சொல்லிச் செல்லேன்!
இசைக்கவி ரமணன்
உனக்கே உனக்காக (33)
சொல்லிச் செல்லேன்!
{கேட்டு மகிழ}

கணந்தோறும் நினைத்துக்கொண்டு
கண்ணீரைத் துடைத்துக் கொண்டு
ரணமான நெஞ்சைக் கெஞ்சி
ரகசியமாய்த் தேற்றிக் கொண்டு
திசைதொலைந்த பறவை போலே
தெருமுனையில் திகைத்து நின்று
வசைமலிந்த ஜீவனாக
வலியே என் உயிராக…
கசையடியின் உச்சத்தில்
கண்ணீரும் வறண்டேபோய்
இசையாத சிரிப்பொன்று
இதழோரம் அரும்புவதாய்
ஊருக்கு நான்சிரிக்க
உள்ளமெல்லாம் காடெரிய
காரிருளே இடறுமிருள்!
யாருக்கு இது புரியும்?
காதலெனும் கொடுமையின்முன்
கடுநரகும் நந்தவனம்
வேதனையில் வெந்தமனம்
வீழ்ந்துசாம்பலாயெழுந்து
வேதனையில் வெந்துவீழும்
விலாவலிக்க விதிசிரிக்கும்
உன்னையே எண்ணியெண்ணி
உடலுருகும் உயிர்கரையும்
என்னையுன்னில் காணவேண்டி
ஏங்கியேங்கி எட்டிப்பார்க்கும்
எப்போது வந்திடுவாய்
என்றெனக்கு உறுதியொன்றை
இப்போது வந்துசொல்லேன்
என்னுயிரைத் தந்துசெல்லேன்!
படத்திற்கு நன்றி : இளையராஜா
