-மேகலா இராமமூர்த்தி

திருமிகு. நித்தி ஆனந்த் எடுத்திருக்கும் இந்தப் புகைப்படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டி 191க்கு அளித்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

வண்ணக்குடைக்குள் வீற்றிருக்கும் இந்தச் சின்னமலரின் வனப்பு நம் உள்ளத்துக்கு அள்ளித்தருகின்றது உவப்பு!

இந்தப் பிஞ்சுத் தளிரைக் கொஞ்சுதமிழில் கவிபாடக் கவிஞர்களை அழைக்கின்றேன் கனிவோடு!

*****

”குழந்தை குடையெடுத்தால் மழையும் வெயிலும் விரும்பி வந்திடும் அதன் மழலைமொழி கேட்க!” என்று செப்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

ஒரே வழி…

மழைவெயி லில்லா வேளையிலும்
மழலை கையில் குடையெடுத்தால்,
மழையும் வெயிலும் வந்திடுமே
மழலைப் பேச்சை ரசித்திடுமே,
அழைத்திட ஆயிரம் வேள்வியிலும்
அன்புக் குழந்தையின் குரல்பெரிதே,
மழலை உள்ளம் நிலைத்திடட்டும்
மானிடம் செழிக்க இதுவழியே…!

*****

”குட்டிப் பாப்பா என்று என்னைக் குறைத்து மதிப்பிடாதீர்; ஆளுயரம் ஆனபின்னே நானும் தலைவியாவேன்; தரணிக்கு நன்மை செய்வேன்” என்று சூளுரைக்கும் சுட்டிக் குழந்தையைக் காண்கிறோம் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீயின் கவிதையில்.

பேசப் பிடிக்கும் பாப்பாவுக்கு!

வீட்டில் யாருமில்லை
விரும்பி நான் அமரவில்லை
அடுத்தடுத்து வேலைக்குப் போன
அம்மா அப்பா அறிவுரைப்படி
அழாமல் இருக்க அமர்ந்துள்ளேன்
எனதருமை நண்பன்
என் வண்ணக்குடையுடன்
விழி திறக்கும் முன்னே
விறுவிறுவென்று பல்துலக்கி
அதட்டலுடன் பாலூட்டி
அவசரமாய்க் குளிப்பாட்டி
அருமைப் பெற்றோர் சென்றவுடன்
காலை உணவு இட்லிகளை
காகத்துடன் பகிர்ந்ததால்
கடுங்கோபமுற்ற அண்ணன்
கைகட்டி அமரச் செய்தான் வெளியே
குட்டி பாப்பா என
குறைத்து மதிப்பிடாதீர்
அம்மா போல்
ஆளுயரம் ஆன பின்னே
தலைவியாக நானும்
தரணிக்கு நன்மை செய்வேன்
போய்வாருங்கள் இப்போ
பேசிக்கொண்டே இருப்பேன் நான்.

*****

குடைக்குள் மழையாய்வந்த மழலையின் விழிபேசும் மௌனமொழியும், வாய்பேசும் மழலைமொழியும் கேட்காமல் எந்திரமாய் ஓடும் மனிதர்களின் அறியாமைக்கு வருந்துகின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ். 

மழலை மொழி

குடைக்குள் மழையென வந்த
மழலை உன்னை கண்டு
மனம் இங்கே நனைந்ததடி
கைகட்டி அமர்ந்திங்கு
உனைக் கண்டவர் மனம்தனை
கட்டி போட்டாயே நீ
உன் விழி பேசும் மௌன மொழியும்
வாய் பேசும் மழலை மொழியும் கேட்காமல்
இயந்திரமாய் எதையோ தேடி
ஓடும் மனிதர்கள் இங்கே
சிரிக்க மறந்து
சிந்திக்கக் கூட மறந்து
மாயாலோகத்தில் எத்தனையோ இழந்து
கடமைக்காக வாழ்ந்திடும் மனிதர்கள் இங்கே
ஓடும் இவர்களை நிற்கச்சொல்லி
மருந்தாய் வந்ததே
உனதழகும் சிரிப்புமாய்க் கலந்து
வந்த உன் மழலை மொழி!

*****

”மழையில் நனையாமல் தன்னைக் காத்துக்கொள்ள மழலை பழகும் பயிற்சி இது” என்பது திரு. அ. இராஜகோபாலனின் கருத்து.

மழைக்கு மறைவாய்
குடைக்குள் அடங்கவும்,
வெள்ளத் தண்ணீர்

வீட்டிற்குள் வந்தால்
தளிர் பாதம் நனையாமல்
உயரக் கட்டிலில்
உட்காரவும்
குழந்தை இவள்
பழகும் பயிற்சி.

*****

”கந்தக பூமிதனைக் களிப்பூட்ட வந்த கற்பகமே! தாய் வரவுக்காய்க் காத்திருக்கும் கனிச்சாறே! கண்முன்னே வாராயோ…என் கலிதீர்க்க வாராயோ” என்று பாச மகளை நேசத்தோடு அழைக்கும் தாய் நமக்குக் காட்சிதருகின்றார் முனைவர் மு. புஷ்பரெஜினாவின் கவிதையில்.

மழைக்கால மேகமாய் மனதினிலே நனையவிட்டு,
அற்புத வானவில்லாய் என்னை வளைய வந்து,
பள்ளிக்கூட மேசையிலே பக்கம் பாராது முகந்திருப்பி
செல்லக் கோபத்துடன் செல்லச் சண்டைக்காய்
சிரிப்புடன் காத்திருக்கும் என் செல்லமே….
தாய் வரவுக்காய் காத்திருக்கும் கனிச்சாறே
கந்தக பூமிதனைக் களிப்பூட்ட வந்த கற்பகமே
கடைப்பார்வையால் கட்டிளங்காளையரைக்
கட்டி இழுத்து வரும் கண்ணே, காவியமே,,
விரித்த குடையடியில் விரிந்த விழியுடனே
விரக்தியுடன் நோக்குவதேன் விந்தைமகளே…
கனவாகிடாதே கண்முன்னே வாராயோ
கர்ப்பத்தில் வந்துதித்து கலிதீர்க்க வாராயோ

*****

பிள்ளைக் கனியமுதைக் சுந்தரத் தமிழ்க்கவியால் போற்றிப் புகழ்ந்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

வண்ணக்குடை விரித்துப் பயனென்ன வண்ணநிலாவே..?

செங்கோல் பிறழாது ஆண்ட மன்னர்களின்..
வெண்கொற்றக் குடை நிழலில் நாடு..
எங்கும் மும்மாரிப் பொழிந்து வளம்
பொங்க குடிமக்கள் மனம் எல்லாம்
தேன்மாரிப் பூமாரி பொழிந்தாற் போல்
இன்பமாய் வாழ்ந்த காலமென்று நீ
நினைத்தாயோ என் வண்ண நிலாவே..??

தன்னலமாய் வாழ்கின்ற ம(மா)க்கள் கூட்டத்தால்
இந்நாட்டில் தகுதியற்றோர் தலைமையில் ஆட்சி..
எந்நாளும் துன்பமே நிலை கொண்ட
அன்றாடங் காய்ச்சியாய் வாழ்கின்ற அவலம்..
வான் மழையும் பொய்த்துப் போய்..
காணுகின்ற இடமெங்கும் வறட்சி நிலவ
வண்ணக்குடை விரித்துப் பயனென்ன வண்ணநிலாவே..?

”செங்கோல் மன்னரின் வெண்கொற்றக் குடைநிழலில் மக்கள் மகிழ்ந்திருந்த காலம்போய், தகுதியற்றோரின் தன்னல ஆட்சியில் எந்நாளும் மக்களுக்குத் துன்பமே எனும் அவலநிலை உருவாகிவிட்ட இன்றைய சூழலில் வண்ணக்குடை விரித்துப் பயனென்ன வண்ணநிலவே?” என்று நாட்டுநிலையைக் குழந்தையிடம் சொல்வதுபோல் பாட்டியற்றியிருக்கும் திரு. ஆ. செந்தில்குமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 191-இன் முடிவுகள்

  1. சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்த நடுவர் அவர்கட்கு நன்றி. எனது மற்றுமோர் கவிதைக்கு பின்னூட்டம் எதுவும் சொல்லப்படவில்லையே? குறைகள் ஏதேனும் இருப்பின் சுட்டிக்காட்டவும். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *