எதிரியின் வீட்டில் கையை நனைக்கலாமா?
தஞ்சை வெ.கோபாலன்
இப்போதெல்லாம் எதிரிகள் என்றால் ஒருவரையொருவர் நேரில் சந்தித்துக்கொள்ளக்கூட முன்வர மாட்டார்கள். பொதுவான ஒரு நிகழ்ச்சிக்குப் போவதென்றாலும் ஒருவர் வந்துவிட்டுப் போன பிறகுதான் மற்றவர் அங்கு விஜயம் செய்வார். இப்படி எதிரிகளின் நடவடிக்கைகள் கவனமாகக் கண்காணிக்கப்பட்டு உரியவர்களுக்குச் செய்தி போய்விடும். இதுபோன்ற மனப்போக்கு எப்போது தொடங்கியது? இது சரியா? பல ஆண்டுகளுக்கு முன்பு நம் பகுதிகளில் இருந்த பெரியவர்கள் விரோதம் என்பது எந்தத் துறையிலோ, அதோடு மட்டும் விரோதம் பாராட்டிவிட்டு மற்ற சமூகப் பழக்க வழக்கங்களில் சுமுகமாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பது பல பெரியவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது தெரிய வருகிறது. அதுபோன்றதொரு சூழ்நிலை மனதுக்கு இதமாகவும், அந்த நிலைமை இப்போது வராதா என்கிற ஏக்கமும் கூடவே ஏற்படுகிறது. இந்த எண்ணங்கள் எனக்குத் தோன்ற காரணமாக இருந்தது ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தபோது அதில் காணப்பட்ட நிகழ்ச்சிகள்தான்.
தமிழவேள் பி.டி.ராஜன் என்றதும், அவர் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவர், மிகப் பெரிய செல்வந்தர், உத்தமபாளையம் ஜமீன், மதுரை மீனாட்சியின் பரம பக்தர், 1920 முதல் 1937 வரை சென்னை மாகாணத்தை ஆண்ட ஜஸ்டிஸ் கட்சி அமைச்சரவையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அமைச்சராகப் பதவி வகித்தவர் என்பதெல்லாம் ஓரளவுக்குத் தெரியும். மேலும் ஒரு கொசுறுச் செய்தியாக அவருடைய புதல்வர் பி.டி.ஆர்.பழநிவேல்ராஜன் தி.மு.க.ஆட்சியில் சென்னை மாநில சட்டமன்ற சபாநாயகராகப் பதவி வகித்தவர் என்பதும் தெரியும். வேறு என்ன தெரியவேண்டும்? ஆம், மிக முக்கியமான செய்தியொன்று, முதல் பாராவில் சொன்ன விவரங்களின் அடிப்படையில் இவரைப்பற்றிய விருந்தோம்பல் அல்லது அன்னதானம் அல்லது எதிரிகளுக்கும் பசியாற உணவளித்த வரலாறு இவைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவரைப் பற்றி முழுமையான வரலாற்றைத் தெரிந்து கொள்வதே அறிவுடைமை. ஒரு பக்க செய்திகளோடு நிறுத்திக் கொள்வது, நாம் அவர்களுக்குச் செய்யும் துரோகமாகும். அந்த வகையில் பி.டி.ராஜன் பற்றி ஒரு சில விபரங்களை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பி.டி.ராஜன் அவர்களுடைய முழுப்பெயர் பொன்னம்பலத் தியாகராஜன். மதுரையில் இருக்கும் நாட்களில் ஒரு நாள்கூட தவறாமல் மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குச் சென்று தரிசனம் செய்துவருவார். ஜஸ்டிஸ் கட்சி என்றதும் அதன் அடுத்த பிறவிகளான திராவிடக் கட்சிகள் நம் நினைவுக்கு வருவதும், அவர்களது நாத்திகக் கொள்கைகளும், கடவுள் மறுப்பும் நம் மனதில் தோன்றுவதும் தவிர்க்க முடியாதது. ஆனால் அந்தக் கால ஜஸ்டிஸ் கட்சியினரில் பெரும்பாலோர் ஆத்திகர்களாவும், இறை நம்பிக்கை உடையவர்களாகவும் இருந்து வந்திருக்கிறார்கள் என்பது ஏனோ அதிகம் வெளிச்சத்துக்கு வரவில்லை.
சென்னையில் இருந்த நாட்களில் அவர் காலத்தில் மிகச்சிறிய கருவறையொன்றில் குடிகொண்டிருந்த வடபழனி முருகனை தரிசிக்காமல் அவர் இருந்ததில்லை. 1963இல் பெரும் செலவில் மதுரை மீனாட்சி அம்மன் ஆலய குடமுழுக்கினை ஏற்பாடு செய்து நடத்தியவர் இவர். இவரைப் பற்றி எழுதும் தமிழறிஞர் ஒருவர் சொல்லும் செய்தி, இவர் ஆழ்வார்பேட்டை மெளபரீஸ் சாலையில் (இப்போது TTK சாலை), அமைச்சராக இருந்த காலத்தில் வசித்து வந்தாராம். அந்த வீட்டில் பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வருவோ போவோர் அனைவரும் நேரே போய் இலையில் உட்கார்ந்து அறுசுவை விருந்து சாப்பிட்டு விட்டுப் போகலாமாம். யார், எவர் என்பதெல்லாம் கேள்வி இல்லை; பசித்தவர் யார் வேண்டுமானாலும் உள்ளே சென்று சாப்பிடலாமாம். மதுரை இல்லத்திலும் அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதே நிலைமைதானாம். அந்தக் காலத்தில் இதுபோன்ற அன்னதானம் மிக உயர்ந்தது. இப்போது போல தெருவுக்கு பத்து உணவகங்கள், தெரு முனைகளில் எல்லாம் டீக்கடைகள் என்று இல்லாத காலம். இப்படிப்பட்டதொரு தர்மத்தை விளம்பரமில்லாமல், இன்றைய தலை முறையினருக்கும் இப்படியெல்லாம் நடந்தது என்பது தெரிவிக்காத அளவுக்கு மெளனமாக இந்த பெருஞ்செயல் நடந்திருப்பது அதிசயமாக எண்ணத் தோன்றுகிறது.
இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போன்ற ஒரு நிகழ்ச்சிதான் நம்மை திக்குமுக்காட வைக்கிறது. இப்படியுமா நடக்கும் என்று வியக்க வைக்கிறது. அது என்ன? சொல்கிறேன்! 1928ஆம் வருஷத்தில் சென்னை மாகாண லெஜிஸ்லேடிவ் கவுன்சிலுக்குத் தேர்தல் நடைபெற்றது. ஜஸ்டிஸ் கட்சி சார்பில் பி.டி.ராஜன் வேட்பாளர். அவரை எதிர்த்து மதுரை மாவட்டத்தில் மிகவும் பிரபலமான தியாகி மட்டப்பாறை வெங்கட்டராமையர் என்பார் காங்கிரசின் சார்பில் போட்டியிடுகிறார். சர் பி.டி.ராஜன் அவர்களோடு ஒப்பிடுகையில் ஐயர் மிகவும் வசதிக் குறைவானவர். காங்கிரஸ் தியாகி, பிரபலமான தலைவர் என்பதுதான் அவருக்கு உள்ள தகுதிகள். இதில் இன்னொரு வேடிக்கை இவ்விருவரும் நெருங்கிய நண்பர்கள் வேறு. எதிரெதிர் கட்சியினர்தானே தவிர எதிரிகள் அல்லர்.
தேர்தல் சமயத்தில் மட்டப்பாறை ஐயருக்கு ஆதரவு திரட்ட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அனைவரும் பல இடங்களிலிருந்து சொந்த செலவில் வந்து தங்கி பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள். அப்படி அவர்கள் பணியாற்றிய போது பகல் உணவுக்கு பி.டி.ராஜன் இல்லத்துக்குத்தான் வருவார்களாம். அவர்கள் எதிர் கட்சிக்குப் பணியாற்றுபவர்கள் என்றெல்லாம் பாராமல் அவர்கள் அனைவருக்கும் உணவு படைத்தவர் பி.டி.ஆர். தேர்தல் முடிவும் வந்தது, அதில் பி.டி.ஆர். வெற்றி பெற்று விட்டார். இந்த முடிவு பற்றி சொல்லும்போது மட்டப்பாறை ஐயர் சொன்னாராம், “சோறு போட்டே பி.டி.ஆர். என்னைத் தோற்கடித்து விட்டார்” என்று. என்ன பண்பாடு! என்ன ஆரோக்கியமான அரசியல். ஊ….ம், இப்போது நினைத்துப் பார்த்தால்? “இனி நினைந்திரக்கமாகின்று……..” எனும் தொடித்தலை விழுத்தண்டூன்றினாரின் புறநானூற்றுப் பாடல் நினைவுக்கு வருகிறது.
ஆதாரம்: “நான் கண்ட பெரியவர்கள்” பேரா.அ.ச.ஞானசம்பந்தன், கங்கை புத்தக நிலையம், சென்னை.
படத்திற்கு நன்றி: http://en.wikipedia.org/wiki/P._T._Rajan