படக்கவிதைப் போட்டி – 193
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (29.12.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
புதிய புத்தன்
அத்தனையும் துறந்தால் முக்தி கிட்டும்
என வழக்கை நெறியை வாழும் முறையை
புத்தனே நீ சொன்னாய்
வள்ளுவன் காலம் முதலே பலர்
பலன் தரும் வழி முறைகளை பல சொல்லியும்
கேட்காத கூட்டம் இங்கே
ஆளப்பிறந்தவனாய் இருந்தும் அத்தனையும் துறந்து
ஞானம் தேடி சென்றவன் நீ ……… இங்கே
ஆட்சிக்கு ஆசை பட்டு இலவசங்களை அள்ளி கொடுத்து
சோம்பல் கூட்டமாய் மாற்றி
ஆட்சியை பிடிக்க முயலும் கூட்டம் இங்கே
செக்கில் சிக்கிய மாடாய் பலர்
யாருக்காகவோ ஓடி ஓடி உழைத்து மனஅழுத்ததில் விழுந்து
தங்களை தொலைத்துவிட்டு எதையோ தேடுகின்ற கூட்டம் இங்கே
உறக்கம் துறந்து இணையத்தில் இரவெல்லாம் இறை தேடி
அலையும் மிருகம் போல் அலை பாயும் மனதோடு
அலைந்திடும் கூட்டம் இங்கே
சுலபமாய் அத்தனையும் கிடைத்திட
போராட்டம் என்பதே பகல் கணவாய் ஆகிட
விழித்திருந்தும் எழ மறுத்து இறுக்கமாய் மாறி போன
இதயங்கள் நிறைந்த கூட்டம் இங்கே
பொதி மரத்தடியில் அமர்ந்து ஞானம் பெற்றவனாய்
உன்னை அறிந்த எமக்கு
இவர்களை மாற்றிட என்ன செய்யலாம் என்று
தலை சாய்ந்து யோசிக்கும்
புதிய புத்தனாய் இங்கு நீ வந்தாயோ
>>>> உண்மை புத்தன் <<<<
==========================
சுத்தோதன் மாயா பெற்றெடுத்த சித்தார்த்தன்
சுபயோக வாழ்வை விட்டொழித்த எதார்த்தன்
சுழல் பிறவிக்கடல் கடந்த சாக்கியன்
சுமையான ஆசையை சுட்டெரித்த கதிரவன்
இதழிடை இணைபிரியா புன்னகை
இமை மூடி திறந்தும் திறவா இறைநிலை
இன்பத்தின் இனிமை கண்ட உயர்நிலை
இன்னலுக்கு விடையளித்த பொதுநிலை
பற்றிப்படர் கொடியில் படுத்துறங்கும்
பற்றற்றான்- இவனை பற்றிவிட்டால்
பற்றிய பேராசை பேரும் பாவம் எல்லாம்
பற்றியெரியும் பெரும் தீயில் வீழ்ந்த சருகாய் பட்டுவிடும்
எண்ணம்,கருத்து, பேச்சு, செயல்
எளிய வாழ்க்கை, முயற்சி, சித்தம், தவம் என நேரான
எண் வகை பாதை கண்டான் இதில்
எப்பாதை வழி நீ சென்றாலும் நேர்மை வேண்டும் என்றான்
முழுமதி நன்னாளில் மூவுலகும் இன்பமுற
முகிழ்த்த ஞான முதல்வன்- இருள்
மூழ்கிய இன்னல் சூழ் உலகுக்கு
முழுமுதல் அருள் போதித்த அன்பின் தலைவன்
அன்பு விதை துவிய வித்தகன்
அமைதிப் பயிர் வளர்த்த போதி சத்துவன்
ஆசை துறந்த சிந்தனைச் சித்தன்
ஆன்மத்தை வென்ற உண்மை புத்தன்
யாழ். பாஸ்கரன்
ஓலப்பாளையம்
கரூர்- 639136
9789739679
basgee@gmail.com
ஒரு மனிதன் மகானானக் கதை..!!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
-ஆ. செந்தில் குமார்.
வறுமை துன்பம் எதுவும் இல்லா..
வசதிகள் அனைத்துக்கும் குறைவே இல்லா..
செல்வத்தில் திளைத்த அரச குடும்பத்தில்..
சித்தார்த்தன் பிறந்து வளர்ந்தானே..!!
அரண்மனைச் சுவரெனும் மாயத் திரையை..
அகற்றி எறிந்து அகண்ட உலகைப்..
பார்க்கும் பொருட்டு காவலைத் தாண்டி..
புயலெனப் புறப்பட்டான் சித்தார்த்தன்…!!
மூப்பு பிணி மரணம் அமைதி..
முதன்முறையாகக் காண நேர்ந்தது..
துன்பத்தின் காரணம் அறிய எண்ணி..
துறவறம் பூண்டான் சித்தார்த்தன்..!!
இன்னல்கள் அனைத்துக்கும் ஆசையே காரணம்..
இயற்கை அவனுக்கு உணர்த்தியது..
போதி மரத்தின் அடியில் அமர்ந்து..
பொழுதுகள் மறக்க தவத்திலாழ்ந்தான்..
தவத்தின் பயனாய் கிடைத்தது ஞானம்..
தான் அறிந்த உண்மையை உரைக்க..
உலக மக்களின் துன்பம் போக்க..
உயரியப் பாதைகள் வகுத்தளித்தான்..!!
அன்பெனும் ஆயுதத்தைக் கையில் எடுத்தான்..
அனைவரும் அவன் வசம் ஆயினரே..
சக்திகள் பலவும் கொண்ட அன்பால்..
சித்தார்த்தன் ஆனான் புத்தனாக..
புத்தர் தூங்கி விட்டார் !
சி. ஜெயபாரதன், கனடா
உத்தமராய் உருவான
பாரத தேசத்தின்
போதி மரத்து ஞானி
புத்தர் ஈழத்தில்
தூங்கிக் கொண்டுள்ளார் !
கால் நூற்றாண்டு
நடந்தது
உள் நாட்டுப் போர் !
ஈழத்தமிழர்
சுதந்திரமாய்த் தம் நாட்டில்
வாழப் போரிட்டு
இருநூறா யிரம் பேர்
உயிர் கொடுத்துத் தோற்ற
உரிமைப் போர் !
கண் இழந்தோர் எத்தனை !
கால், கை, சிரம்
இழந்தோர் எத்தனை !
தந்தை, கணவன், அண்ணன்
தம்பி இழந்தோர் எத்தனை !
மான பங்கமாகி
முலை அறுபட்ட பெண்டிர்
எத்தனை !
விழித்தெழுவீர் புத்தரே !
போதி மரத்துக்கு
மீள்வீர் புத்தரே !
++++++++++++++++