Category: கவிப்பேழை

  • நான் கொடுக்கவுமில்லை

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (39)

     

    நான் கொடுக்கவுமில்லை

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%A8%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B5%E0%AE%AE-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B2/[/mixcloud]

    10420113_533031216798230_7817792460307062254_n

     

    நான் கொடுக்கவுமில்லை
    நீ எடுக்கவுமில்லை
    எந்தன் இதயத்தில்
    உந்தன் இடம்

    தானும் தானுமாய் இருந்தது
    நானும் நீயுமாய்ப் பிரிந்தது
    தேனும் பாலுமாய்க் கலந்தது
    வானும் வானுமாய் இணைந்ததோ?

    கிழக்கு ஜன்னல் வானமும்
    மேற்கு ஜன்னல் வானமும்
    மொட்டை மாடி வானத்தில்
    கைகுலுக்கி முத்தமிட்டுக்
    காணாமற்போய்த் தானானதோ?

    இல்லை. அப்படி இல்லை இன்னும்.

    இறுகத் தழுவிக்கொள்ளும் போதெல்லாம்
    இடம் மாறுகின்றன இதயங்கள்
    இதனால்தான்
    இழந்ததாகவும் நுழைந்ததாகவும் அடைந்ததாகவும்
    ஏதேதோ உணர்வுகளும் விழைவுகளும்
    எப்போதும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன

    ஒன்று, தன்னை
    உணரத்தான்
    ஒன்றுபோல் இரண்டாய்
    இரண்டுபோல் ஒன்றாய்த்
    தானே மயங்கும் மாயத்தில்
    தயக்கமின்றித் தலைப்பட்டது

    சத்தியத்திற்குப் பாதைகள் கிடையாது, அந்த
    சந்நிதிக்குக் கதவுகள் கிடையாது, இது
    தத்துவமில்லை தரிசனம் என்பதைக்
    காதலைப்போல் வேறெதுவும் காட்டித் தராது

    என்னுயிரின் தேனூற்றே!
    எதிரே வா!
    இருமை இலாத அருமையை
    இருமையே உணர்த்தும் பெருமையை
    இவர்களுக்குக் காட்டுவோம் வா!
    இறுகத் தழுவியபடி
    இதழ்கள் அழுந்திப் பொருந்தியபடி
    இதயமொன்று இதயமொன்றில்
    இடைவிடாமல் தன்னைக் கரைத்தபடி……

    படத்திற்கு நன்றி

     

    Share
  • புதிதாய்ப் புதிதாய்ப் பூக்க..

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (38)

    புதிதாய்ப் புதிதாய்ப் பூக்க..

     

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AF/[/mixcloud]

    10609465_789022631159760_8447361610157700547_n
    உன்முகம் பார்த்துப் பார்த்துத்தான்
    ஒவ்வொரு காலையும் புலர்கிறது! அதில்
    உதிக்கும் புன்னகை தயவில்தான்
    உயிரும் உயிராய் மலர்கிறது
    என்மனம் என்றே எதுவுமில்லை
    இதயம் மட்டும் துடிக்கிறது, நீ
    எதிரே இருந்தும் எங்கே என்று
    ஏனோ பாவம் தவிக்கிறது…

    இதயம் என்பது உள்ளே இல்லை
    இரண்டு விழிகளில் சிரிக்கிறது
    இம்மியும் எனக்குத் துன்பம் வந்தால்
    இருகரம் ஒன்றாய் அணைக்கிறது
    கதைகள் கனவுகள் கற்பனை எல்லாம்
    கண்முன் தினமும் நடக்கிறது
    காலம் எந்தன் தலையணை அருகே
    கவிதைத் தாளாய்க் கிடக்கிறது

    ஒவ்வொரு சமயம் இருக்கின்றாயா
    என்றொரு கேள்வி குடைகிறது
    ஒவ்வொரு நேரம் உன்னைத் தவிர
    ஒன்றும் இல்லை புரிகிறது
    கவ்விய தாயின் வாயில், குட்டிக்
    கன்றாய்க் கிடக்கின்றேனே! உன்
    காதல் என்னும் காவல் ஒளியில்
    கண்ணைத் திறக்கின்றேனே!

    இதயக் கதவைத் திறந்து திறந்து
    எத்தனை முறைநான் பார்த்தாலும், அதன்
    இருண்ட மூலையில் புன்னகை நினைப்பை
    விளக்காய் ஏற்றிப் பார்த்தாலும்
    பதிந்து பதிந்து பரந்து விரிந்து
    பலவித வண்ண வடிவாக, உன்
    பாதம்! சதங்கை கீதம்! இவையே
    பார்த்து நெகிழ்கிறேன் என் தேவி!

    என்னை முழுதும் இழந்தேனா? அதில்
    ஏழை மகிழ்ந்தேனா?
    உன்றன் நிழலை அடைந்தேனா? அதில்
    ஊமை பிழைத்தேனா?
    என்னை இழப்பது போலோர் இன்பம்
    எதிலும் இல்லையம்மா! உன்
    எதிரே நின்று நின்று கரைவதே
    எனக்கு முக்தியம்மா!

    எங்கும் இருந்தும் எனக்கே எனக்காய்
    எதிரே வந்தாயே!
    எல்லாம் ஆகியும் ஏழையை அணைத்து
    எல்லாம் தந்தாயே!
    பொங்கும் புனலாய்க் கண்ணில் இதயம்
    பொங்கிப் பொங்கிவர..
    புன்னகை ஒன்றின் பூரணமாய் நீ
    புதிதாய்ப் புதிதாய்ப் பூக்க…..

    படத்திற்கு நன்றி

    Share
  • ஒரு வசன நடை…

    இசைக்கவி ரமணன்

     

     

    நடையாய் நடக்கிறேன், எந்த

    நாட்டமுமே இல்லாமல்; நான்

    நடக்கத்தான் வேண்டும் என்பதாக, யாரோ

    நாட்டியிருக்கிறார்கள் ஒரு சாத்திரத்தை

    என்பது போல

    நடையாய் நடக்கிறேன், எந்த

    நாட்டமுமே இல்லாமல்

     

    எனக்கென்னவோ நடை என்பது….

     

    ஏழ்மையின் ஏற்றங்களில் ஒன்றாகவும்

     

    வறுமையின் வெற்றிச் சின்னமாகவும்

     

    எந்தக் கூட்டத்திலும் எதிலும் படாமல்

    தனித்திருக்கக் கற்றுத்தரும்

    ஏகாந்தமாகவும்

     

    அந்தக் கிளையில் இந்தக் கணத்தில்

    ஒரு

    பறவை வந்து அமரக்கூடும் என்பதுபோல்

    ஏதோ ஒரு பாட்டு எனக்கு நேர்ந்துவிடத் தோதான

    ஏற்பாடு போலவும்

     

    உடலை வசக்கவும், உணவுண்ணத் தகுதியை

    அடைவதற்கான அழகான ஏற்பாடாகவும்

     

    கடலாய்ப் பரந்த சமூகக் கோலங்களைக்

    கடுகாய் இருந்து கணக்கெடுக்கும் வசதியாகவும்

     

    இன்னும் பலப்பல அழகுகளாகவும்

    இருக்கிறதே எனக்கு! உங்களுக்கு?

     

    நேரே நடந்தும் வளைந்து நடந்தும்

    தூரே பார்வையைத் தொலைத்து நடந்தும்

    நம்மோடு நாமிருக்கும் நலம்தினமும் நல்குகின்ற

    நடையல்லால் வேறுதவம் நமக்குச் சாத்தியமா?

     

    நடந்துகொண்டே இருக்கின்றேன்; எதையோ

    கடந்துகொண்டே இருப்பது போலவும், எதுவுமே

    நடக்காமல் ஏதோ ஒற்றைத்

    தடத்திலேயே நின்றுகொண்டிருப்பதைப் போலவும்

    அடிக்கடி தோன்றுகிறது, பம்பர

    அசைவு மயக்கத்தில் அசையாத தோற்றம் போல

     

    எத்தனை தெருக்களை

    இத்தனை நடைநடந்து விழுங்கினாலும்

    களைத்த கால்களும்

    களைக்காத தெருக்களும்

    மிஞ்சத்தான் செய்கின்றன

     

    தெருக்களும் தங்கள் களைப்புகளைத்

    திருட்டுத் தனமாக மறைத்துக்கொள்வதைச்

    சருகுகள் எனக்குச் சொல்லியிருக்கின்றன

     

    நடை என்பது

    எனக்கு நான் அன்றாடம்

    செய்துகொள்ள வேண்டிய மரியாதை

     

    நடை என்பது

    உறவு பிரிவுகளுக்கு வாய்ப்பில்லாத

    ஆகாசம் போன்ற நேசம்

     

    அதெல்லாம் இருக்கட்டும்

    அத்தனை பேர் முன்னிலையிலும்

    ஆருக்கும் தெரியாமல், உன்னை

    முத்தமிட்டுக் கொண்டு

    முழுதாகக் காதலிக்கும்

    முறிவற்ற சுகத்தையும்

    என்னுள்ளே வைத்தபடி

    ஏதேதோ பேசிக்கொண்டு

    கற்பனை என்னும்

    கட்டற்ற நிஜத்தில் நான்

    உயிரைப் புதைத்தபடி, இந்த

    உடல் வளையவர

     

    இந்த

    நடையை விட்டால், வேறு

    நாதிதான் எமக்குண்டோ!!

     

    31.08.2014 / ஞாயிறு / 16.21

    Share
  • திண்ணையின் கோரிக்கை

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (37)

    திண்ணையின் கோரிக்கை

     

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%A3/[/mixcloud]

     

    ஓவியம் : மாருதி
    ஓவியம் : மாருதி

     

     

    இந்த மரத்தடியில்
    இந்தத் திண்ணையைப் போல்தான்
    இருந்து வந்திருக்கிறேன்
    இத்தனை நாளும்

    மழை…வெய்யில்…புழுதிக் காற்று..
    மத்தியான வெப்பங்கள்
    எப்போதேனும் சற்று
    யாரோ நிலவுக்கு இட்ட முத்தங்கள்
    கோணம் தவறி உதிர்ந்தது போலக்
    கொட்டிய பனித்துளிகள்

    பறவைகளின் எச்சம்
    பசுவின் சாணம்
    சின்னக் குழந்தையின்
    சிறுவாய் உதிர்த்த மிச்சம்
    சிரித்தபடிப் பறக்கும் காலத்தின்
    சிறகுகளால் பதறிச்
    சிந்திவிட்ட காதலர்களின் கண்ணீர்

    யாரோ வீச
    எந்தக் காற்றிலும்
    ஏனோ அசையாமல்
    வீழ்ந்து கிடக்கின்ற கந்தைத் துணி

    ஊத ஊதப் பெருகிக்கொண்டேயிருக்கும்
    தூசு

    ஒட்டாமல் உறவாடாமல்
    புரளக் காத்திருக்கும் சருகு
    இன்னும் எத்தனை எத்தனையோ!
    மல்லாந்த குடிகாரன் போலத்தான்
    தன்வயமின்றிக் கிடக்கிறேன்
    தலை கிறுக்காத தெளிவுடன்

    உட்கார்ந்து சென்றவர்கள்
    ஒருக்களித்துப் படுத்தவர்கள்
    ஒன்றுமில்லாமல் வந்து
    ஒரு கவிதை வாய்க்கப்பெற்று
    உயிர்சிலிர்க்கச் சென்றவர்கள்…

    வந்தவண்ணம் சென்றவண்ணம்
    மாறிக்கொண்டே இருக்கும் இவற்றில்
    எனக்கென்ன வாழ்க்கை?
    ஏது அடையாளம்?

    தாமரை இலையில், யாரோ
    தவறவிட்ட ஒரு வைரக்கல் போல
    ஒரு முறை
    ஒரே ஒரு முறை
    உட்காராமல் உட்கார்ந்தாய் நீ

    மரத்துப்போய்க் கிடந்த என்
    மார்பைப் பிளந்துகொண்டு
    இத்தனை காலம் நான்
    சகித்த
    சாட்சியாய்ப் பார்த்த
    ஊரின் உணர்ச்சிகள் அத்தனையும்
    இயற்கையின் மாற்றங்கள் எல்லாமும்
    விழித்துக்கொண்டு
    விஸ்வரூபம் எடுத்துவிட்டன

    ஏதோ அமைதியை,
    தேடாமல் இங்கு வந்த
    உன்னெதிரே

    அதுவரை
    அமைதிமயமாய் இருந்த திண்ணை
    ஆரவாரப் பேய்க்கூட்டமாயிற்றே!

    சந்நிதிக்கு வாய்த்த தெய்வம்
    திண்ணையில் நேரலாமா?

    உனக்கொன்றும் இல்லை
    என்
    உளமார்ந்த மண்டியிடுதலும்
    உனக்குச் சங்கடம்தான்
    குட்டக்கைப் பிச்சையின்
    கும்பிடு போலே…

    சடமாகக் கிடந்து,, ஒரு
    சவமாகும் தறுவாயில் இருந்து
    சகத்தின் உணர்ச்சிக் கலகங்கள் அனைத்தும்
    உள்ளே புகுந்து
    உயிராகிக் கூத்தடிக்கும் நான்
    என்ன ஆவேன்?
    எங்கே போவேன்?

    என்னைப் பொருட்படுத்தும் கட்டாயம்
    இல்லைதான் உனக்கு

    ஆயினும்
    என் கதையைக் கேட்டதனால்
    என் கதியைப் பார்த்ததனால்
    சின்னக் கணத்தில், என் காதலின்
    சிலிரிப்பை ஏற்றதனால்
    வீழ்ந்து கிடந்தபடியே
    விண்ணப்பித்துக் கொள்கிறேன்…

    இன்னும் ஒருமுறை
    ஒரே ஒரு முறை
    உட்கார்ந்து
    செல்ல முடியுமா?

    நான்
    சடமாகாமல்
    எனக்கு விடுதலை இல்லை

    நான்
    சவமாகாமல்
    உனக்கு விமோசனம் இல்லை

     

    ஓவியத்திற்கு நன்றி : மாருதி

    Share
  • ஒரு கேள்வி கேட்கும் கேள்வி

    இசைக்கவி ரமணன்

     

     10606109_333216606854072_7032261539889036622_n

    எங்கிருந்தேன் எனத் தெரியாமல்

    எங்கோ தானே நானிருந்தேன்?

    எதுவோவாகத் தானே இருந்தேன்?

    எந்தக் கவலையும் இன்றித்தானே கிடந்தேன்?

     

    எவனுக்கோ என்ன ஆனதோ

    ஏன்? எதற்கு? எப்படி? என்றான்

    எதிரில் வந்து நின்றுவிட்டேன்

    எவனோ அதற்கு விடைசொன்னான்

    இவன் அதை வாங்கிச் சென்றுவிட்டான்

     

    எவனுக்குள் நான் எழுந்தேனோ

    அவனுக்குள் நான் தீர்ந்துபோயிருக்கலாம்

    எழுந்த எனக்கு மரணமேது?

    எழுதலைத் தவிர வாழ்வுதான் ஏது?

    எனக்கிந்த உலகில் தீர்வுதான் ஏது?

    சிரஞ்சீவியைப் போலச் சித்திரவதை ஏது?

     

    வினாக்குறியோடுதான்

    விதையும் முளைக்கிறது

    வியந்து நின்றுதான்

    விழுகிறது மழைத்துளி

     

    ஆர்வத்திற்கும் ஆச்சரியங்களுக்கும் நடுவே

    அறிவானால் அல்லாட்டம்

    அன்பானால் பொன்னூஞ்சல்

     

    கிளியாய் விடையைத் தடவிக்கொண்டு

    களிப்புடன் செல்கின்றானே!

    கிளைக்கப் போகிறது இன்னொரு கேள்வி

    களைக்கப் போகிறது காளைத் தோள்

    விடைபெற்று ஒரு போதும்

    வினா தீர்ந்து போய்விடாது

     

    எனக்கு விடை கொடு! இல்லை

    என்னிடம் விடைபெற்றுக்கொள்!

     

    நீ என்னில் கரையாமல்

    நான் உன்னுள் ஒடுங்காமல்

    நீயோ நானோ

    நிம்மதியைக் காண முடியுமா என்ன?

    எப்படி?

    எதற்கு?.

     

    30.08.2014 / சனி / 14.04

     

     

     

     

     

    Share
  • உள்ளமெங்கும்…..

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (36)

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%AE-%E0%AE%8E%E0%AE%99%E0%AE%95%E0%AE%AE/[/mixcloud]

     

    உள்ளமெங்கும் இங்குமங்கும்
    (பாடல்)

    Paintings of rural indian women - Oil painting (12)

    உள்ளமெங்கும் இங்குமங்கும் துள்ளும் மானே!
    பள்ளமெங்கும் வந்துபொங்கும் வெள்ளத் தேனே!

    உயிரில் இரவில் கண் சிமிட்டும் வானே
    உன்னிலே மின்னிமின்னிக் கரைந்தேனே
    உன் பந்துக்கன்ன வாசனை எனக்குத்தானே! (உள்ள)

    நெஞ்சில்
    தட்டுப்பட்ட காதலினைத் தொட்டுப்பார்த்தபோது ஒரு
    தோற்றம் எழுந்தது – எந்தக்
    கட்டுக்குள்ளும் சிக்கிடாத கடலொன்று கண்முன்பு
    விரிந்து வளர்ந்தது! நான்
    தொட்டெடுத்த ஒன்று, எந்தன் தோளைக்கொஞ்சும் போது, கரை
    தொட்டுக்கொள்ள உந்தன் தோளைப் பற்றிக்கொண்டு நின்றதென்ன தவறா? உன்
    பாதங்களைப் பற்றிக்கொண்டு பட்டுமுத்தம் இட்டுக்கொண்டு
    பாட்டுச் சொன்ன வேகமெந்தன் தவமா? (உள்ள)

    கையிரண்டில் அள்ளிக்கொள்ளக் கண்ணிரண்டும் பின்னிக்கொள்ளக்
    காலம் இருந்தது
    ஒன்றும் ஒன்றும் சேர்ந்தும் அது ஒன்று என்று நின்ற புதுக்
    கோலம் எழுந்தது! அடி
    என்ன இன்னும் சொல்ல? நீ இன்னும் நெஞ்சைக் கிள்ள, நான்
    முன்னும் பின்னும் இன்றியொரு புத்தம்புது விதையென
    மண்ணில் விழுந்தேன்! நீ
    முத்தமிடும் நேரத்தினில் சத்தமின்றிச் சோலையாக
    எழுவேன்!

     

    படத்திற்கு நன்றி : இளையராஜா

    Share
  • சமரசம்

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (35)

    சமரசம்

     

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/samarasam/[/mixcloud]

    10592800_716061665108146_5329376393953249671_n
    சமர்முடிந்து விட்டது
    சமரசம் செய்துகொண்டேன்
    சரணாகதி அடைந்துவிட்டேன்

    என்னுள் இருக்கும்
    உன்னிடம்

    பிரிவென்ற முள்ளிலே பட்டுத் திகைத்து
    நினைவென்னும் முகையைத் தொட்டு முகர்ந்து
    வடுவேதும் இல்லாமல் வளையவரும்
    வாசமிகு தென்றலைக் கண்டேன்

    நான்
    தேம்பி அழுததும்
    தெருவில் திசையின்றித் திகைத்து நின்றதும்
    தேய்ந்து மெலிந்ததெல்லாம், இப்படித்
    தென்றலாகத்தான்

    பாறைகள் கூறுபோட்டாலும்
    கோர முதலைகள் அசிங்கமாய்ப் புரண்டு குழப்பினாலும்
    ஈரமென்னும் இனியமொழி
    மாறாத நீராக

    கழுத்தைத் திருகினாலும்
    கானத்தின் ராகமல்லால், வேறுவிதமாய்க்
    கத்தத் தெரியாத வன்னப் பறவையாக

    ஆத்திரத்தில் அம்மா
    அடித்துப் போட்டாலும்
    அம்மாவைத் தவிர வேறு
    புகலிடம் இல்லாத சின்னக் குழந்தையாக

    சமரசம் செய்துகொண்டேன்
    சரணாகதி அடைந்துவிட்டேன்

    என்னுள் இருக்கும் உன்னிடம்
    எட்டி உதைத்தாலும்
    கட்டித் தழுவினாலும்
    பல்காட்டிப் பயன்படுத்திப்
    பாதையிலே எறிந்தாலும்

    உதறிவிட முடியாத நிழலாக
    ஒன்றும்செய்ய முடியாத சுவாசமாக
    சற்றும் விலகாமல்
    எதுவும் கோராமல்
    சாவகாசமாய் உன்னோடிருப்பேன்

    இனி நீ என்னை –
    எப்படி வேண்டுமானாலும் முயன்றுபார் –
    எதுவும் செய்ய முடியாது

    வெட்ட வெளியை வெட்டமுடியாது
    வீழ்ந்த சாம்பலை எரிக்க முடியாது
    சரணமடைந்தவனுக்கு
    மரணம் கிடையாது
    அவன்
    வாழ்வைக் கொடுத்துவிட்டுத்தான்
    வாசலில் நிற்கின்றான்
    வாஞ்சையோடு
    கொடுத்த நினைப்பு துளியும் இன்றி

    ஆம் நான்
    சமரசம் செய்துகொண்டேன்
    சரணாகதி அடைந்துவிட்டேன்

    என்னுள் இருக்கும்
    உன்னிடம்

    அதுசரி
    என்ன செய்யப் போகிறாய்
    உன்னுள் இருக்கும்
    என்னிடம்

    இருக்கிறேனா என்ன?!

    படத்திற்கு நன்றி

    Share
  • மன்னிப்பாயா?

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (34)

    மன்னிப்பாயா?

    (கேட்டு மகிழ)

    10532382_660585207366288_3852778901113805194_n

    ஊட்டிவிட்ட கைகளை நான் கடித்துவிட்டேனா? என்
    உயிரே! உனைத்துன்புறுத்தி உயிர் வளர்த்தேனா!
    காட்டுத் தீயில் மானைப்போலக் கலங்குகின்றாயே! இந்தக்
    கரிமுகத்தைக் கண்டேனோ மயங்கி நின்றாயே!

    வீதியிலும் மறைவினிலும் சின்னப் பிள்ளைபோல், நாம்
    விதியைமீறி அச்சமின்றி விளையாடியதும்
    பாதியிலே சொர்க்கமெல்லாம் பறிகொடுத்ததாய், நித்தம்
    பரிதவித்துப் பரிதவித்துப் பாசம் வளர்த்ததும், உன்

    சோதிமுகம் கண்டுகண்டு சுமைகள் தீர்ந்ததும், நீ
    சொல்லிச் சொல்லி ஏழையென்றன் உயிர்வளர்ந்ததும்
    சோதனைபோல் மாறியதேன் சொக்கத் தங்கமே! இதைச்
    சொல்லியழ யாருமில்லை தின்னும் வெட்கமே…

    உயிரைக்கண்ட பரபரப்பில் உளறிவிட்டேனா? இந்த
    ஊமைக்குமொழி வந்தவுடன் ஊளையிட்டேனா?
    தயிர்க்குடத்தை மத்தெடுத்து உடைத்துவிட்டேனா? என்
    தாயே! உன்நெஞ்சைக் காலால் உதைத்துவிட்டேனா?

    ஒருமுறை ஒரேமுறை மன்னிப்பாயா? என்
    உயிரையுன்றன் காலில்வைக்க அனுமதிப்பாயா?
    மரணமொரு பொருட்டில்லை மையலின் மகளே! நீ
    மறுத்துவிட்டால் மரணமற்ற நரகே புகலே!

    உன்குழந்தை என்னை நீ உதைத்துவிடாதே! என்
    உள்ளில்வேறு யாருமில்லை மறந்துவிடாதே!
    நின்றுநின்று உன்முகத்தை ஏங்கிப் பார்க்கிறேன், உன்
    நெஞ்சில்நான் இல்லையென்றால் நீங்கப் பார்க்கிறேன்…..

    உன்னைவிட்டு எங்கு செல்ல? எங்கும் நீதானே! இந்த
    உலகைவிட்டு எங்கு செல்ல என் உலகம் நீதானே! என்
    கண்ணா! உன் காலில் எந்தன் முகம் புதைக்கிறேன், நீ
    கருணை காட்டினால் கொஞ்சம் வாழ்ந்து பார்க்கிறேன்….

     

    படத்திற்கு நன்றி : இளையராஜா

    Share
  • சொல்லிச் செல்லேன்!

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (33)

    சொல்லிச் செல்லேன்!

    {கேட்டு மகிழ}

     

    Paintings of rural indian women - Oil painting (14)
    கணந்தோறும் நினைத்துக்கொண்டு
    கண்ணீரைத் துடைத்துக் கொண்டு
    ரணமான நெஞ்சைக் கெஞ்சி
    ரகசியமாய்த் தேற்றிக் கொண்டு

    திசைதொலைந்த பறவை போலே
    தெருமுனையில் திகைத்து நின்று
    வசைமலிந்த ஜீவனாக
    வலியே என் உயிராக…

    கசையடியின் உச்சத்தில்
    கண்ணீரும் வறண்டேபோய்
    இசையாத சிரிப்பொன்று
    இதழோரம் அரும்புவதாய்

    ஊருக்கு நான்சிரிக்க
    உள்ளமெல்லாம் காடெரிய
    காரிருளே இடறுமிருள்!
    யாருக்கு இது புரியும்?

    காதலெனும் கொடுமையின்முன்
    கடுநரகும் நந்தவனம்
    வேதனையில் வெந்தமனம்
    வீழ்ந்துசாம்பலாயெழுந்து
    வேதனையில் வெந்துவீழும்
    விலாவலிக்க விதிசிரிக்கும்

    உன்னையே எண்ணியெண்ணி
    உடலுருகும் உயிர்கரையும்
    என்னையுன்னில் காணவேண்டி
    ஏங்கியேங்கி எட்டிப்பார்க்கும்

    எப்போது வந்திடுவாய்
    என்றெனக்கு உறுதியொன்றை
    இப்போது வந்துசொல்லேன்
    என்னுயிரைத் தந்துசெல்லேன்!

     

    படத்திற்கு நன்றி : இளையராஜா

    Share
  • இன்னும் என்னை……

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (32)

    இன்னும் என்னை..
    (பாடல்)

    10178015_617178681706941_2670382240026680791_n
    இன்னும் என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?
    அன்பே என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?

    உன்விழியின் ஊஞ்சலிலே என்னெஞ்சம் உயிர்தேடும்
    காலையும் மாலையும் நினைவின்றி
    கனவும் நினைவும் துணையின்றி
    புல்லின் நுனியில் பனிபோலே
    துளித்துளியாய் நான் கரைகின்றேனே (இன்னும் என்னை)

    கார்த்திகை தீபம் எந்தன் மனம்
    தவழும் தென்றல் உந்தன் மனம்
    அணைப்பாயா? இல்லை அணைப்பாயா?
    அழகிய கைகளில் எடுப்பாயா?
    பார்வையில் உயிரை நிறைப்பாயா? என்னைப்
    பாதையில் மலராய் இறைப்பாயா?

    தவிப்பே தவமாய்க் கனல்கின்றேன், ஒரு
    தவத்தின் முனையில் கரைகின்றேன் (இன்னும் என்னை)

    வெற்றியும் தோல்வியும் ஏதுமில்லை
    வேதனை சாதனை பேதமில்லை
    காதலெனும் ஒரு போதையிலே, மனம்
    கலந்தபின்னே உயிர் மீதமில்லை
    இதுதான் தருணம் வருவாயா?
    எனக்கொரு ஜனனம் தருவாயா?

    மலரில் பனித்துளி பழியில்லையே!
    மெளனம் மரணத்தின் மொழியில்லையே! (இன்னும் என்னை)

    படத்திற்கு நன்றி

     

     

    Share
  • இனி ஒருகணம் பிரியாமல் ……

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (31)

    இனி ஒருகணம் பிரியாமல்

     {கேட்டு மகிழ}

    10610675_516956361770600_5810124378370175541_n
    நிம்மதியாகச் சென்று வா! எந்த
    நிலையையும் அன்பால் வென்று வா!
    நினைவும் கனவும் இறைவனையே
    நித்தம் விடாமல் தொழுது வா!
    நிம்மதி பிறர்க்குத் தந்து வா! அதில்
    நிம்மதி புதிதாய்க் கொண்டு வா!
    நீலக் கடலின் வெள்ளலைபோல், நீ
    நேரே சீக்கிரம் ஓடி வா!

    சந்நிதி என்பது அன்புமனம், அதில்
    சரவிளக்காவது தொழுதசுகம்
    சதியாய் இடைவரும் விதியைக் கூடச்
    சமன் படுத்துவதே சாந்த குணம்
    அந்நியம் அறியா அன்பினிலே, அந்த
    ஆண்டவன் நெய்தான் உன் நெஞ்சை
    அள்ளிக் கொடுக்கக் கொடுக்கப் பெருகும்
    அன்பைக் கொடுத்து அழகே வா!

    என்மனம் என்பதோ உன்விழியில்
    என்னுயிர்? உன் இமையின் அசைவில்
    என்கன வெல்லாம் உன்முகமே
    என் நினைவெல்லாம் உன் நலமே
    என்றோ ஏனோ பிரிந்தநதி
    இன்று கலந்தது அவனருளால்
    ஒன்றொன்றான இன்பத்தை, இன்னும்
    ஒருமுறை கொண்டாட ஓ…டி… வா!

    தினம்தினம் உனக்காய்ப் பிரார்த்திப்பேன்
    திசையெலாம் உன்முகம் பார்த்திருப்பேன்
    தினம்தினம் கண்முன் நீ வளர, பனித்
    திரையின் ஊடே களித்திருப்பேன்!
    எனையுன் உயிரில் கலந்தவளே! என்
    உயிரினும் இனிய தெய்விகமே!
    எனையினி ஒருகணம் பிரியாமல்
    இறுகத் தழுவிடச் சீக்கிரம் வா!

    படத்திற்கு நன்றி

    Share
  • நிறமில்லாதொரு

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (30)

    நிறமில்லாதொரு
    (பாடல்)

     

    Paintings of rural indian women - Oil painting (15)

    நிறமில்லாதொரு வெட்டவெளியாய் நீண்டு கிடந்தேன் நான்
    நீ வந்தாய் நிறம் தந்தாய் நிலம் கண்டது வான்!
    வடுவில்லாத வானம்போல வாழ்ந்திருந்தேன் நான்
    நீ கொஞ்சம் விலகும்போது சிவந்து போனது வான்!

    உனக்கும் எனக்கும் உறவுவைத்த ஒருவன் அவனங்கே
    உன்னை என்னை உருகவைக்கும் உயிரின் காதலிங்கே
    எனக்கும் உனக்கும் தொடரும் நெருக்கம் ஏது உரிமையிங்கே
    எல்லாமிருந்தும் ஏதுமில்லை என்ன வாழ்க்கை இங்கே? (நிற)

    உயிரினுள்ளே உயிரின் ஒளியாய்ப் பஞ்சுப் பதம்வைத்தாய்
    உள்ளம் முழுதும் வெள்ளிநிலவை மெள்ள ஏற்றிவைத்தாய்
    அயர்விலாமல் பரிவுகாட்டும் அன்பின் அதிசயமே! உன்னை
    அடைந்தும் அடையா துடையும் குமிழாய் வாழ்க்கை விதிவசமே (நிற)

    முள்ளில் நடக்கும் நமது வாழ்வின் முடிவு தெரியாது! இதை
    மூட்டிவைத்துப் பிரிக்கும் விதியின் மூலம் புரியாது
    இருந்தபோதும் இணைந்துவாழ்வோம் விடியும் காலம் வரும், நம்
    விதியைத் தாண்டி வாழ்க்கை ஒன்றை நமது காதல் தரும் (நிற)

    படத்திற்கு நன்றி

    Share
  • எங்கே சிட்டுக்குருவி?

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (29)

    எங்கே சிட்டுக்குருவி?

    {கேட்டு மகிழ}

     

    10317549_739794126082611_4567379894746634661_o
    சிட்டுக்குருவி சிறகடித்துப் பறந்துவிட்டதா? என்
    சின்னச்சின்ன முத்தங்களை மறந்துவிட்டதா?
    கட்டிக்கொள்ளும் போதுகொஞ்சம் கசந்துவிட்டதா? ஒரு
    கணப்பொழுதில் என்காதல் கரைந்துவிட்டதா?

    இப்படியென் பாதையென்றும் வளைந்ததில்லையே! என்
    இதயத்தை இப்படிநான் இழந்ததில்லையே!
    தப்புசரி என்றுமாறும் வாதங்களெல்லாம், அவள்
    தரிசனத்தின் ஒளியினிலே தகர்ந்துபோனதே!

    வெந்துமனம் ஒன்றிங்கே விம்முகின்றது, அதன்
    வேதனைகள் மெளனத்திலே பம்முகின்றது
    அந்தமனம் எந்நிலைமை அறிந்துகொள்ளுமா? என்னில்
    அவளன்றி யாருமில்லை புரிந்துகொள்ளுமா?

    மண்ணில்வீழும் நேரம் வாழ்வில் மாலை நேரமா? அது
    மண்ணில் வீழும்போது பாவம் மலரலாகுமா?
    கண்ணின் சின்னத் திரைக்குப்பின்னே கடல்கள் குமுறுதே! என்னைக்
    கட்டிக்கொண்ட தேவதையைத் தேடிப் பதறுதே!

    விட்டுவிட்டுப் போவதுனக்கு வாடிக்கைதானா? என்னை
    வீழவைத்துப் பார்ப்பதுமோர் வேடிக்கைதானா?
    தொட்டுச்சொன்ன சத்தியங்கள் மறந்துபோனதா? இதழைத்
    தொட்டுத் தொட்டுச் சொன்னதெல்லாம் பறந்துபோனதா?

    கொஞ்சமேனும் மனமிருந்தால் ஓடிவந்திடு! மொத்தம்
    கொள்ளைபோன நிம்மதியைக் கொண்டு தந்திடு!
    கொஞ்சம்கூட இடைவெளியே மிஞ்சிடாமலே, என்னைக்
    கொஞ்சிக்கொஞ்சி உந்தன்நெஞ்சில் கூட்டிவைத்திடு…

    படத்திற்கு நன்றி

    Share
  • வளையும் பாதை

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (28)

     

    வளையும் பாதை

    {கேட்டு மகிழ}

    10270279_276364999201423_1998995586313210948_n
    இது மனமா?
    இல்லை வானமா?
    இல்லை வானமே ஒற்றை மேகமாக மாறிவிட்டாதா?

    வீதியில் நான் நடக்கும்போதும், என்
    விரலை ஒரு 
    பிஞ்சு மேகம்தான் 
    பிடித்துக்கொண்டு நடக்கிறது

    புழுதியில்லை..காற்றின் அலட்டலில்லை
    ஒரு
    பொற்சிலைச் சிவனின் புன்னகை போலப்
    பொடித்தூறல்..
    தெரிந்தும் தெரியாமல்..இடைவிடாமல்
    விட்டுவிட்டு விழுகின்ற திவலைகளால்
    தெளிவுக்குத் திரையே விளக்கமாகும் விசித்திரம்!

    சாலையிலே ஈரமிருக்கிறது
    நேற்றிரவில் கன்னத்தை நீ
    கவ்வி இட்ட முத்தத்தின் நினைவு போல

    தற்செயலாய் வந்ததுபோல் பாவனை காட்டித்
    தானே அதில்வந்து வீழ்ந்தமலர்போல்
    உன்முகம் அதிலும் வந்து என்னை
    உற்றுப் பார்ப்பது எதற்கோ!

    கள்ளக் காதலர்கள்போல்
    வெளிச்சமும் இருளும் தழுவிக் கிடக்கும் இந்த
    வேளைக்கு என்ன பெயர் வைப்பது?
    காலையின் வெண்மையும் இல்லை
    மாலையின் செம்மையும் இல்லை
    இரவின் தனிமை மட்டும்
    இருப்பதுபோல் தொடர்கிறது, ஓர்
    இடைஞ்சலற்ற நிசப்தம்

    இருப்பது எங்கே
    நடப்பது எதை நோக்கி
    எதுவும் தெரியாமல்தான், அதோ
    வளையும் பாதையில்
    வளைகிறது வாழ்க்கை

    வளைவுதான், வெற்று இருப்பில்
    வனப்பைக் கொண்டுவந்து சேர்த்து
    வசீகரிக்கிறது

    என்ன இருக்கும் அந்த வளைவில்?

    பாசை படிந்த பாறையின் ஓரம், தன்
    பட்டுக் கண்களால், ஒரு
    நீலமலர் கண்சிமிட்டி
    நெஞ்சு லேசாகிப் போகுமோ?

    சட்டையைக் கழற்றிவிட்டுச்
    சகியுடன் புணர்வதற்காகப்
    பளபளவென்று சாலையைக் கடக்குமோ
    படமொடுங்கிய பாம்பு?

    அவசரம் மிக அவசரமென்று
    பரவசமாகக் குறுக்கே
    பறக்குமோ ஒரு சிட்டுக்குருவி?

    எது விலகிச்சென்றதென்று
    என்னை அறியவிடாமல்
    புதர்கள் சிரித்துக்கொள்ளுமோ?

    ஆயிரம் வசந்த காலங்களை
    அள்ளிப் பூங்கொத்தாக்கி
    அதரம் குவித்து
    அவற்றை முகர்ந்து மகிழ்ந்தபடி

    இதயத்தை மீட்பின்றி
    இன்னும் இன்னும் 
    கண்களால் கவர்ந்தபடிக்
    காத்திருப்பாயா நீ!

     

    படத்திற்கு நன்றி

    Share
  • கண்ணே கலங்காதே

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (27)

     

     

    கண்ணே கலங்காதே

    {கேட்டு மகிழ}

    4f45772108e844927371fa00bc5be2c3

     

    மாயை எனச்சிலர் மருட்டுகிறார், இது
    மாறும் எனச்சிலர் சிரிக்கின்றார்
    நேயம் எனச்சிலர் சொல்கின்றார், சிலர்
    நேற்றைய தொடர்ச்சி என்கின்றார்
    வாயொன் றிருந்தால் போதாதோ? பல
    வாறாய் வார்த்தைகள் பெருகாதோ?
    நீயேன் கண்ணே கலங்குகிறாய்? இது
    நிஜமா என்றா மயங்குகிறாய்?

    தீயை அணைக்க முடியாது, இனி
    திரும்பிச் செல்லவும் வழியேது?
    காயைப் படைத்தவன் இனிமையினைக்
    கடைசியில் எதற்கு வைத்தானோ?
    காலம் வந்தால் கனியாதோ? அது
    கனியும் போதில் இனிக்காதோ?
    ஆலம் விழுதின் ஊஞ்சலிலே, நாம்
    அசைவோம் முழுமதி இரவினிலே!

    எதிரே விரியும் பாதையிலே
    எத்தனை வளைவுகள் திருப்பங்கள்!
    ஏக்கம் தூங்கும் இதயத்தில்
    எத்தனை ரகசிய விருப்பங்கள்!
    புதிரின் மடியில் நாமெல்லாம், சிறு
    பூக்கள் போலே உதிர்கின்றோம், ஒரு
    கதியின் வசத்தில் வாழ்கின்றோம், அதைக்
    கண்ணீர்த் துளியால் நனைக்கின்றோம்

    முற்றத் தினிலே முழுநிலவு
    முன்னறி வித்து வருகிறதா?
    மொட்டை மாடியில் கோடைமழை
    முன்னுரை ஏதும் தருகிறதா?
    பற்றிக் கொள்ளும் சருகெல்லாம்
    தயங்கித் தயங்கி எரிகிறதா?
    பாலத் தினிலே சந்திப்பு! கீழே
    பாயும் நதியிது புரிகிறதா?

    பாசம் நட்பு நேசமென
    பலமுக மானது காதல்தான்
    பற்றைக் கடந்த பற்றாக
    பல்குவ தெல்லாம் காதல்தான்
    ஈசன் நினைப்பும் காதல்தான், தமிழ்
    இன்பம் தோய்வதும் காதல்தான்
    எங்கோ இருந்த இருமுகிலை, இங்கே
    இணைத்துப் பொழிவதும் காதல்தான்

    உனக்காய் வாழ்வதில் சுகமுண்டு, அது
    உனக்கே உனக்காய் ஆனாலும்
    உள்ளுக் குள்ளே ரகசியமாய், நித்தம்
    உறுத்துவதிலும் சுகமுண்டு
    எனக்கே எனக்காய் நீயும்தான், உன்
    நெஞ்சை மறைத்து வாழ்கின்றாய், அதன்
    எதிரே காதல் போதாமல்
    ஏழை திகைத்து நிற்கின்றேன்……..

    படத்திற்கு நன்றி

    Share