Author: பவள சங்கரி

  • வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போமா! (7)

    பவள சங்கரி

    தங்களுக்குத் தேவையானது எது என்பதைத் தெளிவாக அறிந்துணர்ந்து கொண்டவர்கள் எவரோ அவர்களுக்கு அதை அடையக்கூடிய மனவலிமையை இவ்வுலகம் மிக மகிழ்வுடன் வழங்கிக் கொண்டிருக்கிறது!
    வால்ட்டர் ஸ்டேபிள்ஸ்

    சிந்தித்து செயல்படுவோமா?

    எந்த ஒரு காரியமும் மேலோட்டமாக செயல்படுவதற்கும், நல்ல முறையில் சிந்தித்து செயல்படுத்துவதற்கும் உள்ள வேறுபாடு வெளிப்படையாகத் தெரியும். பல நேரங்களில் நாம் சிந்தித்து செயல்படுவதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். அந்த மேலோட்டமான நினைவலைகள் எந்த பாதிப்பையும், எங்கும் ஏற்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. பின் எப்படி சிந்திப்பது?

    சிந்தனை என்பது ஆழ்மனதிலிருந்து பிறக்க வேண்டும். ஆம் உண்மையான ஈடுபாட்டுடன் கூடிய தெளிவான ஆழ்மனச் சிந்தனையாக அது அமைதல் வேண்டும். அப்படி நம் ஆன்மாவைத் தீண்டக்கூடிய ஒரு சிந்தனை வாய்க்கப்பெறும் போது அதன் படைப்பாளி நாம் அல்ல என்பதை நம்மால் உணர முடியும். நாம் நினைத்துப் பார்த்திராத, நம் கற்பனைக்கும் எட்டாத ஒரு சக்தியையும், வழிகாட்டுதலையும் அது வழங்குவதையும் ஒரு மூன்றாம் மனிதரைப் போல தள்ளி நின்று நாமும் உணர முடியும். என்பதுதான் சத்தியம்! ஆம் அப்படி ஒரு சிந்தனையின் வழி நடப்போர் வெற்றியை இழந்ததாக சரித்திரமே இருக்காது என்பதும் உண்மை. அமைதியாக அமர்ந்து, எந்த இடையூறும் இல்லாத சூழலில் தெளிவாகச் சிந்திக்க வழிவகுக்க ஆரம்பித்தாலே வெற்றியின் எல்லையை தொட ஆரம்பிக்கிறோம் என்றுதானே அர்த்தமாகிறது!

    பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் தேவையில்லை

    ந்ம் சக்திக்கு உட்பட்ட, நம்மால் நிறைவேற்றக்கூடிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள ஒரு போதும் தயக்கம் கொள்ள வேண்டியதில்லை. நம் பங்களிப்பு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் நம் உரிமைகளைப்  பெறவும் எளிதாகிறது. அந்த வகையில் ஏற்றுக் கொள்ளும் எண்ணற்ற பொறுப்புகள் மற்றும் வாழ்க்கையை அனுசரித்துச் செல்லும் இந்தப் போக்கு நம் வெற்றிப்பாதையை விரிவடையச் செய்கிறது.

    உண்மையை அன்போடும், கருணையோடும் எதிர்கொள்வோம் !

    ஆம், மாற்ற இயலாத சில உண்மைகளை நேசிக்கக் கற்றுக் கொண்டால் அது நம்மைப் பெரிதாக பாதிக்காது. உதாரணமாக நம்மோடு பணிபுரிபவரோ அல்லது அண்டை அயலாரோ நம்மிடம் இயல்பாக இல்லாமல் எதோ ஒரு கோபத்தை வெளிப்படுத்துபவராக இருக்கலாம். நாம் அடிக்கடி சந்திக்கக்கூடியவர்களின் இந்த மனநிலை நம்மையும் நிச்சயம் பாதிக்கக்கூடும். அது நம் அன்றாடப் பணிகளை முடக்கிப் போட்டுவிடும். இது போன்ற சூழலில் நாமும் அவருடைய எண்ணங்களைப் பிரதிபலிக்காமல், உண்மையான நேசத்தை அங்கு வெளியிட்டால் நாளடைவில் அவரும் நம்மிடம் அதே அன்பை வெளிப்படுத்தும் இயல்பிற்கு வந்துவிட வாய்ப்புகள் அதிகம். அப்படி அவர்களால் வர முடியாவிட்டாலும் அந்த அவர்களுடைய எண்ணம் நம்மை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் நம் நேசம் அதற்கொரு கவசமாகிவிடும்.  இதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவர்களை நேராகச் சந்திக்க வேண்டிய தருணம் ஏற்படும் பொழுதெல்லாம், அவருடைய கண்களை நேரிடையாகச் சந்தித்து, ஒரு “ஹாய்” அல்லது புன்னகையுடன் ஒரு அன்பான பார்வையுடன் ஒரு ‘வணக்கம்’ சொல்ல வேண்டியது. இந்த சின்ன செயல் அவரையும் மனம் மாறச் செய்வதோடு, நம்மையும் உற்சாகமாக நம் பணிகளைத் தொடர சக்தியைக் கொடுத்துவிடும். முயன்றுதான் பார்ப்போமே! மீண்டும் நினைவு கூர்வோம். நாம் அச்சம், கோபம் மற்றும் வெறுப்பு கொள்ளக்கூடிய உண்மைகளை அன்போடும், கருணையோடும், பொறுமையோடும் எதிர்கொள்வது மிக சக்தி வாய்ந்ததொரு மந்திரம். அன்றாடம் அந்த மந்திரத்தை உச்சரித்து நம் வெற்றிப் பாதையை விரிவாக்குவோம்!

    இலட்சியம் ஏற்படுத்துவது மாற்றம் என்றால்
    அலட்சியம் ஏற்படுத்துவது ஏமாற்றம்தானே?

    தொடருவோம்

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (6)

    பவள சங்கரி

    “உன் நாவுக்கு அஞ்சு. அது குறி தவறக்கூடிய அம்பாகும்.” – ஹஸரத் அலி.

    தேவையற்ற கவலையை விட்டொழியுங்கள்!

    நம்மில் பலர் ஏதோ பெரிதாக பிரச்சனை வரப்போகிறது என்ற கவலையிலேயே அப்போதைய நிம்மதியைத் தொலைத்தவர்களாக இருக்கிறோம். பொருளாதார பிரச்சனை, இயற்கைச் சீற்றம், விபத்து, தீவிரவாதம், ஆரோக்கியக்கேடு, நெருங்கிய உறவின் பிரிவு, மரண பயம் போன்ற பல காரணங்கள் இதற்கு அடிப்படையாக இருக்கின்றன. இதில் சிலவற்றை நாம் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் கட்டுக்குள் வைக்க முடியும். ஆனால் நம் சக்தியின் எல்லைக்கப்பால் நிகழக்கூடிய சில விசயங்கள் பற்றி கவலைப்படுவதை விட்டு நடக்கக்கூடியவைகளில் கவனம் செலுத்துவதே அறிவார்ந்த செயல்.

    எந்த ஒரு காரியத்திலும் முன்னேற்பாடுகள் மூலம் பல பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும். அதாவது வருமுன் காப்போம் என்ற கொள்கையை கடைப்பிடிக்கலாம். இந்த முன்னேற்பாடுகள் பற்றி பேசும்பொழுது, நான்கு விதமாக  நடந்து கொள்ளும் போக்கு நம்மிடம் இருக்கிறது. அதாவது ஒரு சிலர் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நல்ல முன்னேற்பாடுடன் தயாராக இருந்தும் தேவையற்ற கவலையை விட்டொழிக்காமல், என்ன நடக்குமோ என்ற அச்சத்திலேயே இருப்பார்கள். அடுத்த வகை முன்னேற்பாடு பற்றிய சிந்தையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அடுத்த மூன்றாவது வகை முன்னேற்பாடும் இல்லாமல் எதைப்பற்றிய கவலையும் இல்லாமல் இருப்பவர்கள். (இவர்களுக்குத்தான் கட்டாயம் உதவி தேவைப்படும்)  நான்காவதாக வருபவர் வெற்றியாளருக்குரிய குணத்தைக் கொண்டவர். அதாவது எந்த ஒரு காரியத்தையும் உணர்வுப்பூர்வமாக அணுகுவதைத் தவிர்த்து, அறிவுப்பூர்வமாக அணுகுவதோடு, அவசர காலத்திற்கான முன்னேற்பாடுகளைச் சரியாக வைத்துக்கொண்டு, அதற்குரிய சரியான தகவல்களை சேகரித்து வைத்துக்கொண்டு, தேவையற்ற கவலைகளால் சக்தியை இழக்காமல் தன்னம்பிக்கையுடன் எந்த ஒரு பிரச்சனையையும் எதிர்கொண்டு சமாளிப்பவர்.

    நம் கட்டுப்பாட்டையும் மீறி நடக்கக் கூடிய இயற்கை சீற்றம், தீவிரவாதம் போன்ற அசம்பாவிதங்கள் குறித்த அச்சத்தினால் சக்தி விரயம் செய்யத் தேவையில்லை. முன்னேற்பாடுகளை சரியாகக் கவனித்துக் கொண்டு நம் போக்கில் பணிகளைத் தொடருதலே விவேகமான செயல். இல்லாவிட்டால் நம் உடல் மற்றும் மனதின் பெரும் சக்தியை அது தின்றுவிடும். எந்த இழப்பாக இருப்பினும் கூடியவரை விரைவில் மீண்டுவர முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும். திரும்பப் பெற முடியாத இழப்புகளை நினைத்து வேதனையில் உழன்று, கடமையில் தவறுதல் சரியானதன்று. அத்தகையப் போக்கு நம் வாழ்க்கைத் தரத்தையே குறைக்கக் கூடியது. அதைவிட வாழ்க்கையின் அழகான பகுதிகளை நினைவில் கொண்டு கடமைகளைச் சரிவர செய்யத் திட்டமிடல் வெற்றிக்கான வழியல்லவா?

    மன உறுதியைக் குலைக்கும் முக்கிய எதிரி!

    ஒருவர் வாழ்க்கையில் பெறுகிற நீங்காத செல்வம், மன உறுதிதான். இதனைக் குலைக்கும் முக்கிய எதிரி அனுதாபம்தான். ஆம் ஒருவரின் அனுதாபத்தை வேண்டி நிற்கும் நிலை ஏற்படும்போது சுய மரியாதையுடன், மன உறுதியும் சுத்தமாக விலகிவிடும். மன உறுதி இல்லாதபோது வெற்றியின் எல்லையை நெருங்குவது எளிதல்ல.

    ஆந்திர மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர், மாதவி லதா, இன்று சென்னைவாசி. இவருடைய விசேசம என்னவென்றால் எவருடைய அனுதாபத்தையும் சற்றும் எதிர்பாராதவர். மாற்றுத் திறனாளிகளால் சுலபமாக செய்துவிட முடியாத நீச்சல் பயிற்சியில் தனித்திறன் பெற்றுள்ள இவர் இந்த ஆண்டு சென்னையில் நடந்த தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ‘ஒலிம்பியாட்’ போட்டியில், ப்ரீ ஸ்டைல் 100 மீட்டர் நீச்சல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போட்டியில், கடந்த 2010-ம் ஆண்டு ‘சிறந்த ஊக்கமளிக்கும் விளையாட்டு வீராங்கனை’ என்கிற விருதையும் பெற்றுள்ளார் என்பதும் மகிழ்ச்சிக்குரிய செய்தி. தனியார் நிறுவனம் ஒன்றில் சீனியர் மேலாளராகவும் பணிபுரிகிறார். ஒரு வேளை இவர் அடுத்தவரின் அனுதாபத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தால் இந்த அளவிற்கு சாதனை புரிந்திருக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.

    இவரைப் போலவே குருடு, செவிடு, ஊமை இவற்றுடன் ஏழ்மையும் சேர்ந்து முடக்கிப் போட்டிருந்த ஹெலென் கெல்லர், அடுத்தவரின் அனுதாபம் வேண்டி முடங்கிப் போகவில்லை. தம்முடைய பலகீனங்கள் அனைத்தையும் வெற்றி கொண்டு உலக மக்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்கியது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் நாம் வெற்றியை நாடுபவராக இருந்தால் முதலில் செய்ய வேண்டியது அடுத்தவரின் பரிதாபத்தை எதிர்பார்த்து மன உறுதியை இழந்து நிற்பதை தவிர்க்க வேண்டியதுதான்.

    ஹெலென் கெல்லர், மாதவி லதா போன்று இல்லாமல் ஆண்டவன் அருளால் எந்த குறைபாடும் இல்லாமல் இருப்பவர்கள் இன்னும் பன்மடங்கு மன உறுதி கொண்டவராக அல்லவா இருக்க வேண்டும்? எடுத்த காரியத்தை தொய்வில்லாமல் முடிக்கும் முயற்சியை இன்றே துவங்குவோம். வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போம்!

    தொடரும்

    படத்திற்கு நன்றி:

    http://www.rogancy.com/humor/Achievement.jpg

    Share
  • சிறுகதைகள் இலக்கியம்

     

    பவள சங்கரி

    இலக்கியங்கள் என்பது அந்தந்தக் காலங்களின் கலாச்சாரங்கள், பண்பாடு, நடைமுறை வாழ்க்கை, இன்னல்கள் என அனைத்தையும் துல்லியமாகப் பிரதிபலிக்கும் கண்ணாடி. நச்சென்று வார்த்தைகளால், பளிச்சென்று தம் கருத்தை முன் வைக்கும் கட்டுரைகள் ஒரு விதம் என்றால், அலங்கார வார்த்தைகள் என்ற ஒப்பனையுடன் அழகாகத் தாம் கண்டவற்றை, கேட்டவற்றை, சற்றே கற்பனை கலந்து சுவையான பண்டமாக வழங்கக்கூடியது சிறுகதை. ஆரம்பக் காலங்களில் சிறுகதைகளுக்கு பரவலான அங்கீகாரம் இருந்திருக்கவில்லை. ஆங்கில இலக்கியங்களுக்கு கிடைத்த வரவேற்பு மற்ற மொழி இலக்கியங்களுக்கு கிடைப்பது அரிதாக இருந்திருக்கிறது. ஷேக்ஸ்பியர் படைப்புகள் குறித்து அறிந்தவர்கள் மட்டுமே பெரும்பாலும் இலக்கியவாதிகளாக கருதப்பட்ட காலமும் இருந்திருக்கிறது. மேலை நாட்டவர்களின் பிரவேசத்தினால் நமக்குக் கிடைத்த புதிய இலக்கிய வடிவமே சிறுகதை என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது.

    இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற மாபெரும் காவியங்களில் பல சிறுகதைகள் கிளைக்கதைகளாக வேரூன்றியிருக்கும். நாயன்மார்களின் வரலாறுகள் இன்றளவிலும் இறை நம்பிக்கையை ஊக்குவிக்கக்கூடிய திறன் பெற்றவையாகவே விளங்குவது சிறப்பு. மாபெருங்காவியங்களான இவைகளின் தாக்கம் இன்றைய வாழ்வியலிலும் காண முடிகிறது.

    சிறுகதைகளின் முன்னோடி என்று எடுத்துக்கொண்டால் வீரமாமுனிவரைச் சொல்லலாம் எனினும், 18ம் நூற்றாண்டுகளில், தாண்டவராய முதலியார் என்பவரால் வடிக்கப்பட்ட சுவையான சிறுகதைகள் இன்றளவும் குழந்தைகளை உற்சாகப்படுத்துகிறது என்றால் அது மிகையில்லை. பாரதியாரின் சிறுகதைகள் 20ம் நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில் எழுதப்பட்டது. புதுமைப்பித்தன், கு.ப ராஜகோபாலன், வ.வே.சு. போன்றோரின் சிறுகதைகளும் பிரபலமாக இருந்தது.

    1809ம் ஆண்டில் (ஜனவரி 19) பிறந்த அமெரிக்க கவிஞர், எழுத்தாளர், திறனாய்வாளர் மற்றும் விமர்சகர் ஆலன்போவின் (Allan Poe) திகில் கதைகள் மிகப்பிரபலமானது. உலகம் முழுவதையும் தம்முடைய படைப்புத் திறனால் கட்டுக்குள் வைத்திருந்தார். ‘துப்பறியும் கதைகளின் தந்தை’ என்று பெரும் பெயரும் பெற்றிருந்தார்.அவர் சிறுகதைகளின் இலக்கணம் பற்றிக் கூறும்போது,அரை மணி முதல் ஒன்று அல்லது ஒன்றரை மணிக்குள் படித்து முடிக்கக்கூடிய உரைநடையாக இருக்க வேண்டும் என்கிறார்.

    ஹட்சன் என்ற பிரபல எழுத்தாளர், ஒரே மூச்சில் படித்து முடிக்கக்கூடியது நல்ல சிறுகதை என்கிறார். ஒரு சிறு அனுபவமோ, வாழ்க்கையில் நடக்கும் சுவையான நிகழ்ச்சிகளோ, கிடைத்த வெற்றிகள், அதனால் ஏற்படும் சிறு சிக்கல்கள், கவர்ச்சியான காட்சிக்ள் இப்படி எதுவும் நல்ல சிறுகதையின் அடிப்படையாகலாம் என்கிறார் மு. வரதராசனார். கல்கி காலத்தில் சிறுகதைகள் தனிப்பொலிவுடன் மிளிர்ந்தது. மணிக்கொடி போன்ற அச்சிதழ்களும் சிறுகதை வளர்ச்சிக்கான பெரும் பணியாற்றியுள்ளது. ரா. கி. ரங்கராஜன் அவர்களின் ‘எப்படிக் கதை எழுதுவது’ என்ற நூலும், அகிலனின் ‘கதைக்கலை’ என்ற நூலும், மகரம் என்பவரின் தொகுப்பான, ‘எழுதுவது எப்படி’ போன்ற நூல்கள் சிறுகதை எழுதும் கலையை பயிற்றுவித்திருக்கின்றது. வானொலியிலும் சிறுகதைகள் வாசிக்கப்பட்டு வருகின்றன. அமுதசுரபி, கல்கி போன்ற இதழ்கள் சிறுகதைப் போட்டிகள் நடத்தி நல்ல மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

    நல்ல சிறுகதைகள் என்பது, வாசித்து முடித்தவுடன், சிந்தனைக்கு தூண்டுகோலாக அமைய வேண்டும் என்கிறார் புதுமைப்பித்தன்.

    “கதையை வாசிப்பது, நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவிப்பதற்கு ஒரு தூண்டுகோல். கதை முடிவடையும்போது அதைப்பற்றிய சிந்தனை முடிவடைந்து விடாது. இப்படிப்பட்ட கதைகள் முடிந்த பிறகுதான் ஆரம்பமாகின்றன என்று சொன்னால் விசித்திரவாதமாகத் தோன்றும். ஆனால் அதுதான் உண்மை” என்பது புதுமைப்பித்தனின் வாதம்.

    மனக்குகை ஓவியங்கள், துன்பக்கேணி, மனித யந்திரம் போன்ற புதுமைப்பித்தனின் பல சிறுகதைகள் இது போன்று சிந்தனைக்குத் தூண்டுகோலாக இருப்பதைக் காணலாம்.

    நாட்டுப்புறக் கதைகள் மிகச் சுவையான கதைக்களங்கள் கொண்டவை. இன்று அவைகள் பெரும்பாலும் மறைந்து கொண்டுவருகின்றன எனலாம். விக்கிரமாதித்தன் கதைத் தொகுப்புகளும், பாட்டிமார்கள் சொன்ன பழங்கதைகளும் குழந்தைகளுக்கும் படிப்பினை ஏற்படுத்தக் கூடியவைகள்.

    சமகால எழுத்தாளர்களான, கல்கி கிருஷ்ணமூர்த்தி, தீபம் நா. பார்த்தசாரதி, புதுமைப்பித்தன் மு.வரதராசனார், ந.பிச்சமூர்த்தி, லா.ச.ராமாமிருதம், ராஜம் கிருஷ்ணன், ரமணிசந்திரன் , சு. சமுத்திரம், சாவி பனசை கண்ணபிரான், போன்றோர்கள் என்றும் மனதில் நிற்பவர்கள்.

    அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், கள்வனின் காதலி, பொய்மான் கரடு, மோகினித் தீவு போன்ற புதினங்கள் இன்றளவிலும் இளைஞர்களையும் கவர்ந்திழுக்கக்கூடியவைகளாவே உள்ளது குறிப்பிடத்தக்கது. 75க்கும் மேற்பட்ட சுவையான சிறுகதைகளும் எழுதியுள்ளார்.

    சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ள தீபம். நா. பார்த்தசாரதி அவர்களின் பிரபலமான புதினங்களான, பொன் விலங்கு மற்றும் குறிஞ்சி மலர், தொலைக்காட்சித் தொடர்களாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவருடைய கதை நாயகர்கள், சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் போராளிகளாகவே இருப்பார்கள். முறையாகத் தமிழ் பயின்றுள்ள இவரின் பயணக் கட்டுரைகளும் சுவாரசியமானது. பிரான்சு, செருமனி, இரசியா, இத்தாலி, எகிப்து, குவைத் போன்ற நாடுகளுக்குச் சென்று தன் பயண அனுபவங்களை பலருக்கும் பயன்படும் வகையில் எழுதியுள்ளார்.

    நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், ஐம்பதிற்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புக் கதைகளும் எழுதியுள்ளார். அகல்யை என்ற சிறுகதையில், கௌதமர் என்ற பாத்திரத்தின் அங்க இலட்சணங்களை விளக்கிய விதம்  வித்தியாசமாக இருக்கும்.

    “ அவருக்கு வயது முப்பது. கறுத்து அடர்ந்த தாடி, அகன்று பிரகாசமான ஒளிவிடும் கண்கள், மெல்லிய உதடு, பரந்து விரிந்து திரண்ட மார்பு, ஒடுங்கிய வயிறு, எல்லாவற்றிலும் இயற்கையின் கனிவு பொங்கியது. மிருக அழகன்று – ஆளை மயக்காது, வசீகரிக்கும். அந்தக் கண்களில், அந்த உதடுகளில் ஒரு தெய்வீக ஒளி – தேஜஸ் – உள்ளத்தின் சாந்தியை எடுத்துக் காட்டிற்று.”

    அதைவிட அவருடைய மனைவியை வர்ணிக்கும் போது அந்தக்கால பண்பாடும், கலாச்சாரமும் தெளிவாக விளங்கும்படி விவரித்திருப்பார்.

    “அவர் மனைவி – அவள் தான் அகல்யை. அவர் ஆணுக்கு இலட்சியம் என்றால், இவள் பெண் குலத்திற்கு வெற்றி. மருண்ட பார்வை, அவரைக் காணுந்தோறும் காதல் பொங்கும் கண்கள். அவரைத் தனது உள்ளத்தில் மட்டும் வைத்துவிடவில்லை. அவளது ஒவ்வொரு செயலும் அவரது இன்பத்திற்காகவே. அதிலே அவளுக்கு ஓர் இன்பம்.”

    துளியும் விரசமில்லாமல் அத்துனை ஆழ்ந்த காதல் கதையை, அழகாக வடித்த பாங்கு ஆச்சரியமூட்டுபவை.

    மு. வரதராசனார் அவர்களுடைய ’அகல்விளக்கு’ என்ற புதினத்தின் அறிமுக உரையில்

         “என்ன உலகம் இது? பெண்கள் இருவர் பழகினால், உடம்பைக் கடந்து உள்ளத்தின் உறவு கொண்டு பழகவில்லையா? … ஆண்கள் இருவர் பழகும்போது அப்படி உள்ளத்தால் பழகவில்லையா? ஓர் ஆணும் பெண்ணும் பழகும் போது மட்டும் உள்ளம் இல்லையா? ஏன் இந்தத் தடுமாற்றம், ஏமாற்றம் எல்லாம்?” …. இமாவதியின் ஆழ்ந்த உள்ளத்திலிருந்து எழுந்த இந்தக் கேள்வியை ஒவ்வோர் ஆணும் பெண்ணும் எண்ணி எண்ணி விடை காண முடியுமானால், சமுதாயம் பண்பாடு மிக்கதாய் எளிதில் முன்னேற்றம் எய்தலாம்.

    என்ற கா.அ.ச. ரகுநாயகன் (திருப்பத்தூர் வ.ஆ) அவர்களின் கருத்து இன்றளவிலும் ஆழ்ந்து நோக்கத்தக்கதொன்றாகும்.

    அந்தக் காலத்தில் மு. வ அவர்களின் படைப்புகளை பலர் தம் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவே பயன்படுத்தியுள்ளனர். அத்தகைய முற்போக்குச் சிந்தனைகள் கொண்டவைகள் அவர்தம் படைப்புகள்.

    லா. சா. ராமாமிர்தம் அவர்கள், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 6 நாவல்களும் எழுதியுள்ளவர். 1989ம் ஆண்டில் சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்.

    திருமதி ராஜம் கிருஷ்ணன் தம் பல கட்டுரைகள் மட்டும் கதைகள் மூலம் பெண் விடுதைலைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். ஒரு புதினத்தை எழுதுவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட களங்களில் நேரிடையாகத் தங்கி ஆய்வு மேற்கொண்டு பின்னரே அதுபற்றி எழுதுவதே இவருடைய தனிச்சிறப்பு. ‘கரிப்பு மண்கள்’ என்ற இவருடைய புதினம், தூத்துக்குடியில் வாழும் மீனவர்களுடன் தங்கி, அவர்களுடைய வாழ்க்கை முறைகளையும், நிலைகளையும் உணர்ந்து எழுதிய ஒன்றாகும். அதேபோல் ‘முள்ளும் மலரும்’ என்ற புதினத்திற்காகத் தம் கணவருடன் சம்பல் பள்ளத்தாக்கிற்குச் சென்று கொள்ளைக்கூட்டத் தலைவன் டாகுமான்சி என்பவரையும், மான்சிங் என்ற 400க்கும் மேற்பட்ட கொலைகள் செய்தவரையும் சந்தித்து நான்கு மணிநேரம் உரையாடி, பின்னர் அந்தப் புதினத்தை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. ’வேருக்கு நீர்’ என்ற புதினத்திற்காக 1973ம் ஆண்டின் சாகித்ய அகாதமி விருதும் பெற்றுள்ளார்.

    ’அமுதமாகி வருக’ என்னும் புதினம் பைகாரா நீர் மின் திட்டம் செயல்பாடுகள் குறித்த கருப்பொருளுடன், கள ஆய்வு மேற்கொண்டு எழுதப்பட்டது என்பது சிறப்பு. 1952ல் அகில உலகச் சிறுகதைப் போட்டியில் தமிழ்ச் சிறுகதைக்காக இவருடைய ‘ஊசியும் உணர்வும்’ என்ற சிறுகதை தேர்ந்தெடுக்கப்படது குறிப்பிடத்தக்கது.

    இதுபோல சிறுகதைகள் மற்றும் நாவல்கள் எழுதுவதில் பெரும் புரட்சி ஏற்படுத்திய படைப்பாளிகள் பலர்.சுஜாதா அவர்களின் பல்வேறு விதமான படைப்புகளில், ‘மீண்டும் ஜினோ’ என்ற புதினம் என்றும் மனதை விட்டு அகலாதவை. இவர்களின் அனைத்து படைப்புகளையும் படிக்க வேண்டும் என்ற ஆவல் பூர்த்தியாக இறைவனை இறைஞ்சுகிறேன். ஒரு சிலவற்றையே இதுவரை வாசித்திருக்கிறேன்.

    மக்களின் நடைமுறை வாழ்க்கையும், நடை, உடை மற்றும் பாவனைகளும் காலத்திற்கு காலம் மாறிக்கொண்டே இருப்பதே இலக்கியங்களில் மாற்றங்கள் ஏற்படக் காரணமாகிறது.  இந்த மாற்றங்களே சிறுகதைகளின் வளர்ச்சிக்கு வித்தாகிறது என்பதும் நிதர்சனம்.சமீபத்தில் இந்து நாளிதழ் மும்பை வாழ்க்கையைச் சித்தரிக்கும் இரண்டு கதைகளுடன், மேலும் மூன்று சிறந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து பரிசு வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    தம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை நேசிக்கவும், அவர்தம் துன்பங்களை கருணைக் கண்களுடன் காணக் கூடியவர்களும், மற்றும் மக்கள் மனதில் தம் எழுத்துக்கள் நீங்காத இடம் பிடிக்க வேண்டும் என்ற வேட்கை உடையவர்களே சிறந்த படைப்புகளை அளிக்க வல்லவர்கள். மிகைப்படுத்தப்பட்ட கற்பனைக் காட்சிகள் தற்காலங்களில் அதிகமாக விரும்பப்படுவதில்லை. யதார்த்தமான சூழல்களில், மிக யதார்த்தமாக, சுருக்கமாக எழுதப்படும் சிறுகதைகளே பெரிதும் வரவேற்கப்படுகிறது. குறிப்பாக வட்டார வழக்குகளில்  எழுதப்படும் சிறுகதைகள் வாசகர்களை பெரிதும் கவருகிறது. தேசியச் சிந்தனைகள்,  சமுதாய சீர்திருத்தம், பெண்ணியம், தலித்தியம், கலாசாரம், பண்பாடு, மனிதத் தத்துவம், உளவியல், நவீனத்துவம், பின் நவீனத்துவம் என பல வடிவங்களில் சிறுகதைகள் எழுதப்படுகிறது.

    அச்சிதழ்கள் பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு சிறுகதைகளே வெளியிடுவதால் சிறுகதை எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை வெளிக்கொண்டு வருவதில் பெரும் சிரமத்திற்குள்ளாகிறார்கள். அந்த வகையில் பலவிதமான படைப்புகளை வெளியிடும் பல இணைய இதழ்கள் மற்றும் பல்வேறு இணைய தளங்கள் மூலமாக இன்றைய இலக்கியம் சிறந்த முறையில் வளர்ச்சியடைய வாய்ப்பாக அமைகிறது என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. நல்ல எண்ணங்களை ஊக்குவிக்கக்கூடியதான படைப்புகள் மட்டுமே காலத்திற்கும் அழியாமல் நிலைத்து நிற்கும் என்பதும் சத்தியம்.

    படத்திற்கு நன்றி:

    http://en.wikipedia.org/wiki/Edgar_Allan_Poe

    நன்றி : இன் & அவுட் சென்னை இதழில் வெளியானது.

     

     

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (5)

    பவள சங்கரி

    ”ஒரு கொள்கையை எடுத்துக்கொள் அதற்காகவே உன்னை அர்ப்பணித்து, பொறுமையுடன் போராடிக் கொண்டிரு.  உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும் – சுவாமி விவேகானந்தர்.

    ஒரு செயலைச் செய்து முடிக்க உறுதியான எண்ணம் கொண்டு அதை ஆரம்பிக்கும் போதே அதற்குரிய சக்தி தானகாவே கிடைத்துவிடும் என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள். நமக்குள் புதைந்து கிடக்கும் சக்தியை பாதி அளவிற்கும் கூட நாம் பயன்படுத்துவது இல்லை என்றே கூறுகின்றனர். நம் முயற்சியை முழுமையாகப் போடும்போது அது பன்மடங்காகப் பெருகத்தான் செய்யும் என்பதும் நாம அனுபவத்தில் காணும் உண்மைதான். கண்ணிற்குத் தெரியாத கடவுள் போலத்தான் நம் சக்தியும் அல்லவா.நம் பார்வைக்குத் தெரியாவிட்டாலும் நமக்குத் தேவையான நேரத்தில் நம்முள் புகுந்து பெரும் சாதனைகள் புரிகிறதல்லவா?

    எதையும் தள்ளிப்போடாமல் உடனே செய்யப் பழகுங்கள்!

    எடுத்த காரியத்தை உடனடியாக முடிக்கப் பார்க்க வேண்டும். தேவையில்லாமல் தள்ளிப்போடும் வழக்கம் நம் வெற்றிப் படிக்கு ஓர் தடைக்கல்லாக ஆகிவிடும்.  தள்ளிப்போடாமல் காரியங்கள் செய்வது எப்படி?

    முதல் நிலையாக நாம் எப்பொழுது, எப்படி, ஏன் தள்ளிப் போடுகிறோம் என்று பார்க்கலாமா? நம் வாழ்க்கையின் ஏதோ ஒரு புள்ளியில்தான் இந்தத் தள்ளிப்போடும் வழமை வந்து தொற்றிக்கொள்கிறது. உதாரணமாக, பலர் தன் அன்றாடக் கடமைகள் அனைத்திலும் மிகத் தெளிவாக இருப்பவர்கள், வழக்கமாகச் செய்ய வேண்டிய மருத்துவப் பரிசோதனை, உணவுக் கட்டுப்பாடு, போன்றவற்றில் கோட்டை விட்டு விடுவார்கள். கடந்த 6 மாத காலத்தில் நாம் எதற்கெல்லாம் தள்ளிப் போட்டிருக்கிறோம் என்பதைப் புரட்டிப் பார்த்தோமானால் நாம் எதற்கெல்லாம் தள்ளிப் போட்டிருக்கிறோம் கண்டு கொள்ளலாம். இது ஒரு சுய பரிசோதனை. நம்முடைய தொழில் சம்பந்தப்பட்டதாகவோ, சமூக வாழ்க்கை, பொருளாதாரச் செயல்கள், இப்படி எதுவாகவும் இருக்கலாம். அது. எதனால் தள்ளிப் போடப்பட்டது என்று ஆராய்ந்தால் அதற்கான காரணம், பயம், சலிப்பு, களைப்பு, நன்றாக செய்ய வேண்டும் என்ற பேராவல் போனறவைகளாக இருக்கலாம். இல்லை என்றால் வேறு ஏதாவது பொழுதுபோக்கில் ஈடுபட்டு, இதையெல்லாம் தள்ளிப் போட்டோமா என்பதைக் கண்டறிந்தாலே அதிலிருந்து, எளிதாக மீண்டு விடலாம்.

    இரண்டாம் நிலையாக; மிக நன்றாக ஒரு காரியத்தை செய்ய வேண்டும் எனற எதிர்பார்ப்பில்,   நிதானமாக நன்றாகச் செய்யலாமே என்று தள்ளிப் போடுவோம். ஒரு வேளை அது தகுதிக்கு மீறிய உயர்தரத்தை எதிர்பார்ப்பதாகக்கூட இருக்கலாம். அதனைக் கண்டறிந்து, உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதனைத் தவிர்த்தாலே, இது போன்று தள்ளிப் போடுதலை விட்டுவிடுவோம்.,  அதற்காக ஒழுங்கு முறையைக் கைவிட்டு விட வேண்டும் என்பது பொருளல்ல. அதிகப் படியான கவனம் தேவைப்படக்கூடிய பணியைக் கண்டறிந்து செயல்படுவதால் அவசியமான வகையில் நம் பொன்னான நேரத்தைச் செலவிட முடியும்.

    அடுத்து மூன்றாம் நிலையாக, ஒரு வேலையை நாம் தள்ளிப் போடுவதற்கான காரணம் பல நேரங்களில் நம் அணுகு முறையால்தான். உதாரணமாக, வரவு செலவுக் கணக்கு போடுவது போன்ற மூளைக்கு வேலை கொடுக்கும் பணியை இரவு 10 மணிக்கு மேல் ஓய்வெடுக்கும் வேளையில் செய்ய முனைவது.  குறிப்பிட்ட அந்த , வேலையைத் தள்ளிப் போடத் தூண்டுகிறது.

    இது போன்று தொடர்ந்து தள்ளிப் போடுகிறோம் என்றால், அந்த வேலையச் செய்யும் முறையை சற்றே மாற்றியமைக்க வேண்டும் சலிப்படையச் செய்யக்கூடிய வேலைகளைச் செய்ய முற்படும் போது விடுமுறை நாளையோ, ஓய்வாக இருக்கும் நேரத்தையோ தேர்ந்தெடுத்து, மனம் விரும்புகிற நல்ல பாடலோ, பிடித்த உணவு வகைகளோ, பக்கத்தில் வைத்துக் கொண்டு செய்ய முற்பட்டால எப்படித் தள்ளிப் போடும் எண்ணம் வரும்? எந்த வேலையாக இருந்தாலும், அதை விருப்பத்துடன் உற்சாகமாக, நகைச்சுவை உணர்வுடன்,ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு செய்ய வேண்டும். அப்படியும் செய்ய முடியவில்லையென்றால் வேறு ஒருவரது மூலமாகவாவது வேலையை முடிக்கப் பார்க்க வேண்டும் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கப் பார்ப்பதால், அதை நிறைவேற்றுவதற்குரிய சக்தியையும், நேரத்தையும் விட அதிகமாகவே செலவிட வேண்டி வரும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

    சில நேரங்களில் நாம் மிகவும் விரும்பிச் செய்யக் கூடிய வேலைகளைக் கூடத் தள்ளிப் போட நேரிடுகிறது. உதாரணமாக நல்ல அழகான  ஓவியம் வரைந்து புதிதாகக் கட்டியிருக்கும்  நம்முடைய வீட்டின் வரவேற்பறையில் மாட்ட வேண்டும் என்ற ஆசை. நம்முடைய மற்றப் பணிகள் மற்றும் பொறுப்புகள் காரணமாக  தள்ளிப் போய்க்கொண்டே இருக்கலாம். தம்மைப் போன்றே இது போன்ற கலைகளில் நாட்டம் கொண்ட வேறு நண்பரையோ அல்லது பயிற்சி வகுப்பின் மூலமாகவோ ஊக்கச் சக்தியைப் பெற்று, மளமளவென வேலையை முடிக்க முயல வேண்டும். அப்படி முயற்சி எடுத்து ஒரு வேலையை முடிக்கும் பட்சத்தில் ,அதை நமக்குப் பிடித்த உணவோடு, குடும்பத்துடன், கொண்டாடலாமே.

    சில நேரங்களில் ஒரு காரியத்தில் இறங்கும் போது, அதனால் அவமானப் பட்டுவிடுவோமோ அல்லது தவறாகப் போய்விடுமோ என்ற அச்சம் காரணமாகக் கூட, தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்போம். இது போன்ற நேரங்களில் நாமே நன்றாக சிந்தித்து எதற்காக அஞ்சுகிறோம் என்பதைக் கண்டறிந்து, அதனைத் தவிர்க்கப் பார்க்க வேண்டும். முடியவில்லையென்றால், நண்பர்களிடம் ஆலோசனை பெற்றாவது, அக்காரியத்தைத் தொடர முயற்சிக்க வேண்டும். அந்தக் காரியத்தின் மூலம் நமக்கு ஆதாயம் கிடைக்கும் என்று உணர்ந்தால் அதை எப்படியாவது முடிக்க முயல வேண்டும்.

    அன்றாடம் நாம் முடிக்க வேண்டிய பணிகளை, நம் கைப்பட குறிப்பெடுத்து எழுதி வைத்துக்  கொள்ள வேண்டும்.
    தேவையான ஓய்வு எடுக்கவும் தயங்கக் கூடாது. இல்லாவிட்டால்  அது வேலை செய்யும் நேரத்தை நம்மையறியாமலே கைப்பற்றிவிடும்.

    மிகவும் சலிப்படையச் செய்யக் கூடிய நீண்ட வேலையாக இருந்தால், அதைப் பிரித்து ஒரு வாரத்திலோ அல்லது மாதக் கணக்கிலோ குறிப்பிட்டு நிர்ணயித்து சலிப்படையாமல் செய்து முடிப்பதற்கு வழி வகுத்துக் கொள்ள வேண்டும்.

    நண்பர்களுடன் போனில் பேசுவது, படிப்பது, எழுதுவது, போன்ற மன உற்சாகம் அளிக்கக் கூடிய செயல்களுக்காகவும் நேரம் ஒதுக்க வேண்டும். மேற்கண்ட அனைத்து விசயங்களையும் உள் வாங்கி, செம்மையாக நம் கடமையை நேரந்தவறாமல் செய்யும் போது, வெற்றி நிச்சயம்தானே!

    தொடரும் .

    படங்களுக்கு நன்றி:

    http://photosofinteriors.com/contact-us/home/landscape.html?start=1

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (4)

    பவள சங்கரி

    எல்லோரும் நல்லவரே!

    சக மனிதர்களை பாரபட்சமின்றி நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். எவரையும், எக்காரணம் கொண்டும் வெறுத்தல் ஆகாது. அடிப்படையில் காழ்ப்புணர்ச்சியும், தோல்வி அச்சமும் கொண்டவர்களே அடுத்தவரை வெறுத்துப் புறக்கணிக்க எண்ணுகின்றனர். ஒருவரை வெறுக்கும்போது, நம் மனதில் அவரைப் பற்றி அடிக்கடி சிந்திக்க வேண்டிய தேவை ஏற்படுவதோடு, அவரால் நமக்கு பெரும் தீங்கு விளையப் போவதாகவும், அவர் நமக்கு பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும் எண்ணி தேவையில்லாமல் சுய பச்சாதாபம் கொள்ள வேண்டிய சூழலுக்கு ஆளாகிறோம். இந்த சுய பச்சாதாபம் என்பது நம் வெற்றியின் முக்கியமான ஒரு எதிரி எனலாம். தன்னம்பிக்கையை முற்றிலும் குலைக்கக்கூடியது. அது  மட்டுமல்லாமல் இந்த வெறுப்புணர்ச்சி, அதிகம் கோபம் கொள்ளுதல், பழி வாங்குதல், போன்ற செயல்களில் ஈடுபட்டு கால விரயம் ஏற்படச்செய்கிறது. அத்துடன் மனக்கவ்லை கொள்ளச்செய்து ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டுவிடும்.

    நம்மை அடுத்தவர் வெறுக்கிறார் என்ற ஐயமும் கூட பலவிதமான கற்பனைக் குழப்பத்தை ஏற்படுத்தி நம்மைச் செயலிழக்கக் செய்யக்கூடும். பலர் தங்கள் மனதில் உள்ள வெறுப்பைக் காட்டாமலே சம்பந்தப்பட்டவரிடம் நைச்சியமாகப் பேசி தங்கள் காரியத்தை சாதித்துக்கொள்ள முற்படுவார்கள். ஆயினும் ஏதோ ஒரு சிறு செயலில் தன்னையறியாமல் அது வெளிப்பட்டுவிடும். அப்படி ஒருவரை கண்டுகொள்ள நேர்ந்தால் இயன்றவரை அவர் மனம் புண்படாதவாறு அவரைவிட்டு விலகிவிடுதலே சிறந்த தீர்வாகும். இப்படிச் செய்வதால் தேவையற்ற மன உளைச்சலிலிருந்து தப்பிக்கலாம்.

    மறதி என்பது மனப்புண் ஆற்றுமோர்  சிறந்த மருந்து!

    நம் மனதைப் பாதித்த சம்பவங்களை முற்றிலும் மறக்க முயற்சிப்பதே அதன் தொல்லையிலிருந்து விடுபடும் உபாயம். இது சற்று கடினமான செயல்தான் என்றாலும் சில அற்ப விசயங்களுக்காக நம் பொன்னான நேரத்தை விரயமாக்குவது தேவையற்றது. சில ஆண்டுகளுக்கு முன் நமக்கு நடந்த ஒருசில சம்பவங்கள் அன்று நம்மை பெரிதும் பாதித்திருக்கக்கூடும். வாழ்நாளில் என்றுமே அதை மறக்க முடியாத ஒன்று என்றுகூட எண்ணியிருப்போம். ஆனால் இன்று அதை நினைக்கும் போது அது திரை மறைவில் நிழலாடும் ஓவியம் போன்றே தோன்றும். அதையும் கட்டாயமாக நினைவில் கொண்டு வந்தால்தான் பிடிபடும். எப்படியும் காலம் ஒரு நாள் அதை மறக்கச் செய்யப்போகிறது என்று உறுதியாக தெரியும் போது அப்படிப்பட்ட ஒன்றிற்காக மனதை வருத்திக் கொள்வதைவிட அதிலிருந்து விடுபட்டு அதனை முற்றிலும் மறக்க முயற்சிப்பதே சிறந்தது அல்லவா.. நல்ல ஆக்கப்பூர்வமான சிந்தைகளை உரமிட்டு வளர்ப்பது போல தேவையற்ற நினைவுகளை புறந்தள்ளி அதனை முற்றிலும் நம் நினைவுகளிலிருந்து அகற்றி விடுதலே வெற்றிக்கான அடுத்தபடியை நெருங்கும் வழி அல்லவா.

    தொடருவோம்

    படத்திற்கு நன்றி:

    http://inspirational-images.tumblr.com/

    Share
  • தடையைத் தகர்த்தெறிந்த தன்னம்பிக்கை!

    பவள சங்கரி

    உழைக்கும் கரங்கள்!

    சென்னை அண்ணாநகர் பக்கம் செல்பவர்கள் காலை எட்டு மணி தொடங்கி மாலை ஆறு மணி வரை ஒரு 58 வயது பெண்மணி, முகம் நிறைய மஞ்சளுடன், புன்னகையும், நெற்றி நிறைய குங்குமமும் கண்கள் நிறைய கனிவும், உள்ளம் நிறைய அமைதியும் அணிந்து கொண்டு தலையில் பெரும் சலவைத் துணி சுமையுடன் நடமாடிக் கொண்டிருப்பதைக காணலாம். இவர் பெயர் நாகம்மா. தன்னம்பிக்கை என்ற ஒரு ஆயுதம் கையில் இருந்தால் எத்தகைய தடையையும் முறியடித்து வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதற்கு ஒரு சிறந்த முன்னுதாரணம்தான் இந்த நாகம்மா.. ஆம். தன்னுடைய 14 வயதில் அடிக்கடி உடல் நலிவுற்று அரசு மருத்துவமனையில் பலமுறை தங்கி மருத்துவம் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. படிப்பும் பாதியிலேயே நிறுத்த வேண்டியிருந்திருக்கிறது. பல பரிசோதனைகளுக்குப் பிறகு, நாகம்மாவிற்கு இருதயத்தில் ஓட்டை இருப்பதாகவும், அவர் கடுமையான பணிகளோ, அல்லது திருமண வாழ்க்கையையோ மேற்கொண்டால் உயிருக்கே ஆபத்து நேரலாம் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள். ஆனாலும் முடங்கிப்போய் விடவில்லை நாகம்மா. தன்னால் முடிந்த வேலைகளை செய்து கொண்டுதான் இருந்திருக்கிறார். இவர்  சலவைத் தொழிலாளி குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதால் அதற்குரிய தன்னால் ஆன சின்னச் சின்ன உதவிகளைச் செய்து கொண்டிருந்திருக்கிறார். விதியின்  விளையாட்டு அதோடு நிற்காமல்  தன்னுடைய 17 வது வயதில் பெற்றோரையும் ஒருவர் பின் ஒருவராக இழக்கச் செய்துவிட்டது.. உடன் பிறந்த ஒரே சகோதரியும் திருமணம் செய்து கணவன் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இளம் வயதில் தனித்து விடப்பட்ட இந்தப் பெண்ணின் பாதுகாப்பற்ற சூழலை மனதிற்கொண்டு வேறு வழியின்றி, மருத்துவரின் ஆலோசனையையும் மீறி, தம் அன்புத் தங்கையை தம் கணவருக்கே மறுமணம் செய்து வைத்துள்ளார், இவருடைய அன்புச் சகோதரி. அந்த பாச தீபத்தின் தியாகத்தினால் நாகம்மா அன்று முதல் தன் சகோதரியுடனேயே, அவருடைய வாழ்க்கையையும் பங்கு போட்டுக்கொண்டு வாழ்ந்து வருகிறார்.

    துரத்தி வந்த நோயைக்கூட இவருடைய தன்னம்பிக்கை என்ற உறுதியான மனம் விரட்டியடித்திருக்கிறது என்பதை அறிய ஆச்சரியமாகத்தான் இருந்தது. இருதய நோய் காரணமாக அடிக்கடி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். ஆனாலும் தன்னுடைய கடமைகளை மட்டும் எந்த காரணம் கொண்டும் தவிர்க்க நினைக்கவில்லை இவர். ஹோமியோபதி மருத்துவமும் பார்த்துக் கொள்ள ஆரம்பித்த வேளையில்தான், திருமணம் ஆன ஒரு சில ஆண்டுகளிலேயே குழந்தைப்பேறும் பெற்றிருக்கிறார். இருதயத்தில் இருந்த பிரச்சனையுடன், மருத்துவர்கள் குழந்தை வேண்டாம் என்று கூறியும், தன்னால் முடியும் என்ற நம்பிக்கையை மட்டும் உறுதியாக வைத்துக் கொண்டு பலப்பல சிரமங்களுக்கிடையே, மருத்துவ மனையிலேயே முழுவதும் தங்கி, நல்லபடியாக அழகான ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தும் வந்துவிட்டார். சகோதரியின் ஆண் ஒன்று, பெண் ஒன்று என்ற இரு குழந்தைகளுடன் நாகம்மாவின் பெண் குழந்தையும் ஆரோக்கியமும், நல்ல அறிவுமாக வளர்ந்து கொண்டு வந்திருக்கிறது.

    மகன் பட்டயப் படிப்பு படித்துவிட்டு குடும்பத் தொழிலான சலவைத் தொழிலையே செய்ய விரும்ப, மகள்கள் இருவரையும், பொறியியல் கல்லூரியில் படிக்க வைத்துள்ளனர். மிகச் சிரம்ப்பட்டே தம் மகள்களை படிக்க வைத்ததாகக் கூறும் நாகம்மா,. தன் மூத்த சகோதரியின் குழந்தைகளுக்கும், தன் குழந்தைக்கும் எந்தவிதமான வேறுபாடும் இன்றுவரை பார்த்திராதது மட்டுமே இவருடைய அமைதியான குடும்ப வாழ்க்கைக்கு காரணமில்லை. தங்கள் மகள்களை நன்கு படிக்க வைத்து, இன்று அவர்கள் நல்ல நிலையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்தும் அவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்காமல் இன்றுவரை உழைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்களே அது மட்டுமே நிம்மதியை தேடிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் சத்தியம். அக்காவிற்கு முதுமையினால் இயலாமை ஏற்பட்டுள்ள நிலையில் அவரை நல்ல ஓய்வான சூழலில் கவனித்துக் கொண்டும், 70 அகவையைத் தொடும் தம் கணவருடன் இன்றும் சலிக்காமல் உழைத்துக் கொண்டுமிருக்கிறார், இந்த மங்கை. மகள்களுக்கு திருப்தியாக சீர் செய்து திருமணம் செய்து கொடுத்துள்ளதையும் பெருமை பொங்கக் கூறுகிறார். தம் மகள் பொறியியல் கல்லூரியில் படிக்கும்போது , வாடிக்கையாளர் ஒருவரின் மூலமாக திரைப்பட நடிகை ரேவதி இது போன்று சிரமத்தில் படிப்பவர்களுக்கு உதவி செய்வதாக கேள்விப்பட்டு, அவரை அணுகியபோது ரூபாய் 5000 உதவித் தொகை கொடுத்தது தன் மகளின் கல்விக்கு பயனுள்ள வகையில் அமைந்தது என்பதையும் நினைவுகூர்கிறார். அக்காவின் மகனுக்கும் திருமணம் செய்து வைத்து அவரும் மனைவி குழந்தையுடன், தனி வீட்டில் குடித்தனம் நடத்த, இன்று தாங்கள் மூவரும் அமைதியாக, முதுமை பயமோ, இறுதி நாட்களின் தேவைகளோ என்ற எந்த அச்சமுமின்றி நிம்மதியாக பொழுது போய்க் கொண்டிருக்கிறது என்கிறார் புன்னகையுடன்.

    நான்கு மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் ஓயாமல் சுமையுடன் படி ஏறிச் செல்லும்போது சிரமம் இல்லையா என்றால், அதற்கும் அழகாக சிரித்துக் கொண்டே, “சிரமம் இருக்கத்தான் செய்யும். அதைப்பார்த்தால் பொழப்பு நடக்குமா… முடிந்தவரை அப்படியே ஓடிக்கினேதான் இருக்கணும்” என்கிறார்.

    இருதயத்தில் இருந்த கோளாறு என்ன ஆனது? என்று வினவியபோது, “யாருக்குத் தெரியும், ரொம்ப நாளா ஆஸ்பத்திரிக்கே போவலை.. இப்ப ஹோமியோபதிதான் பார்த்துக்கிணு இருக்கேன். கடவுள் புண்ணியத்துல எந்தப் பிரச்சனையும் இல்ல..அப்பப்ப முடியாமப் போனா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தாக்கா சரியாப்பூடுது.. என்னாங்க எல்லா கடமையும் முடிச்சாச்சு, இனிமே வாழற ஒவ்வொரு நாளும் போனசுதானே.. அதான் எதைப்பத்தியும் கவலைப் படறதே  இல்லைங்க…” என்கிறார் பூரிப்புடன்.

    வயதாகிவிட்டபடியால் பொட்டி தூக்கி தேய்க்க சிரமமாக இருப்பதால், இன்று கூலிக்கு ஆள் போட்டுக்கொண்டு தொழிலை கவனித்துக் கொள்வதாகச் சொல்லும் இவர்களின் வருமானம் நாளொன்றுக்கு சராசரியாக 1000 ரூபாயாம். அந்தப் பகுதியில் இருக்கும் பெரும்பாலானவர்களுடன், பாசமும், நேசமும் கொண்டு குடும்பத்தினர் போலவே பழகிவரும் நாகம்மாவைப் பார்க்கும் வேளையில், இவருடைய தன்னம்பிக்கை, இருதய நோயின் தீவிரத்தைக்க்கூட கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    இனிமேலாவது சற்று ஓய்வெடுக்கலாமே என்று கேட்டபோது, “இப்ப இன்னா  58 தானே ஆவுது, ஓய்வெடுக்குற வயசா இது..? இன்னும் காலம் அதுக்கு நிறைய இருக்கே..” என்கிறார் சர்வ சாதாரணமாக. 70 வயது கணவர் இன்றும் அதே குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் பணிக்கு வந்து இயன்றவரை உழைப்பதைக் காணும் மனைவிக்கும் இது போன்ற எண்ணம் தோன்றுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே!

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப்பறிப்போமா! (3)

    பவள சங்கரி

    நிலையான குறிக்கோளும், தெளிவான சிந்தையும்!

    நாம் எல்லோருமே வாழ்க்கையில் வெற்றியாளர்களாக இருப்பதையே பெரிதும் விரும்புகிறோம். எங்கு வெற்றி, எதில் வெற்றி என்று நிலையான ஒரு குறிக்கோள் இருந்தால்தானே அந்த வெற்றிப் பாதையை நெருங்க முடியும். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை என்பது இலக்கு இல்லாத ஓர் பயணம் போன்றது. மேலோட்டமாக, பொத்தாம் பொதுவாக ஒரு குறிக்கோள் என்பதைவிட உறுதியான மற்றும் நிலையானதொரு குறிக்கோளைக் கொண்டிருத்தல் வேண்டும். அதற்குத் தெளிவான சிந்தனை வேண்டும். நாம் சாதிக்க நினைக்கும் விசயங்களை முதலில் பட்டியலிட வேண்டும்.

    உதாரணமாக நம் இலட்சியம் குடியிருப்பதற்கு ஒரு அழகான வீடு கட்ட வேண்டும் என்றால், அந்த வீடு எந்த அளவில், எந்த இடத்தில், அதாவது நகரத்தின் மையப் பகுதியிலா அல்லது  நகர எல்லையை விட்டு அமைதியான ஒரு பகுதியிலா என்பது போன்றதோடு அதற்கான செலவு எவ்வளவு ஆகும் போன்ற அனைத்தையும் தெளிவாகப் பட்டியலிட வேண்டும். இதில் மிக முக்கியமானது நம் சக்திக்கு உட்பட்ட இலட்சியமாக இருக்க வேண்டியது. நம் தகுதிக்குத் தகுந்த குறிக்கோளை நிர்ணயிக்க வேண்டியது அவசியம். ஒரு சிறிய வாடகை வீட்டில் குடியிருக்கும் ஒரு அரசாங்கப் பணியில் இருப்பவரின் ஆசை அதைவிட சற்றே பெரிதான, கொஞ்சம் அதிகமான வசதிகளுடன் கூடியதான் ஒரு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற தெளிவான குறிக்கோள் உடையவராக இருந்தால் அது சாத்தியமாவதில் பெரிய பிரச்சனை இருக்காது. தாம் செய்யும் வேலையை நல்ல விதமாகச் செய்வதோடு, கூடுதலான நேரப் பணியையும் (overtime) ஏற்றுக் கொள்ளலாம். எந்த வங்கியில் குறைந்த வட்டியில் கடன் கொடுக்கிறார்கள், அதைத் திருப்பிச் செலுத்தும் வழி எந்த அளவு சாத்தியம் போன்ற அனைத்தையும் தெளிவாகத் திட்டமிடல் அவசியம். இப்படி திட்டமிட்ட விசயங்களைத் தெளிவாக ஒரு குறிப்பேட்டில் பதிவிட வேண்டியதோடு அதனைத் தாமும், தம் குடும்பத்தாரும் அன்றாடம் அதிகமாகப் புழங்கும் இடத்தில் கண்ணில் படும்படியாக வைக்க வேண்டியது அவசியம். இது கேட்பதற்கு நகைச்சுவையாக இருப்பது போல இருக்கலாம். ஆனால் பல வெற்றியாளர்கள் இது போன்ற வழிமுறைகளை பின்பற்றியிருக்கிறார்கள் என்பது விசாரித்துப் பார்த்தால் அறியலாம். ஒரு வீடு கட்டுவது என்பது அந்த குடும்பத் தலைவன் மற்றும் சம்பாதிக்கும் மனைவி ஆகிய இருவரின் கையில் இருந்தாலும், ஓய்வு பெற்ற பெற்றோர் மற்றும் சிறிய குழந்தைகள் ஆகியோருக்கும் இந்த இலட்சியம் அறிந்திருந்தால் குடும்பத்திலோ அல்லதுதனிப்பட்ட முறையிலோ தேவையற்ற அதிகப்படியான செலவினங்களைக் குறைத்தும், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தும் அந்த இலட்சியத்தை அடைவதற்கு பெரிதும் துணையாக இருப்பார்கள். அந்த இலட்சியத்தை முழுமையாகவும், சிறப்பாகவும் அடைவது எப்படி?

    கற்பனைக் குதிரையைத் தட்டிவிடுங்கள்!

    ஆம், மனோத்தத்துவ நிபுணர்களும் சொல்லக்கூடிய எளிய வழிகள் இவைதான். அதாவது நம்முடைய இலட்சியத்தின்மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருத்தல் அவசியம். இதனை தியானம் என்றும் கொள்ள்லாம். அன்றாடம் விடியலிலோ அல்லது நமக்குக் கிடைக்கும் எந்த ஒரு அமைதியான, தொந்திரவு இல்லாத சூழலிலோ தனிமையில் அமர்ந்து நம் இலட்சியம் குறித்த ஆழ்ந்த கற்பனையை வளர்க்கலாம். வீடு கட்ட வேண்டிய இடத்தை திட்டமிட்டு வைத்திருப்போமே அங்கிருந்து ஆரம்பிக்க்லாம் நம் கற்பனையை. அடுத்து அந்த வீட்டின் அடித்தளத்திலிருந்து ஆரம்பித்து நாம் விரும்பும் வகையில் கொஞ்சம், கொஞ்சமாக அந்தக் கட்டிடத்தை மேலெழும்பச் செய்யலாம். இறுதியில் என்ன விதமான மர வேலைப்பாடுகள் மற்றும் அழகுபடுத்துதல், வண்னம் பூசுதல் வரை அனைத்தையும் கற்பனையில் முழுமையாக, அழகாக செய்து முடிக்கலாம். வெளிப்படையாகச் சொல்லும்போது மலைப்பாக இருக்கும் இந்த விசயம், நம் ஆழ்மனதில் அமைதியாக அசை போடும்போது மிக எளிதாகத் தெரியும். காரணம் நம் ஆழ்மனதின் சக்தி மிகவும் அதிகம் என்கிறார்கள் மனோத்தத்துவ வல்லுநர்கள். ஆம், கற்பனைக் குதிரையின் வேகம் மிகவும் அதிகமாம். அதாவது நிழற்படங்களாகப் பதிவு செய்வதை நம் ஆழ்மனம் எளிதாக பதிவேற்றிக் கொள்கிறது என்கிறார்கள். வெற்று நினைவுகளை ஆழ்மனதில் பதிவேற்ற முடியாது. அதேசமயம் மனப்படங்களாக அதைச் செலுத்தும்போது  நம் ஆழ்மனம் அதைச் சரியாக உள்வாங்கிக் கொள்கிறது.  ஆக நாம் செலுத்துகிற மனப்படங்கள் தெளிவானதாக இருக்கும் வகையில் அதற்கான செயல்வடிவம் பெற ஆரம்பித்துவிடுகிறது அது. நம்மை சுறுசுறுப்புடன் அதற்கான பணியில் முழுமையாக ஈடுபடச் செய்கிறது.

    விளையாட்டோ, கல்வியோ, தொழிலோ சுற்றுலாவோ இப்படி எந்தத் துறையாக இருந்தாலும், இந்தக் கற்பனைக் குதிரையைத் தட்டிவிடும் திட்டம் வெற்றி காண்கிறது என்பது பல வெற்றியாளர்களின் கருத்தாகவே உள்ளது. அன்றாடம் நாம் செயல்படுத்தக்கூடிய எந்தவொரு சிறிய விசயமாக இருந்தாலும், இயன்றவரை இந்த முறையில் ஆழ்மனத்தில் படமாக செலுத்திப் பிறகு செயல் வடிவம் கொடுக்கும்போது அச்செயல் மிகச் சிறந்த முறையில் நடைபெறுவதை நம் அனுபவத்தில் உணர முடியும்.

    வெற்றியின் இரகசியத்தை உணர்ந்து கொண்ட நாம் இன்றிலிருந்தே அதற்கான முயற்சியை தொடங்குவோமே. முழுமையான குறிக்கோளை நிர்ணயம் செய்து, அதனைத் தெளிவான திட்டமாகத் தீட்டிக்கொண்டு, நம் கண்ணில் படும்படியாக வைத்துக் கொண்டு, அன்றாடம் அதனை ஆழ்மனத்தில் படமாக செலுத்திக் கொண்டு, நாளுக்கு நாள் அதனை புதுப்பித்துக் கொண்டே வாருங்கள். அதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபடுங்கள். அதனை நிறைவேற்றும் சக்தி தானாகக் கிட்டும் என்பதில் ஐயமில்லை. உங்கள் இலட்சியத்தை எளிதாக எட்டிவிடுவீர்கள்!

    மேலும் தொடருவோம்

    படங்களுக்கு நன்றி:

    http://inspiring-pictures.com/

    Share
  • காதலின் வேதம்

    பவள சங்கரி

    காதலின் கீதம் – Song Of Love (Khalil Gibran) – மொழிபெயர்ப்பு

    காதலர்களின் விழிகளும் யானே
    இச்சையூட்டும் இன்பரசமும் யானே
    மற்றுமந்த உளத்தின் ஊட்டமும் யானே

    விடியலில் மலரும் மனமும்  முத்தமிட்டுத்தம் அமுதகத்தின்மீது கிடத்திக்கொள்ளும் அக்கன்னியவளையும் கொண்டதோர் ரோசாவும் யானே.

     

    நிலையான செல்வத்தின் இல்லமும் யானே
    இன்புறவின் துவக்கமும் யானே.
    சாந்தம் மற்றும் கலக்கமின்மையின் தொடக்கமும் .யானே
    இரமியத்தின் இதழின் மீதான் மென்னகையும் யானே
    எம்மைத் தொடர்ந்து பற்றும் தருணமதிலந்த யுவன்தம் கடமையையும் மறந்து, அவர்த்ம் முழு வாழ்வும் இன்பக்கனாவின் நிதர்சனமாகிறது.

     

    பாவலரின் எழுச்சியும் யானே,
    கலைஞனின் வெளிப்படுத்துகையும் யானே,
    மற்றுமந்த இசைக்கலைஞனின் அருட்கிளர்ச்சியும் யானே

     

    கருணைநிறைத் தாயினால் நேசிக்கப்பட்டதோர் குழவியின் இதயமதின் புனிதாலயமும் யானே.

     

    ஓர் இருதயத்தின் கதறலில் தோன்றுபவன் யான்;
    ஓர் கோரிக்கையதைத் தவிர்ப்பவன் யான்;
    எம் அமைவு தேடுமந்த இருதயத்தின் இச்சையதை;
    அஃது குரலின் வெற்றுக் கோரிக்கையை விலக்குகிறது.

     

    ஆதாமிற்கு ஏவாளின் மூலமாகவே காட்சியளித்தேன் யான்.
    நாடு கடத்தலே அவர்தம் தேர்வாக இருந்தபோழ்தும் எம்மையே சாலமனுக்கு வெளிப்படுத்தியதோடு
    எம்மால் அவர் இதமும் பெற்றார்.

     

    ஹெலேனாவைப் பார்த்து யான் புன்னகைத்ததால் தர்வாடாவை அழித்தாளவள்:
    இருப்பினும் கிளியோப்பாட்ராவிற்கு யான் மகுடம் சூட்டியதால் அந்த நைல் நதிக்கரையில் அமைதி நிலவியது.

     

    காலங்களைப் போன்றவன் யான் – இன்று கட்டமைந்து நாளை அழிந்து படக்கூடியது;
    ஆக்கலும், அழித்தலும் புரியுமோர் இறையைப் போன்றோன் யான்;
    ஓர் ஊதாப்பூவின் பெருமூச்சைக் காட்டிலும் இனிமையானவன் யான்;
    பொங்கியெழும் புயலைக் காட்டிலும் உக்கிரமானவன் யான்.

     

    வெகுமதிகள் மட்டுமே வசீகரிப்பதில்லை எம்மை;
    பிரிவு ஊக்கமிழக்கச் செய்வதில்லை எம்மை;
    இன்மையும் செதுக்குவதில்லை எம்மை;
    இழப்பச்சம் மெய்ப்பிப்பதில்லை எம் விழிப்புணர்வை;
    உன்மத்தமும் எமக்கோர் ஆதாரமாவதில்லை.

     

    ஓ நாடிச்செல்வோரே, உண்மையை ம்ன்றாடும் உளமையே யான்;
    மேலும் தேடலிலும், பெறுதலிலும் மற்றும் எம்மைக் காப்பதிலும் உள்ள உம் நேர்மையே எம் நடத்தையைத் தீர்மானிக்கலாம்

     

    SONG OF LOVE – WATCH IN YOUTUBE

     

    http://youtu.be/-FczCTPJ_YM

     

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (2)

    பவள சங்கரி

    நம் சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்க்கையை  அமைத்துக் கொள்வது மட்டுமே வெற்றிகரமான வாழ்க்கையின் பூரண இரகசியம். இந்த உண்மையை உணர்ந்தவர்கள் வாழ்வில் மலர்ச்சி நிச்சயம். – சுவாமி விவேகானந்தர்

    வெற்றிப் பாதையில் பயணிக்க விரும்புபவர் க்டைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஒரு அம்சம், மனதில் சலனமில்லாத மகிழ்ச்சி. ஆம், தெளிந்த நீரோடை  போல மனது தெளிவாக இருக்க வேண்டுமானால் சில அடிப்படைக் கொள்கைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. இதில் மிக முக்கியமானதொன்று, இருப்பதை எண்ணி மகிழ்வுறாமல், இல்லாததை எண்ணி ஏக்கம் கொள்வது. ஆம், வாழ்க்கையில் அனைத்தும் எனக்குக் குறைவில்லாமல் கிடைத்தால்தான் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று எண்ணினால் இந்தப் பிறவியில் அது சாத்தியமில்லை. காரணம் குறையில்லாத மனித வாழ்க்கை என்பது இதுவரை இல்லை என்பதுதான் சத்தியம். நம்முடைய மகிழ்வான பொழுதுகளை முழுவதுமாக தின்னக்கூடிய வல்லமை பெற்றது, நம்மிடம் இல்லாத ஒன்றை எண்ணி ஏக்கம் கொண்டு நிம்மதியைத் தொலைப்பதுதான். மகிழ்ச்சி என்பது என்றுமே இன்னொருவரால் வரக்கூடியது அன்று. நமக்காக நாமே உருவாக்கிக்கொள்வதே நிலையான மகிழ்ச்சி. மகிழ்ச்சியோ, துக்கமோ இதில் எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம்  என்பது நம்மிடமே உள்ளது.

    நண்பர் ஒருவர் பல நாட்களாக கொள்முதல் செய்து வைத்திருந்த  சரக்கிற்கு பெருத்த  லாபம் கிடைக்கப்போவதாக கற்பனை செய்துகொண்டு மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக சந்தையின் நிலவரம் தலைகீழாக மாறிவிட, அவர் எதிர்பார்த்த இலாபம் பாதியாகக் குறைந்துவிட்டதேயொழிய நட்டம் ஏற்படவில்லை. ஆனாலும் அவர் தாம் எதிர்பார்த்த இலாபம் கிடைக்காமல் போனதற்கு உள்ளம் நொந்து, தான் ஒரு அதிர்ஷ்டக்கட்டை, எப்போதுமே தான் நினைப்பது எதுவுமே நடப்பதில்லை என்று வேதனையில் ஆழ்ந்தால் அது யாருடைய தவறு? கிடைத்த இலாபத்திற்கான மகிழ்ச்சியைக் கொண்டாடாமல், கிடைக்காமல் போனதற்காக மகிழ்ச்சியைத் தொலைத்தால் அதற்கு அவரேதானே பொறுப்பாக முடியும். ஆக மகிழ்ச்சி என்பது நம் கையில்தானே இருக்கிறது.

    மகிழ்ச்சிக் கணக்கைக் கூட்டுங்கள்!

    மகிழ்ச்சிக் கணக்கைக் கூட்டும் வழி மிகவும் எளிமையானது. அதற்கு முதல் படியாக நம்முடைய தேவைகளைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டியது அவசியம். ஆம் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் இடமளிக்கட்டும் உங்கள் ஆசைகள். இந்த எண்ணத்தில் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம். வழி மாறிய படகில் சிக்கிய ஒருவர் தனித்தீவிலிருந்து  ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டு வந்தால் எப்படியிருக்கும் அவருடைய மனநிலை. அவருடைய தேவைகள் என்னவாக இருக்கும். அவர் இழந்த, உயிர் வாழ அத்தியாவசியத் தேவையான அந்த சுத்தமான குடிநீரும் மற்றும் நல்ல உணவும்தானே? இதற்கான அர்த்தம் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு இது இரண்டும் மட்டும் போதும் என்பதில்லை. உயிர்வாழத் தேவையான அடிப்படை வசதி கிடைத்துவிட்டால் மேற்கொண்டு நாம் பெறும் ஒவ்வொன்றும் நம் மகிழ்ச்சிக் கணக்கில் சேர்ந்துகொண்டே போக வேண்டியதுதான் இல்லையா? அப்படி உணர்ந்து நம் உள்ள வங்கியில் மகிழ்ச்சிக் கணக்கைக் கூட்டிக்கொண்டே போனால் வெற்றிக்கான பாதை நம்முன் பரந்து விரியும்.

    அடுத்து நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியங்களையும், அது எத்துனை சிறிதாயினும் சரி, அதனையும் நம் மகிழ்ச்சிக் கணக்கில் கூட்டிக் கொள்ளலாம். நல்ல வாழ்த்துக்களைப் பெற்றுத்தரும் நல்ல எண்ணங்களுடான சேவைகள் ஒரு மிகப்பெரும் வரப்பிரசாதம். அதை அனுபவிக்கப் பழகிவிட்டால் மகிழ்ச்சிக் கணக்கின் எண்ணிக்கை வெகு விரைவில் கூடிவிடும்.

    வாழ்க்கையைத் தள்ளி நின்று இரசிக்கப் பழகுவதுதான் வேதனையை ஒதுக்கி, மகிழ்ச்சியை அணைப்பதற்கான எளிய வழி. நம் பிரச்சனைகளைத் தள்ளி நின்று பார்க்கும்போது அது மிகச் சாதாரணமானதாகத் தெரிவதோடு, அதற்கான தீர்வு காண்பதும் எளிதாகிவிடும். குழந்தையின் மழலை, மலர்களின் மணமும், அழகும், இயற்கையின் இனிமை, பறவைகளின் கானம் இப்படி இரசித்து மகிழ எத்தனையோ இருக்கிறதே.

    நம்முடைய மகிழ்ச்சிக் கணக்கு கூடிக்கொண்டே வரும்போது மனதில் தோன்றும் நிம்மதி நம்மை சரியான பாதையில் வழிநடத்தி எளிதாக வெற்றி கொள்ளச் செய்யும் என்பதில் ஐயமேது?

    பெற்ற சிறிய வெற்றியையும் மனம்கிழ்ந்து கொண்டாடப் பழகினாலே உற்சாகம் கொப்பளிக்காதா..  அடுத்த வெற்றிக்கும் அதுவே அச்சாரம் போடுமே. ஒவ்வொரு சிறிய வெற்றியும் நமக்கான ஆசிர்வாதம். அந்த ஆசிர்வாதத்தை மனதார ஏற்று நன்றி சொல்லும் போதும் உள்ளம் உவகை கொள்ளுமே. இப்படி மகிழ்ச்சியைக் கூட்டிக் கொண்டே போனால் வெற்றியின் ஒவ்வொரு படியையும் கடந்து கொண்டேயிருப்பதாகத்தானே அர்த்தமாகிறது.

    தொடரும்

    படத்திற்கு நன்றி :

    http://rishikajain.com/2012/02/01/happiness-will-never-come-to-those-who/

    Share
  • வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போமா! (1)

    பவள சங்கரி

    ’நாம்’ நாமாகவே இருப்பதற்கு நம் எண்ணங்களே காரணம். நெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும் நம்மை நல்வழிப்படுத்தி, வெற்றிக்கனியை எட்டிப் பறிக்கச் செய்யும் என்ற நம்பிக்கை உடையவர் நீங்கள் என்பது உண்மையானால் இத்தொடர் உங்களை அக்காரியத்தை மென்மேலும் ஊக்குவிக்க வல்லது என்பது சத்தியம். நம்பிக்கை என்ற ஒன்றே வாழ்க்கையில் நம்மை உயரத்திற்கு இட்டுச் செல்லக்கூடியது. நம் எண்ணங்கள் மேம்படும்போது நம் வாழ்க்கைத் தரமும் உயரும். நம் எண்ணங்களை எப்படி மேம்படுத்தப் போகிறோம் என்பதையே இத்தொடரில் விவாதிக்கப் போகிறோம். நல்ல எண்ணங்கள் மட்டுமே நம் சுய வல்லமையை ஊக்குவிக்கும் ஒரு உன்னத காரணி.

     உறுதியான எண்ணத்தால் உயர்ந்து நிற்போம்!

    நற்சிந்தையாலும், நல்ல ஆரோக்கியத்தினாலும், நல்லொழுக்கத்தினாலும் உயர்ந்து நிற்பதால் வெற்றிக்கான அடித்தளத்தை உறுதியாக்கிவிட்டோம் என்ற நம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்ளும்போது இடையில் வரும் தடைகளை எளிதாகத் தகர்த்தெறியும் வல்லமை பெறுகிறோம். இதனால் உங்கள் பயணத்தில் அன்பைத் தவிர வேறு எந்தக் காரணத்திற்காகவும் எவருக்காகவும் நீங்கள் தலை வணங்கத் தேவையில்லை..

    முதலில் நம் உடலளவில் உயர்ந்து நிற்போமே. ஒரே ஒரு உடல் மொழியால் ஓராயிரம்  எண்ணங்களை உணர்த்தக்கூடும். அத்தகைய உடலை முதலில் சரியாகக் கையாள வேண்டியது அவசியம். முத்ற்பார்வையிலேயே வெளித்தோற்றம் மட்டுமே ஒருவரை எடை போடச் செய்கிறது. கருப்போ, சிகப்போ, நெட்டையோ, குட்டையோ, செல்வந்தரோ, வறியவரோ எவராயினும் நம் புறத்தோற்றம் எப்படி இருந்தாலும், நாம் அதை வெளிப்படுத்தும் விதமே நம்மைப் பற்றிய மதிப்பீட்டை உருவாக்குகிறது.

    தன்னம்பிக்கை உடைய ஒருவர் தம் தோற்றம் மூலமே அதனை எளிதாக அடுத்தவரை உணரச் செய்ய முடியும். வளைந்து, நெளிந்து, கூனிக் குறுகி ஒருக்காலும் நிற்க மாட்டார் தன்னம்பிக்கை உடையவர். பாரதியின் நிமிர்ந்த நன்னடை பார்த்தவுடன் மரியாதை அளிக்கக்கூடிய தோற்றப் பொலிவைக் கொடுக்கக் கூடியது. அந்த நிமிர்ந்த நன்னடைக்கு மனதில் நம்பிக்கை வேறூன்றியிருக்க வேண்டும். அந்த நம்பிக்கைக்கு அச்சாரம் என்பது நேர்மையும், சுய கட்டுப்பாடும், உண்மையான உழைப்பும்தான்.

    தெருவோரத்தில் மசாலாப் பொறிக்கடலை கடை போட்டு பிழைப்பு நடத்தும் ஒருவர், சுறுசுறுப்பான வியாபார நேரத்தில், பம்பரமாய்ச் சுழலுகிறார். ஒரு பாத்திரத்தில் இரண்டு கை பொறியை அள்ளிப்போட்டு அதில் துருவிய கேரட், பீட்ரூட், கொத்தமல்லி இலைகள், கொஞ்சம் புதினாத் தொக்கு, எல்லாம் போட்டு, இறுதியாக மசாலாப் பொடியும், மிளாகய்த்தூள், உப்பு கலந்த கலவையையும் அப்படியேத்தூவி, அதன் மீது சிலத் துளிகள் எலுமிச்சைச் சாறும் தெளித்துக் கொடுப்பார். சுவையான சுவைதான் போங்கள். நாம் இங்கு அந்தச் சுவையில் மெய்மறந்து இருக்கும் போது, அந்த வழியாகக்  கடந்து போகும் ஒரு இரு சக்கர வாகன ஓட்டியின் கண்களில் பறந்து போய் விழுந்த அந்த மிளகாய்ப்பொடி படுத்திய பாடு, மனிதர் ஒரு பெரிய விபத்திலிருந்து தப்பி வந்தார் பாவம். இதை அறியும்போது அந்த மசாலாப்பொறிக் கடைக்காரர் எப்படி நிமிர்ந்த நன்னடையுடன் நடமாட இயலும். அவர் தூவும் அந்த மசாலாப் பொடிகள் அடுத்தவரின் பார்வைகளை பதம் பார்க்காதவாறு ஒரு மறைப்பான் வைத்து தம் சமுதாய அக்கறையை வெளிப்படுத்தியிருந்தால் அவர் அடுத்தவர் முன்போ, தம் மனசாட்சியின் முன்போ கூனிக்குறுகி நிற்க வேண்டியதில்லை. அடுத்தவர் வந்து முறைப்படுத்த வேண்டும் என்று எண்ணாமல் சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டாலே தலை நிமிர்ந்து நிற்கலாமே.

    தூக்கணாங்குருவிக் கூட்டைப் பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு பெருத்த ஆச்சரியமாக இருக்கும். மரத்திலோ, குட்டிச் சுவற்றிலோ, கிணற்றினுள்ளோ,  அப்படியே தொங்கிக் கொண்டிருக்கும் அதை அது எப்படித்தான் கட்டியிருக்குமோ என்று. எத்தனை பொறுமை வேண்டும். ஒவ்வொரு புல்லாகக் கொண்டு வநது கீழே விழுந்தாலும் மீண்டும், மீண்டும் பொறுக்கி எடுத்து கூடாக்கிவிடும். காற்று பலமாக வீசினாலும், ஆடுமே தவிர அறுந்து விழாது. ஒரு சின்ன குருவிக்கு இருக்கும் அந்த வல்லமை ஆறறிவு படைத்த நமக்கு இல்லாமலா போகும்?

    தொடரும்

    படத்திற்கு நன்றி :

    http://www.great-inspirational-quotes.com/stand-tall-like-the-sunflower.html

    Share
  • பொன் வண்டு (இறுதிப் பகுதி)

    பவள சங்கரி

    அன்பு நண்பர்களே,

    பல நாட்களுக்கு முன்பு ‘பொன் வண்டு ‘ என்ற இந்த சிறுகதையின் முடிவை எழுதுமாறு ஒரு சவால் விட்டிருந்தோம். அதற்கான சரியான முடிவு கிடைக்காதலால் நானே எழுதி முடித்திருக்கிறேன். இதற்கு வேறு விதமான முடிவு யாராவது அளித்தாலும் மகிழ்ச்சி. இதோ என்னுடைய முடிவுப் பகுதி. நன்றி .http://www.vallamai.com/literature/short-stories/4737/

    உட்கார்ந்து சற்று சாய்ந்து இளைப்பாற நினைத்து மெதுவாகக் கண்ணை மூடியவள்……..அதற்குப் பிறகு நடந்தது எதுவும் அவள் அறிந்தாளில்லை. அருகில் இருந்த மாலா மட்டும் ஒயிலாவிடம் இருந்த பெரும் மாற்றத்தைக் கவனித்துக் கொண்டிருக்கும் போதே, திடுமென மூக்கிலிருந்து இரத்தம் வெள்ளமாக பெருக ஆரம்பித்தது…..மாலாவின் மீது அப்படியே சரிந்து விட்டாள். மாலா போட்ட கூச்சலில் பேருந்தின் ஓட்டுநர் அப்படியே பேருந்தை ஓரம்கட்டி நிறுத்தினார். நடத்துநர் ஓடி வந்து பார்த்து சூழலைப் புரிந்து கொண்டு கூடியிருந்த மாணவர்களை விலக்கி விட்டு நேரே அரசாங்க மருத்துவ மனைக்கு பேருந்தை செலுத்தச் செய்து ……..பின் நடந்ததெல்லாம் சாமான்ய மக்கள் உணர முடியாத ஒரு அமானுஷ்ய நிகழ்வுகள் ஆகிப் போனது!ஆன்மா என்ற ஒன்று அழிவில்லாதது……..உயிர் என்பது என்றுமே அழிவில்லாதது……..இதற்கான ஆதாரமே ஒயிலரசியின் சரிதம் ஆனது.

    பி.கு. நண்பர்களே, இக்கதையின் இறுதிப் பகுதியை நீங்கள் எழுதலாம். இக்கதையின் போக்கிலேயே தொடருங்கள் நண்பர்களே….வாழ்த்துகள்.சவாலுக்கு சவால்!

    பொன் வண்டு  – பகுதி (2)

    நேரே அரசாங்க மருத்துவமனைக்கு பேருந்தை செலுத்தச் செய்தார்.  தீவிர சிகிச்சைப் பிரிவில்  மருத்துவர்களின் இடைவிடாத போராட்டத்தையும் மீறி, கூட்டை விட்டுப் பிரிந்தது உயிர். மூளையில் ஏற்பட்ட கட்டியின் காரணமாக இதுபோன்ற திடீர் மரணம் இலட்சத்தில் ஒருவருக்கு வரக்கூடும் என்று மருத்துவர்களின் அறிக்கை எளிதாக சொல்லி முடித்துவிட்டது.

    காலையில் தங்க ரதமாக அனுப்பிய மகள், வெள்ளை துணி சுற்றிய மூட்டையாக வந்து பட்டாசாலையில் கிடத்தப்பட்டபோது ஊரே சேர்ந்து எழுப்பிய ஒப்பாரி விண்ணைப் பிளந்தது.

    மூன்று நாட்கள் அன்ன ஆகாரமும், சுய நினைவும் இல்லாமல் கிடந்த ஒயிலாவின் தாய், அசந்து உறங்கிக் கொண்டிருந்த விடிகாலைப் பொழுது. சட்டென எழுந்தவள் “ஒயிலா….. வந்துட்டியாம்மா.. வாடா கண்ணு, இதோ வாரேன்… “ என்று குரல் எழுப்பியபடி மளமளவென சுருட்டிப்பிடித்துக் கொண்டு வாசலை நோக்கி ஓடினாள். மருமகளின் குரல் கேட்டு அருகில் இருந்த அப்பத்தாவும், மற்றும் சிலரும் விழித்துக் கொண்டு என்ன நடக்கிறது என்று புரியாமல் அரை தூக்கத்தில் உட்கார்ந்திருந்தனர். மருமகள் இந்த நேரத்தில் எழுந்து வாசலை நோக்கி ஓடுவதைப் பார்த்த அப்பத்தா வேகமாக எழுந்து லைட்டைப் போட்டுவிட்டு மணியைப் பார்த்தார். விடியற்காலை 1 மணி. இந்த நேரத்தில் எங்கு போகிறாளோ என்று பின்னாலேயே ஓடினால், கதவைத் திறந்து கொண்டு , வெளியே தோட்டம் நோக்கிக் செல்லும் பாதையில் வேகவேகமாக நடந்து கொண்டிருந்தாள் அவள்.

    “அடக்கடவுளே.. இவளுக்கு என்ன ஆச்சோ தெரியலியே… இந்த நேரத்துல தோட்டத்துப் பக்கம் போறாளே… டேய்… பழனிச்சாமி.. இங்கன வாப்பா.. வந்து உம்பட பொண்டாட்டி பண்ற வேலையைப் பாரு”  என்று கூச்சலிட்டதைக் கேட்டு, ஒயிலாவின் தந்தையும்  “என்னம்மா.. என்னாச்சு..” என்று  ஓடி வந்தார். விசயம் புரிந்து தானும் வெளியே தோட்டத்தின் பக்கம் வேகமாக மூச்சிறைக்க நடந்து கொண்டிருக்கும் மனைவியின் பின்னால் ஓடிச்சென்று பிடித்து நிறுத்தினார்.

    “அட…விடுங்கோ.. ஒயிலா கூப்பிட்டா, பாத்துப்போட்டு வாரேன். அழுதுட்டிருக்கா குழந்தை. தனியா இருக்க பயமா இருக்குதாம்.. நான் போய் வூட்டுக்கு கூட்டியாறேன்”

    மகளை இழந்த சோகமே வாட்டி எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் மனைவியின் இந்த செயலும் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. துக்கம் தாங்காமல் பாவம் ஏதேதோ செய்கிறாளே என்று வருத்தத்துடன், அவளை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வருவதற்குள் போதுமென்றாகி விட்டது. வீட்டிற்கு வந்தும் திரும்பத் திரும்ப ”ஒயிலா அழுதிட்டிருக்காள், நான் போய் பார்க்கிறேன் “ என்று தோட்டம் பக்கம் போகவே துடித்துக் கொண்டிருந்தவளை தடுத்து நிறுத்துவதே பெரும்பாடாகிவிட்டது. திடீரென்று மகளை இழந்த சோகம் பாவம் மூளையை பாதிக்கிறது, நான்கு நாட்கள் போனால் சரியாகிவிடும் என்று நினைத்தாலும், அன்று போலவே அடுத்தடுத்த நாட்களும் இரவு நேரங்களில் அந்தத் தாயின் செய்கையை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமான காரியமாகவே இருந்தது. காலம் மட்டுமே இதற்கான தீர்வை அளிக்க முடியும் என்று பொறுமையாக இருந்தாலும் இது அப்படியான ஒரு பிரச்சனை அல்ல என்பது போன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்தபோதுதான் தெரிந்தது!

    தாயைப் போலவே இளைய மகள் மஞ்சுவும் அன்று விடியலில் எழுந்து ”அக்கா தோட்டத்தில்தான் இருக்காளாம்….. வா அப்பத்தா போய் பார்க்கலாம். “ என்று அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டாள். பத்தாம் நாள் காரியங்கள் செய்து சாந்தி பூசை முடிந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் சொல்ல ஆரம்பித்திருந்தார்கள்.

    மறுநாள் விடியலில் “அப்பத்தா… அப்பத்தா… எழுந்திரு அப்பத்தா…. உனக்குக்கூடவா என்னைத் தெரியல…. “ என்று ஒயிலா முனகும் ஓசை கேட்டு எழுந்து உட்கார்ந்துன் கொண்டவர் சுற்றி பார்த்துவிட்டு, வெறும் பிரம்மைதான் என்று திரும்ப படுத்து உறங்க ஆரம்பித்த நேரம், ”அப்பத்தா, நான் நம்ம தோட்டத்திலேயேதானிருக்கேன். நாளைக்கு அண்ணன் என் பொறந்த நாளைக்காக வாங்கி வச்சிருக்கிற துணியை வேப்பமரத்தடி கன்னிமார் சாமியின் ஐந்தாவது சிலைக்கிட்ட வச்சி பூசை பண்ணுங்க. இனி நம்ம குடும்பத்துக்கு எந்த குறையும் வராம நான் காத்து நிப்பேன்..” என்று ஒயிலா பேசியது கனவு போல இருந்தாலும் தெள்ளத் தெளிவாக இருந்தது.

    பத்தாம் நாள் வீடு வாசல் மெழுகி, சுண்ணாம்பு பூசி, வீடு முழுவதும் கோமியம் தெளித்து, படையல் போடுவதற்கான ஆயத்தங்கள் இரண்டு நாட்களாக நடந்து கொண்டிருந்தது. பொதுவாக கன்னி கழியாமல் இறந்து போகும் பெண்களுக்கு பெரிய சாங்கியமெல்லாம் செய்ய மாட்டார்கள். பத்தாம் நாள் கன்னிமார் பூசை செய்து முடிப்பதோடு சரி.

    ஒயிலா தங்களை விட்டுப்பிரிந்து ஒன்பது நாட்கள் ஆகிவிட்டது என்று நம்பவே முடியவில்லை. தாயும் மெல்ல தேறி வருகிற நேரம். அன்று மஞ்சு அப்பத்தாவிடம் வந்து அருகில் அமர்ந்து கொண்டு,

    “அப்பத்தா… அக்கா நேத்தும் ராத்திரி வந்துது அப்பத்தா. “

    “என்ன சொல்ற கண்ணு. அப்டீல்லாம் சொல்லக்கூடாது. சும்மா மனப்பிரமை அது. அக்கா நம்மளையெல்லாம் விட்டுப்போட்டு சாமிக்கிட்ட போயிட்டா. இனிமே வரவே மாட்டா….”

    “இல்லை அப்பத்தா. அக்கா சொல்லிச்சு. அக்கா தோட்டத்துல கன்னிமார் சாமி இருக்குற இடம் இருக்குதுல்ல.. அங்கனதான் இனிமே எப்பவுமே இருக்குமாம். வேற எங்கியும் போவாதாம். சாமியா இருந்து நம்மையெல்லாம் நல்லா பார்த்துக்குறேன்னு சொல்லிச்சு….”

    “ ஆமாம் அக்கா நமக்கெல்லாம் தெய்வமா நம்ம கூடத்தான் இருப்பா…”

    “அக்கா தன்னோட ரூமில ஒரு டப்பாவுல பொன் வண்டு வச்சிருக்குதாம். அதைய எடுத்து வெளிய உடச் சொல்லிச்சு. மறந்தே போயிட்டேன் பாரு” என்று சொல்லிக் கொண்டே ஒயிலாவின் அறையை நோக்கி ஓடியவளின் பின்னால் அப்பத்தாவும் சென்றார். அங்கு சென்ற மஞ்சு நேரே சொல்லி வைத்தது போல ஒயிலாவின் புத்தக அலமாரியைத் திறந்து மூன்றாவது தட்டின், இடது மூளையில் இருந்த ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பாவை எடுத்தாள். அதனுள் இருந்த பொன்வண்டு பளிச்சென்று வெளியே தெரிந்தது. அதைத் திறந்து பார்த்தபோது அந்தப் பொன் வண்டு உயிருடன் படபடத்துக் கொண்டிருந்தது.

    “பாத்தியா.. அப்பத்தா. அக்கா வந்தான்னு சொன்னா நம்ப மாட்டீங்கறயே.. பார் அக்கா சொன்ன மாதிரியே இங்க டப்பாவுல பொன் வண்டு உசிரோட இருக்குது..” என்று சொல்லிக் கொண்டே அந்த டப்பாவைத் திறந்து பொன் வண்டை எடுத்து மெதுவாக மேசைமீது வைத்தாள். வைத்த அடுத்த நொடி அது விர்ரென்று வேகமாகப் பறந்து அவர்களை மூன்று முறை சுற்றி வலம் வந்து சிட்டாகப் பறந்து விட்டது. நொடியில் அனைத்தும் நடந்து போன ஆச்சரியத்திலிருந்து மீளவே இல்லை அப்பத்தா.

    வீட்டில் படையல் போட்டு பூசை முடித்து, தோட்டத்தில் கன்னிமார் பூசை செய்வதற்காகச் சென்ற போது அங்கிருந்த ஒரு கன்னிமார் சிலையின் முன் ஒயிலாவின் கண்ணாடி வளையல்களும், அண்ணன் வாங்கிக் கொடுத்த க்கு மிகவும் பிடித்தமான கருகமணி மாலையும் இருந்தது. அது எப்படி அங்கு வந்திருக்கும் என்று ஒருவருக்கும் இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. ”ம்ம்ம்ம்ம்….. ச்ச்ச்ச்ச்….ம்ம்ம்….” என்று ரீங்காரமிட்டுக்கொண்டு அந்த கன்னிமார் சிலையைச் சுற்றி வரும் பொன் வண்டைப் பார்த்தவுடன் ஏனோ நிம்மதிப் பெருமூச்சும் வந்தது. அப்பத்தாவும், மஞ்சுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்!

    படங்களுக்கு நன்றி:

    http://badorgood.com/foto/golden-bug-189543

    http://www.photochopz.com/gallery/showphoto.php/photo/2411/ppuser/4224

    http://www.crjayaprakash.com/photography/index.php/Insects/Pon-Vandu

    Share
  • சுவாமி விவேகானந்தரின் தத்துவ முத்துக்கள்!

    பவள சங்கரி

    சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கைத் தத்துவங்கள்!

    உம்மை நேசிப்பவரை ஒருக்காலும் வெறுக்காதே!

    உமக்கு உதவியவரை ஒருநாளும் மறவாதே!

    உம்மை நம்பியவரை ஒருபோதும் ஏமாற்ற எண்ணாதே!

    15 வாழ்க்கைத் தத்துவங்கள்

    1. அன்பு மட்டுமே வாழ்க்கையின் மேன்மைக்கான வழி.

    சுயநலமில்லாத சத்தியமான அன்பு ஒன்றே அமைதியாக வாழும் வழி.

    2. உம்முடைய எண்ணமே உம்மை வழிநடத்துகிறது.

    நம் எண்ணங்களே ஒரு பொருளை அழகுபடுத்தவோ அன்றி அவலட்சணப்படுத்தவோ காரணமாகிறது. நல்ல எண்ணங்களே நல்ல செயலுக்கு வித்தாகி, உலகிற்கு ஒளியூட்டுகிறது.

    3. வாழ்க்கை சௌந்தர்யமானது.

    வாழ்க்கையின் அழகான பகுதியை நேசிக்கப் பயில வேண்டும். எல்லாம் நன்மைக்கே என்ற எண்ணம் கொளல் வேண்டும்.

    4. எண்ணம் போல் வாழ்வு.

    உம்மைக் கடவுளாக நீவிர் நினைத்தால் கடவுளாகவே ஆகிறீர். தீய எண்ணம் கொண்ட தேவதாவாக எண்ணினால் அதுவாகவே ஆகிறீர்.

    5. தளைகளை விலக்கிக் கொள்ளுங்கள்.
    உள்ளக்கோவிலில் இறை எனும் உன்னதத்தை உறையச் செய்தால், தளைகளனைத்தும் விலகி, சுதந்திரமாக உம்மை வாழச் செய்யும்.

    6. குறை கூறும் ஆட்டத்தை விளையாடேதே!
    அடுத்தவரிடம் குறை காணும் குணம் கொள்ளாதீர், உம்மால் அவரோடு இணங்கி கைகோர்த்து நடக்க முடிந்தால் நல்லது. இல்லையேல் அவர் பாதையில் அவர் செல்ல ஒதுங்கி வழிவிடுதலே உன்னதம்.

    7. உத்வும் மனப்பான்மை கொண்டிரு.
    உதவி வரைத்தன்று உதவி உதவி
    செயப்பட்டார் சால்பின் வரைத்து. (குறள் – 105)

    8. உம்முடைய நிறைவான கொள்கைகளை உயரச்செய்யும்
    உன்னத இலட்சியம் கொண்டோரின் வெற்றிக்கு உம்மால் இயன்றதைச் செய்து அவரை ஊக்குவிப்பதே சிறந்த பண்பு..

    9. உம் ஆன்மாவிற்கு செவி சாய்த்திரும்.
    உம் ஆன்மாவே உம்மை நல்வழிப்படுத்தக்கூடிய ஆசான்.

    10. நீவிர் நீவிராக இரும்.
    உங்களுடைய இயற்கைக்கு உகந்து நீங்கள் நீங்களாகவே இருப்பதே சாலச் சிறந்தது.

    11. இயலாமை என்று எதுவுமில்லை.
    நான் வலுவிழந்திருக்கிறேன் என்று எண்ணுவதும், சொல்லுவதுமே பெரிய பாவம். அடுத்தவரையும் வலுவிழந்தவர் என்று எண்ணுவதும் பாவச்செயலே.

    12. நீவிரே சக்தி உடையவர்.
    அனைத்துச் சக்திகளும் பெற்றவர் நாமே என்ற உறுதியான எண்ணம் கொண்டிருத்தல் வேண்டும்.

    13. அன்றாடம் பயிலுங்கள்.
    நம் ஆன்மாவிற்குள்ளேயே கற்க வேண்டிய பாடங்கள் பல உள்ளது. ஆன்மாவின் திரையை விலக்கி நம்மை நாம் உணர்ந்தால் அறிவின் ஒளியைக் காணலாம்.

    14. உண்மையாயிரு!
    சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும். சத்தியத்தை நிலைநிறுத்தும் பொருட்டு எதையும் இழக்கலாம். ஆனால் எதற்காகவும் சத்தியத்தை இழத்தல் கூடாது.

    15. மாற்றி யோசியுங்கள்!
    தீர்வு இல்லாத பிரச்சனை என்பதே இந்த உலகில் இல்லை. ஆழ்ந்து சிந்திந்து செயல்பட்டால அதற்கான வல்லமையை எளிதில் பெறலாம்.

    படங்களுக்கு நன்றி:

    http://www.swami-vivekanand.com/photos/

    Share
  • கொங்கு நாட்டு மகளிருக்கான சடங்குகளும், சம்பிரதாயங்களும்

    பவள சங்கரி

    இயற்கையின் படைப்புகளிலேயே மிகவும், உன்னதமானது பெண் இனம். அனைத்து உயிரினங்களுக்கும்   தனிப்பட்டதொரு மென்மையையும், அழகையும் அள்ளி வழங்கியிருப்பது கண்கூடு. அந்த வகையில் மனிதப் பிறவியில் இந்தப் பெண் இனம் பல வகையான உணர்வுகளுக்கும், அதற்குரிய சூழலுக்கும் ஆட்படுவதும் இயற்கை. இந்த இயற்கையின் விநோதத்தை அதீதமாக காட்சிப்படுத்த நினைப்பது மனிதர்களுக்கேயுரிய இயல்பாக இருப்பதே நம் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளின் முக்கிய அம்சமாக இருக்கிறது. இதில் பெரும்பாலும் நன்மைகளும், தீமைகளும் சமமாகக் கலந்து இருப்பதே நிதர்சனம். வளர்ந்து விட்ட நாகரீகத்தில் மற்றைய சில நாடுகளில் ஓரளவிற்கு இதெல்லாம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், நம் இந்திய கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் இதெல்லாம் இன்றும் வழமையாகத்தான் இருக்கிறது. வாழையடி வாழையாக கடைபிடிக்கப்படும் பழக்க வழக்கங்கள் பல அர்த்தமுள்ளதாக இருப்பினும், சில வேண்டாதவையாகவும் தேவையற்றவைகளாகவும் உள்ளது.

    பொதுவாக பெண்களின் பருவக் காலங்களை , பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை மற்றும் பேரிளம்பெண் என ஆறு வகைகளாகப் பிரித்துள்ளனர். பேதைப் பருவம் என்பது ஏழு வயது வரையிலான குழந்தைப் பருவம். பெதும்பை என்பது பதினொரு வயது வரையிலான ஒரு பருவம். அடுத்து வருவதுதான் மங்கை எனும் பூப்படையும் பருவம். மடந்தை என்பவள் திருமண வயதில் இருக்கும் பத்தொன்பதிற்கும் மேற்பட்ட பருவத்தினள். அரிவை எனும் பருவம் இருபத்தைந்து வயதான தாய்மைப் பருவம். தெரிவை என்பது உலகம் அறிந்த முப்பது வயதிற்கும் மேலான பருவம். அடுத்து நாற்பது வயதுப் பருவமான உலக ஞானமும், அனுபவமும் பெற்ற பேரிளம் பெண் என்பது. இதன் அடிப்படையிலேயே நம்முடைய பெரும்பான்மையான சம்பிரதாயங்கள் அமைந்திருக்கின்றன.

    ஒரு பெண்ணின் வாழ்நாளில் முக்கியமாக நான்கு வகையான சடங்குகள் இடம்பெறும்.

    இதில் முதலில் அங்கம் வகிப்பது ’பூப்பு நன்னீராட்டு விழா.’. பெண் குழந்தைப் பருவத்திலிருந்து குமரிப் பருவத்திற்கு தயாராகும் நிலையை  அறிவிக்கும் விழா என்றே சொல்லலாம். சுரப்பிகளின் செயல்பாடுகளால் பலவிதமான மன மாற்றங்கள் மற்றும்  உடல் மாற்றங்களும் ஏற்பட்டு பெருங்குழப்பத்தை ஏற்படுத்தும் பருவம் இது. இந்த விழாக்கள் மூலமாக் உற்றார், உறவினர், சொந்த, பந்தங்கள் என அனைவரும் கலந்து ஒன்று கூடி அப்பெண்ணை வாழ்த்துவதோடு, அப்பருவத்தின் முக்கியத்துவத்தை, எதிர்வரும் காலங்களில் அவள் எச்சரிக்கையுடன் வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்தக்கூடிய ஒரு கலாச்சார பாதுகாப்பு விழாவாகவும் அமைகிறது.

    ஒரு பெண் பருவமடைதலை, ‘பூப்பு நன்னீராட்டு விழா’ என்று கொண்டாடும் மரபு சார்ந்த பழக்கம் ஆதிகாலந்தொட்டு தொடர்ந்து வழக்கத்தில் இருந்துள்ளது. ’பூப்பு நன்னீராட்டு விழா’ என்ற சொல் வழக்கு இடைக்காலத்தில் தோன்றியிருக்கலாம். ஆரம்பத்திலிருந்து ‘தெரட்டி’ அல்லது ‘திரட்டிச்சீர்’ என்ற சொல்லாட்சியே வழக்கில் இருந்துள்ளது. ’தெருட்டு’ என்ற சொல்லிற்கு ‘விவரம் அறிதல்’ என்ற பொருள் உண்டு. விவரம் அறியும் பருவம் என்பதை அறிவிக்கும் விதமாக இவ்விழா கொண்டாடப்படலாம். ‘தெருட்டு’ என்ற சொல் நாளடைவில் மருவி ‘தெரட்டி’ அல்லது ‘திரட்டி’ என்று வழங்கப்பட்டிருக்கலாம்.

    இந்தத் திரட்டிச் சீரில் தாய்மாமன் பங்கு இன்றியமையாதது. வளமைச் சடங்குகளின் ஒன்றாகக் கருதப்படும் இது  மேளதாளங்களுடன், பட்டுப்புடவைகள் சீர் வரிசைகள் எனப் பெரும் கொண்டாட்டமாக விளங்கும் பெரும்பாலும் வீடுகளில் செய்யப்படும் இச்சடங்குகள், இடப்பற்றாக்குறை காரணமாக திருமண மண்டபம் போன்ற பொது இடங்களிலும் நடைபெறும் வழமையும் உள்ளது. ’தீட்டு கழிக்கும் சடங்கு’ என்றும் இதனைக் கூறுகின்றனர். பிட்டு செய்து சுற்றி தீட்டுக் கழிப்பது முக்கியமான வழக்கமாக இருந்து வருகிறது. இந்தச் சடங்குகள் செய்யாமல் ஒரு பெண்ணை மணமேடையில் ஏற்ற முடியாது என்ற பழக்கம் இன்றளவிலும் பெரும்பாலும் கடைபிடிக்கப்படுகிறது. கொங்கு நாட்டிற்கேயுரிய தனிப்பட்டதொரு மரபு விழாவாகவே இது இருந்து வருகிறது.

    அடுத்து வருவது, திருமணச் சடங்குகள். திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமானதொரு நிகழ்வு. சமூகத்தில் ஒரு தனிப்பட்ட மதிப்பை அளிக்கக்கூடியதும் அதுதான்.

    ”திருமணம் ஆனவர்கட்கு மாங்கலிய  வரி வாங்கும் கொங்குச்செப்பேடு ஒன்று திருமணம் ஆகாதவர்களைப் ‘பயலாள்’ என்று குறிக்கிறது” என்கிறார் புலவர் ’கல்வெட்டு’ இராசு அவர்கள்.

    கொங்கு சமுதாயத்தில், குறிப்பாக கொங்கு வேளாளர் சமூகத்தில் திருமணச் சடங்குகள் மிகவும் வித்தியாசமானது. மிகப் பழமையான பண்பாட்டிற்கு உரியதாம். முதலில் பெண்ணிற்கும், மாப்பிள்ளைக்கும் ஜாதகம், மற்றும் மற்ற பொருத்தங்கள்  பார்க்கும்போதே  சகுனங்கள் பார்ப்பது முக்கியமாகக் கருதப்படுகிறது. அதாவது, பூனை குறுக்கே வருவதோ, விறகுக் கட்டை சுமை எதிரே வருவதோ நல்ல சகுனம் அல்லவாம். கழுதை கத்துவது, வண்ணான், (சலவைத் தொழிலாளி) அழுக்கு மூட்டை, சவம் போன்றவைகள் எதிர் வருவது நல்ல சகுனமாம். பறவை, விலங்கு போன்றவைகள் வலம் போக வேண்டுமாம். பொருத்தம் நல்லபடியாக அமைந்தால் அடுத்து நிச்சயதார்த்தம் பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் மண ஒப்பந்தம் செய்து கொள்வார்கள். திருமண ஓலையும் வாசிக்கப்படும்.. அடுத்து திருமணத்திற்கான ஏற்பாடுகளில், மாங்கல்யத்திற்கு பொன் கொடுத்தல், உப்புச் சர்க்கரை மாற்றுதல், விறகு வெட்டல், நெல் குத்துதல், முளைப்பாலி போடுதல், கூறைப்புடவை எடுத்தல், முகூர்த்தக்கால் போடுதல், படைக்கலம் வைத்தல், குயவர்களிடம் எழுத்துப்பானை என்ற பொங்கல் பானை வாங்குதல், பிறைமண் எடுத்தல், பேய்க் கரும்பு நாட்டல், காப்புக் கட்டுதல், சீர்த்தண்ணீர் கொண்டு வருதல், மங்கலன் முகம் துடைத்தல், ஆக்கை சுற்றிப் போடுதல், செஞ்சோறு அஞ்சடை கழித்தல், உருமால் கட்டுதல், கோயில் மாலை பெறுதல், குப்பாரி கொட்டல், நிறைநாழி, கணபதி மற்றும் குலதெய்வ வழிபாடு, வெற்றிலை கட்டுதல், இணைச்சீர், கூடைச்சீர் அல்லது நாழியரிசிக் கூடை, பட்டம் கட்டுதல்,, தாரை வார்த்தல், திருப்பூட்டுதல், நலங்கிடல்,  குலம் கோதுதல், அம்மி மிதித்து அருந்ததி காட்ட்ல், பரியம் செலுத்துதல், சம்பந்தம் கலக்கல் போன்ற பல்வேறு சடங்குகள் மூன்று நாட்களுக்கு நடைபெறும்.

    முனை முறியாத பச்சரிசி, அறுகம்புல், மஞ்சள் போன்றவைகளின் கலவையே அறுகரிசி என்று சொல்லப்படுகிற அட்சதை. பெரியோர்  அந்த அறுகரிசியை இரண்டு கைகளாலும் எடுத்து,

    “ஆல் போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய்ச் சூழப் பதினாறு பேறு பெற்றுப் பெருவாழ்வு வாழ்க”
    என்று உச்சந்தலையில் 3 முறை இட்டு வாழ்த்துவார்கள்.

    மங்கல நாண் சூட்டி திருமணம் முடிந்த பிறகும் பல்வேறு சடங்குகள், சம்பிரதாயங்களுடன், விருந்து மற்றும்  சாந்தி முகூர்த்தம் என்று பட்டியல் நீளும். இதன் பிறகு இறுதியாக உற்றார், உறவினரின் விருந்தோம்பலுடன் விழா இனிது நிறைவேறும். தற்காலத்தில் இதில் பெருமளவிலான சடங்குகள் சுருங்கி, கோவிலில் திருமணம் செய்து, மண்டபத்தில் வரவேற்பு வைத்து எளிதாக முடித்து விடுகிறார்கள். கோவிலில் வைக்கும் திருமணத்திற்கு சடங்குகளும், சம்பிரதாயங்களும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதும் ஐதீகம்.

    அடுத்து வருவது ’வளைகாப்பு’ என்கிற  கட்டுச்சாத விருந்து. அதாவது பெண் திருமணம் முடிந்து முதல் குழந்தை கருவுற்றவுடன், 5, 7, 9ம் மாதங்களில் அவரவர் குல வழக்கப்படி, ஏதாவது ஒரு மாதத்தில், கணவன் மற்றும் உறவினர்கள், முன்னிருந்து நடத்தும் சம்பிரதாயமான ஒரு விழா. நம் நாட்டில் பின்பற்ற்ப்படும் பல சடங்குகளுக்கும், சம்பிரதாயங்களுக்கும் பல அறிவியல் காரணங்கள் இருக்கின்றன என்கிறார்கள்
    பொதுவாக கருவுற்றிருக்கும் பெண்கள் பிரசவ காலம் குறித்த அச்சத்துடனே இருப்பார்கள். ஏற்கனவே அனுபவம் பெற்ற தாய்மார்கள், நெருங்கிய உறவினர்கள் ஒன்றுகூடி, அவருக்கு இறை நம்பிக்கை மற்றும் சடங்குகள் மூலம் அதனைத் தெளிய வைத்து அவரை மனரீதியாக பிரசவத்திற்கு தயார் செய்கிறார்கள். ஒரு சில குடும்பங்களில் பிரசவம் எளிதாவதற்காக மருந்து கொடுக்கும் வழக்கமும் உண்டு. வயிற்றில் இருக்கும் குழந்தை ஆறாம் மாதத்திற்கு மேல் வெளியுலகத் தொடர்பை, அதாவ்து ஓசைகள், சூடு, குளிர்ச்சி போன்ற அனைத்தையும் உணர ஆரம்பிக்கின்றது. தாய் அணிந்திருக்கும் கண்ணாடி வளையல்களின் ஒலியினால் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாகவும், குழந்தைக்கு  உறவுகளின் அண்மையும் மகிழ்ச்சியான சூழலை உருவாக்குவதோடு தாயின் மன நிலையில் ஏற்படும் உற்சாகமும் வளரும் குழந்தைக்கு நன்மை பயக்கக்கூடியதாகிறது.

    மணப்பெண் போன்று அலங்காரம் செய்து உயர்ந்த மேடையில் அமரச்செய்து, தாய் வீட்டு சீதனங்களுடன், பலவகை இனிப்புகள், பழ வகைகள் இவைகளுடன், சந்தனம், குங்குமம்  அறுகரிசி, பன்னீர் போன்றவைகளுடன் நலங்கு வைத்து, மங்கல ஆரத்தி எடுத்து, வளையல் அணிவித்து, கலந்து கொள்ளும் பெண்களுக்கும் தாம்பூலமும் வளையல்களும் கொடுப்பார்கள்.  பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்து, அப்பெண்ணை கணவன் வீட்டிலிருந்து தாய் வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள். குழந்தை பிறந்தவுடன், நல்லநாள் பார்த்து சீருடன் சென்று மீண்டும் கணவன் வீட்டிற்கு அழைத்து வருவார்கள். பெண்மைக்கும், தாய்மைக்கும் செய்யும் மிகச் சிறந்த மரியாதைப் பண்பு இது. இதனால் அந்தப் பெண்ணின் மனநிலையில் ஏற்படும் நம்பிக்கையும், நல்ல சிந்தனைகளும், வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தும்.

    இறுதியாக, கணவனை இழந்த பெண்களுக்குச் செய்யும் தேவையற்ற சில சடங்குகள். அது போன்ற சடங்குகளைச் செய்யாவிட்டால்  குடும்பத்தில் ஏதும் பிரச்சனை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் விருப்பமின்றி செய்பவர்களும் உண்டு.கண்மூடித்தனமான பழக்கங்கள் மண்மூடிப் போக வேண்டும். பண்டைய பண்பாடும், கலாச்சாரமும் காப்பாற்றப்பட வேண்டும் என்று சில பழமைவாதிகள் இன்ற்ளவிலும் செய்யும் சில சடங்குகளும், சம்பிரதாயங்களும் சம்பந்தப்பட்டவர்களுக்கு இரத்தக் கண்ணீர் வடியச் செய்யக்கூடியவை. இதெல்லாம் தேவைதானா, இதற்கெல்லாம் ஏதும் குறிப்பான காரணம் இருக்கிறதா, இந்தக் கொடுமைகளைக் கடைபிடிக்காவிட்டால் அப்படி என்னதான் நடந்துவிடும் என்ற வாதத்திற்கானதல்ல இது. . நம்முடைய பழைய சம்பிரதாயங்களும், பழக்க வழக்கங்களும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவைகள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதற்கான எல்லையை வகுக்க வேண்டும். அதாவது தேவையற்ற சில சடங்குகளும், சம்பிரதாயங்களும், மாற்றப்பட வேண்டும்.

    கணவனை இழந்த துக்கத்தில் நொந்து போயிருக்கும் பெண்ணை ஈவு, இரக்கமே இல்லாமல் சடங்குகள் என்ற பெயரில் செய்யக்கூடியவைகள் கொடுமை. இன்று பெரும்பாலும் அவைகள் தவிர்க்கப்பட்டு வருவதும், கணவனை இழந்த பெண்களும், பொட்டு வைத்துக் கொள்வதும், சாதாரணமாக உடுத்துவதும் பழக்கத்தில் வந்து கொண்டிருப்பதும் ஆறுதலான விசயங்கள். வெண்ணிற ஆடையோ, காவி ஆடையோ உடுத்தும் வழமை பெரும்பாலும் மாறிவிட்டதும் குறிப்பிடத்தக்கது. மனித வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களுக்கு சடங்குகளும், சம்பிரதாயங்களும் மட்டுமே பொறுப்பாக முடியாது என்ற விழிப்புணர்வும் ஏற்பட்டிருப்பதன் விளைவு வருந்தச் செய்யும் தேவையற்ற சடங்குகளின் நிராகரிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இன்று, பெருகி வரும் காதல் மணங்களும், பெற்றோர் சம்மத்ததுடன் நடைபெறும் பிற மத, இன, மொழியின் கலப்புத்  திருமணங்களாலும், பல சம்பிரதாயங்கள் மறைந்து கொண்டிருக்கின்றன என்பதும் நிதர்சனம்.

    உசாத்துணை : திருமணச் சீர்கள் பற்றிய விவரங்கள், புலவர் இராசு அவர்களின் “கொங்கு வேளாளர் சீர்களும், இலக்கியங்களும்” என்ற நூல்.

    நன்றி: தமிழ் மரபு விக்கி.

    Share
  • மெய்ஞ்ஞானத்திலிருந்து தோன்றியதே விஞ்ஞானம்!

    நேர்காணல் – பவள சங்கரி

    புகழ் கண்டு மயங்காதே
    புகழ் தேடிச் செல்லாதே
    புகழாரம் பாடாதே.

    இன்னல் கண்டு கலங்காதே
    இகழ்ச்சி கண்டு பதராதே
    இகழ்ந்துரைக்க எண்ணாதே

    தியானம் என்றால் என்ன?

    “எண்ணத்தை வெளிப்படுத்துவதுதான் தியானம். நல்லெண்ணத்தை நாம் கொள்ளும்போது அதுவே நம் செயலுக்கு ஆதாரமாக விளங்குகிறது. நற்சுவாசத்துடன், நல்லெண்ணத்தை நாம் வெளிப்படுத்தும்போது அந்த அலைகள் அதற்கு தகுந்தவற்றை ஈர்த்து நம் செய்கைக்கு துணை புரிகின்றது.”

    “தியானம் மூலம் தம் குருதேவர் ஈஸ்வரபட்டர் மாமகரிஷிகள் கொடுக்கும் பாடங்களின் மூலம் தம்முடைய மெய்ஞ்ஞானத்தை உயர்த்திக் கொள்வதோடு தம் வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொண்டு அதன் தரத்தையும் உயர்த்திக் கொள்ளலாம். சப்த ரிஷிகளின் துணையோடு, மாமகரிஷிகள், நவகோள்கள் , ராசி மண்டலங்கள், நட்சத்திர மண்டலங்களின் ஈர்ப்போடு தம்மைத் தாமே உயர்த்திக் கொள்ள்லாம்” என்று ஆணித்தரமாகக் கூறும் ஞானத்திருமதி ராஜம்மாள் பாலசுப்பரமணியம் அம்மையார், தன்னுடைய 70 அகவையைத் தாண்டியவர். சற்குருதேவர் ஈஸ்வரபட்டர் மாமகரிஷியின் அருளாசிகளால்தான் உங்களுடன்  உரையாடுகிறேன் என்று ஆரம்பித்தவர், நல்ல ஆரோக்கியமும், தெளிவான சிந்தனையும், கலகலப்பான உற்சாகமும், அமைதியான மனோநிலையும் கொண்ட இளம் மங்கையாக வலம் வருதலே இதற்கான சான்று.. ஆவிகளுடன் தம்மால் உரையாட முடியும் என்றும் அதற்கான அனுமதி கிடைக்கும் போது மட்டுமே அது குறித்த செய்திகளை பகிர்நது கொள்ள முடியும் என்றும் சொல்லி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார். இது குறித்து அவரிடம் மேலும் சில வினாக்களும் அதற்கான அவ்ருடைய விடைகளும் பல ஐயங்களை தெளிவாக்கும் விதமாக அமைந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரியின் தாளாளர் ’கவாலியர்’ எம். எஸ் மதிவாணன் அவர்களின் உடன் பிறந்த சகோதரி இவர். இவர்களின் குடும்பமே ஆழ்ந்த ஞானமும், எண்ணமே கடவுள் என்ற உறுதியான நிலைப்பாடும், நேர்மையே  இலட்சியம் என்ற கடப்பாடும் கொண்டு செயல்படும் பாங்கு மகிழ்ச்சியளிக்கக்கூடியது.

    தியானத்தினால் சாதிக்கக்கூடியவை எவை?

    தம்முள் இறைவனைக் காணும் சக்தியைப் பெற்று தெய்வ நிலை பெறச் செய்வதே தியானம். இல்லறத்தை நல்லறமாக்கி, இல்லத்தையே ஆலயமாக்கி, இல்லறத்தில் இருந்தபடியே உயர் ஞானம் பெற்று இறைத்தன்மையை அடையச் செய்வதே தியானம்.

    இறைவனை எங்கனம் அறிவது?

    பாலாகி, தயிராகி, மோராகி, வெண்ணெயாகி,நெய்யுமாகி உருப்பெற்ற பிறகு மீண்டும் மாற்ற முடியுமா? அதை நெய்யாக மட்டுமே பயன்படுத்த முடியும். கொடிய விடமும், அமுதுணவும் அனைத்துமே ஆண்டவன் படைப்புதான். பாலைப்போல எண்ணமும், பாலின் உருமாற்றத் தயிரைப்போல் இவ்வெண்ணத்தால் எடுக்கும் சுவாசமும், மோரைப்போல் கடையப்பெற்ற உணர்வும், வெண்ணெயைப்போல் அவ்வுணர்வின் வழித்தொடர் திரட்டலும், நெய்யைப் போல ஞானமும் பெற்றால் அந்த ஞானத்தையே ஒவ்வொரு ஆத்மாவும் அவரவர்கள் எதன் வழித்தொடரை செயலாக்கும் குறிக்கோள் கொண்டுள்ளனரோ அவற்றில் நெய்யைப் போன்று செயல்படுத்தலாம்.

    தியானத்தின் மூலம் கடவுளைக் காண முடியுமா?

    “எண்ணமேதான் கடவுள்;
    கடவுளேதான் எண்ணம்;
    எண்ணத்தை பரிசுத்தப்படுத்தினால்
    கடவுளைக் காணலாம்!

    இயற்கையே கடவுளாக்கி, அன்பையே தெய்வமாக்கி நல்லெண்ணம், நல் சுவாசம் எடுக்கும் முறையை வழிப்படுத்துதல் வேண்டும். இயற்கையே கடவுள் என்றால் இயற்கையின் படைப்பான நாமும் கடவுள்தான். இயற்கையின் கடவுளான நாம் அன்பான தெய்வ உணர்வை உணர்ந்தோமானால், அத்தெய்வீக நல்லுணர்வு கொண்ட சுவாசம் நாமெடுக்கும் பொழுது அவ்வுணர்வால் ஏற்படும் நல்லெண்ணமுடன் கூடிய சுவாசத்தால் இறைவனின் இயற்கைப் படைப்பிற்கு நற்சக்தி ஒளி அலை கூடுகின்றது.

    இயற்கையாய் உள்ள் நம் பூமியின் உணர்வின் சுவாச நிலைக்கொப்ப அமில குணக்காற்றைத்தான் பால்வெளி மண்டலத்தில் பலவாக பரவியுள்ள அமில குண நிலையையே சூரியனின் அமில குணத்திற்கும், பூமியின் உணர்வு அமில சுவாச மோதலுக்கும் தனக்கு வேண்டிய அலையை மட்டும் எடுப்பதினால், இன்றுள்ள இவ்வகத்தக் காற்று மண்டல நிலையையே நாமெடுக்கும் நல்லுணர்வின் கூட்டுச் சக்தியினால் எடுக்கப்படும் ஜெபசுவாச அலையின் ஈர்ப்பினால் பூமியையே புனிதத் தன்மை ஈர்ப்பாக்கலாம். எண்ணிலடங்கா மனித ஆத்மாக்களின் எண்ண சுவாசமும் மற்ற இனவர்க்கங்களின் சுவாசமும் நம் பூமி எடுத்து வெளிகக்கும் சுவாசமுடன் கலந்து வெளிப்படும் இயற்கையையே நற்கடவுளாக்க நல்லெண்ண சுவாசம் நாம் எடுக்க வேண்டும்.

    நல்லெண்ணம் மட்டுமே இறைவனைக் காணும் வழி என்றால் எண்ணத்தை பரிசுத்தப்படுத்துவது எங்கனம்?

    பசி, தூக்கம் மற்றும் இயற்கையின் சில மாற்றங்களும் நம் உடலில் எண்ணத்தைச் செலுத்தாமலே உணர்வினால் ஏற்படுகிறது. உணர்வால் எண்ணத்தால் தெரிவதைப் போன்று எண்ணத்தைக் கொண்டு உணர்வையும் மாற்றி அமைக்க முடிகிறது.

    ஜீவனுக்கே சக்தி நீர். அந்நீர் சக்தியுடன் வளரும் பூமியில் எப்படிச் சில இரசாயணத் திரவங்களை எடுத்து அவற்றைப் பக்குவ முறையினால் மாற்றிய பிறகு அதே நீரை அவற்றில் சேர்த்தால் கெட்டுவிடுகிறது. நீரில்லாமல் எண்ணெய் இல்லாவிட்டாலும்  நீர் சேர்த்தால் எண்ணெய் கெட்டுவிடுகிறது. இதைப்போன்று நம் எண்ணத்தை நாம் செலுத்தும் முறைப்படியே தெயவமாகவும் ஆகலாம்  அன்றி பேயாகவும் சுழலலாம்.. ஆக நல்ல எண்ணங்களே நம்மை கடவுட்தன்மை பெறச்செய்கிறது. அதாவது, உணர்வுடன் கூடிய எண்ணங்களைச் செலுத்தி பலவாக நிலைகளைப் புரியும் ஆற்றல் கொண்ட முதிர்ச்சியுற்ற பிறப்பினனான மனிதன், எந்த உணர்வின் அடிப்படையில் வளர்ச்சியின் வழிப்பெற்றானோ அதே உணர்வலைக்குத் தன்னை வழிநடத்த இந்த ஞானத்தைச் செலுத்துவானேயானால் அவனே தேவனாகலாம்.

    இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் கோபம், குரோதம், வஞ்சனை, வெறி போன்ற தீய எண்ணங்களை வளர்த்து ஆண்டவனின் ஆலயத்தை அசுத்தம் செய்யாமல், நம் எண்ணத்தை உயர் ஞானம் கொண்டு சொல்லாலும், செயலாலும் , நம்முள் இருக்கும் இறைவனை வணங்குதலே அந்த இறைவனை நேரில் காணும் மார்க்கமாகும்.

    மதம் என்பதன் அடிப்படையில் இறைநிலையை அடையும் தன்மை பற்றி தங்கள் கருத்து என்ன?

    பேரண்ட பூமியின் காற்று மண்டலத்தின் ஈர்ப்பு ஓட்டத்தில் ஓடும் நம் பூமி ஒலிக்கும் நாதம்தான் ‘ஓம்’ என்ற நாதம். இந்த ‘ஓம்’ என்ற நாதமே பூமியின் சகல ஜீவராசிகளுக்கும் அடிப்படை. இந்த ‘ஓம்’ என்ற நாதத்தின் ஒலியில்தான் எல்லாமில் எல்லாமாய் நாம் உள்ளோம். மற்ற மண்டலங்களில் இவ்வொலியின் தன்மை மாறுபடுகிறது. நம் பூமியின் ஜீவ ஒலியான இந்த ‘ஓம்’ என்ற ஒலியை நாம் எடுக்கும்போது நம் ஆத்மாவும் அவ் ‘ஓம்’ என்ற ஒலியுடனே ஐக்கியப்படுகிறது. இதையே கிறித்துவ மதம் ‘ஆமென்’ என்றும் முகமதியர்கள் , ‘அல்லாஹீ அக்பர்’ என்றும் நாதமெழுப்புகின்றனர்.

    மனித இனங்களை மதத்தினால் அவர்களுக்கு நல் உணர்வுகளும், சில வழித்தொடர் வாழ்க்கையில் நல் வழிகளையும் ஒழுங்குபடுத்தி மதம் என்ற அடிப்படை பிணைப்பிற்குள் ஓர் கூட்டு அமைப்பு ஏற்படுத்தி மனித இனங்களின் எண்ணங்கள் சிதறாமல் ஒழுங்கு முறையென்ற வேலி அமைத்து பாதுகாப்பு உணர்வைக் கூட்ட வழிவந்தது மதம். ஆனால் வளர்ந்துவிட்ட இந்த சமுதாய வளர்ச்சிப் பெருக்கத்தில் மதத்தைக் கொண்டு இனத்தைப் பிரிக்கும் துவேச அலைகளும், தன் மதம் என்ற வெளியின் பிணைப்பும் வளர்த்துக் கொண்டு ஒன்றே குலமான மனித இனத்தை ஒருவனே தேவனாக உணரும் வழித் தொடரை மதங்களைப் பிரித்து, உணர்வுகளை மாற்றி தத்தம் சமுதாய இச்சையின் வெறியில் சுழன்றுள்ள் இக்கலியின் காலத்தில் வளர்ந்துவிட்ட இனப்பெருக்கத்தில் எந்த அடிப்படையில் மதம் உருவானதோ அதற்கெல்லாம் மீறிய இனப்பெருக்கத்தில் உள்ள சமுதாய வளர்ச்சியில் மாற்றம் கொண்டுள்ள இந்நாளிலும் இம்மதம் என்ற பிடியிலிருந்து எல்லா மதமும் நம் மதம்தான் என்ற மனித ஆத்மாவின் உயர்ந்த ஞான மதம் செல்ல வேண்டும். எம்மதமும் தனதாகக் கொள்ளும் ஞான உணர்வுதான் இன்றைய காலகட்டத்தின் அவசியத் தேவையாகும். எண்ணத்தால், உணர்வால் ஞான மதம் ஒவ்வொருவரும் பெறல் வேண்டும்.

    ”காற்றிலிருந்தே ஆகாரம் பெற முடியும்” என்ற தங்கள் கருத்தின் அடிப்படை யாது?

    சரீரத்தில் சுவாசம் நாசியின் வழிகாற்று ஆகாரம் உட்செல்லும் பொழுது உடலினுள் இயங்கும் உயிர்காற்று நொடிக்கும் குறைவான நேரத்தில் நாடிகளின் வழியோடி செயல்படும் விதமே, சரீரத்தை இயக்கி தொழில்படும்பொழுது உடலில் பசி, தாகம் ஏற்படுவதெல்லாம் இந்த உயிர்காற்றின் மூலம்தான் சரீரசெயல் அனைத்தையும் ஓர் கட்டுக்கு வைத்து பஞ்சேந்திரியங்கள் புற வாழ்க்கைச் செயலில் இயங்கும் இயக்கத்தை நிலைநிறுத்தி, ஒருமையுள் ஐந்திடக்கிட்டால், தியானத் தொடரே நிலைபெற்றுவிட்டால், காற்றிலிருந்தே ஆகாரம் பெற்றிடும் அமைவு ஏற்பட்டுவிடும்!

    மனிதன் மகானாவது எங்கனம்?

    வாழ்க்கையில் எளிமையும், ஆத்மாவில் சுகத்தையும் அனுபவிக்கும் எண்ணத்தின் குணத்தைப் பெறும் மார்க்கமே மனிதன், மனிதனாகும் முதல் நிலை. இம் முதல் நிலையில் மனிதனால் எடுக்கப்படும் அறிவின் பகுத்தறிவு உயர்ஞானத்தின் மெய்ஞானத்தில் கண்டறியும் உண்மையின் சக்தியை மனிதருக்குள் மனிதராய் விதைக்கப்படும் ஒலி அலைகள் ஒளி பெறும். மனிதனைப் பக்குவப்படுத்தும் நிலைதான் மகானாகும் நிலை!

    தியானத்தின் பலன் பற்றி….?

    காற்றலையில், ஜீவ நீர்ச்சக்தியில் சூரியனுக்கும் பூமிக்கும் மற்ற கோள்களின் தொடர்புக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளும் சுழல் ஓட்டத்தினால் காந்த மின் தொடர்பு ஒலியாகி, ஒளியாகி, நீராகி உருவாகும் உயிர்த்துடிப்பு ஒவ்வொன்றிலுமே காந்த மின் அலை வளர்த்து, சக்தியின் தொடர்பை மனித உணர்வு எண்ணத்தால் ஜீவகாந்த நினைவு அறியும் அறிவு, பகுத்தறியும், ஞானமுதிர்ச்சியுற்ற நம் சரீரத்தை, நாம் நம்முள்ளுள்ள ஜீவகாந்த நுன்ணலையை உயர்காந்த ஈர்ப்பு நிலைக்கு இவ்வுடல் என்ற கோளத்தையே எண்ணத்தில் தியானம் கொண்டு மனிதனின் உயர்வு நிலைக்கு ஒளிநிலை என்றும், பிறவாநிலை என்றும் உணர்த்திய வழித்தொடருக்குச் செல்ல வழிகாட்டுவதே தியான முறை.

    புறத்தடைகளைத் தகர்த்து அகத்தினுள் ஆழ்ந்து தியானம் செய்யும் முறை யாது?

    கண்மூடி அமர்ந்து முதலில் தாய், தந்தை, அடுத்து குலதெய்வத்தையும், அடுத்து குருவையும் வணங்கிப் பின் உயர்வு வழி காட்டிய நற்குண தெய்வநிலை பெற்றோரின் எண்ணமுடன் நம் எண்ணத்தைச் செலுத்தி பின் எண்ணத்தை மேல்நோக்கி சூரியனின் எதிரில் நாம் உள்ளதாக எண்ணி ‘ஓம்’ என்ற ஒலியுடன் சுவாசத்தை மேலே சூரியனிலிருந்து எடுத்து சூரியனை புருவ மத்தியில் பொட்டு வைக்கும் இடத்தில் நினைத்து,  எண்ணத்தைக் குவித்து, சித்தர்கள், ஞானிகள், முனிவர்கள், மகரிஷிகள் ஆகியவர்களை மனதில் எண்ணிச் சாந்தமாய் சுவாசமெடுத்து தியானித்துப் பழக வேண்டும்.

    அப்போது நம் வாழ்க்கைத் தொடர்பில் நடந்தவை, நடப்பவை, நடக்க வேண்டியவை போன்ற எண்ணங்கள் யாவும் இவ்வுணர்வில் இச்சரீரம் பெற்ற காலம் முதற்கொண்டு ஓடிய நினைவோட்டங்கள் மோதும். அதே ஓட்டத்தில் எண்ணத்தைச் செலுத்தாமல், அவரவர்கள் தெய்வமாய் வணங்கும் குல தெய்வத்தின் தொடர்பு கொண்டு சாதி, மத வேற்றுமை இன்றி முன்னோர்களால் வழிப்படுத்திக்காட்டிய தம் குருத் தொடர்பைக் கூட்டிக்கொண்டு , நாம் எண்ணும் குரு சூரியனில் இருந்தே நம் ஆத்மாவை உயர்வு நிலைப்படுத்தும் உணர்வுடன் எண்ணத்தைச் செலுத்தி அறியும் தொடர்புடன் உணர்வை ‘ஓம்’ என்ற ஒலியுடன் இச்சுவாசத்திற்கு உயர்காந்த நுண் அலையை எடுக்க வேண்டும்.

    இச்சரீரம் ஜீவகாந்த சக்தி கொண்டது. நாமெடுக்கும் அலை உயர்காந்த நுண்ணிய ஒலி சக்தி பெற்றது. உடல் என்ற ஜீவசக்தி உணர்வு எண்ணத்தில் உயர்காந்த தொடர்பலையை அறியும் ஆற்றலுடன் தியானத்தை மேற்கொண்டோமானால் மனிதனுக்கடுத்த தெய்வநிலை இச்சரீர பிம்பத்திலிருந்தே ஒவ்வொருவரும் பெறலாம்!!

    நாமும் தெய்வநிலையைப் பெற முயற்சிப்போம் என்ற நற்சிந்தையுடனான மன நிலையுடன் ராஜம்மாள் அம்மையாரை வணங்கி விடைபெற்று வந்தோம்.

    Share
  • இனிய மணநாள் வாழ்த்துக்கள்!

     

     

     

     

    பவள சங்கரி

    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது (குறள் 45)

    இனிய இல்லறத்தில் இன்பமுடன்
    அன்பும் சிவமுமாய் இணைந்திருப்போரே
    பண்பும் பாசமும், நேசமும் கொண்டு
    திருமண பந்தத்தில் பல்லாண்டு பல்லாண்டு
    நீங்காத செல்வம் நிறைந்தோங்கி
    வாழ்வாங்கு வாழ்வீரே!!!

     

     

     

     

    Share