இசைக்கவி ரமணன்

 

உனக்கே உனக்காக  (27)

 

 

கண்ணே கலங்காதே

{கேட்டு மகிழ}

4f45772108e844927371fa00bc5be2c3

 

மாயை எனச்சிலர் மருட்டுகிறார், இது
மாறும் எனச்சிலர் சிரிக்கின்றார்
நேயம் எனச்சிலர் சொல்கின்றார், சிலர்
நேற்றைய தொடர்ச்சி என்கின்றார்
வாயொன் றிருந்தால் போதாதோ? பல
வாறாய் வார்த்தைகள் பெருகாதோ?
நீயேன் கண்ணே கலங்குகிறாய்? இது
நிஜமா என்றா மயங்குகிறாய்?

தீயை அணைக்க முடியாது, இனி
திரும்பிச் செல்லவும் வழியேது?
காயைப் படைத்தவன் இனிமையினைக்
கடைசியில் எதற்கு வைத்தானோ?
காலம் வந்தால் கனியாதோ? அது
கனியும் போதில் இனிக்காதோ?
ஆலம் விழுதின் ஊஞ்சலிலே, நாம்
அசைவோம் முழுமதி இரவினிலே!

எதிரே விரியும் பாதையிலே
எத்தனை வளைவுகள் திருப்பங்கள்!
ஏக்கம் தூங்கும் இதயத்தில்
எத்தனை ரகசிய விருப்பங்கள்!
புதிரின் மடியில் நாமெல்லாம், சிறு
பூக்கள் போலே உதிர்கின்றோம், ஒரு
கதியின் வசத்தில் வாழ்கின்றோம், அதைக்
கண்ணீர்த் துளியால் நனைக்கின்றோம்

முற்றத் தினிலே முழுநிலவு
முன்னறி வித்து வருகிறதா?
மொட்டை மாடியில் கோடைமழை
முன்னுரை ஏதும் தருகிறதா?
பற்றிக் கொள்ளும் சருகெல்லாம்
தயங்கித் தயங்கி எரிகிறதா?
பாலத் தினிலே சந்திப்பு! கீழே
பாயும் நதியிது புரிகிறதா?

பாசம் நட்பு நேசமென
பலமுக மானது காதல்தான்
பற்றைக் கடந்த பற்றாக
பல்குவ தெல்லாம் காதல்தான்
ஈசன் நினைப்பும் காதல்தான், தமிழ்
இன்பம் தோய்வதும் காதல்தான்
எங்கோ இருந்த இருமுகிலை, இங்கே
இணைத்துப் பொழிவதும் காதல்தான்

உனக்காய் வாழ்வதில் சுகமுண்டு, அது
உனக்கே உனக்காய் ஆனாலும்
உள்ளுக் குள்ளே ரகசியமாய், நித்தம்
உறுத்துவதிலும் சுகமுண்டு
எனக்கே எனக்காய் நீயும்தான், உன்
நெஞ்சை மறைத்து வாழ்கின்றாய், அதன்
எதிரே காதல் போதாமல்
ஏழை திகைத்து நிற்கின்றேன்……..

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கண்ணே கலங்காதே

  1. /*பாசம் நட்பு நேசமென
    பலமுக மானது காதல்தான் */  அற்புதம்
    கண்ணே கண்ணே கலங்காதே – நம்
    காதல் என்றும் அழியாதே
    கவிதைப் பரிசாய் தரும் முத்தம்
    காலத்தாலும் அழியாதே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *