என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 30

சு.கோதண்டராமன்.

 

ராட்சசர்கள்

rakshasha

மாயையாவது யாதெனில் ஸர்வ மங்களமாகிய ஜகத்தில் ஜீவன் தன் கற்பனா சக்தியால் ஏற்படுத்திக் கொள்ளும் தீமை….. இந்த மாயை என்ற ராக்ஷஸியின் வயிற்றில் கவலை, துன்பம், பயம், கஷ்டம், மரணம் முதலிய அஸுர ஜாதிகள் தோன்றி ஜீவகுலம் என்ற பயிரை அழிக்கின்றன.

– பாரதி

இன்றைய வழக்கில் அசுரர்களும் ராட்சசர்களும் ஒன்று. பாரதியும் அப்படித்தான் பயன்படுத்துகிறார். ஆனால் வேதம் அவ்வாறு கூறவில்லை, வலிமை உடைய எல்லாரும், தேவர்கள் உள்பட, அசுரர்கள் தான் என்று பார்த்தோம். தேவர்களின் பகைவர்கள் ராட்சசர்கள் என்றும் பார்த்தோம் (ரிக் வேதத்தில் ராக்ஷஸ் என்ற சொல் காணப்படவில்லை. ரக்ஷஸ் என்று தான் இருக்கிறது. தமிழ் வழக்கை ஒட்டி இங்கு ராட்சசர் என்று எழுதப்படுகிறது).

ராட்சசர்கள் என்பார் ஒரு தனி இனத்தவர் அல்ல. ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேர்ந்து வாழும் ஒரு கூட்டத்தினர் அல்ல. அவர்கள் எங்கே வசிப்பவர்கள் என்று சொல்ல முடியாது. பூமி முழுவதும் அவர்கள் வியாபித்து இருப்பதாகக் கொள்ளலாம். அவர்கள் எத்திசையிலிருந்தும் வரலாம், எந்த நேரத்திலும் வரலாம், அருகிலிருந்தும் வரலாம், தொலைவிலிருந்தும் வரலாம். அவர்கள் நம்மிடையே கூட இருக்கலாம். ஆம், ஒரு மந்திரம் (10.87.10) மனிதர்களுக்கிடையில் உள்ள ராட்சசர்களைக் கண்டுபிடியுங்கள் என்று அக்னியை வேண்டுகிறது. ராட்சசர்களில் பெண்களும் உண்டு.

ராட்சசர்கள் எப்படிப்பட்டவர்கள்? யாகங்களுக்கும், ஹவிர்பாகங்களுக்கும், இடையூறு செய்பவர்கள், பிரார்த்தனையை வெறுப்பவர்கள். மூடர்களைக் கடவுளாக வணங்குவார்கள். அவர்கள் இருட்டை வளர்ப்பவர்கள், அறிவில்லாதவர்கள், தவறான அறிவு பெற்றவர்கள் என்றும் சூரிய உதயம், வைகறைப் பொழுதின் வருகை ஆகிய ஒளிகளால் அவர்கள் விரட்டப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளதால் இந்த இருட்டு என்பது அஞ்ஞானத்தைக் குறிப்பது அறியப்படுகிறது. அஞ்ஞானத்தின் விளைவான துயரத்தை வளர்க்கும் அவர்களை ஆனந்தத்தின் பிரதிநிதியான சோம பானம் நசுக்கும் பாறைக் கற்களின் ஓசை விரட்டுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

அவர்கள் பிறருக்கு எதுவும் கொடுக்க மாட்டார்கள். மக்களைத் துன்புறுத்துவார்கள். அவர்கள் அத்ரின் (விழுங்குபவர்) என்றும் க்ரவ்யாத (மாமிசம் சாப்பிடுபவர்) என்றும் கூறப்படுவதிலிருந்து அவர்கள் உணவையே பெரிதாக நினைப்பவர்கள் என்றும் அதில் எந்தக் கட்டுப்பாடும் ஏற்காதவர்கள் என்றும் அறிகிறோம். பிறரை நிந்திப்பார்கள். திட்டுவார்கள். பொய்யான குற்றச் சாட்டுகளைக் கூறுவார்கள். இரண்டு வகையாகப் பேசுவார்கள்.

அவர்கள் வலிமை மிக்கவர்கள். வலிமையில் வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள். அதைக் கொண்டு அவர்கள் மனிதரை அடக்கி ஆள்கிறார்கள். செல்வத்தைப் பறித்துக் கொள்கிறார்கள். மாயையில் வல்ல அவர்கள் தவறு செய்து விட்டு இரவோடு இரவாகப் பறவை போல் பறந்து விடுகிறார்கள்.

நோய், பிசாசு, பாம்பு, ஓநாய் போல அஞ்சத்தக்க அவர்களை நாயைக் கல்லால் அடித்து விரட்டுவது போல விரட்ட வேண்டும் என்கிறது வேதம் (7.38.7, 7.104.22).

அவர்கள் பாதை துன்பம் நிறைந்ததாக ஆக்க வேண்டும். அவர்கள் தங்கள் கெட்ட செயல்களின் விளைவைத் தாங்களே அனுபவிக்க வேண்டும், அவர்களும் பொய் சொல்லுபவர்களும் இந்திரனின் வலைக்குள் அகப்பட வேண்டும், ராட்சசரால் வெல்ல முடியாத வலிமையும், அவர்களால் பறித்துக் கொள்ளப்பட முடியாத செல்வமும் எங்களுக்கு வேண்டும் என்று வேதம் வேண்டுகிறது.

இந்த வருணனைகளைப் பார்க்கும்போது, ராட்சசர் என்பது ஒரு இனப் பெயர் போலத் தோற்றம் அளித்தாலும் ராட்சசர்கள் வாழும் இடம் எது என்று கூறமுடியாது, அவர்கள் அருகிலும் இருக்கலாம், தொலைவிலும் இருக்கலாம், நம்மிடையே கூட இருக்கலாம் என்று கூறப்படுவதாலும், எந்த ராட்சசரும் பெயர் சொல்லிச் சுட்டப்படாததிலிருந்தும் ராட்சசர் என்பது ஒரு மனித இனத்தைக் குறிப்பிடுவதாக ஏற்க முடியவில்லை.

அஞ்ஞானம், பொய், கோபம், பிறரைக் குறை கூறுதல், பொறாமை, பேராசை முதலிய தீய குணங்களைக் கொண்டவர்களே ராட்சசர் என உருவகப்படுத்தப்பட்டிருப்பதை ஊகிக்க முடிகிறது.

எல்லார் மனதிலும் ராட்சசத் தனம் இருக்க வாய்ப்பு உண்டு. ராட்சசத் தனம் இல்லாத மனத்தோடு என் பிரார்த்தனையைக் கேட்பாயாக என்று அக்னி வேண்டப்படுவதிலிருந்து (2.10.5) ராட்சசர்களின் இருப்பிடம் மனம் தான் என்று தெரிகிறது.

எல்லாத் தேவர்களும் ராட்சசர்களை அழிக்க வல்லவர் என்றாலும் குறிப்பாக, இந்திரன், அக்னி, மருத்துகள், சோமன், பிருகஸ்பதி, பர்ஜன்ய, அச்வின்கள் ஆகியோர் ராட்சசர்களை எரித்து அழிக்குமாறு வேண்டப்படுகிறார்கள். மித்ர வருணர்களின் அருளால் மனிதன் ராட்சசரை ஒழிக்கும் வலிமை பெறுகிறான். வசிஷ்டரின் சூக்தம் ஒன்றின் முடிவில் (7.8.6) அவர் ராட்சசரை ஒழிக்கும் பிரார்த்தனை ஒன்று நான் இயற்றியிருக்கிறேன் என்கிறார். பிரார்த்தனையால் ஒழிக்கப்படக் கூடியவர்கள் என்பதால் ராட்சசர் என்பது தீய பண்புகளையே குறிக்கும் என அறிகிறோம்.

 
படம் உதவிக்கு நன்றி: http://commons.wikimedia.org/wiki/File:Fronton_Cambodge_Mus%C3%A9e_Guimet_9972.jpg

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.