மண்ணுக்கு மரம் பாரமா?
—கவிஞர் காவிரிமைந்தன்.
தை பிறந்தால் வழி பிறக்கும் திரைப்படத்திற்காக உருவான அனைத்துப் பாடல்களுமே அருமையெனலாம்! திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையமைப்பில் பல்வேறு குரல்களின் வழியே கேட்டு உருகவைக்கிற கானங்கள்! கவிஞர்களும் இத்திரைப்படத்திற்காக அணிவகுத்து எழுதியிருக்க.. இதோ ஒரு பாடல்..கவிஞர் மருதகாசி எழுத்தில்..
திரைக்கதையைப் பின்னிக்கொண்டு அதைநம்மிடம் சொல்ல வருகிறது! தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள உறவு பற்றி இப்படி ஒரு தங்கமான பாடல் கிடைத்ததே.. தை பிறந்தால் வழி பிறக்கும் படத்திற்கு கிடைத்த வெற்றி என்பேன்!
சூழ்நிலையின் காரணமாய் பெற்ற பிள்ளையை பிரிந்து பயணம் கொள்ளும் தாய்.. அவள் மனதில் உள்ள காயங்கள்.. விழிகளில் நீர் ததும்பிக்கிடக்க நடிப்பில் நவரசம் காட்டும் நடிகை திருமதி.ராஜசுலோசனா.. அவர் காணும் காட்சியில் தாயொருத்தி தன் குழந்தையைத் தாலாட்டிப் பாடுகின்ற பாடலாய்..
வரிவரியாய் வரிந்துகட்டி எழுகின்ற கேள்விகள் எல்லாவற்றிற்கும் இடையில் ஒரு சொந்தம்.. ஒரு பந்தம்.. பிரிக்க முடியாதவை இரண்டை சுட்டிக்காட்டி.. எழுத்துரதத்தை இயல்பாக ஓட்டுகிறார் கவிஞர்.
இயற்கையான இந்த பந்தங்களை எவரால் மறுத்துச் சொல்ல முடியும்? அதுவும் தாய் தன் சேயை பாரம் எனக் கருத முடியுமா? அன்புசார்ந்த வினாக்கள் அடிமனதைத் தாக்க அன்னையின் இதயம் துடிக்கிறது! தாய்மை என்கிற பேற்றை தந்தது சேயல்லவா.. நீ அதன் தாயல்லவா.. பெற்றதுமட்டும் அங்கே போதுமா? பேணி வளர்த்திட வேண்டாமா? என்கிற தொடர் கேள்விகளுக்கு விடைசொல்ல முடியாமல் அன்னை மனம் படுகிற பாடு..
எம்.எஸ்.இராஜேஸ்வரி அவர்களின் குரலில் தவழும் இந்த கானம் வெறும் தாலாட்டல்ல! தாய்மையை நோக்கிய கேள்விப்படை!! இனிமை நிறைந்த அந்தக் குரலில் இதயம் நோக்கிவரும் பாடலின் வரிகள் .. அர்த்தமிக்கவை.. ஆழமானவை.. இசையும் கவிதையும்.. துன்பத்தை எடுத்துச் சொல்லும்போதும்.. அதை இனிமை சேர்க்கும் இன்பராகமாய் அமைத்த இசையமைப்பாளர்.. இப் பாடல் கேட்கும்போதெல்லாம் நாம் பெறும் சுகம் கொஞ்சமல்ல!!
http://youtu.be/c_3KefG0vxQ
காணொளி: http://youtu.be/c_3KefG0vxQ
படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
பாடல்: கவிஞர் மருதகாசி
இசை: கே.வி.மகாதேவன்
குரல்: எம்.எஸ்.இராஜேஸ்வரிமண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு இலை பாரமா
கொடிக்கு காய் பாரமா – பெற்றெடுத்த
குழந்தை தாய்க்கு பாரமாவாடியே நாளெல்லாம் வருந்தி வருந்தி தவமிருந்து
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
மலடி மலடி என்று வையகத்தார் ஏசாமல்
தாயென்ற பெருமைதனை மனம் குளிர தந்தவளே
கொடிக்கு காய் பாரமா – பெற்றெடுத்த
குழந்தை தாய்க்கு பாரமா
[மண்ணுக்கு மரம் பாரமா]அழுதால் அரும்புதிரும் அன்னாந்தால் பொன்னுதிரும்
சிரித்தால் முத்துதிரும் வாய் திறந்தால் தேனுதிரும்
பிள்ளையை பெற்று விட்டால் போதுமா
பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா
அல்லலை கண்டு மனசு அஞ்சுமா
குழந்தை அழுவதை கேட்டு மனசு விஞ்சுமா
[மண்ணுக்கு மரம் பாரமா]
இந்தப் பாடலை எழுதியது யார் எனத் தெரியுமா? மிகுந்த அறிவாளி என உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறேன்…வரலாற்றுப் பிழை செய்யாதீர்கள்…எழுதியவர் முத்துசாமி…96 வயது வாழ்கிறார்…
மண்ணுக்கு மரம் பாரமா பாடலை எழுதியவர் சுரதா —சரஸ்வதிராசேந்திரன்