சேக்கிழார் பா நயம் – 17
-திருச்சி புலவர் இரா இராமமூர்த்தி
=======================
திருவாரூரில் தேவஆஸ்ரய மண்டபம் எனப்படும் தேவாசிரிய மண்டபம் உள்ளது.இறைவனை ஆஸ்ரயித்த அடியார்கள் நிறைந்த மண்டபம் ஒன்றுண்டு!அந்த மண்டபத்து அடியார்களின் அருளைப் பெற, சுந்தரர் விரும்பினார்!அதன் திருவாயிலில் தேவர்களும் முனிவர்களும் அடியார்களை வழிபடக் காத்திருப்பார்கள்!அங்கேதான் சுந்தரர் திருத்தொண்டத்தொகை என்ற,பெரியபுராணத்தின் வழிநூலைப் பாடினார்! அங்குள்ள அடியார்களின் சிறப்பினை சேக்கிழார் ஆறு திருப்பாடல்களால் விளக்குகிறார்.
இறைவனே விரும்பி யழைத்துப் பெருமைப் படுத்திய சிறப்பும்,சரியை நிலையில் இறைவனுக்குத் திருத்தொண்டு செய்யும் சிறப்பும் பெற்றவர். தம் திருநீறு பூசியே திருமேனியின் ஒளியால் எண்டிசையையும் விளங்கச் செய்பவர்! ஐம்பூதங்களும் தம் நிலையில் கலங்கினாலும், இறைவன் மலர்ப்பாதத்தை மறவாதவர் உலகினர் பொருட் செல்வத்தை மிகமுயன்று அடைவார்கள் அச்செல்வம் நன்மைக்கும் தீமைக்கும் பயன்படும்! செல்வங்களைத் திருவள்ளுவர் பல வகைகளாகப்பிரிப்பார். கல்விச்செல்வம், கேள்விச்செல்வம், ஊக்கச் செல்வம், அருட்செல்வம், பொருட்செல்வம் என்பன அவை. இவற்றுள் கேடில் விழுச்செல்வம் கல்வி, செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம், அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் என்ற தொடர்களால் வள்ளுவர் கூறுகிறார்! சேக்கிழார் சிவனடியார்கள் பெற்ற அருட்செல்வத்தை “கேடும் ஆக்கமும் கெட்ட திரு” என்கிறார். உலகத்தின் பொருட் செல்வம் விரைவில் குறைவு படும், அழியும்; அதுவே மிகுதிப்படும்! ஆனால் குறைவு,மிகுதி ஆகிய இரண்டையும் அடையாமல் ஒரே சீராக நிலைத்து நிற்பது அருட்செல்வம்மட்டுமே!இந்தஅருட்செல்வம், பொருட்செல்வம் பெற்றவருக்கு உரிய செருக்கு,பெறாதவருக்குரிய அவலம் ஆகிய இரண்டும் இல்லாதது! இந்த அருட்செல்வத்திற்கு வளர்ச்சியும் இல்லை கெடும் இல்லை! அதனால் அச்செல்வத்தைப் பெற்ற அடியாரைக்‘கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்’ என்பார்! ஈஸ்வரனின் அருளாகிய செல்வமே ஐசுவரியம் என்று கூறப்பெறும்! இதனைத் திருஞானசம்பந்தர்,
“செல்வ நெடுமாடம் சென்று சேணோக்கிச்
செல்வ மதி தோயச் செல்வம் வளர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பலம் மேய
செல்வன் கழலேத்தும் செல்வம், செல்வமே!”
என்று பாடுகிறார்! இச்செல்வத்தைப் பெற்ற அடியார்கள் ஓடேந்திப் பிச்சை பெற்று வாழும் வறிய நிலையையும்,பொன்னை மிகுதியாகப் பெற்ற செல்வநிலையையும் ஒரே நிலையில் வைத்து எண்ணுவர்!அவர்கள் கண்முன்னே உடைந்த பானை ஓடும், பொன் முதலான மணிகளும் தென்பட்டாலும் அவற்றை ஒரே தன்மையில் நோக்குவர்! இதனைச் சேக்கிழார்,”ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவர்” என்று போற்றுகிறார்! அப்பரடிகள் அருள் வரலாற்றில், அவர் திருப்புகலூர் திருமுற்றத்தில் உழவாரப் பணி புரிந்த போது, நிலத்தில் கிடந்த பொன்னையும் மணிகளையும் ஒன்றாகவே மதித்து நீக்கிக் குளத்தில் எறிந்தார் என்று கூறுவர்! அத்தகைய அடியார்கள் சிவபெருமான் திருவருளைப் பெற்று, இறைவனுடன் ஒன்றி நின்று கும்பிட்டு வாழும் பிறப்பினை விரும்பிப் பிறவாநிலையாகிய வீடுபேறு கிட்டினாலும் அதனைச் சற்றும் விரும்பாத உள்ளச் செருக்கு உடையவராவார்!இங்கே சுந்தரமூர்த்தி சுவாமிகள் கைலையில் இறைவனைக் கூடிவணங்கி வாழ்ந்தபின், திளைத்த திருநடனத்தை “வணங்கி மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பம்” என்று பாடியது நினைந்து மகிழத்த தக்கது. இனி சேக்கிழார் பெருமானின் முழுப்பாடலையும் பயில்வோம்!
“கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்!
சோழ நாட்டையும் அதன் பின்னர் அதனுடைய திருவாரூர்த் திருநகரத்தையும் அதன் பின்னர் அந்நகரத்திலுள்ள பூங்கோயிலையும் முறையே காட்டி நம்மைத் தரிசிக்கச் – செய்தார் ஆசிரியர். பின்னர்த் தேவாசிரியனையும் காட்டி அதற்கு அப்பெயர் போந்த காரணத்தை அறிவிக்கும் வகையாலே அந்த முறையிலே திருவாயிலில் காத்திருக்கும் தேவர்களைக் காட்டி உள்ளே அழைத்துச் சென்று அங்கு எழுந்தருளி யிருக்கும் அடியார்களுடைய தன்மையையும் ஆசிரியர் அறிவித்து அவர்களை நாம் வணங்கும்படி செய்கின்ற முறையையும் காண்க. மேலும் இந்திரன் முதலியோரது பதவிகளை எல்லாம் வெறுத்து ஒதுக்கியவர்கள் இங்கு உள்ளே. கூடியிருக்கும் அடியார்கள் என்று அவர்களுடைய இயல்பினை முகவுரை ஆக அறிவித்தபடியுமாம். ‘வீடும் வேண்டா விறலின் விளங்கினார்’ என்று பின்னர் முடித்துக் காட்டியதையுங் காண்க. ‘’ என்று சிவக்கவிமணி அவர்கள் எழுதியுள்ளார். மேலும் கழுத்தில் உத்திராக்க மணியணிந்து , கந்தையாடை புனைந்து ஈசன் பணியாகிய திருத்தொண்டு புரிவோரின் வீரம் பெரிது! என்றும், சேக்கிழார் கூறுகிறார்!