திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருமணத்துக்குப் புறப்பட்ட காட்சியை, சேக்கிழார் மிகவும் நயம்படப் பாடுகிறார்! சுந்தரர் அந்தணர் குலத்தில் அவதரித்தாலும், அரசரின் வளர்ப்பு மகனாக வளர்ந்தார்! அவருக்கு அந்தணர்குல வழக்கப்படி, ஜாதகரணம், நாமகரணம், உபநயனம் ஆகிய சடங்குகளை அவர் பெற்றோர் நிறைவேற்றினர். அதன் பின் அவர் திருமணத்துக்கு ஏற்ற பருவம் அடைந்த பின் அவருக்கு உரிய மணமகளாக புத்தூர்ச் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைக் குலம், கோத்திரம் ஆகியவற்றை ஆராய்ந்து பொருத்தம் பார்த்து, இருவருக்கும் பொருந்திய மணநாள், முகூர்த்த நேரம், இவற்றைக் குறித்தனர். அரசரின் வளர்ப்பு மகனாதலால் பலநாட்டினருக்கும், மணவோலை அனுப்பினர்! இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொள்வதை அனைவரும் காண வேண்டும் என்ற நுட்பமான கருத்து இதில் புலப்படும்!

சுந்தரருக்குத் திருமஞ்சனம் ஆட்டி, அவருக்கு இருவகையான அலங்காரங்கள் செய்தனர்! அரசரின் வளர்ப்புமகன் ஆதலால், அரசர் பெருங்கோலமும், அந்தணர் மைந்தன் ஆதலால் வைதிகப் பெருங்கோலமும் செய்தனர்! அதாவது தமக்கு உரியதல்லாத மன்னவர் திருவுக்கேற்ப, வைதிக முறையில் ‘’தூய நறிய பச்சைக் கர்ப்பூரச் சுண்ணத்துடன் அழகிய பூக்களிலிருந்து ஆகிய தண் பனிநீர் கூட்டிச் செய்த சந்தனக் குழம்பைப் பூசி, கத்தூரி சேர்ந்த கலவைச் சாந்தையும் அணிவித்து; அதன்பின் விதிப்படி அணியும் பூணூலை மார்பிலும் பவித்திரத்தைக் கையிலும் விளங்கவைக்க, அவ்வாறு பவித்திரங்கொண்ட கையினராய் வைதிகத் திரு வுடையர் ஆனார்!.. அடுத்து அரசத் திருவாகிய தூய மலர்களால் ஆகிய பிணையல் – மாலை – கண்ணி – கோதை – தாமம் என்ற பலவகை மலர்மாலைகளையும் சாத்த அணிந்து, ஒளி மிகுந்த மணிகளிழைத்த தூய பொன் மணி மாலைகளையும் சாத்த அணிந்து கொண்டார்! இதனைச் சேக்கிழார்,

‘’மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க ‘’

என்று பாடுகிறார்! இதைக்கண்ட அவ்வூர் மக்கள் திருவிழாவாகக் கொண்டாடினர்! அப்போது நம்பி ஆரூரர், தம்மைக் கைலாயத்திலிருந்து அனுப்பிய சிவபெருமானின் திருவடிகளை, உள்ளத்துள் எழுந்தருள வைத்துக் கொண்டு, அந்த உரிமையைக் காட்டத் தக்க திருநீற்றை முறையாக அணிந்து கொண்டார்! மேலும் இவர் கைலையில் இறைவனுக்குத் திருநீறு ஏந்தி அணைவார் என்பது குறிப்பு.

அப்போது பொன்னாலாகிய அணிகளைப் பூண்ட அடியார்கள், சுந்தரராகிய மணமகனை, அக்கால முறைப்படி ஓர் உயர்ந்த குதிரையை அலங்கரித்து, அதன் மேலேற்றி ஊர்வலமாக வந்தனர்! இதனைச் சேக்கிழார்,

‘’பொன்னணி மணியார் யோகப் புரவி மேற்கொண்டு போந்தார்!’’

என்று பாடுகிறார்! இங்கே சுந்தரர் ஏறிவந்த குதிரை, ‘’யோகப்புரவி ‘’ என்று குறிக்கப் பெறுகிறது. நம் உயிர், மிகுந்த தியானம் செய்தால் யோகசாதனை என்ற இறைமையின் இணைப்பைப் பெறலாம்! மணமகனும், மணமகளும் இல்வாழ்வில் இணையும் இன்பநிலையுடன், இறைவனை அணுகும் யோகமுறையை இங்கே குறிப்பிடக் காரணம் உண்டு! கம்பராமாயணத்தில், இராமனும் சீதையும் திருமணம் புரிந்து கொண்ட நிகழ்ச்சியை,

‘’மன்றலின் வந்து மண தவிசு ஏறி
வென்றி நெடும் தகை வீரனும் ஆர்வத்து
இன் துணை அன்னமும் எய்தி இருந்தார்
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்!’’

என்று கம்பர் பாடுகிறார்! இராமனை வென்றி நெடுந்தகை வீரனும் என்று கம்பர் கூறுகிறார்! தன் ஆற்றல் புலப்பட, வில்லை வளைத்து , ஒடித்து சீதையை போகம் கருதி மணந்து கொண்டமையால் இராமன் அவ்வாறு கூறப்பெற்றான். ஆனால் சீதையைக் கம்பர், ‘’ஆர்வத்து இன்துணை அன்னமும்‘’ என்று பாடுகிறார். சீதை இராமன் என்னும் ஆன்ம நாயகனுடன் என்றுமே இணைந்து வாழும் தன்மை உடையவள்! சீதையை அன்னம் என்று கம்பர் கூறியது இராமனிடம் மானுடத் தன்மையால் நிகழும் பிழையை நீக்கி, பாலில் சேர்ந்த நீரைப் பிரித்து நீக்கும் அன்னப்பறவை போல, தியானத்தால் இராமனின் குறையை நீக்கி இறைவனாகிய தலைவனுடன் இணையும் யோகத்தை அவள் பெறுவாள், என்பதை குறிப்பிடவே! அதுகருதியே ‘’தேவியைப் பிரிந்த போதெல்லாம் இராமன் திகைத்தான்! ஆகவே, இவர்கள் திருமணம் புரிந்து கொண்டதைக் கம்பர் ‘’ஒன்றிய யோகமும் போகமும் ஓத்தார்!’’ என்று பாடினார்! அவ்வாறே சுந்தரர் சடங்கவி மகளை மணந்து கொள்ளாமல் , யோக நிலையில் இறைவனுக்குத் தோழராய் சைவத் திருமுறையாகிய பாடலைப் பாடி இணைந்து கொள்ளப் போகும் சிறப்பை இங்கே முன்நிகழ்ச்சியாய்க் குறிப்பிடுகிறார்! சுந்தரர் ஏறிய யோகப் புரவி, பின்னரும் பரவையார், சங்கிலியார் இருவருடனும் இறைப்பணியாகிய, தியான யோகம் செய்து மீண்டும் கைலாயம் சென்று வாழப் போவதையும் குறித்தது! இனி முழுப் பாடலையும் பாடி மகிழ்வோம்!

‘’மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க
நன்னகர் விழவு கொள்ள நம்பிஆ ரூரர் நாதன்
தன்னடி மனத்துள் கொண்டு தகும்திரு நீறு சாத்திப்
பொன்னணி மாமியார் யோகப் புரவிமேற் கொண்டு போந்தார்!’’

இப்பாடலின் நயம் மிக்க தொடர்கள் நமக்குச் சமயத் தெளிவை உணர்த்துகின்றன !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.