என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 34

சு.கோதண்டராமன்.

 

யக்ஞம் – உலகின் மையப் புள்ளி

yajna

 

 

தேவ என்ற சொல்லுக்கு அடுத்தபடியாக ரிக் வேதத்தில் மிகுதியாகத் தென்படும் வார்த்தை யக்ஞம் என்பதாகும். வழிபடுதல் என்ற பொருள் உடைய யஜ் என்ற தாதுவிலிருந்து தோன்றியது இது. யஜ் என்ற வினைச் சொல்லும் அதனிடத்தில் தோன்றிய யக்ஞம், யஜமான, யஜிஷ்ட, யக்ஞிய, யஜத்ர முதலான சொற்களும் ஆயிரம் தடவைகளுக்கு மேல் ரிக் வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

யக்ஞம் என்றால் என்ன?
யக்ஞம் என்ற சொல்லுக்கு வழிபாடு என்பது பொருள். யாகசாலையில் அக்னியை மூட்டி சமித்தையும் நெய்யையும் இட்டு ஸ்வாஹா முதலான மந்திரங்களுடன் செய்யப்படும் வழிபாடு யக்ஞம் என்பதாக வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. யக்ஞத்தில் முதலில் அக்னி அழைக்கப்பட்டு தோத்திரங்களால் மகிழ்விக்கப்படுகிறார். ஹவிஸ் என்று அழைக்கப்படும் ஒரு உணவு அக்னியில் இடப்படுகிறது. அதைத் தேவர்களிடம் சேர்ப்பிக்கும்படி அவர் வேண்டிக் கொள்ளப்படுகிறார். ஹவிஸை எடுத்துக் கொண்டு அக்னி தேவலோகத்துக்குச் சென்று தேவர்களிடம் தந்து அவர்களைப் பூமிக்கு வருமாறு அழைக்கிறார். அதனால் மகிழ்ச்சி அடைந்த தேவர்கள் பூமிக்கு வருகிறார்கள். விதத என்று அழைக்கப்படும் யாக சாலையில் பர்ஹிஸ் எனப்படும் தர்ப்பாசனத்தின் மீது அமர்ந்து, அங்கு அளிக்கப்படும் சோம பானத்தைக் குடிக்கிறார்கள். மேலும் மகிழ்ச்சி அடைந்த அவர்கள் பக்தர்களுக்குப் பல வகை வரங்களைத் தருகிறார்கள். இவ்வாறு அக்னி தேவலோகத்துக்கும் பூலோகத்துக்கும் இடையில் தூதராகப் பணிபுரிவதாக வேதம் கூறுகிறது. ஹவிஸ் என்பது பொதுவாக, பக்குவப்படுத்தப்பட்ட தானியங்களைக் கொண்டதாகவும், சில சமயங்களில் மிருகங்களைக் கொண்டதாகவும் இருப்பது தெரிய வருகிறது.
யக்ஞம் வேத காலத்து வழிபாட்டு முறை. கோயில், சிலைகள், பூவினால் அர்ச்சனை செய்தல், அபிஷேகம், பிரதட்சிணம், ஹாரத்தி முதலான வேறு வகையான வழிபாட்டு முறைகள் ரிக் வேதத்தில் சொல்லப்படவில்லை.

யக்ஞத்தில் அக்னிக்குச் சிறப்பிடம்:
எல்லாத் தேவர்களுக்கும் அக்னி மூலமாகத்தான் ஹவிஸ் போய்ச் சேருகிறது. எனவே யக்ஞத்தில் அக்னிக்கு ஒரு சிறப்பிடமும் அதன் காரணமாகச் சில சிறப்புப் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
யக்ஞத்தின் கேது (அடையாளம்),
யக்ஞத்தின் தேவன்,
யக்ஞபந்து,
யக்ஞ பிதா, யக்ஞ ப்ராவிதா- அபிசஸ்தி பாவா (காப்பாற்றுபவர்)
யக்ஞநீ- யக்ஞநேதா- யக்ஞபூர்வ்ய (தலைவர்),
புரோஹித (முன் நிலையில் வைக்கப்படுபவர்)
ரித்விக்- ஹோதா- யந்தா, யக்ஞ ஸாதக (நடத்துபவர்),
அத்வரஸ்ரீ (வேள்விச் செல்வம்),
ஹவ்ய வாட்- ரத்ய- யக்ஞ வாஹ (ஹவிஸைச் சுமந்து செல்பவர்),
யக்ஞ நாபி (மையம்),
ஸுக்ரது (நன்றாக யாகம் செய்பவர்),
யக்ஞ வித்வான் (யக்ஞங்களை நன்றாக அறிந்தவர்),
அத்வரேஷு ஈட்ய (யாகங்களில் போற்றப்படுபவர்)

அக்னி யக்ஞத்தைத் தூண்டுகிறார். அவர் தீமை செய்பவர்களையும் தீயன பேசுபவர்களையும் அழித்து பக்தர்களுக்கு யக்ஞத்தின் பாதையை எளிதாக ஆக்குகிறார். நற்செயல்கள் செய்வோர் வீட்டில் யக்ஞத்தை நிலை நிறுத்துகிறார். பூமிக்கும் ஆகாயத்துக்கும் இடையில் போய் வருகிறார். ஹவிஸ்ஸை தேவர்களுக்கு அளித்து திருப்தி செய்விக்கிறார். யக்ஞம் பற்றி நமக்கு எதுவும் தெரியாவிட்டாலும் அக்னி தானே பொறுப்பேற்று யக்ஞத்தை நிறைவேற்றிக் கொடுக்கிறார். அவர் யக்ஞத்தின் வடிவம்.

எல்லாத் தேவர்களும் யக்ஞத்திற்கு வருகிறார்கள். அவர்கள் அதனால் மகிழ்விக்கப் படுகிறார்கள், வலுவூட்டப்படுகிறார்கள். அவர்கள் யக்ஞத்தைக் காக்கிறார்கள். யக்ஞம் செய்யும் யஜமானனுக்கு அவர்கள் நீண்ட ஆயுள், பாதுகாப்பு, பாவங்களிலிருந்து விடுதலை, செல்வம், புகழ், வலிமை, வெற்றி, சந்ததி, குதிரைகள், உணவு மற்றும் அக்னியின் சக்தி ஆகியவற்றை அளிக்கிறார்கள். பித்ருக்களும் யக்ஞங்களால் மகிழ்கிறார்கள்.

யக்ஞமும் யாகமும் :

யாகம் என்ற சொல்லும் யக்ஞம் என்ற பொருளிலேயே தற்போது வழங்கப்படுகிறது. ஆனால் இது ரிக் வேதத்தில் காணப்படவில்லை, பிற்காலத்தில் ஏற்பட்டது. யக்ஞம் என்ற சொல் ஆழமான பொருள் உடையது. பிற்காலத்தில் அது மேலும் விரிவடைந்தது. யாகம் என்ற சொல் அக்னி வழிபாட்டை மட்டுமே குறிப்பதாக நின்று விட்டது. தமிழில் வேள்வி என்பதும் இந்தத் தீ வழிபாட்டை மட்டுமே குறிப்பதாக இருக்கிறது. யக்ஞத்தின் விரிவான பொருளைப் பற்றிப் பின்னர் பார்க்கலாம்.

யக்ஞத்தின் துணை அங்கங்கள்- மனம் :
யக்ஞத்தில் ஹவிஸ்ஸை விட முக்கியமானது மனப்பாங்குதான். “என்னிடம் யக்ஞத்தில் சமர்ப்பிக்க நெய் இல்லை அதற்குத் தேவையான பசு இல்லை. சமித்து கொண்டு வருவோம் என்றால் அதை வெட்டி வருவதற்கான கோடரியும் இல்லை. கரையான் அரித்த சுள்ளிகளும் எறும்பு மொய்த்த எண்ணெயும்தான் உள்ளன. இதையே நெய்யாக ஏற்றுக் கொள்க” என்று அக்னியை வேண்டுகிறார் ஒரு ரிஷி. (8.102.19, 8.102.21)

அக்னியில் நெய், ஹவிஸ் சேர்ப்பிப்பது நம் மனதில் இருக்கும் நன்றி மற்றும் பணிவின் அடையாளம். ஆனால் இவை மட்டும் போதாது.

தேவர்களுக்கு நமஸ்காரம் செய்வதன் மூலம் நம் மனதின் வணக்கத்தை உடலால் வெளிப்படுத்த வேண்டும்.

பெற்ற உதவிகளுக்கு நன்றி தெரிவித்தும் மேற்கொண்டு உதவிகள் கோரியும் பிரார்த்தனை மந்திரங்களைக் கூறவேண்டும். இது வாக்கினால் செய்யப்படுவது. பிரார்த்தனை இல்லாத யக்ஞம் பலன் தருவதில்லை என்கிறது வேதம்.(10.105.8)

பிரார்த்தனையில் அர்க்க, உக்த, கிர, ப்ரஹ்ம, ஸ்தோமம் (अर्क, उक्थ, गिरः, ब्रह्म, स्तोम) என்ற ஐந்து வகை உண்டு. இவற்றின் தனித் தன்மை என்ன என்பது அறியப்பட முடியவில்லை. இது தவிர தீதி, தீ:, மன்ம, மதி, கான என்ற சொற்களும் (धीतिः, धीः, मन्म, मतिः, गानम्) பிரார்த்தனையையே குறிக்கின்றன.

செய்யும் யக்ஞத்தை எதற்காகச் செய்கிறோம் என்பதை உணர்ந்து செய்யவேண்டும். இதற்கு புத்தியைப் பயன்படுத்தல் அவசியமாகிறது.

இவ்வாறு மனம், வாக்கு, உடல், புத்தி இந்த நான்கும் ஒருங்கிணைந்து ஸ்தோமம், நமஸ்காரம், ஹவிஸ், சோமம் எல்லாம் சேர்ந்த யக்ஞம்தான் அத்வரம், அதாவது, குறைவில்லாத, முழுமையான யக்ஞம் ஆகும்.

கீழ்க்கண்ட மந்திரங்கள் வெறும் ஆகுதி மட்டுமே முழுமையான யக்ஞம் ஆகாது, அது அத்வரமாக ஆவதற்கு, அதாவது குறை இல்லாமல் இருக்க அத்துடன் ஸ்தோமம், நமஸ்காரம், புத்தி, ஹவிஸ் சேரவேண்டும் என்பதைத் தெரிவிக்கின்றன.
சோமா, இந்த யக்ஞத்தையும் பிரார்த்தனை மந்திரங்களையும் ஏற்றுக்கொள்க. (1.91.10)
நாங்கள் இந்திரனை யக்ஞத்தைக் கொண்டும் மந்திரங்களைக் கொண்டும், ஹவிஸைக் கொண்டும் வழிபடுகிறோம்.(10.24.2)
இந்த யக்ஞத்தில் நான் பூமியையும் ஆகாயத்தையும் நமஸ்காரத்தைக் கொண்டு போற்றுகிறேன்.(1.185.7)
நாங்கள் பிரகஸ்பதிக்கு யக்ஞங்களைக் கொண்டும் நமஸ்காரங்களைக் கொண்டும் ஹவிஸைக் கொண்டும் வழிபடுகிறோம். (4.50.6)
புரோகிதர்கள் அக்னியை யக்ஞத்தைக் கொண்டும் புத்தியைக் கொண்டும் வழிபடுகிறார்கள். (3.27.6)

யக்ஞத்தின் பொருள் விரிவடைதல் :
யக்ஞம் என்பது ஆகுதியை மட்டும் குறிப்பதல்ல என்பதைக் கீழ்க் கண்ட மந்திரம் கூறுகிறது.
தேவர்கள் யக்ஞம் செய்கிறார்கள்.(10.90.15, 16)
தேவர்கள் அக்னிக்கு யக்ஞம் செய்கிறார்கள். (5.21.3)
அக்னி, மானிடர் சார்பில், தேவர்களுக்கு யக்ஞம் செய்கிறார். (1.15.12)
அக்னி மானிடர்களுக்கு யக்ஞம் செய்கிறார். (1.26.3)

தேவர்கள் நம்மைப் போல் யாக குண்டம் அமைத்து நெய், சமித், ஹவிஸ் இவற்றைக் கொண்டு ஆகுதி செய்தார்கள் என்பதற்கான சான்றுகள் எதுவும் வேதத்தில் இல்லை. எனவே மேற்கண்ட மந்திரத்தில், யக்ஞம் என்ற சொல் தீ மூட்டி ஹவிஸ்ஸைச் சமர்ப்பித்தல் என்ற பொருளில் அல்லாமல், வணங்குதல் அல்லது மரியாதை செய்தல் என்ற பொருள் உடையதாகக் காணப்படுகிறது. மற்ற தேவர்களும் அக்னியும் ஒருவர்க்கொருவர் உதவி செய்கிறார்கள். தங்கள் நன்றியைத் தெரிவிக்கும் வகையில் வணக்கம் செய்கிறார்கள் என்பதுதான் ஒருவர்க்கொருவர் யக்ஞம் செய்வதாகக் கூறப்படுகிறது.

போரில் வெற்றி பெற உதவும் ரதத்திற்கு யக்ஞம் செய்வதாகவும் ரதம் அதை ஏற்றுக் கொள்வதாகவும் கூறும் மந்திரங்கள் உள்ளன.(6.47.27, 6.47.28)

போரில் வெற்றி பெற ரதம் எவ்வளவு உதவியாக இருந்தது என்பதை அந்த மனிதர் நன்றியுடன் நினைவு கூர்வதாகத் தான் இதற்குப் பொருள் கொள்ள வேண்டும்.

எனவே உதவி செய்தவர்களை நன்றியுடன் நினைவு கூர்வதும், அவர்களை மேலானவர்களாகக் கருதி அவர்களிடம் பணிவுடன் இருப்பதும் யக்ஞம் என்பதன் விரிந்த பொருள்.

இது மேலும் விரிவடைந்ததைப் பின்னர் ருதமும் யக்ஞமும் என்ற தலைப்பில் பார்ப்போம்.

அத்வரம் என்ற சொல்லின் விரிந்த பொருள் :
அத்வரம் என்ற சொல்லின் பொருளும் மேலும் விரிவடைந்தது. அது பயணம் என்ற பொருள் தரும் அத்வ என்ற சொல்லிலிருந்து வந்தது, அது ஆன்மிக வாழ்க்கைப் பயணத்தைக் குறிக்கும் என்று அரவிந்தர் சொல்வது சில இடங்களில் பொருத்தமாக இருக்கிறது. அக்னியே, நீ எங்கள் யக்ஞத்தினால் மகிழ்வாயாக, எங்கள் அத்வரத்தினால் மகிழ்வாயாக(4.9.7) என்பதிலிருந்து அத்வரம் என்பது யக்ஞம் அல்லாத வேறொன்றாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. அக்னியே, நீ எனக்கு அத்வரத்தில் வலிமையும், மக்கட்பேறும், பெரும் செல்வமும், மகிழ்ச்சியும், புகழும் தருவாயாக (3.16.6)  என்ற மந்திரத்தில் அத்வரம் என்பதற்கு வாழ்க்கை என்ற பொருள்தான் பொருத்தமாக உள்ளது.

அக்னியே, நீ யக்ஞங்களில் அமர்கிறாய். எங்கள் அத்வரங்களை நடத்துக. (1.14.11 )  இதில் யக்ஞம் என்பது முயற்சிகளையும் அத்வரம் என்பது வாழ்க்கையையும் குறிக்கும்.

படம் உதவிக்கு நன்றி: https://www.kksblog.com/2013/04/accepting-krsnas-plan/

Leave a Reply

Your email address will not be published.