நாகேஸ்வரி அண்ணாமலை.

 

நான் கிறிஸ்தவப் பள்ளியில் படித்தேன். எங்கள் பள்ளியில் வாரம் ஒரு முறை கிறிஸ்தவ மாணவிகளுக்கு கிறிஸ்தவ வேதபாட வகுப்புகள் (Bible Study) உண்டு. கிறிஸ்தவர் அல்லாத மாணவிகளுக்கு நீதி வகுப்புகள் (moral classes) உண்டு. ஆனால் அங்கேயும் பைபிளிலுள்ள கதைகளைத்தான் சொல்வார்கள். கல்லூரிப் படிப்பும் கிறிஸ்தவ நிறுவனத்தில்தான். அந்தக் கல்லூரியை நடத்திய கிறிஸ்தவக் கன்னிமார்கள் (Christian nuns) அடிக்கடி கிறிஸ்தவ மதத்தில் உள்ள நீதி போதனைகளை எடுத்துச் சொல்வார்கள். அதனால் எனக்குக் கிறிஸ்தவ மதம் பற்றி ஓரளவு தெரியும். தங்கள் மதத்தைப் பரப்புவதில் சில கிறிஸ்தவர்கள் எவ்வளவு தீவிரமாக இருக்கிறார்கள் என்றும் நன்றாகத் தெரியும்.

pledge2நேற்று காலையில் ‘வாக்’ போகும்போது என்னை ஒரு அமெரிக்கப் பெண் நிறுத்தினார். ‘உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா?’ என்று என்னிடம் கேட்டார். நான் ‘இல்லை’ என்றேன். ‘இதைப் படியுங்கள்’ என்று கூறி என்னிடம் ஒரு சிறு துண்டு வெளியீட்டை நீட்டினார். நான் தயங்காமல் அதைப் பெற்றுக்கொண்டேன். அதோடு ‘அதைக் கண்டிப்பாகப் படிக்கிறேன்’ என்று அந்தப் பெண்ணிடம் சொல்லிவிட்டும் வந்தேன். இந்த மாதிரியான அனுபவங்கள் அமெரிக்காவில் எனக்கு முன்பே பல முறை ஏற்பட்டிருக்கின்றன. கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப விரும்பும் பல பெண்கள் (எல்லாம் பெண்கள்தான்; அது ஏனோ தெரியவில்லை என்னை ஆண்கள் யாரும் அணுகியதில்லை) என்னைச் சாலையில் சந்தித்தால் துண்டுச் சீட்டுகளைக் கொடுத்துப் படிக்குமாறு கூறுவார்கள். ஒரு முறை இரண்டு பெண்கள் வீட்டிற்கு வந்து கிறிஸ்தவ மதத்தைப் பற்றி எடுத்துச் சொல்வதாகக் கூறினார்கள். அது வேண்டாம் என்று நான் பணிவாக மறுத்துவிட்டேன். நேற்றுக் கிடைத்த துண்டுச் சீட்டிலும் தேவைப்பட்டால் வீட்டிற்கு வந்து கிறிஸ்தவ மதம் பற்றிப் பேசுவதாகக் கடைசியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. கிறிஸ்தவ மதம் பற்றிய புத்தகங்களையும் அனுப்புவதாகவும் வேண்டுமானால் ஒரு முகவரிக்கு எழுதும்படியும் கூறி அதற்குரிய முகவரியையும் கொடுத்திருந்தார்கள்.

சாதாரண பிரச்சாரகர்கள் மூலம் மதத்தைப் பரப்புவதோடு அமெரிக்காவில் ஆர்கன்ஸாஸ், மிஸிஸிபி, வடக்கு கரோலினா, தென் கரோலினா, டென்னஸி, டெக்ஸாஸ், மேரிலாண்ட் ஆகிய ஏழு மாநிலங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு தங்கள் அரசில் வேலை கொடுப்பதில்லை என்ற கொள்கையை இப்போதும் அவர்களுடைய அரசியல் சாசனத்தில் வைத்திருக்கின்றனவாம். ஐம்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னால் மேரிலாண்ட் மாநிலத்தில் அரசில் வேலைபார்த்த ஒருவர் தனக்குக் கடவுள் நம்பிக்கை இருப்பதாகக் கூற மறுத்ததால் அவரை நோட்டரியாக நியமிக்க மறுத்துவிட்டதாம். இதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றம்வரை சென்று வழக்காடினார். இறுதியில் உச்ச நீதிமன்றம் அவருக்குச் சாதகமாக அளித்த தீர்ப்பில் பொதுத்துறையில் வேலைபார்ப்பதற்கு மாநிலங்கள் மத சம்பந்தமான கேள்விகளைக் கேட்கக் கூடாது என்று கூறியது. ஆனால் அதற்குப் பிறகு பல வருடங்கள் ஆன பிறகும் அந்த ஷரத்து மேரிலாண்ட் சாசனத்தில் இருக்கிறதாம்.

மிஸிஸிபி மாநில அரசியல் சாசனத்தில் ‘எல்லோருக்கும் மேலாக இறைவன் ஒருவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த மாநிலத்தில் பொதுத்துறையில் வேலைபார்க்க முடியாது’ என்று இருக்கிறதாம். வட கரோலினாவின் சாசனத்தில் ‘கீழே குறிப்பிடப்பட்டவர்கள் இம்மாநிலப் பொதுத்துறையில் வேலைபார்க்கும் வாய்ப்பை இழக்கிறார்கள். முதலாவதாக, கடவுள் ஒருவர் இருப்பதை மறுப்பவர்கள்’ என்று கூறப்பட்டிருக்கிறதாம். பென்சில்வேனியா மாநில அரசியல் சாசனம் இதையே வேறு விதமாகக் கூறுகிறது. அது ‘கடவுள் நம்பிக்கை இருப்பவர்களுக்கும் சொர்க்கம், நரகம் என்பவற்றில் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கும் பொதுத்துறை வேலை மறுக்கப்படமாட்டாது’ என்று கூறுகிறதாம்.

அமெரிக்க அரசியல் சாசனத்தின்படி மத்திய அரசில் வேலைபார்ப்பதற்கு ஒரு போதும் மத சம்பந்தப்பட்ட கேள்விகளைக் கேட்கக் கூடாது என்று இருக்கிறதாம். இருப்பினும் மேலே குறிப்பிட்ட ஏழு மாநிலங்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்களுக்குத்தான் வேலை கொடுப்பது என்ற ஷரத்தை இன்னும் வைத்திருக்கின்றன. ‘இந்த மாதிரி ஷரத்துக்கள் அமெரிக்க அரசியல் சாசனத்துக்குப் புறம்பானவை, இவற்றை அந்த மாநிலங்கள் அமுல்நடத்த முடியாது என்கிறார் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகச் சட்டப் பிரிவில் வேலைபார்க்கும் பேராசிரியர் ஒருவர். ஆனாலும், எந்த அரசியல்வாதி இவற்றையெல்லாம் நீக்கப் போகிறோம் என்று துணிந்து வாக்களித்து வாக்காளர்களிடம் ஆதரவு கேட்கப் போகிறார் என்று கேட்கிறார்.

god-bless-americaபொதுவாக, கடவுள் நம்பிக்கை வேண்டும் என்ற நிபந்தனை பற்றிய சர்ச்சை எப்போதாவதுதான் வெளியே கொண்டுவரப்படுமாம். 1992-இல் தென்கரோலினாவில் ஒரு கல்லூரியில் கணிதப் பேராசிரியர் ஒருவர் நாத்திகர் என்பதால் அவருக்கு நோட்டரி வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டதாம். அவர் வழக்குத் தொடர்ந்து தென்கரோலினா மாநில உயர்நீதிமன்றம் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு அளித்ததாம். 2009-இல் கூட நாத்திகர் ஒருவர் வட கரோலினாவில் ஆஷ்வில் என்ற ஊரின் நகராட்சியில் உறுப்பினர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது சிலர் அந்த மாநிலத்திலுள்ள கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இருக்கும் நிபந்தனையைப் பற்றிக் கூறி அவருக்குப் பதவி கிடைக்காமல் செய்ய முயன்றார்களாம். ஆனால் பின்னால் அதை விட்டுவிட்டார்களாம்.

அமெரிக்காவில் கடந்த ஏப்ரலில் நடந்த ஒரு வாக்கெடுப்பில் 53 சதவிகித அமெரிக்கர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவரைத் தாங்கள் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இல்லை என்று கூறினார்களாம். போதைப்பொருள் உபயோகித்திருந்தவர்களையோ மனைவிக்குத் துரோகம் இழைத்திருந்தவர்களையோ கூட (இதுவரை பெண்கள் யாரும் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்ததில்லை) ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுப்பார்கள்; ஆனால், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை அமெரிக்கர்கள் விரும்புவதில்லை என்று அந்த வாக்கெடுப்பில் தெரிய வந்ததாம் (திருமணம் ஆகாமலே யாரோடும் சேர்ந்து வாழலாம் என்ற வழக்கம் நடைமுறையில் இருந்தபோதும் திருமணம் ஆன பிறகு மனைவிக்கோ கணவனுக்கோ துரோகம் இழைப்பதை அமெரிக்கச் சமூகம் அனுமதிப்பதில்லை).

IN-GOD-WE-TRUSTஇந்த ஏழு மாநிலங்களில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இருக்கும் இந்தத் தடையை நீக்க வேண்டும் என்று சில மதச்சார்பற்ற கழகங்கள் முயன்று வருகின்றன. பல மதத்தினர் வாழும் அமெரிக்க சமூகத்தில் நாத்திகர்களுக்கும் சம உரிமைகள் வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள். இந்த வாதம் நியாயமானதுதான் என்று ஒப்புக்கொள்ளும் சட்டமன்ற உறுப்பினர்களும் அரசியல் ரீதியாக அவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் இவற்றை நீக்குவதற்குரிய முயற்சிகளை எடுக்கத் தயங்குகிறார்கள். மேரிலாண்ட் செனட்டர் ஒருவர், மதப் பன்மையில் (pluralism) தனக்கு விருப்பம் இருந்தாலும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இருக்கும் இந்தத் தடையை நீக்கும்படி மதச்சார்பற்றவர்கள் விடுக்கும் இந்தக் கோரிக்கை நிறைவேறினால் மேரிலாண்ட் மக்களுக்கு கிறிஸ்தவ மதத்தின்மேல் நம்பிக்கை இல்லை என்றாகிவிடும், அது அவர்களைப் புண்படுத்துவதாகும் என்கிறார்.

பல விஞ்ஞான முன்னேற்றங்கள் நடந்துவரும் அமெரிக்காவிலும் கடவுள் நம்பிக்கைக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டில் கடவுளை மறுக்கும் கம்யுனிச நாடாக சோவியத் யூனியன் உருவாகிக்கொண்டிருந்தபோது தன்னை அதிலிருந்து வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள அமெரிக்கா தன்னுடைய இருபத்து ஐந்து சென்ட் நாணயத்தில் ‘கடவுளை நம்புகிறோம்’ (In God we trust) என்று எழுதிக்கொண்டதாம். அமெரிக்க அரசியல் சாசனப்படி அரசுக்கு எந்த மதமும் இல்லை. எனவே எந்த மதக் கடவுள் என்று குறிப்பாகக் குறிப்பிடாமல் கடவுள் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். எந்த மதமாக இருந்தாலும் சரி, அமெரிக்கர்களுக்கு மதமும் கடவுளும் வேண்டும் என்பது புலனாகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அமெரிக்காவில் கடவுள் நம்பிக்கை

  1. தங்கள் சொல்வது உண்மைதான், நாகேஸ்வரி அம்மா. எங்கள் வீட்டிற்கும் மாதம் ஒருமுறையாவது கிறித்தவ மதத்திலிருக்கும் பல பிரிவினர் (ஆண், பெண் இருபாலாரும்) மணியை அடித்து பிரச்சாராம் செய்ய வருவார்கள். நான் கிறித்தவனல்ல, சமயம் மாறுவதில் எனக்கு விருப்பம் இல்லை என்றவுடன் சென்றுவிடுவார்கள். சிலர் நான் எந்த மதம் என்று கேட்பார்கள். இன்னும் சிலர் எனக்கு எங்கள் மதத்தைப் பற்றிச் சொல்ல எங்களுக்கு வாய்ப்புக் கொடேன் என்றும் கேட்பார்கள். அப்பொழுது மட்டும் நான், “என் மதத்தைப்பற்றி நான் முதலில் உங்களுக்குச் சொல்லுகிறேன். என் மதத்திற்கு மாற உங்களுக்குக் விருப்பம் உண்டா?” என்று கேட்பேன். அவர்கள் சென்று விடுவார்கள். நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

    இங்கு அரசியல் சாசனப்படி எந்த ஒரு சமயத்தையும் பின்பற்ற (கடவுள் மறுப்பு உட்பட) உரிமை உண்டு. எனவே, இங்கு சமய நிறுவனங்கள் அனைத்துக்கும் வரிவிலக்கும், அவற்றிற்கு நன்கொடை கொடுப்பவர்களுக்கு வரிவிலக்கும் (ஒரு அளவுவரை) கொடுக்கப்படுகின்றன. இது மக்களுக்குச் சேவை செய்யும் நிருவனங்களுக்கும் வழங்கப்படுகிறது.

    நல்ல கட்டுரை, அம்மா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.