அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

பார்க்கவ் கேசவன் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (22.12.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “படக்கவிதைப் போட்டி – 192

  1. பச்சிளங் குழந்தையின் பால் மனது…
    ●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
    -ஆ. செந்தில் குமார்.

    எள்ளளவும் அச்சமில்லை.. எனக்கு
    எதிரியென்று எவருமில்லை..
    அள்ள அள்ளக் குறையாத..
    அளவற்ற செல்வமில்லை..
    உள்ளத்தில் சூது வாது..
    உள்ளநிலை எனக்கில்லை..
    நல்லது நடக்க வேண்டும்.. என்றெப்போதும்
    நான் ஏங்கவில்லை..
    அடுத்தவர் வாழ்வு போன்று..
    வாழுமெண்ணம் எனக்கில்லை..
    அடுத்தவேளை உணவைப்பற்றி..
    ஒருபோதும் நான் நினைத்ததில்லை..
    கடுகடுத்த முகம் இல்லை..
    சிடுசிடுத்த மொழி இல்லை..
    எனக்கே வேண்டு மென்று..
    எதையும்நான் கொள்வதில்லை..
    முதன்மையாய் இருக்க வேண்டும்..
    என்ற எண்ணம் எனக்கில்லை..
    வெள்ளந்தி மனதைத் தவிர..
    வேறொன்றும் என்னிட மில்லை..
    ஆதலால் நிம்மதியாய் உறங்குகின்றேன்..
    எதைப்பற்றியும் எனக்கு கவலையில்லை..

  2. உறங்கிடு என் செல்லமே

    உறங்கிடு என் செல்லமே
    கனவு காணுங்கள் என கலாம் அவர்கள் சொன்னதை கேட்டு
    கண்கள் மூடி கனவுகள் காண உறங்கிடு என் செல்லமே
    கல்வி என்னும் பெயரில் கழுதைகளாய் புத்தக மூட்டை சுமந்து
    வளைந்த முதுகுகளோடு வளம் வரும் பிள்ளைகள் இங்கே
    விழித்திடாதே இன்னும் கொஞ்சம் உறங்கிடு என் செல்லமே
    காலுன்றும் காலம் வரும் முன்னே நெஞ்சில் காதல் வேரூன்ற
    கிடைக்காத காதலுக்கு இவர் உயிரை இழந்து விடும் விடலை பூக்கள் இங்கே
    விழித்திடாதே இன்னும் கொஞ்சம் உறங்கிடு என் செல்லமே
    வேலை கிடைக்காமல் பசி போக்கும் பாதி வயிறு கஞ்சிக்காக
    அன்னாடம் காட்சிகளாய் பெருகிவரும் பட்டதாரி கூட்டம் இங்கே
    விழித்திடாதே இன்னும் கொஞ்சம் உறங்கிடு என் செல்லமே
    விட்டுக்கொடுக்க மனம் பிடிக்காமல்
    விவாகரத்து வாங்கி திசை மாறி செல்லும் உறவுகள் இங்கே
    விழித்திடாதே இன்னும் கொஞ்சம் உறங்கிடு என் செல்லமே
    வழி நடத்த தெரியாத தலைவர்களை தவறாய் தேர்ந்தெடுக்க
    விழி பிதுங்க அவதிப்படும் மாந்தர்கள் இங்கே
    விழித்திடாதே இன்னும் கொஞ்சம் உறங்கிடு என் செல்லமே
    அன்பாய் ஆதரவை இருந்த பெற்றோர்கள் ஆசிரமங்களில் அடைக்கலம் தேட
    பெற்றோரை விட்டு செல்லும் பிள்ளைகள் நிறைய இங்கே
    விழித்திடாதே இன்னும் கொஞ்சம் உறங்கிடு என் செல்லமே
    இந்தியாவின் வரும்கால தூண் நீ அத்தனையும் மாற்றி எழுத்தும் காலம் வரும்
    அப்போது விழித்திடு வீறுகொண்டு எழுந்திடு அதுவரை
    விழித்திடாதே இன்னும் கொஞ்சம் உறங்கிடு என் செல்லமே

  3. கண்ணுறங்கு…

    கண்ணுறங்கு கண்ணுறங்கு கண்ணுநீ யுறங்கு
    காணவேண்டாம் காசினியோர் செயலை யெல்லாம்,
    உண்மைதனை மறைத்துவைத்தே மண்ணில் மாந்தர்
    உருப்படாத தவறையெல்லாம் செய்கின் றாரே,
    பண்பதனை மறந்தேதான் பற்பல குற்றம்
    பயமிலாமல் செய்தேதான் அழிகின் றாரே,
    கண்ணதிலே நீயுமதைக் காண வேண்டாம்
    கண்ணுறங்கு கண்ணுறங்கு பிள்ளைநீ யுறங்கு…!

    செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *