இசைக்கவி ரமணன்

 

உனக்கே உனக்காக   (31)

இனி ஒருகணம் பிரியாமல்

 {கேட்டு மகிழ}

10610675_516956361770600_5810124378370175541_n
நிம்மதியாகச் சென்று வா! எந்த
நிலையையும் அன்பால் வென்று வா!
நினைவும் கனவும் இறைவனையே
நித்தம் விடாமல் தொழுது வா!
நிம்மதி பிறர்க்குத் தந்து வா! அதில்
நிம்மதி புதிதாய்க் கொண்டு வா!
நீலக் கடலின் வெள்ளலைபோல், நீ
நேரே சீக்கிரம் ஓடி வா!

சந்நிதி என்பது அன்புமனம், அதில்
சரவிளக்காவது தொழுதசுகம்
சதியாய் இடைவரும் விதியைக் கூடச்
சமன் படுத்துவதே சாந்த குணம்
அந்நியம் அறியா அன்பினிலே, அந்த
ஆண்டவன் நெய்தான் உன் நெஞ்சை
அள்ளிக் கொடுக்கக் கொடுக்கப் பெருகும்
அன்பைக் கொடுத்து அழகே வா!

என்மனம் என்பதோ உன்விழியில்
என்னுயிர்? உன் இமையின் அசைவில்
என்கன வெல்லாம் உன்முகமே
என் நினைவெல்லாம் உன் நலமே
என்றோ ஏனோ பிரிந்தநதி
இன்று கலந்தது அவனருளால்
ஒன்றொன்றான இன்பத்தை, இன்னும்
ஒருமுறை கொண்டாட ஓ…டி… வா!

தினம்தினம் உனக்காய்ப் பிரார்த்திப்பேன்
திசையெலாம் உன்முகம் பார்த்திருப்பேன்
தினம்தினம் கண்முன் நீ வளர, பனித்
திரையின் ஊடே களித்திருப்பேன்!
எனையுன் உயிரில் கலந்தவளே! என்
உயிரினும் இனிய தெய்விகமே!
எனையினி ஒருகணம் பிரியாமல்
இறுகத் தழுவிடச் சீக்கிரம் வா!

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *