வெற்றிக் கனியை எட்டிப்பறிப்போமா! (3)

1

பவள சங்கரி

நிலையான குறிக்கோளும், தெளிவான சிந்தையும்!

நாம் எல்லோருமே வாழ்க்கையில் வெற்றியாளர்களாக இருப்பதையே பெரிதும் விரும்புகிறோம். எங்கு வெற்றி, எதில் வெற்றி என்று நிலையான ஒரு குறிக்கோள் இருந்தால்தானே அந்த வெற்றிப் பாதையை நெருங்க முடியும். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை என்பது இலக்கு இல்லாத ஓர் பயணம் போன்றது. மேலோட்டமாக, பொத்தாம் பொதுவாக ஒரு குறிக்கோள் என்பதைவிட உறுதியான மற்றும் நிலையானதொரு குறிக்கோளைக் கொண்டிருத்தல் வேண்டும். அதற்குத் தெளிவான சிந்தனை வேண்டும். நாம் சாதிக்க நினைக்கும் விசயங்களை முதலில் பட்டியலிட வேண்டும்.

உதாரணமாக நம் இலட்சியம் குடியிருப்பதற்கு ஒரு அழகான வீடு கட்ட வேண்டும் என்றால், அந்த வீடு எந்த அளவில், எந்த இடத்தில், அதாவது நகரத்தின் மையப் பகுதியிலா அல்லது  நகர எல்லையை விட்டு அமைதியான ஒரு பகுதியிலா என்பது போன்றதோடு அதற்கான செலவு எவ்வளவு ஆகும் போன்ற அனைத்தையும் தெளிவாகப் பட்டியலிட வேண்டும். இதில் மிக முக்கியமானது நம் சக்திக்கு உட்பட்ட இலட்சியமாக இருக்க வேண்டியது. நம் தகுதிக்குத் தகுந்த குறிக்கோளை நிர்ணயிக்க வேண்டியது அவசியம். ஒரு சிறிய வாடகை வீட்டில் குடியிருக்கும் ஒரு அரசாங்கப் பணியில் இருப்பவரின் ஆசை அதைவிட சற்றே பெரிதான, கொஞ்சம் அதிகமான வசதிகளுடன் கூடியதான் ஒரு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற தெளிவான குறிக்கோள் உடையவராக இருந்தால் அது சாத்தியமாவதில் பெரிய பிரச்சனை இருக்காது. தாம் செய்யும் வேலையை நல்ல விதமாகச் செய்வதோடு, கூடுதலான நேரப் பணியையும் (overtime) ஏற்றுக் கொள்ளலாம். எந்த வங்கியில் குறைந்த வட்டியில் கடன் கொடுக்கிறார்கள், அதைத் திருப்பிச் செலுத்தும் வழி எந்த அளவு சாத்தியம் போன்ற அனைத்தையும் தெளிவாகத் திட்டமிடல் அவசியம். இப்படி திட்டமிட்ட விசயங்களைத் தெளிவாக ஒரு குறிப்பேட்டில் பதிவிட வேண்டியதோடு அதனைத் தாமும், தம் குடும்பத்தாரும் அன்றாடம் அதிகமாகப் புழங்கும் இடத்தில் கண்ணில் படும்படியாக வைக்க வேண்டியது அவசியம். இது கேட்பதற்கு நகைச்சுவையாக இருப்பது போல இருக்கலாம். ஆனால் பல வெற்றியாளர்கள் இது போன்ற வழிமுறைகளை பின்பற்றியிருக்கிறார்கள் என்பது விசாரித்துப் பார்த்தால் அறியலாம். ஒரு வீடு கட்டுவது என்பது அந்த குடும்பத் தலைவன் மற்றும் சம்பாதிக்கும் மனைவி ஆகிய இருவரின் கையில் இருந்தாலும், ஓய்வு பெற்ற பெற்றோர் மற்றும் சிறிய குழந்தைகள் ஆகியோருக்கும் இந்த இலட்சியம் அறிந்திருந்தால் குடும்பத்திலோ அல்லதுதனிப்பட்ட முறையிலோ தேவையற்ற அதிகப்படியான செலவினங்களைக் குறைத்தும், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தும் அந்த இலட்சியத்தை அடைவதற்கு பெரிதும் துணையாக இருப்பார்கள். அந்த இலட்சியத்தை முழுமையாகவும், சிறப்பாகவும் அடைவது எப்படி?

கற்பனைக் குதிரையைத் தட்டிவிடுங்கள்!

ஆம், மனோத்தத்துவ நிபுணர்களும் சொல்லக்கூடிய எளிய வழிகள் இவைதான். அதாவது நம்முடைய இலட்சியத்தின்மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருத்தல் அவசியம். இதனை தியானம் என்றும் கொள்ள்லாம். அன்றாடம் விடியலிலோ அல்லது நமக்குக் கிடைக்கும் எந்த ஒரு அமைதியான, தொந்திரவு இல்லாத சூழலிலோ தனிமையில் அமர்ந்து நம் இலட்சியம் குறித்த ஆழ்ந்த கற்பனையை வளர்க்கலாம். வீடு கட்ட வேண்டிய இடத்தை திட்டமிட்டு வைத்திருப்போமே அங்கிருந்து ஆரம்பிக்க்லாம் நம் கற்பனையை. அடுத்து அந்த வீட்டின் அடித்தளத்திலிருந்து ஆரம்பித்து நாம் விரும்பும் வகையில் கொஞ்சம், கொஞ்சமாக அந்தக் கட்டிடத்தை மேலெழும்பச் செய்யலாம். இறுதியில் என்ன விதமான மர வேலைப்பாடுகள் மற்றும் அழகுபடுத்துதல், வண்னம் பூசுதல் வரை அனைத்தையும் கற்பனையில் முழுமையாக, அழகாக செய்து முடிக்கலாம். வெளிப்படையாகச் சொல்லும்போது மலைப்பாக இருக்கும் இந்த விசயம், நம் ஆழ்மனதில் அமைதியாக அசை போடும்போது மிக எளிதாகத் தெரியும். காரணம் நம் ஆழ்மனதின் சக்தி மிகவும் அதிகம் என்கிறார்கள் மனோத்தத்துவ வல்லுநர்கள். ஆம், கற்பனைக் குதிரையின் வேகம் மிகவும் அதிகமாம். அதாவது நிழற்படங்களாகப் பதிவு செய்வதை நம் ஆழ்மனம் எளிதாக பதிவேற்றிக் கொள்கிறது என்கிறார்கள். வெற்று நினைவுகளை ஆழ்மனதில் பதிவேற்ற முடியாது. அதேசமயம் மனப்படங்களாக அதைச் செலுத்தும்போது  நம் ஆழ்மனம் அதைச் சரியாக உள்வாங்கிக் கொள்கிறது.  ஆக நாம் செலுத்துகிற மனப்படங்கள் தெளிவானதாக இருக்கும் வகையில் அதற்கான செயல்வடிவம் பெற ஆரம்பித்துவிடுகிறது அது. நம்மை சுறுசுறுப்புடன் அதற்கான பணியில் முழுமையாக ஈடுபடச் செய்கிறது.

விளையாட்டோ, கல்வியோ, தொழிலோ சுற்றுலாவோ இப்படி எந்தத் துறையாக இருந்தாலும், இந்தக் கற்பனைக் குதிரையைத் தட்டிவிடும் திட்டம் வெற்றி காண்கிறது என்பது பல வெற்றியாளர்களின் கருத்தாகவே உள்ளது. அன்றாடம் நாம் செயல்படுத்தக்கூடிய எந்தவொரு சிறிய விசயமாக இருந்தாலும், இயன்றவரை இந்த முறையில் ஆழ்மனத்தில் படமாக செலுத்திப் பிறகு செயல் வடிவம் கொடுக்கும்போது அச்செயல் மிகச் சிறந்த முறையில் நடைபெறுவதை நம் அனுபவத்தில் உணர முடியும்.

வெற்றியின் இரகசியத்தை உணர்ந்து கொண்ட நாம் இன்றிலிருந்தே அதற்கான முயற்சியை தொடங்குவோமே. முழுமையான குறிக்கோளை நிர்ணயம் செய்து, அதனைத் தெளிவான திட்டமாகத் தீட்டிக்கொண்டு, நம் கண்ணில் படும்படியாக வைத்துக் கொண்டு, அன்றாடம் அதனை ஆழ்மனத்தில் படமாக செலுத்திக் கொண்டு, நாளுக்கு நாள் அதனை புதுப்பித்துக் கொண்டே வாருங்கள். அதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபடுங்கள். அதனை நிறைவேற்றும் சக்தி தானாகக் கிட்டும் என்பதில் ஐயமில்லை. உங்கள் இலட்சியத்தை எளிதாக எட்டிவிடுவீர்கள்!

மேலும் தொடருவோம்

படங்களுக்கு நன்றி:

http://inspiring-pictures.com/

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வெற்றிக் கனியை எட்டிப்பறிப்போமா! (3)

  1. ஆம்! மனதில் நம் (நல்ல) குறிக்கோள்களைப் பதியவைத்து அவற்றையே தினம் தியானம் செய்வது மிக நல்ல பலனைத் தரும் என்றுதான் உளவியலாளரும், மனவளக்கலை பயிற்சி தருவோரும் கூறுகின்றனர். வெற்றிக்கு வழிகோலும் நல்ல கருத்துக்களைத். தொடர்ந்து எழுதிடும் ஆசிரியர் பவள சங்கரிக்கு பாராட்டுக்கள்!

    -மேகலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.