மேகலா இராமமூர்த்தி

புள்ளிக்கோலம் போடும் இந்தப் பாவையைப் புகைப்படமெடுத்தோர் வரிசையில் தாமும் ஒருவராய்த் திகழ்ந்து படமெடுத்துவந்திருப்பவர் திருமிகு. ஷாமினி. இப்படத்துக்குப் படக்கவிதைப் போட்டியில் இடம்தந்தவர் திருமதி. சாந்தி மாரியப்பன். படம்தந்தவர், போட்டியில் அதற்கு இடம்தந்தவர் இருவருக்கும் உரித்தாகின்றது என் நன்றி!

வீட்டை மிளிரவைக்கும் அழகுக் கலைகளில் ஒன்று கோலம். கோலம் என்றாலே அழகு என்றுதானே பொருள்? கோலமிடுவது இல்லத்துக்கு அழகூட்டுவதோடு மட்டுமல்லாமல் கரங்களுக்கு நல்ல பயிற்சியாகவும், ஊற்றெடுக்கும் புதிய கற்பனைகளை வெளிப்படுத்தும் முயற்சிக்கு உற்றதோர் வாய்ப்பாகவும் அமைகின்றது. அனைத்திற்கும் மேலாய் அரிசி மாவினால் கோலமிட்டால் சிறு பூச்சிகளும் எறும்புகளும் அதனை உண்ணும். அதிகாலையிலேயே உயிர்களுக்கு உணவிட்ட மனமகிழ்வும் நமக்குக் கிட்டும்.

இனி, இப்படம் குறித்துத் தம் கருத்துரைக்கக் காத்திருக்கும் அருமைக் கவிஞர்களைக் கனிவோடு வரவேற்போம்! அவர்தம் கவிமொழி கேட்போம்!

*****

மார்கழிப் பனியில் நனைந்தபடி இனிய கோலமிடும் நங்கையர்க்குப் போட்டி வைத்து, பரிசளிப்பதற்காகக் கோலத்தைப் படமெடுக்கும் ஆர்வலர்களை மனப்பூர்வமாக வாழ்த்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

வாழ்த்துவோம்…

மார்கழிப் பனியில் நனைந்தேதான்
மங்கைய ரெல்லாம் தெருவிலொன்றாய்ச்
சேர்ந்தே காலையில் கோலமிட்ட
சீரிய காலம் மாறிடினும்,
தேர்வுகள் வைத்தே அவற்றிற்குத்
திறமை சார்ந்த பரிசளித்தும்
ஆர்வ மோடு படம்பிடிக்கும்
ஆர்வ முள்ளோர் வாழியவே…!

*****

”அழகுக்கோலமிடும் முகங்காட்டாச் சோதரியே! ஒளிக்கோலங்களின் ஒவ்வாமை மொழிகளால் உன் விழிக்கோளங்களில் வெம்மை நீர்வீழ்ச்சிகள் உருவாகக்கூடும். வேலியற்ற இணையவெளியில் உலவும் காலிகளால் இலைமறை காயாய் இருந்தனவெல்லாம் இப்போது இலவசங்கள் ஆயின. ஆகவே குனிந்தது போதும்; நிமிர்தல் செய்!” என்று கோலமிடும் பெண்ணை அன்போடு எச்சரிக்கின்றார் திரு. யாழ் பாஸ்கரன்.

நிமிர்தல் செய்

முற்றுப்புள்ளிகளை முழுமையாக்கி அழகுக் கோலமிடும்
முகம் காட்டா சகோதரியே முழுக்க மூழ்கியது போதும்
முதுகுப்பக்கம் கொஞ்சம் முகம் திருப்பு- உன்னை முற்றுகையிட்டுள்ள
மூன்றாம் கண்ணின் பார்வைகள் முற்றுப் பெறட்டும்

மாக்கோலம் தவறானால் மலர்க்கோலம் தீட்டிடலாம்
பூக்கோலம் சிதறிவிட்டால் புதுக்கோலம் போட்டிலாம்
நிலக்கோலமிட்டது போதும் நிமிர்தல் செய் சற்றே இல்லையேல்
வாழ்கைக் கோலம் அலங்கோலம் ஆகிவிட்டும்

காட்சிப்பிழைகளையே ஆட்சியில் ஏற்றும்
மாட்சிமை மறந்த பூகோள மானுட சமூகத்தின்
காட்சி ஊடகக் கலிகாலம் இதில் சிறுகவனச் சிதைவும்
சாட்சியாகிச் சங்கடங்கள் பல தந்துவிடும்

பழுதடைந்த பார்வை விழிமூடர்களின்
பாலின வன்முறை வெறியாட்டங்களினால்
பலாத்காரமாய்ச் சீரழிக்கப்பட்டுப் பாவம் பெண்மையே
பலியாடுகளாய் எப்போதும் வெட்டுப்படுகிறது

ஒளிக்கோலங்களின் ஒவ்வாமை மொழிகளால் உன்
விழிக்கோளங்களில் வெம்மை நீர்வீழ்ச்சிகள் உருவாகலாம்
வேலியற்ற இணைய வெளியின் வழிகளில் முட்களாய்
போலிக் கலைக்காலிகள் பசுத்தோல் போர்த்தியபடி

இலைமறைகாயாய் இருந்தன எல்லாம்
இலவசமாய் இங்கு பதிவிறக்கக் கிட(டை)க்கிறது
இளந்தாரிகளின் இலக்கற்ற விடுதலை உரிமைக்கும்
இலக்குவன் கோடுகள் சில இங்கே தேவையாகிறது

*****

வெவ்வேறு கோணங்களில் இப்படத்தை அணுகிப் புதிய புதிய சிந்தனைகளை நமக்குத் தந்திருக்கும் கவிஞர்களைப் பாராட்டுவோம்!

அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிதை நம் கவனத்துக்கு…

வாழ்க்கைக் கோலம்!

நெளிந்து கொடுக்கக் கற்றால்
நேராகும் நம் வாழ்வு என
வாழ்க்கைப் பாதையை
விளக்கும் பாதைக் கோலம்
அழகான இடைப்புள்ளி
அன்றைய உன் துன்பங்கள்
வரிசையாக உன் இடர்களை
வகையான புள்ளிகளாய் இட்டு
நெளி வலைக்குள் சிறையாக்கு
நிஜ வாழ்வின் சோகங்களை
கண்டவர் படமெடுக்க விழையும்
கண்கவர் காட்சியாய்
அழகாக மாறும் வாழ்வு
அருமையான நெளிக்கோலமாய்
முகம் காட்டா நங்கை சொல்லும்
முத்தான பாடமிது
இடர்களைச் சிறையாக்கி
இயன்றவரை வளைந்து கொடு
மீண்டும் அசைபோடாது
மீளாத் துயரத்தில் வீழாது
வெளிவந்த பின்னே வாழ்க்கை
வெளிச்சமாகும் வசந்தமாகும்!

”கோலத்தின் இடைப்புள்ளிகளே உன் துன்பங்கள்; அவற்றைப் பிறரறியாது சிறைப்படுத்து! நெளிந்துசெல்லும் கோடுகளாய் இயன்றவரை வளைந்துகொடுத்து வாழ்வை முறைப்படுத்து. பளிச்சென வெளிச்சமாகும் உன் வாழ்க்கை!” எனச் சிக்குக் கோலத்தை வைத்து வாழ்வின் சிக்கலெடுக்கும் வித்தையை விளம்பியிருக்கும் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீயை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

0 thoughts on “படக்கவிதைப்போட்டி 196-இன் முடிவுகள்

  1. என் கவிதையை சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்து ஊக்குவித்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *