஞானம் விளைத்த ஞானத்தை உணர்த்துகிறது! அதனால்தான் சிவலோகப்பேறு பெரும் தகுதியுள்ள பேதைப்பெண்ணின் மேனியழகின் வருணனையைச் சேக்கிழார் பாடவில்லை.

    சுந்தரர் சிவபெருமானால் தடுத்தாட்கொள்ளப் பெற்றார். ஆனால் அவரைக் கணவனாக நினைத்த சடங்கவியார் திருமகள் என்ன ஆனார்? என்றார் வினாவுக்கு விடை தருவது போல் சேக்கிழார்,

    ‘’அயலோர் தவம் முயல்வார் பிறர் அன்றே மணம் அழியும்
    செயலால் நிகழ் புத்தூர் வரு சிவ வேதியன் மகளும்
    உயர் நாவலர் தனி நாதனை ஒழியாது உணர் வழியில்
    பெயராது உயர் சிவலோகமும் எளிதாம் வகை பெற்றாள்.’’

    என்று அப்பேதையும் சிவலோகம் பெற்றதைக் கூறுகிறார்! இவ்விடத்தில் சிவப்பேறு பெறத்தக்க காரைக்காலம்மை வரலாற்றில் அவருக்கும் பரமதத்தனுக்கும் நிகழ்ந்த திருமணத்தை ,

    தளிரடிமென் னகைமயிலைத் தாதவிழ்தார்க் காளைக்குக்
    களிமகிழ்சுற் றம்போற்றக் கலியாணஞ் செய்தார்கள்.

    என்று சேக்கிழார் பாடியதை இங்கே நினைவில் கொண்டு வருதல் வேண்டும்! காளையும் மயிலும் திருமணப் பொருத்தத்தில் பகையாகும்.

    இங்கே முறையான திருமணத்தில் இணைந்த இராமன்-சீதை திருமணம் குறித்த கம்பன் பாடல்கள் படித்துச் சுவைக்கத் தக்கன! அங்கே மகளிர்,

    “நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும்!
    கொம்பினைக் காணும்தோறும் குரிசிற்கும் அன்னதேயாம்!’’

    என்று ஒருவரை ஒருவர் விஞ்சிய அழகைக் காட்டுகிறார்! இதனை நன்கறிந்த சேக்கிழார், சற்றே மாற்றிப் பாடிய நயம் போற்றுதற்கு உரியது! இனிச் சேக்கிழார் பாடலை மீண்டும் காண்போம்!

    ‘’கண்கள் எண்ணிலாத வேண்டும் காளையைக் காண என்பார்
    பெண்களில் உயர நோற்றாள் சடங்கவி பேதை என்பார்
    மண் களி கூர வந்த மணம் கண்டு வாழ்ந்தோம் என்பார் ‘’‘.

    இப்பாடலில் ஈற்றடியில் இந்த மண்ணில் மட்டும் மகிழ்ச்சி தரும் திருமணமத்தைக் காணுமுன் வாழ்ந்தோம் என்று கூறிய பெண்களின் கூற்று நயம் மிக்கதாகும்.

    Share
  • சேக்கிழார் பா நயம் -21

    திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி

    சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருமணத்துக்குப் புறப்பட்ட காட்சியை, சேக்கிழார் மிகவும் நயம்படப் பாடுகிறார்! சுந்தரர் அந்தணர் குலத்தில் அவதரித்தாலும், அரசரின் வளர்ப்பு மகனாக வளர்ந்தார்! அவருக்கு அந்தணர்குல வழக்கப்படி, ஜாதகரணம், நாமகரணம், உபநயனம் ஆகிய சடங்குகளை அவர் பெற்றோர் நிறைவேற்றினர். அதன் பின் அவர் திருமணத்துக்கு ஏற்ற பருவம் அடைந்த பின் அவருக்கு உரிய மணமகளாக புத்தூர்ச் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைக் குலம், கோத்திரம் ஆகியவற்றை ஆராய்ந்து பொருத்தம் பார்த்து, இருவருக்கும் பொருந்திய மணநாள், முகூர்த்த நேரம், இவற்றைக் குறித்தனர். அரசரின் வளர்ப்பு மகனாதலால் பலநாட்டினருக்கும், மணவோலை அனுப்பினர்! இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொள்வதை அனைவரும் காண வேண்டும் என்ற நுட்பமான கருத்து இதில் புலப்படும்!

    சுந்தரருக்குத் திருமஞ்சனம் ஆட்டி, அவருக்கு இருவகையான அலங்காரங்கள் செய்தனர்! அரசரின் வளர்ப்புமகன் ஆதலால், அரசர் பெருங்கோலமும், அந்தணர் மைந்தன் ஆதலால் வைதிகப் பெருங்கோலமும் செய்தனர்! அதாவது தமக்கு உரியதல்லாத மன்னவர் திருவுக்கேற்ப, வைதிக முறையில் ‘’தூய நறிய பச்சைக் கர்ப்பூரச் சுண்ணத்துடன் அழகிய பூக்களிலிருந்து ஆகிய தண் பனிநீர் கூட்டிச் செய்த சந்தனக் குழம்பைப் பூசி, கத்தூரி சேர்ந்த கலவைச் சாந்தையும் அணிவித்து; அதன்பின் விதிப்படி அணியும் பூணூலை மார்பிலும் பவித்திரத்தைக் கையிலும் விளங்கவைக்க, அவ்வாறு பவித்திரங்கொண்ட கையினராய் வைதிகத் திரு வுடையர் ஆனார்!.. அடுத்து அரசத் திருவாகிய தூய மலர்களால் ஆகிய பிணையல் – மாலை – கண்ணி – கோதை – தாமம் என்ற பலவகை மலர்மாலைகளையும் சாத்த அணிந்து, ஒளி மிகுந்த மணிகளிழைத்த தூய பொன் மணி மாலைகளையும் சாத்த அணிந்து கொண்டார்! இதனைச் சேக்கிழார்,

    ‘’மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க ‘’

    என்று பாடுகிறார்! இதைக்கண்ட அவ்வூர் மக்கள் திருவிழாவாகக் கொண்டாடினர்! அப்போது நம்பி ஆரூரர், தம்மைக் கைலாயத்திலிருந்து அனுப்பிய சிவபெருமானின் திருவடிகளை, உள்ளத்துள் எழுந்தருள வைத்துக் கொண்டு, அந்த உரிமையைக் காட்டத் தக்க திருநீற்றை முறையாக அணிந்து கொண்டார்! மேலும் இவர் கைலையில் இறைவனுக்குத் திருநீறு ஏந்தி அணைவார் என்பது குறிப்பு.

    அப்போது பொன்னாலாகிய அணிகளைப் பூண்ட அடியார்கள், சுந்தரராகிய மணமகனை, அக்கால முறைப்படி ஓர் உயர்ந்த குதிரையை அலங்கரித்து, அதன் மேலேற்றி ஊர்வலமாக வந்தனர்! இதனைச் சேக்கிழார்,

    ‘’பொன்னணி மணியார் யோகப் புரவி மேற்கொண்டு போந்தார்!’’

    என்று பாடுகிறார்! இங்கே சுந்தரர் ஏறிவந்த குதிரை, ‘’யோகப்புரவி ‘’ என்று குறிக்கப் பெறுகிறது. நம் உயிர், மிகுந்த தியானம் செய்தால் யோகசாதனை என்ற இறைமையின் இணைப்பைப் பெறலாம்! மணமகனும், மணமகளும் இல்வாழ்வில் இணையும் இன்பநிலையுடன், இறைவனை அணுகும் யோகமுறையை இங்கே குறிப்பிடக் காரணம் உண்டு! கம்பராமாயணத்தில், இராமனும் சீதையும் திருமணம் புரிந்து கொண்ட நிகழ்ச்சியை,

    ‘’மன்றலின் வந்து மண தவிசு ஏறி
    வென்றி நெடும் தகை வீரனும் ஆர்வத்து
    இன் துணை அன்னமும் எய்தி இருந்தார்
    ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்!’’

    என்று கம்பர் பாடுகிறார்! இராமனை வென்றி நெடுந்தகை வீரனும் என்று கம்பர் கூறுகிறார்! தன் ஆற்றல் புலப்பட, வில்லை வளைத்து , ஒடித்து சீதையை போகம் கருதி மணந்து கொண்டமையால் இராமன் அவ்வாறு கூறப்பெற்றான். ஆனால் சீதையைக் கம்பர், ‘’ஆர்வத்து இன்துணை அன்னமும்‘’ என்று பாடுகிறார். சீதை இராமன் என்னும் ஆன்ம நாயகனுடன் என்றுமே இணைந்து வாழும் தன்மை உடையவள்! சீதையை அன்னம் என்று கம்பர் கூறியது இராமனிடம் மானுடத் தன்மையால் நிகழும் பிழையை நீக்கி, பாலில் சேர்ந்த நீரைப் பிரித்து நீக்கும் அன்னப்பறவை போல, தியானத்தால் இராமனின் குறையை நீக்கி இறைவனாகிய தலைவனுடன் இணையும் யோகத்தை அவள் பெறுவாள், என்பதை குறிப்பிடவே! அதுகருதியே ‘’தேவியைப் பிரிந்த போதெல்லாம் இராமன் திகைத்தான்! ஆகவே, இவர்கள் திருமணம் புரிந்து கொண்டதைக் கம்பர் ‘’ஒன்றிய யோகமும் போகமும் ஓத்தார்!’’ என்று பாடினார்! அவ்வாறே சுந்தரர் சடங்கவி மகளை மணந்து கொள்ளாமல் , யோக நிலையில் இறைவனுக்குத் தோழராய் சைவத் திருமுறையாகிய பாடலைப் பாடி இணைந்து கொள்ளப் போகும் சிறப்பை இங்கே முன்நிகழ்ச்சியாய்க் குறிப்பிடுகிறார்! சுந்தரர் ஏறிய யோகப் புரவி, பின்னரும் பரவையார், சங்கிலியார் இருவருடனும் இறைப்பணியாகிய, தியான யோகம் செய்து மீண்டும் கைலாயம் சென்று வாழப் போவதையும் குறித்தது! இனி முழுப் பாடலையும் பாடி மகிழ்வோம்!

    ‘’மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க
    நன்னகர் விழவு கொள்ள நம்பிஆ ரூரர் நாதன்
    தன்னடி மனத்துள் கொண்டு தகும்திரு நீறு சாத்திப்
    பொன்னணி மாமியார் யோகப் புரவிமேற் கொண்டு போந்தார்!’’

    இப்பாடலின் நயம் மிக்க தொடர்கள் நமக்குச் சமயத் தெளிவை உணர்த்துகின்றன !

    Share
  • சேக்கிழார் பா நயம் 20

    – திருச்சி புலவர் இராமமூர்த்தி

    இறைவன் திருவருள் விருப்பத்தால் மாதவம் செய்த தென்திசையில், திருமுனைப்பாடி நாட்டில், திருநாவலூரில்  சடையனார்க்கும் இசைஞானியார்க்கும்  மைந்தராக,  சுந்தரர் திருவவதாரம் செய்தார். அவர் அவதாரம் செய்த நாடு  தனிச் சிறப்புப் பெற்றது. இந்நாட்டில்தான் அப்பரடிகள் அவதரித்தார். இந்நாட்டில்தான் சைவ சமய சந்தானாசாரியார்களாகிய ஸ்ரீ மெய்கண்டாரும் ஸ்ரீ அருள்நந்தி சிவாச்சாரியாரும்  அவதாரம் செய்தனர்!

    இந்தச் சுந்தரர் சிறு குழந்தையாகத் தெருவில் விளையாடிய போது , நகர்வலம் வந்த அரசராகிய நரசிங்க முனையரையர், அக்குழந்தையின் ஒளிபொருந்திய அழகைக் கண்டு , அன்புற்று அவரைத் தம் வளர்ப்பு மைந்தராக ஏற்று மகிழ்ந்தார். ஆனாலும் சிவவேதியர் குடும்பத்தில் பிறந்த அவருக்கு, அவர் பெற்றோர் உரிய முறையில் உபநயனச் சடங்கு செய்தார்கள். பின்னர் உரிய பயிற்சிகள் பெற்று முறையாக வளர்ந்து திருமணத்துக்கு உரிய வயதை அடைந்தார். பின்னர் புத்தூர் சடங்கவி சிவாச்சாரியார்  திருமகளைக் குலம்,  கோத்திரம், ஆகியவற்றின் பொருத்தம் பார்த்துத் திருமண ஏற்பாடுகள் செய்தனர் . அரசர் வளர்ப்பு மகன் என்பதால் செல்வச்  சிறப்புடன்  அளவில் அவரை அலங்கரித்து யோகப்புரவி மேல் ஏற்றி ஊர்வலம் வந்தனர் .

    திருமணநாளுக்கு  ஏழு நாட்களுக்கு முன் மங்கையர்கள் பன்னிரண்டு சிறுமண் கலயங்களில்  முளைப்பாலிகை எனப்படும் நவதானிய வித்துக்களை இட்டு நீரூற்றினர் . அவை பன்னிரண்டு ஆதித்தர்களைப் போற்றி வழிபாடு செய்து அவர்களின் ஒப்புதல் பெறும் சடங்காகும். அதன் பின் முதல்நாளில் சுந்தரர் திருக்கரத்தில் காப்புக் கயிறு காட்டினார் , திருமணம் நிறைவேறி முழுமையான சடங்குகள் முடிந்து  காப்புக்  கயிற்றை அவிழ்க்கும் வரை எந்த இடையூறும் நேரா வண்ணம் பிரார்த்தித்துக்  கட்டுவதே காப்புக் கயிறாகும்.பின்னர்  அவருக்குத் திருமணத்துக்குரிய மாப்பிள்ளைக் கோலம் புனைவித்தனர்!

    அவர்தம் திருமணக்  கோலம் காண்பதற்கு அனைவரும் அதிகாலையிலேயே திரண்டனர். அப்போது கீழ்த்திசையில் கதிரவன் உதித்தான்! கதிரவன் இயற்கையாக உதிப்பதைச் சேக்கிழார் , ஒரு காரணம் பற்றி உதிப்பதாகத்  தம்  கருத்தை ஏற்றி அழகான  கற்பனை செய்து பாடினார்!    காவியங்களில் கதிரவன் தோற்றத்தைப் பாடுதல் மரபு. சிலப்பதிகாரத்தில் ஞாயிறு போற்றுதும் என்று இளங்கோவடிகள் பாடியுள்ளார்!

    முதல்நாள் இரவெல்லாம் திருமணச் சடங்குகள் வேதியர்கள் மந்திரவிதிப்படி நிகழ்ந்தன. இதனை , ‘’மாமறை விதி வாழாமல் மணத்துறைக்  கடன்கள் ஆற்றி ’’ ,    என்று சேக்கிழார் குறிப்பிடுகிறார்! தூய மறையோர் முக்காலமும் வேதம் ஓதும் ஊர் என்பதால்’’ தூமறை மூதூர்’’ என்று சேக்கிழார் குறிப்பிடுகிறார். அவ்வூரில்  நள்ளிரவில்  மங்கலவாழ்த்து நிறைந்து ஒலித்தது! சுந்தரருக்கு திருமணச் சடங்குகளில் தொடர்ந்து மாலைகள் சூட்டினர்! ‘’அத்தகைய மணமாலை அணிந்து தோன்றும் சுந்தரர் என்ற இயல்பான திருப்பெயர் பெற்ற பேரழகரின் திருமணக் கோலத்தில்  தன்  வெளிச்சக் கதிர்களை வீசி, ஒளியூட்டித் தானும் உலகினரும் கண்டு மகிழ்வதற்காகக்  கீழ்த்திசையில் கதிரவன் உதித்து வந்தான்’’, என்று கதிரவன் உதித்தமைக்குத்  தான் விரும்பிய குறிப்பை ஏற்றிச் சேக்கிழார் பாடுகிறார்! இதனை அணியிலக்கணம் ‘’தற்குறிப்பேற்றம்’’ என்று குறிப்பிடும்! இனி முழுப்பாடலையும் படிப்போம்,  

    ‘’மாமறை   விதிவ  ழாமல்  மணத்துறைக்  கடன்கள்  ஆற்றித்

     தூமறை    மூதூர்க்   கங்குல்  மங்கலம்  துன்றி  ஆர்ப்பத்

     தேமரு   தொடையல்  மார்பன்   திருமணக்   கோலம்  காணக்

     காமுறு   மனத்தான்  போலக்  கதிரவன் உதயம் செய்தான்!

    இப்பாடலில் சுந்தரரின் திருமணத்தைச் சிவபிரான் தடுத்து, ஆட்கொள்ளப் போவதால் , ‘’திருமணம்  காண ‘’ என்று பாடாமல் திருமணக் கோலத்தை மட்டும் காண்பதற்கு  என்ற பொருளில் , ‘’திருமணக் கோலம் காண’’ என்று கூறினார். உதித்தான் என்று கூறாமல்  ‘’உதயம் செய்தான் ‘’ என்று கூறியதன் நுட்பம் உணர்ந்து கொள்ளற்ற்கு உரியது!

    கம்பராமாயணத்தில் காட்டில் இராமனும் சீதையும் அண்ணங்களையும், யானையையும் கண்ட காட்சியை,

    ஓதிமம் ஒதுங்க கண்ட உத்தமன் உழையள் ஆகும்
    சீதை-தன் நடையை நோக்கி சிறியது ஓர் முறுவல் செய்தான்
    மாது_அவள்-தானும் ஆண்டு வந்து நீர் உண்டு மீளும்
    போதகம் நடப்ப நோக்கி புதியது ஓர் முறுவல் பூத்தாள்

    என்று பாடுகிறார்!  இப்பாடலில் , சீதையின் நடையைக் கண்டு ஒதுங்கிய அன்னத்தின் நடையைக்  கண்ட   இராமன், சீதையின்  நடை எதனையும் வெல்லும் இயல்புடையதுதானே என்று, அந்த நடையைச் சிறியது என்று நினைத்து, ஒரு  சிறு முறுவலைச் செய்தான்!    ஆனால் குளத்தில் இறங்கி  நீருண்டபின் தாகம் தீர்ந்த நிறைவுடன் கம்பீரமாக நடக்கும்  யானையின் நடையை விடவும் பெருமிதம் கொண்ட இராமனின் நடையைக் கண்ட  சீதை அதில் ஒரு புதுமை இருப்பதை எண்ணி, புதியது ஓர் முறுவல் பூத்தாள். என்கிறார்கம்பர், முறுவல் செய்தமைக்கும்  முறுவல் பூத்தமைக்கும் இடையில் உள்ள வேறுபாடு   அப்பாட்டில் புலனாகின்றது! இங்கே உதயம் செய்தான் என்பதில் கடமை தெரிகிறதே யன்றி, ஆவல் புலப்பட வில்லை. மேலும் காமுறு மனத்தான் போல என்பதில் , காமுறு  மனத்துடன் உதிப்பது போல என்றில்லாமல் , மனத்தான் போல என்பதில் சிறு வேறுபாடு உண்டு. மக்கள் ஆர்வம் கொண்டார்கள் , ஆனால் கதிரவனுக்குக் கைலை நிகழ்ச்சி தெரிந்திருக்கும் என்பதால்  ‘மனத்தான்போல’ என்றும் , ‘ உதயம் செய்தான்’ என்றும் சற்றே வித்தியாசமாக, நயம்படச்  சேக்கிழார் குறிப்பிடுகிறார்!  

    Share
  • சேக்கிழார் பா நயம் -19

    -திருச்சி புலவர் இராமமூர்த்தி

    கைலை மலையிலிருந்து தமிழகத்துக்கு இறைவனால் அனுப்பப் பெற்ற சுந்தரர், அவதாரம் செய்த திருமுனைப்பாடி நாட்டினைப்பற்றி கடந்த கட்டுரையில் பார்த்தோம். இப்போது அவர் திருஅவதாரம் செய்த சிறப்பைக் குறித்துக் காண்போம்! தமிழ்நாட்டின் வேதியர் குலத்தின் வகைகள் உண்டு! நால்வேதங்களையும் ஓதி அவை கூறும் நன்னெறியில் வாழ்ந்து வரும் வேதியர் ஒருவகை!

    வேதம் வேதியர்கள் பிரமனது முகத்தில் தோன்றியவர்கள் என்று கூறுகிறது! அவ்வகையில் பிரமன் முகத்திலும், தோளிலும், வயிற்றிலும், தொடையிலும் வேதியர், அரசர், வணிகர், வேளாளர் ஆகியோர் தோன்றினர். இவை பிறந்த இடத்தினால் உயர்வோ, தாழ்வோ பெறவில்லை. முகம் அறிவைக் குறித்து அதனை வழங்கும் ஆசிரியர்களாகிய வேதியரையும், தோள், வீரத்தைக் குறித்து வலிமையால் போர் செய்யும் அரசரையும், வயிறு உணவுப்பொருளை சேமித்து வழங்கும் வணிகர்களையும், கால்கள் வயலில் நடந்து உழவுத்தொழில் புரியும் வேளாளர்களையும் குறித்தது! இவையே உயர்வு தாழ்வற்ற நாள் வருணம்! பிறந்த மனிதன்இளமையில் பெற்றோர் ஆசிரியர் ஆதரவில் ஞான நூல்களைக் கற்றுக்கொள்ளும் போது பிரம்மச்சாரியாகவும், இளைஞனாய்த் திருமணம் புரிந்து கொண்டு குடும்பம் நடத்தும்போது கிரகஸ்தனாகவும், இல்லற இச்சை தீர்ந்தபின் காடுநோக்கி மனைவியுடன் சென்று பிறர்க்குதவி வாழும் வானப்பிரஸ்தனாகவும், முற்றத் துறந்தபின் பற்றே இல்லாமல் வாழும் சன்யாசியாகவும் வாழும் நிலைகளை ஆசிரமங்கள் என்பர். இவை அனைத்திலும் எல்லார் வாழ்க்கையும் அமையும்! இந்த வருணங்களும், ஆசிரமங்களும் வர்ணாசிரமம் என்று கூறப்படும்! இவை உலகியல் வாழ்க்கையாகும்!

    ஆன்மவியல் வாழ்க்கையில் சிவ வேதியர் என்போர், சிவபெருமானின் ஐந்து திருமுகங்களிலிருந்தும் அதிகரித்து வந்து, ஆகமம் முதலியவற்றால் சிவபெருமானை அர்ச்சிக்க உள்ள உரிமை பெற்றவர் ஆவர்! அந்தணர் வேறு, சிவவேதியர் வேறு! இவர்கள் முப்போதும் பெருமானைத் திருமேனி தீண்டி வழிபாடு செய்வர்; மேலும் இவர்கள் பரம்பரை பரம்பரையாய் சிவபிரானுக்கு அணுக்கமாய்த் தொண்டு செய்வதால்சேக்கிழார் இவர்களை ‘வழி வழியடிமை செய்யும் வேதியர்’ என்றார். ‘’இவர்கள் கௌசிகர், காசிபர், அகத்தியர், பரத்துவாசர், கௌதமர் என்ற ஐவரின் கோத்திரங் கொண்ட வர்கள்; இவ்வைவரும் இப்பேர்கொண்ட பிரம புத்திரர்கள் அல்லர்.இவர்கள் சிவமரபினர், இவர்களுக்கு வேதபாரம்மிய மில்லை என்பாரை நோக்கி மறுக்கும்வகையில் வேதியர்குலம் என்றார் .பிரமதேவர் முகத்தினின்று தோன்றிய வேதியர்வேறு; சிவவேதியர்வேறு.!

    பிரமன் வழித் தோன்றியவரே, தக்கயாகத்தில் வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டும், தாருகாவனத்து இருடிகள் வழிவழிவந்து இறைவனால் தண்டிக்கப்பட்டும், ததீசி முனிவரால் சபிக்கப்பெற்றும் இவ்வழியே உலகில் அதிகரித்து வருபவர்கள். இவர்களது வரலாறு கந்தபுராணம் முதலியவற்றுட் காண்க. சிவவேதியர்களாகிய இவர்கள் முன் சொல்லிய எவ்விதச் சிவாபராதங்களுக்கும் உட்படாதவர்களாய்ச் சிவபெருமானை எப்போதும் ஆன்மார்த்தம் – பரார்த்தம் என்ற இருநிலையிலும் வழிபட்டுச் சிவநெறித் தலைவர்களாய் உள்ளவர்கள்.இக்காலத்தில் இவர்கள் தம் பெருமையை உணராமல் தாழ்வு மனப்பான்மை கொண்டு வாழ்க்கை நடத்துகின்றன!’’ என்று சிவக்கவிமணி கூறுகிறார்! இவர்களையே சிவபிராமணர் என்பர்,

    ‘வழி வழி யடிமை செய்வோர்’ என்ற தொடரில் வழி வழி என இருமுறை கூறியது, இவர்கள் தந்தை வழி முன்னோர், தாய்வழி முன்னோர் என்ற இருவகையாலும், சிவபிரானுக்கு அடிமைத்தொண்டு புரிந்த மரபினர் என்பதைக் குறிக்கும்.

    ‘’சிவமறையோர் திருக்குலத்தார் அருவி வரை வில்லாளிக்கு அகத்தடிமை யாமதனுக்கு ஒருவர் தமை நிகரில்லார்!’’ என்று பின்னர் சேக்கிழார் கூறுவார்! இனி அவர் இயற்றிய பாடலைக் காண்போம்!

    ‘’மாதொரு பாக னார்க்கு வழிவழி யடிமை செய்யும்
    வேதியர் குலத்துட் டோன்றி மேம்படு சடைய னாருக்
    கேதமில் கற்பின் வாழ்க்கை மனையிசை ஞானி யார்பால்
    தீதகன்று உலகம் உய்யத் திருவவ தாரம் செய்தார்!’’

    இப்பாடலில் வேதியர் குலத்துள் தோன்றி என்று இறந்த காலத்தாலும், மேம்படு சடையனாருக்கு என்று எதிர்காலத்தாலும் கூறிய சேக்கிழாரின் சொல்லாட்சி மகிழ்தற்குரியது. சடையனார் தோன்றியது சிவவேதியர் குலம். அவர் சுந்தரரைப் பெறுவதால் இனி அவர் குலம் மேம்படப் போகிறது, என இருகாலத்தாலும் குறிப்பிட்டுள்ளார்!

    ‘சடையனார் ‘ என்பது சுந்தரர் தந்தையார் பெயர்.இது சிவபெருமானுக்கே உரிய சிறப்பான பெயர். அதனை மகனுக்கு இட்டு வழங்குவது சிவவேதியர் வழக்கம்; கடவுட் பெயர்களையும் , பெரியோர் பெயர்களையும் மக்களுக்கு இட்டு வழங்குதல் உலக வழக்கம் ஆகும். அவ்வகையில் சுந்தரர் தந்தையாரைச் சடையனார் என்றும், தாயாரை இசைஞானியார் என்று வழங்கினர்! சடையனார் தம் தந்தையாரின் திருப்பெயராகிய ‘ஆரூரர் ‘’ என்பதைச் சுந்தரருக்கு இட்டு வழங்கினார். இதனைச் சுந்தரரே தம் தேவாரத்தில் ,

    ‘’நண்பு உடைய நன்சடையன் இசைஞானி சிறுவன்
    நாவலர்கோன் ஆரூரன் நாவின்நயந் துரைசெய்’’

    என்று தம்மைப்பற்றிக் குறிக்கிறார்! மேலும்,

    .“இசைஞானி யம்மையார் (திருவாரூர்) கமலாபுரத்திலே சிவகோதம கோத்திரத்திலே ஞான சிவாசாரியார் குடும்பத்தில் அவதரித்த மகாளவார் என்பது கல்வெட்டுக்களாற் கிடைக்கும்செய்தி!’’

    சுந்தரர் தம் அருள்மொழிகளால் சைவம் தழைக்கச் செய்தார், என்பதைக் குறிக்க ‘’ தீதகன்று , உலகம் உய்ய ‘’ என்ற தொடரால் புலப்படுத்தினார். மேலும் அவர் பிறந்தமையால் மற்றையோரும் தீமை நீங்கி உய்ந்தனர் என்பதைக் குறிக்க, ‘’ திருவவதாரம் செய்தார் ‘’ என்று சேக்கிழார் கூறினார்! இவ்வாறு திருக்கையிலையிலிருந்து தென்திசையில் சுந்தரர் தோன்றிய சிறப்பை, சொல்லாட்சி சிறப்புடன் சேக்கிழார் கூறியமை உணர்ந்து மகிழத்த தக்கதாகும்!

     

    Share
  • சேக்கிழார் பா நயம் – 18

    -திருச்சி புலவர் இரா இராமமூர்த்தி

    கைலையில் இறைவன் சுந்தரமூர்த்தி சுவாமிகளை, அவர் மாதர்களுடன் கலந்து வாழும் பொருட்டுத் தென்பாரதத்தை நோக்கிச் செல் என்று ஆணையிட்டார்! அவ்வகையில் சுந்தரர் திருமுனைப்பாடி நாட்டில் அவதரித்தார்!அந்த நாட்டின் சிறப்பை சேக்கிழார் பெருந்தகை பாடுகிறார்! சிவபிரான் தம் முடிமேல் கங்கை, பிறை, பாம்பு, கொன்றை மலர் ஆகியவற்றைத் தாங்கியவர்!

    இத்தொடரால் சிவபெருமானின் அருஞ்செயல்கள் கூறப்பெறுகின்றன! வானிலிருந்து விரைந்து ஓடிப்பாய்ந்த கங்கையின் வேகத்தைத் தடுத்துத் தம் சடையின் சிறுபகுதியில் தாங்கி,வழிந்து நாடெங்கும்ஓட விட்டார்! இது குறிப்பாக கைலை மலையிலிருந்து கீழிறங்கித் தமிழ் நாடெங்கும் சென்று திருவருட் பாடல்களஅருளிச் செய்த சுந்தரரின் அருள் வரலாற்றைப் புலப்படுத்து கிறது! அடுத்து இயல்பாகவே முரண்பட்ட மதியையும் பாம்பையும் அருகருகே இருத்திய செயல், குறிப்பாக சுந்தரர் காரணமாகத் தமக்குள் முரண்பட்ட பரவை நாச்சியாரையும், சங்கிலியாரையும் ஊடல் தீர்த்து அவருடன் வாழச் செய்த அருள் வரலாற்றைக் குறிக்கிறது! அடுத்துக் கொன்றை மாலையைத் தலைமேல் சூடிய செயல் குறிப்பாக நிறமும், மணமும் நிறைந்த கொன்றை மலரை யாரும் சூடாமல் ஒதுக்கிய போதும், சிவபிரான் தானே விரும்பித் தலைமேலணிந்து சிறப்புச் செய்தது போல் மையல் மானுடமாய் மயங்கிக் காதல் வயப்பட்ட சுந்தரரை, அவர் பாடலின் பக்திமணம் பாரெங்கும் பரவச் செய்யும் பொருட்டுத் தம் தோழராய் ஏற்றுக்கொண்ட பெருமையைப் புலப்படுத்துகிறது! அதுமட்டுமல்ல, பிரணவ சொரூபம் படைத்த கொன்றை மாலை போன்று, இறைவர் சிறப்பை உணர்த்தும் திருத்தொண்டத்தொகை, தேவாரம் போன்ற பாடல்களை ஏற்று மகிழ்ந்த அழகைக் காட்டுகிறது. இவற்றையே சேக்கிழார்,

    ‘’கங்கையும் மதியும் பாம்பும் கடுகையும் முடிமேல் வைத்த அங்கணர் ‘’ என்ற தொடரால் குறிப்பிட்டார்! முன்பு கைலையில் சுந்தரரைத் தென்திசையில் மெல்லியலாருடன் காதல் இன்பம் கலந்து அணைவாய் என்று போக்கிய போது,

    ‘’செய்ய சேவடி நீங்கும் சிறுமையேன்
    மையல் மானுட மாய்மயங் கும்வழி
    ஐய னேதடுத் தாண்டருள் செய் என
    அங்க ணாளன் அதற்கருள் செய்தபின் ‘’

    என்ற பாடலில் அங்கணாளன் என்று சிவபிரானை நினைவுடன் குறித்தார்! இத்தகைய சிவபெருமான், திருமுனைப்பாடி நாட்டில், திருவெண்ணை நல்லூரில் சுந்தரரை ஆள்ஓலை காட்டித் தடுத்தாட்கொண்டார்! அந்த ஆண்டவர் எழுந்தருளிய நாடே திருமுனைப்பாடி நாடு! என்று பாடுகிறார்!

    அந்தத் திருமுனைப்பாடி நாட்டின் பெண்களைப் பற்றியும் சேக்கிழார் பாடுகிறார்! அம்மங்கையரின் குளிர்ந்த நிலவு போன்ற திருமுகத்தில், செங்கயல்களாகத் திகழும் விழிகள் இருமருங்கிலும் உள்ள செவிகளில் அசையும் குழைகளை நாடிப் பாய்கின்றன! என்பதை.,

    ‘’அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு
    மங்கையர் வதன சீத மதியிரு மருங்கும் நாடிச்
    செங்கயல் குழைகள் நாடும் திருமுனைப் பாடிநாடு!’’

    என்று பாடுகிறார்! இத்தொடரில் , மங்கையர் கண்களின் சிறப்பைச் சேக்கிழார் பாடுகிறார்! கம்பரும் கோசல நாட்டை வருணிக்கும் போது,

    ‘’ஆச லம்புரி ஐம்பொறி வாளியும்
    காசலம்பு முலையவர் கண்எனும்
    பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக்
    கோசலம்!’’

    என்று பாடுகிறார்!அந்நாட்டின் பெண்களின் கண்கள் நன்னெறிக்கு மாறான வழியில் செல்லாவாம்! அவ்வாறே இந்தத் திருமுனைப்பாடி நாட்டின் மங்கையர் கண்களும் உள்ளன! உலகினர் கண்ணால் காண்பதை விசாரித்துச் செவியால் கேட்டபின் உறுதிப் படுத்திக்கொள்வார்கள்! அவ்வாறே அவ்வூரினர், சுந்தரர் சிவபெருமானின் அடியார் என்று செவியால் கேட்டதை , மூல ஓலையைக் கண்ணால் கண்டு உறுதிப்படுத்திய வரலாற்றை இது வேறுவகையில் கூறுகிறது! இதற்கு மேலும் விளக்கமாக ,

    ‘’இப்பகுதியிலே பின்னர்ச் சரித நிகழ்ச்சியிற் பரவையார் ஆரூர் நம்பிகளைப் “பண்டைவிதி கடைகூட்டக்“ கண்களாற் கண்டபின் “எதிர் வந்தவர் யார்?“ என்று சேடியை வினவி, அவள் சொல்லத் தமது காதுகள் மூலம் அறிந்துகொண்டாராகும். காட்சித் துறையிலே கண்ணால் தலைவனைக் கண்ட தலைவி, பின்னர் அவனை இன்னார் என்று காதாற்கேட்டறிந்துய்வள். ஆதலின் கண்கள் காதுகளை நாடிற்று என்ற குறிப்பை இச்சரித நிகழ்ச்சியிற் காண்போம்’’ என்று சிவக்கவிமணி கூறுகிறார்!

    இப்பாடலில்தான் சுந்தரர் அவதரித்த நாடாகிய திருமுனைப்பாடி நாடும், குறிப்பாக அந்நாட்டை ஆண்ட அரசராகிய நரசிங்க முனையரையர் திருப்பெயரும் கூறப்பெற்றன! இனி முழுப்பாடலையும் பயில்வோம்!

    ‘’கங்கையின் மதியும் பாம்பும்
    கடுக்கையும் முடிமேல் வைத்த
    அங்கணர் ஓலை காட்டி
    ஆண்டவர் தமக்கு நாடு
    மங்கையர் வதன சீத
    மதியிரு மருங்கும் ஓடிச்
    செங்கயல் குழைக்கள் நாடும்
    திருமுனைப் பாடி நாடு!’’

    சிவபிரானின் பெருமை, சுந்தரர் வரலாற்றுச் சிறப்பு, பெண்களின் பெருமை, நாட்டின் அறிமுகம் ஆகிய அனைத்தையும் புலப்படுத்தும் சேக்கிழார் திருப் பாடலின் சிறப்பே சிறப்பு!

    Share
  • சேக்கிழார் பா நயம் – 17

    -திருச்சி புலவர் இரா இராமமூர்த்தி
    =======================

    திருவாரூரில் தேவஆஸ்ரய மண்டபம் எனப்படும் தேவாசிரிய மண்டபம் உள்ளது.இறைவனை ஆஸ்ரயித்த அடியார்கள் நிறைந்த மண்டபம் ஒன்றுண்டு!அந்த மண்டபத்து அடியார்களின் அருளைப் பெற, சுந்தரர் விரும்பினார்!அதன் திருவாயிலில் தேவர்களும் முனிவர்களும் அடியார்களை வழிபடக் காத்திருப்பார்கள்!அங்கேதான் சுந்தரர் திருத்தொண்டத்தொகை என்ற,பெரியபுராணத்தின் வழிநூலைப் பாடினார்! அங்குள்ள அடியார்களின் சிறப்பினை சேக்கிழார் ஆறு திருப்பாடல்களால் விளக்குகிறார்.

    இறைவனே விரும்பி யழைத்துப் பெருமைப் படுத்திய சிறப்பும்,சரியை நிலையில் இறைவனுக்குத் திருத்தொண்டு செய்யும் சிறப்பும் பெற்றவர். தம் திருநீறு பூசியே திருமேனியின் ஒளியால் எண்டிசையையும் விளங்கச் செய்பவர்! ஐம்பூதங்களும் தம் நிலையில் கலங்கினாலும், இறைவன் மலர்ப்பாதத்தை மறவாதவர்  உலகினர் பொருட் செல்வத்தை மிகமுயன்று அடைவார்கள் அச்செல்வம் நன்மைக்கும் தீமைக்கும் பயன்படும்! செல்வங்களைத் திருவள்ளுவர் பல வகைகளாகப்பிரிப்பார். கல்விச்செல்வம், கேள்விச்செல்வம், ஊக்கச் செல்வம், அருட்செல்வம், பொருட்செல்வம் என்பன அவை. இவற்றுள் கேடில் விழுச்செல்வம் கல்வி, செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம், அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் என்ற தொடர்களால் வள்ளுவர் கூறுகிறார்! சேக்கிழார் சிவனடியார்கள் பெற்ற அருட்செல்வத்தை “கேடும் ஆக்கமும் கெட்ட திரு” என்கிறார். உலகத்தின் பொருட் செல்வம் விரைவில் குறைவு படும், அழியும்; அதுவே மிகுதிப்படும்! ஆனால் குறைவு,மிகுதி ஆகிய இரண்டையும் அடையாமல் ஒரே சீராக நிலைத்து நிற்பது அருட்செல்வம்மட்டுமே!இந்தஅருட்செல்வம், பொருட்செல்வம் பெற்றவருக்கு உரிய செருக்கு,பெறாதவருக்குரிய அவலம் ஆகிய இரண்டும் இல்லாதது! இந்த அருட்செல்வத்திற்கு வளர்ச்சியும் இல்லை கெடும் இல்லை! அதனால் அச்செல்வத்தைப் பெற்ற அடியாரைக்‘கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்’ என்பார்! ஈஸ்வரனின் அருளாகிய செல்வமே ஐசுவரியம் என்று கூறப்பெறும்! இதனைத் திருஞானசம்பந்தர்,

    “செல்வ நெடுமாடம் சென்று சேணோக்கிச்
    செல்வ மதி தோயச் செல்வம் வளர்கின்ற
    செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பலம் மேய
    செல்வன் கழலேத்தும் செல்வம், செல்வமே!”

    என்று பாடுகிறார்! இச்செல்வத்தைப் பெற்ற அடியார்கள் ஓடேந்திப் பிச்சை பெற்று வாழும் வறிய நிலையையும்,பொன்னை மிகுதியாகப் பெற்ற செல்வநிலையையும் ஒரே நிலையில் வைத்து எண்ணுவர்!அவர்கள் கண்முன்னே உடைந்த பானை ஓடும், பொன் முதலான மணிகளும் தென்பட்டாலும் அவற்றை ஒரே தன்மையில் நோக்குவர்! இதனைச் சேக்கிழார்,”ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவர்” என்று போற்றுகிறார்! அப்பரடிகள் அருள் வரலாற்றில், அவர் திருப்புகலூர் திருமுற்றத்தில் உழவாரப் பணி புரிந்த போது, நிலத்தில் கிடந்த பொன்னையும் மணிகளையும் ஒன்றாகவே மதித்து நீக்கிக் குளத்தில் எறிந்தார் என்று கூறுவர்! அத்தகைய அடியார்கள் சிவபெருமான் திருவருளைப் பெற்று, இறைவனுடன் ஒன்றி நின்று கும்பிட்டு வாழும் பிறப்பினை விரும்பிப் பிறவாநிலையாகிய வீடுபேறு கிட்டினாலும் அதனைச் சற்றும் விரும்பாத உள்ளச் செருக்கு உடையவராவார்!இங்கே சுந்தரமூர்த்தி சுவாமிகள் கைலையில் இறைவனைக் கூடிவணங்கி வாழ்ந்தபின், திளைத்த திருநடனத்தை “வணங்கி மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பம்” என்று பாடியது நினைந்து மகிழத்த தக்கது. இனி சேக்கிழார் பெருமானின் முழுப்பாடலையும் பயில்வோம்!

    “கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
    ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
    கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி
    வீடும் வேண்டா விறலின் விளங்கினார்!

    சோழ நாட்டையும் அதன் பின்னர் அதனுடைய திருவாரூர்த் திருநகரத்தையும் அதன் பின்னர் அந்நகரத்திலுள்ள பூங்கோயிலையும் முறையே காட்டி நம்மைத் தரிசிக்கச் – செய்தார் ஆசிரியர். பின்னர்த் தேவாசிரியனையும் காட்டி அதற்கு அப்பெயர் போந்த காரணத்தை அறிவிக்கும் வகையாலே அந்த முறையிலே திருவாயிலில் காத்திருக்கும் தேவர்களைக் காட்டி உள்ளே அழைத்துச் சென்று அங்கு எழுந்தருளி யிருக்கும் அடியார்களுடைய தன்மையையும் ஆசிரியர் அறிவித்து அவர்களை நாம் வணங்கும்படி செய்கின்ற முறையையும் காண்க. மேலும் இந்திரன் முதலியோரது பதவிகளை எல்லாம் வெறுத்து ஒதுக்கியவர்கள் இங்கு  உள்ளே. கூடியிருக்கும் அடியார்கள் என்று அவர்களுடைய இயல்பினை முகவுரை ஆக அறிவித்தபடியுமாம். ‘வீடும் வேண்டா விறலின் விளங்கினார்’ என்று பின்னர் முடித்துக் காட்டியதையுங் காண்க. ‘’ என்று சிவக்கவிமணி அவர்கள் எழுதியுள்ளார். மேலும்  கழுத்தில் உத்திராக்க மணியணிந்து , கந்தையாடை புனைந்து ஈசன் பணியாகிய திருத்தொண்டு புரிவோரின் வீரம் பெரிது! என்றும், சேக்கிழார் கூறுகிறார்!

    Share
  • சேக்கிழார் பா நயம் – 16 (அந்நிலையே)

    -திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி

    உலகில் நிகழும் இயல்பான நிகழ்ச்சிக்கு மாறுபட்ட நிகழ்ச்சி திருவாரூரில் நிகழ்ந்தது! தொடக்கம் இயல்பான உலகியலாக இருந்தாலும் தொடர்ச்சி இயல்புக்கு மாறுபட்டதாக நிகழ்ந்து , இறையருள் நிகழ்ச்சியாக நிறைகிறது. ஆரூர்  மன்னன் வாழ்வில் கண்ட அதிசயம், அவனுக்கும் நமக்கும் இறையருளின் விளக்கமாக அமைந்தது என்பதை அடுத்து நிகழ்ந்த அதிசய நிகழ்ச்சி வழியே அறிந்து கொள்கிறோம்! ஆம், தேர்ச்சக்கரத்தில் அடிபட்டு இறந்த கன்று உயிர் பெற்று எழுகிறது! அப்போதே மன்னன் தேர்க்காலால் ஊரப்பட்ட   மகனும் உயிர்த்து எழுகின்றான்! தொடர்ந்து அமைச்சனும் உயிர் பெற்று எழுகிறான்!

    இதனை உணர்த்தும் வகையில் மன்னன் தானே தன் மகனைத் தேர்க்காலில் இட்டுக்  கொன்ற அதே நேரத்தில்  சிவபிரான் அருட்காட்சி தருகிறார்!  சிவபிரான் திருச்சடையில் இளம்பிறை நிலவும், திருநுதலில் மூன்றாம் கண்ணும் பொலிய அவர் தோன்றுகிறார்! நிலவு செய்த  பிழையைமன்னித்து அதனைச் சடையில் ஏற்றுக்கொண்டு பெருவாழ்வு தந்த கருணையைச் சடை காட்டுகிறது. முருகப்பிரான் என்ற குமாரனை ஈன்ற நெற்றிக்கண் இறைவனின் தனிச்சிறப்பையும் காட்டுகிறது!அக்குமரனின் தாயாகி அரவணைத்த பார்வதி தேவி இடப்பக்கத்தில் இணைந்து நிற்கிறாள்! அங்கும் சிவபூத கணங்கள் தோன்றி நிற்பதைக்கண்ட அரசன் சிவ பிரானைப் போற்றுகின்றான்! அப்போது தமக்கே உரிய காளைமேல் இறைவன் தோன்றுகிறார்! சடையில் பிறையைத் தாங்கும் பிரானை, விடை தாங்குகிறது! சடையும் விடையும் ஆதாரமாகவும் ஆதேயமாகவும் விளங்கும் காட்சி அது.  சடைக்கு சிவன் ஆதாரம்,விடைக்கு சிவன் ஆதேயம்! இக்காட்சி மிகச்சிறந்த அடியார்கட்கே கிட்டும். இக்காட்சி நல்கும் இறைவனை ‘சோமாஸ்கந்தமூர்த்தி’ என்பர்! குடும்பத்துடன் காட்சிதருபவர் என்பது பொருள்.

    அரசனும் , மகனும் ஈடுபட்ட நிகழ்ச்சி என்பதால் குடும்பத்துடனும், அமைச்சனும் ஈடுபட்டதால் பூதகணங்களுடனும் இறைவன் காட்சி நல்கினார்! அப்போது ஆன்கன்று , இளவரசன், அமைச்சன் ஆகியோர் உயிர் பெற்று எழுந்தனர்! இதனைச் சேக்கிழார் பெருந்தகை,

    ‘’அந்நிலையே  உயிர்பிரிந்த  ஆன்கன்றும் அவ்வரசன்
      மன்னுரிமைத் தனிக்கன்றும் மந்திரியும் உடன்எழலும்
      இன்னபரி சானான்என்று  அறிந்திலன்  வேந்தனும் யார்க்கும்
      முன்னவனே முன்னின்றால் முடியாத  பொருள் உளதோ?’’

    என்று பாடுகிறார்!  இப்பாடலில் முறைப்படி முதலில் இறந்த ஆன்கன்று உயிர் பெற்று எழுகின்றது! அதனைக் கண்ட அப்பசு மகிழ்கிறது! அக்கன்று உயிர்த்து எழுந்ததைக்  கண்ட பசு மகிழ்ந்தமையால் அரசன் மகிழ்ந்தான்! அதற்கிடையில் இளவரசனைத் தேர்க்காலில் இட்டுக்  கொல்ல அஞ்சித்தன் உயிரை நீத்த அமைச்சன் உயிர்பெற்று எழுந்தான்! இதனையும் அரசன் கண்டு மகிழ்ந்தான்! பின்னர்அரசனின் மைந்தன் உயிர்பெற்று எழுந்தான்! இதனை , ‘’மன்னுரிமைத் தனிக்கன்றும் ‘’ என்று பாடுகிறார் புலவர்! ஆன்கன்று அரசன் கன்று என்ற சொல்லாட்சி உயிர்கள் அனைத்தும் ஒருதன்மையனவே, என்பதைப் புலப்படுத்தும் ! இரண்டு கன்றுகள் எழுந்தபின் அமைச்சன் எழுந்தான் என்பதில் முறைமாற்றம் செய்கின்றார் சேக்கிழார்! மந்திரி இறந்தபின்னரே  இளவரசன் மரணமடைகிறான். அப்படியானால் மந்திரி எழுந்தபின் தானே இளவரசன் எழவேண்டும்?   இளவரசன் உயிரிழப்பானோ என்ற அச்சத்துடன் இறந்த அமைச்சரின் அச்சத்தை நீக்கும் பொருட்டு அவன் எழுமுன் இளவரசன் எழுந்தான் என்று கூறியது நுட்பம் வாய்ந்தது! இவை அனைத்தையும் கண்ட அரசனின் மனோநிலை எத்தகையது என்று யாராலும் உணரவியலாது! இதனை ‘’இன்ன பரிசானான் என்று அறிந்திலன் வேந்தனும் ‘’ என்ற தொடரால் சேக்கிழார் கூறுகிறார்! எப்போதும், எங்கும் ,எல்லாவுயிரினுள்ளும் இருக்கும் இறைவனே,சாட்சியாய் நின்று, இவைஅனைத்தையும்நிகழ்த்துகிறார் என்பதை,

    ‘’யார்க்கும் முன்னவனே முன்னின்றால் முடியாத  பொருள் உளதோ?’’

    என்று சேக்கிழார் கூறுவது இறைவனின் இலக்கணத்தையும்  காட்டுகிறது! எனவே திருவாரூரில் நிகழ்ந்த நிகழ்ச்சியின் நிறைவில் அனைவர்க்கும் இன்பமே உண்டாயிற்று!  உயிர்களைப் படைத்தல், காத்தல், மறைத்தல், அருளால், அழித்தல் ஆகியவற்றை ஆற்றும் இறைவனின் முதன்மையை, முழுமையை  இப்பாடலில் சேக்கிழார் காட்ட முனைந்துள்ளார்!

    Share
  • சேக்கிழார் பா நயம் – 15 

    -திருச்சி புலவர் இராமமூர்த்தி

    முன்னர் ‘வளவ நின் புதல்வன் ‘ என்ற பாடலில் கொலைக் குற்றம் செய்தவனுக்கு ஆதரவான நீதி மன்ற வாதங்களை எடுத்துரைத்த அமைச்சரின் தொகுப்புரையைக் கண்டோம். அதனைப் போலவே கொலை செய்யப்பட்ட ஆன்கன்றுக்கு ஆதரவாக அரசன் கூறிய சட்டம் மற்றும் நீதி சான்ற நுட்பம் மிக்க வாதங்களைச் சேக்கிழார் பாடிய சிறப்பை இக்கட்டுரையில் காணலாம்.

    மனுநீதிச் சோழன் அமர்ந்திருந்த அறைக்குள் எந்த  அவலவோசையும், இதுவரை கேட்டதில்லை. புதிதாக அரசன் செவியில் விழுந்த ஆராய்ச்சிமணி யோசை அரசனை, திடுக்கிடச் செய்தது. இந்த ஓசை, அரசனுக்குப் பழி உண்டாயிற்று என்ற அறிவிப்போ, அவன் முன்னோர் செய்த பாவத்தின் அறிவிப்போ மரணத்தை உண்டாக்கும் கூற்றுவன் ஏறிவரும் எருமையின் கழுத்து மணியின் ஆரவாரமோ என்று எண்ணி வருந்தினான். ஆகவே ஏதோவொரு மரணத்தினை முன்னாள் உணர்ந்து கொண்டான்.  மணியோசை கேட்ட அரசன் தானே அரியணையிலிருந்து இறங்கி வாயிலுக்கு ஓடி வந்தான்! அங்கிருந்த ஏவலர்கள் முன்னே வந்து அங்கிருந்த பசுவைக் காட்டினர். ‘இப்பசு இங்கிருந்த மணியை அசைத்தது!’ என்றனர்!  நாட்டில் என்ன நடந்தாலும் அதன் காரணத்தை அறிந்து கூறும் கடமை அமைச்சர்களுக்கு உண்டு. ஒரு பசு இப்படித் தானாக மணியை அசைத்து அடிக்குமா? என்ற ஐயத்துடன் அமைச்சர்களை அரசன் நோக்கினான். அவர்களுள் அறிவில் மிக்க அமைச்சர், இளங்கன்று தேர்க்காலில் புகுந்து இறந்த செய்தியைப் பக்குவமாக உரைத்தார்.

    அதனைக் கேட்ட அரசன் உடனே அந்தப் பசு அடைந்த துன்பத்தை அடைந்தான். இது மிகச்சிறந்த  மனித இயல்பாகும். மேலும் தன் மகவை இழந்த தாய்ப்பசுபோல் வருந்தினான்; எல்லையற்ற துன்பம் அடைந்தான். ஏங்கினான்; மனக்கலக்கம் கொண்டான். இப்பசுவின் துன்பத்தை எவ்வாறு நீக்குவது என்று எண்ணினான்; இதனை நான் செய்யவில்லை, வேறு யார் செய்தனரோ?’’ என்று எண்ணினான். உலகத்து உயிர்கள் அனைத்தின் நல்வாழ்வுக்கும் உத்தரவாதம் அளிக்கும் தன் ஆட்சியில் ஒரு தாய்ப்பசு துன்புற்றதே என்று எண்ணி வருந்தினான்.  என்ன செய்தால் இத்துன்பம் தீரும்? என்றெண்ணி அப்பசுவை நோக்கி, மிகவும் சோர்வடைந்தான்!

    அரசன் துன்புறுவதைக் கண்ட அமைச்சர்கள் பதறிப்போய், அரசனுக்கு ஆறுதல் கூறினர்.  கொலை பலவகையானது. போர்வீரன் தன்னைக் கொல்ல  வந்த எதிரியைக் கொல்வது ஒருவகை; பெருங்குற்றவாளியை மற்றவரிடமிருந்து பாதுகாக்க அரசன் கொல்வது ஒருவகை; எளியோரைக் காக்கக் கொடிய விலங்கைக் கொல்லுதல் ஒருவகை; ஊரை அழிக்கும் பூச்சிகளைக் கொல்லுதல் ஒருவகை; இவற்றையே தன்னால், தன்பரிசனத்தால்,பகைத்திறத்தால்,கள்வரால், உயிர்களால் வரும்  பேராபத்தினை நீக்கும் அரசன் செயல்களாக மன்னனே கூறுகிறான். இவ்வாறன்றி எதிர்பாராமல் ஒரு கொலை நடந்தால், கொலையுண்ட உயிரின் பெருமை, சிறுமைகளுக்கேற்ப அவ்வுயிர்க்கொலைக்கு உரிய கழுவாய் தேட, முன்னோர் கூறிய முறையில் நடக்கலாம்! அதிலும் மற்றோர் உயிரைக்  கொன்று கழுவாய் தேடல் தவறு! ஓருயிரைக் கொன்றால் அத்தகைய உயிர்களைப் பலவகையில் காத்தலும் கழுவாயே! ‘’இவ்வகையில் பசு என்கிற, மிக நல்ல விலங்கைக் கொன்ற பாவத்துக்குக் கழுவாய் இன்னது என முன்னோர் வகுத்துள்ள வழியில் நடந்து கொள்ளலாம்!’’ என்று அமைச்சர்கள் கூறினர். அவ்வாறு செய்யுங்கால் பாவத்தைப் போக்கும் வேள்வி முதலாயின செய்யலாம்! என்றனர். இவ்வாறு செய்வதால் மந்திரங்கள் கூறி மன்றாடி இறைவனிடம் வேண்டி வழிபடுதல் நன்று என்றாலும், இங்கே அதனை, வழக்கன்று, சழக்கு என்கிறான் மன்னன். உண்மையான அறநெறி இத்தகைய வேள்விமுறைகளை ஏற்றுக் கொள்ளாது. என்பது அரசனின் வாதம்.

    ‘’அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
    உயிர்செகுத்து உண்ணாமை நன்று!’’ என்பது வள்ளுவம்.

    ‘’கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
     களைகட் டதனோடு  நேர்!’’ என்பதும்  திருக்குறளே! அதனால் அரசன் தன் மைந்தனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்று,  இழந்து விடுவானோ? என்றெண்ணி அமைச்சர்கள் கூறிய கழுவாய் முறையைச் சழக்கு என்று மறுக்கிறான்!

    ‘‘வழக்கென்று நீர் மொழிந்தால் மற்றதுதான் வலிப்பட்டுக்
    குழக்கன்றை இழந்தலறும் கோ உறு நோய் மருந்தாமோ?’’ என்கிறான்.  ஓர் உயிரைக் கொல்லும் அதிகாரம் எவர்க்கும் இல்லை.  அவ்வுயிரும் ‘’திருவாரூர்ப் பிறக்க முத்தி‘’ என்ற உரைப்படி முத்திக்கு உரிய உயிராகும். அத்தகைய ஓர் உயிரைக் கொல்லும் அதிகாரம் எவர்க்கும் இல்லை. கன்றின் உயிரின் சிறப்பு அத்தகையது! அவ்வாறு கொன்றால், கொன்றவரைக் கொல்லுதலே அரச நீதி! ஆதலால் நான் என் மைந்தனைத் தேர்க்காலில் இட விரும்புகிறேன் என்று தன்  அமைச்சன் ஒருவனை அவ்வாறு செய்யுமாறு ஏவினான்!

    அரசனிட்ட கட்டளையை மறுக்க வியலாத அமைச்சன், திருவாரூரில்  பிறந்த இளவரசனின் உயிரைக் கொல்வது அரசநிந்தனையும், கொள்கைக் குற்றமும் ஆதலால், தானே தன் உயிரை மாய்த்துக் கொண்டான்!

    ‘’தன்னுயிர்  நீப்பினும் செய்யற்க  தான்பிறிது
    இன்னுயிர் நீக்கும் வினை!’’ குறள் நெறியின் படியும்,

    ‘’அறிவினால் ஆகுவதுண்டோ  பிறிதின் நோய்
    தன்னோய்போற் போற்றாக்  கடை!’’ என்ற குறள் நெறியின் படியும் அமைச்சன்  செய்தது தன்மானம் காத்தல், கொள்கை காத்தல் என்ற தூய அறநெறியின் பாற்பட்டதாகும். இதனைக் கேள்வியுற்ற அரசன், தன்  எண்ணமே அமைச்சனையும் கொன்றது என்று பெரிதும் வருந்தினான். இங்கே வள்ளுவர் கூறிய குறட்பாக்களில் , பிறர் என்று கூறாமல் பிறிது , பிறிதின் நோய் என்று, அஃறிணை உயிர்களையும் கருதிய ஆன்மநேய உயிரிரக்கம் புலப்படுகிறது.  அந்த நெறியே மன்னனின் ஆன்மநேய உயிரிரக்கத்தைத் தூண்டியது. அதனாலும், யாரும் அறியாத வகையில் தேரினிடையே புகுந்த அந்தக் கன்றின் செயல் தெய்வத் தன்மை வாய்ந் தாகவும், கன்றை இழந்த பசுவின் கதறலும், கொம்பால் மணிக்கயிற்றை அசைத்து நீதிகேட்ட செயல், விலங்குத் தன்மைக்கு அப்பாற்பட்ட தெய்வச்  செயலாகவும் கருதிய மன்னனின் உய்த்துணர்திறம், இங்கே உற்று நோக்கத்தக்கது. ஆகவே, ஒரு பறவையின் பசி போக்கத் தானேதன் தசையை அரிந்து கொடுத்த வளவனின் பரம்பரை உயிரிரக்கம் கன்றையும் உயர்ந்த உயிராகக் கருதத் தூண்டியது.  அதனால்தான் அமைச்சர்களிடம்,‘’எந்தக் காலத்தில், எந்தப் பசு, இப்படி ஆராய்ச்சி மணியை அசைத்து நீதி கேட்டது?’’ என்று வியந்து கேட்டான். இதனைச் சேக்கிழார், 

    “எவ்வுலகில் எப்பெற்றம் இப்பெற்றித் தாம்இடரால்
    வெவ்வுயிர்த்துக் கதறிமணி எறிந்து விழுந்தது? விளம்பீர்!” எனக் கேட்டதாக எழுதினர்! ஆகவே பசுவையும் கன்றையும் மேம்பட்ட உயிராகக் கருதித் தன்  மரபுக்கே உரிய ஒரே  மகனை இழக்கக் கருதிய செயல், அறத்தின் பாற்பட்டதே ஆகும். அதனால்தான் ,’’இச்சழக்கு இன்று நான் இயைந்தால் தருமந்தான் சலியாதோ?’’ என்று மிக நுட்பமாக அரசன் கேட்டான்! இவையனைத்தும் குற்றம் செய்த இளவரசனுக்கு எதிரான நியாயமான  வாதங்களாகவே அமைந்து நம் உள்ளத்திற்கு நிறைவு தருகின்றன! அன்று அரசனே நீதி வழங்கும் நிலையில் இருந்தமையால், குற்றம்செய்த மகனை உறவென்று கருதாமல் நீதி வழங்கிய சிறப்பு  புலப்படுகிறது!  இத்தகைய அரசாட்சி எங்கும் காணுதற்கரிது! இதனை முழுவதுமாக விளக்கும் சேக்கிழாரின் பாடலைக் காண்போம்!

    ‘’ஒருமைந்தன்  தங்குலத்துக்கு  உள்ளான்என்  பதும்உணரான்
    ‘தருமம்தன்  வழிச்செல்கை  கடன்’என்று   தன்மைந்தன்
     மருமம்தன்  தேராழி   உறவூர்ந்தான்   மனுவேந்தன்
     அருமந்த   அரசாட்சி அரிதோ? மற்  றெளிதோதான்!

    இப்பாடலில் வழக்குத் தொடுப்பதற்கும், வழக்கை மறுப்பதற்கும் உரிய இருவகை வாதங்களும்  அமைந்து, நம்மை வியக்க வைக்கின்றன!

    Share
  • சேக்கிழார் பா நயம் – 14 

    =======================

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    ————————————————–

     

    திருவாரூரில் மனுநீதிச் சோழன் மைந்தன் ஏறிச்  சென்ற தேர்க்காலில் அடிபட்டு மரணமடைந்த கன்றுக்காக அரசன் மனம் கலங்குகிறான். அப்போது மறையோர் இதற்குப் பிராயச்சித்தம் என்ற கழுவாயை மறைநூலில் சொன்னபடியம், மனுநீதி முறைப்படியும் செய்தால் அரசன் மைந்தன் செய்த தவறுக்குக்  கழுவாய்  தேடலாம் என்கிறார்கள். மறைநூலையும் மனுநீதியையும் நன்கறிந்த மன்னன், அமைச்சர்களும் வேதியர்களும் கூறியதை ‘ வழக்கு’என்றே ஒத்துக்கொள்ள வில்லை! அதனைச் சழக்கு என்று இகழ்கிறான். ‘’நான் மைந்தனை இழக்கிறேனே என்ற வருத்தத்தால் , எனக்கு நீங்கள் கூறும்  வழக்கம், தான் இப்போதுதான் ஈன்ற, மிகவும்  இளமையான கன்றினைப் பறிகொடுத்து அதனால் அந்தத்  தாய்ப்பசு அடையும் மிகுந்த வருத்தத்தைத் தீர்க்கும் மருந்தாகி , அந்நோயைத்  தீர்க்குமா?’’ என்று கேட்கிறான். அதனை அடுத்து எக்காலத்துக்கும், எந்நாட்டிற்கும், எப்போதும் பொருந்தும் ஓர் அரச நீதியை வகுத்துக் கூறுகிறான்.

    ‘’ஒருநாட்டைக் காக்கும் அரசன் அக்காவல் கடமையைச் செய்யும்போது, நாட்டுக்கு, அதாவது நாட்டு மக்களுக்கு வாழ்க்கையில் இடையூறாகி, விளைவிக்கும் மிகப்பெரிய ஐவகை அச்சங்களையும்  தீர்த்து அரசாளவேண்டும்’’ என்கிறான். அவை: தன்னால் , தன்பரிசனத்தால், பகைத்திறனால் , கள்வரால், மற்ற கொடிய உயிர்களால் நிகழும் அச்சசங்களாகும்.  மற்ற நால்வகைகளாலும் வரும் இடையூறுகளை அரசன்தானே தீர்க்க வேண்டும்? ஆனால் அரசன் தன்னால் வரும் இடையூற்றினைத் தானே தீர்க்கும் கடப்பாடு உடையவன் ஆவான். அவனாலேயே வரும் இடையூற்றை யார் தீர்க்க வல்லார்?

    ஒருமுறை இராமன் நீராடக் செல்லும் போது , குளக்கரையில் தம் வில்லை நேராகத் தரையில் ஊன்றி நிறுத்தி விட்டு, நீர்நிலையில் நீராடித் திரும்பினான். அப்போது தாம் ஊன்றிய வில்லின் கீழே கொஞ்சம் குருதியைக் கண்டான்! உடனே வில்லை எடுத்துக் கீழே பார்த்தான். அவனது ஊன்றிய வில்லின் கீழே ஒரு தவளை நசுங்கிக் காயத்துடன் இருந்தத்தகு. இராமன் பதறிப்போய் அந்தத் தவளையைக் கையில் ஏந்தித் தடவிக் கொடுத்து காயத்துக்கு மருந்திட்டான். அவன் கரம் பட்டவுடன் தவளையின் அச்சமும் நோயும் நீக்கியது. அவன் தவளையிடம் ‘’ தவளையை நீ குளத்தில் இருந்து கத்தும் ஓசை மிகவும் பெரிதாகவே இருக்குமே? நான் வில்லை ஊன்றிய நேரத்தில் உன்மேல் என் வில்லின் நுனி பட்டு அழுத்திய போது, நீ வலிதாங்காமல் கத்தியிருந்தால், இப்படிக்கு காயம் அடைந்திடிருக்க மாட்டாயே?’’ என்றார். உடனே தவளை வேறெவராலும் எனக்குத் தீங்கு நேர்ந்தால், நான் இராமா, காப்பாற்று! என்று உன்னை வேண்டுவேன்.  ஆனால் உன்னாலேயே எனக்குத் தீங்கு வந்தால் உன்னைவிடப் பெரிய கடவுளாக  யாரையும் நான் அறியேனே!’’ என்றதாம். ஆம்! அரசன் தன்னால் மக்களுக்கு வரும் இடையூற்றைத் தீர்க்க , அந்நாட்டின் அரசனைவிடப் பெரியவர் இல்லாததால் தானே அந்த அச்சத்தை நீக்க வேண்டும். அதனை இந்த வரிசையில் ‘’தன்னால்’’ என்ற சொல்லால் தன்னை முதலில் கூறினான். அரசனால் மக்களுக்கு வரும் இடையூறுகள், அதிக வரியை வசூலித்தல்,அதனையும் வன்முறையால் கவர்தல், மிகுந்த ஏழைக்கு  வரிவிலக்கு அளிக்காமல் , அவரிடமும் உள்ளதைப் பிடுங்குதல், மக்களை வருத்தும் தீங்குகளை நீக்காதிருத்தல், மக்கள் காண்பதற்கு  அரிய நிலையில்காவலர் நடுவில்  இருத்தல், கடுமையான சொற்களைக் கூறுதல், தன்னை இடித்துக் கூறும் நல்லவர் சொல்லை மதித்து ஏற்றுக்கொள்ளாமல் இருத்தல், அறநிலையங்களின் சொத்துக்களை அபகரித்தல் ஆகியவை.  இவை என்றைக்கும், எந்நாட்டுக்கும், இன்றைக்கும்பொருந்துவன அல்லவா?

    அடுத்துத்  தன்  பரிசனத்தால் என்ற தொடர். அரசனின் பரிசனம் என்பன, அவரால் நியமிக்கப் பெற்றும், அவரது உறவு, நட்பு முதலான சலுகையைப் பெற்றும் , இறுமாப்புடன் அதிகாரம் செலுத்துவோர். இவர்களை புறநானூறு, வயலில் தாமே புகுந்து அழிவுகளை செய்யும் யானைகளை போன்றோர் என்று கூறுகிறது. அவர்களது தகுதி மீறிய அடக்குமுறையையும் சேக்கிழார் குறிக்கிறார். அதிகாரிகளுக்கு சட்டத்தைக்  கடைப்பிடிக்கத்  தெரியுமே தவிர  நியாயத்தை வழங்கத் தெரியாது. சட்டப்படி வெள்ள  நிவாரணமோ, பஞ்ச நிவாரணமோ வழங்க இடப்பட்ட ஆணையைச் செயல் படுத்துவார்கள். அது சரியான நிவாரணத்தை அளித்து , நியாயமான  முழு உதவியையும் செய்யுமா என்பதை உறுதி செய்ய முடியாது. முழு வீட்டையும் வெள்ளத்தில் இழந்தவர் அரசின் எளிய நிவாரணத்தைக் கொண்டு என்ன செய்ய முடியும்?

    அடுத்து ஊனமிகு பகைத்திறத்தால் என்ற தொடர். நாட்டை அழித்து வென்று மக்களை துன்புறுத்தும் வேற்று நாட்டுப் பகைவர், உள்நாட்டிலேயே அழிவுச் செயல்கள் செய்து மக்களைத் துன்புறுத்துவோர், அவர்கள் மக்கள் மேய்க்கும் பசுக்களைக் கவர்வர். கொள்ளையிட்டு மக்களின் பொருள்களைக் கவர்வோர். பெண்களைக் கற்பழித்துத் துன்புறுத்திக் கொல்வோர் ஆகியோராவர். இவர்களைத் தலையெடுக்க விடாமல் அடக்கி வைக்கவும், அழிக்கவும் வேண்டும்.

    அடுத்து கள்வர். இவர்கள் உள்நாட்டில்  வழிப்பறி செய்வோர்.இவர்களை தண்டிக்க   வேண்டும்.இழந்தவற்றை மீட்டெடுத்து வழங்க வவேண்டும். அடுத்து உயிர்கள். அவை மக்களைத் துன்புறுத்தி,அடித்து உண்ணும் கொடிய விலங்குகள். இவற்றை வேட்டையாடுவது மன்னன் செயல்.

    ‘’பயந் தீர்த்துக் காத்தலே காவலன் கடமை என்பதை “இத்தனை காலமு நினது சிலைக்கீழ்த் தங்கி இனிதுண்டு தீங்கின்றி இருந்தோம்’’ என்று கண்ணப்பர்புராணத்தில் மக்கள் கூறும் பாதுகாவல்  நிலை.இந்நாள் நவீனர் அரசாட்சியிலே நமது நாட்டுக் குற்றத்தீர்வு நீதிச்சட்டமும், குடிகளின் உயிருடம்புகளையும், உடைமைகளையும், காவல்புரிதலையே குறிக்கோளாகக் கொண்டு, உடம்பைப் பொறுத்த குற்றங்கள் – உடைமையைப் பொறுத்த குற்றங்கள் என்று (Offences against perosn & offences against property) இரு பெரும் பிரிவுகளாக வகுத்ததும், அக்குற்றம் செய்தார்க்குத் தண்டம் விதித்ததும், குற்றங்கள் நிகழாமல் குடிகாவல் விதித்ததும், இங்கு வைத்து ஒப்பு நோக்கிக் காணத்தக்கன’’. என்று சம்பந்த சரணாலயர் கூறுகிறார். இனி சேக்கிழார் எழுதிய முழுப்பாடலையும் படிப்போம்.

    “மாநிலங் காவலன் ஆவான் மன்னுயிர் காக்குங் காலைத்
     தான்  அதனுக்கு இடையூறு தன்னால், தன் பரிசனத்தால்,
     ஊன மிகு பகைத் திறத்தால், கள்வரால், உயிர்கள்  தம்மால்
     ஆன பயம் ஐந்தும் தீர்த்து அறம் காப்பான் அல்லனோ?”

    இந்தப்பாடல் இக்கால மக்களின் அச்சம் போக்கும் அரசின் கடமைகளைப் பொதுவாகக் கூறுகிறது.அக்காலச் சோழரின் முதலமைச்சரான சேக்கிழாரின் தீர்க்க தரிசனம் இதில் தெரிகிறது.

    Share
  • சேக்கிழார்   பா நயம் – 13  

    திருச்சி புலவர்.இராமமூர்த்தி

    ========================

    அடுத்து, திருவாரூரில் ஆண்ட மனுநீதிச் சோழனின் சிறப்பு கூறப்படுகிறது! திருவாரூர் நகர்ச் சிறப்பு  பெரியபுராணத்துக்கு எவ்வாறு துணை புரிகிறது என்பதைச் சில அகச்சான்றுகளால் விளங்கிக்  கொள்ளலாம்!  திருவாரூரின்  பெருமைக்கு   முதற்காரணம். அந்நகருக்குத்  திருமகளே வந்து சிவபெருமானை வழிபாடு செய்தருளினாள்  என்பதாம். அதற்கு ஆதாரம் திருவாரூரில் பெரிய திருக்கோயிலின்  பெயரே கமலாலயம் என்பதாம்!  இதனைச் சேக்கிழார்,

    ‘’சொன்ன நாட்டிடைத்  தொன்மையின்  மிக்கது

    மன்னு  மாமல  ராள்வழி  பட்டது ‘’

    என்று பாடுகிறார்!  மேலும் தியாகேசப் பெருமான் பலகாலம்  பாற்கடலில் மகாவிஷ்ணுவின் இதயத்திலும், பின்னர் பலகாலம் தேவருலகிலும், பின்னர் திருவாரூரிலும்  எழுந்தருளிய சிறப்புடையது.  மேலும் அந்த நகரில்தான், கைலாயத்தில் சுந்தரரை விரும்பிய இருசேடியருள் ஒருத்தியாகிய கமலினி, பரவை நாச்சியாராக வந்துஅவதாரம் செய்த மாளிகை உள்ளது! தொண்டர்கள் தேடும் சிவபிரான், தாமே சுந்தரரைத்  தேடிப்போய்,  சுந்தரருக்காகப் பரவை நாச்சியாரிடம்  இருமுறை தூதுவராக நடந்தருளிய பாதத் தாமரையின் நறுமணம் கமழும் திருவீதி உடையது. இதனைச் சேக்கிழார்,

    “இடந்த  ஏனமும்  அன்னமும்  தேடுவார்

    தொடர்ந்து கொண்டவன்  தொண்டர்க்குத்  தூதுபோய்

    நடந்த  செந்தா  மறையடி  நாறுமால் ‘’

    எனப்பாடுகிறார்! இவ்வூரில்தான், சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் தடுத்தாட்கொண்ட சிவபெருமான், ‘’தில்லை வாழந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்’’ என்று அடி எடுத்துக் கொடுத்தார். அவ்வகையில் உருவான திருத்தொண்டர் புராணத்துக்குப்  பொருளாகிய அடியார் திருக்கூட்டமும் எழுந்தருளிய ஊர்  திருவாரூராகும். இத்தனைச் சிறப்புக்களும் அமைந்த ஊர் திருவாரூராகும். இவ்வூரில்   சோழர்களின் மரபு வழியில், சேக்கிழாரை ஆதரித்த அநபாயச்  சோழன் மரபின் முன்னோனாகிய  மனுநீதிச் சோழன் ஆட்சி புரிந்தான்! அவன் அறநெறி தவறாமல் ஆட்சி செய்ததோடு, வேள்விகள் பல புரிந்து , திருக்கோயி லுக்கான நிபந்தங்களையும் வழங்கினான். அவனுக்கு உலகோர் போற்றத்தக்க முறையில் அருமையான ஆண்மகவு பிறந்தது! அந்த ஆண்மகன் வளரும்போதே  போர்க்கலை ஆட்சிக்கலை, ஆன்மிகம் ஆகியவற்றைப் பயின்றான்

    ஒருநாள்  அவன் இளவரசர் பலரும், நாள் வகைப் படையினரும்  நாற்புறமும் சூழ்ந்து வர, அரசவீதியில் மணிகள் ஒலிக்கும் தேரில் ஏறிச்  சென்றான். அப்போது எவரும் அறிந்து கொள்ளாத நிலையில் ஓர்  இளைய ஆன் கன்று இளவரசன் சென்ற தேரின் சக்கரங்களுக்கிடையில் சிக்கி மாண்டது! உடனே இளவரசன், தான் செய்த  பிழையை நீக்கிக் கொள்ளும் கழுவாயை,   தம் நாட்டு மன்னனாகிய தந்தை அதனை அறியும் முன்னரே அந்தணர்களிடம் சென்று  கேட்டான்!  இந்தச் செய்தி பரவியது. அப்போதே தன் அருமைக்  கன்றை இழந்த தாய்ப்பசு, அரண்மனை வாசலில் இருந்த ஆராய்ச்சி மணியைக்  கொம்பால்  முட்டி அசைத்து ஒலிக்கச் செய்தது! அந்த மணியோசை அரசன் செவியில் ஒலித்தது. இதுவரை ஆராய்ச்சி மணியோசையைக் கேட்டறியாத அரசன் விரைந்து வெளியே வந்தான். காவலர்கள் ஒரு பசுமாடு மணியை அசைத்தது. என்று கூறினார். அரசன் அமைச்சர்களைப் பார்த்தான். அவர்களுள் அறிவால் மிக்க ஓர் அமைச்சர், அரசனின் பாதங்களை வணங்கிப் பேசலானார்.

    ‘’சோழ மன்னனே!  நீங்கள் பெற்ற  புதல்வனாகிய இளவரசன், பலவகை மணிகள் பெரிதாய் ஒலிக்கும் , மிகவுயர்ந்த தேரின்  மேலேஉள்ள தேர்த்தட்டில்  ஏறி,எண்ணிக்கையற்ற தேர்கள் சூழ்ந்துவர, அரசர்கள் மட்டுமே சென்று பழகும் பெரிய வீதியில் நகர் வளம் செய்யும்போது, மிகவும் இளைய பசுங்கன்று ஓன்று எங்கிருந்தோ யாரும் அறிந்து கொள்ள இயலாத வகையில் தானாகச் சென்று, மிகவும் கீழேயுள்ள தேர்ச்  சக்கரங்களின் இடையே எப்படியோ புகுந்து இறந்தது. அதனால் மனத்தளர்ச்சியுற்ற தாய்ப்பசு, மணியோசையை உண்டாக்கியது!” என்றார்.

    இப்பாடலில் புலப்படும்  அமைச்சரின் நுண்ணறிவு நம்மை வியப்புக்கு ஆளாக்குகிறது. முதலில்  ‘வளவ!’ என்று மன்னனை அழைக்கிறார்! குழப்பத்துடன்  இருந்த மன்னன் மனத்தில் அவன்  நாட்டை ஆளும் மிகப்பெரிய சோழர்  பரம்பரையினன் என்பதை  ‘வளவன்’  என்ற சொல்லால்  விளக்குகிறார்!

    அடுத்து, அத்தகைய பெருமைமிக்க அரசனாகிய ‘நின்’ புதல்வன் என்கிறார்! ஆதலால் பெருமை மிக்க நின் மகன்  சிறுமை  செய்பவனல்லன்  என்கிறார்! புதல்வன் என்ற சொல்லாட்சி அவன்   குலத்துக்கே  நீத்தார் கடன் புரிவதற்குரிய ஒரே புதல்வன் என்பதைக் குறிக்கிறது. ‘’அங்கு ஓர் மணி நெடுந்தேரில் ஏறி’’ என்று கூறுகிறார். ஆங்கு என்ற சொல், அவனுக்கே உரிய இடத்தில் என்ற பொருளை உடையது. ‘ஓர்’ என்பது ஒப்பற்ற என்ற பொருளில் உடன் வரும் பல தேர்களுள்  இத்தேர் சிறப்பு வாய்ந்தது என்பதைப் புலப்படுத்துகிறது.அதனால் இளவரசன் பற்பல தேர்களின் இடையே தனித்த சிற்ப்புடைய தேரில் ஏறி வருகிறான் என்பதைக் குறிக்கிறது. அதனால் பசுங்கன்று இவற்றைத் தாண்டி உள்ளே நுழைந்தது நடவாத செயல் என்ற ஐயத்தை உருவாக்குகிறது!  ‘மணி’ என்ற சொல் அத்தேரில் ஆரவாரத்துடன் ஒலித்த மணிகளின் ஓசையைக் குறிக்கிறது.அந்த ஆரவார ஓசை இளங்கன்றை அச்சுறுத்தி விலகியோடச் செய்திருக்குமே, என்று கருத வைக்கிறது. ‘’நெடுந்தேரில்’’ என்ற தொடர் மிகவுயர்ந்த தேர் அது, என்பதைக் காட்டுகிறது.அவ்வாறு உயர்ந்த தேரிலிருந்து சக்கர பகுதி கண்ணில் புலப்படாது என்ற கருத்தைப் புலப்படுத்துகிறது. ‘ஏறி’ என்ற சொல் தேர்த்தட்டின் உயரத்தைக் குறிக்கிறது. அவ்வாறு ஏறி வருபவன் பார்வை வழியைப் பார்த்துச் செலுத்தும் வாய்ப்பில்லாமையைக் காட்டுகிறது.   ‘அளவில் தேர்த்  தானை சூழ ‘ என்ற தொடர் எண்ணிக்கை அளவைக் கடந்த தேர்களுக்கிடையில் இளவரசன் ஏறிவந்த நெடுந்தேர் சென்றது என்பதைப் புலப்படுத்தி எல்லாவற்றுக்கும் இடையில் வரும் இளவரசன் தேரை யாராலும் நெருங்க வியலாது என்ற நுணுக்கமான விளக்கத்தால் ஆன்கன்று இந்தத்    தேரின் கீழே செல்லும் வாய்ப்பே  இல்லை என்று வலியுறுத்துகிறது. அவன் தேரேறிச் செல்லும் தெரு, அரசகுடும்பத்தினர் மட்டுமே செல்வதற்குரிய மேன்மை மிக்க தெரு என்பதை விளக்குகிறது. அங்கே எளிய மனிதரோ, விலங்கோ செல்வது அரச நிந்தனை என்ற குற்றத்துக்கு உரிய செயல் என்பதை நிலைநாட்டுகிறது. ‘போங்கால்’ இளவரசன் எந்த நோக்கமும் இல்லாமல் மகிழ்ச்சி உலாவை மேற்கொண்டு  சென்றான் என்பதைப் புலப்படுத்தி, அவனுக்கு அந்த ஆன்கன்றைக்  கொல்லும் நோக்கமில்லை என்பதையும் குறிக்கிறது. அடுத்து  ‘இளைய ஆன்கன்று ‘ என்று அமைச்சர் கூறுகிறார்.மிகவும் இளையது அக்கன்று, ஆதலால் தானாக அக்கன்று தேரின் கீழே செல்லாது என்பதையும், ‘இளங்கன்று பயமறியாது!’ என்ற பழமொழிக்கேற்ப அக்கன்று  அறிவும் அச்சமும் அற்றது என்பதையும் அத்தொடர் குறிக்கிறது. அடுத்து ‘’தேர்க்கால் இடைப்புகுந்து ‘’ என்கிறார் அமைச்சர். முன்சக்கரத்தில் புகுந்தால் அது தேரை ஓட்டுபவனின் கவனமின்மையைக் குறிக்கும். ஆனால் பல சக்கரங்களை உடைய பெருந்தேரின்  இடையில் புகுந்தது என்பதால், இளவரசன் அதனை நேரில்  காணாத நிலையை அனுமானிக்க வைக்கிறது. அனுமானம் குற்றத்தை நிரூபிக்காது. கன்று இறந்ததை யாரும் அறிந்து கொள்வதற்குள், அதனை ஒரு பசு அறிந்து கொண்டது என்பது நடவாத செயல். அப்பசுவின் தளர்ச்சியால் எவ்வாறு  அறிவுடன் ஆராய்ச்சி மணியை அசைத்தது என்பதைப்  புரிந்துகொள்வது? என்ற ஐயமும் தோன்றுகிறது!

    இந்தக்  கொலைவழக்கு விசாரணைக்கு  வந்தால், குற்றத்தின் பின்னணி, குற்றச்செயலின் தன்மை ,குற்றம்  நடந்த சூழ்நிலை, கொலை நோக்கம்,  கொலை செய்யப்பட்ட கன்றின் அறிவு, இவை அனைத்தும் இக்கால இந்தியக் குடியாட்சியின் குற்றவியல், தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளில் எந்த வகை யினுள்ளும்   அடங்காது. ஆகையால் அக்கால முடியாட்சிச் சட்டங்கள் பற்றி நாம் எந்த முடிவுக்கும் வருதல் இயலாது. சட்டமும் நீதியும், எல்லாக் காலத்துக்கும்  உரியனவே! என்பதையும், இந்தக் குற்றத்தை அன்றைய அமைச்சர் அணுகிய விதம் எக்காலச் சட்டத்துக்கும் இசைவாகவே உள்ளது என்பதையும் நாம் சிந்தித்தால் சேக்கிழார் பெருந்தகையின் சட்ட நுணுக்க அறிவும் , அவர் அக்காலத்திலேயே சோழமன்னனின்  முதலமைச்சராக விளங்கிய பெருமையும் ஒருங்கே புலப்படுகின்றன! கொலைக்குற்றம் சாட்டப் பட்டவரின் சார்பில் வைக்கப்படும் வாதங்கள் எவ்வாறிருக்க வேண்டும் என்பதை இப்பாடல் விளக்குகிறது. இனி நாம் பாடல் முழுவதையும் படித்து இப்பாடலின்  சொல்லாட்சிச் சிறப்பைப் புரிந்து கொள்வோம்!

    “வளவ! நின் புதல்வன் ஆங்கோர் மணி நெடுந் தேர்மேல் ஏறி
    அளவில் தேர்த்தானை சூழ அரசுலாந் தெருவில் போங்கால்
    இளையஆன் கன்று தேர்க்கால் இடைப் புகுந்து இறந்ததாகத்
    தளர்வுறும் இத்தாய் வந்து விளைத்ததித் தன்மை” என்றான்”

    இந்த வழக்கின் பின்புலத்தை மிகவும் நுட்பமாக விளக்கும் வகையிலும், பின்நிகழ்ச்சியை முன்னதாகவே உணர்த்தும் உத்தியாகவும், திருவாரூர் பற்றிய அறிமுகப் பாடலில்,

    “பல்லி  யங்கள் பரந்த வொலியுடன்

     செல்வ  வீதிச்  செழுமணித்  தேரொலி

     மல்லல் யானை  ஒலியுடன்  மாவொலி

     எல்லை  இன்றி  எழுந்துள  எங்கணும்” 

    என்று சேக்கிழார் பாடி வைத்த நுட்பம், எண்ணி யெண்ணி மகிழ்தற்குரியது!

    ============================================================

     

     

     

    Share
  • சேக்கிழார்  பாநயம் – 12

     

    =======================

    திருச்சி  புலவர் இரா.இராமமூர்த்தி

    ———————————————————–

     

    ஓரூரின் சிறப்பு அவ்வூர் மக்களின் நல்வாழ்வைப் பொறுத்தே அமையும்! ஒவ்வோர் ஊரிலும் அந்த ஊரில்  நெடுங்காலம் வாழ்வோரின் வரலாறு, எல்லா வகையிலும்  வெளிப்படும். தமிழ் நாட்டின் பழங்காலத்து நகரங்கள் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களின் வரலாற்றைப் புலப்படுத்தும்! பூம்புகார் சோழ நாட்டின் பழங்காலத்  துறைமுக நகரம்! அந்த நகரின் சிறப்பினைப் பற்றி சிலப்பதிகாரத்தின் தொடக்கத்திலேயே இளங்கோவடிகள் கூறுகிறார்!

    ’பொதியிலாயினும்  இமயமாயினும்

      பதியெழுவறியாப்  பழங்குடி  கெழீஇய

     பொதுவறு  சிறப்பின் புகாரே  யாயினும்

     நடுக்கின்றி  நிலைஇய என்பதல்லதை

     ஒடுக்கம் கூறார்  உயர்ந்தோர் உண்மையின் ‘’

    என்று பாடுகிறது. பொதியில், இமயம், புகார் என்ற மூன்று இடங்களையும்  கல்வியிற் சிறந்த பெரியோர் ‘’எக்குறையும் இல்லாமல் நிலைத்த  சிறப்பின, என்பார்களே அல்லாமல் எந்தக்  குறையையும் கூற மாட்டார்கள்! அதற்குக்  காரணம்  அங்கெல்லாம்  நீண்டகாலம்  உயர்ந்தோர் வாழ்வதே!’’ என்று புகழ்வர்!

    பொதியில் அகத்தியர் முதலான முனிவர்களும், இமயத்தில் சிவபிரானும், புகாரில் , எக்காரணத்தைக் கொண்டும் ஊரைவிட்டுச் செல்லாத சோழ நாட்டுப் பழங்குடிகள் நிறைந்து வாழ்வதாலும் , அவ்வாறு புகழ்வர்.  அவ்வகையில் ஓரூரின் சிறப்பு அங்கு நீண்டகாலம் வாழும் மக்களால் விளங்கும்!

    தமிழகத்தின் சிறந்த நகரங்களில் ஒன்றாகிய திருவாரூரின் சிறப்பைச்  சேக்கிழார் சுவாமிகள் பற்பலபாடல்களில் புகழ்கிறார்! ஓரூரின் சிறப்பு அங்குள்ள சிறந்த சான்றோர்களாலும் , அங்குள்ள நீர்வளம், நிலவளம், தொழில் வளம், கோயில் முதலானவற்றாலும் புலப்படும் என்பதைச் சிலம்பு கூறுவதை மேலே கண்டோம்! அவ்வகையில் ‘’திருவாரூர்  அங்குள்ள பறவைகளின் ஒலிகளால்,  சிறந்த ஊர் என்பதை அறிந்து கொள்ளலாம்! ‘’ என்கிறார் புலவர்.

    சங்க இலக்கியமாகிய பெரும்பாணாற்றுப் படையில் , பாணர்களை அந்தணர் வாழும் இல்லத்துக்குச்சென்றால், அங்கு எவ்வகை உணவைப் பெறலாம் என்பதைக் கூறி ஆற்றுப்படுத்துகிறார்கள். அப்போது, ‘’அந்தணர் இல்லத்தில் பசுமாட்டின் கன்றைக் கட்டிவைத்த பந்தலின் உள்ளே,பசுஞ்சாணத்தை இட்டு  மெழுகிய யாகசாலை உடைய வீட்டில், கோழியும்,அதனை விரட்டும்  ஆடும் உள்ளே நுழைய மாட்டா! அங்கே வளைந்த வாயினை உடைய கிளிகள்   வேளைதோறும் இடைவிடாது அந்தணர்கள் கூறும் அறிய வேதங்களைக் கேட்டு, மீண்டும் சொல்லிப்  பயிலும் ‘’  என்பதை,

    ‘’செழுங்கன்று  யாத்த  சிறுதாள் பந்தல்

     பைஞ்சேறு  மெழுகிய படிவ நன்னகர்

     மனையுறை  கோழி, அடு ஞமலி துன்னாது

     வளைவாய்க்  கிள்ளை  மறைவிளி  பயிற்றும்

     மறைகாப்பாளர்  உறைபதி’’

    என்று பாடுகிறது.  வேதங்களைக் கிளிகள் பயிலும் அடையாளம் சிறந்த வேதியர் வாழும் இடத்தைக் குறிக்கிறது!திருவெண்காடு சிறந்த சிவத்தலம்! அங்கே வாழும் அந்தணர்கள் ஸ்ரீருத்திரம் போன்ற வேத மந்திரங்களை வேளைதோறும் விடாமல் ஒதுகின்றனர்! அதைக்கேட்ட அவ்வூரில் உள்ள  கிளிகள் அவ்வேத மந்திரங்களைக்   கொண்டே  பேசப்   பழகுகின்றனவாம்! இதனைத் திருஞானசம்பந்தர் ,

    “நாதன்  நமையாள்வான்   என்று  நவின்றேத்தி

     பாதம்  பன்னாள்  பணியும் அடியார்கள் தங்கள்மேல்

     ஏதம்தீர   இருந்தான்   வாழும்    ஊர்போலும்

    வேதத்து  ஒலியால்  கிளிசொல்  பயிலும்  வெண்காடே!’’ என்று பாடுகிறார்!

     மேலும் அவர் ‘’திருவீழி மிழலை என்ற திருத்தலத்தில், இடமகன்ற திருமடங்களில்  அந்தணச் சிறுவர்கள் ‘பதம்’ என்ற வகையில்   படித்த நால்வேதங்களைக் கேட்டு, மகிழ்ந்து இருந்த பசுங்கிளிகள் , அவ்வாறே ஓதக்கேட்டு , அத்திருக்கோயில் வாயிலில் படுத்துக் கிடந்த பசுக்குலங்கள்,வேத ஒலியைத் தாமும் பயின்று முழங்குகின்றன. இத்தலத்தின் இறைவனின்  திருவைந்தெழுத்தை  நாமும் ஓதினால் நம் வினைகள் கெடும்!’’ என்கிறார்! அவர் பாடல்,

    ’அஞ்செழுத்துரைக்க அருளினன்   தடமிகு  நெடுவாள்

    படித்த  நான்மறைகேட்    டிருந்த பைங்கிளிகள்  பதம்ஓத, பாடுஇருந்த

    விடைக்குலம்  பயிற்றும்  விரிபொழில்வீழி  மிழலையான்  எனவினை  கெடுமே!’’

    என்று பாடுகிறார்.  மேலும் விடமுண்ட கண்டராகிய சிவபிரான் என்றும் வாழும் நகராகிய  சீர்காழியை, ‘’மிகவும் நல்லவர்களாகிய வேதியர் கற்றுப்  பயில்கின்ற வேதங்களைக் கேட்டு, அவ்வூர்ச் சோலைகளில் பறந்து திரியும் கிளிகள், தாமே அப்பதங்களைச்  சொல்லி மகிழும் திருப்புகலி!’’ என்று பாடுகிறார்! இதனைத் திருமுறை,

    “ சால  நல்லார் பயிலும்  மறைகேட்டுப் பதங்களை

     சோலை மேவும் கிளித்தான்  சொல்பயிலும் புகலியே!’’    

    என்று பாடுகின்றது!

    இவையனைத்தையும்  பயின்ற   சேக்கிழார்   பெருந்தகை,   திருவாரூரில் உள்ள  இல்லங்களில், சிறந்த திருமுறைகளை  அனைவரும் வேளைதொறும் பயில்வர்! அதனை அங்கே  வாழும் கிளிகள் கேட்டு மீண்டும் கூறுமாம். அதனை நாகணவாய்ப் பறவைகளும் கேட்டு மகிழும் என்று பாடுகிறார்.

    ‘’உள்ளம்  ஆர் உரு  காதவர்?  ஊர்விடை

     வள்ள   லார்திரு  வாரூர்  மருங்கெலாம் 

     தெள்ளும்  ஓசைத்  திருப்பதி  கங்கள் பைங்

     கிள்ளை  பாடுவ  கேட்பன  பூவைகள்!’’

    என்பது அவர் அருளிய திருப்பாடல். இப்பாடலில் வேதப்  பதங்களைக் கிளிகளும், பசுக்களும் பயிலும் என்று, சங்க இலக்கியமும், சம்பந்தர் தேவாரமும் கூறியதைச் சற்றே மாற்றம் செய்து பாடுகிறார்! திருவாரூரில் இல்லங்களிலும் , வீதிகளிலும், திருக்கோயிலிலும் , புறநகர்ப் பகுதிகளிலும் அடியார்கள் இடைவிடாமல்  சைவத்  திருமுறைப் பதிகங்களைப்    பயில்கிறார்கள், என்று மாற்றி, வேதமும்  திருமுறையும் ஒன்றே என்ற கருத்தை நிலை நாட்டுகிறார்!

    மேலும் ‘வள்ளலார்’ என்று திருவாரூர்த் தியாகேசரைக் குறிப்பது, அவர் தம்மையே தமர்க்கு நல்கும் தியாகத்தைச் செய்தருளுபவர் என்பதை நமக்குத் புலப்படுத்தும். அவ்வூரில் தம்மைக் காதல் தூதுவராக்கிக் கொண்டு இரண்டு முறை திருவாரூர் வீதியிகள் நடந்தருளியவர்! அவர் திருவருட் சிறப்பைப் பாடும் பாடல்கள் நால்வரும், காரைக்காலம்மையாரும்  நல்கிய பத்துப் பத்துப் பாடல்களால் ஆகிய பதிகங்களே, என்கிறார்! முன்னோர் மொழிந்த  கருத்துக்களைக்  காலத்துக்கும்  இடத்துக்கும் ஏற்பச்  சற்றே  மாற்றிப்  பாடிய சேக்கிழாரின் திருமுறைப் பற்றினை இப்பாடல் குறிக்கின்றது!

    =====================================================================13

    ——— சே.பா.ந. – 12 —- sent  on   15/11/’18.

    Share
  • சேக்கிழார் பா  நயம் – 11 

    =======================

    (திருச்சி புலவர் இராமமூர்த்தி)

    —————————————————

     

    திருவாரூர்  நகரத்தின் தோற்றம் இங்கே சிறப்பாகக் கூறப் பெறுகிறது. இப்பாடலில் உள்ள தொடர்கள் அடுத்தடுத்து வெவ்வேறு  பொருள்களைப்  புலப் படுத்துகின்றன. ஒரே தொடர் மீண்டும் வந்து , பொருள் நோக்கிப் பிரிந்து வெவ்வேறாகப் பொருள்தரப்   பாடுவது இரட்டுற மொழிதல் என்ற அணி என்பர். இந்த அணி இருவகைப் படும் , அவை செம்மொழிச் சிலேடை, பிரிமொழிச்  சிலேடை என்பனவாம்.

    சேக்கிழார் பெருந்தகை , திருவாரூரில் உள்ள மாளிகைகளின் சூழல் பற்றிக் கூறுகிறார்! மாளிகைகள் கட்டப்பெற்ற இடங்களுக்குப் புறம்பே உள்ள சோலைகளில் அந்நாட்டு மக்களால் வளர்க்கப் பெறும் யானைக் கன்றுகள் திரிகின்றன. அந்தச்   சோலைகளில் , வண்டுகள் பறந்து சென்று தேனுண்ணும் மலர்கள் எங்கெங்கும் பூத்துள்ளன!

    அடுத்து அங்கே  மகளிர்  விளையாடும் பொழுது  பாடும்   அம்மானைப் பாடல்கள்  எங்கெங்கும்  ஒலிக்கின்றன! அவர்கள் வாழும் அழகிய பெருமனைகள்  எங்கெங்கும் உள்ளன.

    அங்குள்ள இல்லங்களின்மேல் ஏற்றிவைத்த கொடிகள் படபடக்கின்றன. அந்த இல்லங்களுக்குள்  பெரும் செல்வங்களின் வைப்புப்  பெட்டகங்கள் உள்ளன.

    பூக்களால் தொடுக்கப் பெற்ற  மாலைகள் எங்கெங்கும் உள்ளன. அந்த மாலைகளை அழகாக அணிந்து கொண்டு இன்புறும் ஆடவரும் பெண்டிரும் எங்கும் உள்ளனர்.

    இப்பாடலில் போதகங்கள்  என்ற சொல், யானைக் கன்றுகளைக் குறித்தது; மாடு என்ற அடைமொழி ஊரின் பக்கத்தில் என்று பொருள்தந்து, அங்கே  சோலையில் திரியும் யானைக்கன்றுகளைக் குறித்தது.  அதே சொல் அடுத்து,   வண்டு போது  அகங்கள் என்று பிரிந்து , மலரிதழின் உட்பாகங்கள் என்று பொருள் தருகிறது. அதற்கு அதன் அடைமொழியாக உள்ள வண்டு  என்ற சொல் போதகம் என்ற யானையை நீக்கி, போது , அகங்கள் அதாவது வண்டுகள் தேனுண்ணக்  கிண்டுவதால் ,  விரியும் போது காணப்படும் அகவிதழ்கள் என்று,   பொருள் தருகிறது. இங்கே போதகங்கள் என்ற சொல் இருவகையாகப் பொருள் தருவதே சேக்கிழாரின் இலக்கிய ஆளுமையைக் காட்டுகிறது.

    அடுத்த அடியில், பாடும் அம்மனை என்பதில் உள்ள அடை மொழி, பாடுகின்ற அம்மனை என்ற கருத்தைத் தருகிறது. அம்மனை என்பது அம்மானை என்ற விளையாட்டுப் பாடலைக் குறிக்கும்! ஆதலால் அங்குள்ள வீடுகளில் எங்கெங்கும்  பெண்கள் அம்மானைப் பாடல்களைப் பாடி விளையாடுகின்றனர் என்பது புலனாகின்றது.  அடுத்து  அம்மனைகள் என்பது  பயிலும் அம்  மனைகள் எங்கும் என்ற தொடராகப் பிரிந்து அழகிய வளமனைகள்  எங்கெங்கும் அமைந்துள்ளன என்பதைக் கூறுகின்றது.

    அங்குள்ள மாளிகைகளில்  நெடிதுயர்ந்து  நீற்று அசையும் கொடிகள் எங்கெங்கும்  விண்ணில் பறக்கின்றன! இதனைச் சேக்கிழார் ‘’நீடு கேதனங்கள்’’ என்று பாடுகிறார்.  அடுத்து நிதி நிகேதனங்கள் எங்கும் என்கிறார். ‘’அம் மாளிகைகளுக்குள் செல்வத்தின் வளத்தை எடுத்துக் காட்டும் பொற்கூடங்கள் எங்கெங்கும் உள்ளன ‘’ என்பது இதன் பொருள். இங்கு கேதனங்கள் என்ற சொல் இருவகைப் பொருளாக தருகிறது.

    பூவிதழ்களால் கட்டப் பெற்ற மலர் மாலைகள் எங்கெங்கும் உள்ளன! இதனைச் சேக்கிழார் , ‘’தோடு சூழ் மாலை எங்கும் ‘’ என்று பாடுகிறார். அடுத்து, கணவன் மனைவியர் இணைந்து மாலையணிந்து மகிழும் இடங்கள் எங்கும் உள்ளன! என்பதை, ‘’ துணைவர் சூழ்  மாலை எங்கும் ‘’ என்கிறார். இங்கு மாலை என்ற சொல்  அடுத்தடுத்து  வந்துள்ளது.

    இனி முழுப்பாடலையும் பார்ப்போம்.

    ’மாடு போதகங்கள் எங்கும் வண்டு போதகங்கள் எங்கும்
     பாடும் அம்மனைகள் எங்கும் பயிலும் அம்மனைகள் எங்கும்
     நீடு கேதனங்கள் எங்கும் நிதி நிகேதனங்கள் எங்கும்
     தோடு சூழ் மாலை எங்கும் துணைவர் சூழ் மாலை எங்கும்.”

    இப்பாடலில் அலையும் யானைக் கன்றுகள், சோலையில் பூக்கும் மலர்கள், அம்மானைப் பாடல் பாடுவோர், வளமனைகளில் வாழ்வோர்,கொடியசையும் மாளிகை மக்கள், பெருஞ் செல்வம் பெற்றோர், மலர்ச்சோலை வைத்தோர், மாலை சூடி மகிழ்வோர் ஆகியோரின் சிறப்பை இரட்டுற மொழிதல் என்ற அணி நயத்துடன் சேக்கிழார் பாடியுள்ளார். இதன் வழியே திருவாரூரின்  இயற்கை வளம், செல்வச்சிறப்பு, செல்வவளம் ஆகியவற்றை உணரலாம்.

    Share