அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல்
ஆலயம் பதினாயிரம் வைத்தல்
இன்னருங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்க ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்!

இது பாரதியார் வாசகம். இதனைக் கணந்தோறும் நிரூபனம் ஆக்கிக் கொண்டிருக்கும் ஓர் உன்னதமான அமைப்பு, சேவாலயா. தேச பக்தி நிறைந்த மாணவர்களை மகாத்மா காந்தியடிகள், சுவாமி விவேகானந்தர் மற்றும் மகாகவி பாரதியாரின் வாக்குப் படியும் வாழ்க்கைப் படியும் வளர்க்கும் அரும்பணியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறப்பாக நடத்தி வருகிறது சேவாலயா. கசுவாய் என்னும் கிராமத்தில் அமைந்திருக்கும் தங்களது கல்வி வளாகத்துக்கு உள்ளேயே இயற்கை விவசாயம், முதியோர் இல்லம், உயர்நிலைக் கல்வி வரையில் பள்ளிகள், தொழில்வழிக் கல்விச்சாலைகள், மருத்துவமனை, கோசாலை என்று எண்ணற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தி, அங்கிருக்கும் மக்களுக்குச் சிறந்த வாழ்வாதாரத்தை அமைத்து வருகிறார், இந்த நிறுவனத்தை முன்னின்று மிகுந்த அக்கறையோடும் திட்டங்களோடும் உழைத்து முன்னேற்றும் திரு முரளிதரன்அவர்கள்.

பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவிகளைக் கொண்டும், பல உற்சாகம் மிக்க ஆர்வலர் பட்டாளத்தைக் கொண்டும் சத்தமே போடாமல் ஒரு சத்தான உலகைப் படைக்கக் கடமையெனக் கருதி வித்திட்டுக் கொண்டிருக்கும் சேவாலயா நிறுவனம், சென்றவாரம் உண்மையிலேயே உலகம் பசுமையுடன் வாழ நாம் அனைவரும் செய்ய வேண்டிய கடமையான மரக்கன்று நடுதலைச் செய்திருக்கிறது. வருடத்திற்கு 30,000 மரக்கன்றுகள் நடுவதாகத் திட்டமிட்டுக் கிட்டத்தட்ட 1200 மரக்கன்றுகளுக்கு மேல் நட்டிருக்கின்றனர் அவரது பள்ளி மாணவர்கள். சென்ற வாரம் ஞாயிற்றுக் கிழமை இவர்களால் 300 மரக்கன்றுகள் நடப்பட்டன. அதன் புகைப்படங்கள் கீழே,

 

 

 

நமது நாடு, நமது மண் என்ற மரியாதை உணர்வைப் பிஞ்சிலேயே கருவாக்கும் திரு சேவாலயா முரளி அவர்களின் அரும்பணி மிகவும் பாராட்டுதலுக்கு உரியது. அவர்களது இந்த உன்னதமான இயற்கை வழிபாட்டை மெச்சி வல்லமை மின்னிதழின் சார்பாக வல்லமையாளர் என்னும் விருதினை அறிவித்து மகிழ்ச்சியடைகிறோம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.