-முனைவர் கீதா ரமணன்

மனிதன் காட்டில் மட்டும் நாகரிகமற்று வாழ்ந்தபோதும் சரி, காடு கடந்து நாடு கண்டு, உலகளந்ததோடு நிற்காமல் விண்மீன் கூட்டங்களின் தன்மைகளைப் பகுக்கும்போதும் சரி, ஓர் ஐயப்பாடு மட்டும் அவனை விடுவதாக இல்லை! “கடவுள் உண்டா! இல்லையா!” உலகத்தோர் அனைவரும் ஒருசேர ஒப்பும்படி இதற்கான எந்த விளக்கத்தையும் எவராலும் இன்றுவரை கொடுக்கவியலவில்லை! கருத்துவேறுபாடுகள் நிறைந்த மனிதகுல அறிவு இதில் என்றும் ஒன்றுபட மறுத்தே தீரும். அனைவரும் ஓரணியில் நின்று உண்டென்றோ, இல்லையென்றோ தீர்மானம் காணப்போவதில்லை! இதில் இரண்டுங்கெட்ட நிலையிலாவது பெரும்பான்மையர் இருப்பரேயொழிய ஓரணியில் திரளப்போவதில்லை! வடிவம் புலன்களால் உணரப்படுவது, ஆனால் உணர்வுக்கு வடிவங்களில்லை! கடவுளை உணர்ந்ததாகவோ உணராததாகவோ கூறுவதோடு அனைவரும் நின்றுவிடுகிறோம்! இதனால் உண்டென்பதும் இல்லையென்பதும் கருத்துப்போர்களுக்கு மட்டுமே வழிவகுத்து, முடிவற்ற போராட்ட நிலையே தொடர்ந்து வரும். ஒருதலையாக நின்று உணர்ந்ததைக் கூறாமல், பொதுவாக நின்று நாம் காண்பதைக் கூறத் தலைப்படுவோம். உண்டென்பார், இல்லையென்பார் இருவரில் எவரையும் பெருமை அல்லது சிறுமை செய்யும் நோக்கம் நமக்கு எள்ளளவும் வேண்டாம்! எவர் நம்பிக்கையையும் நாம் ஏற்றதாகக் கொள்ளாமல் பொதுவாகச் சிந்திப்போமா!

எத்தனை விதமான கோட்பாடுகள், எத்தனையெத்தனை கற்பனைகள், எத்தனை சமயங்கள், அவற்றுள்ளும் எத்தனை உட்பிரிவுகள்! மாமனிதர்கனாக உலகெங்கும் பல்வேறு காலங்களில் தோன்றிய பலரும் பல அறிவுரைகளால் மனிதனை ஒன்றுபடுத்த விழைந்தும் ஏதும் பயனுண்டோ! அவர்கள் பெயராலேயே மனிதர்கள் பிரிவுகள், பிளவுகளை ஏற்படுத்தி அடித்துக் கொண்டு செத்தனர் முன்பு! அறிவியலால் வளர்ந்த நிலையில் தற்போது பேரழிவுக் கருவிகளால் தாக்கிக் கொள்கின்றனர்! கடவுள் எதற்கும் துணை போனதாகவோ அல்லது தடுக்க முயன்றதாகவோ எவராலும் உறுதியாகக் கூறமுடியவில்லை! பொதுவான கெடுதிகள் எத்தனையோ நடக்கின்றன. இயற்கைச்சீற்ற அழிவுகளை விட்டு விடுவோம், ஆறறிவுள்ளதாகக் கூறிக் கொள்ளும் மனிதனால் அவனுக்கும், பிறவுயிர்களுக்கும், பரந்த இயற்கைக்கும் நேரிடும் அழிவுகள் உலகெங்கும் அதிகரித்து வருகின்றன! இவை தடுக்கப்படவோ குறைக்கப்படவோ இளகிய மனத்தாலும் மனிதநேயத்தாலும் கனிந்தோர் ஏங்குகின்றனர்!

நமக்குரிய தனிக் கொள்கை எதுவாகவும் இருக்கட்டும், பொதுவான எதிர்பார்ப்புக் கொள்கை,”கடவுள் மிக நல்லவராகவே இருப்பார், நல்லவை மற்றும் நல்லவரை வாழவைப்பார், தீயவை மற்றும் தீயவரை அழிப்பார்” என்பதுதானே! இது நடந்து நாம் பார்த்துள்ளோமா! கதைகள் வேண்டாம், வரலாற்றுப் பதிவுகள் வேண்டாம், எங்கோ ஒன்றென்று கேள்விப்பட்டவை வேண்டாம்! நடைமுறையில் நம் வாழ்வில் நம் கண்ணெதிரே நடந்தவற்றை மட்டும் ஆய்வு செய்வோம்! நான் பார்த்தவரை நல்லவர்கள் உயர்ந்தது நூற்றில் ஒன்றாகவும், தீயவர் அல்லது தகாதவர் உயர்ந்தது நுற்றில் தொண்ணூற்றொன்பதாகவுமே இருந்துள்ளது! என்னிடம் உண்மையுடனிருக்கும் உறவினரும் நண்பர் பலரும் இவ்வாறே கூறுகின்றனர்! “தீயவர்கள் தண்டிக்கப் பட்டாலும், பல நல்லவர்களை அழித்த பின்பே தண்டிக்கப்பட்டனர்! பயனென்ன!” என்றார் அறிவும் அகவையும் முதிர்ந்த பெரியவரொருவர். அவர் கடவுள் நம்பிக்கையைக் கடுகளவும் விடாதவர்! விதி, ஊழ், வினை, பிறவிப்பயன் போன்றவற்றை நன்மை தீமைகளுக்கு அளவுகோல்களாகப் பயன் படுத்தி நம்மை நாமே ஆற்றுப்படுத்துகிறோம். அவையனைத்தும் உறுதிப் பாடான தீர்வுகளல்ல! கண்ணுக்கும் கருத்துக்கும் புலனாகாமல், உணர்வுக்கு மட்டுமே புலனாகக்கூடிய கடவுளின் செயல்கள் சரியாகத்தானிருக்கின்றன என்று நம்புவதற்கு விதி, ஊழ், வினை, பிறவிப்பயன் போன்ற மேலும் கண்ணுக்கும் கருத்துக்கும் புலனாகாத பலவற்றை நாம் துணையாக அழைப்பதாகவே தோன்றுகிறது. கடவுளை நம்பாத நிலையில் நாமிருக்கையில், நமக்கென்று துன்பம் வந்தால் “ஓருவேளை நாம் நம்பிக்கை இழந்ததால் இதெல்லாம் நடக்கிறதோ!” என்று மயங்குகிறோம்! இந்த மயக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு கடவுளின் பெயராலும் கண்ணுக்குப் புலனாகாத பிற கோட்பாடுகளைக் கொண்டும் உலகெங்கும் பலர் நம்பிக்கையாளர்களை எத்திக் கொழுக்கின்றனர்.

இதைவட விந்தையாக உண்டு, இல்லை என்ற உறுதியான நிலைகள் மட்டுமல்லாது இரண்டுங்கெட்டான் நிலையிலும் நம்மில் பலர் தவிக்கிறோம்! இந்நிலை மிகவும் இழிவானதாகிறது! இந்நிலையில் நமதறிவை நாமே குறைத்து மதிப்பிட வேண்டியதாகிறது! சமயங்களை மாற்றிப் பார்ப்பதும், கடவுளைப் பல வடிவங்களில் மாற்றிப் பார்ப்பதும், வழிபாட்டு முறைகள், வழிபடுமிடங்களை மாற்றிக்கொள்வதும் கொடுமை! நம் வழிபாட்டால் நமக்கு நல்லது மட்டுமே நடந்து, நமக்குப்பிடிக்காதவர்களுக்கெல்லாம் தீயது மட்டுமே நடக்கவேண்டுமென நினைத்து வழிபட்டுக் கடவுளை நம்மிலும் கீழாக இறக்கிவிடுகிறோம்! நாம் வழிபடும் உருவம் அல்லது கொண்ட கொள்கை மட்டும் கடவுள், மற்றவர் வழிபடுவதெல்லாம் கடவுளில்லை என்றும் அடம் பிடிக்கிறோம், அல்லலுற மோதிக்கொள்கிறோம்! கடவுள் இல்லை என்று சொல்லும்போதும் பிறரை நோகவிட்டாவது நம் கொள்கையை முன்னிருத்தி இன்பமடைவதையே முதன்மையாக்குகிறோம்! இவையா அறிவுள்ளோர் செயல்கள்!

நாம் கண்டதையெல்லாம் மேலோட்டமாக இதுவரை அசைபோட்டுவிட்டோம். இதனாலென்ன பயன்! தீர்மானம் என்று ஒன்றில்லாவிட்டால் வெட்டிப் பேச்செதற்கு! இதுவரை நாம் அசை போட்டவற்றைச் செரிமானப் படுத்தவேண்டாமா! முயற்சி செய்வோமா! வெற்றி பெறுவோமென்று நம்பி முயற்சி செய்வோம்!

நமக்குள் மூன்று பிரிவுகள் மட்டுமே அடிப்படைப் பொதுப்பிரிவுகள்! நம்மில் உறுதியுடன் கடவுளை மதிப்பவர் சிறுபான்மை, விட்டவரும் சிறுபான்மை! இரண்டுங் கெட்டானாகி நமது விளையாட்டுப் பொருளாகக் கடவுள் கொள்கையைப் பயன்படுத்துவோரே பெரும்பான்மை! இவ்வாறு மூன்று பிரிவினராகிறோம்! இம்மூன்று பிரிவுகளுள் பற்பல உட்பிரிவுகளாகவும் பிரிந்து வேறுபடுகிறோம்! இத்தனை பிரிவுகளாக வேறுபட்ட நாம் சாதி, மொழி, இனம், நாடு போன்ற பல பிரிவுகளால் மேலும் கணக்கற்ற பிரிவுகளால் இயக்கப் படுகிறோம்! நம் அனைவரையும் இணைக்கக் கூடிய மேன்மை அன்புவழி ஒன்றுதான் என்று அருளாளரான மாமனிதர்கள் சொன்னதெல்லாம் நமக்குப் புலப்படவில்லை!

நாம் அனைவரும் புலன்கள், அறிவு, பயன்பாடு, உள்ளுணர்வு போன்றவற்றால் ஒருங்கே பகுத்துணரவும் உணர்ந்துணரவும் கூடியதாக ஒன்று உள்ளது! அதுதான் இயற்கை நமக்களித்த இருப்பிடமான உலகம்! நம் கண்ணெதிரே அழிகிறது! நாம்தான் அழிக்கிறோம்! அழிந்தாலும் அது தன்னைப்புதுப்பித்துக் கொள்ளக்கூடியதென அறிவியலால் அறிகிறோம்! நாம்தான் மீளாதழிய வாய்ப்புண்டென்றும் அறிந்து அஞ்சுகிறோம். நாம் அழியாதிருக்க இயற்கையைப் போற்றிக் காப்பதில் மட்டுமாவது ஒன்றுபட முயல்வோம்! இன்றைய மிகப்பெரிய ஐயப்பாடு எதிர் காலத்தில் நம் மனித இனம் ‘உண்டா, இல்லையா!’ என்பதே! கடவுளைக் குறித்ததல்ல! இதுதான் தீர்மானம்!

-++++++++-

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “உண்டா! இல்லையா!

 1. ஊழிற் பெருவலி யாதுள ?

  சி. ஜெயபாரதன், கனடா

  https://jayabarathan.wordpress.com/is-there-a-fate/

  திட்டமிட்ட படைப்பு
  சி. ஜெயபாரதன், கனடா
  +++++++++++++++

  பிரபஞ்சக் காலவெளிக் குமிழி

  திரியும் ஒளிமந்தைக் கொத்துக்கள்,

  படைப்பாளியின்

  மாபெரும் ஓலைச் சுவடி நூலகம் !

  கடவுள் படிப்படி யாய்த்

  திட்டமிட்டு

  முடங்கும் கருங்குமிழி

  தானாய் எதுவும் தவழாது !

  வீணாய் இப்பேரண்டம்

  தோன்ற வில்லை !

  ஆதமும், ஏவாளும் குரங்கி லிருந்து

  பிறக்க வில்லை !

  மூல வித்து

  ஒன்றி லிருந்து ஒன்று

  உருவாகிச் சீராகி வந்துள்ளது !

  இல்லாத ஒன்றி லிருந்து,

  எதுவும்

  எழாது, எழாது, எழாது !

  இயக்கும் சக்தி ஒன்று

  இல்லாமல்,

  கட்டுப் படுத்தாமல்,

  திட்டமிடப் படாமல்

  எதுவும்

  கட்டப்பட வில்லை !

  பிரபஞ்சப் படைப் பனைத்தும்

  காரண–விளைவு

  நியதியில்

  சீரொழுங்கு இயக்கத்தில்

  நேராய் மீளும் நிகழ்ச்சியில்

  வேராய் முளைப்பவை.

  விழுது விட்டுக் கிளைகள் விட்டு !

  தாறு மாறாகத்

  தாரணி உருவாக வில்லை !

  தேனெடுக்கும் தேனீக்கள்,

  அணி வகுக்கும் எறும்புகள்,

  கூடு கட்டும் தூக்கணாம் குருவி,

  ஈக்கள், ஈசல், மின்மினி வண்டுகள்

  காக்கை, கழுகு, பேசுங் கிளி

  நீந்தும் மீனினம்,

  ஊர்ந்திடும் இலைப்புழு,

  புழு மாறிப்

  பறக்கும் பட்டாம் பூச்சி,

  மரங்கள், காய் கனிகள்,

  மனிதம், விலங்கினம் யாவும்,

  உயிரியல்

  கணித விஞ்ஞானத்தில்

  திட்டமிடப் பட்டுத் தோன்றியவை.

  காலவெளி நூலகத்தில்

  கடவுள் படைத்திட்ட

  மனிதப் பிறவியே

  உன்னதப்

  பணி யந்திரம், ஆக்கத் திறனுள்ள

  மனித யந்திரம் !

  ++++++++++++++++++

  ஓர் ஆப்பத்தைச் சுட்டுத் தின்ன முதலில் ஒரு பிரபஞ்சம் படைக்கப்பட வேண்டும்.”

  கார்ல் சேகன் (விண்வெளி உயிரியல் விஞ்ஞானி)

  வகுத்தான் வகுத்த வகையில்தான் கோடான கோடிப் படைப்புகள், உயிரினங்கள் அகிலத்தில் வடிக்கப் பட்டு இயங்கி வருகின்றன.

  கட்டுரை ஆசிரியர்

  பிரபஞ்சத்தை ஒரு பிரம்மாண்டமான நூலகமாக ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வியந்து நோக்குகிறார். அதன் விண்வெளியில் உள்ள கரும்பிண்டம், கருஞ்சக்தி, கருந்துளைகள், கோடான கோடி காலக்ஸி ஒளி மந்தைகள், பில்லியன் கணக்கான பரிதி மண்டலங்கள், அண்டக் கோள்கள், துணைக் கோள்கள், அவற்றைப் பிணைத்துள்ள ஈர்ப்பு விசைகள், விலக்கு விசைகள் அத்தனையும் நூலகத்தில் முன்னமே வடிக்கப் பட்டு சீராக, வகையாக அடுக்கப்பட்டுள்ளன ! அந்த நூல்களை யார் எழுதி வைத்தார், எப்போது எழுதி வைத்தார், ஏன் எழுதி வைத்தார், எப்படி எழுதி வைத்தார் எந்த விதிகளைக் கையாண்டார் என்பதை அறிந்து கொள்ளவே நான் முனைகிறேன் என்று மொழிகிறார் ஐன்ஸ்டைன்.

  பிரபஞ்சம் ஓர் உன்னத சக்தியான கடவுளால் படைக்கப் படவில்லை. அது தானாக உருவானது என்று விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறுவது முதலில் ஒரு விஞ்ஞான ஆய்வு விளக்கமும் இல்லை; முடிவுமில்லை. அப்படி மேலாகச் சொல்லித் தப்பிக் கொள்வது ஒரு விஞ்ஞான மேதையின் இயலாமையைத்தான் குறிக்கிறது. பிரபஞ்சம் தானாய்த் தோன்றி மாறி வருகிறது என்றாலும், கடவுள் படைத்தது என்றாலும் இரண்டும் ஒன்றுதான்.

  காரண-விளைவு நியதியைத் (Cause & Effect Theory) தர்க்க ரீதியாக ஒப்புக் கொள்ளும் உலக விஞ்ஞானிகள், பிரபஞ்சம் தானாக உருவானது, தானாக இயங்குவது, தானாக மாறுவது என்று ஆதாரமின்றிக் கூறுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

  விஞ்ஞானிகள் இதுவரை உயிர் என்றால் என்ன என்று விஞ்ஞான விளக்கம் தர முடிய வில்லை. எந்த இரசாயன மூலகங்களோ, மூலக் கூறுகளோ உயிரை உண்டாக்குவதில்லை. ஆங்கிலத்தில் உயிர் என்பதற்கு ஒரு தனிச்சொல் கூடக் கிடையாது. உயிர், ஆத்மா இரண்டு மட்டுமே மனிதனுக்கும் படைப்பாளிக்கும் உள்ள இணைப்பைக் காட்டுபவை.

  https://jayabarathan.wordpress.com/is-there-a-fate/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.