Category: கிரேசி மொழிகள்

கிரேசி மொழிகள்

  • ”கூடார வல்லி”….

    006122eb-f178-4318-a3b9-27931434e773

    ”கண்ணாடிப் பொய்கையில், கட்டிய மாலையை
    முன்னாடி சூடி மகிந்ததற்குப் -பின்னாடி
    வில்லிபுதூர் ரங்கனின் வெற்றிக்(கு) அலங்கலிடும்
    கிள்ளைகொள் கோதாய் காப்பு”….கிரேசி மோகன்….

    அலங்கல் -மாலை, கிள்ளை -கிளி….

    Share
  • மார்கழி முன்னிட்டு ”தூவாதஸ நாமத் துதி”….

    கிரேசி மோகன்

    மார்கழி முன்னிட்டு ”தூவாதஸ நாமத் துதி”….

    அயிகிரி நந்தினி மெட்டில் பெருமாளின் த்வாதச நாமத் துதி….

    “கேசவாய , நாராயணாய ,மாதவாய, கோவிந்தாய , விஷ்ணுவே ,திரிவிக்ரமாய ,வாமனாய,சீதராய ,ரிஷிகேசாய ,பத்பனாபாய ,தாமோதராய ,மதுசுதனாய”…..

    “களமுற பார்த்தனின் கலவர வேர்த்தலைக்
    கழுவிடு தீர்த்தமாம் கீதையதால்
    உளமுரம் கூட்டினை ஒருரதம் ஓட்டினை
    பலமுற காட்டினை பாதையதை
    பொலபொல என்றுதி காலையை முந்திடும்
    பரவசக் கோதையின் பாசுரத்தால்
    அலைகடல் விட்டுயர் பட்டரின் பெட்டையை
    கட்டிடக் கேட்டிடும் கேசவனே”….(1)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    “சரியபி தாம்பரம் நழுவக தாயுதம்
    பிளிறும்க ஜேந்திரன் குரல்கேட்டு
    பறவைசு தாகரம் விரையவ னாந்திரம்
    எறியசு தர்சனம் விரல்விட்டு
    துரிதநி வாரண முனிகள்த போவனம்
    பறையும்க தாம்ருத காரணனே
    முரளிம னோகர கமலப தாம்புய
    அனந்தந ராயண பூரணனே”….(2)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    “அவையென இவையென அளவிடல் தவறென
    கவிமணி மலையணில் கூட்டியதை
    புவிதனில் ஏழையை பிள்ளையை வேழனை
    மகிழ்வுறச் செய்ததைக் காட்டினையே
    தவியுற ஆய்க்குடி தளிர்விரல் தூக்கிட
    குளிர்மழை காத்தனை யாதவனே
    கவிகளின் காப்புக் கடவுள்முன் தோப்புக்
    கரணம்செய் காக்கும் மாதவனே”….(3)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    “அலமுவை கட்டினை அதிகடன் பட்டனை
    அடைத்திடத் தொட்டனை ஏழுமலை
    பலரிட உண்டியில் சிலறையை ஒண்டியாய்
    புகல்ஜர கண்டியில் வாழயிலை
    துளசியை மென்றிட குறையிலை என்றிடும்
    நிலைதர நின்றிடும் கோவிந்தா
    அலைகடல் சேடனில் அணிமகள் கூடலில்
    வளர்துயி லாடிடும் வைகுந்தா”….(4)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    “செதிளதில் ஆரணம் முதுகினில் மேருவும்
    முகநுனி தாரணி கொண்டவனே
    சதையுறி உந்தியில் பதபலி புந்தியில்
    விதவித பந்தியில் உண்டவனே
    விதையுழு ராமனும் மழுமுனி ராமனும்
    தொழுரகு ராமனும் பாகவதக்
    கதைசொலும் க்ருஷ்ணனும் பலபல ஸ்ருஷ்டியும்
    சதைவுயிர் விஷ்ணுவின் சாகசமே”….(5)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    “அளிவரம் முக்ரமம் ஒளியரி அக்ரமம்
    உணர்குரு சுக்கிரர் கட்டளையை
    பலியிட அக்கணம் குறள்திரு விக்ரம
    வடிவினில் திக்கது தொட்டனனே
    புலனுரு வாமனம் பழகிட நீமனம்
    பெருகுவை ஆணவ கந்தையிலே
    சலணரு ணேசரின் சிசுரம ணேசரை
    சரணடை கோவண சந்நிதியில்”….(6)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    “சிறைவசு தேவகி கருவச மாகிட
    இரவினில் ஏகினன் கோகுலமே
    கறவைகள் மேய்த்தனன் கம்சனை சாய்த்தனன்
    தீர்த்தனன் ஆயரின் வ்யாகுலமே
    மறைதிரு மச்சமும் அரைதனில் கச்சமும்
    குடுமியின் உச்சமும் பூமணமாய்
    குறளுரு வாயொரு குடைபுயம் சாய்வுற
    களபலி சேய்வளர் வாமனனே ….(7)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    “இலைமரு தாணியின் மணமுறை மேனியள்
    திருமகள் பூணிடும் சீதரனே
    அலைகலை மங்கையர் அடிதொழும் சுந்தரி
    மலைசிவ சங்கரி சோதரனே
    அலைகடல் சங்கொடு நந்தகி ஆழியும்
    சிலைபரு தண்டமும் கண்டவுடன்
    விலையென ஏறிடும் வெவ்வினை ஆறிடும்
    விடுமெமை வேறிடம் சேருமதே”….(8)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    “அசுரநி சாசரர் அதரும நீசர்கள்
    அழியச ராசரம் வந்தவனை
    தசவித வேஷனை முனிமன வாசனை
    தவரிஷி கேசனை வந்தனம்செய்
    தசமுகன் சாகவும் குசலவர் ஏகவும்
    ரகுபதி ராகவ ரூபமெடு
    தசரத மைந்தனை குகனோடு ஐந்தென
    தரணியில் உய்ந்தவன் தாபமுறு”….(9)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    “கரனுடன் தூஷணை வனஉழை வேஷனை
    தசமுக பூஷனை இம்சைதரும்
    இரணிய ராட்ஷசன் இணையிரண் யாட்ஷகன்
    துரியனின் சூழ்ச்சியை ,கம்சனையும்
    குறைசிசு பாலனை மதுகைட பாணனை
    வதம்புரி மாலனை நம்பிடுவாய்
    பிரமனுய் நாபனை புவியுமிழ் நாபனை
    பதுமம்கொள் நாபனை கும்பிடுவாய்”….(10)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    “கரமொடு களவாய் பிடிபட உனதாய்
    உரலிட இழுதா மோதரனே
    மரமதை சாய்த்தனை மருதிடை வாய்த்தவர்
    மறுவுல கேத்திடும் ஆதரவே
    புரிவிஷ மத்தினில் முடிவில்ந லத்தினை
    வெளியுற வைத்திடும் யவ்வனனே
    சரியென தப்பென அறியும்ம னத்தினை
    அரிகழல் வைத்தறு வெவ்வினையே”….(11)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    “மகளிர்உ டுப்பினை மறைவிளோ ளித்தனை
    பிறகுஅ ளித்திடும் திட்டமொடு
    துகிலுரி துட்டனை தளர்வுற கொட்டினை
    துருபதைக் எட்டிட பட்டதனை
    புகுவிட பூதனை விடவுடல் வேதனை
    முலையுறி மாமது சூதனனே
    புகுகருங் காளியுன் பிறவியைக் கோளிட
    வ்ரஜநிலம் ஏளிய சோதரனே….(12)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    ———————————————————————————————————————————————————–
    ————————————————————————————————————————————————————-

    Share
  • ம. செ.வும் கிரேசியும்

    3d179fae-0c17-4261-93b7-13e9aee7160f

    அற்புதம் லோகு….இந்தக் காலத்தில் தந்தைகள் ‘’வ்யாதியை’’ பிள்ளைக்கு தாரை வார்க்கிறார்கள்….ஆனால் உங்க அப்பாவோ தன் ‘’க்யாதியை’’(கலையை) உனக்கு வழங்கி இருக்கிறார்….ம.செ. என் ‘’அடுத்த வீட்டுப் பையன்’’ என்பதில் எனக்கு ஏக கெளரவம்….நன்றி….பால்ய நண்பன் பள்ளித் தோழன் கிரேசி மோகன்….ஒவியத்தைப் பார்த்ததும் தோன்றிய வெண்பா….

    கருப்புச் சிவனை திருப்பிவைத்துப் பார்த்தால்,
    மருப்புடைசேய் காட்டும் முகத்தை, -அறுப்புதம்(அற்புதம் எதுகைக்காக poetic license)
    செல்வா , மணியத்தின் செல்வனே, கார்வண்ண
    வில்வத்தைக் கண்டேன் வியந்து …கிரேசி மோகன்….

    மருப்பு-தந்தம் உடைய பிள்ளையார்….

    Share
  • கார்வண்ணன் கற்றுத் தந்த பாடம்….



    050713rain-620x413

    பாடம் முடிய பரிட்சைவரும் பள்ளியில்,
    காடலைந்து மேய்த்திடும் கோபால -மாடனோ,
    சோதித்துப் பார்த்தபின் செய்குற் றமுணர்த்தி
    போதிப்பான் கீதை பிறகு ….கிரேசி மோகன்….

     ஆன்ம பலமளிப்பீர், ஆதி பகவரே,
    வான்மழை எங்களை வாட்டுது, -தேன்குழல்
    மாதுசக்தி பாகரே, போதும் மழைவெள்ளம்,
    சீதோஷ்ணம் வெய்யிலாய்ச் செய் ….கிரேசி மோகன்….

     

     

    Share
  • ”சிறுவா புரி சதகம்”….

    கிரேசி மோகன்

    ஒருமுறை ஒரு கல்யாணத்திற்காக ”காளஹஸ்தி” செல்கையில் , டிரைவர் ”சார் வலது பக்கம் போனா ”சிறுவாபுரி” முருகர் ஷேத்திரம்….போயிட்டு வர்ரலாமா….!” என்று கேட்டார்….கல்யாண அவசரத்தில் ”வேண்டாம்” என்று சொல்லிவிட்டாலும் ”கந்தன் களிப்பு” விடவில்லை….மயிலை வேலவர் சன்னிதி சுவரில் பதித்திருக்கும் ”கந்தர் அனுபூதி” நினைவுக்கு வர , அதே மெட்டில் முருகர் மீது 100 பாடல்கள் எழுதி ”சிறுவாபுரி சதகம்” என்று பெயரிட்டேன்….

    ”கூகா யெனயென் கிளைகூ டியழப் -போகா வகைமெய்ப் பொருள்பே சியவா-நாகாசல வேலவ நாலுகவித்-தியாகா சுரலோக சிகாமணியே”….அடடா அழகு அனுபூதி….”கமலாகுச சூசுக குங்குமதே” மெட்டுதான்….15 வயதிலிருந்து எனை ஆட்கொண்ட ஸ்லோகம் ”கந்தர் அனுபூதி”….60 வயதில் ”சிறுவாபுரி முருகன்” என்னை வைத்து எழுதிக் கொண்டான்….வேறு என்ன சொல்வது ….”நடப்பது நடந்தே தீரும்….நடவாதது என்முயற்ச்சிக்கினும் நடக்காது….ஆதலின் சும்மா இருக்கை நன்று” இது ஸ்ரீரமண வாக்கு….சும்மா இருக்க விடாமாட்டான் போலிருக்கு ”செம்மான் மகளைத் திருடும் திருடன்-பெம்மான் முருகன் பிறவான் இறவான் -அம்மா பொருளுன்றும் அறிந்திலனே”…..கிரேசி மோகன்….

    0f9d9de0-7232-432b-a79b-469dc0002076_S_secvpf+
    “சிறுவா புரி சதகம்”
    ————————-
    காப்புச் செய்யுள்
    ———————-
    “உரைபா ரதத்தை ஒருகொம் பொசித்து
    தரைசே ரவடித் தருள்வே ழவரே
    சிறுவா புரியார் சதகம் எழுதத்
    தருவாய் எனக்குத் தமிழும் திறனும்”….

    சிறுவாபுரி சதகம்….கந்தரனுபூதி பாதிப்பில்….

    “தனியா னைசகோ தரனார் துணையால்
    வனமா துடல்மே விடவே டுவனாய்
    தனியாய் வருவேல் தணிகா சலனே
    வினைதீர்த் திடவா சிறுவா புரியே”….(1)

    “அடடா எனவூர் அனுதா பமுற
    சுடுகா டுடலே கிடுநாள் துணையாய்
    உடனே வருவாய் உமைபா லகனே
    இடுவாய் பிறவா இடமே விடநான்”….(2)

    “புதனோ டொளிசேர் பொலிவாய் உமையாள்
    சுதனே சிவனார் சிறுவா புரிவாழ்
    மதலாய் பெருமாள் மருகா வருவாய்
    அதுவாய் இதுவாய் எதுவா கிலுமாய்”…(3)

    “உனைநா னறிவேன் உமையாள் சுதனா
    திணைமா துடன்சேர் தணிகா சலனே
    எனைநா னறியேன் எழுவாய் பயனாய்
    சினைநான் உயிர்நீ சிறுவா புரியே”….(4)

    “பணநா கவணை பெருமாள் மருகா
    வானமா துடன்வா னவரா னையுடன்
    மனவே கமுடன் மயிலே றிடவே
    ஷணமே வருவாய் சிறுவா புரியே”….(5)

    “ஆசா பாச மதனால் உலகில்
    காசும் புகழும் குறியாய் உழலும்
    நீசன் எனையுன் நிலைசேர்த் திடவே
    வாஷண் முகனே வழிகாட் டிடவே”….(6)

    “நமச்சி வாயன் நுதல்வாய் புதல்வ
    உமைச்சி வேலை உடையோய் படையாய்
    சுமக்கத் தாயார் ,சிறுவா புரியே
    நமர்க்கை சேரா நிலைநாட் டிடுவாய்”….(7)

    “தீயாய் வளியாய் திசைமண் ஜலமாய்
    காயாய் மலராய் கனியாய் மரமாய்
    வாயாய் ருசியாய் வயிறாய் பசியாய்
    நீயாய் மறைவாய் நிருவா கனனே”…(8)

    “அய்யோ யெனயென் கிளைகூ டியழும்
    அய்யோ மணவா ளரவர் வரவால்
    அய்யா அதனால் அனுபூ தியுறச்
    செய்யாய் முருகா சிறுவா புரியே”….(9)

    “அண்ணா மலையும் அவன்பா திபடர்
    உண்ணா முலையும் சிறுவா புரியில்
    முன்னால் இருக்க முகநா ணமுறும்
    பெண்ணா லோலப் பிடிமால் மருகா”….(10)

    “மரணா கதியில் மனிதா செலுமுன்
    சரணா கதிசெய் சிவனார் செவியில்
    மறையோ தியவன் திருவே ரகனை
    சுரர்நா யகனை சிறுவா புரியை….(11)

    “அத்திக் கிறைவா அமரா வதியின்
    வெற்றிக் குதவும் விசுவேஸ் வரரின்
    நெற்றிக் கனலே நெடுமால் மருகா
    சுற்றத் துடன்வாழ் சிறுவா புரியே”….(12)

    “எதிரா ஜனரின் எஜமா னவனை
    பதிநூ றுடன்எண் படர்மால் புகழை
    துதிசெய் அருணை கிரிபோல் எழுத
    உதவத் தமிழே உடனே வருவாய்”….(13)

    “அயனார் அரியார் அறியா நுதல்வாய்
    நயனார் புதல்வா நரையும் திரையும்
    மயமாய் இவனா குமுனே வருவாய்
    பயனாய் சிறுவா புரிவாழ் பொருளே”….(14)

    “ஓரா றுமுகம் ஒளிரும் இருதாள்
    ஈரா றுபுயம் இறைவா மறவேன்
    சேறாம் உலகில் செந்தா மரையாய்
    போரா டஅருள் பஞ்சா மிருதா”….(15)

    “பாதிக் கொருபெண் பரமேஸ் வரியின்
    ஆதிக் கமுறும் அரனார் நுதற்க்கண்
    ஜோதிக் கருவே சிறுவா புரியில்
    சாதித் தருள்வோய் சரணா கதியை”….(17)

    “கிரௌஞ்ச மலையைக் கூழா கிடவேல்
    எறிஞ்ச முருகா என்றும் இளையோய்
    குறிஞ்சி மலைவாழ் கிழவா தமிழைத்
    தருஞ்சி வைமுலை திகழ்வோய் சரணம் ….(18)

    “கூறும் அருணை கிரியின் புகழில்
    ஏறும் மயிலோ டெழில்சே வலுடன்
    சூரன் பதுமன் சிரம்வாங் கியவா
    சேரும் தமிழே சிறுவா புரியே”….(19)

    “கல்லா லமர்வோன் காதில் ப்ரணவச்
    சொல்லாழ் பொருளை ஸ்லாகித் தவனே
    எல்லாம் அறிந்தும் எனைநான் அறியேன்
    வல்லான் ரமணர் வழிசேர்த் திடுவாய்”….(20)

    “தள்ளா டிவுடல் தடுமா றிடவாய்ப்
    பல்லா டிடமண் புதையப் படரும்
    புல்லா டிடநான் போகா வகையென்
    உள்ளா டிடவா உமையாள் சுதனே”….(21)

    “வடமா லையுடன் வனமா லையணி
    திடமா ருதிதோ ழனவன் மருகா
    கடலா டிடுவாய் குடிபோ கியவா
    உடனே வருவாய் உயிர்மெய்ப் பொருளாய்”….(22

    “வேதா கமநூல் வழிபோ னதிலை
    ஏதா கிலும்செய் துனைஏத் தவிலை
    சாதா ரணநென் சகமா யையற
    நீதான் வரணும் நிகமான் தகனாய்”….(23)

    “இம்மா மடையன் இறைவாழ் வதனில்
    எம்மா திரியும் இசையான் எனவே
    சிம்மா சனமுன் சீர்பா தமுற
    சும்மா இருயென் றொருசொல் அருளேன்”….(24)

    “சொப்பன வாழ்வில் சுகமாய் உறங்கி
    இப்புற உலகே இயல்பென் றிருந்தேன்
    அப்பர ஞானம் அடியேன் பெறவே
    செப்பிட வாராய் சிறுவை முருகா”….(25)

    “எஞ்சா மியெனக் கருளே ரகனே
    பஞ்சா ம்ருதமே பழனிக் குமரா
    அஞ்சாய் எனவுன் அடியார்க் கருளும்
    செஞ்சாந் துநிறச் சிறுவை முருகா”….(26)

    “சிந்தை மகிழச் சிவனார் செவியில்
    முந்தைப் பொருளின் முழுமை உரைத்த
    கந்தச் சுவையே செந்தூர் வளரும்
    சந்தக் கவியார் சிறுவை முருகா”….(27)

    “இருவாட் சிமலர் இருட்கூன் தலணி
    குரவாட் சியர்கோன் குலவா ரிசினை
    கரிசாட் சியமாய் கரம்கொள் சிறுவா
    புரியாட் சியமர் பொலிவே முருகா”….(28)

    “அறுகார்த் திகையர் ஒருமூர்த் தியென
    உருவாக் கியவா உமைபா லகனே
    முறைமா மன்மகள் குறமா தணைய
    சிறுவா புரிவாழ் சிவதே சிகனே”….(29)

    “மலைவாழ் முகிலே ,அலைவாய் அமுதே
    சிலைஜா னகிரா கவனார் மருகா
    குலவே டமகள் குறமா தணைய
    சிலையா கியருள் சிறுவா புரியே”….(30)

    “கண்மாய் தனில்கார்த் திகைமங் கையரால்
    ஒண்ணா னவனே ஓமா றுமுகா
    என்னா வியுடல் பொருள்யா வையும்நீ
    நன்நாள் இதுவே நலம்சேர்த் திடவா….(OR )
    அண்ணா சிறுவை அழகா வருக”….(31)

    “மயில்வா கனனே அயில்வே லவனே
    கயிலா யசிவன் குருவா னவனே
    பயிலா தழின்தேன் பரஞா னமதை
    மயல்தீர்த் தருள்வாய் முருகா சரணம்”….(32)

    “பிடிவா தமுடன் பிழைசெய் திடுமென்
    கடிவா ளமிலாக் குதிரைப் புலனை
    அடிபோ ட்டதைஆண் டருளச் சிறுவை
    வடிவே லவரே வருவீர் குருவாய்”….(33)

    “வனபாக் கியமாய் வள்ளி இருக்க
    தனபாக் கியமாய் தாரிணி சுரக்க
    சினம்போக் கியவா செந்திற்க் கடலில்
    மனபாக் கியமாய் வழிகாட் டிடவா”….(34)

    “கிழவே டமுடன் குறமா தணையும்
    மழுமான் சிவனார் விழிபா லகனே
    அழவேண் டிவரும் அடியார் வினையை
    விழத்தீண் டிடுவேல் விடுநா யகனே”….(35)

    “வானாய் நிலநீர் வளியாய்க் கனலாய்
    ஆணாய் அலியாய் அவளாய் அருவாய்
    ஆனாய் ஜடமாய் அறிவாய், ரமணர் (OR )அகந்தை
    நானாய்ன் துனைநா டிடவா முருகா”….(36)

    “எப்படி வருவான் எமனென் றறியேன்
    அப்படி வருமுன் அனுபூ தியினை
    இப்படித் தானென் றிரவுக் கனவில்
    செப்பிட வாராய் சிறுவை முருகா”….(37)

    “முற்றம் வரையில் மனையாள் வருவாள்
    சுற்றமும் பெற்றதும் சுடுகா டுவரை
    கற்றதும் கொண்டதும் கால்தூ சிபெறா
    நற்றமி ழேவா நமனார் வருமுன்”….(38)

    “மாவாய் பிளந்த மதுசூ தனர்க்கு
    ஆவாய் மருமான் அவன்சோ தரியால்
    வாவா எனகா டழைக்கும் தருணம்
    போபோ எனவீ டுபுகுத் திடவா”….(39)

    “தந்தைக் கொருமந் திரம்தந் தவரின்
    சிந்தைக் கபிமா னசிரோன் மணியே
    கந்தக் கனலே குருவாய் அருள்வாய்
    மந்தப் பயலென் மதம்மாற் றிடவே”….(40)

    “வாயிட் டயென்பின் வடித லென்றே
    நாயிட் டமொடு நறுக்கும் நாவை
    ஆயிற் றதுபோல் அடியேன் வாழ்வு
    பாயுற் றுடும்முன் பிணியோட் டிடவா….(41)

    “தப்பா னவாழ்க்கை தவறா னசேர்க்கை
    இப்பா வியுற்றான் இதனா லெமன்கை
    ஒப்பா ரிவைத்தூர் அழுமுன் செவியில்
    செப்பாய் முருகா சிவஞா னபோதம்”….(42)

    “திருவோ டணையும் திருமால் மருகா
    திருவோ டணையும் திருவா திரையான்
    பிறைவான் நுதற்கண் புதல்வா ,கருணை
    சிறுவா புரிவாழ் சிறுவா புரிவாய்”…(43)

    “வாசத் துழாய்மால் வயிற்றுப் புதல்வி
    நேசக் குறத்தி நினைவோய், திருத்தைப்
    பூசத் திறைவா ப்ரணவப் பொருளை
    ஈசர்க் குபதே சிகனே இறைவா….(44)

    “வருந்தாய் மனமே வருவான் முருகன்
    பிருந்தா வனமாய் பொழிவான் அருளை
    கருந்தா மரைக்கண் குறத்தி மணாளன்
    திருந்தா தவர்க்கும் மருந்தா கிடுவான்”….(45)

    “எலிவா கனரின் இளையோய், சபரிப்
    புலிவா கனர்முன் பிறந்து வளர்ந்த,
    கிலிநா கமுறக் கிளம்பும் அகவல்
    ஒலிவா கனரே உடனே வருக”….(46)

    “கீரன் துதிசெய் ஆற்றுப் படையை
    பேரன் புடனே ஏற்றக் குகையுள்
    சேரும் புலவர் சிறைமீட் டிடவே
    கூர்வேல் எரிந்து கிரிசாய் குகனே”….(47)

    “சிறுபா லனென மதியா துசெலும்
    மறைநான் முகனார் மிகுகர் வமற
    சிறைசே றயிடும் சிவதே சிகனே
    கரைசேர்த் திடுவாய் கடலா டுகுகா”….(48)

    “கன்றா டிடவேய்ங் குழலோன் மருகா
    மன்றா டிடுவோன் மகனே புவியில்
    குன்றா டிடுவோய் குருவாய் வருவாய்
    மன்றா டுகிறேன் மனம்வைத் தருள்வாய்”….(49)

    “ஆகா இவனே அதிமே தையென
    பாகாய் உருகும் பொருளுள் ளவரை
    மோகா சனத்தில் முனியாய் இருக்க
    ஏகாக் ரமதை எளிதாக் கிடுவாய்”….(50)

    “மாலா டிடும்யவ் வனம்சொப் பனமே
    கோலா டிடும்மூப் பதுநிச் சயமே
    வாலா டிடும்வாழ்க் கையைவிட் டுவடி
    வேலா யுதன்தாள் தலைவைத் திடுவாய்….(OR )
    வேலா யுதன்தாள் வனசம் தொழுவாய்”….(51)

    “நூறோ டிடவே தேரோ டியமால்
    சீரா டிடுமூர் சிறுவை மருகன்
    ஈறா றுபுயன் பேரா றுமுகன்
    நீறா டநுதல் நினைவாய் மனமே”….(52)

    “கள்ளப் புலனைந்த் துறவா லகந்தை
    மெல்லப் புகுந்து மமதை மனமாய்
    உள்ளத் தறையில் உனைபூட் டிடுவான்
    வள்ளிக் கணவன் வாஞ்சைக் கிலைதாள்”….(53)

    “புதிராம் புவியில் பொழுதோட் டிடவே
    சதிரா டியபின் சலியும் மனமே
    எதிரா ளியெமன் எதிரே கிடுமுன்
    கதிர்வே லவனே கதியென் றிடுவாய்”….(54)

    “மமகா ரமதை மனிதா விடுவாய்
    எமனே கிடுமோர் எழிற்கா லையிலே(one fine morning )
    சுமையா கிடுவாய் சுடுகா டுவரை;
    சமபா வமுற சிறுவா புரிசேர்”….(55)

    “பரங்குன் றலைவாய் பழம்வீழ் பொழில்,கோல்
    கரங்கொள் பழனி ,குமிழ்வாய் சிவனார்
    கரங்கொள் கிரியே ரகமும் தணிகை
    வரங்கொள் அடியார் வரவீ டுடையோய்”….(56)

    “முத்தாய் அருணை முனிநா எழுதிக்
    கொத்தாய் அடைந்தாய் கவிசந் தமதை
    அத்தா அதுபோல் அடியேன் அளிப்பு
    கத்தா ழையெனின் கமல மெனக்கொள்”….(57)

    “கிரியார் கந்த ரனுபூ தியின்மேல்….(OR )
    அருணை கிரியார் அனுபூ தியின்மேல்
    வெறியால் விளைந்த வடிகா லிதுவே
    சரியா தவறா சதகம் அறியேன்
    விரிஆர் வமிதை வளர்பக் தியென”….(58)

    “பாக்கள் வருதல் பனிமா மலையோன்
    தீக்கண் மகனுன் தயவென் றெண்ணி
    ஊக்க மடைந்தேன், ஓங்கும் தமிழின்
    தாக்க மெனநீ திரைபோ டாதே”….(59)

    “அம்பாள் மகனே அரிமால் மருகா
    உன்பால் உருகி உனைநான் அடைய
    வெண்பா சதகம் வடித்தேன் ,புகழின்
    சம்பாத் தியமாய் சொல்லி விடாதே”….(60)

    “எமாதி கணமே கிடுநாள் ரமண
    சமாதி நிலையில் ஸ்திரமாய் இருக்க
    ரமாதி மாலர் ரமிக்கும் மருகா
    உமாதி ஈசர்க் குகந்தோய் அருள்வாய்”….(61)

    “உள்ளக் கனகல் லையுடைத் தெறிய
    மெல்லத் தலைநீட் டிடு(ம்)ஆன் மவொளி
    புல்லைப் புலியாக் கிடுமிக் கலையை
    தெள்ளத் தெளிவாக் கிடுதே சிகனே”….(62)

    “அலையும் மயிலை, அயில்வேல் அணிசே
    வலையும், வனவான் வளையார் தமையும்,
    மலையும், மலையே றிவளர் உனையும்,
    முளையும் சதகம் மதிலா டிடவை”….(63)

    “தாரா சுரன்தன் தவவாழ் வதனால்
    பேரா சையுறப், பலிவாங் கிடவே
    வீரா சனத்தோன் விழிவாய் பிறந்த
    ஆரா அமுதே அமரர் துணையே”….(65)

    “கெட்டாள் திருந்தி குருவாய் அழைக்க
    சிட்டாய் வருவான் சும்மா இருக்கத்
    தொட்டோ திடுவான் திருவா சகத்தை
    முட்டாள் மனமே முனியச் சிறுவன்”….(66)

    “பந்தத் தைவிடு பாசத் தைவிடு
    சொந்தத் தைவிடு சோகத் தைவிடு
    சிந்தித் துவிடு சிறுவா புரிவாழ்
    கந்தத் தனைநீ கயிலா யமுற”….(67)

    “சம்பந் தாண்டான் ஸ்தம்பித் திடவே
    நம்பும் கிரியார் நவிலச் சந்தம்
    கம்பம் தனிலா டியெழும் இளையோய்
    உம்பர் துணைக்கு உருவா கியவா”….(68)

    “கனிகை கிடைக்க ககனம் சுற்ற
    புனிதர் கணேச பிள்ளைக் களிக்க
    தணியா சினத்தில் தண்டா யுதனாய்
    முனியாய் பழனி மலையே றியவா”….(69)

    “அமரா வதியின் அணிகா வலனாய்
    சமரால் கொடுசூ ரனுடல் கெடவே
    உமையாள் கொடுவேல் உதிர்த்து அலைவாய்
    குமரா சுரர்பெண் கரங்கொள் முருகா”….(70)

    “எதிர்பார்த் திருந்த எமனே ளுகையில்
    சதுர்வே தனைவெஞ்ச் சிறைவைத் திடுவோய்
    கதிர்கா மமதில் கனிந்து பழமாய்
    உதிர்சோ லைமலை உறவே வருக”….(71)

    “பழுதூ றியவாழ் வினில்போக் கிரியாய்
    பொழுதோட் டினைஐம் புலனார் வமதால்
    தொழுதேத் திடுவாய் கழுகா சலனை
    முழுதாட் கொளவான் மயிலே றிடுவான்”….(73)

    “அயலார் சிரிக்க அருகார் வெறுக்க
    மயலா டிமகா மடுவீழ் கையிலே
    செயலா கிடுசிந்தை தையில்சீர் மிகவே
    வயலூர் வளர்வாழ் வதன்தாள் விழுங்கோள்”….(74)

    “பதினா றுபெரும் பெருவாழ் வுபெற
    அதிகா ரவிடை அமர்வோன் நுதல்நீ
    றதுகா யவுதித் தனலாய்ப் பிறந்த
    பதியா றுடையோன் பதம்மே விடுவாய்”….(75)

    “சேதா ரமிலா செய்கூ லியிலா
    ஆதா ரமருள் அயில்வே லவனின்
    பாதாம் புயமே பரமார்த் திகமாம்,
    பேதாய் மனமே பணிந்தேத் திடுவாய்”….(76)

    “மனமா ஸனமாய் மயில்வா கனமாய்
    குணம்கோ ழியெழுப் பதிகா லையுமாய்
    முனைவேல் மதியாய் மனையுன் மலையாய்
    தினமாண் டிடவா திணைமா தணைவோய்”….(77)

    “திகழா பரணம் திடமார் பசைய
    நகைபூட் டிடநா டகமே டைதனில்
    நகைப்பூட் டிடவா நடுநா யகமாய்
    நகைபூத் திடுவாய் நதிபா லகனே”….(78)

    “அதிகா ரமவா அழுக்கா றவச்சொல்
    குதிகோ பமிலா குணம்வாய்த் திடவே
    சுதிவள் ளுவனார் சொலும்வார்த் தையினை
    மதியேற் றிடவை மருதா சலனே”….(79)

    “மிகவாட் டமுறும் மனிதா ,ரமண
    அகநாட் டமுற அங்குஷ் டமென
    குகநாட் டியம்காண் குகையாழ் மனதில்
    சுகசாட் சியமாய் சும்மா இருநீ”….(80)

    “குசனார் லவணார் அசுவ மதைத்தம்
    வசமா கயிரா கவன்வா ளியெதிர்
    அசலம் சிறுவா புரிவாழ் அழகா
    வசன முரைக்க வருவாய் குருவாய்”….(81)

    “சோணை ரமணே சரைப்போல் சதமாய்
    ஞானம் பெறநா டிடுசெந் தமிழின்
    மோனை எதுகை யெனவள் ளியும்தே
    வானை தழுவும் வடிவே லவனை”….(82)

    “கங்கா தரனின் கபாலி புரியில்
    சிங்கா ரமயில் சுமையாய் அமர்ந்து
    மங்காப் புகழை மயிலைக் களித்தோய்
    எங்கா துரைக்க சங்கோ சமதேன்”….(83)

    “முருகா சரணம் மல்லாண் டிடுவோன்
    மருகா சரணம் மனைவீ டுதர
    அருகா மையிலூர் சிறுவா புரிவாழ்
    குருகா வலதோள் கொடுதோ ழமையே”….(84)

    “பிடிவா தகுணப் புலனால் அடைந்த
    பிடிவா தகபம் பித்த மஜீர்ண
    நொடிநோய் களெமை நெருங்கா தபடி
    கொடிகோ ழியைஏந் துகலா பகுகா”….(85)

    “காவித் துணியில் கரைவேட் டியினில்
    தாவித் திரிந்தேன் திசையே றுமயில்
    ராவுத் தனனுன் ரசபா தமதை
    சேவித் துணர்ந்தேன் சகமே பரமாய்”….(86)

    “பணக் காரனுமே பலசா லியுமே
    கணக் காளியுமே கரிநாள் தனிலே
    மனக்லே சமுடன் மடிசாய்ந் திடுவான்
    மனக்காய் எதற்கு மலைவாழ் பழமே “….(87)

    “சூதா டிடுவாய் சுகமேந் திடவே
    மாதா டிடுவாய் மனமே ,சுமப்பாய்,
    வேதாந் தியென வெறும்கோ வணமாய்
    தீதாண் டிடும்தென் பழனிச் சுவையை”….(88)

    “பாகத் துமையாள் நெஞ்சார் வமுறும்
    போகர் சமைத்த பஞ்சா ம்ருதமே
    ஏகப் பொருளே எஞ்சா மியெனக்
    காகத் திறவாய் கோயிற் கதவை”….(89)

    “தெண்டா யுதமோர் திருக்கை பிடிக்க
    கொண்டாய் இடுப்பில் கரமொன் றினைநீ
    பண்டா யநிலை பரமார்த் திகத்தை
    விண்டோ திடுஆ விநன்வாழ் முருகா”….(90)

    “மந்தா கினியேந் திடமா துமைபால்
    வந்தாய் பெறவே வடிவேல் தனையே
    பந்தா டிடுதே புலனைந் துமெனை
    தந்தா யுதன்பின் தவழ்வோய் அருள்வாய்”….(91)

    “இக்கா சினியில் இழவே புரிந்து
    அக்கா சியில்அந் திமம்கொண் டிடுவாய்
    முக்கால் சிவனம் முருகன் அருள்வான்
    உக்கார் சிவனே உறும்கா சியதே”….(92

    “சுப்ர மணிய புஜங்க மதிலே
    சர்ப்பம் எனஆ டினைசங் கரனால்
    தர்பை வழித்த தமியேன் திருநா
    அற்பம் இதிலா டிடுமண் புழுவாய்”….(93)

    “காட்சி கொடுத்து கற்கண் டளித்து
    தீட்ச தரின்வாய் மொழிகீர்த் தனையாய்
    ஆட்சி புரிந்தோய், அவர்தம் குருவாய்
    தீட்ஷை கொடுத்த தணிகை குகனே”….(94)

    “ஒலிபா ஷைவரா துருகித் தவிக்க
    கலிவெண் பாவை குமர குருவுக்
    அளிசீ ரலைவாய் அகக்கா ரிகளோ(டு)
    ஒளியாய் விளங்கும் உயர்வான் பதியே”….(95)

    “பழம்காய் இலைஆல் மரம்வேர் விதையாய்
    விழபுள் விழுங்கி அதைவே றிடமாய்
    புழங்கப் புதைக்கப் புதிதா வதுபோல்
    விழுவாய் கனலாய் எழுவாய் புனலில்
    தொழும்தாய் வளர்சேய் பழனிக் குமரா”….(96)

    “சதிசெய் திடுசங் கரன்கைக் கனியால்
    பதியாய் திருவா வினன்வாழ் பரமே
    இதிகா சபுரா ணமறை புகழும்
    துதிகே சவனார் மருகா துணைவா”….(97)

    “சிறுவா புரியில் சதகம் தொடங்கி
    திருவா வினன்சீர் தலத்தில் முடிய
    நிறைவேற் றியவா நதிவே கமுடன்
    மறவேன் உனைமால் மருகா சரணம்”….(98)

    “பாலும் பழமும் பஞ்சா ம்ருதமும்
    கோலும் இடுப்பில் கரமும் கொடுப்பேன்
    நாளும் இவன்நா டகமே டையில்செங்
    கோலும் குடையாய் கொடியேந் திடச்செய்”….(99)

    “தணிகை ,பரங்குன், ரலைவாய் , திருவா
    வினன்கை கனிகொள் பொழிலே ரகமாய்
    கனிகை இருக்க இவர்க்காய் அவர்க்காய்
    இனிகை ஏந்தாய் ,இறைசேய் பதம்சேர்”….(100)

    சுபம்
    முடிவு
    மங்களம்

    Share
  • நெமிலி பாலா திரிபுர சுந்தரி

    ‘’சீட்டிப்பா  வாடையும் ,சில்க்கில்  சட்டையுமாய்,

      நாட்டுப்  புறஊர் நெமிலியின், -வீட்டுக்குள்

      வீற்றவளே  பாலா , வருக வருகநான்

    சாற்றும்வெண் பாவை  சகித்து’’….கிரேசி மோகன்….
    “கஷ்டம் கலைந்திடும் , இஷ்டம் இணங்கிடும்,
    அஷ்ட இலக்குமிகள் ஆசியால் -இஷ்டமாய்,
    சுக்குமி ளக்குதி திப்பிலி என்பதின்றி ,
    லக்கு(LUCK)பாலா ஊர்நெமி லி “….கிரேசி மோகன்….
    Share
  • திருமால் திருப்புகழ்’’….

    கிரேசி மோகன்

    ———————————————–
    நாதவிந்து கலாதீ நமோ நம மெட்டு
    ———————————————-
    பொது
    ———
    பெருமாள் திருப் புகழ்….


    lhvzi10806
    “ஏழு கொண்டல வாடா நமோ நம
    ஏளும் நஞ்சணை சேடா நமோ நம
    ஏறும் அன்பர்கள் தோழா நமோ நம -குருபீஷ்மர்
    ஆயி ரம்புகழ் நாமா நமோ நாம
    தேச மெங்கிலும் ஆழ்வார் கள்பாடிய
    ஆயி ரம்தொழு மாலே நமோ நம -கலிலேறி

    வாழும் பண்டரி நாதா நமோ நம
    ஏழை சங்கட தீர்வே நமோ நம
    ஏழ்சு ரங்களின் ராகா நமோ -மஹனீயர்
    ராயர் கும்பிடு மூலா நமோ நம
    வாயு அஞ்சனை சேயார் சிநேகித
    ராம சந்திர ராஜா நமோ நம -கலிதோறும்
    ஊழில் உண்டுமிழ் சேயே நமோ நம
    ஆதி யந்தமி லாதோய் நமோ நம
    கேர ளம்குரு வாயூர் துலாபளு -சமனாகி
    தீர அன்பர்கள் பாடா னபாடது
    ஏறும் அம்பல கோபா லகோகுல
    கேளி சம்பவ லீலா நமோ நம -இரணீயன்

    வீழ கம்பமு லாநா ரகேசரி
    மீன மந்தர மாமே ருகூர்மவ
    ராக அந்தண மூணா னராமமு -ரளியூதி
    பூமி மங்கையின் தாளா தபாரமும்
    பாத கம்புரி கீழோர் கள்மேலுற
    நேமி சங்குவில் வாளோ டுகோலணி -பெருமாளே”….

    Share
  • அருணாசல மகிமை

     

    DSC_5908

    ”அவனியின் கர்வம் அருணையாம் பர்வம்
    சிவனிதய மர்ம ஸ்தலமாம் -புவனத்தின்
    ஆன்மீக நெஞ்சமாம் , அண்ணா மலைதீபம்
    ‘’நான்’’மோகம் நீக்கும் நெருப்பு”….

    ”ஆரூர் பிறந்தோர்க்கும் அக்காசி மாய்ந்தோர்க்கும்
    பாரில் சிதம்பரம் பார்த்தோர்க்கும் -நேரும்
    திருநாளாம் முக்தி அருணா சலத்தை
    ஒருநாள் நினைத்தாலே உண்டு”….கிரேசி மோகன்….

    Share
  • ”கார்த்திகை தீபம்”

    b8cd6006-41a2-4f91-b2d8-b374a28c88c8

     

    “பைனா குலரில் பகவான்பார் கின்றார்தன்
    நைனாவின் கார்த்திகை நெய்ப்பந்தம்; -மெய்நானைக்
    கண்டவர் காண்கிறார், காண்பவனைக் காணென்று,
    விண்டவர் காலில் விழு”….கிரேசி மோகன்….
    ரமணர் அருணாசலேஸ்வரரை தகப்பனாகக் கண்டவர்….அதனால்” நைனாவின் கார்த்திகை நெய்ப்பந்தம்’’ என்று எழுதினேன்….இப்போது தோன்றுகிறது ‘’நைனாவின் கார்த்திகை நெய்தீபம்’’ என்று போட்டிருக்கலாம்….பார்க்கப் படுவதால் உலகை ‘’பார்’’ என்கிறோம்….பார்ப்பவன் யாரென்று பார்த்தால் ‘’பார் முதல் பஞ்ச பூதங்கள்’’ மாயை என்பது உணர்வோம்….இது ‘’ரமண வழி’’….அப்படிப் பார்க்கச் சொன்னவர் (விண்டவர்) காலில் விழு….இதையேதான் ஆதிசங்கரர் ‘’சத்யம் ப்ரம்மம் ஜகத் மித்யை’’ என்றார்….கிரேசி மோகன்.

    Share
  • அண்ணாமலை

    கிரேசி மோகன்

    38

    கட்டாந் தரைதனில் கையே தலையணையாய்
    கொட்டாவி விட்டுறங்கு கோமானாய் -கட்டாயம்
    தன்னாலே வந்துனக்கு தாலாட்டு பாடிடுவார்
    பெண்ணாளும் அண்ணா மலை ….

    கண்டதே காட்சியாய், கொண்டதே கோலமாய்
    உண்டதோர் பிக்‌ஷையில் உன்மத்தம் -கொண்டுநீர்
    ஏகான்மம் ஏற்றிட ஏற்றிடுவான் உச்சிக்கு
    மீகாமன் அண்ணா மலை ….

    கற்ற கரத்தளவே பெற்ற பகுத்தறிவை
    முற்றும் துறக்க முனைந்திடுவாய் -சற்றும்
    நினையாத வேளை நினக்கருள் செய்வான்
    மனையாளும் அண்ணா மலை ….

    தொட்ட குறைதோஷம், விட்ட குறைவேஷம்
    எட்டநின்று சாட்ஷியாய் ஏற்றிட -அட்டவணை
    போட்டுயர்ந்த ஞானம் படிப்படியாய் நல்கும்
    மாட்டமர்ந்த அண்ணா மலை …

    அச்சம் பொறாமை அசூயை அவமானம்
    மிச்சமின்றி போட்டு மிதித்திடு -உச்சம்
    உனக்களிக்கும், ஒன்றிலும் ஒட்டாத இன்ப
    மனக்களிப்பே அண்ணா மலை ….
    சல்லடை போட்டு சலித்து சலித்தேனே
    உள்ளடைந்த நானார் உணர்வதற்கு -பல்லிடை
    மாட்டிய பாக்காய் மனநட்டு வாங்கத்தால்
    நாட்டியம் ஆடுதே நான் ….

    ஏனிந்த மாயை? எதற்கிந்த பொய்போர்வை?
    நானிந்த நாடகத்தைக் காண்பதேன்? -ஆனந்தம்
    பார்ப்பதில் உள்ளதா? பாசாங்கில் உள்ளதா?
    யார்பதில் சொல்வார் எனக்கு !….கிரேசி மோகன்….

    Share
  • கும்பகோணப் பெருமாள் திருப் புகழ்

    கிரேசி மோகன்

    akm—

    தனந்த தானனத்த தனந்த தானனத்த
    தனந்த தானனத்த -தனதான
    கும்பகோணம்
    ———————
    பெருமாள் திருப் புகழ்….
    “அகந்தை வேரறுத்தவ் விழந்த வான்கிடைத்திங்
    கிருந்த வாறிருக்க -ரமணேசர்
    புகன்ற வாசகத்தை உணர்ந்து மாதவத்தை
    நெருங்க ஞானவித்தை -அருள்வாயே
    அகன்ற சாகரத்தில் அனந்தன் மேலிருக்கை
    அமைந்த யோகநித்ரை, -வனமாலி
    சுகந்தம் வீசலக்மி பதங்கள் மேவநித்ய
    இனங்கள் சூரிநிற்க -பயில்வோனே
    தகுந்த வாறளிப்பு ,சினந்த மாமனுக்கு
    இகழ்ந்த பாலனுக்கு -முறைவாசல்,
    தினங்கள் போயெமர்க்கை விழுந்து சாவதற்குள்
    முகுந்த வாவகத்துள் -குடியேற
    புகுந்த ஆழிவிட்டு பருந்து வாகனத்தில்
    பறந்து வாயெனக்கு -துணையாக
    உயர்ந்த கோபுரத்துள் கிடந்து வாழவைக்கும்
    குடந்தை மாநிலத்து -பெருமாளே”…

     

    பெருமாள் திருப் புகழ்….

     

    தந்ததான தான தான தந்ததான தான தான
    தந்ததான தான தான -தனதான

     

    கும்பகோண ராமசாமி பெருமாள்
    —————————————

    “எம்பிரானும் வேதம் ஓதும் அன்னவாக னாரும் காண
    மண்ணைவானை மீறு மேனி -கிரிசோணை
    தன்னில்தேக வாசம் போக அன்றுஆல வாயில் சாவை
    வென்றுதீர னாக மேவு -ரமணேசர்

    கொம்புஞானம் காண காலில் தெம்பிலாத மூடன் வாயில்
    கொஞ்சமேனும் தேனை சேர -அருள்வாயே
    கங்கையோடன் தோள்கு லாவி அஞ்சுமானை நீயும் கூட
    என்றுகூறு தோழ பாவ -ரகுராமா

    அண்ணல்சோகம் தீர வானில் பொங்குமாழி மீது தாவி
    அன்னைவாழும் சேதி கூறும் -அனுமானின்,
    அஞ்சனாவின் சேயின், வாயு மைந்தனாரின், வாசி ஈசன்
    அம்சனாரின் நேச மான -சகவாசன்

    நம்பினோர்கள் நாளில் கோளில் துன்புறாது கோயில் வாசல்
    அன்பினோடு தாழி டாது -சிலையோடு
    அம்புறாவும் தோளில் ஆட தம்பியோடு தாரமொடு
    கும்பகோண ராம சாமி -பெருமாளே”….(31)
    ————————————————————————

    Share
  • ”திருப் புகழ்’’….

    கிரேசி மோகன்

     
    “ஏறுமயில் ஏறிவிளை யாடும்முகம் ஒன்று” மெட்டில் எழுதியது….

    images

    கண்ணன் திருப் புகழ்
    ————————–
    “கோலுயர கன்றுகளை காத்தமுகம் ஒன்று
    கோபியர்கள் கூட்டமதில் கொஞ்சுமுகம் ஒன்று
    நீலயமு னாநதியில் நீந்துமுகம் ஒன்று
    நச்சரவம் மீதுநட மாடும்முகம் ஒன்று
    பால்நிலவு ராதைமுகம் பார்க்கும்முகம் ஒன்று
    பாரமுலை பூதகியின் ப்ராணமுகம் ஒன்று
    காலனென மாமனுயிர் கொண்டமுகம் ஒன்று
    ஆலிலையில் பாலனென ஆழ்ந்தபெரு மாளே”….(1)
    —————————————————————————–

    இராமன் திருப் புகழ்….
    “கோசலைகு மாரனென கொஞ்சுமுகம் ஒன்று
    தேசுமுனி வாசிஷ்ட யோகமுகம் ஒன்று
    கோசிகனின் சீடனென கண்டமுகம் ஒன்று
    கோரமகள் தாடகையை கொன்றமுகம் ஒன்று
    ஈசன்சிலை யாகசிலை இற்றமுகம் ஒன்று
    வாசமகள் ஜானகியின் ஆசைமுகம் ஒன்று
    ஆசுகவி மாருதியின் நட்புமுகம் ஒன்று
    ஆதிகவி ஒதுமிதி காசபெரு மாளே”….(2)
    ——————————————————————————–
    ஈசன் திருப் புகழ்….
    “பாதிமதி பாகிரதி பேணும்முகம் ஒன்று
    பாகமதில் பார்வதியை பூணுமுகம் ஒன்று
    வேதியரும் வானவரும் வேண்டுமுகம் ஒன்று
    ஓதுமறை பாதமதில் ஒண்டுமுகம் ஒன்று
    ஜோதிஜலம் வாயுநில காற்றுமுகம் ஒன்று
    சோமமுடி வில்வயிலை சாற்றுமுகம் ஒன்று
    ஆதியரு ணாசலம் அமர்ந்தமுகம் ஒன்று
    ஆசிரிய னாய்ரமணர்க்(கு) ஆனபெரு மாளே”….(3)
    ————————————————————————————————–
    தேவி திருப் புகழ்….

     

    “ராசனொடு ஆடும்சிவ காமிமுகம் ஒன்று
    ராவில்நில வானஅபி ராமிமுகம் ஒன்று
    பேசுதமிழ் ஞானமகன் பாலின்முகம் ஒன்று
    பூசுதிரு நீறுமக மாயிமுகம்ஒன்று
    தேசகவி பாரதியின் மாரிமுகம் ஒன்று
    தேவிகரு மாரியென தோன்றுமுகம் ஒன்று
    ஆசுகவி ஆகயெனை ஆக்கவரு வாயே
    ஆதிசிவன் பாகமிட மானமுலை யாளே”….(4)
    —————————————————————————————————–
    விநாயகர் திருப் புகழ்….
    “பாரம்எளி தாகஎலி தாங்குமுகம் ஒன்று
    பார்வதிகு மாரனெனும் பிஞ்சுமுகம் ஒன்று
    தேருடைய ஈசர்தொழு தேத்துமுகம் ஒன்று
    தூயதமிழ் மாதகவல் ஓதுமுகம் ஒன்று
    மாறன்குற மாதணைய வந்தமுகம் ஒன்று
    மாலரியின் ஆழிதனை உண்டமுகம் ஒன்று
    வேரரசு வீற்றுவினை தீர்க்குமுகம் ஒன்று
    வேதமுத லானகண நாதபெரு மாளே”….(5)
    ———————————————————————————————
    ஐயப்பன் திருப் புகழ்….

     

    “வீறுபுலி வாகனமு லாவுமுகம் ஒன்று
    வாவருடன் தோழமைகு லாவுமுகம் ஒன்று
    மாறுபடு மோகினிசு மந்தமுகம் ஒன்று
    மேலரவம் பூணுமரன் தந்தமுகம் ஒன்று
    மாறன்வழி போகாமல் மேய்க்கும்முகம் ஒன்று
    ஏறுமடி யார்கள்பயம் போக்குமுகம் ஒன்று
    கூறும்சர ணாகதியை கேளுமுகம் ஒன்று
    கானிலுறை காந்தசப ரீசமணி கண்டா”….(6)
    ——————————————————————————————————
    ரமண திருப் புகழ்….
    “பேறுறதி ருச்சுழிபி றந்தமுகம் ஒன்று
    பேதையழ கம்மைமடி பாய்ந்தமுகம் ஒன்று
    பேருபெற கூடல்நகர் போனமுகம் ஒன்று
    கூறுபட கூற்றனையெ திர்த்தமுகம் ஒன்று
    ஏறியரு ணாசலம மர்ந்தமுகம் ஒன்று
    ஏகமென யாவினையும் ஏற்றமுகம் ஒன்று
    நாரியிட பாகர்மக னானமுகம் ஒன்று
    பாரில்ரம ணீயமழை பெய்தபெரு மாளே”….(7)
    ————————————————————————————————
    ஆண்டாள் திருப் புகழ்….

    “ஆடிவரும் பூரமதில் பூத்தமுகம் ஒன்று
    ஆசுகவி பட்டர்மகள் ஆனமுகம் ஒன்று
    காடுவன மாலிதனில் கண்டமுகம் ஒன்று
    மாடமதில் ரங்கனிடம் காதல்முகம் ஒன்று
    சூடும்மலர் மாலைதனை சூடும்முகம் ஒன்று
    ஸ்ரீவிலிபு தூரில்கவி செப்புமுகம் ஒன்று
    கூடலுடன் ஊடலையும் கூறுமுகம் ஒன்று
    கீதையுடன் பாசுரமி ணைத்ததமிழ் தாயே”….(8)
    ——————————————————————————————————-

     

    தசாவதாரத் திருப் புகழ்….
    “மீனமென வந்துமறை மீட்டமுகம் ஒன்று
    மேருமலை தாங்கவரும் ஆமைமுகம் ஒன்று
    ஏனமென பூமிதனை ஏந்துமுகம் ஒன்று
    தூணதிர சீயமென தோன்றுமுகம் ஒன்று
    தானமுற மாபலிமுன் ஓங்குமுகம் ஒன்று
    மூணுவித ராமனென மூண்டமுகம் ஒன்று
    கானமுர ளீதரமு ராரிமுகம் ஒன்று
    ஞாலபரி பாலதச மானபெரு மாளே”….(9)….
    ——————————————————————————————————–

    Share
  • ”மழையோன்’’….

    DSC01226

    “திருக்கோயிலூரில்” முதல் மூன்று ஆழ்வார்களுக்கு
    (பொய்கை, பூதம், பேயாழ்வார்) உலகளந்த பெருமாள்
    மழையாகிக் காட்சி தந்தாராம்….இந்த மழையில் அந்த அருள் மழையை
    நினைக்கையில் தோன்றியது….

    “ஒருவர் படுக்க இருவர் அமர
    வருகை புரிந்தவரால் நிற்க -ஒருயிரவில்
    பொய்கைபேய் பூதத்தார் பின்னிப் பிணைந்திட
    செய்த மழையோன் சரண்”….

    “மாரிகாத்த கண்ணனே, ஏரிகாத்த ராமனே,
    ஈரக்கை போதுமே ஈசர்காள் !, -ஊருக்கு,
    அய்யனருள் மீறியதே , ஆகாஸ கங்கையாய்:
    பொய்கைபூ தம்பேய்வெண் பா”….கிரேசி மோகன்

    Share
  • அறுபடையோன் புகழ்….

    கிரேசி மோகன்

    amu

    ——————————————
    திருவேரகம்(சுவாமி மலை)….
    ————————————-
    குந்திக்கால் மண்டியிட்டுக் கூப்பியக் கைகொண்ட
    தந்தைக்குச் சொன்ன தனயனை -சிந்தைக்குள்
    வேராக ஊன்றி விருட்ஷமாய் நட்டிடு
    ஏரகச் செல்வனை ஏத்து ….(1)

    பழமுதிர்சோலை
    ——————–
    கூப்பாடு போட்டவுடன் கும்பல் கூடிடும்
    தோப்பாய் இருந்து தனிமரமாய் -மூப்பால்
    கிழமுதிரும் போதேனும் கந்தன்கை கோர்க்க
    பழமுதிர் சோலைக்குள் புகு ….(2)

    திருத்தணி
    ————–
    விருத்தனாய் வந்து குறத்தியைக் கூடி
    திருத்தணி மேவும் தலைவா -மருத்துவன்
    வைதீஸ் வரன்பெற்ற வேலா யுதாவாழ்வில்
    பொய்தீசல் சேராது போக்கு….(3)
    திருச்செந்தூர்
    ——————-

    மாறுபடு சூரனுடல் வேறுபட வேலெய்து
    கூறுபட வைத்த குருநாதன்: -சீறுகடல்
    செந்தூரில் பத்தினிகள் சேர வளர்ந்திடும்
    சிந்தூர வண்ணனைச் சேர்….(4)

    பழனி
    ——–
    மாம்பழம் தந்தை மறுத்ததால் கோபித்து
    தீம்பிழம் பாகி தவக்கோலம் -நாம்பழனி
    குன்றினில் கண்டு களித்திடக் காட்சிதரும்
    நின்றிடும் ஆண்டி நமக்கு….(5)

    திருப்பரங்குன்றம்
    ———————–
    குரங்கென்ற நெஞ்சோடு கூடிக் குலாவி
    தரங்குன்றி தாழ்ந்தோம், தவித்தோம் -பரங்குன்றில்
    தெய்வானைக் கைப்பிடித்த தேவ சகாயனை
    கைவாய்மெய் கொண்டு கருது….(6)….கிரேசி மோகன்….

    Share
  • பெருமாள் திருப்புகழ்….

    ஒரு முருக பக்தர் ‘’இறுமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி-விடமேநீ’’ என்ற ‘’திருப்புகழ் மந்திரத்தை’’ வாட்ஸ்-அப்பில் அனுப்பியிருந்தார்….அருணகியார் வாக்கில் சொக்கினேன்….முன்பு எழுதிய பெருமாள் திருப்புகழ் நினைவுக்கு வந்தது….அதைப் பகிர்கிறேன் தங்கள் வாசிப்புக்கு….அன்புடன் கிரேசி மோகன்….

    பெருமாள் திருப் புகழ்….

    images (1)

    தனதான தத்தன தனதான தத்தன
    தனதான தத்தன -தனதான

    பொது
    ——–

    “கபவாத, பித்தமும், சளிதோஷ சத்தமும்,
    தலைநோவும் ,ரத்தமும் -வெளியேறும்
    குதமூல பெளத்ரமும், நகம்மீது சுத்தியும்,
    படர்சோகை, மக்கிடும் -விழிபார்வை

    சபைநாற வைத்திடும் சனிவாயில் சொத்தையும்,
    உமிழ்நீர்தெ றித்திட -உருள்நாவும்,
    செரிமானம் அற்றிட பிரிவாய்(வு)அ சுத்தமும்,
    சொறிநோய்அ ரிப்பதும், -இதுபோக

    அபவாத புத்தியும், மமகார சித்தமும்,
    அவதூறு ரைத்திடும் -விடநாவும்,
    அணுகாது சத்துவ மனமேனி உற்றிட
    அலைமேல்ப டுத்திடும் -மணிமார்பா

    மதுகேசி, சக்கிரன், முலைபூதம், சர்ப்பமும்,
    சிசுபால வர்க்கமும், -முறைமாமன்
    தரைசாய இத்தரை அவதார முற்றனை,
    அருளாய்யெ னக்கரி -பெருமாளே”….கிரேசி மோகன்….
    ——————————————————————————————-

    Share