-மீனாட்சி பாலகணேஷ்

 (7. அம்புலிப்பருவம்)

 “என் மகன் தன் முகத்து நெற்றிச் சுட்டி அசைய, கிண்கிணிச் சதங்கைகள் ஒலிக்கத் தவழ்ந்து போய்ப் புழுதியை அளைந்து விளையாடிக் கொண்டிருக்கிறான். உனக்குக் கண்கள் இருந்தால் இங்கு வந்து என்மகன் கோவிந்தன் செய்யும் இக்கூத்தினைக் கண்டு செல்வாயாக,” எனப் பெருமையும் பொய்யாக, வரவழைத்துக் கொண்ட சலிப்புமாகத் தாய் கூறுவதாகப் பாடியுள்ளார் பெரியாழ்வார்.

தன்முகத் துச்சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்துபோய்ப்
பொன்முகக் கிண்கிணி யார்ப்பப் புழுதி யளைகின்றான்
என்மகன் கோவிந்தன் கூத்தி னைஇள மாமதீ
நின்முகம் கண்ணுள வாகில் நீஇங்கே நோக்கிப்போ.

(பெரியாழ்வார் திருவாய்மொழி-5)

தனது கண்ணின் கருமணியாகிய சிறுகுழந்தையை உறங்கவைக்கப் பாடுவாள் தாய்; அவன் உணவுண்ணவும் அவனுடன் விளையாடவும் அவனுக்குத் தகுந்த நண்பர்களைத் தேடுவாள். வானில் உலவும் முழுமதி குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான ஒரு உறவு- சிறு குழந்தைகளால் அம்புலிமாமா என அவன் அறியப்படுபவன்.

குழந்தை கிருஷ்ணனும் அதற்கு விதிவிலக்கல்லவே? சந்திரனைத் தன் சிறு குட்டனுடன் விளையாட அழைக்கிறாள் அன்னை யசோதை (பெரியாழ்வார் கூற்றாக). மேலும் அவனுடைய குறும்புகளையெல்லாம் தன்னுடன் வந்து, சேர்ந்து ரசித்து மகிழவும் நிலாவைக் கூப்பிடுகிறாள்.

அம்புலிமாமாவும் சளைத்தவனில்லை. தனக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் அவனுக்கு மமதையை உண்டாக்கி விடுகிறது போலுள்ளது! விரைவில் வருவதில்லை. அவ்வண்ணமே அசையாது வானில் நிற்கிறான். அப்போது தாயுடன் சேடியரும் சேர்ந்து, சாம, தான, பேத, தண்ட உபாயங்களைப் பயன்படுத்தி சந்திரனைக் ‘குழந்தையுடன் விளையாடவா’வென அழைக்கின்றனர்.

பிற்காலத்தில் எழுந்த அனைத்துப் பிள்ளைத்தமிழ் நூல்களிலும் ஏழாம் பருவமாக வைக்கப்பட்டுள்ள அம்புலிப்பருவத்தில் இத்தகைய உபாயங்களால் அம்புலியை அழைப்பது அழகுறப் பாடப்பட்டுள்ளது. குழந்தை கிருஷ்ணனின் குறும்புகளை விவரிக்கும் பெரியாழ்வாரின் பல பாசுரங்கள் பிற்காலத்துப் பிள்ளைத்தமிழ் எனும் சிற்றிலக்கியவகைக்கு வித்திட்டவை.

சாம, தான, பேத, தண்ட உபாயங்களைப் பயன்படுத்திப் பாட வேண்டும் எனும் இலக்கண விதியின்படி அம்புலிப்பருவம் பாடுவதற்கு மிகவும் அரிதானது எனப்படும். ‘காசினியில் பிள்ளைக் கவிக்கு அம்புலி புலியாம்,’ எனும் சொற்றொடரே இதனாற்றான் எழுந்ததெனலாம்.

குழந்தையின் வளர்ச்சியில் இது ஒரு முக்கியமான பருவம். தன்னைச் சுற்றியுள்ள உலகம், அதில் நிகழ்பவை இவற்றினைக் கண்டும், தாய்தகப்பன், செவிலியர் இவர்கள் கூறுவதனைக் கேட்டும் தன் அறிவினை வளர்த்துக்கொண்டு, உலகைப் பற்றிய தனது கருத்துக்களை மெல்ல மெல்ல உருவாக்கிக் கொள்ளும் பருவத்தின் துவக்கம் இதுவாகும்.

பெரியாழ்வார் பாசுரங்களிலும் சாம, தான, பேத, தண்ட உபாயங்கள் தெளிவாகக் காணப்படுகின்றன. இவை இலக்கிய இன்பத்தை, அதன் சுவையை மேலும் இனிதாக்குகின்றன. அவற்றையும் மற்ற பிள்ளைத்தமிழ்ப் பாடல்களுடன் வரிசைக்கிரமமாகக் காணலாம்.

மேற்காணும் பாடலில் தாய் சமாதானமாக (சாம உபாயத்தால்) நிலாவை அழைப்பதைக் காண்கிறோம்.

சாம உபாயத்தில் குழந்தையையும் சந்திரனையும் ஒப்பிட்டுப் பல காரணங்களைக்கூறி, ‘இவனும் உனக்கு சமமானவன்; இணையான புகழ் கொண்டவன்,’ எனத் தாய் கூறுவதாகக் காணலாம்.

தன் குழந்தை உலகிலுள்ள அனைவரிலும் உயர்வானவன் என்பது தாய்மையின் பெருமிதம். ‘போனால் போகின்றது. எவ்வாறாயினும் இந்நிலா அவனுடன் விளையாட வந்தால் போதும்,’ எனும் எண்ணத்தில் இருவரையும் சமமாக ஒப்பிட்டுப் பேசுவதாக அமைந்த பாடல்கள் சுவையானவை. வரகவி மார்க்கசகாய தேவர் இயற்றிய திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழின் அம்புலிப் பருவத்திலிருந்து இவ்வண்ணம் சாம உபாயத்திலமைந்த ஒரு பாடல்.

‘நிலவே! ஆலகால விஷமாகிய நீலநிற நஞ்சினை உண்ட சிவபிரானின் சடையில் நீ உள்ளாய்! இம்முருகனும் நஞ்சையுண்ட பெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவன். நீ சக்கரவாள கிரியைச் சுற்றிவருவாய்; இவன் பூமியைச் சுற்றி வருவான்.

‘நீல ஊணினர்க ணாவை நீயிவனு
நீல ஊணினர்க ணானவன்
நேமி யங்குவடு சூழ்வை நீயிவனு
நேமியங்கு சூழ்பவன்’

‘நீ அரிய மான் வடிவினை உன் பக்கத்தில் கொண்டுள்ளாய்! (சிவனார் கையில் மானை ஏந்தியுள்ளார்). முருகனும் அரியதொரு மான்பெற்ற குறவள்ளிமானைத் தன் பக்கம் கொண்டுள்ளான். நீ இருளை ஒழிப்பாய்; இவனும் அடியார்களின் அறியாமை எனும் இருளை ஒழிப்பவன்.’

‘ஏல நீயரிய மானு ளாயிவனும்
என்று மோரரிய மானுளான்
இருளு மாசினையோ ழிப்பை நீயிவனும்
இருளு மாசினையொழிப்பவன்’

‘நீ ஓலமிடும் கடலின் அலையில் எழுகின்றனை (ஓலமாமலையில் எழுவை- ஓலமாம் அலையில் எழுவை); இவனும் ஒப்பற்ற கயிலைமலையின்கண் (ஓல மாமலையின்கண்) எழுந்தருளுபவன். இவ்வாறு உனக்கு நிகரான முருகன் உன்னை விளையாட வாவென்று அழைக்கிறான். வந்துவிடு,’ எனத் தாயும் செவிலியரும் அழைக்கின்றனர்.

‘ஓல மாமலையி லெழுவை நீயிவனும்
ஒப்பி லாமலையி லெழுபவன்
உனக்கி வாறுநிக ராத லால்இவன்
உனக்கு வாவியழை யாநின்றான்
ஆலு மாமயிலன் ஆடுதற் கமுத
அம்பு லீவருக வருகவே
அமரர் பரவுகர புரியன் உளமகிழ
அம்புலீ வருக வருகவே.’

குமரகுருபரனாரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழிலும் சாம உபாயத்தில் அழகிய கருத்துக்களைக் கூறிச் சேடியரும் செவிலியரும் அம்புலியை அழைப்பதனைக் காணலாம்: அவள் எக்காரணங்களால் சந்திரன்பால் அன்புகொண்டு அவனைத் தன்னுடன் விளையாட அழைக்கிறாள் எனக் கூறுகின்றனர்: “கற்கண்டு போலினிக்கும் மழலைமொழி பேசுபவள் எங்கள் மீனாட்சி அம்மை. அப்படிப்பட்ட இவ்வம்மைக்கு நீயும் ஒருகலாபேதம் என்று கலைகளும் மறைகளும் முறையிடுவதனால் உன்னை விளையாட அழைக்கிறாள்; (அம்மையும் சிவபிரானைப் போன்று எட்டுத் திருவுருவங்களை உடையவள்; அவற்றுள் ஒன்று சந்திரன் ஆவான்; ஆகவே அவன் கலாபேதம் எனப்படுவான்). அம்மை வேதங்களால் கலைநிதி எனவும் போற்றப்படுபவள்; ஆகவே கலைகளும் மறைகளும் கொண்ட சந்திரன் உன்னையும் தன்னைப் போன்றவன் எனக் கருதினாள்.

‘கண்டுபடு குதலைப் பசுங்கிளி இவட்கொரு
கலாபேதம் என்னநின்னைக்
கலைமறைகள் முறையிடுவ கண்டோ அலாதொண்
கலாநிதி எனத்தெரிந்தோ…’

“வண்டுகள் மொய்க்கும் மாலைகளை அணிந்த தந்தையான மலயத்துவச பாண்டியனின் குலமுதல்வன் சந்திரனாகிய நீ என்பதாலோ, வளரும் சடைமுடியில் எம்பிரான் குளிர்ச்சிபொருந்திய கண்ணியாக, மாலையாகத் தரித்திருப்பதனை எண்ணியோ உன்னை அழைத்தனள் இவள்.

‘வண்டுபடு தெரியல் திருத்தாதையார் மரபின்
வழிமுதல் எனக்குறித்தோ
வளர்சடை முடிக்கெந்தை தண்ணறும் கண்ணியா
வைத்தது கடைப்பிடித்தோ…’

“மேலும், ஆழமான திருப்பாற்கடலில் தோன்றிய திருமகளான தோழியுடன் நீயும் பிறந்ததனை அறிந்தோ, உன்னை இவள் விரைந்துவா எனக் கூவி அழைக்கும் பேறு பெற்றாய்!

“விரைந்து இவளுடன் விளையாட வருவாயாக,” எனக் கூறி அழைக்கும் அருமையான பாடல் இதுவாம்.

‘குண்டுபடு பாற்கடல் வரும்திருச் சேடியொடு
கூடப்பிறந்த தோர்ந்தோ
கோமாட்டி இவள்நின்னை வம்மெனக் கொம்மெனக்
கூவிடப் பெற்றாய் ………’

இவ்வாறெல்லாம் அம்புலியை ஒருவாறு சமாதானமாக, இதமாகக் கூறி அழைக்கும் சாம உபாயம் அன்னைமாருக்கே கைவந்த கலை போலும்! அதனைப் பாடுவது பிள்ளைத்தமிழ்ப் புலவர்களின் சிறப்பாகும்!

*****

ஒன்பது கோள்களுள் ஒன்றான சந்திரன் வானில் நிலைபெற்றவன்; கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவான் என அன்னையும் குழந்தையும் எண்ணிக்கொண்டால் அதற்கு அவனா ஒப்புக்கொண்டான்? ஆயினும் அன்னையும் செவிலியரும் சலிக்காமல் அடுத்த உபாயமான தானம் என்பதனைப் பயன்படுத்தி அவனை வருமாறு அழைக்கின்றனர்.

“ஒளிபொருந்திய சந்திரனே! என் மகன் எவ்வளவு பெருமை பெற்றவன் என உனக்குத் தெரியுமா?  உயர்வு தாழ்வு எனப்பார்க்காமல் எல்லாருடனும் கூடியிருந்து மகிழ்கின்றவன்; திருமகளைத் தனது மார்பில் கொண்டவன். தனது அழகான வாயில் ஊறும் அமுதத்துடன் கூடிய மழலைச் சொல்லால் உன்னைக் கூவிக்கூவி அழைக்கிறான் பார்! இவ்வாறு  இக்குட்டன் கூப்பிடும்போது ஓடோடி வர வேண்டாமோ? உனக்கென்ன காது கேட்கவில்லையோ? நீ செவிடோ?” என்கிறாள் தாய்.

‘இவன் தகுதி என்ன? உனது தகுதி என்ன? தராதரம் பார்க்காமல் குழந்தை உன்னை விளையாட அழைத்தால் நீ செவிடனாக நிற்கிறாயே,’ என ஏளனம் செய்கிறாள்.

அழகிய வாயில் அமுதவூறல் தெளிவுற
மழலை முற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூவுகின்றான்
குழகன் சிரீதரன் கூவக் கூவநீ போதியேல்
புழையில வாகாதே நின்செவி புகர்மாமதீ!

(பெரியாழ்வர் திருமொழி-5)

குழந்தை நிலவுடன் விளையாட ஆசைப்படுகிறான்; அதுவோ வருவதாக இல்லை! தாயின் உள்ளம் குழந்தைக்கு ஏதாவது சமாதானமாகக் கூறி அவனை அமைதிப்படுத்த வேண்டும் என எண்ணுவதனால், சந்திரனை இகழ்ந்து கூறுவதன்மூலம் தனது ஆற்றாமையை ஒருவாறு போக்கிக் கொள்ள விழைகிறது. சந்திரனால் உடனே இறங்கியோடி வரவியலாது என்று தாய்க்குத் தெரியாதா?

குழந்தையின் குழந்தை உள்ளத்திற்கேற்ப அவள் எண்ணங்களையும், விரிந்தோடும் உளவியல் சிந்தனைகளையும் அழகுறச் சித்தரிப்பவை பிள்ளைத்தமிழின் அம்புலிப்பருவப் பாடல்கள். குமரகுருபரனார் இயற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழிலிருந்து ஒரு பாடலைக் காண்போமே!

சந்திரனிடம் அன்னை கூறுகிறாள்: “நிலவே! நீ வானமண்டலத்திலேயே இருப்பாயாகின், உனது கொடிய பகைவர்களான பாம்புகள் (இராகு, கேது) உன்னை விழுங்கி விக்கவும், பின் கக்கவும் கூடித் துயரடைவாய். (கிரகண சமயத்தில் சந்திரன் மறைந்து பின் வெளிப்படுவதனை விழுங்கப்பட்டுப் பின்பு உமிழப்பெற்று எனக்கூறினார் புலவர்)

“வெயிலைப் பரப்பும் ஒளிமிகுந்த சூரியமண்டலத்தில் புகுந்து இருப்பையாகின் உன்னுடைய சிறந்த ஒளி மழுங்கப்பெற்று வருந்துவாய்.”

விண்டலம் பொலியப் பொலிந்திடுதி யேலுனது
வெம்பணிப் பகைவிழுங்கி
விக்கிடக் கக்கிடத்தொக்கிடர்ப் படுதிவெயில்
விரியும் சுடர்ப்பரிதியின்
மண்டலம்புக்கனை இருத்தியெனின் ஒள்ளொளி
மழுங்கிட அழுங்கிடுதி…

“ஈசனின் பொன்போன்ற சடையில் வைத்துக்கொள்ளப்படுவாயானால், அங்குள்ளபாம்பு உன்னைச் சுற்றிக்கொள்ளுமோ எனும் அச்சம் கொண்டு உறங்காமல் விழித்திருப்பாய். மேலும், வாசமிகுந்தகூந்தலை உடைய இப்பெண் மீனாட்சியின் சிறிய திருவடிகளில் அவளுடைய ஊடலைத் தணிவிக்கப் பெருமான் மணியும்போது, உன் குடல் கலங்குமாறு மிதிபடுவாய் அல்லவோ?

………………………………பொன்
வளர்சடைக் காட்டெந்தைவைத்திடப் பெறுதியேல்
மாசுணம் சுற்றஅச்சம்
கொண்டுகண் துஞ்சா திருப்பதும்மருப்பொங்கு
கோதையிவள் சீறடிகள்நின்
குடர்குழம் பிடவே குமைப்பதும்பெறுதி

“ஆகவே அனைத்து இடங்களும் உனக்குப் பாதுகாப்பற்றவை! ஆகவே எமது இளவரசியிடம் வந்து அடைக்கலம் புகுவாய். அவளை அடைந்தால் அண்டங்களையும் எல்லா உலகங்களையும் பெறுவாய்,” எனவெல்லாம் அச்சமூட்டி, ஆசை காட்டுகின்றனர்!

…………………………………….எம்
கோமாட்டி பாலடைந்தால்
அண்டபகி ரண்டமும் அகண்டமும்பெறுதியால்
அம்புலீ ஆடவாவே.

சின்னஞ்சிறு குழந்தை நிலவினைத் தனது விளையாட்டுத்தோழனாகவே எண்ணிக் கொள்கின்றது. அவன் கீழிறங்கி வாராதபோது வருந்தி அழுகையும் அடமுமாகச் சினம் கொள்கின்றது. உணவுண்ணவும் மறுக்கின்றது.

பணிப்பெண்கள் பல உபாயங்களை மாற்றிமாற்றிப் பயன்படுத்தி, அம்புலியைத் தங்கள் சிறுமியுடன் விளையாட வருமாறு அழைக்கின்றனர். அம்புலி அவ்வளவு எளிதாக வந்துவிடுவானா என்ன? அவனும் செருக்குற்று நிற்கிறான். ‘இவர்களழைத்து இந்தச்சிறுமியுடன் நான் விளையாடப்போக வேண்டுமோ? நான் உலகிற்கே தலைவனான சிவபிரானின் சடையில் குடியிருப்பவன், இப்பெண்கள் என்னை மிரட்டி விரட்டினால் விரட்டட்டுமே, பார்த்து விடலாம்,’ என மெத்தனமாக இருக்கிறான்!

உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழிலிருந்து நாம் காணப்போகும் தான உபாயத்திலமைந்தவொரு பாடலென்று, அழகானதொரு தொன்மத்தை உள்ளடக்கி, நகைச்சுவை பொங்க, தோழியர் சந்திரனை அச்சுறுத்தியும் ஏளனம் செய்தும் நகைப்பதனை விவரிக்கின்றது.

நீ கீழிறங்கி இச்சிறு பெண்ணுடன் விளையாட வந்தால் என்னென்ன பெறலாம் எனத் தான உபாயத்தில் -அழகான சொல்விளையாட்டாகப் பல கதைகளைப் பகிர்ந்துகொண்டு, அம்புலியைக் கூப்பிடுகிறாள் பாடலில் வல்ல செவிலித்தாய் ஒருத்தி! அவற்றைக் கொஞ்சம் கேட்கலாமா?

புலி எனும் ஒரு சொல்லைப் பல பொருட்களில் திரும்பத் திரும்பப் பயன்படுத்தி அமைந்ததும் மிகுந்த சுவைகொண்டதுமான இப்பாடல், சோணாசல பாரதியார் என்பவரால் திருவருணை உண்ணாமுலையம்மை மீது இயற்றப்பட்ட பிள்ளைத்தமிழ் நூலில் காண்பதாகும்.

“புலிக்கால்முனிவரான வியாக்கிரபாதர், பதஞ்சலி எனும் முனிபுங்கவர் ஆகிய அருந்தவமுனிவர்கள் போற்றும் சிறந்த ஊர் திருப்புலிநகர். அவ்வூரின்கண் வாழ்ந்தவரும் சிவ அபராதம் செய்தவர்களை வாளால் கண்டனம் செய்தவருமான கோட்புலிநாயனார் என்னும் பெருமைமிக்க ஒரு அடியாருக்கும், அவ்வூரிலேயே வாழ்ந்த வள்ளல்தன்மை மிகுந்த மற்றொரு அடியாரான சிறப்புலி நாயனாருக்கும் பேரருள் செய்தவன் நமது சிவபெருமான்.

“அந்தப் பிரான் உமையம்மை தன்னிடம் ஊடல்கொண்டபோது என்னசெய்தார் தெரியுமா? அவளது ஊடலைத் தீர்க்கும்வகையில் அவளைத் தன்னுடன்சேர்த்து இறுகத்தழுவிக்கொண்டு (புல்லிக்கொண்டு) அவளை நகைபுரியச் செய்யும்வண்ணம் வினோதமான பல செய்திகளையும், தான் செய்த நகைப்புக்குரிய செயல்களையும்  கூறினார்: “தேவி! யாம் ஒரு புலியின் தோலையுரித்து அதனை எம் இடையில் அணிந்துள்ளதைப்பாராய்! இது தாருகாவனத்து முனிவர்கள் மிகுந்த கருவம்கொண்டு அபிசார வேள்வி செய்து வரவழைத்து என்மீது ஏவிய கொடியபுலியின் தோல்,” என்று அந்தக் கதையினை நகைத்தவண்ணம் உமையாளுக்குக் கூறினான்.

“அதுகேட்ட நமது உமையவளும், “பெருமைவாய்ந்த என் நாதன் ஒரு வெம்புலியைத் தோல்உரித்தனன்; நாமும் ஒரு வண்புலித்தோலை நமது நாதனுக்கு இணையாக உரிக்க வேண்டும்,” என்று விரும்பினாள்; ஆகவே அவள் தன்னுடன் விளையாடவா எனக் காரணம்காட்டி என்னை அழைக்கிறாள் என்று அச்சம்கொண்டு இந்த அம்புலி சிவபிரானின் தலையை இறுகப்பற்றிக்கொண்டு (கம்புல்லி) வராமல் இருக்கிறது போலும்,” என ஒருபெண் கூறவும்,

“அம்புலியே! கேட்டனையோ இந்தக்கதையை? காலம் தாழ்த்தாது வந்தாயானால், இந்தக் கவுரியின் அருளைப்பெற்று உய்யலாம் தெரியுமா?” என்கிறாள் ஒருத்தி!

குறும்பு செய்பவர்களை, “உன் தோலை உரித்து விடுவேன்,” எனப் பெரியவர்கள் சினந்துகொள்வது வழக்கல்லவா?

“ஒருவேளை அவளுடைய மாற்றாளாகிய கங்கையோடு நட்புப்பூண்டவன் இந்த அம்புலியாகிய திங்கள்புலி எனச்சினம் கொள்வாள் உமையம்மை எனும் அச்சமோ என்னவோ!” எனச் சிலபெண்கள் குறும்புபேசிக் களிக்கின்றனர்.

“அதனாலென்ன? ‘இவன் அம்புலி! உன்னோடு விளையாட வந்தனன் தாயே! இவன்மீது சினம்கொள்ளாதே!’ எனக்கூறித் தப்பவைத்துவிடுவோம்! ‘அச்சங்கொள்ளாதே நிலவே! அண்ணாமலையானுக்கு இனியவளான இந்த உண்ணாமுலையுடன் விளையாட வந்துவிடு!” எனக்கூறி அம்புலியை அழைக்கிறாள் செவிலித்தாய்!

செம்புலி பதஞ்சலி யெனுந்தவர்கள் போற்றத்
திருப்புலி நகர்க் கண்டனஞ்
செய்தருளி வாட்புலி யெனும் பெரிய கோட்புலி
சிறப்புலிக் கருளுநாதன்
வெம்புலி யுரித்தன னெனப்புலவி தீரும்வண
மெய்ப்புலி நகைத்துரைக்கின்
வெற்றிகொள நாமுமொரு வண்புலி யுரித்துமென
வேண்டிவரு கென்றெனளெனக்
கம்புலி யிருத்தியோ தாழாது வருதியேற்
கவுரியருள் பெற்றுய்யலாம்
கங்கை யொடு பழகுதிங் கட்புலியே னாவெனைக்
காயினென் செய்வதென்னி
லம்புலி யெனச் சொலித் தப்புவிப் பேமுண்மை
யம்புலீ யாடவாவே
அண்ணா மலைக்கினிய யுண்ணா முலைக்கனியோ
டம்புலீ யாடவாவே.

(மெய்ப்புலி- உடலினைப்புல்லி, தழுவி; கம்புலி- சிவபிரான் தலையை இறுகப்பற்றி)

இப்பாடலிலும் இப்பிள்ளைத்தமிழ் நூலில் காணும் இன்னும் பலபாடல்களிலும்  ‘சொல்பின்வருநிலையணி’ மிக அழகாகக் கையாளப்பட்டுள்ளது. இப்பாடலில் புலி எனும் சொல் பலபொருள்களைக்கொண்டு (புலி- வேங்கை; வாட்புலி, கோட்புலி, வண்புலி, மெய்ப்புலி, புல்லி (தழுவி), திங்கட்புலி, அம்புலி) அமைந்து இனிய சந்தநயத்துடன் பயில்வோருக்குக் கவிதையின்பம் தருகின்றது.

தாருகாவனத்து முனிவர்கள் செய்த சிறுமைச்செயல் பற்றிய தொன்மமும் நகைச்சுவையாக விளக்கப்பட்டுள்ளது.

தாய்மார்கள், சேடியர்களின் கற்பனைகள் விரிந்தோட, தொன்மங்களும், சந்திரன் தொடர்பான குறும்புக் கதைகளும் சேர்த்துப் புனையப்பெற்ற இதுபோன்ற பல பாடல்கள் பிள்ளைத்தமிழின் நயத்தை மிகைப்படுத்துகின்றன. தானமும் பேதமுமான உபாயங்கள் இணைந்ததொரு பாடலை அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழில் கண்டு களிக்கலாம்.

தனது பிறந்ததினமான ஆவணித்திங்கள் சதுர்த்தியினில் விநாயகப்பெருமான் உலகுளோர் பூசனை செய்து படைத்த கனிகள், கடலை, பால், பொரி, சேர்ந்த பணியாரங்களை உண்டு, அதனால் பெருத்த வயிறுடன் தந்தையைக் காணச் சென்றுகொண்டிருக்கிறார். உண்டமயக்கத்தில் அவர் ஆடியசைந்து  நடப்பதனைக் கண்டு வானிலுள்ள சந்திரன் நகைக்கிறான். சினமடைந்த விநாயகர் அவனை ஒளியிழக்குமாறு சாபம் கொடுக்கிறார். பின் தவறுக்கு மன்னிப்புக் கோரியதனால் மாதத்திலொரு நாள் மட்டும் முழுமையான ஒளிபெற சாபவிமோசனம் அருளுகிறார்.

‘ஒளியூறும் ஆவணித் திங்கள் சதுர்த்தியினில்
உலகுளோர் புரியும்விரதத்து
உறுகனிகள் கடலைபய னோடியல் பொரியமுதுண்டு (பயன்- பால்)
உரத்துப் பெருத்தஉதரம்
களியூறு முக்கட் பிரானைவந் திக்குமக்
காலையில் கால்மேலுறக்
கண்டுநீ நகைபுரிந் துண்ட சாபமும்…’

தட்சயாகத்தில் இளையவீரன் என அறியப்படும் வீரபத்திரர் எல்லாரையும் அழிக்கும்போது சந்திரனையும் தன் காலால் தேய்த்து அழித்தார்.  பின்பு அனுக்கிரகம் பெற்று உயிர்பெற்றான் சந்திரன். அவ்வாறு காலால் தேய்த்து நசுக்கப்பட்டபோது ஒருதுளி அமுதம் துளித்ததாம்.

அதனால், “விநாயகனை ஏற்று இரந்து வேண்டிக் கொண்டாயானால் சுகவாழ்வு பெறலாம். பயமின்றி வாழலாம். ஆகவே அரும்பாத்தை வேதகணபதியுடன் ஆடவா அம்புலியே!” என அழைக்கின்றனராம்.

……………………………………. உன்
கருத்தறியு மிளையவீரன்
துளியூறும் அமுதம் துளிப்பஇரு கால்கொண்டு
துவையவிட் டதுமுனக்கே (உனக்கே தெரியும்)
தோற்றுமத னாலிவனை ஏற்றிரவு கோடியேல்
சுகமலால் பயமில்லையென்று
அளியூறு வருமரும் பாத்தைபுரி மழகளிறோடு
அம்புலீ ஆடவாவே
ஆதிகண பதியாகும் வேதகண பதியினுடன்
அம்புலீ ஆடவாவே.

இவ்வாறு நயங்களும் தொன்மங்களும் விளங்கும் பாடல்கள் எண்ணற்றவை.

            (தொடரும்)

 

*****

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *