திண்ணையின் கோரிக்கை
இசைக்கவி ரமணன்
உனக்கே உனக்காக (37)
திண்ணையின் கோரிக்கை
[mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%A3/[/mixcloud]

இந்த மரத்தடியில்
இந்தத் திண்ணையைப் போல்தான்
இருந்து வந்திருக்கிறேன்
இத்தனை நாளும்
மழை…வெய்யில்…புழுதிக் காற்று..
மத்தியான வெப்பங்கள்
எப்போதேனும் சற்று
யாரோ நிலவுக்கு இட்ட முத்தங்கள்
கோணம் தவறி உதிர்ந்தது போலக்
கொட்டிய பனித்துளிகள்
பறவைகளின் எச்சம்
பசுவின் சாணம்
சின்னக் குழந்தையின்
சிறுவாய் உதிர்த்த மிச்சம்
சிரித்தபடிப் பறக்கும் காலத்தின்
சிறகுகளால் பதறிச்
சிந்திவிட்ட காதலர்களின் கண்ணீர்
யாரோ வீச
எந்தக் காற்றிலும்
ஏனோ அசையாமல்
வீழ்ந்து கிடக்கின்ற கந்தைத் துணி
ஊத ஊதப் பெருகிக்கொண்டேயிருக்கும்
தூசு
ஒட்டாமல் உறவாடாமல்
புரளக் காத்திருக்கும் சருகு
இன்னும் எத்தனை எத்தனையோ!
மல்லாந்த குடிகாரன் போலத்தான்
தன்வயமின்றிக் கிடக்கிறேன்
தலை கிறுக்காத தெளிவுடன்
உட்கார்ந்து சென்றவர்கள்
ஒருக்களித்துப் படுத்தவர்கள்
ஒன்றுமில்லாமல் வந்து
ஒரு கவிதை வாய்க்கப்பெற்று
உயிர்சிலிர்க்கச் சென்றவர்கள்…
வந்தவண்ணம் சென்றவண்ணம்
மாறிக்கொண்டே இருக்கும் இவற்றில்
எனக்கென்ன வாழ்க்கை?
ஏது அடையாளம்?
தாமரை இலையில், யாரோ
தவறவிட்ட ஒரு வைரக்கல் போல
ஒரு முறை
ஒரே ஒரு முறை
உட்காராமல் உட்கார்ந்தாய் நீ
மரத்துப்போய்க் கிடந்த என்
மார்பைப் பிளந்துகொண்டு
இத்தனை காலம் நான்
சகித்த
சாட்சியாய்ப் பார்த்த
ஊரின் உணர்ச்சிகள் அத்தனையும்
இயற்கையின் மாற்றங்கள் எல்லாமும்
விழித்துக்கொண்டு
விஸ்வரூபம் எடுத்துவிட்டன
ஏதோ அமைதியை,
தேடாமல் இங்கு வந்த
உன்னெதிரே
அதுவரை
அமைதிமயமாய் இருந்த திண்ணை
ஆரவாரப் பேய்க்கூட்டமாயிற்றே!
சந்நிதிக்கு வாய்த்த தெய்வம்
திண்ணையில் நேரலாமா?
உனக்கொன்றும் இல்லை
என்
உளமார்ந்த மண்டியிடுதலும்
உனக்குச் சங்கடம்தான்
குட்டக்கைப் பிச்சையின்
கும்பிடு போலே…
சடமாகக் கிடந்து,, ஒரு
சவமாகும் தறுவாயில் இருந்து
சகத்தின் உணர்ச்சிக் கலகங்கள் அனைத்தும்
உள்ளே புகுந்து
உயிராகிக் கூத்தடிக்கும் நான்
என்ன ஆவேன்?
எங்கே போவேன்?
என்னைப் பொருட்படுத்தும் கட்டாயம்
இல்லைதான் உனக்கு
ஆயினும்
என் கதையைக் கேட்டதனால்
என் கதியைப் பார்த்ததனால்
சின்னக் கணத்தில், என் காதலின்
சிலிரிப்பை ஏற்றதனால்
வீழ்ந்து கிடந்தபடியே
விண்ணப்பித்துக் கொள்கிறேன்…
இன்னும் ஒருமுறை
ஒரே ஒரு முறை
உட்கார்ந்து
செல்ல முடியுமா?
நான்
சடமாகாமல்
எனக்கு விடுதலை இல்லை
நான்
சவமாகாமல்
உனக்கு விமோசனம் இல்லை
ஓவியத்திற்கு நன்றி : மாருதி
“இளைப்பாற அமரும் திண்ணையாய் – நீ
இருப்பாயென் றுருகும் போக்கிலே – தேன்
சுளைப்பாகுக் கவிதை தந்தனை – ஒரு
சுடராக எழுந்து நின்றனை – மிகக்
களைப்போடு நெஞ்சக் களிப்பையும் – சொற்
கவியாக தந்த நண்பனே – தன்
தலைப்பாகை அசைய பாரதி – உன்
தமிழோடு தாளம் போடுவான்”
அன்பு ரமணா, அருமையான கவிதை. அதுவும்,
“ஒன்றுமில்லாமல் வந்து
ஒரு கவிதை வாய்க்கப்பெற்று
உயிர்சிலிர்க்கச் சென்றவர்கள்…” அந்த ஒருவரி போதும், உயிர்சிலிர்த்துக் கொள்ள.
கே.ரவி