–சு.கோதண்டராமன்.

ப்ருஹஸ்பதியும் ப்ரம்மணஸ்பதியும்

Brihaspati

கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே
கவிம் கவீனாம் உபமஸ்ரவஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரம்மணாம் ப்ரம்மணஸ்பதே
ஆனச் ச்ருண்வன் ஊதிபிஸ் ஸீத ஸாதனம்.

இது விநாயகருக்கு உரியதாக தற்போது பயன்படுத்தப்படும் மந்திரம் (ரிக் 2.23.1.) இதில் கூறப்படும் பிரம்மணஸ்பதி யார், விநாயகரா அல்லது வேறு தெய்வமா?

இந்த சூக்தத்தில் 19 மந்திரங்கள் உள்ளன. அவற்றில் 13 ப்ருஹஸ்பதியைப் போற்றுகின்றன. இடை இடையே வரும் 6 பிரம்மணஸ்பதியைப் போற்றுகின்றன. இவர்கள் இருவரும் ஒன்றா, வேறு வேறா? வேறு வேறாயின் ஏன் ஒரே சூக்தத்தில் இவர்களைச் சேர்த்து வைக்க வேண்டும்?

ப்ருஹஸ்பதி என்ற சொல்லுக்கு பெரும் தலைவர் என்று பொருள். ப்ரம்மணஸ்பதி என்பது மந்திரத்தின் தலைவர் எனப் பொருள்படும்.

ரிக் வேதம் முழுவதும் பல வேறு இடங்களில் வரும் மந்திரங்களிலிருந்து இவர்களுடைய குணாதிசயங்களைத் தொகுத்துப் பார்க்கலாம். அறிவுள்ளவர், பகைவர்களை அழிப்பவர், பாவங்களைப் போக்குபவர், மக்களைக் காப்பவர், செல்வம் கொடுப்பவர் என்ற அடைமொழிகள் இருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இது எல்லாத் தேவர்களுக்கும் சொல்லப்படுவதுதான்.

தோத்திரங்களின் தலைவர் என்ற சிறப்பு இருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆம். ப்ருஹஸ்பதியும் ப்ரம்மணாம் ஜனிதா (ஸ்தோத்திரங்களின் தந்தை) எனப்படுகிறார். எனவே இருவரும் ஒன்று என்று ஆகிறது.

இந்தத் தெய்வம் இந்திரன்தான் என்று கருதுவதற்கும் இடம் இருக்கிறது. வலனைக் கொன்று பசுக்களை விடுவித்த சிறப்பு ப்ரம்மணஸ்பதிக்கும் சொல்லப்படுகிறது. வேறு ஒரு மந்திரத்தில் அந்தப் பெருமை ப்ருஹஸ்பதிக்கும் கொடுக்கப்படுகிறது. மேலும், வேறு ஒரு மந்திரத்தில், பூமியை நிலை நிறுத்தினார் என்ற இந்திரனின் சிறப்பு ப்ருஹஸ்பதியின் பெயரால் பேசப்படுகிறது.

ப்ரம்மண ராஜா (தோத்திரங்களின் ராஜா) என்ற பெயர் இந்திரனுக்குக் கொடுக்கப்படுகிறது. அத்ரிபித் (மலைகளை உடைத்தவர்), விருத்திரனை வென்றவர், நகரங்களை அழித்தவர் என்ற இந்திரனின் சிறப்புகள் ப்ருஹஸ்பதிக்கும் கொடுக்கப்படுகின்றன.

எனவே ப்ருஹஸ்பதி என்பதும் பிரம்மணஸ்பதி என்பதும் இந்திரனுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்தான் என்று நாம் முடிவு கட்டும் வேளையில், ப்ருஹஸ்பதியும் இந்திரனும் இரு வேறு தெய்வங்கள் என்று கருதச் செய்யும் மந்திரமும் ஒன்று இருக்கிறது. ப்ருஹஸ்பதியும் இந்திரனும் ஆகிய நீங்கள் இருவரும் விண்ணின் செல்வத்திற்கும் மண்ணின் செல்வத்திற்கும் அதிபதியாக இருக்கிறீர்கள் என்று சொல்கிறது ஒரு ரிக் (7.97.10).

அக்னிக்கே உரிய நீலப்ருஷ்ட (கரு நிற முதுகு உள்ளவர்) என்ற அடைமொழியால் ப்ருஹஸ்பதி அழைக்கப்படுகிறார்.

மொத்தத்தில் பெயர்கள் வேறு பட்டாலும், தனித் தனி தெய்வமாகப் போற்றப்பட்டாலும் எல்லாமே ஒன்றேயான ஸத்தான பரம்பொருளைத் தான் குறிக்கின்றன என்பதை இவை காட்டுகின்றன.

முதலில் குறிப்பிட்ட மந்திரத்தில் கணபதி (கூட்டத்தின் தலைவன்) என்ற சொல் இருப்பதால் அதை விநாயகருக்கு உரியதாகப் பிற்காலத்தில் ஆக்கினர்.

 

 

 

 

படம் உதவிக்கு நன்றி: http://commons.wikimedia.org/wiki/File:Brihaspati.jpg

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 26

  1. இப்படி எத்தனை தோத்திரங்கள் — ஒரு தெய்வத்தைக் குறித்துச் சொல்லப்பட்ட தோத்திரங்கள் — மற்ற தெயவைத்தை குறிப்பதாக ஆகினவோ?

    எனக்கொரு ஐயம்.  அதர்வ சீர்ஷத்தில் சொல்லப்படுவது, பொதுவாக ஆனைமுகனைத் துதிக்க ஓதப்படுகிறதே!  அது யாரைக் குறித்து ஓதப்படுவது?

  2. நான் அதர்வ சீர்ஷத்தை முழுமையாகப் படித்ததில்லை. மேலெழுந்தவாரியாகப் பார்த்தவரை அதில் கடைசி சுலோகம் தவிர மற்றையவை எல்லாத் தெய்வங்களுக்கும் பொருந்தக் கூடிய பொதுப்படையாகத் தான் இருக்கின்றன.
    இன்று சடங்குகளுக்கும் அவற்றில் பயன்படுத்தப்படும் வேத மந்திரங்களுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதில்லை. இது பற்றி விரிவாகப் பின்னால் வர இருக்கும் ஒரு கட்டுரையிலும் எழுதியுள்ளேன்.  

  3. நான் அதர்வ சீர்ஷத்தை முழுமையாகப் படித்ததில்லை. மேலெழுந்தவாரியாகப் பார்த்தவரை அதில் கடைசி சுலோகம் தவிர மற்றையவை எல்லாத் தெய்வங்களுக்கும் பொருந்தக் கூடிய பொதுப்படையாகத் தான் இருக்கின்றன.அவை ரிக் வேதத்திலோ அதர்வ வேதத்திலோ இருப்பதாகவும் தெரியவில்லை.
    இன்று சடங்குகளுக்கும் அவற்றில் பயன்படுத்தப்படும் வேத மந்திரங்களுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதில்லை. இது பற்றி விரிவாகப் பின்னால் வர இருக்கும் ஒரு கட்டுரையிலும் எழுதியுள்ளேன்.  

  4. இதுவல்லவோ அவையடக்கம். \\ நான் அதர்வ சீர்ஷத்தை முழுமையாகப் படித்ததில்லை\\

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *