பிரசவ அரங்கேற்றம்

 

சரபோஜி

 

எங்களைப்
பகலவனாக்க
பராசக்தியிடம் சக்தி கேட்டவனே

உன் இறுதிச்சடங்கில்
உன்னை மொய்த்த
ஈக்களை விட
வந்தவர்கள் குறைவாம்.

வாசித்தபோது
வருத்தம் மட்டுமல்ல
கோபமும் கூடவே
எங்கள் முந்தைய தலைமுறை மீது.

ஒரு தலைமுறை மீதே
கொண்ட கோபம் தான்
எங்களை முன்னிலும்
எழுச்சி பெறச் செய்தது.

நீ ஏற்றி வைக்க
ஆசைப்பட்ட விளக்குகளில்
ஆர்வம் கொள்ள வைத்து
துலங்கி தூண்டச் செய்தது.

உன் கனவுகளை
நனவாக்கி
கைம்மாறு செய்ய
நாங்கள் கைகோர்த்தோம்.

தனித்துக் கிடந்த
நாங்கள்
தரணி ஆளப் புறப்பட்டோம்.

வீட்டுக்குள் முடக்கி வைத்த
மூடப்பழக்கங்களை உடைத்து
விண்ணுக்குச் சென்று வந்தோம்.

சாதியின் சாயத்தை
எங்களின் காதலில்
கரைத்து எடுத்தோம்.

ஆணுக்கு பெண்ணிங்கு
இளைப்பில்லை எனக் காட்ட
ஆளுமைக்கு வந்தோம்.

உன் கனவுகள்
அள்ள அள்ளக் குறையா
அட்சய பாத்திரம்!

அதில் சிந்தியதை மட்டும்
செயலாக்க எங்களுக்கு
ஒரு தலைமுறை போதவில்லை.

ஆகவே தான்….
உன் கனவுகளில்
எஞ்சியதை அர்த்தப்படுத்த
எங்களையே பிரசவித்துக் கொள்கிறோம்
அடுத்த தலைமுறையாய்!

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க