இசைக்கவி ரமணன்

 

உனக்கே உனக்காக   (29)

எங்கே சிட்டுக்குருவி?

{கேட்டு மகிழ}

 

10317549_739794126082611_4567379894746634661_o
சிட்டுக்குருவி சிறகடித்துப் பறந்துவிட்டதா? என்
சின்னச்சின்ன முத்தங்களை மறந்துவிட்டதா?
கட்டிக்கொள்ளும் போதுகொஞ்சம் கசந்துவிட்டதா? ஒரு
கணப்பொழுதில் என்காதல் கரைந்துவிட்டதா?

இப்படியென் பாதையென்றும் வளைந்ததில்லையே! என்
இதயத்தை இப்படிநான் இழந்ததில்லையே!
தப்புசரி என்றுமாறும் வாதங்களெல்லாம், அவள்
தரிசனத்தின் ஒளியினிலே தகர்ந்துபோனதே!

வெந்துமனம் ஒன்றிங்கே விம்முகின்றது, அதன்
வேதனைகள் மெளனத்திலே பம்முகின்றது
அந்தமனம் எந்நிலைமை அறிந்துகொள்ளுமா? என்னில்
அவளன்றி யாருமில்லை புரிந்துகொள்ளுமா?

மண்ணில்வீழும் நேரம் வாழ்வில் மாலை நேரமா? அது
மண்ணில் வீழும்போது பாவம் மலரலாகுமா?
கண்ணின் சின்னத் திரைக்குப்பின்னே கடல்கள் குமுறுதே! என்னைக்
கட்டிக்கொண்ட தேவதையைத் தேடிப் பதறுதே!

விட்டுவிட்டுப் போவதுனக்கு வாடிக்கைதானா? என்னை
வீழவைத்துப் பார்ப்பதுமோர் வேடிக்கைதானா?
தொட்டுச்சொன்ன சத்தியங்கள் மறந்துபோனதா? இதழைத்
தொட்டுத் தொட்டுச் சொன்னதெல்லாம் பறந்துபோனதா?

கொஞ்சமேனும் மனமிருந்தால் ஓடிவந்திடு! மொத்தம்
கொள்ளைபோன நிம்மதியைக் கொண்டு தந்திடு!
கொஞ்சம்கூட இடைவெளியே மிஞ்சிடாமலே, என்னைக்
கொஞ்சிக்கொஞ்சி உந்தன்நெஞ்சில் கூட்டிவைத்திடு…

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.