கிரேசி மோகன்

 
“ஏறுமயில் ஏறிவிளை யாடும்முகம் ஒன்று” மெட்டில் எழுதியது….

images

கண்ணன் திருப் புகழ்
————————–
“கோலுயர கன்றுகளை காத்தமுகம் ஒன்று
கோபியர்கள் கூட்டமதில் கொஞ்சுமுகம் ஒன்று
நீலயமு னாநதியில் நீந்துமுகம் ஒன்று
நச்சரவம் மீதுநட மாடும்முகம் ஒன்று
பால்நிலவு ராதைமுகம் பார்க்கும்முகம் ஒன்று
பாரமுலை பூதகியின் ப்ராணமுகம் ஒன்று
காலனென மாமனுயிர் கொண்டமுகம் ஒன்று
ஆலிலையில் பாலனென ஆழ்ந்தபெரு மாளே”….(1)
—————————————————————————–

இராமன் திருப் புகழ்….
“கோசலைகு மாரனென கொஞ்சுமுகம் ஒன்று
தேசுமுனி வாசிஷ்ட யோகமுகம் ஒன்று
கோசிகனின் சீடனென கண்டமுகம் ஒன்று
கோரமகள் தாடகையை கொன்றமுகம் ஒன்று
ஈசன்சிலை யாகசிலை இற்றமுகம் ஒன்று
வாசமகள் ஜானகியின் ஆசைமுகம் ஒன்று
ஆசுகவி மாருதியின் நட்புமுகம் ஒன்று
ஆதிகவி ஒதுமிதி காசபெரு மாளே”….(2)
——————————————————————————–
ஈசன் திருப் புகழ்….
“பாதிமதி பாகிரதி பேணும்முகம் ஒன்று
பாகமதில் பார்வதியை பூணுமுகம் ஒன்று
வேதியரும் வானவரும் வேண்டுமுகம் ஒன்று
ஓதுமறை பாதமதில் ஒண்டுமுகம் ஒன்று
ஜோதிஜலம் வாயுநில காற்றுமுகம் ஒன்று
சோமமுடி வில்வயிலை சாற்றுமுகம் ஒன்று
ஆதியரு ணாசலம் அமர்ந்தமுகம் ஒன்று
ஆசிரிய னாய்ரமணர்க்(கு) ஆனபெரு மாளே”….(3)
————————————————————————————————–
தேவி திருப் புகழ்….

 

“ராசனொடு ஆடும்சிவ காமிமுகம் ஒன்று
ராவில்நில வானஅபி ராமிமுகம் ஒன்று
பேசுதமிழ் ஞானமகன் பாலின்முகம் ஒன்று
பூசுதிரு நீறுமக மாயிமுகம்ஒன்று
தேசகவி பாரதியின் மாரிமுகம் ஒன்று
தேவிகரு மாரியென தோன்றுமுகம் ஒன்று
ஆசுகவி ஆகயெனை ஆக்கவரு வாயே
ஆதிசிவன் பாகமிட மானமுலை யாளே”….(4)
—————————————————————————————————–
விநாயகர் திருப் புகழ்….
“பாரம்எளி தாகஎலி தாங்குமுகம் ஒன்று
பார்வதிகு மாரனெனும் பிஞ்சுமுகம் ஒன்று
தேருடைய ஈசர்தொழு தேத்துமுகம் ஒன்று
தூயதமிழ் மாதகவல் ஓதுமுகம் ஒன்று
மாறன்குற மாதணைய வந்தமுகம் ஒன்று
மாலரியின் ஆழிதனை உண்டமுகம் ஒன்று
வேரரசு வீற்றுவினை தீர்க்குமுகம் ஒன்று
வேதமுத லானகண நாதபெரு மாளே”….(5)
———————————————————————————————
ஐயப்பன் திருப் புகழ்….

 

“வீறுபுலி வாகனமு லாவுமுகம் ஒன்று
வாவருடன் தோழமைகு லாவுமுகம் ஒன்று
மாறுபடு மோகினிசு மந்தமுகம் ஒன்று
மேலரவம் பூணுமரன் தந்தமுகம் ஒன்று
மாறன்வழி போகாமல் மேய்க்கும்முகம் ஒன்று
ஏறுமடி யார்கள்பயம் போக்குமுகம் ஒன்று
கூறும்சர ணாகதியை கேளுமுகம் ஒன்று
கானிலுறை காந்தசப ரீசமணி கண்டா”….(6)
——————————————————————————————————
ரமண திருப் புகழ்….
“பேறுறதி ருச்சுழிபி றந்தமுகம் ஒன்று
பேதையழ கம்மைமடி பாய்ந்தமுகம் ஒன்று
பேருபெற கூடல்நகர் போனமுகம் ஒன்று
கூறுபட கூற்றனையெ திர்த்தமுகம் ஒன்று
ஏறியரு ணாசலம மர்ந்தமுகம் ஒன்று
ஏகமென யாவினையும் ஏற்றமுகம் ஒன்று
நாரியிட பாகர்மக னானமுகம் ஒன்று
பாரில்ரம ணீயமழை பெய்தபெரு மாளே”….(7)
————————————————————————————————
ஆண்டாள் திருப் புகழ்….

“ஆடிவரும் பூரமதில் பூத்தமுகம் ஒன்று
ஆசுகவி பட்டர்மகள் ஆனமுகம் ஒன்று
காடுவன மாலிதனில் கண்டமுகம் ஒன்று
மாடமதில் ரங்கனிடம் காதல்முகம் ஒன்று
சூடும்மலர் மாலைதனை சூடும்முகம் ஒன்று
ஸ்ரீவிலிபு தூரில்கவி செப்புமுகம் ஒன்று
கூடலுடன் ஊடலையும் கூறுமுகம் ஒன்று
கீதையுடன் பாசுரமி ணைத்ததமிழ் தாயே”….(8)
——————————————————————————————————-

 

தசாவதாரத் திருப் புகழ்….
“மீனமென வந்துமறை மீட்டமுகம் ஒன்று
மேருமலை தாங்கவரும் ஆமைமுகம் ஒன்று
ஏனமென பூமிதனை ஏந்துமுகம் ஒன்று
தூணதிர சீயமென தோன்றுமுகம் ஒன்று
தானமுற மாபலிமுன் ஓங்குமுகம் ஒன்று
மூணுவித ராமனென மூண்டமுகம் ஒன்று
கானமுர ளீதரமு ராரிமுகம் ஒன்று
ஞாலபரி பாலதச மானபெரு மாளே”….(9)….
——————————————————————————————————–

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *