-திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி

கயிலாயத்தில் சுந்தரருக்கு வரமளித்தவாறே தென் திசையில் தமிழ்நாட்டில் மையல் மானுடமாய் மயங்கும்போது தடுத்தாட் கொள்ள , சிவபெருமான் புத்தூரில் எழுந்தருளினார். அப்போது   ஒரு மூத்த அந்தணர் வடிவு  கொண்டு சுந்தரர் திருமணம் நடைபெறும் இடத்தில் தோன்றினார்!  அவ்வாறு தோன்றும்  பொழுது, மேலே மிகவுயர்ந்து , கீழே மிகவும் தாழ்ந்து  பிரமனும் திருமாலும் மிக முயன்றும் அடி  முடி  தேடவரிய,  மிகப்பெரிய அனல் உருவத்துடன் வந்த சிவபிரான்,எளிய அந்தக் கோலத்தில் தம்மை ஒடுக்கிக் கொண்டு தோன்றினார்.

மிகப்பெரிய படைப்புக் கடவுளும், காக்கும் கடவுளும் அறிந்து கொள்வதற் கரியவர்,  எளிய மானிடர்கள் அறிந்து கொள்வதற்கரிய முதிய அந்தணராகத் தோன்றினார்! அவரை ஊர்மக்கள் அறிந்து கொள்ளவில்லை என்பதைக் காட்டும் வகையில்,முன்பு வானையும் மண்ணையும் அளந்த அனற்பேருருவுடன்

தோன்றிய சிவபிரான் என்றுகூறிய சேக்கிழார், இக்கதையைப் படித்தறியும்  நமக்கு மட்டும்  புலப்படும் வகையில் முதிய அந்தணராய்த் தோன்றினார், என்று பாடுகிறார்!

இங்கே அந்தப் புத்தூர் மக்களுக்குப்புலப்படாத அந்தண வடித்துவத்துடன் சிவபிரானே  தோன்றினார் என்று கூறுவதில்தான் சேக்கிழாரின் திறமை புரிகிறது! நமக்குத் தெரிந்த சிவபெருமான், புத்தூர் மக்கள் மட்டுமே  புரிந்து கொள்ள இயலாத, முதிய  அந்தணராய்த் தோன்றினார், என்று சேக்கிழார் பாடுகிறார்! இதனை சிவக்கவிமணி,

‘’பெருந்தேவர்க்கும் அரியனாகிய பெருமான் அன்புசெய்வார்க்கு  எளியவன்  என்பதை ,

நல்லசிவ தன்மத்தால் நல்லசிவ யோகத்தால்

நல்லசிவ ஞானத்தால் நானழியவல்லதனால்

ஆரேனு மன்புசெயி னங்கே தலைப்படுங்காண்

ஆரேனுங் காணா வரன்

என்ற சாத்திரத்தால் அறியலாம். அகந்தை கொண்ட இருவர்க்கும் அரியவர், தாமே அன்புடைய ஒருவர்க்கு எளியவராயினமையும், அவர்கள் தேடவும் ஒளித்தவர் இவர் மறுப்பவும் விடாது வழக்கிட்டுப் பற்றியமையும் குறிப்பு.’’

என்று எழுதுகிறார்! ஆகவே தம்பால்  மிகவும் அன்புகொண்ட சுந்தரர் அறியாமல் வாதாடிய போதும் தம்மை அறிவித்துக்  கொள்ள வந்தார்! இதனை மேலும் சுவைபட , அவர் கொண்ட அந்தண  வடிவத்தை விளக்குகிறார்!

தம் நெற்றிக்கண்ணை மறைத்த துணிப்படலம் போலக் குழைத்த திருநீறணிந்த நெற்றியும், அதனருகே மிகவும் மூத்தமையால் தளர்ந்து நெற்றியில்  விழும் நரைத்த சடையும், காதில் உருத்திராட்சக் குழைகளும், மார்பில் பழைய மெலிந்த பூணூலும், அதனை மறைத்த வெண்மையான உத்தரீயமும், வெயிலை மறைப்பதற்கு உரிய குடையும், வயிற்றின் கீழே சரிந்த பழைய கோவணமும்,  அதனை மூடிய பழைய ஆடையும் உடையவராய் வந்தார். அவர் கரத்தில் வெண்மையான துணியைச் சுற்றி, தர்ப்பைக்கயிற்றால் கட்டிய சிறுமூங்கில் கழியை ஏந்திக்கொண்டு , தள்ளாடிய நடையுடன் வந்தார்!

அவ்வாறு வந்த மூத்த அந்தணரின் வடிவத்தை நோக்கி, ஓர் இளைஞனின் பேரழகு    காலப்போக்கில் அகவை முதிர்ந்தால் உண்டாகும் சுருக்கங்களுடன் தோன்றுவது போல இருக்கிறதே  என்று அவ்வூர் மக்கள் ஐயம் கொண்டார்கள்! மேலும் பேரழகே  மூப்படைந்தால் அவ்வடிவம்  இப்படித்தான் இருக்குமோ என்றும் ஐயம் கொண்டார்கள்! திருவிளையாடற்புராணத்தில் சிவபிரான் விருத்தராக வந்தார். அதனை,

“கரிந்தநீள் கயல்உன்னின் அரையும்முது  திரைகவுளும் கனைக்கும் நெஞ்சும்
சரிந்தகோ  வணஉடையும்  தலைப்பனிப்பும்  உத்தரியம்  தாங்கும்  தோளும்
புரிந்தநூல் கிடந்தலையும்  புண்ணியநீ றணிமார்பும்  பொலிய  நீழல்
விரிந்ததோர் தனிக்குடையும் தணடூன்றிக் கவிழ்ந்தசையும் மெய்யும் தாங்கி.

ஒருத்தராய் உண்டிபல  பகல்கழிந்த  பசியினர்போல்  உயங்கி  வாடி
விருத்தவே   தியராய்வந்து  அகம்புகுத”

என்று பாடுகிறது. அங்கு  மெலிந்து  தளர்ந்த  திருமேனி வருணிக்கப் பெற்றது.  பெரியபுராணத்திலும் முதியவராக வந்த திருக்கோலம் வருணிக்கப்   பெறுகிறது. ஆனால்  அந்த முதுமையிலும் ஓர் அழகு விளங்கியதைச்  சேக்கிழார் கூறுகிறார்!   வேதியராகிய இவருடைய தோற்றம், உண்மை வைதிக நெறியே உருவாகி   விளைந்த மூலப்பொருளோ, என்றும் ஐயுற்றார்கள். இந்த வடிவுடன், திருமண மண்டபத்துள்  தோன்றிய முதிய அந்தணரை அனைவரும் வியப்புடன் பார்த்தனர்! இதனைச் சேக்கிழார்,

 ‘’மொய்த்து வளர் பேரழகு மூத்தவடி வேயோ

 அத்தகைய மூப்பெனும் அதன் படிவ மேயோ

 மெய்த்த நெறி வைதிகம் விளைந்த முதலேயோ 

 இத்தகைய வேடம் என ஐயமுற எய்தி ‘’

என்று பாடினார். ஒருவருடைய உடலழகு மூப்படைய, மூப்படைய அழகை  இழப்பது உலகின் இயல்பு! ஆனால்,  இந்த வடிவம் பேரழகே மூத்த வடிவமோ? என்று மக்கள் நினைத்தனர்! முதுமையின் படிவமே  அழகுதானோ? என்றும் எண்ணினர். வேதம் ஓதுவதால் அக அழகு,  முக அழகாக ஒளிவீசும்! வேதம் ஓதியும், சமுதாயத் தொண்டாற்றியும், தமிழின் இனிமையை எங்கும்  கூறியும், இசைபாடியும் வயதில் மூத்த பெரியோர்களாகிய மகாபெரியவர், காந்தியடிகள், வாரியார் சுவாமிகள், எம்.எஸ்.சுப்புலட்சுமி , கஸ்தூரிபா  ஆகியோரின் அழகு, அவர்களின் முதுமையிலும்  பார்த்துக்கொண்டே இருக்கத்  தோன்றுகிறதல்லவா? இதுதான் மூப்பின் அழகு! வேதத்தின் சிறப்பை ஓதி ஓதி உணர்ந்தமையால் பூசலார் நாயனாரின் அழகு மிகுந்தது  என்பதைப் பூசலார் நாயனார் புராணத்தில்,

‘’வாய்மைப்   பொருள்பெறு    வேதநீதிக்   கலையுணர்   பொலிவின்    மிக்கார் ‘’

என்று பாடுகிறார்!  ஆகவே அகத்தின்  அழகுதான்  புறத்தின்  அழகாகப்  பொலியும்!  அத்தகையோர் அகவை ஏற ஏற, அழகும் ஏறும். ஆதலால் இப்பாடலில்  அழகின்  முதிர்வு, மூப்பு, கலையுணர்வு ஆகிய  முப்பரிமாணங்களும் கூறப்பெறுகின்றன. இங்கே இளமை அழகின்  கர்வத்தினை, முதிய,  அறிவுநிறைந்த , கலையுணர்வு மிக்க அழகு எளிதில்  வென்றடக்கிய  சிறப்பு,   நயம்படக் கூறப்பெறுகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *