என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 35

சு.கோதண்டராமன்.

 

யக்ஞத்தை விடமேலான வழிகள்

http://www.dreamstime.com/-image1626895

யக்ஞத்தை விட பிரார்த்தனை சிறந்தது:
மருத்துகள் பக்தர்களின் வழிபாட்டை யக்ஞத்துடனோ அல்லது பிரார்த்தனைகளுடனோ ஏற்றுக் கொள்கிறார்கள் (1.86.2) என்று சொல்லப் படுவதிலிருந்து யக்ஞம் இல்லாமல் வெறும் பிரார்த்தனை மந்திரங்கள் மட்டுமே கொண்டு வழிபடுவதும் ஏற்றுக் கொள்ளக் கூடியது என்று அறிய முடிகிறது. பிரார்த்தனை இல்லாமல் யக்ஞம் பயனில்லை. அதே நேரத்தில் யக்ஞம் இல்லாமல் பிரார்த்தனை மட்டுமே பலன் தருவது என்பதால் யக்ஞம் என்பது வெளிப்புறச் சடங்கு மட்டுமே என்பதும் அதை விடப் பிரார்த்தனையே அதிகப் பலன் தருவது என்பதும் தெரிய வருகிறது.

அதே கருத்து வேறு வகையாகவும் சொல்லப்படுகிறது – இந்திரனை யக்ஞங்களால் மனிதர்கள் அறிவதில்லை. அவர்கள் ஸ்தோமங்களால் அறிகிறார்கள் (1.131.2).

உழைப்பின் முக்கியத்துவம்:
யக்ஞமும் செய்து கடுமையாக உழைக்கவும் செய்பவனுக்கு தேவர்கள் அருள் புரிகிறார்கள் (1.142.2, 4.23.2, 6.3.2).

தேவர்கள் எப்பொழுதும் கடுமையாக உழைப்போருக்கு நண்பர்களாக இருப்பர் (4.33.11) என்று கூறும் வேதம் வேள்வியோடு கூட முயற்சியும் தேவை என்பதை வலியுறுத்துகிறது.

யக்ஞத்தை விட சமீ மேலானது:
ரிபு சகோதரர்களைப் பற்றி முன்னர் பார்த்ததை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவோம். அவர்கள் ஒரு மண் கிண்ணத்தை நான்காக மாற்றினர். தங்கள் பெற்றோர்களை இளமையாக்கினர். எலும்பும் தோலுமாக இருந்த ஒரு பசு மாட்டை உயிர்ப்பித்தனர். இந்திரனுடைய ரதத்திற்காக, வாய்ச் சொல்லைப் புரிந்து கொண்டு செயல்படவல்ல இரு குதிரைகளை உருவாக்கினர். அச்வின்களுக்காக மூன்று சக்கரம் உடைய, எளிதில் இயங்க வல்ல ஒரு ரதத்தை உருவாக்கினர்.

அவர்களுடைய செயல்கள் தீ வழிபாடு என்ற பெயருக்கு உரியவை அல்ல. வேதத்தில் அவை சமீ என்ற சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. தமிழில் அருஞ் சாதனை என்று கூறலாம்.

யக்ஞத்தினால் ஏற்படக்கூடிய பலன்களை ரிபுக்கள் சமீ மூலமாக அடைந்தார்கள் என்கிறது வேதம் (1.20.2).

ஆழ்ந்து ஆராய்ந்தால் யக்ஞத்தை விட சமீ மேம்பட்ட பலனைத் தருவது என்பதை அறிய முடியும். யக்ஞம் மனிதனை ரிஷி நிலைக்குத் தான் உயர்த்தும். சமீயோ மனிதனைத் தேவநிலைக்கு உயர்த்தும். ஆம், ரிபுக்கள் தேவர்களுக்குச் சமமாக ஹவிர்பாகம் பெறும் உரிமையும் அமரத்வமும் பெற்றனர்.

வணங்கினாலோ, சமீ செய்தாலோ, அல்லது மகம் (யாகம்) செய்தாலோ அக்னி அவருக்கு வளங்களை அளிக்கிறார் (8.75.14) என்று சொல்லப்படுவதிலிருந்து சமீயும், வணக்கமும் யாகத்தைப் போலவே பலன் தருபவை என்பது பெறப்படுகிறது.

இந்திரனுக்கே ஆகாயத்தைத் தூக்கி நிறுத்தியது போன்ற பல அருஞ் செயல்கள் செய்ததனால்தான் இந்திர பதவி கிடைத்தது என்கிறது ரிக் வேதம் (8.89.5, 8.89.6).

இவற்றிலிருந்து வேதம் யக்ஞத்தை மட்டுமே உயர்வாகப் பேசவில்லை, பிரார்த்தனைக்கும் உழைப்புக்கும் சமமான முக்கியத்துவம் தருகிறது என்பதை அறிகிறோம்.

படம் உதவி: http://www.dreamstime.com/royalty-free-stock-photo-gold-statue-indian-woman-praying-hands-image1626895

1 thought on “என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 35

  1. மிக உண்மையான சொற்கள். நான் சங்கீதம் கற்றுக் கொண்ட பொழுது எனது குரு கூறுவார்: ஆழ்ந்து இசைபாடி அதன் மூலம் இறைவனை வழிபடுவது என்பது ஸ்லோகங்கள் கூறுவதைவிட உயர்வானதும் சுலபமானதுமாகும் என்பார். சங்கீதமும் ஒருவிதமான பிரார்த்தனையே ஆகும்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க