வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (2)

1

பவள சங்கரி

நம் சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்க்கையை  அமைத்துக் கொள்வது மட்டுமே வெற்றிகரமான வாழ்க்கையின் பூரண இரகசியம். இந்த உண்மையை உணர்ந்தவர்கள் வாழ்வில் மலர்ச்சி நிச்சயம். – சுவாமி விவேகானந்தர்

வெற்றிப் பாதையில் பயணிக்க விரும்புபவர் க்டைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஒரு அம்சம், மனதில் சலனமில்லாத மகிழ்ச்சி. ஆம், தெளிந்த நீரோடை  போல மனது தெளிவாக இருக்க வேண்டுமானால் சில அடிப்படைக் கொள்கைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. இதில் மிக முக்கியமானதொன்று, இருப்பதை எண்ணி மகிழ்வுறாமல், இல்லாததை எண்ணி ஏக்கம் கொள்வது. ஆம், வாழ்க்கையில் அனைத்தும் எனக்குக் குறைவில்லாமல் கிடைத்தால்தான் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று எண்ணினால் இந்தப் பிறவியில் அது சாத்தியமில்லை. காரணம் குறையில்லாத மனித வாழ்க்கை என்பது இதுவரை இல்லை என்பதுதான் சத்தியம். நம்முடைய மகிழ்வான பொழுதுகளை முழுவதுமாக தின்னக்கூடிய வல்லமை பெற்றது, நம்மிடம் இல்லாத ஒன்றை எண்ணி ஏக்கம் கொண்டு நிம்மதியைத் தொலைப்பதுதான். மகிழ்ச்சி என்பது என்றுமே இன்னொருவரால் வரக்கூடியது அன்று. நமக்காக நாமே உருவாக்கிக்கொள்வதே நிலையான மகிழ்ச்சி. மகிழ்ச்சியோ, துக்கமோ இதில் எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம்  என்பது நம்மிடமே உள்ளது.

நண்பர் ஒருவர் பல நாட்களாக கொள்முதல் செய்து வைத்திருந்த  சரக்கிற்கு பெருத்த  லாபம் கிடைக்கப்போவதாக கற்பனை செய்துகொண்டு மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக சந்தையின் நிலவரம் தலைகீழாக மாறிவிட, அவர் எதிர்பார்த்த இலாபம் பாதியாகக் குறைந்துவிட்டதேயொழிய நட்டம் ஏற்படவில்லை. ஆனாலும் அவர் தாம் எதிர்பார்த்த இலாபம் கிடைக்காமல் போனதற்கு உள்ளம் நொந்து, தான் ஒரு அதிர்ஷ்டக்கட்டை, எப்போதுமே தான் நினைப்பது எதுவுமே நடப்பதில்லை என்று வேதனையில் ஆழ்ந்தால் அது யாருடைய தவறு? கிடைத்த இலாபத்திற்கான மகிழ்ச்சியைக் கொண்டாடாமல், கிடைக்காமல் போனதற்காக மகிழ்ச்சியைத் தொலைத்தால் அதற்கு அவரேதானே பொறுப்பாக முடியும். ஆக மகிழ்ச்சி என்பது நம் கையில்தானே இருக்கிறது.

மகிழ்ச்சிக் கணக்கைக் கூட்டுங்கள்!

மகிழ்ச்சிக் கணக்கைக் கூட்டும் வழி மிகவும் எளிமையானது. அதற்கு முதல் படியாக நம்முடைய தேவைகளைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டியது அவசியம். ஆம் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் இடமளிக்கட்டும் உங்கள் ஆசைகள். இந்த எண்ணத்தில் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம். வழி மாறிய படகில் சிக்கிய ஒருவர் தனித்தீவிலிருந்து  ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டு வந்தால் எப்படியிருக்கும் அவருடைய மனநிலை. அவருடைய தேவைகள் என்னவாக இருக்கும். அவர் இழந்த, உயிர் வாழ அத்தியாவசியத் தேவையான அந்த சுத்தமான குடிநீரும் மற்றும் நல்ல உணவும்தானே? இதற்கான அர்த்தம் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு இது இரண்டும் மட்டும் போதும் என்பதில்லை. உயிர்வாழத் தேவையான அடிப்படை வசதி கிடைத்துவிட்டால் மேற்கொண்டு நாம் பெறும் ஒவ்வொன்றும் நம் மகிழ்ச்சிக் கணக்கில் சேர்ந்துகொண்டே போக வேண்டியதுதான் இல்லையா? அப்படி உணர்ந்து நம் உள்ள வங்கியில் மகிழ்ச்சிக் கணக்கைக் கூட்டிக்கொண்டே போனால் வெற்றிக்கான பாதை நம்முன் பரந்து விரியும்.

அடுத்து நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியங்களையும், அது எத்துனை சிறிதாயினும் சரி, அதனையும் நம் மகிழ்ச்சிக் கணக்கில் கூட்டிக் கொள்ளலாம். நல்ல வாழ்த்துக்களைப் பெற்றுத்தரும் நல்ல எண்ணங்களுடான சேவைகள் ஒரு மிகப்பெரும் வரப்பிரசாதம். அதை அனுபவிக்கப் பழகிவிட்டால் மகிழ்ச்சிக் கணக்கின் எண்ணிக்கை வெகு விரைவில் கூடிவிடும்.

வாழ்க்கையைத் தள்ளி நின்று இரசிக்கப் பழகுவதுதான் வேதனையை ஒதுக்கி, மகிழ்ச்சியை அணைப்பதற்கான எளிய வழி. நம் பிரச்சனைகளைத் தள்ளி நின்று பார்க்கும்போது அது மிகச் சாதாரணமானதாகத் தெரிவதோடு, அதற்கான தீர்வு காண்பதும் எளிதாகிவிடும். குழந்தையின் மழலை, மலர்களின் மணமும், அழகும், இயற்கையின் இனிமை, பறவைகளின் கானம் இப்படி இரசித்து மகிழ எத்தனையோ இருக்கிறதே.

நம்முடைய மகிழ்ச்சிக் கணக்கு கூடிக்கொண்டே வரும்போது மனதில் தோன்றும் நிம்மதி நம்மை சரியான பாதையில் வழிநடத்தி எளிதாக வெற்றி கொள்ளச் செய்யும் என்பதில் ஐயமேது?

பெற்ற சிறிய வெற்றியையும் மனம்கிழ்ந்து கொண்டாடப் பழகினாலே உற்சாகம் கொப்பளிக்காதா..  அடுத்த வெற்றிக்கும் அதுவே அச்சாரம் போடுமே. ஒவ்வொரு சிறிய வெற்றியும் நமக்கான ஆசிர்வாதம். அந்த ஆசிர்வாதத்தை மனதார ஏற்று நன்றி சொல்லும் போதும் உள்ளம் உவகை கொள்ளுமே. இப்படி மகிழ்ச்சியைக் கூட்டிக் கொண்டே போனால் வெற்றியின் ஒவ்வொரு படியையும் கடந்து கொண்டேயிருப்பதாகத்தானே அர்த்தமாகிறது.

தொடரும்

படத்திற்கு நன்றி :

http://rishikajain.com/2012/02/01/happiness-will-never-come-to-those-who/

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (2)

  1. அருமையான தன்னம்பிக்கைத் தொடர். நாம் பெற்ற சிறிய வெற்றியையும், அங்கீகாரத்தையும் கூடப் பெரிதாக எண்ணி மகிழ வேண்டும். எல்லாவற்றிற்கும் குறைப்பட்டுக்கொள்வது என்று ஆரம்பித்தால் நம் கண்ணெதிரே இருக்கின்ற இன்பங்களைக் கூடத் தொலைத்துவிட நேரிடும். தொடர்ந்து எழுதுங்கள்…ஆவலோடு காத்திருக்கின்றேன்.

    –மேகலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.