நம் இந்தியப் பொருளாதாரமும் தலை நிமிர்ந்து நிற்குமா?

1

பவள சங்கரி

தலையங்கம்

ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டின் போக்குவரத்து, தொழில் வளம், தொழிலாளர் வளம், தொழில்நுட்ப தொழிலாளர்களின் எண்ணிக்கை, தங்கம், மற்றும் மக்களின் வாங்கும் சக்தி, இவைகளைக் கொண்டுதான் நிர்ணயம் செய்யப்படுகிறது. நாட்டின் எந்த ஒரு வளர்ச்சிக்கும், அடிப்படை, பிரச்சனை இல்லாத சிறந்த போக்குவரத்து வசதிகள். ஆனால் பொது மக்களுக்கு சுமையைக் கூட்டும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில், பயணம் செய்வதற்கான கட்டணங்கள் எந்த முன்னறிவிப்புமின்றி 15 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சுங்கச் சாவடிகள் பெரும்பாலும் தனி நபர்களால் நடத்தப்படுகின்றன. இப்போது இந்தச் சுங்கச் சாவடிகளில் திடீரென்று இவ்வளவு அதிகமாகக் கட்டண உயர்விற்கான காரணம் என்ன என்பதே விளங்கவில்லை. நாட்டின் ஏதோ ஒரு மூலையில் தயாரிக்கப்படும் பொருள் அந்நிய செலாவணி ஈட்டித் தருவதாகவோ அல்லது மக்களின் பயன்பாட்டில் இருப்பதாக இருந்தாலும் இந்தச் சுமை விதிக்கப்படுகிறது. இது பொது மக்களையோ அல்லது உற்பத்தியாளர்களையோ சென்று அடைவதை நாமறிவோம். எப்பொழுதோ போட்ட சாலைக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் கப்பம் கட்ட வேண்டும்.. இன்னும் எவ்வளவு முறை இது உயர்த்தப்படும் என்றும் தெரியவில்லை. சில காலம் முன்பு மராட்டிய மாநிலத்தில் நடந்தது நினைவிருக்கும். நவநிர்மான் சமிதியைச் சார்ந்தவர்கள் திடீரென்று ஒரு நாள் ‘சுங்க வரி இனி ஒருவரும் செலுத்தப் போவதில்லை’ என்று கூறி சுங்கச் சாவடிகளை உடைத்து எறிந்தார்கள். உடனே மராட்டிய மாநில அரசு பேச்சு வார்த்தை நடத்தி, சுங்கச் சாவடிக் கட்டணங்களை பெருவாரியாகக் குறைத்தது. அப்படியிருக்க இப்பொழுது மீண்டும் இந்தியா முழுவதும் சுங்கக் கட்டணங்களை எதற்காக அதிகப்படுத்த வேண்டும்? ஒரு சில தனி நபர்கள் மட்டுமே இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் பயன் பெறப்போகிறார்களே தவிர, இதனால் நாட்டிற்கு வேறு என்ன நன்மை விளையப்போகிறது?

போக்குவரத்திற்கும், நாட்டிற்கும் முதுகெலும்பாக இருக்கக்கூடிய பெட்ரோலியப் பொருட்களுக்களின் விலைகள், சந்தை விலைக்கும், ரூபாயின் மதிப்பிற்கும் ஏற்றவாறு லிட்டருக்கு குறைந்தபட்சம் 15 ரூபாய் குறைக்கப்பட வேண்டும். ஆனால் அது குறைக்கப்படவில்லை. வெறும் 2 அல்லது 3 ரூபாய்தான் குறைக்கப்பட்டுள்ளது. இயற்கை எரிவாயுவைப் பிரபலப்படுத்தாததன் காரணத்தினால் அந்நிய செலாவணியைக் குறைக்க முடியாமல் போகிறது. ரிலையன்சு நிறுவனத்தினர் மற்ற எரிவாயு கிணறுகளிலிருந்து உற்பத்தியை எப்போது அதிகப்படுத்துவார்கள்? உற்பத்தியை அதிகப்படுத்துவதைவிட்டு ஆண்டிற்கு ஆண்டு உற்பத்தி அளவு குறைந்துகொண்டே வருவதற்கான காரணமும் விளங்கவில்லை. இதற்கான புள்ளிவிவரங்கள் மிகக் குறைவான உற்பத்தியையே காட்டுவதும் வருத்தத்திற்குரிய விசயம். இயற்கை எரிவாயுவின் உற்பத்தியை இந்திய நவரத்தின குழுமங்களின் ஒன்றான எண்ணெய் உற்பத்திக் கழகமே உற்பத்தி செய்தால் பலன் கூடும் என்பதே வல்லுநர்களின் கருத்து.

நாள்தோறும் தங்கம் பெருமளவில் சுங்க வரி செலுத்தப்டாமலே நாட்டிற்குள் கள்ளத்தனமாக வருவதை அரசு முறைப்படுத்தினால் நலம். நகை உற்பத்தியாளர்கள் தங்கள் தேவைக்காக வாங்கக்கூடிய தங்கத்தின் அளவில் 50 சதவிகிதத்தை ஏற்றுமதி செய்வதோடு, தங்கள் தேவைக்கு வேண்டியதை கட்டுப்பாடின்றி இறக்குமதி செய்ய அனுமதிப்பதன் மூலமாக நமக்கு அந்நிய செலாவணி அதிகமாகக் கிடைப்பதோடு சுங்க வரியும் பெற முடியும். மறைமுகமாகத்  தங்கம் வாங்கி விற்கக்கூடிய தவறுகளையும் கட்டுப்படுத்த இயலும்.

இந்திய ரூபாயின் மதிப்பை அதிகப்படுத்துவதற்கான குறிப்பிட்ட எந்த நடவடிக்கையும் இதுவரை அரசினால் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. விவசாய விலை பொருட்களாகட்டும், உற்பத்திப் பொருள்களாகட்டும், இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகரித்தால் மட்டுமே இந்திய பொருளாதாரம் தலை நிமிர முடியும். மூலப் பொருட்களின் ஏற்றுமதியைக் குறைத்து, உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகப்படுத்துவதை ஊக்குவித்தால் நாட்டின் பொருளாதாரம் சீரடைவதோடு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கூடும் வாய்ப்பும் அதிகரிக்கலாம்.

அதிக வட்டிச் சுமையினால் கல்விக் கடன் வாங்குவோரின் எண்ணிக்கை சதவிகிதம் இன்று வெகுவாகக் குறைந்துள்ளது. கல்விக் கடன் முதலில் வாங்கியவர்களின் சதவிகிதத்தைவிட இன்று 25 % குறைந்து 9 சதவிகிதமாக உள்ளது. இது நாட்டின் வளர்ச்சியை மிகவும் பாதிக்கக்கூடிய ஒரு விசயம். இது போல வீட்டு கட்டுமானத்திற்கு கடன் பெறுவோர் மற்றும் அதற்கான தொகையும் கனிசமாகக் குறைந்துள்ளது. அதே சமயம், consumer durables என்று கூறக்கூடிய மக்கள் பயன்பாட்டிற்கு வாங்கக்கூடிய பொருட்களின் சதவிகிதமும், தொகையும் அதிகரித்துள்ளது. கடன் அட்டைகளுக்கான வாராத கடன் தொகையின் சதவிகிதமும் அதிகமாக உள்ளது. இவையனைத்தும் நாட்டின் பொருளாதாரத்தை கேள்விகுறியாக்கிக் கொண்டிருக்கிறது. அரசு, கல்விக் கடனை ஊக்குவித்து பொருளாதாரத்தை சீர் தூக்கினால் நாடே நலமடையும் என்பது உறுதி.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on "நம் இந்தியப் பொருளாதாரமும் தலை நிமிர்ந்து நிற்குமா?"

  1. This is one of the important topic to be discussed among State and Central Govt.
    In some states the people attack Tool booth vehemently, then the toll booth has been removed
    certain unimportant places. Both the State and the Central having consultation with
    the Public committee and resolve the enhancement of toll fares.

    Raa.Parthasarathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.