Author: சு.கோதண்டராமன்

  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 40

    –சு. கோதண்டராமன்

    மனிதனும் ருதமும்

    amrita rig veda
    மனிதர்கள் ருதத்தை அனுசரித்து நடக்க வேண்டும். அப்படி நடந்தால் கிடைப்பது அம்ருதம். எல்லாத் தேவர்களும் காப்பாற்றுவார்கள். ருதத்தை மீறினால், அதாவது அன்ருதத்தைக் கைக்கொண்டால், வருணன் தண்டிப்பார் என்கிறது வேதம்.

    ருத வழி நடக்க எளிது.(8.31.13)
    ருதத்தைக் காப்பாற்றுபவனை அக்னி காப்பாற்றுகிறார். (6.3.1, 6.7.1)
    இந்திர வருணர்களைப் பூசிப்பவன், தானம் கொடுப்பவனாகவும், ருதத்தை அனுசரிக்கிறவனாகவும், எதிரிகளை வெல்பவனாகவும், செல்வம் பெறுபவனாகவும் இருக்கிறான். (6.68.5)

    மனிதருக்கென்று தனி ருதம் உண்டா? உண்டு. சென்ற கட்டுரையில் சொன்ன மூன்று உதாரணங்களை ஆழ்ந்து கவனித்தால் தெரியவரும்.
    ஆற்றைப் போலத் தன்னிடமுள்ள செல்வத்தை வாரி வழங்குவது, சூரியனைப் போல இடையறாது செயல்படுவது, பசுவைப் போலத் தன்னைச் சார்ந்தாரைக் காப்பது, மூன்றையும் போலப் பிறர்க்குப் பயன்படுபவனாக இருப்பது இவை தாம் மனிதனின் விரதம், தர்மம், ஸ்வதா, ருதம்.

    1. மனிதன் தன் செல்வத்தை வாரி வழங்க வேண்டும்:

    வேதத்தில் பல இடங்களில் தாசுஸ் என்ற சொல் காணப்படுகிறது. கொடுப்பவன் என்று பொருள். தாசுஸுக்குச் செல்வம், மக்கட் பேறு, புகழ், உணவு முதலியன கொடுங்கள் என்று தேவர்கள் வேண்டப்படுகிறார்கள். அதாசுஸ் (கொடுக்காதவன்) அழிய வேண்டும் என்று வேண்டுகிறார்கள்.

    2. எப்பொழுதும் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்:

    தேவர்கள் அளிக்கும் செல்வத்தை மனிதன் உழைப்பு என்னும் வருத்தத்தை அளிக்கும் வழியினாலேயே அடைகிறான்.(8.47.6)
    தேவர்கள் எப்பொழுதும் கடுமையாக உழைப்போருக்கு நண்பர்களாக இருப்பர். (4.33.11)

    3. தன்னைச் சார்ந்து வாழும், தாழ்ந்த நிலையில் இருப்போரைக் காக்க வேண்டும்:

    சார்ந்து வாழ்வது மனிதனின் நியதி. பட்சிகள் மிருகங்கள் எல்லாம் சிறிது காலத்துக்குத் தாயைச் சார்ந்து வாழ்கின்றன. அதன்பின் தன் காலில் நிற்கப் பழகிக் கொள்கின்றன. பின் கடைசி மூச்சு வரை அவை சுதந்திரமாகவே இருக்கின்றன. மனிதன் குழந்தைப் பருவத்தில் பெற்றவரைச் சார்ந்து வாழ்கிறான். படிப்படியாக அந்த நிலையிலிருந்து விடுபடுகிறான். பின்னர் சமுதாயத்தில் மற்ற மக்களைச் சார்ந்து வாழவேண்டி இருக்கிறது.

    வேதம் கூறுகிறது, மனிதன் செல்வத்தைப் பற்றிச் சிந்திக்கட்டும். ருதத்தின் பாதையில் தெய்வங்களைப் பக்தி மரியாதையுடன் வணங்கட்டும். அவன் தன் அறிவைக் கொண்டு சிறந்ததைப் பேசட்டும். அவன் வலிமையுள்ளோரைச் சார்ந்து வாழட்டும். (10.31.2)
    ஏழைகளுக்கு உணவு அளிப்பவன் வள்ளல். அவன் போரில் வெல்கிறான். பகைவர்களும் அவனுக்கு நண்பர்கள் ஆவர். (10.117.3)
    உணவு நாடி வந்த நண்பனுக்கு உணவு அளிக்காதவன் நண்பனே அல்ல. (10.117.4)
    பணக்காரன் ஏழை யாசகனைத் திருப்தி செய்விக்க வேண்டும். (10.117.5)

    ஆனால் சில மனிதர்கள் அறியாமையால் சில சமயங்களில் விரதத்தை மீறிவிடுகிறார்கள். எனவே தவறுகளை மன்னித்துப் பாவங்களிலிருந்து விடுவிக்கும்-படியான பிரார்த்தனைகள் காணப்படுகின்றன.

    வருணனின் தர்மத்தை மீறியதற்காக நம்மை அவர் தண்டிக்காது இருக்கட்டும். (7,89.5)
    தவறு இழைத்து அறியாமையால் நாங்கள் தேவர்களின் விரதங்களை மீறும்போது அக்னி எங்கள் பிழைகளைத் திருத்தி தேவர்களை உரிய முறையில் மகிழ்விக்க உதவுகிறார். (10,2.4)
    யார் வேண்டுமென்றே விரதங்களை மீறுகிறார்களோ, அதற்காக வருந்துவது இல்லையோ அவர்களை தேவர்கள் அழிக்கிறார்கள். (1.130.8)

     

     

     

     

     
    Graphics courtesy: http://tutudutta.blogspot.com/2012/11/the-devas-and-asuras.html

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்? – 39

     சு. கோதண்டராமன்

    ருதத்தின் பிற பெயர்கள்

    திமிங்கில முதல் புழு வரை ஒவ்வோருயிர்க்கும் அததற்குரிய தர்மங்கள் உண்டு. நட்சத்திரங்கள் சூரிய சந்திரன் முதலாக அணுக்கள் வரை ஒவ்வொரு வஸ்துவுக்கும் உரிய தர்மங்கள் உண்டு. மேலும் ஒன்றிற்கே கால தேச வர்த்தமானங்களுக்குத் தக்கபடி தருமங்கள் மாறுபடுகின்றன. – பாரதி

    ருதத்திற்கு தர்மம், ஸ்வதா, விரதம் என்ற வேறு பெயர்கள் உண்டு. எல்லாமே காரணப் பெயர்கள் தாம்.
    இந்த இயற்கை நியதி மனிதனை மேல் நிலைக்கு உ.யர்த்துகிறது. அதனால் இது உயர்வாகப் போற்றப்படுகிறது. அதனால் உயர்த்தப்பட்டது என்ற பொருளில் ருதம் எனப்படுகிறது.

    ருதம் என்ற சொல்லின் வேர் – ரு ऋ என்பதாகும். இது படர்க்கை ஒருமையில் ருச்சதி ऋच्छति, இயர்த்தி इयर्ति, ருண்வதி ऋण्वति என மூன்று வகையாக உரு மாறும். ரிக் வேதத்தில் இவை இயக்குதல், உயர்த்துதல், தூண்டுதல் என்ற பொருளிலேயே வருகின்றன. இதிலிருந்து தோன்றியதுதான் ருதம் ऋतम्. எனவே எது உயர்த்தப்படுகிறதோ, எது தூண்டப்படுகிறதோ, எது இயக்கப்படுகிறதோ அது ருதம் ஆகும். இதை இயக்கும் சக்தி ஒன்று உண்டு என்பது மறைமுகமாகத் தெரிவிக்கப்படுகிறது.
    இது தன்னைத் தானே சமன் செய்து கொள்ளும் தன்மையாலும் மனித முயற்சி இன்றித் தானாகவே நடைபெறுவதாலும் ஸ்வதா எனப்படுகிறது.

    (ஸ்வ+தா= தன்னைத் தானே தாங்குதல்)
    நீர் ஸ்வதாவின்படி ஓடியது. (1.33.11)
    சூரியன் ஸ்வதாவின்படி மேலே உயர்கிறது. (10.37.5)
    கடந்த காலத்திலும், இன்றும் வருங்காலத்திலும் உஷா தினம்தோறும் ஸ்வதாவின்படி ஒளியைப் பரப்புவாள். (1.113.13)
    இந்த இயற்கை நியதியின் இயக்கம் தான் பிரபஞ்சத்தைத் தாங்குகிறது. இதனால் இது தர்மம் என்று அழைக்கப்படுகிறது. (எது தாங்குகிறதோ, எது தாங்கப்படுகிறதோ அது தர்மம்.)
    ஆதித்யர்கள் உலகத்தைத் தாங்குவது ருதத்தினால். (2.27.4)
    இந்திரன் தர்மத்தைக் கொண்டு ஆறுகளை விரியச் செய்தார், வயல்களில் தாவரங்களை மலர்வித்துக் கனி தரச் செய்தார். (2,13.7)
    மித்ரனும் வருணனும் தங்கள் தர்மத்தைக் கொண்டு விரதங்களைக் காக்கின்றனர். ருதத்தைக் கொண்டு எல்லா உலகங்களையும் ஆள்கின்றனர். அவர்கள் சூரியனை விண்ணில் அமைத்தனர். (5,63.7)
    விண்ணும் மண்ணும் வருணனின் தர்மத்தைக் கொண்டு நிலை நாட்டப்-பட்டுள்ளன. (6,70.1)
    இயற்கை நியதியில் ஒவ்வொரு பிராணிக்கும், ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு தேவருக்கும் ஒரு தனித் தன்மை உண்டு. அந்தத் தனித் தன்மையைக் குறிப்பிடும்போது ருதத்திற்கு வ்ரதம் என்ற பெயரும் வழங்கப்படுகிறது. எதிரிகளை அழிப்பது இந்திரனின் விரதம். மருத்துவம் செய்வது அசுவினிகளின் விரதம்.
    ராட்சசர்களுக்கும் ஸ்வதா உண்டு. (7.104.9) துன்புறுத்துவது அவர்கள் இயல்பு. குதிரைக்கு ருதம் உண்டு. உயிரற்ற கதவுக்குக் கூட ருதம் உண்டு.
    பசுக்களும் ஆறுகளும் இந்திரனின் விரதத்தைப் பின்பற்றுகின்றன. (1.84.12, 1.101.3)
    தேவர்களின் விரதத்தின் காரணமாக இரவும் பகலும் உண்டாகின்றன. (1.24.10, 3.60.6)
    பறவைகள் மரத்தில் வசிப்பது விரதங்களை அனுசரித்தே. (2.38.7)
    தேவர்கள் விரதங்களைக் காப்பாற்றுகிறார்கள். அவரவருக்கும் தனித் தனி விரதங்கள் உண்டு. (10.61.7, 1.31.10)
    தேவர்களின் விரதங்கள் ரகசியமானவை. அவற்றை ரிஷிகள் மட்டுமே அறிவார்கள். (10.114.2)
    தேவர்களின் விரதங்கள் மீறப்பட முடியாதவை. (1.69.4)
    மாயாவிகளும் விரதத்தை மீற முடியாது. அறிஞர்களும் முடியாது. (3.56.1)
    அறிவாளிகளான ரிஷிகள் விரதங்களை மீறுவதில்லை. (7.31.11, 7.76.5)
    விரதங்களை அனுசரிப்பவர்கள் சிறப்படைகிறார்கள். (3.59.2)

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்? – 38

    சு. கோதண்டராமன்

    ருதம் என்பது என்ன?

    மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட சொற்களில் மூன்றாவதான ‘ருதம்’ என்ற சொல், ரிக் வேதத்தில் 600 தடவைகளுக்கு மேல் வருகிறது.
    அகராதியில் ஸத்யம், ருதம் என்ற இந்த இரண்டு சொற்களுக்கும் உண்மை என்றே பொருள் சொல்லப்படுகிறது. ஸத்யமும் ருதமும் ஒன்றா என்றால் இல்லை.

    பரிஷேசன மந்திரம் “ஸத்யமே, உன்னை ருதத்தால் நனைக்கிறேன்” என்கிறது. வேத இலக்கியத்தில் ருதம் வரும் இடங்களில் எல்லாம் ஸத்யமும் கூடவே வருகிறது.

    ருதம் வதிஷ்யாமி, ஸத்யம் வதிஷ்யாமி
    ருதம் அவாதிஷம், ஸத்யம் அவாதிஷம்
    ருதம் ஸத்யம் பரம் ப்ரம்ம

    ருதத்தை அனுசரித்து, அங்கிரஸ்கள் ஸத்யத்தை அடைந்தனர். (5.45.7)
    மருத்துகள் ருதம் வழியாக ஸத்யத்தை அடைகின்றனர். (7.56.12)
    கடும் தவத்தின் விளைவாக ருதமும் ஸத்யமும் தோன்றின. (10.190.1)
    மேற் கண்ட மந்திரங்களிலிருந்தும் ருதமும் ஸத்யமும் வேறு வேறு

    பொருள் கொண்டவை என்பதும் அவை ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொண்ட இரட்டைகள் என்பதும் தெரிகிறது.
    ருதம் என்பதன் அடிப்படைப் பொருள் இயற்கை நியதி என்பது. அதைத் தெரிந்து கொள்ள அச் சொல் பயன்படும் எல்லா இடங்களையும் தொகுத்துப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்ததால் கிடைத்த முடிவுகள் கீழே தரப்பட்டுள்ளன.

    ரிஷிகளுக்கு வியப்பை ஊட்டிய மூன்று விஷயங்கள் ருதம் என்ற சொல்லோடு தொடர்பு கொண்டவையாக இருக்கின்றன.

    ஆறுகள்

    ஆறுகள் ஆண்டாண்டு காலமாக இடைவிடாமல் குறிப்பிட்ட திசையிலேயே ஓடிக் கொண்டிருக்கின்றன. அவை ஒரு போதும் திசை மாறி, அதாவது கீழிருந்து மேலாக, ஓடுவதில்லை. தன்னிடமுள்ள நீரைக் கடலில் சேர்ப்பதால் அவை வற்றுவதில்லை. எவ்வளவு நீர் வந்தாலும் கடல் நிரம்புவதில்லை. அது தன் நீரை ஆவியாக்கிக் கொடுத்து விடுகிறது. ஆவியாவதால் கடல் வற்றுவது இல்லை. புதிய புதிய மேகங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. மேகங்கள் தன்னிடமுள்ள நீரைப் பொழிந்து கொண்டிருக்கின்றன.

    இது ருதத்தின் வேலை என்று ரிஷிகள் நினைக்கிறார்கள். அதனால் ஆறுகளை ருதாவரி என்று அழைக்கிறார்கள். ஆறுகள் கொண்டு வரும் நீரையும் அதற்குக் காரணமான மழையையும் மேகத்தையும் ருதம் என்றே அழைக்கின்றனர்.

    ஆறுகள் தங்கள் வெள்ளப் பெருக்கில் ருதத்தைக் கொண்டு வருகின்றன. (1.105.12)

    “மேகம் எப்பொழுதும் தாவரங்களுக்கு நீர் தந்து கொண்டிருக்கிறது. அதனிடத்தில் அசையும் பொருள் அசையாப் பொருள் எல்லாவற்றின் உயிரும் இருக்கிறது. அதுதான் ருதம். (7.101.6)

    ருதத்தின் காரணமாக தெய்விக ஆறுகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்றன. (4,3.12)

    சவிதாவிற்காகவோ இந்திரனுக்காகவோ ஆறுகள் நிற்பதில்லை. அவை ஓடத் தொடங்கி எவ்வளவு காலம் ஆகியிருக்கும்?(2.30.1)

    ஆறுகள் வருணனின் ருதத்தால் ஓடுகின்றன. அவை நிற்பதில்லை, ஓய்வெடுப்பதில்லை. (2.28.4)

    ஆறுகள் எவ்வளவு வெள்ளம் கொண்டு வந்தாலும் கடல் நிரம்புவதில்லை. அதற்குக் காரணமான சிறந்த அறிவுடைய அந்தத் தேவனின் மாயா சக்தியை ஒருவரும் தடுக்க முடிந்ததில்லை. (5.85.6)

    இடையறாத இயக்கமும், அதில் காணப்படும் ஒழுங்கு முறையும், தன்னைத் தானே சமன் செய்து கொள்ளும் தன்மையும் ருதத்தின் பண்புகள் ஆகும்.

    சூரியன்

    விண் வெளியில் சூரியன் இடைவிடாமல் இயங்கி இரவும் பகலும் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்துக்கு முன் உஷை தோன்றி உயிரினங்களைச் செயல்படத் தூண்டுகிறாள். நம்முடைய முன்னோர் பலர் இதைப் பார்த்துச் சென்று விட்டனர். நம்முடைய சந்ததியினர் பலர் இதைக் காணப் போகிறார்கள். ஆதி அந்தம் இல்லாத, இடையறாத இந்த சூரிய உதயம் ரிஷிகளுக்கு ருதத்தின் அடையாளமாகத் தோன்றுகிறது. அதனால் சில சமயங்களில் சூரியனை ருதம் என்ற பெயரால் குறிப்பிடுகின்றனர். உஷஸ் ருதாவரீ (ருதத்தோடு கூடியவள்) எனப்படுகிறாள்.

    கீழ்க்கண்ட மந்திரங்களைக் கவனியுங்கள்.

    ருதத்தால் பூட்டப்பட்ட குதிரைகளைக் கொண்டு உஷஸ் உலகம் முழுவதும் உறங்கும் மக்களை, பறவைகளை, மிருகங்களைத் துயிலெழுப்பிக் கொண்டு பயணிக்கிறாள். (4.51.5)

    கிழக்கே உஷஸ் தோன்றுகிறாள். அவள் ருதத்தின் பாதையைப் பின்பற்றுகிறாள். அவள் ஒரு போதும் தவறுவதில்லை. (1.124.3)

    உலகம் தோன்றிய நாள் பற்றி உஷஸ் அறிவாள். அவள் ருதத்தை மீறுவதில்லை. நாள் தோறும் குறித்த இடத்துக்கு வந்து விடுகிறாள்.(1.123.9)

    ருதத்தின் பாதை கிரணங்களால் அமைக்கப்பட்டுள்ளது. (1.136.2)

    வருணன் சூரியனுக்கு ஒரு பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். அவர் கடலை நோக்கிச் செல்லும் ஆறுகளின் அலைகளை உண்டாக்கினார். ருதத்தை அனுசரித்து அவர் இரவையும் பகலையும் பிரித்து வைத்தார்.(7.87.1)

    ருதத்தின் அடிப்படையில் உஷையை முன் தள்ளிக் கொண்டு விண்ணிலும் மண்ணிலும் சூரியன் தோன்றினார். மித்திர வருணர்களின் அற்புதச் செயலை அவர் நிறைவேற்றினார். (3.61.7)

    ருதத்திலிருந்து தோன்றியது ருது. பருவ காலங்கள் குறித்த நியதிப்படி ஆண்டு தோறும் வந்து செல்வதால் அவை ருது எனப்படுகின்றன.
    இடையறாத இயக்கமும் அதில் காணப்படும் சீர்மையும் ருதத்தின் பண்பு என்பதை இதுவும் உறுதிப்படுத்துகிறது.

    பசுக்கள்

    ரிஷிகள் கவனித்து வியந்த மூன்றாவது விஷயம் – பசுங் கன்று மாடாக வளர்ந்து இனிய பாலைக் கொடுப்பது. அது வரையில் இல்லாதிருந்த பால் கன்று ஈன்றதும் சுரப்பது அதிசயம். மாடு எந்த நிறத்தில் இருந்தாலும் பால் மட்டும் வெள்ளையாகவே உள்ளது மற்றொரு அதிசயம் என வியக்கிறார்கள்.

    கன்றாக இருந்தது பால் கொடுக்கத் துவங்குகிறது. மாடு கறுப்பாக இருந்தாலும் அதன் பால் வெள்ளையாக இருக்கிறது. ருதத்தால் நிர்ணயிக்கப்பட்ட இந்த ருதத்தைப் போற்றுகிறேன். (4.3.9)

    தன்னைச் சார்ந்து வாழும் கன்றுக்கு உணவளிக்கும் உந்துதலும் அதற்குரிய வசதிகளும் தானாகவே பசுவுக்கு ஏற்படுகின்றன.
    பசு என்பது ஒரு உதாரணம்தான். உண்மையில் எல்லாப் பிராணிகளுக்கும் மனிதருக்கும் இத் தன்மை பொருந்தும்.
    எனவே ருதம் என்பது இடையறாத தொடர்ச்சி, சுழற்சி, வளர்ச்சி, ஒழுங்கு முறை, தன்னைத் தானே சமன் செய்து கொள்ளும் இயல்பு, சார்ந்தாரைக் காத்தல் ஆகியவை கொண்ட இயற்கை நியதியைக் குறிப்பது அறியப்படுகிறது.

    ருதத்தின் தாய்மார்கள்

    பூமியும் ஆகாயமும் ருதத்தின் தாய்மார்களாகக் கூறப்படுகின்றனர். அவ்வாறே இரவும் பகலும் ருதத்தின் தாய்மார்களாகக் கூறப்படுகின்றனர். இரண்டு தாய்கள் என்பதே பொருந்தாக் கூற்று. இரண்டு ஜோடித் தாய்மார்கள் என்பது முரண்பாடு போல் தோன்றுகிறது அல்லவா?

    வேத மொழி நடையின் தனிச் சிறப்பை நாம் அறிவோம். தாய் என்று சொன்னால் அதை அப்படியே நேர்ப் பொருளில் எடுத்துக் கொள்ளக்கூடாது. ருதம் என்னும் கருத்துருவை ரிஷிகளுக்குத் தந்தவை விண்ணும் மண்ணும். அதே போல இரவும் பகலும் உதவியிருக்கின்றன. விண்ணையும் மண்ணையும் உற்று நோக்கி அதில் காணப்படும் ஒழுங்கு முறையைக் கவனித்து ருதம் என்னும் கருத்துருவைப் பெற்றனர் அவர்கள். அதே போல இரவும் பகலும் மாறி மாறி வருவதில் நிலவும் சீர்மை அவர்களுக்கு இதில் ஒரு இயற்கை நியதி உள்ளது என்பதைப் புரிய வைத்தது.

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?- 37

    சு. கோதண்டராமன்

     

    யக்ஞமும் உயிர்ப்பலியும்

    பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யக் கூடாது என்ற அஹிம்ஸைக் கொள்கை புத்த ஜைன மதங்களின் தாக்கத்தால் ஏற்பட்டது. இதை ஒப்புக் கொள்வதற்கு வெட்கப்பட வேண்டியதில்லை. தன் தவறைத் திருத்திக் கொள்ளாத சமயம், பிறரிடமிருந்து நல்லதை எடுத்துக் கொள்ளாத சமயம் அழிந்து விடும். வைதிக சமயம் காலப் போக்கில் பல நல்ல விஷயங்களை மற்றவர்களிடமிருந்து ஏற்றுக் கொண்டதால்தான் இன்றளவும் உயிரோடு இருக்கிறது.

    மனிதன் இயற்கையில் சர்வ பட்சிணி. காட்டு மிராண்டியாக வாழ்ந்த காலத்தில் அவன் பழங்கள், கிழங்குகளை உண்பதோடு, சாதுவான மிருகங்களையும் கொன்று உண்டுதான் உயிர் வாழ்ந்தான். நாகரிக வளர்ச்சி பெற்று விவசாயம் செய்யும் காலத்தில் அவனுக்கு குதிரை, மாடு, ஆடு முதலிய கால்நடைகளால் பயிர் அழிவு ஏற்பட்ட போது இந்தக் கால்நடைகளைக் கொல்வது பயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும், உணவுத் தேவையை நிறைவு செய்யவும் அவசியமாக இருந்தது. அவன் இறை வழிபாடு செய்யத் தொடங்கிய போது தான் உண்டதையே தன் தெய்வத்துக்கும் படைத்தான்.

    இத்தகைய காலத்தில்தான் வேதம் உருவாயிற்று. குதிரைகளையும் ஆட்டையும் வேள்வியில் பலி இடுவது பற்றிய மந்திரங்கள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் ரிக் வேதத்தில் உள்ளன. (1.162, 3, 21)

    பழைய காலத்தில் பசுக்களும் காளைகளும் பலி கொடுக்கப்பட்டிருப்பது அக்னிக்கு வழங்கப்படும் உக்ஷான்ன (காளையை உண்பவர்), வசான்ன (மலட்டுப் பசுக்களை உண்பவர்) என்ற பெயர்களிலிருந்து தெரிகிறது. (8.43.11) பசுவைக் கத்தியால் வெட்டுவது போல என்று உவமை வருகிறது. பசுத் தோலைத் தான் வில்லுக்கு நாணாகவும், உட்காருவதற்கு ஆசனமாகவும், சோம பானம் வடிகட்ட அடித்தளமாகவும் பயன்படுத்தினர். பசுவே, உன் உடம்புதான் எனக்கு மருந்து என்கிறது ஒரு மந்திரம். (10.100.10)  இதிலிருந்து பசுக் கொலை சர்வ சாதாரணமான நிகழ்ச்சி என்பதை அறியலாம்.

    பசுவைக் குறிப்பிடும்போது 20 இடங்களில் அக்ன்யா என்ற பெயரால் குறிப்பிடுகிறார்கள். (4.1.6, 1.30.19) அக்ன்யா என்றால் கொல்லத் தகாதது என்று பொருள். பசு என்று சொல்லாமல் கொல்லத் தகாத மிருகம் என்று அழைப்பதற்குக் காரணம் என்ன?

    காளைகளும் மலட்டுப் பசுக்களும் மட்டுமே கொல்லத் தக்கவை. பால் தரும் பசுக்கள் கொல்லத் தகாதவை என்ற கருத்து ஏற்பட்டிருப்பது தெரிய வருகிறது. பால் பொருட்களை மிகுதியாகப் பயன்படுத்தத் தொடங்கியபின் பசுவின் பொருளாதார மதிப்பை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.
    விவசாயத்துக்குக் குதிரைகளைப் பயன்படுத்தியதற்கான குறிப்புகள் கிடைக்கின்றன. காளைகளைப் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை. எனவே இன விருத்திக்கு மட்டுமே காளைகள் தேவைப்பட்டிருந்தன. அதற்கு மந்தைக்கு ஒன்று போதுமே, மற்றவை பயனற்ற சுமை தானே என்ற நிலை நிலவி இருக்க வேண்டும்.

    விவசாயம் செய்த பயிர்களைக் காப்பாற்றுவதற்காக தேவையற்ற மலட்டுப் பசுக்களையும் காளைகளையும் கொல்வது அவர்களுக்கு அவசியமாக இருந்தது. அதனால் அவர்களது உணவுத் தேவையும் நிறைவு பெற்றது. இச்செயலில் அகிம்சை, கருணை என்ற கோட்பாடுகள் குறுக்கிடவில்லை.

    அதற்கும் பிந்திய காலத்தில், மாடுகளின் எண்ணிக்கை மிகக் குறைந்த பின் அவற்றைக் கொல்வதற்கு எதிரான இயக்கம் தோன்றி இருக்க வேண்டும். இருப்பினும் சமயச் சடங்குகளை உடனடியாக மாற்றுவது என்பது எக்காலத்திலும் கடினமான செயல் தான். எனவே யாகங்களில் மட்டும் மிருகங்களைக் கொல்வது தொடர்ந்து நடைபெற்றிருக்க வேண்டும்.

    புத்த ஜைன மதங்கள் அகிம்சைக் கொள்கையைப் பரப்பியபோது வேத சமயம் அதை உடனடியாக ஏற்றுக் கொண்டிருக்காது. ஆரம்பத்தில் அதற்கு எதிர்ப்பு இருந்திருக்கும். நாளடைவில் அது வேத சமயத்தின் முக்கியக் கொள்கைகளில் ஒன்றாக ஆகிவிட்டது. வேதக் கருத்துக்கு மாறான கருத்தை வேத சமயம் எப்படி ஏற்றுக் கொண்டது?

    உண்மை என்னவென்றால் அகிம்சை வேத சமயத்துக்கு முற்றிலும் விரோதமான கருத்து அல்ல. வேதத்தில் பல இடங்களில் சம் த்விபதே சம் சதுஷ்பதே என்ற வாசகம் காணப்படுகிறது. இரண்டு கால் பிராணிகளுக்கும் நலம் உண்டாகட்டும். நான்கு கால் பிராணிகளுக்கு நலம் உண்டாகட்டும் என்று பிரார்த்தனை செய்யப்படுகிறது. அந்த மந்திரத்தின் பொருளை ஆழ்ந்து சிந்தித்தவர்கள் அகிம்சையை ஏற்றுக் கொண்டிருப்பர்.

    மேலும், வேதத்தில் பெரிதும் வலியுறுத்தப்படும் ருதம் என்பதைப் பற்றி அடுத்த பகுதியில் படிக்க இருக்கிறோம். ருதம் என்பது சார்ந்தாரைக் காத்தலைக் குறிக்கும். எனவே நம்மைச் சார்ந்து வாழும் மிருகங்களைக் காப்பாற்றுவது முக்கியமான தர்மமாகக் கருதப்பட்டது.

    வண்டி இழுக்கும் நல்ல குதிரை- நெல்லு
    வயலில் உழுது வரும் மாடு
    அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு- இவை
    ஆதரிக்க வேணுமடி பாப்பா – பாரதி

    இவ்விரு கருத்துகளின் விரிவாக்கம் தான் அகிம்சைக் கொள்கை. வேதத்தில் சுருக்கமாகச் சொல்லப்பட்டுக் கண்ணுக்குப் புலப்படாமல் இருந்த இதை விளக்கிச் சொன்னார்கள் புத்தரும் மகாவீரரும். ஒரு வகையில் அவர்களும் வேத ரிஷிகளுக்கு நிகரானவர்கள்தான். அவர்கள் தங்கள் கருத்தைப் பாலி மொழியில் சொல்லாமல் வேத மொழியில் சொல்லியிருந்தால் அவையும் வேதத்தில் சேர்க்கப் பட்டிருக்கும்.

    வீரர்கள் பல நிறமுள்ள காளையைச் சமைத்தனர். அவை முற்கால தர்மமாக இருந்தன (1.164.43) என்று கூறப்படுவதும், வேள்வி செய்யும் மனிதனுடைய பசுக்கள் பயமின்றி மேய்ச்சல் தரையில் சஞ்சரிக்கட்டும், யக்ஞ பலி பீடங்களுக்கு அவை போகாமல் இருக்கட்டும் (6.28.4)  என்ற பிரார்த்தனையும் மிருக பலிக்கு எதிரான எண்ண அலை உருவாகி வளர்ந்த வரலாற்றைக் குறிக்கும். வேறு சில மந்திரங்களில் பசுவைக் கொல்லாதீர்கள் என்ற வேண்டுகோள் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. (8.101.15, 16)

    இந்த மந்திரங்கள் புத்த ஜைன மதங்களுக்கு முந்திய காலத்ததாகவும் இருக்கலாம். பிற்காலத்தில் எழுதப்பட்டு வேதத்தில் நுழைக்கப்பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு.

    மிருக பலி பற்றிய குறிப்புகள் குறைவாகவும் ஒரு சில சூக்தங்களில் மட்டும் குவிந்ததாகவும் உள்ளன. தானிய ஹவிஸ் பற்றிய குறிப்புகள் மிகுதியாகவும், பரவலாகவும் இருப்பதிலிருந்து பலியிடுவது வர வரக் குறைந்து கொண்டு வந்திருக்கக் கூடும் என்று ஊகிக்க இடம் தருகிறது.

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 36

    சு.கோதண்டராமன்.

    முரண்பாடான கருத்துகள்

     

    Five_great_Yagnas

     

    சென்ற பகுதிகளில் யக்ஞம் பற்றிக் கூறப்பட்டவற்றை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவோம்.

    தேவர்களைக் குறித்து அக்னியில் ஆகுதி செய்வது தான் யக்ஞம். இதனால் தேவர்கள் மகிழ்கிறார்கள். இது உணவு, சந்ததி, ஆயுள் முதலான எல்லா நலன்களையும் தரும். இதுவே உலகின் மையப்புள்ளி. யக்ஞம் செய்யாதவர்கள் அழிகிறார்கள் என்று சொல்லப்பட்டது.

    ஆகுதி மட்டுமே யக்ஞம் ஆகாது. பிரார்த்தனை இல்லாமல் யக்ஞம் பயனில்லை. ஆனால் யக்ஞம் இல்லாமல் பிரார்த்தனை மட்டுமே பலன் தரும் என்ற கூறப்படுவதைப் பார்த்தோம்.

    இதற்கு மாறாக, வெறும் தோத்திரங்கள் பலன் தரா, ஹவிஸும் அவசியம் என்றும் கூறுகிறது வேதம். (8.9.6)

    யக்ஞம் செய்தால் மட்டும் போதாது, கடுமையாக உழைக்கவும் வேண்டும். பிறர் நலனுக்காகச் செய்யப்படும் அருஞ்செயலான சமீகள் யக்ஞத்தை விட மேலானவை. யக்ஞம் செய்யாதவருக்கும், சமீகள் தேவ பதவியைக்கூடப் பெற்றுத் தரும் என்று சொல்லப்பட்டிருப்பதையும் பார்த்தோம்.

    இப்படி ஒன்றுக்கொன்று முரணான செய்திகள் காணப்படுவதால் குழப்பமே ஏற்படும். வேதத்தில் ஏன் இப்படிக் குழப்பம்? அதனுடைய உண்மையான நிலை என்ன? தீ மூட்டி வழிபாடு செய்வதா, வேண்டாமா? ஆராய்வோம்.

    வேதத்தில் இருவகையான எண்ண ஓட்டங்கள் காணப்படுவது உண்மை. சடங்குக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மந்திரங்களும் உள்ளன. சடங்கை விட பக்தி மனோபாவம், உழைப்பு இவைதான் முக்கியம் என்று கூறும் மந்திரங்களும் உள்ளன.

    வெவ்வேறு ரிஷிகள் வெவ்வேறு விதமாகப் பேசினால் இது அந்தந்த ரிஷியின் கருத்து என்று விட்டுவிடலாம். ஒரே ரிஷியின் பெயரால் வழங்கும் சூக்தத்திலேயே இருவகைக் கருத்துகளும் வரும்போது அதற்குக் காரணம் என்ன என்று ஆராயத் தோன்றுகிறது.

    வேதம் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு ரிஷிகளால் இயற்றப்பட்டது, வியாசரால் தொகுக்கப்பட்டது என்பதை நாம் அறிவோம்.

    வேத இலக்கியத்தின் மிகப் பழைய நூல் ரிக் வேதம். ரிக் வேதத்திலும் அதன் ஆறாவது மண்டலம் மிகப் பழமையானது. இந்த ஆறாவது மண்டலம் இயற்றப்படுவதற்கு முன்பும் மக்கள் இருந்தார்கள். நாகரிகம் இருந்தது. மொழி இருந்தது. அதற்கு ஒரு இலக்கணம் இருந்தது. இலக்கியங்கள் இருந்திருக்க வேண்டும். யாப்பிலக்கணமும் இருந்தது. சந்தஸ்கள் வரையறுக்கப்பட்டிருந்தன.

    இவ்வளவு வளர்ச்சி பெற்ற மக்களிடம் கடவுள் பற்றிய ஏதோ ஒரு கோட்பாடும் இருந்திருக்க வேண்டும். அக்னியையும் இந்திரனையும் வேத ரிஷிகள் புதிதாகக் கண்டு பிடித்துச் சொல்லவில்லை. முன்பே அந்தத் தேவர்களும் இருந்தார்கள், அவர்களுக்கான ஏதோ ஒரு வழிபாட்டு முறையும் இருந்திருக்கிறது.

    வேத ரிஷிகள் இதில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருகிறார்கள். ரிஷிகளின் வாக்கில் “நாம் ஒரு புதிய பிரார்த்தனை படைப்போம்” என்ற கருத்து அடிக்கடி காணப்படுகிறது. (6.17.13, 6.18.15) அப்படிப் புதிய பிரார்த்தனை புதிய கருத்துகளுடன் படைக்கும்போது அவர்கள் பழைய கருத்துகளுடன் மோதவில்லை, தவறு என்று ஒதுக்கவில்லை. நான் சொல்வது மட்டுமே உண்மை என்று கூறாமல், ஒரே உண்மையைப் பலர் பலவிதமாகக் காண முடியும் என்பதை ஏற்றுக் கொண்டு பழைய கருத்துகளையும் முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறார்கள்.

    ஒரே மந்திரம் வெவ்வேறு ரிஷிகளின் பெயரால் வழங்கப்படுகிறது. (உ-ம் 1.23.20 – 10.72.2) இதிலிருந்து பழைய ரிஷிகளின் மந்திரங்கள் பிற்காலத்தவரால் தங்கள் புதிய படைப்புகளுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன என்று நாம் அறிகிறோம்.

    ஒன்று உள்ளது. அதைப் பலரும் பல விதமாகப் போற்றுகிறார்கள் என்பது அவர்கள் கொள்கை. (1.164.46) எனவே பழைய கருத்துகளை அலட்சியம் செய்யாமல் அதையும் சேர்த்துக் கொண்டு புதியதும் படைக்கிறார்கள். இதுதான் இந்த இரு வகையான வேறுபட்ட எண்ண ஓட்டங்களுக்குக் காரணம்.

    தீ மூட்டி வழிபடுவது பழைய வழக்கமாக இருக்கக் கூடும். புதிய ரிஷிகள் அதைக் கண்டிக்கவில்லை. அத்துடன் கூடத் தங்கள் கருத்துகளையும் சொல்கிறார்கள். யக்ஞத்தை விட சமீ மேலானது, யக்ஞம் மட்டும் போதாது, உழைக்கவும் வேண்டும், ஆகுதி மட்டுமே யக்ஞத்தை முழுமை ஆக்காது, பிரார்த்தனையும் நமஸ்காரமும் புத்தியும் அவசியம் என்று வருபவை தாம் அந்தப் புதிய கருத்துகள்.

    புதிய கருத்துகளைத் தனி அத்தியாயமாகப் பிரித்து வைக்காமல் ஒரே சூக்தத்திலேயே முந்திய ரிஷிகள் செய்த பழைய பாடல்களையும் போற்றுகிறார்கள், புதிய கருத்துகளையும் சொல்கிறார்கள். பிறருடன் முரண்படாமல் தன் கருத்தைக் கூறும் இந்த முறை ரிக் வேதத்தின் சிறப்பு.

    இதை மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்களா? எப்பொழுதும் எந்தப் புதிய கருத்துக்கும் வரவேற்பு இருப்பதும் எதிர்ப்பு இருப்பதும் இயற்கை. அது போல, ரிக் வேத ரிஷிகளின் இந்தப் புதுமைகளைச் சிலர் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடும். சிலர் புறக்கணித்துப் பழைய முறைகளையே அனுசரித்து இருக்கக் கூடும். அவரவர் இஷ்டம் போல் வழிபடலாம் என்ற சுதந்திரம் இருந்ததால் இந்த இரு சாராரிடையே பிணக்குகள் பிளவுகள் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. எல்லோரும் அதே வேதத்தைப் பின்பற்றி வந்தனர்.

    நாளடைவில் பழைய சடங்குக் கட்சியினரின் கை ஓங்கியிருக்க வேண்டும். அவர்கள் ரிக் வேத மந்திரங்களில் பலவற்றை வேள்விக்குப் பயன்படும் வகையில் ஆங்காங்கு மாற்றிக் கொண்டனர். அதில் வேள்வியை வலியுறுத்தும் பல புதிய மந்திரங்களையும் சேர்த்துக் கொண்டனர். தங்கள் சந்ததியினருக்கு அதை மட்டுமே சொல்லிக் கொடுத்தனர். இந்தப் புதிய தொகுப்பு யஜுர் வேதம் (வேள்விக்கான வேதம்) என்று பெயரிடப்பட்டது.

    யஜுர்வேதத்தில் பிரார்த்தனையை விட, மனோபாவத்தை விட அக்னியில் செய்யப்படும் ஆகுதிச் சடங்குக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. யாக குண்டம் எப்படி அமைய வேண்டும், எத்தனை செங்கற்கள் அடுக்கப்பட வேண்டும், ஹவிஸ்ஸாக என்னென்ன பொருள் சமர்ப்பிக்கப்பட வேண்டும், அப்பொழுது என்ன மந்திரம் சொல்லப்பட வேண்டும் என்பது பற்றிய தகவல்களே மிகுதியாகக் கொண்டது யஜுர்வேதம். பிராமண இலக்கியங்களில் இது மேலும் விரிவடைந்தது. இவை வேத மந்திரங்களின் பொருளை யாகத்திற்குப் பயன்படும் வகையில் விளக்கின.

    யாகங்கள் மிகுதியாகப் பெருகியதால் இவை சாமானிய மக்களின் சக்திக்கு அப்பாற்பட்டதாக ஆயின. அந்நிலையில் தான் யாக முறைகளைக் கண்டிக்கும் புத்த சமண சமயங்கள் தோன்றின. யாகங்களுக்குப் புதிய தத்துவ விளக்கம் தந்து அவற்றை மறைமுகமாக எதிர்க்கும் உபநிடதங்கள் தோன்றின.

    இந்திரனைத் துதிக்கும்போது நீயே முதல் தெய்வம் என்று கூறுவதும் அவ்வாறே அக்னியைப் போற்றும்போது நீயே பரம்பொருள் என்று பேசுவதும் முரண்பாடு போல நமக்குத் தோன்றும். ஆனால் அவை முரண்பாடு அல்ல, எப்பெயரிட்டு அழைத்தாலும் தெய்வம் ஒன்று என்பதன் அடிப்படையில் சொல்லப்பட்டது என்பதை முன்பு பார்த்தோம்.

    அதே போல யக்ஞம் செய்து வழிபடுவதும் யக்ஞம் செய்யாமல் வழிபடுவதும் இரண்டுமே ஒன்றுதான். வழிபாடு தான் முக்கியமே தவிர, முறை முக்கியம் அல்ல என்பதே வேதத்தின் கருத்து.

     

     

     

    படம் உதவி: விக்கிபீடியா

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 35

    சு.கோதண்டராமன்.

     

    யக்ஞத்தை விடமேலான வழிகள்

    http://www.dreamstime.com/-image1626895

    யக்ஞத்தை விட பிரார்த்தனை சிறந்தது:
    மருத்துகள் பக்தர்களின் வழிபாட்டை யக்ஞத்துடனோ அல்லது பிரார்த்தனைகளுடனோ ஏற்றுக் கொள்கிறார்கள் (1.86.2) என்று சொல்லப் படுவதிலிருந்து யக்ஞம் இல்லாமல் வெறும் பிரார்த்தனை மந்திரங்கள் மட்டுமே கொண்டு வழிபடுவதும் ஏற்றுக் கொள்ளக் கூடியது என்று அறிய முடிகிறது. பிரார்த்தனை இல்லாமல் யக்ஞம் பயனில்லை. அதே நேரத்தில் யக்ஞம் இல்லாமல் பிரார்த்தனை மட்டுமே பலன் தருவது என்பதால் யக்ஞம் என்பது வெளிப்புறச் சடங்கு மட்டுமே என்பதும் அதை விடப் பிரார்த்தனையே அதிகப் பலன் தருவது என்பதும் தெரிய வருகிறது.

    அதே கருத்து வேறு வகையாகவும் சொல்லப்படுகிறது – இந்திரனை யக்ஞங்களால் மனிதர்கள் அறிவதில்லை. அவர்கள் ஸ்தோமங்களால் அறிகிறார்கள் (1.131.2).

    உழைப்பின் முக்கியத்துவம்:
    யக்ஞமும் செய்து கடுமையாக உழைக்கவும் செய்பவனுக்கு தேவர்கள் அருள் புரிகிறார்கள் (1.142.2, 4.23.2, 6.3.2).

    தேவர்கள் எப்பொழுதும் கடுமையாக உழைப்போருக்கு நண்பர்களாக இருப்பர் (4.33.11) என்று கூறும் வேதம் வேள்வியோடு கூட முயற்சியும் தேவை என்பதை வலியுறுத்துகிறது.

    யக்ஞத்தை விட சமீ மேலானது:
    ரிபு சகோதரர்களைப் பற்றி முன்னர் பார்த்ததை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவோம். அவர்கள் ஒரு மண் கிண்ணத்தை நான்காக மாற்றினர். தங்கள் பெற்றோர்களை இளமையாக்கினர். எலும்பும் தோலுமாக இருந்த ஒரு பசு மாட்டை உயிர்ப்பித்தனர். இந்திரனுடைய ரதத்திற்காக, வாய்ச் சொல்லைப் புரிந்து கொண்டு செயல்படவல்ல இரு குதிரைகளை உருவாக்கினர். அச்வின்களுக்காக மூன்று சக்கரம் உடைய, எளிதில் இயங்க வல்ல ஒரு ரதத்தை உருவாக்கினர்.

    அவர்களுடைய செயல்கள் தீ வழிபாடு என்ற பெயருக்கு உரியவை அல்ல. வேதத்தில் அவை சமீ என்ற சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. தமிழில் அருஞ் சாதனை என்று கூறலாம்.

    யக்ஞத்தினால் ஏற்படக்கூடிய பலன்களை ரிபுக்கள் சமீ மூலமாக அடைந்தார்கள் என்கிறது வேதம் (1.20.2).

    ஆழ்ந்து ஆராய்ந்தால் யக்ஞத்தை விட சமீ மேம்பட்ட பலனைத் தருவது என்பதை அறிய முடியும். யக்ஞம் மனிதனை ரிஷி நிலைக்குத் தான் உயர்த்தும். சமீயோ மனிதனைத் தேவநிலைக்கு உயர்த்தும். ஆம், ரிபுக்கள் தேவர்களுக்குச் சமமாக ஹவிர்பாகம் பெறும் உரிமையும் அமரத்வமும் பெற்றனர்.

    வணங்கினாலோ, சமீ செய்தாலோ, அல்லது மகம் (யாகம்) செய்தாலோ அக்னி அவருக்கு வளங்களை அளிக்கிறார் (8.75.14) என்று சொல்லப்படுவதிலிருந்து சமீயும், வணக்கமும் யாகத்தைப் போலவே பலன் தருபவை என்பது பெறப்படுகிறது.

    இந்திரனுக்கே ஆகாயத்தைத் தூக்கி நிறுத்தியது போன்ற பல அருஞ் செயல்கள் செய்ததனால்தான் இந்திர பதவி கிடைத்தது என்கிறது ரிக் வேதம் (8.89.5, 8.89.6).

    இவற்றிலிருந்து வேதம் யக்ஞத்தை மட்டுமே உயர்வாகப் பேசவில்லை, பிரார்த்தனைக்கும் உழைப்புக்கும் சமமான முக்கியத்துவம் தருகிறது என்பதை அறிகிறோம்.

    படம் உதவி: http://www.dreamstime.com/royalty-free-stock-photo-gold-statue-indian-woman-praying-hands-image1626895

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 34

    சு.கோதண்டராமன்.

     

    யக்ஞம் – உலகின் மையப் புள்ளி

    yajna

     

     

    தேவ என்ற சொல்லுக்கு அடுத்தபடியாக ரிக் வேதத்தில் மிகுதியாகத் தென்படும் வார்த்தை யக்ஞம் என்பதாகும். வழிபடுதல் என்ற பொருள் உடைய யஜ் என்ற தாதுவிலிருந்து தோன்றியது இது. யஜ் என்ற வினைச் சொல்லும் அதனிடத்தில் தோன்றிய யக்ஞம், யஜமான, யஜிஷ்ட, யக்ஞிய, யஜத்ர முதலான சொற்களும் ஆயிரம் தடவைகளுக்கு மேல் ரிக் வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    யக்ஞம் என்றால் என்ன?
    யக்ஞம் என்ற சொல்லுக்கு வழிபாடு என்பது பொருள். யாகசாலையில் அக்னியை மூட்டி சமித்தையும் நெய்யையும் இட்டு ஸ்வாஹா முதலான மந்திரங்களுடன் செய்யப்படும் வழிபாடு யக்ஞம் என்பதாக வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. யக்ஞத்தில் முதலில் அக்னி அழைக்கப்பட்டு தோத்திரங்களால் மகிழ்விக்கப்படுகிறார். ஹவிஸ் என்று அழைக்கப்படும் ஒரு உணவு அக்னியில் இடப்படுகிறது. அதைத் தேவர்களிடம் சேர்ப்பிக்கும்படி அவர் வேண்டிக் கொள்ளப்படுகிறார். ஹவிஸை எடுத்துக் கொண்டு அக்னி தேவலோகத்துக்குச் சென்று தேவர்களிடம் தந்து அவர்களைப் பூமிக்கு வருமாறு அழைக்கிறார். அதனால் மகிழ்ச்சி அடைந்த தேவர்கள் பூமிக்கு வருகிறார்கள். விதத என்று அழைக்கப்படும் யாக சாலையில் பர்ஹிஸ் எனப்படும் தர்ப்பாசனத்தின் மீது அமர்ந்து, அங்கு அளிக்கப்படும் சோம பானத்தைக் குடிக்கிறார்கள். மேலும் மகிழ்ச்சி அடைந்த அவர்கள் பக்தர்களுக்குப் பல வகை வரங்களைத் தருகிறார்கள். இவ்வாறு அக்னி தேவலோகத்துக்கும் பூலோகத்துக்கும் இடையில் தூதராகப் பணிபுரிவதாக வேதம் கூறுகிறது. ஹவிஸ் என்பது பொதுவாக, பக்குவப்படுத்தப்பட்ட தானியங்களைக் கொண்டதாகவும், சில சமயங்களில் மிருகங்களைக் கொண்டதாகவும் இருப்பது தெரிய வருகிறது.
    யக்ஞம் வேத காலத்து வழிபாட்டு முறை. கோயில், சிலைகள், பூவினால் அர்ச்சனை செய்தல், அபிஷேகம், பிரதட்சிணம், ஹாரத்தி முதலான வேறு வகையான வழிபாட்டு முறைகள் ரிக் வேதத்தில் சொல்லப்படவில்லை.

    யக்ஞத்தில் அக்னிக்குச் சிறப்பிடம்:
    எல்லாத் தேவர்களுக்கும் அக்னி மூலமாகத்தான் ஹவிஸ் போய்ச் சேருகிறது. எனவே யக்ஞத்தில் அக்னிக்கு ஒரு சிறப்பிடமும் அதன் காரணமாகச் சில சிறப்புப் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
    யக்ஞத்தின் கேது (அடையாளம்),
    யக்ஞத்தின் தேவன்,
    யக்ஞபந்து,
    யக்ஞ பிதா, யக்ஞ ப்ராவிதா- அபிசஸ்தி பாவா (காப்பாற்றுபவர்)
    யக்ஞநீ- யக்ஞநேதா- யக்ஞபூர்வ்ய (தலைவர்),
    புரோஹித (முன் நிலையில் வைக்கப்படுபவர்)
    ரித்விக்- ஹோதா- யந்தா, யக்ஞ ஸாதக (நடத்துபவர்),
    அத்வரஸ்ரீ (வேள்விச் செல்வம்),
    ஹவ்ய வாட்- ரத்ய- யக்ஞ வாஹ (ஹவிஸைச் சுமந்து செல்பவர்),
    யக்ஞ நாபி (மையம்),
    ஸுக்ரது (நன்றாக யாகம் செய்பவர்),
    யக்ஞ வித்வான் (யக்ஞங்களை நன்றாக அறிந்தவர்),
    அத்வரேஷு ஈட்ய (யாகங்களில் போற்றப்படுபவர்)

    அக்னி யக்ஞத்தைத் தூண்டுகிறார். அவர் தீமை செய்பவர்களையும் தீயன பேசுபவர்களையும் அழித்து பக்தர்களுக்கு யக்ஞத்தின் பாதையை எளிதாக ஆக்குகிறார். நற்செயல்கள் செய்வோர் வீட்டில் யக்ஞத்தை நிலை நிறுத்துகிறார். பூமிக்கும் ஆகாயத்துக்கும் இடையில் போய் வருகிறார். ஹவிஸ்ஸை தேவர்களுக்கு அளித்து திருப்தி செய்விக்கிறார். யக்ஞம் பற்றி நமக்கு எதுவும் தெரியாவிட்டாலும் அக்னி தானே பொறுப்பேற்று யக்ஞத்தை நிறைவேற்றிக் கொடுக்கிறார். அவர் யக்ஞத்தின் வடிவம்.

    எல்லாத் தேவர்களும் யக்ஞத்திற்கு வருகிறார்கள். அவர்கள் அதனால் மகிழ்விக்கப் படுகிறார்கள், வலுவூட்டப்படுகிறார்கள். அவர்கள் யக்ஞத்தைக் காக்கிறார்கள். யக்ஞம் செய்யும் யஜமானனுக்கு அவர்கள் நீண்ட ஆயுள், பாதுகாப்பு, பாவங்களிலிருந்து விடுதலை, செல்வம், புகழ், வலிமை, வெற்றி, சந்ததி, குதிரைகள், உணவு மற்றும் அக்னியின் சக்தி ஆகியவற்றை அளிக்கிறார்கள். பித்ருக்களும் யக்ஞங்களால் மகிழ்கிறார்கள்.

    யக்ஞமும் யாகமும் :

    யாகம் என்ற சொல்லும் யக்ஞம் என்ற பொருளிலேயே தற்போது வழங்கப்படுகிறது. ஆனால் இது ரிக் வேதத்தில் காணப்படவில்லை, பிற்காலத்தில் ஏற்பட்டது. யக்ஞம் என்ற சொல் ஆழமான பொருள் உடையது. பிற்காலத்தில் அது மேலும் விரிவடைந்தது. யாகம் என்ற சொல் அக்னி வழிபாட்டை மட்டுமே குறிப்பதாக நின்று விட்டது. தமிழில் வேள்வி என்பதும் இந்தத் தீ வழிபாட்டை மட்டுமே குறிப்பதாக இருக்கிறது. யக்ஞத்தின் விரிவான பொருளைப் பற்றிப் பின்னர் பார்க்கலாம்.

    யக்ஞத்தின் துணை அங்கங்கள்- மனம் :
    யக்ஞத்தில் ஹவிஸ்ஸை விட முக்கியமானது மனப்பாங்குதான். “என்னிடம் யக்ஞத்தில் சமர்ப்பிக்க நெய் இல்லை அதற்குத் தேவையான பசு இல்லை. சமித்து கொண்டு வருவோம் என்றால் அதை வெட்டி வருவதற்கான கோடரியும் இல்லை. கரையான் அரித்த சுள்ளிகளும் எறும்பு மொய்த்த எண்ணெயும்தான் உள்ளன. இதையே நெய்யாக ஏற்றுக் கொள்க” என்று அக்னியை வேண்டுகிறார் ஒரு ரிஷி. (8.102.19, 8.102.21)

    அக்னியில் நெய், ஹவிஸ் சேர்ப்பிப்பது நம் மனதில் இருக்கும் நன்றி மற்றும் பணிவின் அடையாளம். ஆனால் இவை மட்டும் போதாது.

    தேவர்களுக்கு நமஸ்காரம் செய்வதன் மூலம் நம் மனதின் வணக்கத்தை உடலால் வெளிப்படுத்த வேண்டும்.

    பெற்ற உதவிகளுக்கு நன்றி தெரிவித்தும் மேற்கொண்டு உதவிகள் கோரியும் பிரார்த்தனை மந்திரங்களைக் கூறவேண்டும். இது வாக்கினால் செய்யப்படுவது. பிரார்த்தனை இல்லாத யக்ஞம் பலன் தருவதில்லை என்கிறது வேதம்.(10.105.8)

    பிரார்த்தனையில் அர்க்க, உக்த, கிர, ப்ரஹ்ம, ஸ்தோமம் (अर्क, उक्थ, गिरः, ब्रह्म, स्तोम) என்ற ஐந்து வகை உண்டு. இவற்றின் தனித் தன்மை என்ன என்பது அறியப்பட முடியவில்லை. இது தவிர தீதி, தீ:, மன்ம, மதி, கான என்ற சொற்களும் (धीतिः, धीः, मन्म, मतिः, गानम्) பிரார்த்தனையையே குறிக்கின்றன.

    செய்யும் யக்ஞத்தை எதற்காகச் செய்கிறோம் என்பதை உணர்ந்து செய்யவேண்டும். இதற்கு புத்தியைப் பயன்படுத்தல் அவசியமாகிறது.

    இவ்வாறு மனம், வாக்கு, உடல், புத்தி இந்த நான்கும் ஒருங்கிணைந்து ஸ்தோமம், நமஸ்காரம், ஹவிஸ், சோமம் எல்லாம் சேர்ந்த யக்ஞம்தான் அத்வரம், அதாவது, குறைவில்லாத, முழுமையான யக்ஞம் ஆகும்.

    கீழ்க்கண்ட மந்திரங்கள் வெறும் ஆகுதி மட்டுமே முழுமையான யக்ஞம் ஆகாது, அது அத்வரமாக ஆவதற்கு, அதாவது குறை இல்லாமல் இருக்க அத்துடன் ஸ்தோமம், நமஸ்காரம், புத்தி, ஹவிஸ் சேரவேண்டும் என்பதைத் தெரிவிக்கின்றன.
    சோமா, இந்த யக்ஞத்தையும் பிரார்த்தனை மந்திரங்களையும் ஏற்றுக்கொள்க. (1.91.10)
    நாங்கள் இந்திரனை யக்ஞத்தைக் கொண்டும் மந்திரங்களைக் கொண்டும், ஹவிஸைக் கொண்டும் வழிபடுகிறோம்.(10.24.2)
    இந்த யக்ஞத்தில் நான் பூமியையும் ஆகாயத்தையும் நமஸ்காரத்தைக் கொண்டு போற்றுகிறேன்.(1.185.7)
    நாங்கள் பிரகஸ்பதிக்கு யக்ஞங்களைக் கொண்டும் நமஸ்காரங்களைக் கொண்டும் ஹவிஸைக் கொண்டும் வழிபடுகிறோம். (4.50.6)
    புரோகிதர்கள் அக்னியை யக்ஞத்தைக் கொண்டும் புத்தியைக் கொண்டும் வழிபடுகிறார்கள். (3.27.6)

    யக்ஞத்தின் பொருள் விரிவடைதல் :
    யக்ஞம் என்பது ஆகுதியை மட்டும் குறிப்பதல்ல என்பதைக் கீழ்க் கண்ட மந்திரம் கூறுகிறது.
    தேவர்கள் யக்ஞம் செய்கிறார்கள்.(10.90.15, 16)
    தேவர்கள் அக்னிக்கு யக்ஞம் செய்கிறார்கள். (5.21.3)
    அக்னி, மானிடர் சார்பில், தேவர்களுக்கு யக்ஞம் செய்கிறார். (1.15.12)
    அக்னி மானிடர்களுக்கு யக்ஞம் செய்கிறார். (1.26.3)

    தேவர்கள் நம்மைப் போல் யாக குண்டம் அமைத்து நெய், சமித், ஹவிஸ் இவற்றைக் கொண்டு ஆகுதி செய்தார்கள் என்பதற்கான சான்றுகள் எதுவும் வேதத்தில் இல்லை. எனவே மேற்கண்ட மந்திரத்தில், யக்ஞம் என்ற சொல் தீ மூட்டி ஹவிஸ்ஸைச் சமர்ப்பித்தல் என்ற பொருளில் அல்லாமல், வணங்குதல் அல்லது மரியாதை செய்தல் என்ற பொருள் உடையதாகக் காணப்படுகிறது. மற்ற தேவர்களும் அக்னியும் ஒருவர்க்கொருவர் உதவி செய்கிறார்கள். தங்கள் நன்றியைத் தெரிவிக்கும் வகையில் வணக்கம் செய்கிறார்கள் என்பதுதான் ஒருவர்க்கொருவர் யக்ஞம் செய்வதாகக் கூறப்படுகிறது.

    போரில் வெற்றி பெற உதவும் ரதத்திற்கு யக்ஞம் செய்வதாகவும் ரதம் அதை ஏற்றுக் கொள்வதாகவும் கூறும் மந்திரங்கள் உள்ளன.(6.47.27, 6.47.28)

    போரில் வெற்றி பெற ரதம் எவ்வளவு உதவியாக இருந்தது என்பதை அந்த மனிதர் நன்றியுடன் நினைவு கூர்வதாகத் தான் இதற்குப் பொருள் கொள்ள வேண்டும்.

    எனவே உதவி செய்தவர்களை நன்றியுடன் நினைவு கூர்வதும், அவர்களை மேலானவர்களாகக் கருதி அவர்களிடம் பணிவுடன் இருப்பதும் யக்ஞம் என்பதன் விரிந்த பொருள்.

    இது மேலும் விரிவடைந்ததைப் பின்னர் ருதமும் யக்ஞமும் என்ற தலைப்பில் பார்ப்போம்.

    அத்வரம் என்ற சொல்லின் விரிந்த பொருள் :
    அத்வரம் என்ற சொல்லின் பொருளும் மேலும் விரிவடைந்தது. அது பயணம் என்ற பொருள் தரும் அத்வ என்ற சொல்லிலிருந்து வந்தது, அது ஆன்மிக வாழ்க்கைப் பயணத்தைக் குறிக்கும் என்று அரவிந்தர் சொல்வது சில இடங்களில் பொருத்தமாக இருக்கிறது. அக்னியே, நீ எங்கள் யக்ஞத்தினால் மகிழ்வாயாக, எங்கள் அத்வரத்தினால் மகிழ்வாயாக(4.9.7) என்பதிலிருந்து அத்வரம் என்பது யக்ஞம் அல்லாத வேறொன்றாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. அக்னியே, நீ எனக்கு அத்வரத்தில் வலிமையும், மக்கட்பேறும், பெரும் செல்வமும், மகிழ்ச்சியும், புகழும் தருவாயாக (3.16.6)  என்ற மந்திரத்தில் அத்வரம் என்பதற்கு வாழ்க்கை என்ற பொருள்தான் பொருத்தமாக உள்ளது.

    அக்னியே, நீ யக்ஞங்களில் அமர்கிறாய். எங்கள் அத்வரங்களை நடத்துக. (1.14.11 )  இதில் யக்ஞம் என்பது முயற்சிகளையும் அத்வரம் என்பது வாழ்க்கையையும் குறிக்கும்.

    படம் உதவிக்கு நன்றி: https://www.kksblog.com/2013/04/accepting-krsnas-plan/

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 33

    சு.கோதண்டராமன்.

     

    நீர், ஒளி, பசுக்கள்

    BRAHMIN_VEDAS_by_VISHNU108

     

    மூன்று வகையான உருவகங்களும் பொருந்தாத மந்திரங்களும் உண்டு. கீழே வருவனவற்றைப் பாருங்கள்.
    பசுக்களை விரும்பி அங்கிரஸ்கள் உட்கார்ந்தார்கள். அமர வாழ்வுக்கான பிரார்த்தனைகளை இயற்றினர். ருதத்தின் (தர்மத்தின்) மூலம் அவர்கள் பல மாதங்கள் செய்த முயற்சி மகத்தானது. (3.31.9)
    அங்கிரஸ்கள் பிரார்த்தனைகள் மூலம் மலைகளைப் பிளந்து பசுக்களை மீட்டனர். (6.65.5)
    இந்திரா, குத்ஸனுக்காக நீ வைகறைப் பொழுதுகளைக் கொடுத்து நீரைப் பெருக விட்ட போது, உன்னிடம் நட்புக் கொண்ட புரோஹிதர்கள் ருதத்தை (தர்மத்தை) மனதில் கொண்டு வலனைக் கொன்றார்கள். (10.138.1)
    இந்திரா, பசுக்களை நாடும் எங்களுக்கு பசுச் செல்வம் பற்றிய அறிவைத் தருகிறாய். (1.33.1)
    இந்திரா, நீ யாரை விரும்புகிறாயோ, அவரிடம் பசுவை ஓட்டி வருகிறாய். (1.33. 3)
    இருட்டுக்கு அப்பால் எந்த ஒளிமயமான உணவு உள்ளதோ, அதை எங்களுக்குக் கொடு. (1.46.6)
    இருட்டு நீரைத் தடுத்தது. (1.54.10)
    இந்திரன் தன் நண்பர்களின் உதவியோடு பசுக்களைப் பின் தொடர்ந்தார், இருளில் மறைந்து கிடந்த சூரியனை வெளிப்படுத்தினார். (3.39.5)
    மேற்கண்ட மந்திரங்களில், பசு என்பது ஞான ஒளியின் குறியீடு என்றும் சரமா என்னும் நாய் மனிதனின் உள்ளுணர்வின் குறியீடு என்றும் அரவிந்தர் கூறுகிறார்.

    அக்னி மறைத்து வைக்கப்பட்ட நீரையும், ஒளியையும், பசுக்களையும் (अपः, स्वः, गाः) கண்டுபிடித்தார். (5.14.4)
    சோமன் நீர் ஒளி பசுக்களை அடைய விரும்புகிறார். (9.90.4)
    சோமனே, எனக்கு நீர் ஒளி பசுக்களைத் தருவீராக. (9.91.6)
    மேலே காட்டியது போன்று பல இடங்களில் நீர், ஒளி, பசுக்கள் (ஆப, ஸ்வர், கோ) மூன்றும் சேர்த்துப் பேசப்படுகின்றன. அரவிந்தர் கூற்றுப்படி பசுவை ஞான ஒளி என்று கொண்டால் ஆப என்னும நீரையும் ஸ்வர் என்னும் ஒளியையும் எப்படிப் பொருள் கொள்வது? தெய்விக இன்பங்கள் என்ற அவரது விளக்கம் நமக்குத் தெளிவு தரவில்லை.

    இம் மூன்றுமே இறை அருளின் வெவ்வேறு நிலைகளைக் குறிக்கும் சொற்கள் என்று கொண்டால் இந்தப் பிரச்சினை தீர்ந்து விடுகிறது.

    எல்லா உயிர்களுக்கும் அடிப்படையில் உணவு முதலான உடல் தேவைகள் உள்ளன. மனிதரில் சிலர், பாரதி காட்டும் வேடிக்கை மனிதர்கள், இந்த உணவு நாட்டம் மட்டுமே கொண்டுள்ளனர். இதற்கு மேம்பட்ட நிலை ஒன்று உண்டு என்பதை உணராமலே வாழ்ந்து ஒரு நாள் கூற்றுக்கு இரையாகிறார்கள்.

    பல மனிதர்கள் இதோடு நிறைவு அடைவதில்லை. மற்றவரை விட மேம்பட்டு வாழ விரும்புகிறார்கள். அடுத்தவரை விடச் செல்வத்தில், வலிமையில், கல்வி கலைகளில் மேலோங்க முயல்கிறார்கள். சிலர் மட்டும் சாதனைகள் புரிந்து புகழ் பெற்று இறப்புக்குப் பின்னும் பிறரால் போற்றப்படும் நிலையை அடைகிறார்கள். வேதத்தில் பெரும்பாலான இடங்களில் இந்த தேவ நிலை, அமரத்துவம், ஸ்வர் என்னும் ஒளியே மனிதனின் லட்சியமாகக் காட்டப்பட்டுள்ளது.

    புகழை நாடுபவர்கள் அதற்கு மேல் நிலை ஒன்று இருப்பதை அறியார். சில மனிதருக்கு மட்டும் புகழ் நிலைக்கும் மேலான நிலை ஒன்று இருக்கக் கூடும் என்பது உள்ளுணர்வால் தெரிகிறது. தேவர்களுக்கெல்லாம் மேலான பரம் பொருள் ஒன்று இருக்க வேண்டும் எனக் கருதுகிறார்கள். அது பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும், அதனோடு இணைய வேண்டும் என்ற பேரவா கொள்கிறார்கள்.

    ஆனால் அதை அடைவது எளிதல்ல. மனிதனின் உலகியல் அறிவு அவனை மேல் நோக்க விடாமல் செய்கிறது.

    நேற்று எனக்கு உதவி செய்தவருக்கும், நாளை எனக்கு நிச்சயமாக உதவி செய்யக் கூடியவருக்கும் மட்டுமே நான் உதவி செய்வேன் என்று சொல்வது வணிக புத்தி. இதை நாம் இறைவனிடமும் காட்டுகிறோம். திருமணம் கை கூடினால் அபிஷேகம் செய்கிறேன், வேலை கிடைத்தால் 108 தேங்காய் உடைக்கிறேன் என்று வேண்டுவதும், இன்னின்ன தானம் செய்தால் இன்னின்ன நன்மை கிடைக்குமென்று நம்புவதும் அந்த வணிக புத்தியால் தான். இதனால் சிறு சிறு நன்மைகளைக் குறிக்கோளாகக் கொள்கிறோமே அன்றி உயர்ந்த லட்சியமாகிய நமக்கு உரிமையான பேரானந்தத்தை இழக்கிறோம். இந்த வணிக புத்தியைக் கொன்றால் தான் பேரானந்தமாகிய பசுக் கூட்டங்கள் நமக்குத் திரும்பக் கிடைக்கும் என்பதைத் தான் தேவர்கள் பணியைக் கொன்று பசுக்களை மீட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

    அங்கிரஸ்கள் தங்கள் உள்ளுணர்வால் ஆனந்தம் இருக்குமிடத்தை அறிந்தனர். உழைப்பாலும், நற்செயல்களாலும், பிரார்த்தனைகளாலும் மலையைப் பிளந்தனர், பசுக்களை அடைந்தனர் என்ற (1.83.4, 1.71.2) மந்திரங்கள் பெரும் முயற்சி செய்து பல தடைகளைக் கடந்து இறை அனுபவம் பெற்ற அங்கிரஸ்கள் மற்றவர்கள் பேரானந்தம் அடைய இதையே பாதையாக அமைத்தனர் என்பதையே காட்டுகின்றன.

    இறைவன் என்ன செய்கிறான்? உணவு நாட்டம் கொண்டவனுக்கு உணவு கிடைக்கச் செய்கிறான். இதற்கு மானிடன் பெருமுயற்சி செய்யத் தேவை இல்லை. கல்லினுட் தேரைக்கும் கருப்பை அண்டத்து உயிர்க்கும் புல்லுணவு அளித்துக் காக்கும் இறைவன் அதற்கு ஏதேனும் தடை ஏற்படும்போது அதை நீக்கி உணவு கிடைக்க அருள் புரிகிறான். இது தான் இந்திரன் விருத்திரனைக் கொன்று நீரைப் பெருக விட்ட கதை.

    ஸ்வர் என்பதும் ஜ்யோதி என்பதும் புகழைக் குறிக்கின்றன. இந்தப் புகழ் ஜ்யோதியை மறைக்கும் தஸ்யு யார்? ஜ்யோதியை எவராவது மறைக்க முடியுமா? ஆம். நமது கையிலுள்ள குடை மறைக்கக் கூடும். நாம் அமைத்துக் கொண்ட வீடு மறைக்கக் கூடும். நாம் கண் இமைகளை மூடினால் கூட ஜ்யோதி புலப்படாமல் போகும். நம் புகழை மறைக்கும் தஸ்யு வெளியில் இல்லை. நம்மிடத்தில் தான் இருக்கிறான். ராட்சசர்களைப் பற்றிப் பார்க்கும் போது ராட்சசர் என்பார் நம் மனத்தில் உள்ள தீய பண்புகள் தான் என்று பார்த்தோம். நாம் விரும்பிய போதும் முயன்ற போதும் புகழ் பெற முடியாமல் தடை செய்பவை சோம்பல், கவலை, கோபம், பயம், பொய், ஆசை ஆகிய நம் மனத்தில் உள்ள பகைவர்களே. இந்தப் பகைவர்களை வென்று நாம் புகழ் பெற வழி காட்டுகிறான் இறைவன். இது தான் தேவர்கள் தஸ்யுக்களை வென்று ஜ்யோதியை மீட்ட கதை.

    முதல் நிலையில் நீர் கிடைக்காத துன்பம் நாம் வேண்டாமலே நீக்கப்படுகிறது. இரண்டாவது நிலையில் புகழ் இல்லாத நிலை நம்முடைய மனத்தைத் தூய்மை செய்து கொண்டால் போய் விடுகிறது. மூன்றாவது நிலையில் பேரானந்தம் பிறர் நலனுக்கான நற்செயல்கள் செய்வதில் உழைப்பதாலும், பிரார்த்தனைகளாலும் கைகூடுகிறது. இந்த மூன்றுமே மனிதர்க்குத் தேவை என்பதைத் தான் நீர், ஒளி, பசு தருக என்று வேண்டும் மந்திரங்கள் தெரிவிக்கின்றன.

    படம் உதவி: http://vishnu108.deviantart.com/art/BRAHMIN-VEDAS-160338756

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 32

    சு.கோதண்டராமன்.

    தஸ்யு – மூன்று உருவகங்கள்

    indra-on-elephant

     

    தஸ்யுக்கள் என்போர் வேற்று இனத்தவர் அல்ல என்பதை அறிந்து கொண்டோம். பின் அவர்கள் யார்? இந்திரன் முதலானோர் ஆர்யர்களுக்காக தஸ்யுக்களை அழித்தனர் என வேதம் கூறுகிறது. தஸ்யுக்கள் ஆர்யர்களுக்கு இழைத்த தீங்கு என்ன? எதற்காக அவர்கள் அழிக்கப்பட்டனர்?

    தஸ்யுக்கள் பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று பார்த்தோம். அவர்களில் விருத்திரன் என்பவன் மலைப் பாம்பு வடிவத்தில் நீர் வரும் வழியில் படுத்துக் கொண்டு நீரைத் தடுத்தான். வலன் என்பவன் ஆர்யர்களுக்குச் சொந்தமான பசுக்களைச் சிறைப் பிடித்து வைத்திருந்தான். பெயர் குறிப்பிடப்படாத சில தஸ்யுக்கள் ஆர்யர்களுக்குச் சொந்தமான ஒளியைத் திருடிக் கொண்டனர். இந்திரன் விருத்திரனைக் கொன்று ஆறுகளைப் பெருகச் செய்தார். வலனைக் கொன்று பசக்களை மீட்டார். மற்ற தஸ்யுக்களைக் கொன்று ஒளியை மீட்டார்.

    ஒளியை யார் திருட முடியும் என்று சிந்திக்கும்பொழுது இது ஒரு உருவகமாகத்தான் இருக்க வேண்டும் என்பது தெரிகிறது.

    சாயணர் அளிக்கும் உருவகப் பொருள்- மேகம்
    விருத்திரன் என்பது மேகங்கள். இந்திரன் தன் நண்பர்களாகிய மருத் என்னும் காற்றின் துணை கொண்டு அதை அழித்து மழை பொழிய வைக்கிறார் என்கிறார் சாயணர். கறுத்த மேகத்தினூடே மின்னல் மின்னுகிறது. இடி இடிக்கிறது. மழை பொழிகிறது. வானம் வெளி வாங்குகிறது. மறைந்து இருந்த சூரியன் வெளிப்படுகிறது. இந்திரனை மின்னல் இடியை ஆயுதமாகக் கொண்டவர் என்பதிலிருந்து இது உண்மையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

    பசுக்கள் என்பதற்கு ஒளிக் கிரணங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும் என்கிறார் சாயணர். இதுவும் பொருத்தமே. ஏனெனில் வேதத்தில் பல இடங்களில் சூரிய கிரணங்களும் வைகறை ஒளியும் பசுக்களாக உருவகிக்கப்பட்டுள்ளன.

    ஆனால் சாயணரின் இக்கருத்தை ஏற்றுக் கொள்வதில் ஒரு இடைஞ்சல் உள்ளது. பசுக்களை (சூரிய கிரணங்களை) மேகம் மறைத்ததை தஸ்யு திருடினான் என்று கொண்டால் சரமா என்னும் நாயின் உதவியால் அங்கிரஸ் முனிவர்கள் பசுக்களின் இருப்பிடத்தை அறிந்தனர் என்பதை எப்படிப் பொருள் கொள்வது?

    உருவகம் -2 நிலச்சரிவு
    இதோ மற்றொரு ஊகம். இது சாயணர் கூறாதது.

    மலைப் பிரதேசங்களில் நிலச் சரிவு என்பது வழக்கமான ஒன்று. சில சமயங்களில் இந்த நிலச் சரிவு நதிகளில் விழுந்து நதிகளின் போக்கைத் தடுத்து விடும் அல்லது மாற்றி விடும். 2008 மே 12இல் சீனாவில் வென்சுவான் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச் சரிவு, ஒரு நதியைத் தடுத்து அதை ஏரியாக மாற்றி விட்டது. நதியின் கீழ்புறம் வறண்டுவிட்டது. ஏரியில் மேலும் மேலும் தண்ணீர் வந்து சேரவே அது வேறு திசைகளில் உடைப்பு எடுத்துப் பெருகக் கூடிய அபாயம் ஏற்பட்டது. அப்பொழுது சீன அரசு அங்கு உடனடியாக ஆட்களை அனுப்பி, அந்த ஏரிக்கரையை குண்டு போட்டு உடைத்து நதியை முன்பு போல ஓடச் செய்தது.

    இந்திரன் செய்ததும் இது போலத்தான் இருக்க வேண்டும். விருத்திரன் என்பது நிலச் சரிவால் நதியின் போக்கில் மலைப் பாம்பு வடிவத்தில் ஏற்பட்ட ஒரு தடையாக இருக்க வேண்டும். வலிமையுள்ள அரசனான இந்திரன், தன் படையுடன் அங்கு சென்று அந்தத் தடையை அகற்றி இருக்க வேண்டும். வ்ருத்ரன் என்ற சொல்லுக்கு சூழ்ந்திருப்பது என்று பொருள். அந்தத் தடை நதியின் நீர் ஓடாதபடி சுற்றிலும் சூழ்ந்து இருந்ததால் அது அப் பெயர் பெற்றிருக்க வேண்டும்.

    அதே போல, வலன் என்றும் பணி என்றும் பெயரிடப்பட்ட ஒரு நிலச்சரிவால் அங்கிரஸ்களின் மாடுகள் இருந்த இடம் மறைக்கப்பட்டிருக்க வேண்டும். மோப்ப நாயின் உதவியால் மறைவுக்குப் பின்புறம் மாடுகள் இருப்பதை அறிந்த அங்கிரஸ்கள் இந்திரனின் துணையால் அந்தத் தடையை வென்று மாடுகளை மீண்டும் பெற்றிருக்க வேண்டும். மண் அகற்றும் திறமை படைத்த ஒரு பெரும் படை இந்திரனிடம் இருந்திருக்க வேண்டும்.

    இந்த ஊகம் ஒரு வகையில் பொருத்தமாக இருந்தாலும், இந்திரனும் அச்வின்களும் தஸ்யுக்களைக் கொன்று ஆர்யர்களுக்கு ஜ்யோதியைக் கொடுத்தார்கள் என்று சொல்லப்படும்போது (1.117.21, 7.5.6) இந்த உருவகம் பொருந்தவில்லை. நிலச்சரிவு ஒளியை எப்படித் தடுக்க முடியும்?

    கோத்ரம்
    மூன்றாவது உருவகத்தைப் பார்க்கும் முன் வேத காலத்தில் பசு எப்படிக் கருதப்பட்டது என்பதைப் பார்ப்போம்.

    ரிக் வேதத்தில் சில மந்திரங்கள் எங்களுக்கு நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான பசுக்களைக் கொடு என வேண்டுகின்றன. ஓரிடத்தில் ரிஷி தனக்கு அறுபதினாயிரம் பசுக்கள் தானமாகக் கொடுக்கப்பட்டதைக் கூறுகிறார் (1.126.3).

    மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என்றாலும் அவர் குறைந்தது 60 பசுக்களாவது பெற்றிருக்கக் கூடும். இத்தனை பசுக்களை வைத்துக் கொண்டு அவர் எப்படிப் பராமரித்தார் என்ற கேள்வி எழுகிறது.

    வேதத்தில், பசு மந்தைக்கும் அவை தங்கும் இடத்துக்கும் கோத்ரம் என்பது பெயர். பிற்காலத்தில் இந்தப் பெயர் ஒரு பரம்பரையைக் குறிக்கும் சொல்லாக மாறியது. ஒரு பசு மந்தையின் உடைமையாளர்கள் ஒரு கோத்ரக்காரர்கள். இவர்கள் ஒரே கிராமத்து மக்களாக இருந்ததும், அவர்களுடைய பொது உடமையாக இந்தப் பசுக்கள் கருதப்பட்டிருந்ததும் ஊகித்து அறிய முடிகிறது.

    உருவகம் 3 – பொது உடமைப் பொருட்களைத் திருடும் சமூக விரோதி
    நீரையும், ஒளியையும் போல பசுவும் எல்லோருக்கும் பொதுவான பொருளாக இருந்தது. இதன் அடிப்படையில் மூன்றாவது உருவகத்தைப் பார்ப்போம்.

    கிராமத்துக்குப் பொதுவான பசுக்களைப் பராமரிக்க, உழைக்க வலிமையுள்ள சிலர் நியமிக்கப் பட்டிருக்க வேண்டும். வலிமையற்றவர்கள் அவர்களது உழைப்பின் பலனை அனுபவிப்போராக இருந்திருப்பர். ஒவ்வொருவருக்கும் அவரவருக்குத் தேவையான பொருள் கிடைத்தது. ஒவ்வொருவரும் அவரவருக்கு முடிந்த வேலைகளைச் செய்தனர். இது ஒரு சமதர்ம சமுதாயம்.

    பொருட்கள் தங்குதடையின்றிக் கிடைக்கும் வரை இந்த சமுதாயத்தில் பிரச்சினை எதுவும் வர வாய்ப்பில்லை. தட்டுப்பாடு ஏற்படும்போது, வலிமையுள்ள சிலர் தனக்கென்று மிக அதிகமான பொருட்களைப் பதுக்கி வைப்பது இயல்பு. பொதுச் சொத்துக்களைத் தன் சொந்த நலனுக்கென்று பயன்படுத்துவோரை நாம் இன்று சமூக விரோதிகள் என்று அழைக்கிறோம்.

    வலன் என்ற பணி பசுக்களைச் சிறைப் பிடித்தான். பணி என்ற சொல்லுக்கு வணிகர் என்பது அடிப்படைப் பொருள். வணிகர் தான் கொடுத்த பொருளின் மதிப்புக்குச் சமமான வேறு பொருளை பெற்றுக் கொள்வதில் குறியாக இருக்கிறார். பொதுச் சொத்தைப் பராமரிப்பவர் தான் செய்வதைச் சேவையாகக் கருதாமல், தன் உழைப்பினால் கிடைத்த உற்பத்திப் பொருட்கள் தனக்கு மட்டுமே சொந்தம் என்று இருந்தால் அவர் பணியாக(சமூக விரோதியாக)க் கருதப்படுவார். அதனால் அவர்களை வேதம் தஸ்யு (பகைவர்) என்று கூறுகிறது.

    அக்ரது (செயல் அற்றவர்கள்), அராதி (தானம் செய்யாதவர்கள்), அச்ரத்தா (சிரத்தை இல்லாதவர்கள்), அவ்ருதா (நல்ல காரியங்களை ஊக்குவிக்காதவர்கள்) என்ற அடைமொழிகளிலிருந்து தஸ்யுக்கள் சமூக நலனுக்குப் பாதகமான குணங்களைக் கொண்டவர்கள் என்று கருத இடம் உள்ளது.

    விருத்திரன் சமுதாயத்துக்குச் சொந்தமான நீரை மக்கள் அனுபவிக்காதபடி வளைத்துப் போட்டான். வலன் பொதுச் சொத்தான பசுக்களைத் தன் நலனுக்காகச் சிறைப் பிடித்து வைத்திருந்தான். இந்த சமூக விரோதச் செயல்களைச் செய்யும் பகைவர்களை வழிக்குக் கொண்டு வரும் பொறுப்பு அந்தச் சமுதாயத்தின் தலைவனின் பொறுப்பாகிறது. பகைவர்கள் தங்களைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு செய்து கொள்வது இயல்பே. பலர் உதவியுடன், தடைகளைச் சமாளித்து இவர்களைத் தோற்கடித்ததுதான் மலையைப் பிளந்து வலனைக் கொன்று பசுக்களை மீட்டதாகவும், விருத்திரனைக் கொன்று ஆறுகளைப் பெருகச் செய்ததாகவும் கூறப்படுகிறது. தஸ்யுக்களைத் தண்டிக்கும் வகையில் அவர்களை கட்டாயப்படுத்தி அடிமைத்தனத்துக்கு உட்படுத்தும் முறை இருந்திருக்க வேண்டும் என்பது அறியப்படுகிறது. இதனால் தஸ்யுக்கள் தாஸர்கள் ஆனார்கள்.

    அவர்கள் செல்வம் மிகப் பெற்றிருந்தும் அதைப் பிறருக்குப் பயன்படுமாறு கொடுக்காமல் இருந்தார்கள், இனிமையான பேச்சு இல்லாதவர்கள் என்பதை அறிய முடிகிறது.

    தஸ்யுக்களை அழிக்குமாறு தேவர்களை வேண்டுகிறார்களே தவிர, ஆர்யர்கள் தாங்களே ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. தேவர்களால் தோற்கடிக்கப்பட்ட தஸ்யுக்கள் ஆர்யர்களுக்குத் தாஸர்களாக வாழத் தொடங்கினர். அந்த அடிமைகள் பிறருக்குத் தானமாகவும் கொடுக்கப்பட்டனர் என்பதை ஒரு ரிஷி தான் 100 தாஸர்களைப் பெற்ற விவரத்தைக் கூறுவதிலிருந்து அறிகிறோம் (8.56.37).

    அந்த தாஸர்கள் நன்றாக உழைத்தார்கள் என்பது நான் தாஸனைப் போலக் கடுமையாக தேவர்களுக்கு உழைத்தேன் என்பதிலிருந்து தெரிகிறது (7.86.75 ).

    சமூக விரோதிகளைத் தற்காலத்தில் காவலர்கள் சிறைப்படுத்தி வேலை செய்ய வைப்பது போல இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. தண்டனையால் மனம் திருந்திய தாஸர்கள் கொடையாளிகளாக மாறினாலும் தங்கள் பழைய பெயராலேயே அழைக்கப்பட்டார்கள் என்பதை முன் சொன்ன பல்பூதன், தருக்ஷன் பற்றிய குறிப்பிலிருந்து அறிகிறோம்.

    ஆர்யர்களாக இருந்தவர்களில் கூடச் சிலர் காலப்போக்கில் சமூக விரோதிகளாக மாறியிருப்பர். அவர்கள் பழைய பெயரால் ஆர்யர்கள் என்று கூறப்பட்டாலும் எதிரிகளாகக் கருதப்பட்டனர். எங்கள் எதிரிகளைக் கொல்வாயாக, அவர்கள் தாஸர்களானாலும், ஆரியர்களானாலும் என்ற வேண்டுதல் காணப்படுகிறது (10.38.3).

    பொது உடைமைப் பொருட்களை அபகரிப்பவரே தஸ்யு என்னும் இந்த உருவகப் பொருள் ஜ்யோதியை எந்தத் தஸ்யு அபகரிக்க முடியும் என்பதை விளக்கவில்லை.

    இது வரையில் மூன்று வகையான உருவகப் பொருள்களைப் பார்த்தோம்- மேகங்களை அழித்து மழை பொழியச் செய்தல், நிலச் சரிவை அகற்றி நீர் மற்றும் பசுக்களின் பாதையைத் திறந்து விடுதல், பொது உடமைப் பொருட்களை அபகரிக்கும் சமூக விரோதிகளைத் தண்டித்தல். இந்த மூன்றுமே தஸ்யு பற்றிய எல்லாச் செயல்களையும் விளக்கவில்லை. இருப்பினும் இவற்றை முழுமையாகத் தள்ளிவிடவும் முடியாது. ஒவ்வோரிடத்தில் ஒவ்வொரு உருவகம் பொருத்தமாக இருக்கும். அதை அங்கு ஏற்றுக் கொள்ளலாம்.

    படம் உதவிக்கு நன்றி:
    How Many People did Indra Kill?
    http://tamilandvedas.com/2014/07/17/how-many-people-did-indra-kill/

     

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 31

    சு.கோதண்டராமன்.

    தஸ்யுக்கள்

     

    rig veda enemy

     

    ராட்சசரைப் போலவே தேவர்களால் அழிக்கப்படத்தக்க வேறு ஒரு கூட்டம் உண்டு. இவர்கள் தஸ்யு என்று அழைக்கப்படுகிறார்கள். தஸ்யு என்ற சொல் எதிரி எனப் பொருள் படும்.

    யக்ஞம், பிரார்த்தனை, விரதம் இவற்றை அனுசரிக்காமல் இருப்பதில் இவர்கள் ராட்சசர்களைப் போன்றவர்கள் என்றாலும் தஸ்யுக்களுக்கும் ராட்சசர்களுக்கும் வேறுபாடுகள் நிறைய உண்டு.

    ராட்சசர்கள் இறை வழிபாட்டைத் தடுக்கும் தீய பண்புகள் என்று அறிந்தோம். ஆனால் தஸ்யுக்கள், மற்றவர்களின் இறை வழிபாட்டிற்கு இடையூறு செய்வது இல்லை.

    ரிக் வேதத்தில் எந்த ராட்சசரின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் சில தஸ்யுக்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. – நமூசி, துனி, சும்ரி, சுஷ்ணன், சம்பரன், கௌலிதரன், வர்சின், அஹிசுவன், பிப்ரு, அனர்சனி, வ்ருஷசிப்ர. இவர்களை இந்திரன், அச்வினிகள், அக்னி, சோமன், மருத்துகள் ஆகியோர் அழித்தார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

    ராட்சசர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள், எங்கிருந்தும் வருவார்கள் எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் தஸ்யுக்கள் குறிப்பிட்ட இடத்தில், வலுவான நகரங்களில் அல்லது கோட்டைகளில் வசிப்பவர்களாகக் கூறப்படுகிறார்கள். அவர்கள் வசம் 100 கோட்டைகள் இருந்ததும் கூறப்பட்டுள்ளது.

    தஸ்யுக்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக ரிஷிகள் தங்களை ஆர்யர்கள் (உயர்ந்தவர்கள்) என்று கூறிக் கொள்கிறார்கள்.

    தஸ்யுக்களைப் பற்றி ரிக் வேதம் கூறும் விவரங்களைப் பார்ப்போம்.

    1. அநாஸ (மூக்கில்லாதவர்கள்),
    2. க்ரதின், (உளறுபவர்கள்), ம்ருத்ரவாச (இகழ்ச்சியாகப் பேசுபவர்கள்),
    3. அயக்ஞா (யக்ஞம் செய்யாதவர்கள்), அன்யவ்ரதர்கள் (வேறு வகையான விரதம் கடைப்பிடிப்பவர்கள்), மாயையால் விண்ணை அடையும் செல்லும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் என்று வர்ணிக்கப்படுகிறார்கள் (8.14.14)
    4. ஆரியர்களின் எதிரிகளாகச் சிச்ன தேவர்கள் என்போர் இரு இடங்களில் கூறப்பட்டுள்ளனர் (7.21.5, 10.99.3).  சிச்ன என்பது குறி எனப் பொருள்படும்.
    5. தஸ்யு (எதிரி) என்ற சொல்லும் தாஸ (அடிமை) என்ற சொல்லும் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

    மேலே கண்ட குறிப்புகளைக் கொண்டு மேல் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் முடிவு கட்டியது பின் வருமாறு.
    ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தபோது வட இந்தியாவில் வசித்தவர்கள் தஸ்யுக்கள்.

    1. நீண்ட மூக்கு உடைய ஆரியர்களைப் போல அல்லாமல் இவர்கள் சப்பை மூக்கு உடையவர்களாக இருந்ததால் அநாஸ எனப்பட்டார்கள்.
    2. ஆரியர்களுக்குப் புரியாத வேறு மொழி பேசியதால் உளறுபவர்கள், இகழ்ச்சியாகப் பேசுபவர்கள் என வர்ணிக்கப்பட்டனர்.
    3. யக்ஞம் அல்லாத வேறு வகையான வழிபாட்டு முறை உடையவர்கள்.
    4. சிச்னத்தை (சிவலிங்கத்தை) வழிபட்டவர்கள்.
    5. இரு இனத்தாருக்கும் இடையே தொடர்ந்து போர் நடைபெற்றது. போரில் தோற்றவர்களை அடிமைப்படுத்தினார்கள் ஆரியர்கள். இறுதியில் திராவிடர்கள் தோற்று வட இந்தியாவை விட்டே விலகித் தென்னிந்தியாவில் குடியேறினார்கள். அவர்கள் திராவிடர்கள்.
    6. தாசர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த தண்ணீரை ஆரியர்களுக்காக இந்திரன் விடுவித்தான் (5.30.5) என்பதிலிருந்து நீர் வரும் பாதையில் மேல் மட்டத்தில் உள்ள அண்டை நாட்டுக்காரர்களாக இருக்கலாம் என்றும் அவர்களுக்கிடையே நதி நீர்ப் பங்கீடு பற்றிய தகராறு (தற்போதைய தமிழ்நாடு கர்நாடகக் காவிரி நீர்ப் பிரச்சினை போல) இருந்திருக்கலாம் என்றும் சந்தேகம் வருகிறது.

    மேலை நாட்டவர் கண்ணில் படாத அல்லது அவர்கள் சொல்ல விரும்பாத விஷயங்கள் வேதத்திலும் உண்டு, நமது பொது அறிவிலும் உண்டு.

    1. தஸ்யுக்களாகக் கருதப்படும் தென்னாட்டவர்களுக்கும், ஆரியர்களாகக் கருதப்படும் வடநாட்டவர்களுக்கும் மூக்கு விஷயத்தில் வேறுபாடு இல்லை. எப்படிப் பார்த்தாலும் மூக்கில்லாதவர்கள், சப்பை மூக்கு உடையவர்கள் என்ற சொல்லுக்குத் தென்னாட்டவர் உரியவர்கள் அல்லர் என்று அரவிந்த கோஷ் கூறுகிறார்.
    2. ஆரியர்களும் தாசர்களும் வேறு வேறு மொழி பேசுபவர்கள் என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. உளறுபவர்கள், இகழ்ச்சியாகப் பேசுபவர்கள் என்பதற்கு வேற்று மொழியாளர் எனப் பொருள் கொள்வது பொருத்தமாக இல்லை. ஆரியர்களும் தாசர்களும் சேர்ந்து ஒரே சமூகமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதால் அவர்களிடையே மொழி வேறுபாடு இருந்திருக்க வாய்ப்பில்லை.
    3. வேதமே பல வகையான வழிபாட்டு முறைகளை ஏற்றுக் கொண்டிருப்பதை யக்ஞம் என்ற தலைப்பில் காணப் போகிறோம். எனவே வழிபாட்டுமுறை மாறுபட்டிருப்பதன் காரணமாகப் பகைமை ஏற்பட்டிருக்காது. மேலும், எந்தத் தேவருடைய வழிபாடும் இல்லாத இடத்திலும் அச்வின்களின் வழிபாடு நடைபெறுகிறது (8.10.4) என்பதிலிருந்தும், தாசர்கள் தந்த உணவை அச்வின்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்(8.5.31) என்பதனாலும் வழிபாட்டு முறையில் தாசர்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள் அல்லர் என்பது தெரிகிறது.
    4. ஆரிய திராவிடப் பிரச்சினைகள் தோன்றாத காலத்தில் எழுதப்பட்ட சாயணர் உரையில் சிச்ன தேவர் என்பதற்கு லிங்க வழிபாடு செய்பவர் என்ற பொருள் காணப்படவில்லை. மாறாக, புலன் நுகர்ச்சியில் அளவு கடந்த நாட்டம் உடையவர் என்றே காணப்படுகிறது. சிச்னத்தைச் சிவலிங்கமாகக் கருதியது ஆங்கிலேயரின் விஷமத்தனமான வேலையே.
    5. ஆரியர்களும் தஸ்யுக்களும் நிரந்தரப் பகைவர்கள் அல்லர். ஒரு மந்திரத்தில் (8.46.32 ) வச அச்வ்ய என்ற ரிஷி, தான் பல்பூத மற்றும் தருக்ஷ என்ற தாசர்களிடமிருந்து 100 பசுக்களைப் பரிசாகப் பெற்றதைக் கூறுகிறார். செல்வந்தனான ருசம பவிரு என்பவரிடத்தில் ஆரியர்களும் தாசர்களும் தானம் பெறக் குழுமினர் என மற்றொரு மந்திரம் (8.51.9) கூறுகிறது. இதிலிருந்து ஆரியர்களும் தாசர்களும் ஒரே சமூகத்தில் ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள் தான் என்பது உறுதியாகிறது.
    6. வேதம் இயற்றப்பட்ட இடமாகக் கருதப்படும் சிந்து கங்கைச் சமவெளியில் மழைக்கோ ஆற்று நீருக்கோ பஞ்சம் இல்லை. எனவே அணை கட்டித் தண்ணீரைத் தேக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் அடுத்தவருக்குத் தண்ணீர் போகாமல் தடுக்கக் கூடிய அணை கட்டும் தொழில் நுட்பமும் அவர்களிடத்தில் இருந்ததற்கு ஆதாரம் இல்லை. எனவே ஆப: (தண்ணீர்) என்ற சொல் வேறு பொருளைக் குறிப்பதாக இருக்க வேண்டும்.

    மேலும், பிரார்த்தனைகள் மூலம் மலைகளைப் பிளந்து தஸ்யுவால் மறைத்து வைக்கப்பட்ட பசுக்களை மீட்டனர் என்றும், தர்மத்தை மனதில் கொண்டு தஸ்யுவைக் கொன்றார்கள் என்றும் கூறப்படுவதால் தஸ்யு என்பது ஒரு உண்மையான பகைவனைக் குறிப்பிடாமல், வேறு ஒரு மறை பொருளைக் குறிப்பிடுவதை அறிகிறோம். ரிக் வேதத்தில் கிடைக்கின்ற தரவுகளைக் கொண்டு, அந்த மறைபொருளை அறிய முயல்வோம்- அடுத்த கட்டுரையில்.

    படம் உதவிக்கு நன்றி: http://www.harekrsna.com/sun/features/09-13/dasarajna5.jpg

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 30

    சு.கோதண்டராமன்.

     

    ராட்சசர்கள்

    rakshasha

    மாயையாவது யாதெனில் ஸர்வ மங்களமாகிய ஜகத்தில் ஜீவன் தன் கற்பனா சக்தியால் ஏற்படுத்திக் கொள்ளும் தீமை….. இந்த மாயை என்ற ராக்ஷஸியின் வயிற்றில் கவலை, துன்பம், பயம், கஷ்டம், மரணம் முதலிய அஸுர ஜாதிகள் தோன்றி ஜீவகுலம் என்ற பயிரை அழிக்கின்றன.

    – பாரதி

    இன்றைய வழக்கில் அசுரர்களும் ராட்சசர்களும் ஒன்று. பாரதியும் அப்படித்தான் பயன்படுத்துகிறார். ஆனால் வேதம் அவ்வாறு கூறவில்லை, வலிமை உடைய எல்லாரும், தேவர்கள் உள்பட, அசுரர்கள் தான் என்று பார்த்தோம். தேவர்களின் பகைவர்கள் ராட்சசர்கள் என்றும் பார்த்தோம் (ரிக் வேதத்தில் ராக்ஷஸ் என்ற சொல் காணப்படவில்லை. ரக்ஷஸ் என்று தான் இருக்கிறது. தமிழ் வழக்கை ஒட்டி இங்கு ராட்சசர் என்று எழுதப்படுகிறது).

    ராட்சசர்கள் என்பார் ஒரு தனி இனத்தவர் அல்ல. ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேர்ந்து வாழும் ஒரு கூட்டத்தினர் அல்ல. அவர்கள் எங்கே வசிப்பவர்கள் என்று சொல்ல முடியாது. பூமி முழுவதும் அவர்கள் வியாபித்து இருப்பதாகக் கொள்ளலாம். அவர்கள் எத்திசையிலிருந்தும் வரலாம், எந்த நேரத்திலும் வரலாம், அருகிலிருந்தும் வரலாம், தொலைவிலிருந்தும் வரலாம். அவர்கள் நம்மிடையே கூட இருக்கலாம். ஆம், ஒரு மந்திரம் (10.87.10) மனிதர்களுக்கிடையில் உள்ள ராட்சசர்களைக் கண்டுபிடியுங்கள் என்று அக்னியை வேண்டுகிறது. ராட்சசர்களில் பெண்களும் உண்டு.

    ராட்சசர்கள் எப்படிப்பட்டவர்கள்? யாகங்களுக்கும், ஹவிர்பாகங்களுக்கும், இடையூறு செய்பவர்கள், பிரார்த்தனையை வெறுப்பவர்கள். மூடர்களைக் கடவுளாக வணங்குவார்கள். அவர்கள் இருட்டை வளர்ப்பவர்கள், அறிவில்லாதவர்கள், தவறான அறிவு பெற்றவர்கள் என்றும் சூரிய உதயம், வைகறைப் பொழுதின் வருகை ஆகிய ஒளிகளால் அவர்கள் விரட்டப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளதால் இந்த இருட்டு என்பது அஞ்ஞானத்தைக் குறிப்பது அறியப்படுகிறது. அஞ்ஞானத்தின் விளைவான துயரத்தை வளர்க்கும் அவர்களை ஆனந்தத்தின் பிரதிநிதியான சோம பானம் நசுக்கும் பாறைக் கற்களின் ஓசை விரட்டுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

    அவர்கள் பிறருக்கு எதுவும் கொடுக்க மாட்டார்கள். மக்களைத் துன்புறுத்துவார்கள். அவர்கள் அத்ரின் (விழுங்குபவர்) என்றும் க்ரவ்யாத (மாமிசம் சாப்பிடுபவர்) என்றும் கூறப்படுவதிலிருந்து அவர்கள் உணவையே பெரிதாக நினைப்பவர்கள் என்றும் அதில் எந்தக் கட்டுப்பாடும் ஏற்காதவர்கள் என்றும் அறிகிறோம். பிறரை நிந்திப்பார்கள். திட்டுவார்கள். பொய்யான குற்றச் சாட்டுகளைக் கூறுவார்கள். இரண்டு வகையாகப் பேசுவார்கள்.

    அவர்கள் வலிமை மிக்கவர்கள். வலிமையில் வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள். அதைக் கொண்டு அவர்கள் மனிதரை அடக்கி ஆள்கிறார்கள். செல்வத்தைப் பறித்துக் கொள்கிறார்கள். மாயையில் வல்ல அவர்கள் தவறு செய்து விட்டு இரவோடு இரவாகப் பறவை போல் பறந்து விடுகிறார்கள்.

    நோய், பிசாசு, பாம்பு, ஓநாய் போல அஞ்சத்தக்க அவர்களை நாயைக் கல்லால் அடித்து விரட்டுவது போல விரட்ட வேண்டும் என்கிறது வேதம் (7.38.7, 7.104.22).

    அவர்கள் பாதை துன்பம் நிறைந்ததாக ஆக்க வேண்டும். அவர்கள் தங்கள் கெட்ட செயல்களின் விளைவைத் தாங்களே அனுபவிக்க வேண்டும், அவர்களும் பொய் சொல்லுபவர்களும் இந்திரனின் வலைக்குள் அகப்பட வேண்டும், ராட்சசரால் வெல்ல முடியாத வலிமையும், அவர்களால் பறித்துக் கொள்ளப்பட முடியாத செல்வமும் எங்களுக்கு வேண்டும் என்று வேதம் வேண்டுகிறது.

    இந்த வருணனைகளைப் பார்க்கும்போது, ராட்சசர் என்பது ஒரு இனப் பெயர் போலத் தோற்றம் அளித்தாலும் ராட்சசர்கள் வாழும் இடம் எது என்று கூறமுடியாது, அவர்கள் அருகிலும் இருக்கலாம், தொலைவிலும் இருக்கலாம், நம்மிடையே கூட இருக்கலாம் என்று கூறப்படுவதாலும், எந்த ராட்சசரும் பெயர் சொல்லிச் சுட்டப்படாததிலிருந்தும் ராட்சசர் என்பது ஒரு மனித இனத்தைக் குறிப்பிடுவதாக ஏற்க முடியவில்லை.

    அஞ்ஞானம், பொய், கோபம், பிறரைக் குறை கூறுதல், பொறாமை, பேராசை முதலிய தீய குணங்களைக் கொண்டவர்களே ராட்சசர் என உருவகப்படுத்தப்பட்டிருப்பதை ஊகிக்க முடிகிறது.

    எல்லார் மனதிலும் ராட்சசத் தனம் இருக்க வாய்ப்பு உண்டு. ராட்சசத் தனம் இல்லாத மனத்தோடு என் பிரார்த்தனையைக் கேட்பாயாக என்று அக்னி வேண்டப்படுவதிலிருந்து (2.10.5) ராட்சசர்களின் இருப்பிடம் மனம் தான் என்று தெரிகிறது.

    எல்லாத் தேவர்களும் ராட்சசர்களை அழிக்க வல்லவர் என்றாலும் குறிப்பாக, இந்திரன், அக்னி, மருத்துகள், சோமன், பிருகஸ்பதி, பர்ஜன்ய, அச்வின்கள் ஆகியோர் ராட்சசர்களை எரித்து அழிக்குமாறு வேண்டப்படுகிறார்கள். மித்ர வருணர்களின் அருளால் மனிதன் ராட்சசரை ஒழிக்கும் வலிமை பெறுகிறான். வசிஷ்டரின் சூக்தம் ஒன்றின் முடிவில் (7.8.6) அவர் ராட்சசரை ஒழிக்கும் பிரார்த்தனை ஒன்று நான் இயற்றியிருக்கிறேன் என்கிறார். பிரார்த்தனையால் ஒழிக்கப்படக் கூடியவர்கள் என்பதால் ராட்சசர் என்பது தீய பண்புகளையே குறிக்கும் என அறிகிறோம்.

     
    படம் உதவிக்கு நன்றி: http://commons.wikimedia.org/wiki/File:Fronton_Cambodge_Mus%C3%A9e_Guimet_9972.jpg

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 29

    சு.கோதண்டராமன்.

    அசுரர்கள்

     

    asura

    இந்திரனால் கொல்லப்பட்ட விருத்திராசுரன், தசரதன் உதவியோடு அழிக்கப்பட்ட சம்பராசுரன் ஆகியோரது கதைகளை நாம் புராணங்களில் பார்த்திருக்கிறோம். தாரகாசுரன், சிங்க முகாசுரன், சூர பத்மன் முதலிய அசுரர்களை முருகன் கொன்றதைக் கந்த புராணம் விவரிக்கிறது.

    அசுரர்கள் பட்டியலில் இந்திரன், அக்னி, வருணன், சூரியன் ஆகிய தேவர்களும் உண்டு என்பது தெரியுமா? ஆம், இவர்களையும் ரிக் வேதம் அசுரர் என்றே குறிப்பிடுகிறது. மேலும், த்யௌஸ் எனப்படும் ஆகாயம், மருத் எனப்படும் புயற்காற்று, வேள்வி நடத்துவோர், த்வஷ்டா என்னும் தேவத் தச்சர் இவர்களும் அசுரர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர்.

    அது மட்டுமல்ல, சூரியன் முதலானவற்றைப் படைத்த முழு முதற் கடவுளையே, பரம்பொருளையே வேதம் அசுரர் என்ற அடைமொழியால் சிறப்பிக்கிறது.

    அசுரர் என்றால் தீயவர்கள், அவர்களுக்கும் தேவர்களுக்கும் எப்பொழுதும் சண்டை நடக்கும் என்பதை மட்டும் கேட்டுப் பழகி வந்த நமக்கு இது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கும்.

    ஆனால் உண்மை இதுதான். அசுரர் என்று ஒரு இனம் இல்லை. அசுரர் என்ற சொல் வலிமை மிக்கவர் என்ற பொருளில் மட்டுமே வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்திரன் முதலான தேவர்களை அசுரா என்று வேதம் விளிக்கும் போது அது அவர்களது வலிமையைக் குறிக்கும் சிறப்புப் பெயராகத்தான் வருகிறது.

    ஏதோ ஓரிரண்டு இடங்களில் மட்டும் அல்ல. ரிக் வேதத்தில் அஸுரர் என்ற சொல் வரும் 90 இடங்களிலும், அதிலிருந்து கிளைத்த அஸுர்ய போன்ற சொற்கள் வரும் 36 இடங்களிலும் இதே பொருள்தான். ரிக் 3.55 என்ற சூக்தத்தில் 22 மந்திரங்கள் உள்ளன. தேவர்களின் சிறப்புகளைப் போற்றும் இவை ஒவ்வொன்றும் “மஹத் தேவானாம் அசுரத்வம் ஏகம்” என்ற ஈற்றடியைக் கொண்டவை. இது “தேவர்களின் வலிமை பெரியது, தனித்துவம் வாய்ந்தது” என்று பொருள்படும்.

    பொதுவாக, ஒரு சொல்லுக்கு முன்னால் ‘அ’ என்ற முன்னொட்டைச் சேர்த்து எதிர்ச் சொல் உருவாக்குவது வழக்கம். ஆனால் அசுரர் என்ற சொல் சுரர் என்ற சொல்லிலிருந்து வந்ததல்ல. ரிக் வேதத்தில் சுரர் என்ற சொல்லே இல்லை. அசுரர் என்ற சொல்லிலிருந்து ‘அ’ என்ற எழுத்தை நீக்கிப் பிற்காலத்தில் சுரர் என்ற சொல்லை உருவாக்கினார்கள்.

    தீயவர்களைக் குறிக்க, அசுர என்ற சொல் வேதத்தில் ஆளப்பட்டிருக்கிறதா? இருக்கிறது. தேவர்களின் எதிரிகளான விருகத்வரஸ், வர்ச்சின், பிப்ரு என்ற மூவருக்கு அசுரர் என்ற அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் வலிமை கருதி அவ்வாறு அழைக்கப்படுகின்றனரே அன்றி அவர்களது இனத்தினாலோ குணத்தினாலோ அசுரர் என்ற பெயர் வரவில்லை.

    இந்திரனும் அக்னியும் வலிமையான பகைவர்களை அழித்ததனால் அசுரக்ன- அசுரர்களை அழித்தவர்- என்ற பெயர் பெறுகிறார்கள். மற்றபடி எல்லா அசுரர்களும் தேவர்களின் பகைவர்கள் என்ற கருத்தை அங்கு காண முடியவில்லை.

    வேதத்திற்கு உரை எழுதிய சாயணர் அசுரர் என்ற சொல்லுக்கு பெரும்பாலான இடங்களில் வலிமையானவர் என்ற பொருளைத் தருகிறார். சில இடங்களில் அதே சொல்லுக்கு, விரும்பத் தகாதவற்றை வெளியேற்றுபவர், எதிரிகளை அழிப்பவர், உயிர் கொடுப்பவர், மழை அனுப்புபவர், அசுரர்களை அழிப்பவர், உயிரும் உணர்வும் கொண்டவர், இருட்டை விரட்டி அடிப்பவர், ஊக்கம் தருபவர் என்று பல வகையாக விளக்கம் அளித்தாலும் அவை யாவும் வலிமையான என்ற பொருளின் விரிவாக்கமாகவே காணப்படுகின்றன. இந்த எல்லா இடங்களிலும் வலிமையான என்ற பொருள் மிகப் பொருத்தமாக இருக்கும்போது, சாயணர் ஏன் வலுக்கட்டாயமாக சொல்லின் உற்பத்தி வேரை மாற்றி விநோதப் பொருள் சொன்னார் என்பது புரியவில்லை.

    அசுரரும் ராட்சசரும் ஒன்றா? அல்ல. இன்று அவை இரண்டும் ஒரு பொருட் சொற்களாக இருந்தாலும் வேதத்தைப் பொறுத்த வரை அவை வேறு வேறுதான். அரக்கர் என்று தமிழில் குறிப்பிடப்படும் தீய பண்புள்ளோர் வேதத்தில் ரக்ஷஸ் என்று குறிப்பிடப்படுகிறார்கள். இவர்கள் வலிமை மிகுந்தவராக இருந்ததால் அசுரர்கள் என்றும் குறிப்பிடப்பட்டனர். இவர்கள் பிறரைத் துன்புறுத்தும் தம் பண்பினால் ராட்சசர் எனப்பட்டனர். தன் வலிமையைப் பிறர் நலனுக்காகப் பயன்படுத்தும் அசுரர்களை தேவர் என்றும் பிறரைத் துன்புறுத்தும் அசுரர்களை ராட்சசர் என்றும் வேதம் அழைக்கிறது.

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 28

    –சு.கோதண்டராமன்.

     

     

    குதிரையும் தெய்வமாகிறது

     

    chariot-horse-british-museum-161

    முதல் நிலையில், பெருஞ் செயல்களுக்குத் தேவையான சக்திகளும் தன்னலமில்லாத உழைப்பும் கொண்ட மனிதர் தேவ நிலைக்கு உயர்த்தப்பட்டனர். அடுத்ததாக, நதி, சோமம், மேகம் போன்ற உயிரற்ற பொருட்களும் அவை மனிதர்க்கு உதவி செய்வதால் தேவத் தன்மை அளிக்கப்பட்டன. அவ்வாறே உதவியும் செய்து நல்வாழ்வுக்கு ஒரு உதாரணமாகவும் விளங்கும் மிருகமாகிய குதிரை தெய்வ நிலைக்கு உயர்ந்தது பற்றிப் பார்க்க இருக்கிறோம்.

    வாழ்க்கையில் வெற்றி பெற வேதம் கூறும் சில அறிவுரைகள்:
    1. உடலளவிலும் மனதளவிலும் எப்பொழுதும் வலிவுடையவனாக இரு.
    2. இடையூறுகளைக் கண்டோ, எதிர்ப்புகளைக் கண்டோ அஞ்சாமல், அவற்றைத் தாண்டி இலக்கை அடையும் வரை போய்க்கொண்டே இரு.
    3. சோம்பலைத் தவிர்.
    4. செயல்பாட்டில் வேகம் காட்டு.
    5. இடப்பட்ட கட்டுப்பாடுகளால் வேகம் குறையாதிரு.
    6. எஜமானனிடம் விசுவாசமாக இரு. எதிரிகள் கண்டு அஞ்சும்படியான நிலையில் இரு.
    7. நல்லோர் இணக்கம் நாடு. கீழோர் நட்பைத் தவிர்.

    இவற்றைக் கடைப்பிடிப்பதால், மனிதர்க்குச் செல்வம், உணவு ஒளி சேருகிறது. துன்பங்களைக் கடக்கும் வலிமை கிடைக்கிறது என்று வேதம் கூறுகிறது.

    இந்தப் பண்புகளைக் கொண்ட ஒருவரை முன்மாதிரியாகக் கொண்டால், நாம் அவற்றைப் பின்பற்றுவது எளிதாக இருக்கும் அல்லவா? அதற்காக வேதம் அடையாளம் காட்டுவது “ததிக்ரா” என்னும் குதிரையை.

    உணவு தந்து உதவுபவை, தம்மையே உணவாகத் தருபவை, விவசாயத்தில் உதவுபவை, சுமை தூக்கி உதவுபவை என்று மனிதர்க்கு உதவும் மிருகங்கள் பல உண்டு. ஆனால் விவசாயத்திலும் உதவி, போர்க்களத்திலும் உதவி, தன் உயர் பண்புகள் மூலம் மக்களுக்கு வெற்றிக்கு வழிகாட்டும் மிருகம், சுமையைச் சுமந்து கொண்டே விரைந்து செல்லக் கூடிய மிருகம் ஒன்று உண்டென்றால் அது குதிரை மட்டும்தான். இது மனிதரின் நீண்ட நாள் நண்பன். இதன் பண்புகள் வியக்கத் தக்கன. ரிஷி வாமதேவ கௌதமர் அதை வியந்து பாடிய பாடல்களின் (ரிக் வேதம் 4 ஆம் மண்டலம், 38, 39, 40 வது சூக்தங்கள்) சுருக்கத்தை இப்பொழுது பார்க்கலாம்.

    horseததிக்ரா எவ்வளவு அழகான பிராணி! அதன் மேனி பளபளக்கும் வண்ணமயமானது. அதனிடம் ஒரு ராஜ கம்பீரம் உள்ளது. அது நமக்குப் போர்க்களத்திலும் பயன்படுகிறது. விவசாயத்திலும் பயன்படுகிறது.
    போர்க்களத்தில் அது அஞ்சுவதில்லை. வீரர்கள் உற்சாகத்தில் குதிப்பதைப் போல இதுவும் கால்களை உயரத் தூக்கி ஆரவாரிக்கிறது. அது ஓய்வை விரும்புவதில்லை. அதனால் சற்று நேரம் கூட சும்மா இருக்க முடியாது. அதைக் கட்டிப் போட்டு வைத்தால், கால்களால் புழுதியை வாரி தன் மேலேயே இறைத்துக் கொள்கிறது.
    தன் எஜமானன் வெற்றி பெற உறுதுணையாக இருக்கிறது. ஆயிரம் பேர் உள்ள கூட்டமாக இருந்தாலும் ஒருவரும் அதைத் தடுக்க முடியாது. அதன் கனைப்பு இடி போல எதிரிகளுக்கு அச்சம் தருவதாக உள்ளது. போர்க் களத்திலிருந்து வெற்றியுடன் மற்றவர்கள் பின் தொடர அது திரும்பும்போது அதன் முகத்தில் தெரியும் கம்பீரமே தனி.
    ரதத்தை விரைந்து இழுத்துச் செல்கிறது. வழி சந்து பொந்துகளாக இருந்தாலும், அவற்றினூடே புகுந்து புறப்பட்டு காற்றைக் கிழித்துக் கொண்டு முன்னேறுகிறது. சமவெளியில் சென்றால் கூட அது செல்லும் வேகத்தைப் பார்த்தால் மலைச் சரிவில் இறங்குவதைப் போலத் தோன்றுகிறது. அது வலிமை மிக்கது. அதன் வேகத்தைக் காற்றுக்கு ஒப்பிடலாமா? கழுகுக்கு ஒப்பிடலாமா?
    கழுத்திலும், வாயிலும், பக்கங்களிலும் அதற்குப் பல கட்டுகளை இட்டாலும் அதன் வேகம் தடைபடுவதில்லை.
    அது எப்பொழுதும் உயர்ந்தோருடனேயே பழகுகிறது. தாழ்ந்தோரை அது வெறுக்கிறது. அது தன் எஜமானரிடம் விசுவாசமாக உள்ளது.

    குதிரையின் சிறப்புகளைப் பேசும் இதில் மனிதர்க்கு எங்கே அறிவுரை இருக்கிறது என்ற வினா எழலாம். மறை அல்லவா? மறைபொருளாக இருப்பது ஆழ்ந்து நோக்கினால்தான் புலப்படும்.

    ததிக்ரா மனிதர்க்கு வழிகாட்டி. அதைப் போற்றுபவர்களின் பாவத்தைத் தேவர்கள் போக்குகிறார்கள், அது நம் சக்திக்கும் வலிமைக்கும் ஊற்று என்று மற்றோரிடத்தில் கூறுவதன் மூலம் அதன் சிறப்பியல்புகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று குறிப்பால் உணர்த்திய வாமதேவர், துன்பங்களைத் தாண்டி எம்மை அழைத்துச் சென்றதற்காகத் ததிக்ராவை நான் தினந்தோறும் காலையில் போற்றுகிறேன் என்றும் பேசுகிறார்.

    இவ்வாறு குதிரையின் சிறப்புகளைப் புகழ்ந்த அவர் போர்க்களத்திலும் வயல்களிலும் வெற்றி பெறுவதற்காகவும் பகைவர்களை வெல்வதற்காகவும் மனித குலத்துக்கு தேவர்கள் தந்த ஒரு நன்கொடை இது, இதற்காக நாம் விண்ணுக்கும் மண்ணுக்கும் நன்றி தெரிவிக்கிறோம் என்று கூறுகிறார்.

    போர்க்களத்தில் குதிரையின் பயன்பாடு பற்றி நாம் நன்கு அறிவோம். வயல்களில் வெற்றி பெறுவதற்காக என்று கூறுவதிலிருந்து அவர் காலச் சூழ்நிலையில் குதிரை விவசாயத்துக்குப் பயன்பட்டிருப்பதை அறிகிறோம். போர்க்களத்தில் வெற்றி பெறுவதற்காக என்று கூறிவிட்டு, மீண்டும், பகைவர்களை வெல்வதற்கு என்று அவர் கூறியிருப்பது ஏன்? இது கூறியது கூறலாக உள்ளதே என்று நினைக்கிறோம்.

    ஆழ்ந்து நோக்குகையில் நமது வாழ்வியல் முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ள நமது மனக் கேடுகளையே அவர் பகைவர் என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் என்பதை அறிகிறோம்.

    வாமதேவரின் இந்த மூன்று சூக்தங்களின் மற்றொருசிறப்பு – வேதத்தில் குதிரையைக் குறிக்க வழக்கமாக அசுவ என்ற சொல்தான் பயன்படுகிறது. ஆனால் இந்த 21 பாடல்களில் மட்டும் ததிக்ரா, ததிக்ராவன் என்ற சொற்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.

    ததிக்ரா என்பது ஒரு தேவலோகக் குதிரையின் பெயர் என்ற தோற்றம் ஏற்படும்படியாகத்தான் அது பல இடங்களிலும் ஆளப்பட்டுள்ளது. ஆனால் யாஸ்கரின் நிகண்டிலும் மகீதரரின் யஜுர்வேத உரையிலும் ததிக்ரா என்பது ஒரு தனிப்பட்ட குதிரையின் பெயராக இல்லாமல், குதிரை என்ற இனத்தைக் குறிக்கும் பல சொற்களில் ஒன்று எனக் கூறப்பட்டுள்ளது. சொல்லின் வேரை ஆராய்ந்தால் இவர்கள் கூற்று உண்மை என்பது தெரியும்.

    ததி என்றால் தாங்குவது, க்ரம் என்றால் விரைந்து செல்வது. எனவே, சுமை தாங்கி விரைந்து செல்லக் கூடிய ஒரே உயிரினம் குதிரைதான் என்பதைச் சுட்டும் வகையில்தான் அதை, ததிக்ரா என்ற பெயரால் அழைப்பது தெரிகிறது. வாழ்க்கைச் சுமைகள் நமது வேகத்தைக் குறைக்கக் கூடாது என்பது இதன் உட்பொருள். தன் சிறப்புகளின் காரணமாகக் குதிரை தேவ நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

    தினசரி சந்தியா வந்தனத்தில் சொல்லும் மந்திரங்களில் ஒன்று இது. பாடப் பாட வாய் மணக்கும்படியான புகழ் கொண்ட ததிக்ரா என்ற வெற்றிகரமான குதிரையைப் போற்றுவோம். அது நமது ஆயுளை நீட்டிப்பதாக.

    ததிக்ராவ்ணோ அகார்ஷம் ஜிஷ்ணோரச்வஸ்ய வாஜின: ஸுரபி நோ முகாகரத்.

    நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அல்லவா? குதிரையின் இத்தகைய உயர்நலங்களைப் பேசுவதால் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகிறது என்பது இதன் பொருள்:
    ததிக்ரா சூக்தங்களின் கடைசி மந்திரம் ஆழ்ந்த தத்துவப் பொருள் உடையது.
    அவனே ஒளியில் வாழும் சூரியன். ஆகாயத்தில் வாழும் வசு. வேள்விக் கூடத்தில் தேவர்களை அழைப்பவன். வீட்டின் விருந்தினன். அவன் மனிதரிடத்தில், உயர்ந்த இடத்தில், ருதத்தில், விண்ணில், வசிக்கிறான். அவன் நீரில் தோன்றியவன். பசுக்களில் தோன்றியவன். ருதத்தில் தோன்றியவன். மலையில் தோன்றியவன். அவனே ருதம்.

    என்று கூறுவதன் மூலம், பல பெயரிட்டுப் பல தேவர்களை வணங்கினாலும் எல்லாம் ஒன்றே. என்றும் மாறாத, மானிடரால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத இயற்கை நியதியே எல்லாப் பொருள்களிலும் எல்லா இடங்களிலும் வெளிப்படுகிறது என்கிறார். குதிரையினிடத்திலும் அதன் செயல்பாட்டைக் கண்டு வியந்து அதனைப் பரம்பொருளாகக் கருதிப் போற்றுகிறார் வாமதேவ கௌதமர் .

    வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புவோர் அனைவராலும் பின்பற்றத் தகுந்தவை ததிக்ராவின் உயர்பண்புகள்.

    படம் உதவிக்கு நன்றி:

    https://tamilandvedas.files.wordpress.com/2014/08/meso-chariot-horse-british-museum-161.jpg

    http://namakirthan-therajamarga.blogspot.com/2008/10/purpose-reason-of-doing-ashwametha.html

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 27

    –சு.கோதண்டராமன்.

    இதர தெய்வங்கள்

    varuna
    பிற்காலத்துக் கதைகளிலே அதிதியின் உண்மைப் பொருள் மறைந்து விட்டது. அநந்த சக்தியை ஒரு ரிஷி பத்தினியாக்கிவிட்டார்கள். அதிதி என்பது எல்லையில்லாத பரமாத்ம சக்தி. – பாரதி
    அதிதி:
    அதிதி என்ற சொல் எல்லையற்றது என்று பொருள்படும். இது பிரபஞ்சத்தின் எல்லையற்ற தன்மையைக் குறிப்பது. பரம்பொருளின் சிறப்புகளுள் இதுவும் ஒன்று. வேதத்தில் இது பல வகையாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சில இடங்களில் தேவர்களின் தாயாகவும் சில இடங்களில் பூமியைக் குறிப்பதாகவும் அதிதி என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

    பூஷன்:
    இவர் உண்மையில் தேவர் தானா அல்லது தேவப் பதவியை அடையும் நிலையில் உள்ள மனிதரா என்பது தெரியவில்லை. ஏனெனில் இவர் மனிதர்களை விட மேலானவராகவும், புகழில்  தேவர்களுக்குச் சமமானவராகவும் கூறப்படுகிறார்.(6.48.19) மற்ற தேவர்களைப் போல இவரும் ருதத்தை அனுசரிக்கிறார், ருதத்தின் ரதீ (தேரோட்டி) எனப்படுகிறார். ஸ்வதாவை அனுசரிக்கும் ஸ்வதாவா என்றும் போற்றப்படுகிறார். உணவு, பசுக்கள், குதிரைகள், ரயி என்னும் செல்வம் ஆகியன தருகிறார்.

    சூரியனின் தூதராக வேலை செய்பவர் பூஷன். இவர் சூரியனின் ஒரு அம்சம் என்கின்றன புராணங்கள்.

    செல்வத்தைக் காக்கிறார். களவு போன செல்வத்தை மீட்டுத் தருகிறார். கவிதையைத் தூண்டுகிறார். பாதைகளைக் காப்பவர். பணி எனப்படும் கஞ்சர்களின் இதயத்தில் நுழைந்து அதை மென்மையாக்கி  அவர்களைக் கொடையாளியாக மாற்றுகிறார். இவர் சோதிடம் சொல்பவர்களுக்குப் பிரியமான தெய்வம்.

    இவரது வாகனம் ஆடு. இவருக்குப் பிடித்த உணவு யவை (பார்லி)யும் நெய்யும் சேர்ந்த கரம்பம்.

    விண்ணும் மண்ணும்:
    விண் ஒளியுடையது என்பதால் அதை த்யௌஸ் என்றும் அங்கு உலவும் ஒளிமயமான பொருள்களைத் தேவர்கள் (ஒளியுடையவர்கள்) என்றும் அழைத்தனர். விண்ணை அடைவதுதான், தானும் ஒரு தேவனாக ஆவதுதான் வாழ்வின் லட்சியம் என ரிஷிகள் நினைத்தனர்.

    மண் மனிதரையும் பிற உயிர்களையும் தாங்குவது. உயிர் வாழத் தேவையான உணவு மண்ணிலிருந்து தான் கிடைக்கிறது. இது மிக நீண்டது என்பதால் உர்வீ என்றும், மிக அகன்றது என்பதால் ப்ருத்வீ என்றும் அழைக்கப்பட்டது.

    மழை பொழிந்து பயிர்கள் விளையக் காரணமாக இருப்பதால் விண்ணைத் தந்தை என்றும் உயிரினங்களை வளர்க்கும் பயிரினங்களை விளைவிப்பதால் மண்ணைத் தாய் என்றும் அழைத்தனர். விண்ணையும் மண்ணையும் சேர்த்து த்யாவா ப்ருத்வீ என்றும் ரோதஸீ என்ற பெயராலும் அழைத்து வேத ரிஷிகள் பல மந்திரங்களைப் பாடியுள்ளனர்.

    ரோதஸீ உணவு தருகிறார்கள். தேவர்களைப் பெற்றுத் தந்தவர்கள் இவர்களே. அதனால் இவர்கள் தேவபுத்ரே எனப்படுகின்றனர். புகழ் உடையவர்கள். என்றும் குறைவு இல்லாதவர்கள் (அம்ருத்ரே), உயிர்களின் புகலிடம் (புவனானாம் அபிச்ரிய: ), நீர்வளம் உடையவர்கள் (க்ருதவதீ, பயஸ்வதீ, பூரிதாரா).

    இவர்கள் வருணனின் தர்மத்தால் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். மழை தருவது, ஒளி தருவது என விண்ணின் தர்மம் வேறு. மழையைப் பெற்று பயிர்களை விளைவிப்பது, உயிர்களைத் தாங்குவது என மண்ணின் தர்மம் வேறு. என்றாலும் இருவரும் இணைந்து செயல்படுவது ரிஷிகளுக்கு வியப்பை மூட்டும் ஒரு நிகழ்வு.

    தர்மத்தை நிலைநாட்டும் தேவர்களைப் பிறப்பித்த இவர்களும் தர்மத்தை (ருதத்தை) அனுசரிப்பவர்கள் என்பதால் ருதத்தின் தாய்கள், ருதாவரீ, ருதஜாத ஸத்யே எனப்படுகின்றனர். உங்களுடைய ருதம் என்றும் ஸத்யமாக இருக்கட்டும் என்று வேண்டுகிறது ரிக் (3.54.3.)  இருவருமே இனிமை நிரம்பியவர்கள் என்பதால் ரிஷிகள் அவர்களை மதுச்சுதே, மதுதுகே, மதுவ்ரதே எனப் புகழ்கின்றனர்.

    இவர்களை வேண்டினால் என்ன கிடைக்கும்? எல்லாத் தேவர்களிடமும் எவை வேண்டப்படுகின்றனவோ அந்த உணவு, புகழ், ஆயுள், மக்கட்பேறு, ரயி எனப்படும் ஆனந்தச் செல்வம் ஆகியவை கிடைக்கும்.

    நீர்:
    தெய்வம் நல்லதே செய்யும் என்பதும், நல்லது செய்யும் எல்லாமே தெய்வம் தான் என்பதும் வேதக் கொள்கை. அந்த அடிப்படையில் நமக்கு நன்மை செய்யும் நீரைத் தெய்வமாக்கி நன்றியுடன் போற்றுகிறார்கள் ரிஷிகள்.

    நீர் என்பதற்கான வேதச் சொல் ஆப:. இது எப்பொழுதும் பன்மையிலேயே பேசப்படும். நீர்த்துளிகள் என்று கொள்ளலாம். நீர் மனிதனை போர் நடக்கும்போதும் சமாதான காலத்திலும் காக்கிறது. மருத்துவர்களுக்குள்ளே சிறந்த இது தாய் போன்றது. நிற்கின்ற தாவரங்களுக்கும் நடக்கின்ற பிராணிகளுக்கும் இது தாயும் தந்தையுமாக உள்ளது. இது இந்திரனின் விரதங்களை மீறுவதில்லை. தன் போக்கில் ஓடுவதில் மகிழ்ச்சி கொள்கிறது. சூரியன் இதை ஆவியாக்குகிறார். இந்திரன் இது ஓடுவதற்குப் பாதை அமைத்துக் கொடுக்கிறார்.

    தண்ணீரின் வகைகளை வேதம் குறிப்பிடுகிறது. 1 விண்ணிலிருந்து பொழிவது, 2 நதிகளில் ஓடுவது, 3 வெட்டப்பட்ட கால்வாய்கள் மூலம் செல்வது, 4 பூமியிலிருந்து தானே பீறிட்டுக் கிளம்புவது என நான்கு வகை உண்டு.

    நீரின் தலைவர் வருணன். வடவாக்னி என்ற வடிவத்தில் அக்னி நீருக்குள் நுழைந்து வாழ்கிறார்.

    நீரைக் குறித்த ஒரு தோத்திரப் பகுதியின் மொழிபெயர்ப்பு இது (1.23.16 – 23). இதில் நீரின் நலம் செய்யும் தன்மையைத் தியானிக்கும் நிலையில் ரிஷி பரவச நிலை அடைந்து நீரைத் தெய்வமாகக் கருதிப் போற்றுவதை அறியலாம்.

    யக்ஞம் செய்வோரின் பந்துக்களும் எங்களுடைய தாய்மார்களுமாகிய நீர் பசுவின் பாலை இனிமையாக்கிக் கொண்டு தன் வழியே செல்கிறது.

        சூரியன் அருகில் உள்ள நீரும் சூரியனோடு சேர்ந்துள்ள நீரும் எங்கள் வேள்விக்கு நலம் சேர்ப்பதாக.

        எங்கள் பசுக்கள் பருகும் நீரைப் போற்றுகிறேன். நீருக்கு ஹவிஸ் அளிக்கப்பட வேண்டும்.

        நீரில் அமிர்தம் உள்ளது. நீரில் மருந்துகள் உள்ளன. எனவே நீரைப் புகழ்வதற்காக தேவர்கள் விரையட்டும்.

        நீரில் எல்லா மருந்துகளும் உள்ளன. உலகிற்கு நலம் செய்யும் அக்னியும் உள்ளது.

        நீரே, நான் நீண்ட காலம் சூரியனைக் காணுமாறு என் உடலில் எல்லா மருந்துகளையும் நிரப்புக.

        நீரே, என்னிடத்தில் என்ன குற்றம் இருந்தாலும், நான் என்ன துரோகம் செய்திருந்தாலும்,  என்ன பொய் சொல்லி இருந்தாலும் அவற்றை நீக்குக.

        நான் இன்று நீரில் நுழைந்துள்ளேன். நாங்கள் அதன் ரஸத்தோடு கலந்துள்ளோம். நீரிலுள்ள அக்னியே வா, என்னைத் திடப்படுத்து.

    படம் உதவிக்கு நன்றி: http://www.cambodia-picturetour.com/banteay-srei-the-citadel-of-the-beauty/

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 26

    –சு.கோதண்டராமன்.

    ப்ருஹஸ்பதியும் ப்ரம்மணஸ்பதியும்

    Brihaspati

    கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே
    கவிம் கவீனாம் உபமஸ்ரவஸ்தமம்
    ஜ்யேஷ்டராஜம் ப்ரம்மணாம் ப்ரம்மணஸ்பதே
    ஆனச் ச்ருண்வன் ஊதிபிஸ் ஸீத ஸாதனம்.

    இது விநாயகருக்கு உரியதாக தற்போது பயன்படுத்தப்படும் மந்திரம் (ரிக் 2.23.1.) இதில் கூறப்படும் பிரம்மணஸ்பதி யார், விநாயகரா அல்லது வேறு தெய்வமா?

    இந்த சூக்தத்தில் 19 மந்திரங்கள் உள்ளன. அவற்றில் 13 ப்ருஹஸ்பதியைப் போற்றுகின்றன. இடை இடையே வரும் 6 பிரம்மணஸ்பதியைப் போற்றுகின்றன. இவர்கள் இருவரும் ஒன்றா, வேறு வேறா? வேறு வேறாயின் ஏன் ஒரே சூக்தத்தில் இவர்களைச் சேர்த்து வைக்க வேண்டும்?

    ப்ருஹஸ்பதி என்ற சொல்லுக்கு பெரும் தலைவர் என்று பொருள். ப்ரம்மணஸ்பதி என்பது மந்திரத்தின் தலைவர் எனப் பொருள்படும்.

    ரிக் வேதம் முழுவதும் பல வேறு இடங்களில் வரும் மந்திரங்களிலிருந்து இவர்களுடைய குணாதிசயங்களைத் தொகுத்துப் பார்க்கலாம். அறிவுள்ளவர், பகைவர்களை அழிப்பவர், பாவங்களைப் போக்குபவர், மக்களைக் காப்பவர், செல்வம் கொடுப்பவர் என்ற அடைமொழிகள் இருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இது எல்லாத் தேவர்களுக்கும் சொல்லப்படுவதுதான்.

    தோத்திரங்களின் தலைவர் என்ற சிறப்பு இருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆம். ப்ருஹஸ்பதியும் ப்ரம்மணாம் ஜனிதா (ஸ்தோத்திரங்களின் தந்தை) எனப்படுகிறார். எனவே இருவரும் ஒன்று என்று ஆகிறது.

    இந்தத் தெய்வம் இந்திரன்தான் என்று கருதுவதற்கும் இடம் இருக்கிறது. வலனைக் கொன்று பசுக்களை விடுவித்த சிறப்பு ப்ரம்மணஸ்பதிக்கும் சொல்லப்படுகிறது. வேறு ஒரு மந்திரத்தில் அந்தப் பெருமை ப்ருஹஸ்பதிக்கும் கொடுக்கப்படுகிறது. மேலும், வேறு ஒரு மந்திரத்தில், பூமியை நிலை நிறுத்தினார் என்ற இந்திரனின் சிறப்பு ப்ருஹஸ்பதியின் பெயரால் பேசப்படுகிறது.

    ப்ரம்மண ராஜா (தோத்திரங்களின் ராஜா) என்ற பெயர் இந்திரனுக்குக் கொடுக்கப்படுகிறது. அத்ரிபித் (மலைகளை உடைத்தவர்), விருத்திரனை வென்றவர், நகரங்களை அழித்தவர் என்ற இந்திரனின் சிறப்புகள் ப்ருஹஸ்பதிக்கும் கொடுக்கப்படுகின்றன.

    எனவே ப்ருஹஸ்பதி என்பதும் பிரம்மணஸ்பதி என்பதும் இந்திரனுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்தான் என்று நாம் முடிவு கட்டும் வேளையில், ப்ருஹஸ்பதியும் இந்திரனும் இரு வேறு தெய்வங்கள் என்று கருதச் செய்யும் மந்திரமும் ஒன்று இருக்கிறது. ப்ருஹஸ்பதியும் இந்திரனும் ஆகிய நீங்கள் இருவரும் விண்ணின் செல்வத்திற்கும் மண்ணின் செல்வத்திற்கும் அதிபதியாக இருக்கிறீர்கள் என்று சொல்கிறது ஒரு ரிக் (7.97.10).

    அக்னிக்கே உரிய நீலப்ருஷ்ட (கரு நிற முதுகு உள்ளவர்) என்ற அடைமொழியால் ப்ருஹஸ்பதி அழைக்கப்படுகிறார்.

    மொத்தத்தில் பெயர்கள் வேறு பட்டாலும், தனித் தனி தெய்வமாகப் போற்றப்பட்டாலும் எல்லாமே ஒன்றேயான ஸத்தான பரம்பொருளைத் தான் குறிக்கின்றன என்பதை இவை காட்டுகின்றன.

    முதலில் குறிப்பிட்ட மந்திரத்தில் கணபதி (கூட்டத்தின் தலைவன்) என்ற சொல் இருப்பதால் அதை விநாயகருக்கு உரியதாகப் பிற்காலத்தில் ஆக்கினர்.

     

     

     

     

    படம் உதவிக்கு நன்றி: http://commons.wikimedia.org/wiki/File:Brihaspati.jpg

    Share