சேக்கிழார் பா நயம் -19
-திருச்சி புலவர் இராமமூர்த்தி
கைலை மலையிலிருந்து தமிழகத்துக்கு இறைவனால் அனுப்பப் பெற்ற சுந்தரர், அவதாரம் செய்த திருமுனைப்பாடி நாட்டினைப்பற்றி கடந்த கட்டுரையில் பார்த்தோம். இப்போது அவர் திருஅவதாரம் செய்த சிறப்பைக் குறித்துக் காண்போம்! தமிழ்நாட்டின் வேதியர் குலத்தின் வகைகள் உண்டு! நால்வேதங்களையும் ஓதி அவை கூறும் நன்னெறியில் வாழ்ந்து வரும் வேதியர் ஒருவகை!
வேதம் வேதியர்கள் பிரமனது முகத்தில் தோன்றியவர்கள் என்று கூறுகிறது! அவ்வகையில் பிரமன் முகத்திலும், தோளிலும், வயிற்றிலும், தொடையிலும் வேதியர், அரசர், வணிகர், வேளாளர் ஆகியோர் தோன்றினர். இவை பிறந்த இடத்தினால் உயர்வோ, தாழ்வோ பெறவில்லை. முகம் அறிவைக் குறித்து அதனை வழங்கும் ஆசிரியர்களாகிய வேதியரையும், தோள், வீரத்தைக் குறித்து வலிமையால் போர் செய்யும் அரசரையும், வயிறு உணவுப்பொருளை சேமித்து வழங்கும் வணிகர்களையும், கால்கள் வயலில் நடந்து உழவுத்தொழில் புரியும் வேளாளர்களையும் குறித்தது! இவையே உயர்வு தாழ்வற்ற நாள் வருணம்! பிறந்த மனிதன்இளமையில் பெற்றோர் ஆசிரியர் ஆதரவில் ஞான நூல்களைக் கற்றுக்கொள்ளும் போது பிரம்மச்சாரியாகவும், இளைஞனாய்த் திருமணம் புரிந்து கொண்டு குடும்பம் நடத்தும்போது கிரகஸ்தனாகவும், இல்லற இச்சை தீர்ந்தபின் காடுநோக்கி மனைவியுடன் சென்று பிறர்க்குதவி வாழும் வானப்பிரஸ்தனாகவும், முற்றத் துறந்தபின் பற்றே இல்லாமல் வாழும் சன்யாசியாகவும் வாழும் நிலைகளை ஆசிரமங்கள் என்பர். இவை அனைத்திலும் எல்லார் வாழ்க்கையும் அமையும்! இந்த வருணங்களும், ஆசிரமங்களும் வர்ணாசிரமம் என்று கூறப்படும்! இவை உலகியல் வாழ்க்கையாகும்!
ஆன்மவியல் வாழ்க்கையில் சிவ வேதியர் என்போர், சிவபெருமானின் ஐந்து திருமுகங்களிலிருந்தும் அதிகரித்து வந்து, ஆகமம் முதலியவற்றால் சிவபெருமானை அர்ச்சிக்க உள்ள உரிமை பெற்றவர் ஆவர்! அந்தணர் வேறு, சிவவேதியர் வேறு! இவர்கள் முப்போதும் பெருமானைத் திருமேனி தீண்டி வழிபாடு செய்வர்; மேலும் இவர்கள் பரம்பரை பரம்பரையாய் சிவபிரானுக்கு அணுக்கமாய்த் தொண்டு செய்வதால்சேக்கிழார் இவர்களை ‘வழி வழியடிமை செய்யும் வேதியர்’ என்றார். ‘’இவர்கள் கௌசிகர், காசிபர், அகத்தியர், பரத்துவாசர், கௌதமர் என்ற ஐவரின் கோத்திரங் கொண்ட வர்கள்; இவ்வைவரும் இப்பேர்கொண்ட பிரம புத்திரர்கள் அல்லர்.இவர்கள் சிவமரபினர், இவர்களுக்கு வேதபாரம்மிய மில்லை என்பாரை நோக்கி மறுக்கும்வகையில் வேதியர்குலம் என்றார் .பிரமதேவர் முகத்தினின்று தோன்றிய வேதியர்வேறு; சிவவேதியர்வேறு.!
பிரமன் வழித் தோன்றியவரே, தக்கயாகத்தில் வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டும், தாருகாவனத்து இருடிகள் வழிவழிவந்து இறைவனால் தண்டிக்கப்பட்டும், ததீசி முனிவரால் சபிக்கப்பெற்றும் இவ்வழியே உலகில் அதிகரித்து வருபவர்கள். இவர்களது வரலாறு கந்தபுராணம் முதலியவற்றுட் காண்க. சிவவேதியர்களாகிய இவர்கள் முன் சொல்லிய எவ்விதச் சிவாபராதங்களுக்கும் உட்படாதவர்களாய்ச் சிவபெருமானை எப்போதும் ஆன்மார்த்தம் – பரார்த்தம் என்ற இருநிலையிலும் வழிபட்டுச் சிவநெறித் தலைவர்களாய் உள்ளவர்கள்.இக்காலத்தில் இவர்கள் தம் பெருமையை உணராமல் தாழ்வு மனப்பான்மை கொண்டு வாழ்க்கை நடத்துகின்றன!’’ என்று சிவக்கவிமணி கூறுகிறார்! இவர்களையே சிவபிராமணர் என்பர்,
‘வழி வழி யடிமை செய்வோர்’ என்ற தொடரில் வழி வழி என இருமுறை கூறியது, இவர்கள் தந்தை வழி முன்னோர், தாய்வழி முன்னோர் என்ற இருவகையாலும், சிவபிரானுக்கு அடிமைத்தொண்டு புரிந்த மரபினர் என்பதைக் குறிக்கும்.
‘’சிவமறையோர் திருக்குலத்தார் அருவி வரை வில்லாளிக்கு அகத்தடிமை யாமதனுக்கு ஒருவர் தமை நிகரில்லார்!’’ என்று பின்னர் சேக்கிழார் கூறுவார்! இனி அவர் இயற்றிய பாடலைக் காண்போம்!
‘’மாதொரு பாக னார்க்கு வழிவழி யடிமை செய்யும்
வேதியர் குலத்துட் டோன்றி மேம்படு சடைய னாருக்
கேதமில் கற்பின் வாழ்க்கை மனையிசை ஞானி யார்பால்
தீதகன்று உலகம் உய்யத் திருவவ தாரம் செய்தார்!’’
இப்பாடலில் வேதியர் குலத்துள் தோன்றி என்று இறந்த காலத்தாலும், மேம்படு சடையனாருக்கு என்று எதிர்காலத்தாலும் கூறிய சேக்கிழாரின் சொல்லாட்சி மகிழ்தற்குரியது. சடையனார் தோன்றியது சிவவேதியர் குலம். அவர் சுந்தரரைப் பெறுவதால் இனி அவர் குலம் மேம்படப் போகிறது, என இருகாலத்தாலும் குறிப்பிட்டுள்ளார்!
‘சடையனார் ‘ என்பது சுந்தரர் தந்தையார் பெயர்.இது சிவபெருமானுக்கே உரிய சிறப்பான பெயர். அதனை மகனுக்கு இட்டு வழங்குவது சிவவேதியர் வழக்கம்; கடவுட் பெயர்களையும் , பெரியோர் பெயர்களையும் மக்களுக்கு இட்டு வழங்குதல் உலக வழக்கம் ஆகும். அவ்வகையில் சுந்தரர் தந்தையாரைச் சடையனார் என்றும், தாயாரை இசைஞானியார் என்று வழங்கினர்! சடையனார் தம் தந்தையாரின் திருப்பெயராகிய ‘ஆரூரர் ‘’ என்பதைச் சுந்தரருக்கு இட்டு வழங்கினார். இதனைச் சுந்தரரே தம் தேவாரத்தில் ,
‘’நண்பு உடைய நன்சடையன் இசைஞானி சிறுவன்
நாவலர்கோன் ஆரூரன் நாவின்நயந் துரைசெய்’’
என்று தம்மைப்பற்றிக் குறிக்கிறார்! மேலும்,
.“இசைஞானி யம்மையார் (திருவாரூர்) கமலாபுரத்திலே சிவகோதம கோத்திரத்திலே ஞான சிவாசாரியார் குடும்பத்தில் அவதரித்த மகாளவார் என்பது கல்வெட்டுக்களாற் கிடைக்கும்செய்தி!’’
சுந்தரர் தம் அருள்மொழிகளால் சைவம் தழைக்கச் செய்தார், என்பதைக் குறிக்க ‘’ தீதகன்று , உலகம் உய்ய ‘’ என்ற தொடரால் புலப்படுத்தினார். மேலும் அவர் பிறந்தமையால் மற்றையோரும் தீமை நீங்கி உய்ந்தனர் என்பதைக் குறிக்க, ‘’ திருவவதாரம் செய்தார் ‘’ என்று சேக்கிழார் கூறினார்! இவ்வாறு திருக்கையிலையிலிருந்து தென்திசையில் சுந்தரர் தோன்றிய சிறப்பை, சொல்லாட்சி சிறப்புடன் சேக்கிழார் கூறியமை உணர்ந்து மகிழத்த தக்கதாகும்!