சு.கோதண்டராமன்.

 

நீர், ஒளி, பசுக்கள்

BRAHMIN_VEDAS_by_VISHNU108

 

மூன்று வகையான உருவகங்களும் பொருந்தாத மந்திரங்களும் உண்டு. கீழே வருவனவற்றைப் பாருங்கள்.
பசுக்களை விரும்பி அங்கிரஸ்கள் உட்கார்ந்தார்கள். அமர வாழ்வுக்கான பிரார்த்தனைகளை இயற்றினர். ருதத்தின் (தர்மத்தின்) மூலம் அவர்கள் பல மாதங்கள் செய்த முயற்சி மகத்தானது. (3.31.9)
அங்கிரஸ்கள் பிரார்த்தனைகள் மூலம் மலைகளைப் பிளந்து பசுக்களை மீட்டனர். (6.65.5)
இந்திரா, குத்ஸனுக்காக நீ வைகறைப் பொழுதுகளைக் கொடுத்து நீரைப் பெருக விட்ட போது, உன்னிடம் நட்புக் கொண்ட புரோஹிதர்கள் ருதத்தை (தர்மத்தை) மனதில் கொண்டு வலனைக் கொன்றார்கள். (10.138.1)
இந்திரா, பசுக்களை நாடும் எங்களுக்கு பசுச் செல்வம் பற்றிய அறிவைத் தருகிறாய். (1.33.1)
இந்திரா, நீ யாரை விரும்புகிறாயோ, அவரிடம் பசுவை ஓட்டி வருகிறாய். (1.33. 3)
இருட்டுக்கு அப்பால் எந்த ஒளிமயமான உணவு உள்ளதோ, அதை எங்களுக்குக் கொடு. (1.46.6)
இருட்டு நீரைத் தடுத்தது. (1.54.10)
இந்திரன் தன் நண்பர்களின் உதவியோடு பசுக்களைப் பின் தொடர்ந்தார், இருளில் மறைந்து கிடந்த சூரியனை வெளிப்படுத்தினார். (3.39.5)
மேற்கண்ட மந்திரங்களில், பசு என்பது ஞான ஒளியின் குறியீடு என்றும் சரமா என்னும் நாய் மனிதனின் உள்ளுணர்வின் குறியீடு என்றும் அரவிந்தர் கூறுகிறார்.

அக்னி மறைத்து வைக்கப்பட்ட நீரையும், ஒளியையும், பசுக்களையும் (अपः, स्वः, गाः) கண்டுபிடித்தார். (5.14.4)
சோமன் நீர் ஒளி பசுக்களை அடைய விரும்புகிறார். (9.90.4)
சோமனே, எனக்கு நீர் ஒளி பசுக்களைத் தருவீராக. (9.91.6)
மேலே காட்டியது போன்று பல இடங்களில் நீர், ஒளி, பசுக்கள் (ஆப, ஸ்வர், கோ) மூன்றும் சேர்த்துப் பேசப்படுகின்றன. அரவிந்தர் கூற்றுப்படி பசுவை ஞான ஒளி என்று கொண்டால் ஆப என்னும நீரையும் ஸ்வர் என்னும் ஒளியையும் எப்படிப் பொருள் கொள்வது? தெய்விக இன்பங்கள் என்ற அவரது விளக்கம் நமக்குத் தெளிவு தரவில்லை.

இம் மூன்றுமே இறை அருளின் வெவ்வேறு நிலைகளைக் குறிக்கும் சொற்கள் என்று கொண்டால் இந்தப் பிரச்சினை தீர்ந்து விடுகிறது.

எல்லா உயிர்களுக்கும் அடிப்படையில் உணவு முதலான உடல் தேவைகள் உள்ளன. மனிதரில் சிலர், பாரதி காட்டும் வேடிக்கை மனிதர்கள், இந்த உணவு நாட்டம் மட்டுமே கொண்டுள்ளனர். இதற்கு மேம்பட்ட நிலை ஒன்று உண்டு என்பதை உணராமலே வாழ்ந்து ஒரு நாள் கூற்றுக்கு இரையாகிறார்கள்.

பல மனிதர்கள் இதோடு நிறைவு அடைவதில்லை. மற்றவரை விட மேம்பட்டு வாழ விரும்புகிறார்கள். அடுத்தவரை விடச் செல்வத்தில், வலிமையில், கல்வி கலைகளில் மேலோங்க முயல்கிறார்கள். சிலர் மட்டும் சாதனைகள் புரிந்து புகழ் பெற்று இறப்புக்குப் பின்னும் பிறரால் போற்றப்படும் நிலையை அடைகிறார்கள். வேதத்தில் பெரும்பாலான இடங்களில் இந்த தேவ நிலை, அமரத்துவம், ஸ்வர் என்னும் ஒளியே மனிதனின் லட்சியமாகக் காட்டப்பட்டுள்ளது.

புகழை நாடுபவர்கள் அதற்கு மேல் நிலை ஒன்று இருப்பதை அறியார். சில மனிதருக்கு மட்டும் புகழ் நிலைக்கும் மேலான நிலை ஒன்று இருக்கக் கூடும் என்பது உள்ளுணர்வால் தெரிகிறது. தேவர்களுக்கெல்லாம் மேலான பரம் பொருள் ஒன்று இருக்க வேண்டும் எனக் கருதுகிறார்கள். அது பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும், அதனோடு இணைய வேண்டும் என்ற பேரவா கொள்கிறார்கள்.

ஆனால் அதை அடைவது எளிதல்ல. மனிதனின் உலகியல் அறிவு அவனை மேல் நோக்க விடாமல் செய்கிறது.

நேற்று எனக்கு உதவி செய்தவருக்கும், நாளை எனக்கு நிச்சயமாக உதவி செய்யக் கூடியவருக்கும் மட்டுமே நான் உதவி செய்வேன் என்று சொல்வது வணிக புத்தி. இதை நாம் இறைவனிடமும் காட்டுகிறோம். திருமணம் கை கூடினால் அபிஷேகம் செய்கிறேன், வேலை கிடைத்தால் 108 தேங்காய் உடைக்கிறேன் என்று வேண்டுவதும், இன்னின்ன தானம் செய்தால் இன்னின்ன நன்மை கிடைக்குமென்று நம்புவதும் அந்த வணிக புத்தியால் தான். இதனால் சிறு சிறு நன்மைகளைக் குறிக்கோளாகக் கொள்கிறோமே அன்றி உயர்ந்த லட்சியமாகிய நமக்கு உரிமையான பேரானந்தத்தை இழக்கிறோம். இந்த வணிக புத்தியைக் கொன்றால் தான் பேரானந்தமாகிய பசுக் கூட்டங்கள் நமக்குத் திரும்பக் கிடைக்கும் என்பதைத் தான் தேவர்கள் பணியைக் கொன்று பசுக்களை மீட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அங்கிரஸ்கள் தங்கள் உள்ளுணர்வால் ஆனந்தம் இருக்குமிடத்தை அறிந்தனர். உழைப்பாலும், நற்செயல்களாலும், பிரார்த்தனைகளாலும் மலையைப் பிளந்தனர், பசுக்களை அடைந்தனர் என்ற (1.83.4, 1.71.2) மந்திரங்கள் பெரும் முயற்சி செய்து பல தடைகளைக் கடந்து இறை அனுபவம் பெற்ற அங்கிரஸ்கள் மற்றவர்கள் பேரானந்தம் அடைய இதையே பாதையாக அமைத்தனர் என்பதையே காட்டுகின்றன.

இறைவன் என்ன செய்கிறான்? உணவு நாட்டம் கொண்டவனுக்கு உணவு கிடைக்கச் செய்கிறான். இதற்கு மானிடன் பெருமுயற்சி செய்யத் தேவை இல்லை. கல்லினுட் தேரைக்கும் கருப்பை அண்டத்து உயிர்க்கும் புல்லுணவு அளித்துக் காக்கும் இறைவன் அதற்கு ஏதேனும் தடை ஏற்படும்போது அதை நீக்கி உணவு கிடைக்க அருள் புரிகிறான். இது தான் இந்திரன் விருத்திரனைக் கொன்று நீரைப் பெருக விட்ட கதை.

ஸ்வர் என்பதும் ஜ்யோதி என்பதும் புகழைக் குறிக்கின்றன. இந்தப் புகழ் ஜ்யோதியை மறைக்கும் தஸ்யு யார்? ஜ்யோதியை எவராவது மறைக்க முடியுமா? ஆம். நமது கையிலுள்ள குடை மறைக்கக் கூடும். நாம் அமைத்துக் கொண்ட வீடு மறைக்கக் கூடும். நாம் கண் இமைகளை மூடினால் கூட ஜ்யோதி புலப்படாமல் போகும். நம் புகழை மறைக்கும் தஸ்யு வெளியில் இல்லை. நம்மிடத்தில் தான் இருக்கிறான். ராட்சசர்களைப் பற்றிப் பார்க்கும் போது ராட்சசர் என்பார் நம் மனத்தில் உள்ள தீய பண்புகள் தான் என்று பார்த்தோம். நாம் விரும்பிய போதும் முயன்ற போதும் புகழ் பெற முடியாமல் தடை செய்பவை சோம்பல், கவலை, கோபம், பயம், பொய், ஆசை ஆகிய நம் மனத்தில் உள்ள பகைவர்களே. இந்தப் பகைவர்களை வென்று நாம் புகழ் பெற வழி காட்டுகிறான் இறைவன். இது தான் தேவர்கள் தஸ்யுக்களை வென்று ஜ்யோதியை மீட்ட கதை.

முதல் நிலையில் நீர் கிடைக்காத துன்பம் நாம் வேண்டாமலே நீக்கப்படுகிறது. இரண்டாவது நிலையில் புகழ் இல்லாத நிலை நம்முடைய மனத்தைத் தூய்மை செய்து கொண்டால் போய் விடுகிறது. மூன்றாவது நிலையில் பேரானந்தம் பிறர் நலனுக்கான நற்செயல்கள் செய்வதில் உழைப்பதாலும், பிரார்த்தனைகளாலும் கைகூடுகிறது. இந்த மூன்றுமே மனிதர்க்குத் தேவை என்பதைத் தான் நீர், ஒளி, பசு தருக என்று வேண்டும் மந்திரங்கள் தெரிவிக்கின்றன.

படம் உதவி: http://vishnu108.deviantart.com/art/BRAHMIN-VEDAS-160338756

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *