அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

ராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (12.01.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “படக்கவிதைப் போட்டி – 195

  1. அப்பப்பா… அழகு யானை…
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
    -ஆ. செந்தில் குமார்.

    பிளிறல் சத்தம் செய்வதனால்.. களிரே என்றதை அழைத்தனரோ…!
    வெள்ளைத் தந்தம் உடையதனால்.. வேழம் என்றதை விளித்தனரோ…!
    பருத்த உடலாய் இருப்பதனால்.. ஒருத்தல் என்றதைப் பகன்றனரோ…!
    கருத்த நிறமாய் உள்ளதனால்.. கரியே என்றதை கூவினரோ…!
    மிடுக்காய் அதுவும் நடப்பதனால்.. மத்தகயமே என்றனரோ…!
    துதிக்கை ஒன்று நீண்டதனால்.. தும்பி என்றதைப் போற்றினரோ…!
    எத்தனை.. எத்தனை.. எத்தனை.. எத்தனைப் பெயர்கள் யானைக்கு…!

    துன்பத்தில் ஒலித்தல் புலம்பல்.. அச்சத்தில் ஒலித்தல் கதறல்..
    விரைந்து ஒலித்தல் கம்பளை.. பெருங்குரல் என்பது பூசல்..
    உரறுதல் இயம்புதல் முழங்குதல்.. நரலுதல் சிலைத்தல் இசைத்தல்..
    பயிற்குரல் உயிர்க்கும் என்ற.. எழுப்பும் ஓசைகள் பற்பல..
    எத்தனை.. எத்தனை.. எத்தனை.. எத்தனை ஓசைகள் ஆனைக்கு…!
    அப்பப்பா.. ஆனைக்கும் மனிதனுக்கும்.. ஆண்டாண்டாய் ஒரு பிணைப்பு…!
    ஆனையை வியப்பதா…? மொழியை உருசிப்பதா…? புரிந்திடவில்லை எனக்கு…!

  2. சோழன் எங்கே?
    ________________
    முறை தவறா சோழ நாட்டில்
    மூதாதையர் போர் அடித்தார்
    சோற்றுக்குப் பஞ்சமாமிப்போ
    சோழன் எங்கே? தேடுகிறேன்
    வளமான அந்நாட்டைக் காண
    வனம் விட்டு ஓடி வந்தோம்
    மதப்பேய் பிடித்த சிலர் எம்மை
    மதயானை எனப் பெயர் சூட்டி
    அடித்து அடக்கி அண்ணனை
    ஆலயத்தில் முடக்கி விட்டார்
    கவளச் சோற்றுக்காக அனைவருக்கும்
    கும்பிடு போடுகிறான் தினமும்
    இருகாலில் நின்று வித்தை காட்ட
    இரும்புச் சங்கிலி பிணைப்பு தம்பிக்கு
    தப்பி ஓடி வந்த நான்
    திசை தெரியாமல் நடந்த போது
    கண்டேன் சோழன் அம்பாரியை
    காட்சிப் பொருளாய் பெட்டகத்துள்
    நாட்டின் வளமென
    நான் செய்த கற்பனை
    நிஜ உலகில் இல்லாது
    நிழற்படத்தில் கண்ணுற்றேன்
    வையகம் ஆண்ட சோழன்
    வரலாற்றில் இடம் பிடித்தான்
    ஆற்று நீரைக் கொண்டு
    அருமையாய் உழவு செய்வீர்
    மாக்களைத் துன்புறுத்தம்
    மக்கள் தம்மை தண்டித்து
    நீதி வழங்க எம் சோழன் இல்லை
    நீங்களாவது உதவுங்கள்.

  3. தாகம் தீர்ந்திடுமோ….???

    எம் இனத்தின் வாழ்விடங்கள் இன்று மனிதனின் வசிப்பிடம்
    கால்சுவடு பதித்திட்ட வழித்தடங்களில்
    கற்சுவர்க் கட்டிடங்கள்..

    பேராற்று சுவடு அழித்திட்டுப் பெருஞ்சிலைக்குத் திறப்புவிழா
    சூழலியலை மறுத்தலிப்பு செய்திட்ட சுற்றுலாத்தல உருவாக்கம்…

    வழிதனை இழந்து, வலியுடன் வலம் வரும்
    எம் இனத்திற்கு நீர் தாகம் மட்டும் அல்லவே..

    பெருங்காட்டில் பிடியுடனே பிரியாமல்
    அலைந்திட்ட தருணங்கள் கனவாகப்
    பெரும் தொழிற்சாலைக்கு இடமானதென்ற
    தவிப்பின் தாகம்…

    கழைமூங்கில்தனைச் சுவைத்திட்ட தினம் இனிக்க
    வாழைதனை நட்டு வைத்தே மின்சார வேலியிட்டு
    எம் குருதி உருஞ்சிடும் நிலை குறித்த
    தவிப்பின் தாகம்…

    நறுமலர் வாசனையோடு குளிர்காற்றை சுவாசித்த நாசியின்றோ
    புகைக்காற்றை நுகர்தல் எண்ணிய தவிப்பின் தாகம்..

    அறிவியல் கண்டுபிடிப்பு என்ற அறியாமைக்குள் வீழ்ந்திட்ட
    அறிவிலி மனித இனம்…

    தரணியில் பிற உயிர் வாழத் தடைவிதித்திடில்
    இயற்கைப் பேரிடர்முன் தன் இயலாமை உணரும்…

    பூலோக உயிர்சுழற்சி மறந்து பூவுலகம் தனக்கே என்ற
    பேரவா கொண்ட மனிதனின் தாகம் தீரும் நாள் எந்நாளோ…?
    எம் இனத்தின் தாகம் தீரும் நாளும் அந்நாளே!

    முனைவர்.ம.தனப்பிரியா,
    உதவிப்பேராசிரியர்,
    தமிழ்க்கல்லூரி, பேரூர்,
    கோவை.

  4. அருமை முனைவர் தனப்பிரியா மேம்….. மிக சிறந்த கவிஞராக மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்… முனைவர் தனப்பிரியா மேம்.

  5. தனியொருவன்
    ————————————
    இரு பெரு கரு உயர்நீல(ள)வரையின்
    இரு கரைமருங்கிடை விரி திரை புனல் நதியில்
    கருமை இருள் கலைந்த காலை வேளையில்
    கரு மை மெய் கலந்த காட்டரசனின் களிப்புறு குளியல்

    இறைவன் அளித்த இயற்கை சீதனங்கள்
    இரு பெரும் பொன் வெள்ளி தந்தங்கள்
    இருப்பதனால் வேழம் அவன் இருந்தாலும்
    இறந்தாலும் இருக்கிறது பொன் ஆயிரம்

    தும்பிக்கை தான் அவன் நம்பிக்கை- அதில்
    தூக்கி சுமந்தெறிந்த பாரச்சுமைகள் ஏராளம்
    தன்னந்தனி திரிந்தாலும் நன்னம்பிக்கை என்னும்
    தன்னம்பிக்கையால் தாக்கியழித்த தடைகள் எண்ணிலா

    நிலம் அதிரும் அவன் நடந்தால்
    நீர் சிதறும் அவன் அலைந்தால் -நிழல்வனம்
    நடுங்கும் அவன் சினந்தால்- ஆயினும் பாகனின்
    நில் என்ற சொல்லுக்கு பணிதலில் மிளிரும் அவன் குணம்

    வம்புடை வன்முறை மானுடம் தான் வாழ யானை
    வழித் தடத்தையும் வாழ்விடத்தையும் வழிமறித்தே
    வாரிச்சுருட்டி வாயிலிட்டுவிட்டு அன்புடையவனை
    வம்பன் கொம்பன் என வசைபாடுது

    நாளைய சந்ததியின் நல்வளங்களை சூறையாட
    நாடெல்லாம் திரியும் மணல் கொள்ளை மனிதரால்
    நாதியற்று போன நதிகளின் மரணத்திற்கு
    நீதிகேட்டு வந்த நீ தனியொருவன்

    யாழ். பாஸ்கரன்
    ஓலப்பாளையம்
    கரூர்- 639136
    9789739679
    basgee@gmail.com
    http://noyyal.blogspot.in

  6. அது வேண்டாம்…

    காட்டி லெங்கும் அலைந்தேதான்
    கண்ட யிடத்தில் நீரருந்தி,
    வாட்ட மின்றியே வளர்ந்திருந்த
    வனத்து யானையைப் பிடித்துவந்து,
    கூட்டமாய் மனிதர் சேர்ந்துவரும்
    கோவில் தலங்களில் பழக்கியதை
    ஆட்டம் காட்டுதல் அதுபோதும்,
    அலைந்தே இரந்திட வேண்டாமே…!

    செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.