இந்த வார வல்லமையாளர் (293): சுகந்தி நாடார்
முத்தமிழ் என்றழைக்கப்பட்ட நம் தமிழ்மொழி இப்போது நாற்றமிழாக அதனுடன் “கணினித் தமிழை”யும் இணைத்துக் கொண்டுள்ளது. இணையம் ஒரு பக்கம் உயர்ந்து கொண்டே இருக்கையில் அதன் மூலமாகவும் தமிழை இளைய, இணைய தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது என்பது தமிழ் ஆர்வலர்களது இடையறாத பணியாக இன்றளவில் இயங்கி வருகிறது. இப்படிப் பட்ட பொழுதில் முழுக்க முழுக்க இணைய தலைமுறைக்கு இனிய தமிழைக் கொண்டு சேர்க்க வேண்டியே உழைக்கும் ஒரு குழு இருக்கின்றது என்பதும், அவர்கள் எண்ணற்ற எளிமையான பாடத் திட்டங்கள் மூலமான பிற தேசங்களில் வாழும் தமிழர்களுக்கும் மிகவும் பயனாகுமாறு செய்து வருகின்ற பணி, மிகவும் பாராட்டத் தக்கது.
“தமிழ் அநிதம்” என்ற ஒரு தன்னார்வ நிறுவனம் நமது தமிழ் மொழியின் சிறப்பை இணையத்தில் மூலம் பல மூலைகளுக்கு எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கின்ற உன்னதமான பணியை ஆற்றி வருகின்றது. தமிழ் அநிதம் தனது நோக்கமாகச் சொல்லுவது யாதெனின்,
“அநிதம் என்றால் தமிழில் “அளவற்ற தன்மை” (Unlimited) என்று பொருள். தமிழ் அநிதம் இரு மொழிகளைப் பிரதானமாகக் கொண்டு தமிழ் வழிக் கற்றலைப் பரப்பும் நோக்கில் செயல்படுகின்ற ஒரு மின்னூடகம் ஆகும்.”
இத்தகைய உயர்ந்த நோக்கத்துடன் இதனை இயக்கி வருபவர் திருமதி சுகந்தி நாடார். அமெரிக்காவில் வாழும் தமிழ் ஆர்வலரான திருமதி சுகந்தி நாடார், இணையத்தின் வழியே தமிழ் கற்றலை ஊக்குவிக்கும் பெரும்பணியை ஆற்றி வருகின்றார். அவருடன் இந்த முயற்சிக்குச் செயலராக விளங்குகின்ற பேராசிரியர் திரு காமாட்சி அழகர்சாமி அவர்களும் இணைந்து பல இடங்களுக்குச் சென்று இணைய வழி தமிழ் கற்றல் தொடங்கி பல அவசியமான தலைப்புகளில் உரையாற்றி வருகின்றனர். இதன் அடிப்படையில் சென்ற வாரம் தமிழகத்தின் பல கல்லூரிகளுக்குச் சென்று பயிலரங்கங்கள் நிகழ்த்தி, மாணவர்களுக்கு அறிவுசால் ஊக்கம் வழங்கியும் இருக்கிறார்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறை, தேனித் தமிழ்ச்சங்கம், கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை, போன்ற தமிழ் வளர்க்கும் பல துறைகளுடன் தமிழ் அநிதம் இணைந்து, தேனி, தஞ்சை, திருச்சி, சிவகாசி, திருவனந்தபுரம் போன்ற பற்பல ஊர்களில் இருக்கும் கல்லூரிகளுக்குச் சென்று E Media in Tamil learning and teaching (தமிழ் இணைய ஊடகம், கற்றலும் கற்பித்தலும்), இணையத் தமிழின் பயன்பாடுகள், கணினித் தொழில்நுட்பம் மூலமே தமிழின் சிறப்பு அடுத்த தலைமுறைக்கு, தமிழ் மொழியும், அதன் இணையப் பயன்பாடும், மின்வழித் தமிழ் – கற்றல் கற்பித்தல் போன்ற தலைப்புகளில் பயிலரங்குகள் நடத்தியிருக்கிறார்கள்.
“எதிர்ப்புகளும் பொறாமையும் நிறைந்த இவ்வுலகில், ஏறத்தாழ 220 பங்கேற்பாளர்கள் (தமிழ்ப் பல்கலைக்கழக மொழியியல், கல்வியியல் மாணவ மாணவிகள், பல்வேறு துறையைச் சார்ந்த பல பேராசிரியர்கள் மற்றும் கோயம்புத்தூர், திருச்சி போன்ற ஊர்களிலிருந்து வந்து கலந்துகொண்ட மாணவ மாணவிகள் உட்பட) மிகமிக ஆர்வமுடன் கலந்துகொண்டு வெகு சிறப்பாக நேற்று நடைபெற்ற ‘கல்வியியலில் மொழித் தொழில்நுட்பத்தின் பங்கு என்ற தலைப்பில் இனிதே நடந்தேறிய ஒரு நாள் பன்னாட்டுப் பயிலரங்கின் நிகழ்வுகளில் ஒருசில. தமிழ் அநிதத்தோடு தமிழ்ப் பல்கலைக்கழக மொழியியல் துறையும் கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறையும் இணைந்து நடத்தியது மட்டற்ற மகிழ்ச்சி.”
என்று பேராசிரியர் காமாட்சி அவர்கள் பதிவிட்டிருந்த முகநூல் பதிவில் இருந்தே அவர்கள் இந்தத் தொண்டை எத்தனை மனநிறைவுடனும் தடைகளைத் தாண்டியும் வெற்றிகரமாக நிகழ்த்தி வருகின்றார் என்பது புலனாகிறது. ஓய்வுபெற்ற பேராசிரியர் அ. காமாட்சி அவர்களுடன் இணைந்து இந்த அருந்தொண்டை ஆற்றி வருகின்ற தமிழ் அநிதத்தின் நிறுவனர் திருமதி சுகந்தி நாடார் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து மனமாரப் பாராட்டுவதில் வல்லமைக் குழுமம் மகிழ்ச்சி அடைகிறது.
இணையேதும் இல்லாத இனிதான தமிழை
இருக்கின்ற மக்களெலாம் பயன்படுத்தும் வண்ணம்
இணையத்தில் வளர்க்கின்ற தமிழநிதம் செய்யும்
ஈடில்லாப் பணிக்கிங்கே யாம்சொல்லும் வாழ்த்தே!
(“வல்லமையாளர்” என்று நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் நபர்களைப் பற்றி வல்லமை ஆசியர் குழுவிற்குத் தெரியப்படுத்த tamiludanvivekbharathi@gmail.com அல்லது vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பவும்)
இதுவரை விருது பெற்றிருப்போர் பட்டியலைக் காணக் கீழே சொடுக்கவும்.
https://www.vallamai.com/?p=43179