சேக்கிழார் பா நயம் – 16 (அந்நிலையே)
-திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி
உலகில் நிகழும் இயல்பான நிகழ்ச்சிக்கு மாறுபட்ட நிகழ்ச்சி திருவாரூரில் நிகழ்ந்தது! தொடக்கம் இயல்பான உலகியலாக இருந்தாலும் தொடர்ச்சி இயல்புக்கு மாறுபட்டதாக நிகழ்ந்து , இறையருள் நிகழ்ச்சியாக நிறைகிறது. ஆரூர் மன்னன் வாழ்வில் கண்ட அதிசயம், அவனுக்கும் நமக்கும் இறையருளின் விளக்கமாக அமைந்தது என்பதை அடுத்து நிகழ்ந்த அதிசய நிகழ்ச்சி வழியே அறிந்து கொள்கிறோம்! ஆம், தேர்ச்சக்கரத்தில் அடிபட்டு இறந்த கன்று உயிர் பெற்று எழுகிறது! அப்போதே மன்னன் தேர்க்காலால் ஊரப்பட்ட மகனும் உயிர்த்து எழுகின்றான்! தொடர்ந்து அமைச்சனும் உயிர் பெற்று எழுகிறான்!
இதனை உணர்த்தும் வகையில் மன்னன் தானே தன் மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்ற அதே நேரத்தில் சிவபிரான் அருட்காட்சி தருகிறார்! சிவபிரான் திருச்சடையில் இளம்பிறை நிலவும், திருநுதலில் மூன்றாம் கண்ணும் பொலிய அவர் தோன்றுகிறார்! நிலவு செய்த பிழையைமன்னித்து அதனைச் சடையில் ஏற்றுக்கொண்டு பெருவாழ்வு தந்த கருணையைச் சடை காட்டுகிறது. முருகப்பிரான் என்ற குமாரனை ஈன்ற நெற்றிக்கண் இறைவனின் தனிச்சிறப்பையும் காட்டுகிறது!அக்குமரனின் தாயாகி அரவணைத்த பார்வதி தேவி இடப்பக்கத்தில் இணைந்து நிற்கிறாள்! அங்கும் சிவபூத கணங்கள் தோன்றி நிற்பதைக்கண்ட அரசன் சிவ பிரானைப் போற்றுகின்றான்! அப்போது தமக்கே உரிய காளைமேல் இறைவன் தோன்றுகிறார்! சடையில் பிறையைத் தாங்கும் பிரானை, விடை தாங்குகிறது! சடையும் விடையும் ஆதாரமாகவும் ஆதேயமாகவும் விளங்கும் காட்சி அது. சடைக்கு சிவன் ஆதாரம்,விடைக்கு சிவன் ஆதேயம்! இக்காட்சி மிகச்சிறந்த அடியார்கட்கே கிட்டும். இக்காட்சி நல்கும் இறைவனை ‘சோமாஸ்கந்தமூர்த்தி’ என்பர்! குடும்பத்துடன் காட்சிதருபவர் என்பது பொருள்.
அரசனும் , மகனும் ஈடுபட்ட நிகழ்ச்சி என்பதால் குடும்பத்துடனும், அமைச்சனும் ஈடுபட்டதால் பூதகணங்களுடனும் இறைவன் காட்சி நல்கினார்! அப்போது ஆன்கன்று , இளவரசன், அமைச்சன் ஆகியோர் உயிர் பெற்று எழுந்தனர்! இதனைச் சேக்கிழார் பெருந்தகை,
‘’அந்நிலையே உயிர்பிரிந்த ஆன்கன்றும் அவ்வரசன்
மன்னுரிமைத் தனிக்கன்றும் மந்திரியும் உடன்எழலும்
இன்னபரி சானான்என்று அறிந்திலன் வேந்தனும் யார்க்கும்
முன்னவனே முன்னின்றால் முடியாத பொருள் உளதோ?’’
என்று பாடுகிறார்! இப்பாடலில் முறைப்படி முதலில் இறந்த ஆன்கன்று உயிர் பெற்று எழுகின்றது! அதனைக் கண்ட அப்பசு மகிழ்கிறது! அக்கன்று உயிர்த்து எழுந்ததைக் கண்ட பசு மகிழ்ந்தமையால் அரசன் மகிழ்ந்தான்! அதற்கிடையில் இளவரசனைத் தேர்க்காலில் இட்டுக் கொல்ல அஞ்சித்தன் உயிரை நீத்த அமைச்சன் உயிர்பெற்று எழுந்தான்! இதனையும் அரசன் கண்டு மகிழ்ந்தான்! பின்னர்அரசனின் மைந்தன் உயிர்பெற்று எழுந்தான்! இதனை , ‘’மன்னுரிமைத் தனிக்கன்றும் ‘’ என்று பாடுகிறார் புலவர்! ஆன்கன்று அரசன் கன்று என்ற சொல்லாட்சி உயிர்கள் அனைத்தும் ஒருதன்மையனவே, என்பதைப் புலப்படுத்தும் ! இரண்டு கன்றுகள் எழுந்தபின் அமைச்சன் எழுந்தான் என்பதில் முறைமாற்றம் செய்கின்றார் சேக்கிழார்! மந்திரி இறந்தபின்னரே இளவரசன் மரணமடைகிறான். அப்படியானால் மந்திரி எழுந்தபின் தானே இளவரசன் எழவேண்டும்? இளவரசன் உயிரிழப்பானோ என்ற அச்சத்துடன் இறந்த அமைச்சரின் அச்சத்தை நீக்கும் பொருட்டு அவன் எழுமுன் இளவரசன் எழுந்தான் என்று கூறியது நுட்பம் வாய்ந்தது! இவை அனைத்தையும் கண்ட அரசனின் மனோநிலை எத்தகையது என்று யாராலும் உணரவியலாது! இதனை ‘’இன்ன பரிசானான் என்று அறிந்திலன் வேந்தனும் ‘’ என்ற தொடரால் சேக்கிழார் கூறுகிறார்! எப்போதும், எங்கும் ,எல்லாவுயிரினுள்ளும் இருக்கும் இறைவனே,சாட்சியாய் நின்று, இவைஅனைத்தையும்நிகழ்த்துகிறார் என்பதை,
‘’யார்க்கும் முன்னவனே முன்னின்றால் முடியாத பொருள் உளதோ?’’
என்று சேக்கிழார் கூறுவது இறைவனின் இலக்கணத்தையும் காட்டுகிறது! எனவே திருவாரூரில் நிகழ்ந்த நிகழ்ச்சியின் நிறைவில் அனைவர்க்கும் இன்பமே உண்டாயிற்று! உயிர்களைப் படைத்தல், காத்தல், மறைத்தல், அருளால், அழித்தல் ஆகியவற்றை ஆற்றும் இறைவனின் முதன்மையை, முழுமையை இப்பாடலில் சேக்கிழார் காட்ட முனைந்துள்ளார்!