சுடுமணலில் என் வெற்றுக் கால்கள்…

-தாரமங்கலம் வளவன்

சுடுமணலில் என் வெற்றுக் கால்கள்
தவித்தபோது ஓங்கி வளர்ந்த ஆலமர நிழலாய்
நீ நின்றாய்
ஓடி வந்து உன் நிழலில் இளைப்பாறினேன்!

சொட்டு நீர் கிடைக்குமா என்று தாகத்தில்
என் நாக்கு வறண்ட போது
பொங்கி வரும் நீரூற்றாய்
நீ என் தாகம் தணித்தாய்!

நான் சரிந்த போது என்னைத் தாங்கிப் பிடித்தாய்
துவண்ட போது தோள் கொடுத்தாய்
உன் அரவணைப்பை உதறித்தள்ளி ஓடியபோதும்
என் பின்னால் ஓடி வந்தாய்!

இன்று…
நான் ஓடியது வெற்று ஓட்டம்
என்பது புரிந்து விட்டது!
என் ஓட்டம் நின்று விட்டது…
திரும்பிப் பார்க்கிறேன்
நீ தூரத்தில் தள்ளாடித் தள்ளாடி வருகிறாய்!

முன்பு போல்
உன்னிடம் வேகம் இல்லை
காரணம் முதுமை என்கிறாய்!

நேற்றை விட இன்று
உன் நிழல் எனக்குக் கண்டிப்பாய்த் தேவை
உனக்கு மூப்பும் சாவும் வரக்கூடாது
என்றும்
என்னுடன் நீ வர வேண்டும்!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க