கொங்கு நாட்டு மகளிருக்கான சடங்குகளும், சம்பிரதாயங்களும்
பவள சங்கரி
இயற்கையின் படைப்புகளிலேயே மிகவும், உன்னதமானது பெண் இனம். அனைத்து உயிரினங்களுக்கும் தனிப்பட்டதொரு மென்மையையும், அழகையும் அள்ளி வழங்கியிருப்பது கண்கூடு. அந்த வகையில் மனிதப் பிறவியில் இந்தப் பெண் இனம் பல வகையான உணர்வுகளுக்கும், அதற்குரிய சூழலுக்கும் ஆட்படுவதும் இயற்கை. இந்த இயற்கையின் விநோதத்தை அதீதமாக காட்சிப்படுத்த நினைப்பது மனிதர்களுக்கேயுரிய இயல்பாக இருப்பதே நம் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளின் முக்கிய அம்சமாக இருக்கிறது. இதில் பெரும்பாலும் நன்மைகளும், தீமைகளும் சமமாகக் கலந்து இருப்பதே நிதர்சனம். வளர்ந்து விட்ட நாகரீகத்தில் மற்றைய சில நாடுகளில் ஓரளவிற்கு இதெல்லாம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், நம் இந்திய கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் இதெல்லாம் இன்றும் வழமையாகத்தான் இருக்கிறது. வாழையடி வாழையாக கடைபிடிக்கப்படும் பழக்க வழக்கங்கள் பல அர்த்தமுள்ளதாக இருப்பினும், சில வேண்டாதவையாகவும் தேவையற்றவைகளாகவும் உள்ளது.
பொதுவாக பெண்களின் பருவக் காலங்களை , பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை மற்றும் பேரிளம்பெண் என ஆறு வகைகளாகப் பிரித்துள்ளனர். பேதைப் பருவம் என்பது ஏழு வயது வரையிலான குழந்தைப் பருவம். பெதும்பை என்பது பதினொரு வயது வரையிலான ஒரு பருவம். அடுத்து வருவதுதான் மங்கை எனும் பூப்படையும் பருவம். மடந்தை என்பவள் திருமண வயதில் இருக்கும் பத்தொன்பதிற்கும் மேற்பட்ட பருவத்தினள். அரிவை எனும் பருவம் இருபத்தைந்து வயதான தாய்மைப் பருவம். தெரிவை என்பது உலகம் அறிந்த முப்பது வயதிற்கும் மேலான பருவம். அடுத்து நாற்பது வயதுப் பருவமான உலக ஞானமும், அனுபவமும் பெற்ற பேரிளம் பெண் என்பது. இதன் அடிப்படையிலேயே நம்முடைய பெரும்பான்மையான சம்பிரதாயங்கள் அமைந்திருக்கின்றன.
ஒரு பெண்ணின் வாழ்நாளில் முக்கியமாக நான்கு வகையான சடங்குகள் இடம்பெறும்.
இதில் முதலில் அங்கம் வகிப்பது ’பூப்பு நன்னீராட்டு விழா.’. பெண் குழந்தைப் பருவத்திலிருந்து குமரிப் பருவத்திற்கு தயாராகும் நிலையை அறிவிக்கும் விழா என்றே சொல்லலாம். சுரப்பிகளின் செயல்பாடுகளால் பலவிதமான மன மாற்றங்கள் மற்றும் உடல் மாற்றங்களும் ஏற்பட்டு பெருங்குழப்பத்தை ஏற்படுத்தும் பருவம் இது. இந்த விழாக்கள் மூலமாக் உற்றார், உறவினர், சொந்த, பந்தங்கள் என அனைவரும் கலந்து ஒன்று கூடி அப்பெண்ணை வாழ்த்துவதோடு, அப்பருவத்தின் முக்கியத்துவத்தை, எதிர்வரும் காலங்களில் அவள் எச்சரிக்கையுடன் வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்தக்கூடிய ஒரு கலாச்சார பாதுகாப்பு விழாவாகவும் அமைகிறது.
ஒரு பெண் பருவமடைதலை, ‘பூப்பு நன்னீராட்டு விழா’ என்று கொண்டாடும் மரபு சார்ந்த பழக்கம் ஆதிகாலந்தொட்டு தொடர்ந்து வழக்கத்தில் இருந்துள்ளது. ’பூப்பு நன்னீராட்டு விழா’ என்ற சொல் வழக்கு இடைக்காலத்தில் தோன்றியிருக்கலாம். ஆரம்பத்திலிருந்து ‘தெரட்டி’ அல்லது ‘திரட்டிச்சீர்’ என்ற சொல்லாட்சியே வழக்கில் இருந்துள்ளது. ’தெருட்டு’ என்ற சொல்லிற்கு ‘விவரம் அறிதல்’ என்ற பொருள் உண்டு. விவரம் அறியும் பருவம் என்பதை அறிவிக்கும் விதமாக இவ்விழா கொண்டாடப்படலாம். ‘தெருட்டு’ என்ற சொல் நாளடைவில் மருவி ‘தெரட்டி’ அல்லது ‘திரட்டி’ என்று வழங்கப்பட்டிருக்கலாம்.
இந்தத் திரட்டிச் சீரில் தாய்மாமன் பங்கு இன்றியமையாதது. வளமைச் சடங்குகளின் ஒன்றாகக் கருதப்படும் இது மேளதாளங்களுடன், பட்டுப்புடவைகள் சீர் வரிசைகள் எனப் பெரும் கொண்டாட்டமாக விளங்கும் பெரும்பாலும் வீடுகளில் செய்யப்படும் இச்சடங்குகள், இடப்பற்றாக்குறை காரணமாக திருமண மண்டபம் போன்ற பொது இடங்களிலும் நடைபெறும் வழமையும் உள்ளது. ’தீட்டு கழிக்கும் சடங்கு’ என்றும் இதனைக் கூறுகின்றனர். பிட்டு செய்து சுற்றி தீட்டுக் கழிப்பது முக்கியமான வழக்கமாக இருந்து வருகிறது. இந்தச் சடங்குகள் செய்யாமல் ஒரு பெண்ணை மணமேடையில் ஏற்ற முடியாது என்ற பழக்கம் இன்றளவிலும் பெரும்பாலும் கடைபிடிக்கப்படுகிறது. கொங்கு நாட்டிற்கேயுரிய தனிப்பட்டதொரு மரபு விழாவாகவே இது இருந்து வருகிறது.
அடுத்து வருவது, திருமணச் சடங்குகள். திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமானதொரு நிகழ்வு. சமூகத்தில் ஒரு தனிப்பட்ட மதிப்பை அளிக்கக்கூடியதும் அதுதான்.
”திருமணம் ஆனவர்கட்கு மாங்கலிய வரி வாங்கும் கொங்குச்செப்பேடு ஒன்று திருமணம் ஆகாதவர்களைப் ‘பயலாள்’ என்று குறிக்கிறது” என்கிறார் புலவர் ’கல்வெட்டு’ இராசு அவர்கள்.
கொங்கு சமுதாயத்தில், குறிப்பாக கொங்கு வேளாளர் சமூகத்தில் திருமணச் சடங்குகள் மிகவும் வித்தியாசமானது. மிகப் பழமையான பண்பாட்டிற்கு உரியதாம். முதலில் பெண்ணிற்கும், மாப்பிள்ளைக்கும் ஜாதகம், மற்றும் மற்ற பொருத்தங்கள் பார்க்கும்போதே சகுனங்கள் பார்ப்பது முக்கியமாகக் கருதப்படுகிறது. அதாவது, பூனை குறுக்கே வருவதோ, விறகுக் கட்டை சுமை எதிரே வருவதோ நல்ல சகுனம் அல்லவாம். கழுதை கத்துவது, வண்ணான், (சலவைத் தொழிலாளி) அழுக்கு மூட்டை, சவம் போன்றவைகள் எதிர் வருவது நல்ல சகுனமாம். பறவை, விலங்கு போன்றவைகள் வலம் போக வேண்டுமாம். பொருத்தம் நல்லபடியாக அமைந்தால் அடுத்து நிச்சயதார்த்தம் பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் மண ஒப்பந்தம் செய்து கொள்வார்கள். திருமண ஓலையும் வாசிக்கப்படும்.. அடுத்து திருமணத்திற்கான ஏற்பாடுகளில், மாங்கல்யத்திற்கு பொன் கொடுத்தல், உப்புச் சர்க்கரை மாற்றுதல், விறகு வெட்டல், நெல் குத்துதல், முளைப்பாலி போடுதல், கூறைப்புடவை எடுத்தல், முகூர்த்தக்கால் போடுதல், படைக்கலம் வைத்தல், குயவர்களிடம் எழுத்துப்பானை என்ற பொங்கல் பானை வாங்குதல், பிறைமண் எடுத்தல், பேய்க் கரும்பு நாட்டல், காப்புக் கட்டுதல், சீர்த்தண்ணீர் கொண்டு வருதல், மங்கலன் முகம் துடைத்தல், ஆக்கை சுற்றிப் போடுதல், செஞ்சோறு அஞ்சடை கழித்தல், உருமால் கட்டுதல், கோயில் மாலை பெறுதல், குப்பாரி கொட்டல், நிறைநாழி, கணபதி மற்றும் குலதெய்வ வழிபாடு, வெற்றிலை கட்டுதல், இணைச்சீர், கூடைச்சீர் அல்லது நாழியரிசிக் கூடை, பட்டம் கட்டுதல்,, தாரை வார்த்தல், திருப்பூட்டுதல், நலங்கிடல், குலம் கோதுதல், அம்மி மிதித்து அருந்ததி காட்ட்ல், பரியம் செலுத்துதல், சம்பந்தம் கலக்கல் போன்ற பல்வேறு சடங்குகள் மூன்று நாட்களுக்கு நடைபெறும்.
முனை முறியாத பச்சரிசி, அறுகம்புல், மஞ்சள் போன்றவைகளின் கலவையே அறுகரிசி என்று சொல்லப்படுகிற அட்சதை. பெரியோர் அந்த அறுகரிசியை இரண்டு கைகளாலும் எடுத்து,
“ஆல் போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய்ச் சூழப் பதினாறு பேறு பெற்றுப் பெருவாழ்வு வாழ்க”
என்று உச்சந்தலையில் 3 முறை இட்டு வாழ்த்துவார்கள்.
மங்கல நாண் சூட்டி திருமணம் முடிந்த பிறகும் பல்வேறு சடங்குகள், சம்பிரதாயங்களுடன், விருந்து மற்றும் சாந்தி முகூர்த்தம் என்று பட்டியல் நீளும். இதன் பிறகு இறுதியாக உற்றார், உறவினரின் விருந்தோம்பலுடன் விழா இனிது நிறைவேறும். தற்காலத்தில் இதில் பெருமளவிலான சடங்குகள் சுருங்கி, கோவிலில் திருமணம் செய்து, மண்டபத்தில் வரவேற்பு வைத்து எளிதாக முடித்து விடுகிறார்கள். கோவிலில் வைக்கும் திருமணத்திற்கு சடங்குகளும், சம்பிரதாயங்களும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதும் ஐதீகம்.
அடுத்து வருவது ’வளைகாப்பு’ என்கிற கட்டுச்சாத விருந்து. அதாவது பெண் திருமணம் முடிந்து முதல் குழந்தை கருவுற்றவுடன், 5, 7, 9ம் மாதங்களில் அவரவர் குல வழக்கப்படி, ஏதாவது ஒரு மாதத்தில், கணவன் மற்றும் உறவினர்கள், முன்னிருந்து நடத்தும் சம்பிரதாயமான ஒரு விழா. நம் நாட்டில் பின்பற்ற்ப்படும் பல சடங்குகளுக்கும், சம்பிரதாயங்களுக்கும் பல அறிவியல் காரணங்கள் இருக்கின்றன என்கிறார்கள்
பொதுவாக கருவுற்றிருக்கும் பெண்கள் பிரசவ காலம் குறித்த அச்சத்துடனே இருப்பார்கள். ஏற்கனவே அனுபவம் பெற்ற தாய்மார்கள், நெருங்கிய உறவினர்கள் ஒன்றுகூடி, அவருக்கு இறை நம்பிக்கை மற்றும் சடங்குகள் மூலம் அதனைத் தெளிய வைத்து அவரை மனரீதியாக பிரசவத்திற்கு தயார் செய்கிறார்கள். ஒரு சில குடும்பங்களில் பிரசவம் எளிதாவதற்காக மருந்து கொடுக்கும் வழக்கமும் உண்டு. வயிற்றில் இருக்கும் குழந்தை ஆறாம் மாதத்திற்கு மேல் வெளியுலகத் தொடர்பை, அதாவ்து ஓசைகள், சூடு, குளிர்ச்சி போன்ற அனைத்தையும் உணர ஆரம்பிக்கின்றது. தாய் அணிந்திருக்கும் கண்ணாடி வளையல்களின் ஒலியினால் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாகவும், குழந்தைக்கு உறவுகளின் அண்மையும் மகிழ்ச்சியான சூழலை உருவாக்குவதோடு தாயின் மன நிலையில் ஏற்படும் உற்சாகமும் வளரும் குழந்தைக்கு நன்மை பயக்கக்கூடியதாகிறது.
மணப்பெண் போன்று அலங்காரம் செய்து உயர்ந்த மேடையில் அமரச்செய்து, தாய் வீட்டு சீதனங்களுடன், பலவகை இனிப்புகள், பழ வகைகள் இவைகளுடன், சந்தனம், குங்குமம் அறுகரிசி, பன்னீர் போன்றவைகளுடன் நலங்கு வைத்து, மங்கல ஆரத்தி எடுத்து, வளையல் அணிவித்து, கலந்து கொள்ளும் பெண்களுக்கும் தாம்பூலமும் வளையல்களும் கொடுப்பார்கள். பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்து, அப்பெண்ணை கணவன் வீட்டிலிருந்து தாய் வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள். குழந்தை பிறந்தவுடன், நல்லநாள் பார்த்து சீருடன் சென்று மீண்டும் கணவன் வீட்டிற்கு அழைத்து வருவார்கள். பெண்மைக்கும், தாய்மைக்கும் செய்யும் மிகச் சிறந்த மரியாதைப் பண்பு இது. இதனால் அந்தப் பெண்ணின் மனநிலையில் ஏற்படும் நம்பிக்கையும், நல்ல சிந்தனைகளும், வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தும்.
இறுதியாக, கணவனை இழந்த பெண்களுக்குச் செய்யும் தேவையற்ற சில சடங்குகள். அது போன்ற சடங்குகளைச் செய்யாவிட்டால் குடும்பத்தில் ஏதும் பிரச்சனை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் விருப்பமின்றி செய்பவர்களும் உண்டு.கண்மூடித்தனமான பழக்கங்கள் மண்மூடிப் போக வேண்டும். பண்டைய பண்பாடும், கலாச்சாரமும் காப்பாற்றப்பட வேண்டும் என்று சில பழமைவாதிகள் இன்ற்ளவிலும் செய்யும் சில சடங்குகளும், சம்பிரதாயங்களும் சம்பந்தப்பட்டவர்களுக்கு இரத்தக் கண்ணீர் வடியச் செய்யக்கூடியவை. இதெல்லாம் தேவைதானா, இதற்கெல்லாம் ஏதும் குறிப்பான காரணம் இருக்கிறதா, இந்தக் கொடுமைகளைக் கடைபிடிக்காவிட்டால் அப்படி என்னதான் நடந்துவிடும் என்ற வாதத்திற்கானதல்ல இது. . நம்முடைய பழைய சம்பிரதாயங்களும், பழக்க வழக்கங்களும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவைகள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதற்கான எல்லையை வகுக்க வேண்டும். அதாவது தேவையற்ற சில சடங்குகளும், சம்பிரதாயங்களும், மாற்றப்பட வேண்டும்.
கணவனை இழந்த துக்கத்தில் நொந்து போயிருக்கும் பெண்ணை ஈவு, இரக்கமே இல்லாமல் சடங்குகள் என்ற பெயரில் செய்யக்கூடியவைகள் கொடுமை. இன்று பெரும்பாலும் அவைகள் தவிர்க்கப்பட்டு வருவதும், கணவனை இழந்த பெண்களும், பொட்டு வைத்துக் கொள்வதும், சாதாரணமாக உடுத்துவதும் பழக்கத்தில் வந்து கொண்டிருப்பதும் ஆறுதலான விசயங்கள். வெண்ணிற ஆடையோ, காவி ஆடையோ உடுத்தும் வழமை பெரும்பாலும் மாறிவிட்டதும் குறிப்பிடத்தக்கது. மனித வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களுக்கு சடங்குகளும், சம்பிரதாயங்களும் மட்டுமே பொறுப்பாக முடியாது என்ற விழிப்புணர்வும் ஏற்பட்டிருப்பதன் விளைவு வருந்தச் செய்யும் தேவையற்ற சடங்குகளின் நிராகரிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று, பெருகி வரும் காதல் மணங்களும், பெற்றோர் சம்மத்ததுடன் நடைபெறும் பிற மத, இன, மொழியின் கலப்புத் திருமணங்களாலும், பல சம்பிரதாயங்கள் மறைந்து கொண்டிருக்கின்றன என்பதும் நிதர்சனம்.
உசாத்துணை : திருமணச் சீர்கள் பற்றிய விவரங்கள், புலவர் இராசு அவர்களின் “கொங்கு வேளாளர் சீர்களும், இலக்கியங்களும்” என்ற நூல்.
நன்றி: தமிழ் மரபு விக்கி.
தமிழ் மக்களிடையே நிலவிவரும் சில அர்த்தமுள்ள, அர்த்தமற்ற சடங்குகள் பற்றி அழகாக எழுதப்பட்டுள்ள கட்டுரை இது. குறிப்பாக நமது சமுதாயத்தில் பெண்கள் சிறப்பான இடம் பெற்றுள்ளனர். சிறு குழந்தை முதல் முதுமை அடையும் வரையில் பெண் என்பவள் பல்வேறு மாறுபட்ட நிலைக்கும் பொறுப்புக்கும் உட்படுகிறாள். வயதுக்கு வருவது ஒரு பெண் தாயாகும் தகுதி பெற்றுவிட்டாள் என்பதை ஊருக்கு அறிவிக்கும் வகையில் சிறப்பாக சில சடங்குகளுடன் கொண்டாடப்படுகின்றது. வேறூ இனங்களில் இல்லாத வழக்கம் இது. இதற்கான காரணங்களை மனோவியல் ரீதியில் கூறியுள்ள விதம் நன்று. அதில் இவ்வளவு தத்துவங்கள் உள்ளது வியப்பாக உள்ளது. உண்மையில் இது ஒரு உடல் ரீதியான ஹார்மோன்களின் செயல்பாட்டினால் உண்டாவதே.
திருமணம் செய்வதற்கு இத்தனை சடங்குகள் உள்ளதும் வினோதமே. இத்தனையும் செய்தும் மணமுறிவு ஏற்படுவது வேடிக்கையே.
கணவன் இறந்தபின் பெண்ணை விதவை என்று கூறி அவளை இப்படி சித்திரவதை செய்வது முட்டாள்தனமே.
இவற்றில் சில சடங்குகள் பெண்ணின் வீட்டாரிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கத்துடன் செய்யப்படுவதும் வழக்கில் உள்ளது பரிதாபமே!
சாதாரண உடலியல் மாற்றங்களுக்கு வேறு விதமான காரணங்கள் கூறி சடங்குகள் செய்வது அறிவீனம்…
நல்ல கட்டுரை படைத்துள்ள பவள சங்கரிக்கு பாராட்டுகள்! டாக்டர் ஜி.ஜான்சன்.
அன்பின் திரு டாக்டர் ஜான்சன்,
வணக்கம்.தங்களுடைய விளக்கமான கருத்துரைக்கும், மனம் திறந்த பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றி. உண்மைதான், இத்துனை சடங்குகளும், சம்பிரதாயங்களும் இருந்தும் பல திருமண பந்தங்கள் சரியான புரிதல் இல்லாதலால் அமைதியற்ற வாழ்க்கைக்கே வழிவகுக்கிறது. பெரும்பாலான இளைய தலைமுறையினர் அதிகப்படியான எதிர்ப்பார்ப்புகளும், தன்னிச்சையாக முடிவெடுக்கும் குணமும் கொள்வதாலும் சில சிரமங்களுக்கு ஆளாவதும் நிதர்சனம். சடங்குகள் செய்வதால் நன்மையும், தீமையும் கலந்தே இருப்பதும் உண்மையே.
அன்புடன்
பவள சங்கரி
திருமதி பவள சங்கரி அவர்களுக்கு நன்றி.
தமிழ்ப் பெண்கள் நீங்கள் கூறியுள்ள அத்துணை சமய சடங்குகளுடந்தான் தாலி அணிந்துகொள்கின்றனர் அதனால் தாலி புனிதமானது என்றும் கருதுகின்றனர். தாலிதான் பெண்ணுக்கு வெளி என்றும் கூறுவோர் உளர்.
ஆனால் இப்போதெல்லாம் நகர்ப்புறங்களில் தாலிதான் பெரிய ஆபத்தை உண்டுபண்ணுகிறது. நம்மின இளைஞர்களே தனியே செல்லும் பெண்களின் தாலியை அறுத்துக்கொண்டு ஓடிவிடுகின்றனர்! இதனால் தங்கத்தால் ஆன தாலிக்கொடியை அணிந்துகொண்டு வெளியில் செல்ல பயப்படுகிறார்கள்.ஒரு சிலர் தாலியை வீட்டில் பெட்டகத்தில் பத்திரம் செய்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, தெய்வ சந்ததியில் மந்திரங்கள் ஓதி புனிதமான வகையில் கட்டப்பட்ட தாலிக்கு மரியாதை செய்யாமல் , விவாகரத்து செய்யும்போது தாலியை கழற்றிவிட்டு மீண்டும் வேறொருவன் கட்டும் தாலியை அணிந்துகொள்கின்றனர். இப்படி செய்வதால் தாலியின் புனிதம் கெடுகிறது. அது வெறும் ஒரு அணிகலன் ஆகின்றது! இதனாலும் சடங்குகளின் முக்கியத்துவம் மழுங்கடிக்கப்படுகிறது.
தந்தை பெரியார் கொண்டுவந்த சீர்திருத்த திருமணங்களும் பல வகைகளில் சிறப்பானதே என்பதும் என் கருத்தாகும்…………………..
டாக்டர் ஜி.ஜான்சன்.
அன்பின் திரு டா. ஜான்சன்,
’தாலி பெண்களுக்கு வேலி’ என்பதில் எந்தக் காலத்திலும் மாற்றுக் கருத்து இல்லை. தாலி என்பது பொன்னால்தான் போட வேண்டும் என்பதில்லை. மஞ்சள் கயிறில் ஒரு துண்டு மஞ்சள் போட்டாலும் சரி, அல்லது திருமண மோதிரம் என்று போட்டாலும், காலில் மிஞ்சி என்கிற மெட்டி போட்டாலும் இவையெல்லாம் மங்கலச் சின்னங்கள். அதாவது அந்தப் பெண்ணிற்கு கேட்பதற்கு உரிமைப்பட்ட் உறவு இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவது. இவையனைத்தும் இருந்தால்தான் ஒரு பெண்ணிற்கு பாதுகாப்பு என்பதைவிட இவையெல்லாம் அவரவர் மன ஓட்டத்திற்கு ஏற்றவாறு இன்றைய இளைய சமுதாயத்தினரிடம் மாற்றமும் இருக்கிறது. புனிதமான தாலியை கணவன் இருக்கும்போது கழட்டி வைப்பது பெரும்பாவம் என்ற நம்பிக்கையெல்லாம் இன்று பெரும்பாலும் மாறிக்கொண்டிருக்கிறது. சர்வ சாதாரணமாக தாலியைக் கழட்டி வைத்துவிட்டு , தேவையானபோது ஒரு ஆபரணமாகப் பயன்படுத்தும் வழக்கமும் இன்றைய இளைய சமுதாயத்தினரிடம் பரவலாக இருக்கிறது. அதற்காக அவர்களிடம் கணவன், குடும்பம் என்ற கட்டுப்பாடெல்லாம் இல்லாமல் போய்விட்டது என்ற அர்த்தம் அல்ல… தாங்கள் சொல்வது போல தந்தை பெரியாரின் சீர்திருத்த திரும்ணங்கள் பழக்கத்தில் வரக்கூடிய வாய்ப்பும் உள்ளது. ஒன்று மட்டும் உறுதி, நம் தமிழர் பண்பாடும்,கலாச்சாரமும் காக்கப்பட வேண்டுமானால் ஓரளவிற்காக இது போன்ற கட்டுப்பாடுகள் அவசியமாகிறது. இது போன்ற கட்டுப்பாடுகள் மனதை கண்டபடி அலைய விடாமல் ஒரு நிலைப்படுத்தி அமைதியான வாழ்க்கைக்கு அச்சாரம் போடுவதும் உண்மை.
திருமதி பவள சங்கரிக்கு, வணக்கம். தங்களின் பதில் கண்டு மகிழ்ந்தேன்.நமது இந்திய பண்பாடுகளில் தாலி கட்டுவது தொடர்ந்து பின்பற்றப்படுகின்றது . இது இந்து மதச் சடங்காக இருந்தபோதிலும் கிறிஸ்துவர்களும் இதைப் பின்பற்றியே வருகின்றனர். கழுத்தில் தாலி இருப்பின் அவள் மணமானவள் என்பதற்கு ஒரு அடையாளச் சின்னமாகவும் தாலி பயன்படுகின்றது. இதனால் தாலி பெண்ணுக்கு வேலி என்றனர்.
தமிழ் நாடு நிலவரம் என்னவோ எனக்கு தெரியவில்லை. ஆனால் பல்லின மக்கள் வாழும் நாடுகளில் இந்தியப் பெண்கள் கழுத்தில் கட்டாயமாக பல பவுன்களில் தாலி செயின் அணிந்திருப்பார்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றாகும். இதனால் இந்தியப் பெண்மணிகள் தாலியை அறுத்துச் செல்லும் கூட்டத்தினரிடம் எளிதில் மாட்டிக்கொள்கின்றனர். இவ்வாறு தாலிமீது கண்வைத்து தனியாகச் செல்லும் தாய்மார்களின் தாலிக்கொடியைப் பறிப்பவர்கள் நமது தமிழ் இளைஞர்கள் என்பது கசப்பான உண்மையாகும்.இவர்களுக்கு பயந்துகொண்டு கவரிங் தாலி செயின் போட்டு சென்றால் அதை அறிந்தபின் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து ஏமாற்றிவிட்டதாகச் சொல்லி அடித்துவிட்டும் சென்றவர்களும் உள்ளனர். இது கற்பனை அல்ல …உண்மை!
இதனால்தான் தாலி பெண்ணுக்கு வேலி மட்டுமல்ல, அதை அணிந்து செல்வது சில வேளைகளில் பெண்ணுக்கு ஆபத்தையும் உண்டுபண்ணிவிடுகின்றது என்பதைத்தான் கூறவந்தேன்….நன்றி….டாக்டர் ஜி.ஜான்சன்.
அன்பின் திரு டா. ஜான்சன்,
தமிழ் நாட்டில் இன்றளவிலும் பெண்கள் பெரும்பாலும் ஓரளவிற்கு வசதியிருப்பவர்களும் கூட தங்கத்தில் தாலிச்சரடு போடும் வழக்கம கொண்டிருக்கிறார்கள். ஆரம்ப காலங்களில் தாலிக்கயிறு போடுவதுதான் வழக்கத்தில் இருந்தது. இன்றும் என் அம்மா மஞ்சள் கயிறில்தான் தாலிச்சரடு போட்டுள்ளார்கள். இடைக்காலத்தில்தான் நாகரீகம் மாற் ஆரம்பித்த போது அது பொன்னால் ஆன தாலியாக மாறிவிட்டிருக்கலாம். இன்றும் சில குடும்ப வழக்கப்படி திருமணத்தின்போது நூல் சேலை உடுத்துவதும், மஞ்சள் கயிறில் மட்டுமே தாலிக்கொடி போடுவதும் கட்டாய வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் பொன்னால் ஆன தாலிச்சரடு போடுவதால் பாதுகாப்பு இன்மை அதிகரிப்பதும் உண்மை. ஆனால் இதுவே நம் பலமும், பலவீனமாகவும் ஆகிவிடுகிறது. இவையனைத்தும் மன உணர்வுகளின் அடிப்படையிலான நம்பிக்கைகள்தான் இல்லையா. நன்றி
அன்புடன்
பவள சங்கரி