Category: பத்திகள்

பத்தி

  • வால்ட் விட்மன் வசன கவிதை -9

    என்னைப் பற்றிய பாடல் -2

    (Song of Myself)

     

    (1819-1892)
    (
    புல்லின் இலைகள் -1)

    மூலம் : வால்ட் விட்மன்

    தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

    என் ஆத்மாவே ! உன்மேல் உள்ளது

    எனக்கு நம்பிக்கை !

    மற்ற ஆத்மாவை அவமதிக்கக் கூடாது

    உனக்காக ! அதுபோல்

    உன்னையும்

    மற்றதின் முன் அவமதித்தல் கூடாது .

    புல்மேல் புரள்வாய் என்னுடன்

    தொண்டையில் அடைப்பதை எளிதாக்கு.

    சொற்கள் வேண்டாம்,

    சந்தமோ, இசையோ வேண்டாம்

    சம்பிர தாயம் வேண்டாம்

    அறிவு புகட்ட வேண்டாம் எனக்கு

    மிகச் சிறந்த தாயினும்

    வேண்டேன் !

    தாலாட்டு மட்டும் பிடிக்கும்

    ஓலமான உன் முணங்கல் ஓசை பிடிக்கும்.

    தரணியைச் சுற்றிக் கடந்த அனைத்து

    தர்க்க அறிவும், அமைதியும்

    சட்டெனத் தோன்றி

    சூழ்ந்து கொண்டன என்னை !

    தெரியும் எனக்கு

    இறைவனின் கைப்பலம் உள்ளது

    என் மன உறுதியில் !

    கடவுளின் ஆன்மா என்னுடன் தோன்றிய

    உடன் பிறப்பாகும் !

    இன்றுவரைப் பிறந்தவர் யாவரும்

    என் சகோதரர் ஆவார் !

    மாதர்கள் என் சகோதரிகள் அல்லது

    காதலிகள் ஆவார் !

    +++++++++++++

    தகவல்:

    1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

    2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]

    3. Britannica Concise Encyclopedia [2003]

    4. Encyclopedia Britannica [1978]

    5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]

    6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/

    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

    ********************

    jayabarat@tnt21.com [S. Jayabarathan] (January 31, 2013)

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • தொல்லை காட்சி- அரவிந்த் சாமி- மிஸ்டர் பீன்- மௌன ராகம்

    மோகன் குமார்

    டிவி யில் பார்த்த படம் – மௌன ராகம்

    தமிழின் மிக சிறந்த பட வரிசையில் வரக்கூடிய மௌன ராகம் மீண்டும் ஒரு முறை காண முடிந்தது. மணி ரத்னம் மனதளவில் Fresh -ஆக இருந்த போது எடுத்த படம். மனம் ஒவ்வாத கணவன் – மனைவி, மனைவிக்கு ஒரு பழைய காதல் என  இன்றைக்கும் பொருந்துகிற மாதிரி இருப்பது ஆச்சரியம். கார்த்திக்கின் கேமியோ, ராஜாவின் அதி அற்புத பாடல்கள், PC  ஸ்ரீராமின்  ஒளி ஓவியம் (அந்த வார்த்தைக்கு தங்கர் பச்சான் காப்பி ரைட் எதுவும் வாங்கலையே ?) , ரேவதியின் அழகு.. என மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று.

    கடல் பார்த்து விட்டு , கட்டு போட்டு கொண்டு படுத்திருப்போர் பாலு மகேந்திரா போல மணிரத்னமும் சினிமாவிலிருந்து ரிட்டையர் ஆகிடனும் என சொல்ல ஆரம்பித்துள்ளனர். மணிரத்தினத்தின் சமீபத்துப் படங்களை பார்த்தால் (அதுவும் 3 முறை ஹார்ட் அட்டாக் வந்த அவரது  உடல்நிலையை  கணக்கில் எடுத்துக் கொண்டால்) – இந்த கூற்று சரியென்றே தோன்றுகிறது

    மிஸ்டர் பீன்

    போகோவில் இப்போதும் அவ்வப்போது மிஸ்டர் பீன் காட்சிகள் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறோம்…. நானும் மகளும் . என் பெண்ணுக்கு 10 வருஷத்துக்கும் மேலாக மிஸ்டர் பீன் அலுப்பதே இல்லை.  நண்பர்கள் சிலர் வீட்டில் குழந்தைகளுக்கு மிஸ்டர் பீன் காமெடி காட்டுவதில்லை சற்று அடல்ட் கண்டெண்ட் வரும் என்பதால்.. அப்படி ஒன்றும் செக்சியாய் இருக்காது. திடீரென எப்போதாவது ஒரு முறை உடையின்றி ஓடுவார் .அவ்வ ளவு தான்.. :))

    மிஸ்டர் பீன் பரீட்சை எழுதும் காட்சி, சர்ச்சில் பிரேயர் நடக்கும் போது செய்யும் லூட்டிகள் .. இவையெல்லாம் எவர் கிரீன் காமெடி..

    நிற்க. புகழ் உச்சியில் இருக்கும் போதே மிஸ்டர் பீனாக நடிக்கும் ரோவன் அட்கின்சன் நடிப்பதை நிறுத்திக் கொள்கிறேன் என அறிவித்து விட்டார். உங்களுக்கு இதில் மெசேஜ் ஏதும் இருக்கா மணிரத்னம் சார் மற்றும் டெண்டுல்கர் ?

    பிளாஷ் பேக் : வந்தே மாதரம்

    இன்றைய சோ – தன் ஜால்ரா நடவடிக்கையால் நம் மதிப்பை இழந்து வந்தாலும், அவரது பழைய நாடகங்கள் சில அட்டகாசம் என்பதை மறுக்க முடியாது

    குறிப்பாக வந்தே மாதரம் என்கிற இந்த நாடகம் ஞாயிறு காலை 9 மணியளவில் ஒளிபரப்பாகும். டிவி வந்த புதுசு. தூர்தர்ஷனில் தான் பார்த்த நினைவு. ஒவ்வொரு ஞாயிறும் மிக எதிர்பார்ப்புடன் பார்த்து ரசித்த நாடகம். நமக்கு நன்கு தெரிந்த சுதந்திரப் போரை செம சுவாரஸ்யம் மற்றும் சஸ்பென்சுடன் காட்டி அசத்தியிருந்தார். அன்றைய அரசியலை அதிகம் நக்கல் செய்யாமல் எடுத்துக் கொண்ட விஷயத்தை மட்டும் ஒரே கோட்டில் எடுத்துச் சென்ற சீரியல். இப்போது DVD -யாகவும்   கிடைக்கிறது என இணையம் மூலம் அறிகிறேன்.

    ஜெயா டிவி யில் விஸ்வரூப செய்தி

    விஸ்வரூபம் பிரச்சனை கொழுந்து விட்டு எரிந்தபோது பேசாமல் இருந்த ஜெயா டிவி, கமலுக்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்ட போது தொடர்ந்து அதை பிளாஷ் நியூசாக போட்டது. பிரச்சனை முடிவுக்கு வருவதை சொல்வது நல்ல விஷயம் தான்..

    ஆனால் பிளாஸ் நியூஸ் இப்படி சொன்னது: முதல்வர் நடவடிக்கை : விஸ்வரூப பிரச்சனை தீர்ந்தது.. !

    ஆமா, ஜெயா டிவிக்கும், முதல்வருக்கும் சம்பந்தமே இல்லியாமே?  நம்பிட்டோம் !

    அரவிந்த் சாமியும் அடுப்புல வெந்த ஆசாமியும்

    கடல் படம் பற்றி அரவிந்த்சாமி விஜய் டிவியில் 1 மணி நேரம் பேசினார். அரவிந்த்சாமியின் கடல் பார்த்து அடுப்புலே வெந்த ஆசாமியாகி போனவர்கள் இந்த நிகழ்ச்சி பார்த்தால்  நொந்து நூடுல்ஸ் ஆகியிருப்பார்கள்

    படம் ஆஹோ ஓஹோ என படக் குழு பேசும்போது கவுண்டர் படத்தில் வரும் ” போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சுது ” தான் நியாபகத்துக்கு வந்தது.

    அரவிந்தசாமியை ஓரிரு வருடங்களுக்கு முன் பார்த்துள்ளீர்களா? நன்கு வெயிட் போட்டு முடி ஏகமாய் கொட்டி. முக நூலில் சில நண்பர்கள் கூட ” எப்ப பார்த்தாலும் பெண்கள் சைட் அடித்த மனிதன் இன்று எப்படி ஆனார் பாருங்கள் ” என்று போட்டோ போட்டு மகிழ்ந்தனர் ஆனால் மனிதர் மீண்டும் பழைய ஆளாக வந்து எல்லார் வயிற்றிலும் புளியைக் கரைத்துள்ளார் . வெயிட் குறைத்து சரி. கொட்டிய முடி எப்படி திரும்ப வந்துச்சு சார்? சினிமாவில் தான் விக் என்றால் வெளியிலுமா?

    என்னமோ போடா மாதவா.. !

    படத்திற்கு நன்றி :

    http://www.joystiq.com/2007/04/06/mr-bean-game-coming-to-playstation-2/

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (43)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    மனிதன் தோன்றிய காலம் முதல் இன்றுவரை அவனுடைய சரித்திரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் எண்ணிலடங்காதவை. கலாச்சாரம், மொழி, வாழ்க்கைமுறை என்று பலதரபட்ட மாற்றங்களுக்குள்ளாகிய சரித்திரம் மனித சரித்திரம் என்பதுவே உண்மையாகும்.

    அத்தகைய மாற்றங்களுக்குட்பட்டதொன்றே தற்கால போக்குவரத்து முறைகளாகும். இத்தகைய முன்னேற்றங்களில் முன்னிடம் வகித்தது மேலைத்தேசங்களில் இங்கிலாந்து என்று சொன்னால் மிகையாகாது.

    2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி இங்கிலாந்து தேசத்தின் போக்குவரத்து முன்னேற்றம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும்.

    என்ன அது ? அப்படி அது என்ன பெரிய சாதனை ? உங்கள் கேள்வி புரிகிறது.

    “London Underground ” இலண்டன் நிலத்துக்குக் கீழான சுரங்க இரயில் சேவை ஆரம்பித்து அன்று 150வது வருடமாகும். ஆமாம் லண்டனின் முதலாவது சுரங்க ரயில் ஓடத் தொடங்கியது 1863ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதியாகும்.

    இன்றைய லண்டன் “சுரங்க இரயில் ” இன்றி இயங்க முடியாது எனும் நிலையை எட்டியுள்ளது. இச்சுரங்க இரயில் மூலம் தமது அன்றாடப் பய்ணங்களை தமது வேலைத்தளங்களுக்கு மேற்கொள்ளும் பிரயாணிகளின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    நான் இங்கிலாந்தில் காலடி வைத்து இப்போ 37 வருடங்கள் ஓடி விட்டன. நான் மாணவனாக லண்டனில் வலம் வந்த நேரம் இரவு நேரங்களில் பகுதி நேர காவலாளியாகப் பணிபுரிந்து விட்டு பகல் பொழுதுகளில் கல்லூரி செல்ல வேண்டிய நிலை அப்போது.

    18/19 வயதுகளில் மிதந்த நான் அன்று எனது வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்ள உதவியது இந்த இலண்டன் சுரங்க ரயில் சேவையே. ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு விரைவாகப் பயணம் மேற்கொள்ள வேண்டிய தேவை இருந்த நேரத்தில் இந்த ரயில் சேவையின் மகத்துவம் புரிந்தது.

    லண்டனில் வாழ்ந்த சார்ள்ஸ் பியர்சன் என்பவரின் வாழ்க்கைக் காலம் 1793 தொடக்கம் 1862 வரையுமாகும். இல்ண்டனில் ஒரு நிலத்துக்குக்கீழான சுரங்க இரயில் சேவை அமைப்பதை கற்பனையில் உருவாக்கியவர் இவரேயாகும்.

    இவரது கனவுக்கு செயலாக்கம் கொடுக்கும் பணி 1817 தொடக்கம் 1898 வரை வாழ்ந்த ஜான் வவுலர் என்பவருக்கு அளிக்கப்பட்டது.

    இத்திட்டம் செயல்வடிவம் கொடுக்கப்பட்டது 1860ம் ஆண்டு  பெப்பிரவரி மாதம் ஆகும். ஜான் வவுலர் இத்திட்டத்தை செயல் வடிவப் படுத்தத் தொடங்கினார். ஆனால் இது முழு வடிவம் பெற்ற போது இதக் கற்பனையில் தீட்டிய சார்ல்ஸ் பியர்சன் உயிருடன் இருக்கவில்லை.

    மெட்ரோபொலிட்டன் சேவை என அழைக்கப்பட்ட முதலாவது லண்டன் சுரங்க இரயில் சேவை படிங்டன் Padington)  எனும் இடத்திற்கும் பரிங்டன் (Farringdon) எனும் இடத்திற்கும் இடையில் முதன் முதலாக 1863ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதன் நீளம் நான்கு மைல்களாகும்.

    இச்சேவையின் பரீட்சார்த்த ஓட்டம் அன்று முடிவுற்றதும் அடுத்த நாளே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டார்கள். இச்சேவை ஆரம்பித்து சில மாதங்களில் நாளொன்றிற்கு சுமார் 26000 பயணிகள் இச்சேவையை உபயோகித்தார்கள்.

    இச்ச்சேவை பிரத்தியேக கம்பெனியின் நிதி உதவியுடனேயே முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது.

    1884ம் ஆண்டு உள்ளடங்கிய வட்டத்தில் சுமார் 800 சுரங்க இரயில்கள் ஓடின என்று கூறப்படுகிறது. இச்சுரங்க இரயில்களுக்கான நிலத்துக்குக் கீழான சுரங்கமைப்புக்கான யோசனை 1840ம் ஆண்டளவில் தேம்ஸ் நதிக்குக்கீழாக சுரங்கப்பாதை அமைத்த பொறியியலாளர் ப்ரூனல் என்பவரின் செலாக்கத்தினாலேயே உருவானது எனப்து குறிப்பிடத்தக்கது.

    முதலாவது இலவச சுரங்க இரயில் பாதைக்கான வரைபடம் 1908ம் ஆண்டே வழங்கப்பட்டதாம். முதலாவது உலக மகாயுத்தத்தின் போது ஆண்கள் ஆனைவரும் இராணுவத்தில் இணைந்ததினால் ஏற்பட்ட ஊழியர் பஞ்சத்தைத் தீர்க்கவே இச்சுரங்க இரயில் சேவையில் முதன்முதலாக பெண்கள் இணைக்கப்பட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

    இச்சேவையின் முக்கியத்துவத்தை அதை உபயோகித்து அனுகூலத்தை அனுபவித்தவன் எனும் வகையில் நான் பெருமையுடன் நினைவு கூறுகிறேன். இத்தகைய கண்டுபிடிப்புகள் மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு ஈடர்ன வகையில் சேவையாற்றியிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போமா! (1)

    பவள சங்கரி

    ’நாம்’ நாமாகவே இருப்பதற்கு நம் எண்ணங்களே காரணம். நெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும் நம்மை நல்வழிப்படுத்தி, வெற்றிக்கனியை எட்டிப் பறிக்கச் செய்யும் என்ற நம்பிக்கை உடையவர் நீங்கள் என்பது உண்மையானால் இத்தொடர் உங்களை அக்காரியத்தை மென்மேலும் ஊக்குவிக்க வல்லது என்பது சத்தியம். நம்பிக்கை என்ற ஒன்றே வாழ்க்கையில் நம்மை உயரத்திற்கு இட்டுச் செல்லக்கூடியது. நம் எண்ணங்கள் மேம்படும்போது நம் வாழ்க்கைத் தரமும் உயரும். நம் எண்ணங்களை எப்படி மேம்படுத்தப் போகிறோம் என்பதையே இத்தொடரில் விவாதிக்கப் போகிறோம். நல்ல எண்ணங்கள் மட்டுமே நம் சுய வல்லமையை ஊக்குவிக்கும் ஒரு உன்னத காரணி.

     உறுதியான எண்ணத்தால் உயர்ந்து நிற்போம்!

    நற்சிந்தையாலும், நல்ல ஆரோக்கியத்தினாலும், நல்லொழுக்கத்தினாலும் உயர்ந்து நிற்பதால் வெற்றிக்கான அடித்தளத்தை உறுதியாக்கிவிட்டோம் என்ற நம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்ளும்போது இடையில் வரும் தடைகளை எளிதாகத் தகர்த்தெறியும் வல்லமை பெறுகிறோம். இதனால் உங்கள் பயணத்தில் அன்பைத் தவிர வேறு எந்தக் காரணத்திற்காகவும் எவருக்காகவும் நீங்கள் தலை வணங்கத் தேவையில்லை..

    முதலில் நம் உடலளவில் உயர்ந்து நிற்போமே. ஒரே ஒரு உடல் மொழியால் ஓராயிரம்  எண்ணங்களை உணர்த்தக்கூடும். அத்தகைய உடலை முதலில் சரியாகக் கையாள வேண்டியது அவசியம். முத்ற்பார்வையிலேயே வெளித்தோற்றம் மட்டுமே ஒருவரை எடை போடச் செய்கிறது. கருப்போ, சிகப்போ, நெட்டையோ, குட்டையோ, செல்வந்தரோ, வறியவரோ எவராயினும் நம் புறத்தோற்றம் எப்படி இருந்தாலும், நாம் அதை வெளிப்படுத்தும் விதமே நம்மைப் பற்றிய மதிப்பீட்டை உருவாக்குகிறது.

    தன்னம்பிக்கை உடைய ஒருவர் தம் தோற்றம் மூலமே அதனை எளிதாக அடுத்தவரை உணரச் செய்ய முடியும். வளைந்து, நெளிந்து, கூனிக் குறுகி ஒருக்காலும் நிற்க மாட்டார் தன்னம்பிக்கை உடையவர். பாரதியின் நிமிர்ந்த நன்னடை பார்த்தவுடன் மரியாதை அளிக்கக்கூடிய தோற்றப் பொலிவைக் கொடுக்கக் கூடியது. அந்த நிமிர்ந்த நன்னடைக்கு மனதில் நம்பிக்கை வேறூன்றியிருக்க வேண்டும். அந்த நம்பிக்கைக்கு அச்சாரம் என்பது நேர்மையும், சுய கட்டுப்பாடும், உண்மையான உழைப்பும்தான்.

    தெருவோரத்தில் மசாலாப் பொறிக்கடலை கடை போட்டு பிழைப்பு நடத்தும் ஒருவர், சுறுசுறுப்பான வியாபார நேரத்தில், பம்பரமாய்ச் சுழலுகிறார். ஒரு பாத்திரத்தில் இரண்டு கை பொறியை அள்ளிப்போட்டு அதில் துருவிய கேரட், பீட்ரூட், கொத்தமல்லி இலைகள், கொஞ்சம் புதினாத் தொக்கு, எல்லாம் போட்டு, இறுதியாக மசாலாப் பொடியும், மிளாகய்த்தூள், உப்பு கலந்த கலவையையும் அப்படியேத்தூவி, அதன் மீது சிலத் துளிகள் எலுமிச்சைச் சாறும் தெளித்துக் கொடுப்பார். சுவையான சுவைதான் போங்கள். நாம் இங்கு அந்தச் சுவையில் மெய்மறந்து இருக்கும் போது, அந்த வழியாகக்  கடந்து போகும் ஒரு இரு சக்கர வாகன ஓட்டியின் கண்களில் பறந்து போய் விழுந்த அந்த மிளகாய்ப்பொடி படுத்திய பாடு, மனிதர் ஒரு பெரிய விபத்திலிருந்து தப்பி வந்தார் பாவம். இதை அறியும்போது அந்த மசாலாப்பொறிக் கடைக்காரர் எப்படி நிமிர்ந்த நன்னடையுடன் நடமாட இயலும். அவர் தூவும் அந்த மசாலாப் பொடிகள் அடுத்தவரின் பார்வைகளை பதம் பார்க்காதவாறு ஒரு மறைப்பான் வைத்து தம் சமுதாய அக்கறையை வெளிப்படுத்தியிருந்தால் அவர் அடுத்தவர் முன்போ, தம் மனசாட்சியின் முன்போ கூனிக்குறுகி நிற்க வேண்டியதில்லை. அடுத்தவர் வந்து முறைப்படுத்த வேண்டும் என்று எண்ணாமல் சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டாலே தலை நிமிர்ந்து நிற்கலாமே.

    தூக்கணாங்குருவிக் கூட்டைப் பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு பெருத்த ஆச்சரியமாக இருக்கும். மரத்திலோ, குட்டிச் சுவற்றிலோ, கிணற்றினுள்ளோ,  அப்படியே தொங்கிக் கொண்டிருக்கும் அதை அது எப்படித்தான் கட்டியிருக்குமோ என்று. எத்தனை பொறுமை வேண்டும். ஒவ்வொரு புல்லாகக் கொண்டு வநது கீழே விழுந்தாலும் மீண்டும், மீண்டும் பொறுக்கி எடுத்து கூடாக்கிவிடும். காற்று பலமாக வீசினாலும், ஆடுமே தவிர அறுந்து விழாது. ஒரு சின்ன குருவிக்கு இருக்கும் அந்த வல்லமை ஆறறிவு படைத்த நமக்கு இல்லாமலா போகும்?

    தொடரும்

    படத்திற்கு நன்றி :

    http://www.great-inspirational-quotes.com/stand-tall-like-the-sunflower.html

    Share
  • ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 2

    தொடுப்பவர் : ஜெயஸ்ரீ ஷங்கர்,
    சிதம்பரம்.

    எழுத்தாளரைப் பற்றிய விபரங்கள்

    1968

    குறுநாவல் சிற்பி :ஜோதிர்லதா கிரிஜா,

    சொந்த ஊர் : வத்தலக்குண்டு .

    பள்ளிப் பருவத்தில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் குழந்தை எழுத்தாளராக அறிமுகம் ஆனவர்.. தமிழ்வாணன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி.ஆகியோரால் ஊக்குவிக்கப் பட்டதன் பின், 1968 இல் கலப்புமணம் பற்றிய சர்ச்சைக்குரிய குறுநாவல் வாயிலாக ஆனந்தவிகடனில் பெரியோர்க்கான எழுத்தாளராக அறிமுகம் கிடைத்தது.

    எழுதியுள்ளவை : 600க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 20 க்கும் மேற்பட்ட புதினங்கள், 60 க்கும் மேற்பட்ட குறும் புதினங்கள் , 60 க்கும் மேற்பட்ட சமுதாயப் பிரச்சனைகள் சார்ந்த கட்டுரைகள், 3 நெடிய நாடகங்கள், சில வசன கவிதைகள், நகைச்சுவை துணுக்கு எழுத்தாளராகவும் ஆனந்த விகடனில் 1987 இல் அறிமுகமாகப் பெற்றவர்.

    பெற்ற பரிசுகள்: தினமணி கதிர் நாவல் போட்டி, கல்கி பொன்விழா வரலாற்று நாவல் போட்டி, லிலி தேவசிகாமணி அறக்கட்டளையின் சிறுகதைத் தொகுதிக்கான பரிசு. அமுதசுரபி நாவல் போட்டி, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருது, திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் சமுதாய நாவல் பரிசு, தமிழக அரசின் மிகச் சிறந்த நாவலுக்கான பரிசு ஆகியன். ‘நம் நாடு’ எனும் சிறுவர் நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் யுக்ரெயின் மொழியாக்கம் 1987 இல் மாஸ்கோவில் நடந்த இந்தியக் கலைவிழாவில் வெளியிடப்பெற்றது.

    ஆங்கிலத்தில் 1975 இல் ஃ பெமினாவின் வாயிலாக அறிமுகம். 25 சிறுகதைகள், ஒரு மினி நாவல். ஆங்கில மரபுக் கவிதை  இராமாயணம் (1789 பாடல்கள்) , திருக்குறள், (Voice of Valluvar) காந்தியடிகளின் வாழ்க்கை நிகழ்வுகள் (Gandhi Episodes),  நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள் (Pearls from the Prophet),  சத்தியசாயி பாபாவின் வரலாறு (The Living God at Puttaparthi )  ஆகியவை டாக்டர் கிருஷ்ண ஸ்ரீநிவாஸ் நடத்தும் POET  இல் தொடர்களாக வந்துள்ளன.

    விம்ன்ஸ் எரா , தி ஹிந்து, துக்ளக், மற்றும் இணையத்தில் திண்ணையிலும் தனது இன்றைய எண்ணங்களை எழுதிக் கொண்டு வருகிறார்கள்.

    சமீபத்தில் “செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி,  மன்னார்குடி” இந்த சமூக அமைப்பு இவரை “2012 க்கான சிறந்த பன்முக  எழுத்தாளராகத் தேர்ந்தெடுத்து அதற்கான பரிசும் , விருதும் , கேடயமும் அளித்து  கெளரவித்துப் பெருமை சேர்த்துக் கொண்டது குறிப்பிடத் தக்கது.

    2. அதிர்ச்சி …!

    குறுநாவல்  எழுதியவர்:  ஜோதிர்லதா கிரிஜா.
    வெளியான வருடம்:  1970.

    இரண்டாவது  மலராக நறுமணம் வீசும் இந்த “அதிர்ச்சி ” என்கிற இந்த குறிஞ்சி மலரைப்  பறிக்கிறேன்..

    கதை குறிஞ்சிப்பூவாக மலர்ந்து கிட்டத்தட்ட 42 வருடங்கள் ஆகிவிட்ட போதிலும்  இன்னும் சிறுகதை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை நிரந்தரமாகப் பிடித்துக் கொண்டு படித்தவர் மனதை இறுக்கிப் பற்றிக்  கொண்டிருக்கிறது.

    மலரின் கூம்பு  இதழ்களைப் போலவே இதில் பாத்திரப் படைப்புகளும் கச்சிதமாக கூம்பாக உள்வாங்கி உணர்வுகளைக் கொத்துக் கொத்தாக மென்மையாக மனதைக்  கவர்கிறது.

    பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி மலரையொத்த இந்த குறுநாவலைப் படிக்கும் ஒவ்வொரு உள்ளமும் “இது போன்ற ஒரு கதையை இது வரை படித்ததில்லை….இனியும் யாரும் இவ்வளவு அழகாக எழுதவும்  மாட்டார்” என்று எண்ணாமல் இருக்க முடியாது. படிக்கும் போதே கதை பேசும் ‘அதிர்ச்சி’ அனுபவம் உண்டாவதும் உறுதி.

    இத்தனை ‘அதிர்ச்சி’ தரும் கதையில் அப்படி என்ன தான் இருக்கிறது..? குறிஞ்சி மலரை மலை சார்ந்த இடங்களில் உயரமான இடங்களில் மட்டுமே காணக் கிடைப்பது போல கதையைப் படிக்கும் போதே மலை ஏற்றம் தரும் உணர்வுடன் கொண்டு செல்வது புதுமை.

    கதையின் சாரம்:

    தனது  மனைவியை இழந்தவர் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் தனக்கு இரண்டாவதாக கல்யாணம் செய்து கொண்டு மேலும் அரை டஜன் குழந்தைகளைப் பெற்று, இருக்கும் இயலாமை , ஏழ்மை இரண்டும் தீராமல் போக, வயது வந்த பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்விக்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லாது இருக்கும் ஒரு தகப்பன்.

    ஏழ்மை தனக்குத் தந்த வரமான வாழ்க்கையாக இரண்டாம் தாரமாக வாக்கப்பட்ட அவரின் மனைவி தான் வெறும் பிள்ளைப் பெறும் இயந்திரம் மட்டுமே எனபதைப் போல பத்து வருடத்தில் ஆறு குழந்தைகளைப் படைத்து படைப்பாளியாகப் பெருமை கொள்ளும் விதமாக ‘சித்தி’ யின்  பாத்திரப் படைப்பு.

    தாயை இழந்த மூத்த மகள் தன் தந்தை செய்த இந்த இரண்டாம் கல்யாணத்தை ஏற்க மனசில்லாமல்,மனதோடு புழுங்கி இப்படி செய்து விட்டாரே..என்று வேதனை பட்டு, ஆத்திரப் பட்டும், அதனாலேயே தனக்கு அன்னை முறையாக வந்த ‘சித்தி ‘ யைக் கூட மனசளவில் ஏற்காமல் தாயை நினைத்து வருந்துவது.

    குடும்பத்தின் கஷ்டத்தை மனதில் கொண்டு அக்கா, தங்கை இருவருமே மாலையில் பஜ்ஜியும், போண்டாவும் செய்து தெருத் தெருவாக நடந்து விற்பனை செய்ய, அந்த வியாபார நேரத்தில் நடக்கும் வியாபாரம் செய்கிறேன் என்று வீடுகளில் ஆண்கள் செய்யும்  பல வித அத்துமீறல்கள்.., அவர்களின்  வக்கிரங்கள் , ஒரு ஏழைப் பெண் தனது வாழ்வாதாரத்துக்கு உழைத்து சம்பாதிக்க முனைந்தாலும் அதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டு, அவர்களின் நைந்து போன உள்ளத்தைப் பார்க்காமல்…உடலைப் பார்த்து தனது வக்கிரங்களுக்கு வடிகால் தேட முயலும் போது…மேலும் உள்ளம் புண்ணாக…அங்கங்கு வியாபாரம் செய்வதையே நிறுத்தி விடுகிறார்கள்.இதற்கெல்லாம் விடிவே கிடையாதா? என்றும்  மனசு ஏங்க  வைக்கிறது.

    அக்காவுக்கு வயதாகியும் இன்னும் திருமணம் நடக்காமல் இருக்கிறதே என்று மனசுக்குள் கவலைப் பட்டு…அதைத் தனது அக்காவிடமே எடுத்துச் சொல்லி…நானா இருந்திருந்தால் ‘ஓடிப் போயிருப்பேண்டி அக்கா….ஓடிப் போயிருப்பேன்…’ என்று தனது ஆதங்கத்தை வெளிப் படுத்துகிறார் தங்கை ஜானகி. தங்களது பெருகிய குடும்பத்தின் ஏழ்மையை விரட்ட வீடு வீடாகச் சென்று பஜ்ஜியும் , போண்டாவும் வியாபாரம் செய்து பணம் கொண்டு வருவதனால் தான் தனது தந்தை நம் இருவரையும் திருமணம் செய்து வைக்காமல் வீட்டோடு வைத்துக் கொண்டிருக்கிறார். இதை நானே கேட்கிறேன்…என்று நேரம் பார்த்து தன்  தந்தையை கேட்கும்  அனல் பறக்கும் வார்த்தைகளைக்  கேட்டு அக்காவே தங்கையைத் திட்டுகிறாள்.

    தனது இயலாமையை உணர்ந்தாலும் இப்போது தன்னால் ஏதும் செய்ய இயலாது , மகளின் திருமணத்திற்கு வரதட்சிணை ஏதும் தந்து நடத்தி வைக்க  இயலாது என்று தெரிவித்ததும்…இப்பேர்பட்ட குடும்பத்தை விட்டு ஓடினாலும் பரவாயில்லை என்னும் தனது உணர்வுக்கு சரியான முடிவாக அவள்  மனதுக்குள் ஏற்றுக் கொள்கிறாள்.

    இந்நிலையில், அக்காவின் வாடிக்கையாக வியாபாரம் செய்யும்  பெட்டிக்கடைக்காரர் நடேசன் அவளைக் காதலிப்பதாகவும், தான் முதலியார் வகுப்பைச்  சேர்ந்தவர் என்பதால்  உள்ளூரில் மணந்து கொண்டு வாழ இயலாது என்பதால் எங்காவது வெளியூரில் சென்று வாழலாம்…அதற்கான  சம்மதம் கேட்டுக் கடிதம் எழுதித் தரவும். அதை வாங்கிப் படித்து மனம் ஏற்றாலும் , பரிபூரணமாக நடேசனைத் தானும் விரும்பினாலும், குடும்பத்தில் மூத்தவளாக இருந்து கொண்டு, தனக்கும் மனசுக்குப் பிடித்திருக்கிறது என்னும் ஒரே காரணத்தில் சுயநலமாக எண்ணி  தான் ‘நடேசனோடு ஓடிப் போனால்’ தன்  தங்கையின் திருமணம் தடைபட்டு விடுமே என்ற ஒரே நல்லெண்ணத்தில் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு அவரைத் நிராகரித்து, தவிர்த்து விடுகிறாள்.

    இருந்தும் சில நாட்கள் கழித்து நடேசனைப் பார்க்க வேண்டும் என்று மேலோங்கிய எண்ணத்தினால் அந்தப் பெட்டிக் கடைக்குச் செல்லும் போது  தான், அவர் அந்தக் கடையை வேறோருவருக்கு விற்று விட்டு சென்ற விஷயம். மனம் ஓடிந்தவளாக  வீடு திரும்பும் அக்கா இனி அவனைப் பார்க்கும் வாய்ப்பு தனக்கு இல்லை என்பதைப் புரிந்து கொண்டு வருந்துகிறாள். அதுவும் ஒரு விதத்தில் நல்லது தான் என்று தன்னைத் தேற்றி கொண்டு வளைய வரும் வேளையில்  தான் அவளது தங்கை ஜானகி தான் இரண்டு வருஷமாக அந்த ஊரின் மெயின் ரோட்டில் ஹோட்டல் வைத்து நடத்தும் கேசவன் நாயரின் தம்பி மாதவன் நாயரைத் தான் என்பவரை மனதார விரும்புவதாகவும், அவர்கள் வீட்டில் திருமணத்துக்கு  அவசரப் படுத்துவதாலும், அவர்கள் குடும்பத்தோடு கேரளாவுக்கு சென்று விடுவதால் தானும் அவர்களோடு சேர்ந்து சென்று விடலாம் என்னும் எண்ணத்தில் இருப்பதாகவும் சொல்கிறாள்.

    இரண்டு வருஷமாகச் சொல்லாமல் மூடி வைத்ததால், தங்கையின் எதிர்காலம் கருதி தனது காதலைக் கருக்கி விட்டேனே என்று மனதுக்குள் அழுதவளாக தனது அக்காவிடம் மட்டும் சொல்லி ஆசி வாங்கிச் செல்ல வரும் தங்கையின் தோளில் முகம் புதைத்து  மனத்தின் பாரம் இறங்க அடக்க முடியாமல் அழுகிறாள் அக்கா.

    அதில், கூடப் பிறந்த தங்கையைப்  பிரிகிறோமே  என்ற வருத்தத்தைத் தாண்டி தான் ஏமாந்து விட்டேனே என்ற  ஆற்றாமையும் சேர்ந்து கொண்டது அவளது  தங்கைக்குத் தெரியாது .

    பரிமளாவுக்கு  ஏற்பட்ட ‘அதிர்ச்சி’யை மிகவும் அழகாக எடுத்துக் கூறி தலைப்போடு கூடி கதை முடிகிறது.

    இனி , கொத்தாக குறிஞ்சி மலர் :

    இந்தக் கதையில் ஒரு சராசரி மனுஷியின் அத்தனை குணங்களும் பிரதி பலிக்கும் வண்ணம்
    இருக்கும் பாத்திரப் படைப்புகளைச் சித்தரித்திருப்பது யதார்த்தம். கதை முடிந்த பின்பும் கூட மனதைத் தாக்கி மௌனப் படுத்திவிடும் ‘அதிர்ச்சி’.

    இதோ.. மொட்டாக :

    விளக்கைச்  சுற்றி சுற்றிப் பறந்து கொண்டிருந்த விட்டில் பூச்சி கடைசியில் அதற்குள் விழுந்து விளக்கையும் அணைத்து தானும் அதிலேயே விழுந்து செத்துப் போய் கூடத்தை இருள் மயமாக்கியது. இந்த ஒரு நிகழ்ச்சி கூட தத்ரூபமாக எழுத்திலேயே ஒளியைக் காண்பித்தது .

    கதையின் ஆரம்பம்,  இருட்டை ஒளிமயமாக்க வேண்டி தீப்பெட்டி தேடும் நிலையில் கதையின் நாயகி வெளியே வருகிறாள். அந்த நேரத்தில் அந்த இருளில் தீப்பெட்டி தேடும் போதே…நமக்கு தன தங்கை, சித்தி, அப்பா..இறந்து போன தனது அம்மா என்று ஒவ்வொருவராக அறிமுகம் செய்து வைக்கும் விதம் அருமை.

    விளக்கேற்றி அந்த இடத்தில் ஒளி வரும்போது, நம்மிடையே அந்தப் பாத்திரத்தின் பரிமளம் புரிபடுகிறது.

    மெல்ல இதழ் விரிகிறது :

    வெறுப்பு:

    தன்னைப் பெற்ற தந்தையாகவே இருந்தாலும், “அந்த விட்டில் பூச்சிக்கும் நாற்பது வயதுக்கு மேல் இரண்டாம் தடவையாகத் திருமணம் செய்து கொண்டு வேண்டாத குடும்பச் சுமையை இழுத்து விட்டுக் கொண்டிருக்கும் இந்த அசட்டு அப்பாவுக்குமிடையே எந்த வகையான வேறுபாடும் இருப்பதாகத் தெரியவில்லை எனக்கு ”  அந்தப் பூச்சி உயிரையே விட்டுத் தொலைத்து விட்டது. இந்த மனிதப் பூச்சியோ நானும் உயிர் வாழ்ந்து கொண்டு இன்னும் சில உயிர்களை பிறப்பித்துக் கொண்டு நானும் வாழ்கிறேன் என்று அரை உயிராய் வாழ்ந்து கொண்டிருக்கிறது…”  என்று எண்ணுமிடத்தில் வெறுப்பை உமிழ்கிறது.

    அருவருப்பு:

    படுக்கையில் விழுந்த எனக்குத் தூக்கம் வரமாட்டேன் என்றது. சித்திக்குப் பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்த அவளுடைய ஐந்து குழந்தைகளையும் ஆறாவதாக அவள் வயிற்றுள் வளர்ந்து கொண்டிருந்த உயிரையும் நினைத்துப் பார்த்தபோது எனக்கு அருவருப்பாய் இருந்தது. ஆமாம்..என் தம்பி , தங்கைகள் என்கிற நினைப்பைக் காட்டிலும் சித்தியின் குழந்தைகள் என்கிற நினைப்பே மிகுதியாக நெஞ்சில் எழுகிறது.அப்படி நினைப்பது தப்பாக இருக்கலாம். ஆனால் அப்படித்தான் என்னால் நினைக்க முடிகிறது. இந்த வரிகள் மிதமிஞ்சிய ஒரு அருவருப்பை தன் உறவுகள் மீதே பொழிகிறது.

    நியாயம் :

    “ஆழ்ந்து சிந்திக்கும் போது சித்தியையோ அவள் பெற்றிருக்கிற குழந்தைகளையோ வெறுப்பது பாவம் என்றும் அம்மா செத்துப் போய் ஒரே வருடத்துக்குள் சித்தியை அழைத்துக் கொண்டு வந்தவரும் இத்தனை உயிர்களுக்கு படைப்பாளியுமான அப்பாவைத் தான் நியாயமாகப் பார்க்கப் போனால் வெறுக்க வேண்டும் என்று தோன்றுகிறது”. இந்த நியாயமும் பேசும் கதை.

    ஏக்கம்:

    “அம்மா….அம்மா தான். இன்றைய தேதியில் அம்மா உயிருடன் இருந்தால் இந்த வீடு இப்படி இருக்குமா என்பதைப் பற்றிய கற்பனையில் ஈடுபடாமல் இருக்க முடியவில்லை. அம்மா இருந்த வரையில் ஜானகியும் நானும் அவளது அன்பு மழையில் நனைந்து கொண்டு மகிழ்ச்சியும் சிரிப்புமாக வாழ்ந்து கொண்டிருந்தோம். வறுமை எங்களைச் சிறிதும் பாதிக்கவில்லை”. இந்த வரிகள் அம்மாவின் மேல் இருக்கும் ஏக்கத்தை  பிரதிபலிக்கிறது.

    பரிதாபம்:

    குழந்தை வேண்டும் என்று ஒருவன் ஆசைப்பட்டு அது பிறக்காமல் இருப்பது வேண்டுமானால் கடவுளின் செயலாக இருக்கலாம். வருஷா வருஷம் பெற்றுகொள்வது கூட ‘அவன்’ செயலா? அது ‘அவன்’ செயலோ,இல்லாவிட்டால் அவன் மேல் பழிசுமத்தும் அப்பாவின் செயலோ. அதன் விளைவு ‘அவள்’ அல்லவோ அனுபவிக்க வேண்டியிருக்கிறது..? என்னதான் இருந்தாலும் வருஷா வருஷம் வயிற்றைத் தூகிக் கொண்டு சித்தி பெற்றுப் பிழைப்பதை நினைத்துப் பார்த்தால் பாவமாகத் தான் இருக்கிறது. ஒரு பெண்ணின் நிலை கண்டு இன்னொரு பெண்  பரிதாபப் படும் வரிகள்.

    அவமானம்:

    “தங்க விக்கிரகம் மாதிரி மூக்கும் முழியுமாக ஒரு பெண்டாட்டி இருக்கையில் குறுகுறுவென்று என்னை என்ன அப்படிப் பார்க்க வேண்டிக் கிடக்கிறது? என் சாண் உடம்பும் ஒரு சாணாய் குறுகிப் போய்  விடும் எனக்கு. உச்சந்தலையில் தொடங்கி உள்ளங்கால் வரைக்கும் அவன் உற்றுப் பார்க்கும்போது பூமி பிளந்து அப்படியே என்னை விழுங்கி விடாதா என்று இருக்கும். சில பெண்கள் வேண்டுமானால் ஒருவேளை நம்மை ஒருவன் உற்றுப் பார்க்கிறாப்போல் அழகாய் இருக்கிறோம் என்பதில் கர்வப்பட்டுக் கொள்ளக்கூடும். ஆனால் எனக்கென்னவோ அந்த மாதிரி சமயங்களில் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வேண்டும்போல் அவமானமாக இருக்கும்”. ஒரு இளம் பெண்ணின் இயல்பான எண்ணம் இது. ஏழ்மை ஏற்படுத்தும் உணர்வில் இதுவும் சேரும்.

    கவலை:

    “மொத்தத்தில் பெரும்பாலோருடைய பார்வையே நன்றாகயில்லை. எல்லாம் மொய்க்கிற பார்வைகள். துகிலுரிக்கிற பார்வைகள், கற்பழிக்கிற பார்வைகள், இப்படித்தான். தங்கை ஜானகிக்கு இம்மாதிரியான தொந்தரவுகள் ஏற்பட்டனவா என்பது தெரியவில்லை”
    “ஜானகிக்கு இந்த மாதிரி தொந்தரவெல்லாம் வராமே இருக்கணுமே பகவானே” என்று அடிக்கடி வேண்டிக் கொள்வேன்”. இதில் ஒரு தாயின் கவலை தெரியும்.

    அலுப்பும் சலிப்பும் :

    “ஐயே…போதுமே! என் சந்தோஷமும் நானும்”
    கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு கவலைப் படுவதற்கென்றே கொஞ்ச நேரம் கூட ஒதுக்க முடியாத அளவுக்கு வேலைகள் உடம்பை வெட்டி முறிக்கிற நிலை கூட நாட்கள் கிடுகிடுவென்று ஓடுவதற்குக் காரணமில்லையா? – இதில் தெரியும்.

    ஆச்சரியம்:

    ஆச்சு. அடுத்த ஆண்டு பிறக்கும் போது என் இருபத்தாறாம் வயசும் பிறந்து விடும். “என்னது? எனக்கு இருபத்தஞ்சு வயசா முடியப் போறது? அடேயப்பா! இன்னும் அஞ்சு வருஷம் ஓடிடுத்துன்னா முப்பது வயசுன்னா ஆயிடும்?”

    கழிவிரக்கம்:

    “இந்த இருபத்தைந்து வருட வாழ்க்கையில் ‘என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா’ என்று எவனும் என்னிடம் கேட்டது கிடையாது. ‘உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படறேன்’ என்று எவனும் சொன்னதுமில்லை”. இந்த வரிகள் உள்ளத்தின் உணர்வை அப்படியே வெளிப் படுத்துகிறது.

    நிஜம்:
    பெண்கள் வீட்டுக்குள் வைத்துப் போற்றப்பட வேண்டியர்கள் என்று நம் பெரியவர்கள் வைத்திருப்பது பெண்களினுடயவும் இந்தச் சமூகத்தினுடையவும் ஒட்டுமொத்தமான நலனைக் கருதிதான் என்பதை என் அனுபவங்கள் அடிக்கடி எனக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

    ஆத்திரம்:

    “டூப் அடிக்கிறதைப் பார்த்தியோல்லியோ – சம்ஸ்க்ருத மந்திரம் சொல்ற வாயாலே சமஸ்கிருதம் செத்துப் போனதே இந்த மாதிரி ஆசாமிகளாலே தாண்டி ..! என்று எரிச்சலோடு என்னிடம் முணு முணுப்பாள் ஜானகி.
    எங்கள் கல்யாணத்தைப் பற்றி அசதிமறதியாகக் கூட மூச்சும் விட்டறியாத அப்பா அப்படித்தான் தயங்காமல் “பார்த்துண்டு தான் இருக்கேன்…ஒண்ணும் சரியா அமைய மாட்டேங் கிறதே” என்று புளுகும் போது”.

    பச்சாதாபம்:

    விருப்பமற்ற ஒரு பெண்ணைத் தொடுவதைக் காட்டிலும் மோசமான குற்றம் ஏதும் இருக்க முடியாது என்று தோன்றுகிறது. ஒரு பெண்ணை – அவள் சற்றும் இணங்காத போதும் – தொட்டுக் கற்பழிப்பது கொலை செய்வதைக் காட்டிலும் கொடியது. அம்மாதிரியான கொடுமைக்கு ஆளாகாமல் என் வானாளைக் கழித்துவிட வேண்டும்”. ஒரு மணமாகாத இளம் பெண்ணின் நியாயமான எண்ணம்.

    காதல்:

    அது தகாத உறவு. கூடாக் கனவு, யாருடைய ஏற் கையையும் பெற முடியாத தொந்தம் என்பது நன்றாக எனக்குத் தெரிந்திருந்த நிலையிலும் கூட இந்தப்  பாழும் மனசு ஏன் தான் இப்படி அவனையே சுற்றி சுற்றி வர வேண்டுமோ புரியவே இல்லை” அழகான வெளிப்பாடு.

    நாணம்:

    “மூஞ்சி சொல்றதோல்லியோ அப்ப அதையே கேட்டுக்கோடி” என்று சொல்லிவிட்டு நான் அவள் முகத்தைப் பார்க்காமலே கிடுகிடு என்று குழவியை ஆட்டினேன்.
    இருந்தாலும் சொல்லு சொல்லுன்னா என்னத்தைச் சொல்றது? ஏதாவது இருந்தாத்தானே சொல்றதுக்கு?
    “உன் குரலே காட்டிக் குடுக்கிரதுடி அக்கா”…என்று ஜானகி மெதுவாகச் சிரித்தாள் .
    “அப்படியே வெச்சுக்கோ போ..”
    தங்கையிடம் சொல்லத் தவிக்க நாணம் மூடும் காட்சி.

    திகைப்பு:

    (தந்தைக்கு மகள் செய்த உபதேசம்)
    வசிஷ்ட  மகரிஷி என்ன சொல்லியிருக்கார்ங்கறது தெரியாதா உங்களுக்கு? வயசுக்கு வந்த பெண்ணை மூணு வருஷத்துக்குள்ளே கல்யாணம் பண்ணி குடுக்கல்லேன்னா
    தனக்குப் பிடிச்ச எவநோடையும் போறதுக்கு ஒரு பொண்ணுக்கு முழு உரிமை உண்டுன்னும் அந்த மாதிரி செய்யற ஒரு பொண்ணோ இல்லேன்னா அவளை அழைச்சிண்டு போற ஆணோ குற்றவாளிகள் இல்லைன்னு அவரும் மனுவும் சொல்லியிருக்கிறதை நான் ஞாபகப் படுத்த வேண்டாம்னு பார்க்கறேன். தன பொண்ணு வயசுக்கு வந்த ஏழு மாசத்துக்குள்ளே ஒரு தகப்பன் அவளுக்குக் கல்யாணம் பண்ணி  வைக்கலைன்னா ஏழு கொழந்தைகளைக் கொன்ன பாவம் அவனுக்கு வந்து சேரும்னு மனு தர்ம சாஸ்திரத்திலே கூடத்தான் சொல்லியிருக்கு.இதெல்லாம் சமஸ்கிருதத்தைக் கரைச்சுக் குடிச்சிருக்கிற உங்களுக்குத் தெரியாதா என்ன?  சும்மா சமஸ்கிருதப் புஸ்தகங்களை வரிசையா அலமாரியிலே அடுக்கி வெச்சுட்டாப்லே  ஆச்சா? நாக்கில் பல்லைப் போட்டு அவள் கூசாமல் கேட்ட கேள்விகள். வயசு வந்த ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய குறைந்த பட்சக் கூச்சம் கூட இல்லாமல் ஜானகியா இப்படியெல்லாம் பேசுகிறாள் என்று எனக்குத் திகைப்பாய் இருந்தது.

    இயலாமை..:

    ”  இந்த ஆவணிக்குள்ளே  அக்கா கல்யாணம் நடந்தாகணும்..ஆமா..! குதிர் குதிரைப் பொண்ணுகளை வளர்த்து வெச்சிண்டு அவா சம்பாத்தியத்துலே வயிறு வளர்த்துண்டிருக்கேள்ன்னும் அதனாலே தான் எங்க கல்யாணத்தைப் பத்தின பிரக்ஞையே உங்களுக்கு இல்லைன்னும் ஊர்லே நாலு பேர் பேசற பேச்சு காதுலே விழரச்சே உங்களுக்கு அவமானமாய் இல்லே? நானாயிருந்திருந்தால் நாக்கைப் பிடுங்கிண்டு பிராணனை விட்டுடுவேன்..”
    ஜானகியின் ஒவ்வொரு சொல்லும் பச்சை மரத்தில் ஆணி அடித்தார் போல் பளிச் பளிச்சென்று வந்து விழுந்தது.

    விரக்தி:

    “பாவ புண்ணியம்” நாகரிக-அநாகரிகம் ” நீ சொல்ற ரசாபாசம்- இதுகளெல்லாம் பார்க்க வேண்டிய வீடுகள் வேறேடி . இந்த வீடு இல்லை”.

    அறிவுரை:

    இன்னிக்கு நம்ம அப்பா- அம்மாவுக்கு நாம என்ன மாதிரி மரியாதை காட்றோமோ அந்த மாதிரியான மரியாதையைத்தான் நாளைக்கு நம்ம குழந்தைகள் நமக்குக் காட்டும்..”

    குறும்பு:

    “கல்யாணமே ஆகக் காணோம். அதுக்குள்ளே குழந்தை-குட்டிக்குப் போயிட்டா இவ ..! வேடிக்கை தான்”.

    எகத்தாளம்:

    “ஓடிப் போயிருப்பேண்டி …ஓடிப் போயிருப்பேன் ” இருபத்தாறு வயசு வரைக்கும் தன் பொண்ணோட கல்யாணத்தைப் பத்தி யோசிக்காத தகப்பனுக்கு மரியாதை குடுக்கணுமாம் மரியாதை” – தங்கையின் எகத்தாளம்.

    துடிப்பு:

    “இந்த நடேசன் மொதலியார் ஜாதியிலே போய்ப் பொறந்து வெச்சிருக்கானே? பிராமண ஜாதியிலே பொறந்து தொலைச்சிருக்கப் படாதோ? என்று என் மனசு முட்டாள்தனமாக ஏங்கத் தொடங்கிற்று…என்ன பைத்தியக்காரத்தனம்?

    நேசம்:

    “பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலொழிய கலப்பு மணம் வெற்றியில் முடியாது என்பதையும் முக்கியமாக ஆணுக்கு அந்த மனப்பான்மை மிகுதியாக இருக்க வேண்டும் . பெற்றவர்களை விரோதித்துக் கொண்டு ஒருவனை நம்பி “அவனே கதி என்று ” ஓடி வருகிற ஒரு பெண்ணை அனுதாபத்தோடு பார்க்கும் பரந்த மனப்பான்மை ஆணுக்குள் இருக்க வேண்டும். ஏனென்றால் பெற்றவர்களுடைய அதிருப்தியும் விரோதமும் பெண்ணுக்கு பெரிய நஷ்டங்கள். புகுந்த இடத்திலும் அவள் மனப்பூர்வமாக வரவேற்கப்படுவதில்லை…என்கிற நிலையில் விட்டுக் கொடுக்கிற தன்மை பெண்ணைக் காட்டிலும் ஆணுக்குச் சற்று அதிகமாவே இருந்தால்தான் கலப்பு மனம் செய்து கொள்ளும் ஒரு பெண் நிம்மதியாக வாழ முடியும். இந்த நேசம் நடேசனின் கடிதத்தில் எதிரொலித்தது.

    மனசாட்சி:

    “நீ நிமிஷத்தில் ஓடிப் போயிடுவேடி. ஆனா அப்படி ஓடிப்போனவளுடைய தங்கையை யாரு கல்யாணம் பண்ணிப்பா நாளைக்கு? அதைப் பத்தி யோசிச்சுப் பார்த்தியா? உனக்காகப் பரிஞ்சு அப்பாகிட்டக் கன்னாப் பின்னான்னு பேசின ஜானகியுடைய வருங்கால வாழ்க்கையை உன்னுடைய காரியம் எந்த அளவுக்குப் பாதிக்கும்கிரதைப் பத்தி துளிக்கூட யோசிச்சுப் பார்ககாமே…”ஓடிப்போனா என்ன” என்று நீ நினைப்பது சுயநலமில்லையா ?

    கண்ணியம்:

    “உங்கள் பயன்தராத அன்புக்கு மற்றுமொரு முறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” – பரிமளாவின் முழுக் கடிதமும் வார்த்தைகளை கோர்த்த விதம் அருமை.

    ஆசை:

    “திடீரென்று ஒரு நாள் என் மன உறுதி சிதைந்து போயிற்று.நடேசனைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் கட்டுக்கு அடங்காமல் என்னுள் பொங்கிற்று. தொலைவில் நின்றாவது அவனது அன்பு முகத்தை ஒருதரமாகிலும் பார்த்து விடவேண்டும் போல் மனசு கிடந்து அடித்துக் கொண்டது. அந்த எனது ஆவலுக்குத் தடை போட முடியாமல் நான் வெகு நாட்களுக்குப் பிறகு அந்தப் பெட்டிக்கடைப் பக்கம் நடக்கலுற்றேன்” .

    ஏமாற்றம்:

    “அவுரு கடையை வித்துட்டுப் போயி அஞ்சாறு மாசத்துக்கு மேலே ஆகுதேம்மா”…..
    “இந்த ஊரை விட்டுப் போயிட்டாருங்கறது மட்டுந்தான் தெரியும். எங்கிட்டு இருக்காருங்குற வெவரம் தெரியலியேம்மா”
    இதைக் கேட்டதும் என் நெஞ்சுக்கூட்டினுள் ஒரு நரம்பு அருந்தாற்போல் இருந்தது.

    தைரியம்:

    “அன்னிக்குச் சொன்னேனோல்லியோ? அதைத் தான் காரியத்திலே காட்டப் போறேன்.அதாவது ஓடிப் போகப் போறேன்.”
    “..”

    பயம்:

    “பையன்  யாரு என்னன்னு தெரிஞ்சா அப்பா கட்டையை எடுத்துண்டு வருவா. நீ  கூட என்ன நினைப்பியோ தெரியல்லே”.

    தயக்கம்:

    “ரெண்டு வருஷமா எங்களுக்குள்ளே ‘இது’. உனக்குக் கல்யாணம் ஆனதுக்கு அப்பறந்தான் பண்ணிக்கணும்னு இருந்தேன். ஆனா அவா வீட்டிலே அவசரப்படுத்தறா …அதான்..”.

    பெருந்தன்மை:

    “நீ கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு தீர்மாநிசிருக்கிரதைப் பற்றி ரொம்ப சந்தோஷம் ஜானகி.
    ஆனா ரெண்டு வருஷமா இந்த விஷயத்தை என்கிட்டேர்ந்து மூடி மறைசிருந்திருக்கியே நியாயமா? என்று கேட்டேன்.
    அதனாலே எனக்கு எவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்குன்னு தெரியுமாடி உனக்கு ? என்று கேட்க முடியாமல் மனசுக்குள் பொருமினேன்.

    மகிழ்ச்சி:

    “அக்கா ! என்னை ஆசீர்வாதம் பண்ணுடீ” என்றவாறு அவள் திடீரென உணர்ச்சிவசப்பட்டு பாய்ந்து வந்து என்னைக் கட்டிக்கொண்ட போது, என்ன சொல்வது என்றே தோன்றாமல் அவள் முதுகைத் தடவிக் கொடுத்தேன்.
    “ஜானகி என்னோட ஆசீர்வாதம் எப்பவும் உனக்கு உண்டுடீ! அதை நீ கேட்டு வாங்கிக்கணு ம்னுட்டு இல்லை “- இப்படிச் சொல்லி விட்டு நான் அவள் தோளில் என் முகத்தை அழுத்திக் கொண்டேன்.

    துக்கம்:

    நான் அழுதது அதற்காக மட்டும் இல்லை என்றும் வேறு இன்னொன்றுக்காகவும்கூட என்றும் அவளுக்கு எப்படித் தெரியும்?

    மலர்க் கொத்தை நீட்டும் போது :

    “இந்த ஒரு அதிர்ச்சி கதைக்குள்….ஒரு பெண்ணின் அத்தனை மன உணர்வுகளும் அளவாக அழகாகச்  சேர்ந்து கொத்து மலராக நறுமணம் வீசி படிப்பவர்களை தன்னோடு கூடவே  இழுத்துக் கொண்டு செல்லும் உயிர்ப்பு இருக்கிறது.

    கதை வந்து நாற்பது வருடங்களுக்கு மேலே ஆனாலும் என்ன…? இன்னும் பூமி சுற்றும் வரையில், ஏழ்மை இருக்கும் வரையில்…இது போன்ற பரிமளாக்களும் ஜானகியும் எங்கேயோ இதே உணர்வுகளோடு திண்டாடிக் கொண்டும்,  போராடிக் கொண்டும்  தான் இருக்கிறார்கள்.

    எத்தனையோ விதத்தில் சமுதாய முன்னேற்றங்களும், மாற்றங்களும்  வந்திருந்த  போதிலும்  பூமிக்கடியில் வேர்கள் ஒன்றாக இருப்பது போல வாழ்வியலின் அடிப்படை என்றும் மாறாதது என்பதை உணர்த்தும் விதமாக ஆசையும் …ஆசாபாசங்களும் தீராது என்றும் ஆணித்தரமாக நம்மை நம்ப வைக்கிறது.

    இத்தனை வருட இடைவெளிகளுக்குப் பிறகு  இந்தக் கதையை படித்தாலும் “குடும்பம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் ” ஒரே குழந்தையோடு நின்றுவிடும் முன்னேற்றம் மட்டும் கண்கூடு.

    மேலும் பெண்களுக்கு மிதமிஞ்சிய சுதந்திரம் வீட்டிலும் வெளியிலும், படித்ததனால் நல மதிப்பு…தங்களின் வாழ்க்கையைத் தாங்களே முடிவு எடுத்துக் கொள்ளும் திறனும், தைரியமும் வாழ்வின் முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக தற்போது  நடை முறையில் வந்து விட்டது பாராட்டப் பட வேண்டிய விஷயம் தான் .

    தலைமுறை இடைவெளியில் ஆண்களில் கூட நல்ல எண்ணத்தில் முன்னேற்றமும் பரந்த மனமும், வரதட்சிணை விழிப்புணர்வும் மாற்றமாக வந்துள்ளது. எல்லாம் உயர்மட்டத்திலும் , மேல்மட்ட நடுத்தர வர்கத்திலும் வந்திருந்தாலும்….இன்னும் நடுத்தர, கீழ் மட்ட வர்கத்துக் குடும்பங்கள் அதே சூழலில் தான் உழன்று வருகின்றனர்.

    எந்த வகையான  மாற்றங்களிலும் கீழ், நடுத்தர, உயர்ரக மட்டங்கள் எப்போதும் மாறாமல் இருந்து கொண்டே தான் இருக்கிறது. எல்லோரும் பொருளாதாரத்தில் சமமாகும் காலம் என்றுமே வரப் போவதில்லை. மாற்றங்கள் மனதளவே  என்றாலும் சமுதாயத்தில் பொருளாதார மாற்றம் தான் வாழ்வியல் மாற்றமும் ஆகும். வாழ்க்கையில் கஷ்டப் படும் குடும்பமும், சுக போகமாய் வாழும் குடும்பமும் – இரு வேறு முனைகளாக என்றென்றும் நிரந்தரமாக இருக்கும். அது மாறாதது.

    மற்றபடி கதையின் சாரம் அன்றும், இன்றும், என்றும் ஒரே உணர்வின் சூத்திரத்தை தான் சொல்கிறது. அதிர்ச்சிக்குள் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம்.

    கதையின் நாயகி  ‘பரிமளா’ இந்தக்  கதையைத் தாண்டி மனசுக்குள் வந்து உலாவுகிறாள். இதயத்துக்குள் காலத்துக்கும் உறைந்து போகிறாள். இது தான் ‘அதிர்ச்சி’யின் வெற்றி.  காலம் கடந்தும் இந்தக் கதை மனிதனின் வக்கிர முகமூடியைக் கிழித்து நிஜத்தை சொல்லிக் கொண்டிருக்கும்.

    தத்ரூபமாக நாயகியை முன்னிறுத்தி கதை சொல்லிய அழகு தனி.. அனைவரும் அவசியம் இந்த எழுத்துக்கள் பேசுவதைப் படித்தால் கேட்கலாம்.
    ================================================================================================================

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 56 (28.01.13)

    மலர் சபா

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    (12)

    கரையினில் அலைகள்
    எறிந்திடும் சங்குகளின்
    முழக்கத்துக்கு அஞ்சி,
    குருதிக்கறை இருபுறமும் படிந்த
    செவ்வரி படர்ந்த
    வேல் போலும்
    கண்களையுடைய இவள்தான்
    கொடிய கூற்றமோ?!

    கடல்வளம் பொருந்திநிற்கும்
    சிறிய இவ்வூர்தன்னில்
    அழகு பொருந்திய
    மென்சாயல் பெண்ணுருவில்
    அக்கூற்றந்தான் வந்துள்ளதோ!

    (13)

    புலால் நாறும் மீன்களின்
    வெள்ளிய வற்றலைக்
    கவரவரும் பறவைகளை விரட்டி,
    தன்னைக் காண்போரை எல்லாம்
    மனம் தடுமாறச் செய்து,
    காமநோய் வசப்படுத்தி
    வருத்திநிற்கும் அணங்கு இவள்தானோ?!

    அடும்ப மலர்கள்
    நிறைந்து நிற்கும்
    குளிர்ந்த கானலிலே
    செறிந்த மெல்லிய கூந்தலையுடைய
    பெண்வடிவம் கொண்டுதான்
    ஓர் அணங்கு வந்துள்ளதோ?!

    அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram19.html

    படத்துக்கு நன்றி:
    http://my.opera.com/heisenberg16/albums/showpic.dml?album=8923052&picture=125081982

    Share
  • தொல்லை காட்சி: சிவகார்த்திகேயன்- சூப்பர் சிங்கர் T -20-பைனல்

    மோகன் குமார்

    சிவகார்த்திகேயன் பேட்டி

    சன்  டிவியில் திடீர்னு ஒரு வார நாள் காலையில் பார்த்தா – சூரிய வணக்கத்தில்  சிவ கார்த்திகேயன் பேசிட்டு இருக்கார். என்னடா இது லீவு நாள் கூட இல்லை; இன்னிக்கு இவரை மாதிரி ஒரு பிரபலத்தை கூட்டி வந்திருக்காங்களே என வியப்போடே பார்த்தேன்

    சிவகார்த்திகேயன் நிச்சயமா ஒரு செம என்ட்டர்டேயினர். தொகுத்து வழங்கினாலும் சரி, பேட்டி தந்தாலும் சரி சிரிக்க வச்சிடுறார் (நடிக்கும் போது தான் அந்தளவு  Flow  வர மாட்டேங்குது )

    பள்ளியில் படிக்கும் போது தினம் நெற்றியில் 3 பட்டை  போட்டு கொண்டு போனதும், கல்லூரி வந்ததும் செய்த அலம்பல்களும், அஜீத்துடன் முதல் படத்தில் (ஏகன்) நடித்த போது அவர் எப்படி பேசினார் என பேசி காட்டியதும், விஜய் உள்ளிட்ட பலரை   மிமிக்ரி செய்ததும் அட்டகாசம் !  ஹீரோவாக இல்லாமல், சந்தானம் போல  காமெடியன் ஆனால் செமையாய் கலக்குவார் என தோன்றுகிறது.

    சீரியல் பக்கம் : ராஜ குமாரி

    சன் டிவி யில் இன்று முதல் தொடங்குகிறது ” ராஜ குமாரி” சீரியல். காசியில் மிக பெரும் பகுதி படமாக்கப்பட்டது இந்த சீரியலில்  தான் என்கிறார்கள். ரம்யா கிருஷ்ணன் தனக்கு பேர் வாங்கி தந்த நீலாம்பரி என்கிற பெயரில் நடிக்கிறார். தினம் இரவு 8.30 க்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் நம்ம தோஸ்த் ஒருத்தர் பணி புரிந்துள்ளார்.

    பிளாஷ்பேக் : லொள்ளு சபா

    இன்றைய சந்தானத்தின் விசிட்டிங் கார்ட் இந்த சீரியல் தான். ஒவ்வொரு ஹிட் படத்தையும் எடுத்து கொண்டு அநியாயத்துக்கு கலாய்ப்பார்கள். பாஷா, சின்ன கவுண்டர்  போன்ற  உல்ட்டாக்கள் இன்றும் நினைவில் இருக்கிறது. நடித்த சந்தானத்தின் டைமிங் காமெடி மற்றும் இயக்கிய ராம்பாலாவின் புத்தி சாலித்தனம் இரண்டும் சேர்ந்து, தொடர்ந்து பார்க்க வைத்தது. சினிமாவை கலாய்த்த சந்தானத்தை சினிமா துறையினர் வெறுக்காமல், வாரி அணைத்து கொண்டனர். திறமைக்கு சில நேரங்களில் உரிய மரியாதை கிடைத்து விடுகிறது !

    ஆமாம் இந்த வகை காமெடி + உல்ட்டா தொடருக்கு இன்னும் கூட நிறைய Viewers  இருப்பார்களே.. ஏன் மறுபடி அவர்களோ வேறு டீமோ தொடங்க கூடாது?

    கிரிக்கெட் கார்னர்

    ஆண்டர்சன், சுவான் போன்ற நல்ல பவுலர்கள் இல்லாததாலோ என்னவோ இந்தியா இங்கிலாந்தை ஒரு நாள் தொடரில் எளிதில் வென்றது. இந்த கம்பீரை கட்டி கொண்டு ஏன் தான் அழுகிறார்களோ தெரியலை. ஓட்டை பீல்டிங் எனினும் எப்படியோ இந்தியா வீடு வந்து சேர்ந்தது. துவக்க ஆட்டக்கார்கள் பார்ம், வீக் ஆன வேக பந்து வீச்சாளர்கள், யுவராஜ் பேட்டிங், வாரி வழங்கும் அஷ்வின் என பல பிரச்சனைகள் – வெற்றிக்கு முன்  தெரியாமல் போய் விட்டது. ஜடேஜா இந்திய மண் என்பதாலோ என்னவோ அசத்தி விட்டார்.

    தோனி விரைவில் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்கிறார்கள் பார்க்கலாம்

    சூப்பர் சிங்கர் T -20-பைனல்

    சாய் சரண் அணியும்,  பூஜா அணியும் பைனலில் மோதிக்கொண்டன. மொத்தம் 9 ஜட்ஜுகள் !   T -20- முழுவதுமே, ஒவ்வொரு மேட்சிலும்  இரு டீமுக்கும் இடையில் அதிக வித்யாசம் இருக்க கூடாது; அப்போது தான் கடைசி பாட்டு வரை பார்ப்பார்கள் என மார்க்குகள் இரண்டு அணிக்கும் ஒரே மாதிரி போட்டு வந்தனர். இதுவே அவர்களின் நம்பக   தன்மையை குறைத்து விட்டது. இதனை பார்க்கும் ரசிகர்கள் எப்படி கண்டுபிடிக்காமல் போவார்கள் என underestimate  செய்தனரோ தெரியலை. உதாரணமாய் எதிர் எதிரே பாடும் இருவரில் ஒருவர் Outstanding  ஆக பாடுவார். இன்னொருவர் மிக சுமாராக பாடுவார். நன்கு பாடியவருக்கு 10 மதிப்பெண்ணும், சுமாராய் பாடியவருக்கு 9 மார்க்கும் தருவார்கள். பார்க்கும் நமக்கு காண்டாகும்

    பைனலில் பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பாட்டை ஷ்ரவன்- பிரியங்கா  ஜோடி பாடியது அட்டகாசமாய் இருந்தது. இதே பாட்டை எஸ் பி. பி மேடையில் பாடினால் கூட இஷ்டத்துக்கு மாற்றி பாடுவார். கேட்கும் நமக்கு கஷ்டமாகிடும். ஆனால் ஷ்ரவன் அப்படியே நிஜ பாட்டை கேட்கும் விதத்தில் பாடியது அருமை. பிரியங்கா குரல் தேன் போல் இனிக்கிறது.  நமக்கு தெரிந்து பிரியங்காவின் பாடல் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. தமிழகத்தின் அட்டகாசமான பாடகியாக பிரியங்கா வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    Share
  • ‘குடியரசு தின நினைவுகள்’

    விசாலம்

    என் தந்தையின் டைரியிலிருந்து

    குடியரசு தினம் ஜனவரி 26 — 1950

    என் தந்தையின் டைரியில் முதல் குடியரசு தினம் கொண்டாடிய குறிப்பு இருந்தது தில்லியில் நடந்த நிகழ்வும் சென்னையில் நடந்த நிகழ்வும் இருந்தன , சென்னையில் நடந்ததை எழுதுகிறேன் குடியரசுதினத்தை முன்னிட்டு 8000 கைதிகள் விடுதலைச் செய்யப்பட்டனர் மாலை ஐந்து மணிக்கு சென்னை கார்ப்பரேஷன் ஸ்டேடியத்தில் விழா நடக்க இருந்தது பகல் 2 மணியிலிருந்தே கூட்டம் சேர ஆரம்பித்து விட்டது சுமார் இரண்டு இலட்சம் இருக்கலாம்.திடீரென்று நிசப்தம் ,,,, கோச்சு வண்டியின் சப்தம் ஆம் கவர்னர் தம்பதி கோச்சில் ஸ்டேடியத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர் நெருக்கமாக இரு குதிரைகள் ராஜ நடைப் போட்டு அவரது கோச்சுடன் வந்துக்கொண்டிருந்தன அதில் ஒருவர் போலீஸ் உதவி கமிஷனர் திரு ஆர் எம் மகாதேவன் மற்றொருவர் சார்ஜெண்ட் மேஜர் லூயிஸ் ,,,,

    கவர்னரின் வரவேற்பு மிகப்பிரமாதமாக இருந்தது சென்னையின் முதன் மந்திரி பி எல் குமாரசாமி ராஜா ஓடி வந்து வரவேற்றார், போலீஸ் படையும் மரியாதைச் செலுத்தினர் அங்கு ஒரு மேடையில் தேசியக்கொடி தயாராக வைக்கப்பட்டிருந்தது கவர்னர் அங்குச் சென்று தேசியக்கொடியைப் பறக்கச் செய்தார் பின் அதற்கு மரியாதை அளித்தார். உடனே இராணுவப்படைகளும் மரியாதைச் செலுத்தின ,மாலையிலிருந்து இரவு வரை மெரினா கடற்கரையில் வாண வேடிக்கை கண்களுக்கும் மனதுக்கும் விருந்தாக இருந்தது வனொலியில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது காலையில் வந்தேமாதரம் பாடல் டீஅர் விஸ்வநாத சாஸ்திரிதொகுத்தது பின்மதுரை சோமசுந்தரம் கச்சேரி ,பின் டில்லியில் நடந்த குடியரசு விழாவின் நேர் முக வர்ணனை ,மாலை திருவெண்காடுபி சுப்பிரமண்யப்பிள்ளை நாதஸ்வரம் பின் குமாரசுவாமி ராஜாவின் குடியாட்சி சிறப்புறை , என் எஸ் கிருஷ்ணன ,டிஏ மதுரம் அவர்களின் “விந்தை மனிதன் ” இரவு திருமதி எம்.எஸ் சுப்பலட்சுமி அவர்களின் கச்சேரி ,,,,, இத்துடன் வானொலி நிகழ்ச்சியும் முடிவடைந்தது ,,,,,,,, ஆஹா பழையகால என் தந்தை நினவுகளை நானும் மனதில் கொண்டுவந்து பார்க்கிறேன் இப்போது டிவியில் பல சானலகள் அதில் கச்சேரி என்பது மிக மிக குறைவு ,பல சினிமா கதாநாயகர்கள் நாயகிகள் வந்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர் யாராவது தேசத்திற்கு உழைத்து எங்கேயோ ஒரு சின்ன வீட்டில் வாழ்ந்து வரும் சுதந்திர தியாகிகளைக் கண்டு பேட்டி எடுத்து டிவி முன் அழைத்து கௌரவிக்கலாமே ,இதே போல் அந்தக்காலத்தில் இருந்த கவிஞர் எழுத்தாளர் ,தியாகிகள் வீரர்கள் போன்றவர்களை அழைத்து அவர்கள் அனுபவங்களைப் பகிர்ந்துக்கொள்ளச்சொல்லாமே !…..                                                                                                                    என் இனிய ‘குடியரசு வாழ்த்துக்கள்’

    Share
  • குடியரசு தினம்

     

    தமிழ்த்தேனீ

    ‘மாம்பழத்து வண்டு’ 

    மாமரத்தில் பூக்கள் பூக்கும் போது வண்டுகள்

    தேனை உறிஞ்ஜ பூக்களின் உள்ளே நுழையுமாம்

    அது பூக்கள் காயாக மாறும் காலமாயிருந்தால்

    பூக்கள் மூடிக் கொள்ளுமாம், அப்போது

    அந்த வண்டு அந்த மாங்காயின் உள்ளே

    மாட்டிக் கொண்டு,மாங்காயின் கடினமான

    ஓட்டைப் பிளந்து கொண்டு வெளியே வரமுடியாமல்

    உள்ளேயே இருந்து கொண்டு,

    அந்த மாங்காய் பழுக்கும்வரை காத்திருந்து, யாராவது மாம்பழம் உண்ணும்போது மாங்கொட்டையிலிருந்து பெருமுயற்சியினால் வெளியே வருமாம் ,

    ஆனால் அப்படி வண்டு துளைத்த பழம்

    மிகவும் இனிப்பாக இருக்கும் என்று சொல்லுவார்கள்

    அது போன்ற சுவையான சுதந்திரத்தை,

    குடியரசு தினத்தை நாம் அடைய நாம் பட்ட பாடுகள்

    அப்பப்பா சொல்லி முடியாது…..

    அது போல முடியாட்சியிலிருந்து அதாவது

    மன்னராட்சியிலிருந்து,வியாபாரம் என்னும் பெயரிலே

    நம் நாட்டுக்குள் நுழைந்த அன்னியர் ,அதாவது பிரிட்டிஷார்

    நம் நாட்டையே ஏகபோகமாக ,தங்கள் வசப்படுத்திக் கொண்டு

    நம்மைப் படுத்திய பாடு இருக்கிறதே..அப்பப்பா

    நம் மன்னர்கள் ஆண்ட காலங்களில் கூட ஒருசில

    கொடுங்கோல் மன்னர்களின் அட்சியைத் தவிற மற்ற

    காலங்களில் நாம் சுபிக்க்ஷமாய்த்தான் வாழ்ந்திருக்கிறோம்

     ஆனால் பிரிட்டிஷார் ஆண்ட காலங்களில் மாங்காய்

    ஓட்டின் உள்ளே மாட்டிக் கொண்ட வண்டு போல்

    சிறைப்பட்டு பறக்க முடியாமல் முடங்கிக் கிடந்தோம் ,

    மீண்டும் சுதந்திரம் என்னும் மாங்கனி பழுத்தபின்தான்

    நாம் பறக்கத் துவங்கினோம்,சுதந்திரம் என்னும் மாங்கனி

    பழுப்பதற்கு எத்துணை காலமாற்றங்கள்,

    எத்துணை இயற்கை மாற்றங்கள்,எத்துணை மனமாற்றங்கள்,

    எத்துணை ஏமாற்றங்கள் ,எத்துணை இழப்புகள்,

    அத்தனையையும் சந்தித்திருக்கிறோம்

     தேன் என்று நினைத்து உண்ணும் ஆசையினால்

    நாம் வியாபாரம் என்னும் வலையை மகரந்தம் என்று

    நினைத்து , பூக்கள் என்று நினைத்து அன்னியர் வலையின்

    உள்ளே நுழைந்து அடிமைத்தளையில் மாட்டிக் கொண்ட

    வண்டு போல்,அன்னியர் விரித்த வியாபார வலையில்

    மாட்டிக் கொண்டு ,அன்னியர் ஆட்சியில் அனுபவித்த

    கொடுமைகள் ஏராளம் ,அந்த அடிமைத்தளையிலிருந்து,

    விடுபட விழிப்புணர்வு ஏற்படுத்தி,மக்களுக்கு அறிவுறை கூறி

    தங்கள் இளமை வளமை போன்றவற்றை,

    தாங்களாகவே விட்டுக் கொடுத்து ,அனேக தியாகங்கள் செய்து ,

    தம் சொந்த வாழ்வைத் துறந்து ,மக்களுக்காகவே தாய்நாட்டு

    சுதந்திரத்துக்காகவே பாடுபட்ட பெரியோர்கள்

    பாடுபட்டு ,மிகவும் பாடுபட்டு தங்கள் இன்னுயிரையும்

    அளித்து பாடுபட்டு வாங்கிய சுதந்திரம் நம் நாட்டு

    சுதந்திரம்,அப்படிப்பட்ட சுதந்திர உணர்வை ஊட்ட

    மஹாத்மா காந்தியடிகள் 1930ம் ஆண்டு ஜனவரி மாதம்

    போட்ட விதைதான் குடியரசு தினம் ,

    “ குடியரசு நாள் என்பதன் அர்த்தமே

    “பூரண சுயராச்சியமே நமது உடனடியான லட்ஷியமென்பதுதானே “

    அதாவது மக்களே தங்களை ஆள தாங்களே

    தங்கள் ப்ரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் உரிமையை

    வலியுறுத்தும் நாள், அதற்குப் பிறகு 17 ஆண்டுகள் கழித்து ,

    நாம் சுதந்திரமடைந்தோம்,1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் நாள்

    இந்தப் பதினேழு ஆண்டுகளும்,அதற்கு முன்னும் நம்மை

    அடிமைப் படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷார் ஆண்ட காலங்களிலும் எத்துணை
    கொடுமையான கடுமையான

    அடிமைத் தனத்தை நாம் அனுபவித்திருக்கிறோம்

    கொஞ்ஜம் நினைத்துப் பார்ப்போம்

    அதற்குப் பிறகு நம் இந்திய வரலாற்றிலே

    எத்துணையோ மாற்றங்கள்,தியாகங்கள்,

    மக்களின் விழிப்புணர்ச்சி, நம்முடைய முன்னோர்கள்

    வீரமுழக்கமிட்டு பல தியாகங்கள் செய்து ஏற்படுத்திய

    சுதந்திர பாரதம்,மஹாத்மா காந்தி விதைத்த

    அந்த 1930ம் ஆண்டுஜனவரி மாதம் 26ம் தேதி ,

    அதுதானே சுதந்திர வேட்கையை இன்னும் அதிகரித்தது

    நம் மனதில் அதனால்தான் இன்றும் எல்லா

    நாட்டிலும் சுதந்திர தினத்தை மட்டும் கொண்டாடும்

    வழக்கம் இருந்தாலும் ,நம் தாய்த்திரு நாட்டில்

    பாரத தேசத்தில் மட்டும் இன்றும்

     குடியரசு தினத்தை ஜனவரி 26ம் தேதியும்

    சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15ம் நாளும்

    கொண்டாடும் வழக்கம் ஏற்படுத்தி இருக்கிறோம்

     “ ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னும்

    வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ “

     என்று பாரதி மஹா காளியிடம் கதறியது நம் நினைவில்

    என்றுமே இருக்க வேண்டுமே, கப்பலோட்டிய தமிழன்

    வ வு சிதம்பரம் பிள்ளை நம் தாய் நாட்டின் சுதந்திரத்துக்காக

    செக்கிழுத்து பட்ட இன்னல்கள் நாம் அறியோமா

    வாஞ்ஜினாதன் ஆஷ் துரையைக் கொன்று விட்டு

    தானும் சுட்டுக் கொண்டு மடிந்ததை நாம் அறியோமா

    சுப்ரமணிய சிவா சிறையில் வாடி சீக்கு வசப்பட்டது

    நாம் அறியோமா ,ஜவஹர்லால் நேரு அவ்ர்கள் தன்னுடைய

    சொத்துக்களை நம் நாட்டின் வளர்ச்சிக்காக தானமாக

    அளித்தது நாம் அறியோமா, மூதறிஞ்ஜர் ராஜாஜி,

    கக்கன் ,காமராஜர் , போன்றோர் நமக்காகப் பட்ட துன்பங்கள்

    நாமறியோமா ,கடைசீ சொட்டு குறுதி இருக்கும் வரை

    கையில் பிடித்த நம் தேசக் கொடியைக் கைவிடாது

    தன் இன்னுயிர் நீத்த கொடி காத்த குமரன் ,

    இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்,

    நமக்காகப் பாடு பட்டு ,சுதந்திரம் வாங்கிக்

    கொடுத்த அத்துணைபேரையும் பட்டியலிடவேண்டுமானால்

    நம் ஆயுசுக்கும் பட்டியலிடலாம்

     அப்படியெல்லாம் பாடு பட்டு நம் முன்னோர்கள்

    வாங்கிக் கொடுத்த சுதந்திரத்தை சுதந்திர நாளிலும்,

    குடியரசு நாளிலும் நாம் கொண்டாடுவோம்

    தன்னைப் பழித்தாலும் பொறுப்போம்

    ஆனால் தாயைப் பழித்தவனை

    தாயே தடுத்தாலும் விடோம் என்னும்

    கொள்கையை மக்கள் மனதிலே,ஊறச்செய்யும்

    ஒரு புனித நாளாக, நம் தாய் நாட்டுக்கு பாதகம்

    செய்பவரை அவர் யாராயிருந்தாலும் மன்னிக்க மாட்டோம்

    என்னும் உறுதி மொழி எடுக்கும் நாளாக குடியரசு தினத்தை

    கொண்டாடுவோமே,

    82 வயதான குடியரசு நாளை நம் தேசத்துக்காகப் பாடுபட்ட

    ஒரு முதியவரின் நிலையில் வைத்து நன்றி சொல்லி

    இனியாவது குடிமகனாய் நம் கடமை என்னவென்றுணர்ந்து

     நம் நாட்டை வளமான நாடாக மாற்றும்

    முயற்சியாக,பல நல்ல ப்ரதிக்யைகளை

    மனதில் கொண்டு சத்தியப் ப்ரமாணம் எடுத்துக் கொண்டு

    கொடி வணக்கம் செய்து ,நம் பாரத தாயை வணங்கி ,

    நம் நாட்டின் கொடியை மனமகிழ்ச்சியுடன் ஏற்றி

    நம் தேசக் கொடி பட்டொளி வீசிப் பறப்பதைக் கண்டு

    மனம் முழுவதும் சந்தோஷமாக அனைவருக்கும்

    இனிப்புகள் வழங்கி நலிவுற்றோருக்கு நன்மைகள்

    செய்து,ஜாதி மத இன, மொழி பேதமில்லாது

    அனைவரும் ஒற்றுமையாக ஒரு

    நல்ல நாளாக கொண்டாடுவோமே,சுதந்திரம் ,

    குடியரசு என்னும் இனிய கனிகளை நாம் அனைவரும்

    சேர்ந்து சுவைப்போமே,மனிதம் மலரட்டும் உலக அரங்கிலே

    நம் தேசம் இந்தியா சர்வ வல்லமை பொருந்திய

    நல்ல நாடாக செழித்தோங்கட்டும்

    ” தாயின் மணிக்கொடி பாரீர்

    அதைத் தாழ்ந்து பணிந்து

    புகழ்ந்திட வாரீர் “

    Share
  • நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’:: தொடர்-25

    பெருவை பார்த்தசாரதி

    நமது அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு மாற்றங்களை சந்திக்கின்றோம்?…….ஒன்றா இரண்டா எளிதில் எண்ணி விடமுடியுமா? வாழ்வில் நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு மாற்றங்களையும் நினைத்துப் பார்க்கக் கூட இங்கே நேரம் கிடைக்கவில்லை, ஒரு நொடி யோசிப்பதற்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்து விடுகிறது என்பதே உண்மை. அன்றாடப் பணிகளில், உணவில், உடையில், வீட்டில், அலுவலகத்தில் இன்னும் எவ்வளவோ நிகழ்ச்சிகளில் தினமும் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஆக மனிதன் விரும்புகின்ற ஒவ்வொரு விஷயத்திலும், ஒவ்வொரு நொடியிலும் ஏதாவதொரு மாற்றத்தை எதிர்நோக்கியே சென்றுகொண்டிருக்கிறான் என்று சொன்னால் யாரும் மறுக்க முடியாது.

    நமது வீட்டில் இருக்கும் வயது முதிர்ந்த பெரியோர்களைக் கேளுங்கள், ஒரு காலத்தில் அவர்கள் தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதையே விரும்புவார்கள். உணவை இலையில் பரிமாரிய பிறகு, அவசரப்படாமல் நிம்மதியாக, மெதுவாக மென்று நிதானித்துச் சாப்பிடுவார்கள். ஆனால் இப்போது தரையில் உட்கார்ந்து சாப்பிட்ட காலமெல்லாம் மலையேறி, நேரமின்மை காரணமாக நின்று கொண்டே சாப்பிடும் மாறுதல். கால அவசரத்தின் கட்டாயத்தால், சாதாரண உணவகமெல்லாம் துரித உணவகமாக (Fast Food) மாறிவிட்டது, அங்கே உட்க்கார நினைத்தாலும் நாற்காலி கிடைக்காது. தோசை மாறி இப்போது பிசாவாகிவிட்டது(pizza), இட்லிக்கு பதில் பர்கர். நவீன உடைகள் நுழைந்து, பாரம்பரிய உடைகளான பாவாடைதாவணிகள், வேட்டிகள் எல்லாம் பரண் ஏறிவிட்டன. வீட்டில் உள்ள பொருட்களில்தான் எத்தனை மாற்றம், ஒரு காலத்தில் ரேடியோ, பிறகு இடத்தை அடைக்கக்கூடிய மிகப்பெரிய தொலைக்காட்சிப் பெட்டி, இவையெல்லாம் மாறி, காலண்டர் போல சுவற்றில் மாட்டகூடிய TV, கையடக்கக் கணிணி மற்றும் கைபேசி எல்லாம் வந்து விட்டது. இந்த மாற்றங்கள் பின்வரும் நட்களில் எப்படி இருக்கும் என்பதையும் நம்மால் ஊகிக்கமுடியாது. உதாரணமாக, 20 வருடங்களுக்கு முன்னால் கைபேசி மற்றும் SMS பற்றி பேசியிருந்தால் ‘முட்டாள்’ என்ற அடைமொழிதான் நமக்குக் கிடைத்திருக்கும்.

    நியூமராலஜி என்ற ஒன்று நம்மை ஆட்கொண்டபிறகு மனிதர்களின் பெயரிலேதான் எவ்வளவு மாற்றங்கள். முன்பு ஒருவரது பெயரை கேட்டமாத்திரத்திலேயே எழுதிவிடலாம், தற்போது சரியான எழுத்துக்களைத் (spelling) தெரிந்துகொண்டபிறகுதான் எழுதமுடியும். இப்பொழுதெல்லாம் ‘அங்காடி’, ‘கடை’ என்ற பெயர்களெல்லாம் அநாகரீகமாகி, “அகம்” என்ற வார்த்தை அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். நூலகம், படிப்பகம் என்பதுபோல், அனைத்துப் பெயர்களையும் மாற்றி பாலகம், முடிதிருத்தகம், தேநீரகம், செய்தித்தாளகம், மருந்தகம், நகலகம், இப்படியெல்லாம் மாற்றம். நல்ல வேளையாக பஞ்சர் ஒட்டும் கடைக்கு “ஒட்டகம்’’ என்று பெயரிடாமல் இருப்பது சந்தோஷமளிக்கிறது. நல்லதோ, தீயதோ ஒரே அரசாங்கத்தை மக்கள் விரும்புவதில்லை, மக்கள் மனதில் மாற்றம் நிகழும்போது அரசியலையும் விட்டுவைப்பதில்லை, அவ்வப்போது அரசாங்கம் மக்களின் மனதுக்கு ஏற்ப மாற்றப்படுகிறது.

    இயற்கை என்றுமே மாறுவதில்லை, நாம்தான் இயற்கையோடு மாறுபட்டு நிற்கிறோம். இயற்கையில் ஏற்படும் மாற்றத்தைத் வெளியுலகுக்கு கொண்டு வருபவர்தான் விஞ்ஞானி என்று புகழப்படுகிறார். சாதாரண மனிதரிலிருந்து சற்று வேறுபட்டு மாற்றுச் சிந்தனையோடு திகழ்பவர்களைத்தான் ‘ஞானி’, ‘மேதை’, ‘அறிஞன்’, ‘கவிஞன்’, ‘ஓவியன்’, ‘கலைச்சிற்பி’, ‘சிந்தனைச் சிற்பி’ என்றெல்லாம் வரலாறு போற்றுகின்றது. ஒவ்வொரு நொடிக்கும் இன்றைய உலகில் அறிவியலில் வியக்கத்தக்க மாற்றம் நிகழ்ந்து கொண்டேஇருக்கிறது. இங்கே நமக்குக் கிடைக்கின்ற பொன்னான நேரமெல்லாம், வீணே கழிந்து கொண்டிருக்கின்ற நிலையில், உலகின் ஒரு மூலையில் ஒருவர் செவ்வாய்க் கிரகத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறார். ஒரு நூற்றாண்டுக்கு முன் அங்கே புயல் அடித்தது என்றும் உயிரினங்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்றும் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார். இதற்கு அடிப்படையாக அமைவது மனிதனுக்குக் கிடைத்த அற்புத “சிந்தனை”. இப்படிப்பட்ட மாற்றுச் சிந்தனை என்பது லட்சத்தில் ஒருவருக்கே உதிக்கின்றது. நாம் உபயோகப்படுத்தும் எத்துணையோ பொருட்கள் எளிதில் கெட்டுப் போகின்றன, ஏன் இவை கெட்டுப் போகின்றன என்று யாராவது சிந்தித்துப் பார்த்திருக்கிறார்களா?…இடைவிடாது இந்தச் சாதாரண கேள்வியைத் தனக்குள் கேட்டுக்கொண்டே இருந்த ஒருவன் உலக அளவில் அறியப்பட்டான். அவன்தான் லூயிஸ் பாஸ்டர். இதேபோல இயற்கையை ரசிப்பது கூட மற்ற யாவரும் போல் சாதாரணமாக சிந்திக்காமல், மாற்றுச் சிந்தனையோடு, ஏன்?..எதற்கு?…எப்படி?…என்ற வினாவோடு வானத்தில் தோன்றும் மாற்றங்களை ஒரு இளைஞன் சிந்திக்கிறான். பஞ்ச பூதங்களின் தோற்றங்கள் அவனுக்கு வித்தியாசமாகத் தெரிகின்றன. குறிப்பாக ஒளியைப் பற்றியே அவனது சிந்தனை வட்டமிட்டுக்கொண்டேயிருந்தது. சூரிய ஒளியில் ஏற்படும் மாற்றத்தை ஒவ்வொரு நொடியும் சிந்தித்துக் கொண்டே இருந்தான். மாற்றுச் சிந்தனை மூலம் ஏழு ஆண்டுகள் கடின ஆராய்ச்சி செய்து யாரும் அறிந்திராத புதிய கண்டுபிடிப்பின் மூலம் ‘நோபல் பரிசு’ பெறுகிறான். ஒவ்வொரு வருடமும் ஒரு வயது பூர்த்தியாவது போல், தம்முள், தம்மனதுள் வித்தியாசமாக எழும் கேள்விகளுக்கு விடையாக “இராமன் விளைவு” என்ற பதிலை உலகம் அறியச்செய்தான். ஒரு சாதாரண அரசாங்க ஊழியனாக இருந்த இராமன் என்வரை அறிவியல் விஞ்ஞானியாக உலகமறியச்செய்து, பாரதத்தின் மிக உயரிய விருதான ‘பாரத்ரத்னா’ விருதையும், ‘சர்’ பட்டத்தையும் பெற்றுத்தந்தது. இந்திய அரசின் முன்னாள் குடியரசுத்தலைவரும், விஞ்ஞானியுமான மேதகு அப்துல் கலாமின் “இந்தியா 2020” என்ற கனவை நனவாக்க, தற்போதிருக்கும் இந்தியாவின் சூழ்நிலையை ஒட்டுமத்தமாக மாற்றவேண்டும் என்று அனுதினமும் அறைகூவல் விடுக்கிறார். இத்தகய வலுவான மாற்றத்திற்கு, மாற்றுச் சிந்தனா சக்தி உள்ள இளைஞர்கள் முன் வரவேண்டும் என்கிறார்.

    இப்படி ஒவ்வொன்றிலும் மாற்றத்தை விரும்புகின்ற மனிதர்கள் தம்முடைய வாழ்க்கையில் கடைபிடிக்கின்ற தவறுகளையோ, பிறருக்கு ஒவ்வாத பழக்கவழக்கத்தையோ மாற்றிக்கொள்ள மட்டும் விரும்புவதில்லை. அப்படி யாராவது ஒருவர் நம்முடைய குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் நட்பு முறிந்து போகுமே தவிர பழக்கம் மாறாது. தவறு என்று தெரியும் போது அதைத் திருத்திக்கொண்டால் வாழ்க்கை ஒளிமயமாகிறது என்பதற்கு இதிகாசத்திலிருந்து இதற்கு ஒரு உதாரணமொன்றைச் சொன்னால் பொருத்தமாக என்று நினைக்கிறேன்.

    ஒரு இளைஞன் காலத்தின் கட்டாயத்தால், பிறரை இம்சித்து கொள்ளை அடித்து, அவர்களிடம் இருக்கும் பொருட்களை கவர்ந்து சென்று தனது குடும்பத்தை மகிழ்வித்து வாழ்ந்து வருகிறான். ஒரு நாள் கொள்ளை அடிப்பதற்கு ஒன்றும் கிடைக்காததால், வழியில் சன்னியாசைப்போல நடந்து வரும் ஒருவரை வழிமறித்து அதட்டலாக அவரிடம் ‘உபயோகமான பொருள் ஏதேனும் உன்னிடம் உள்ளதா?..’ என்று கேட்கிறான்.

    அதற்கு அவர் நானோ சன்னியாசி, என்னிடம் எதுவும் இல்லை, ஆனால் ஒரு உபதேசம் ஒன்று இருக்கிறது, அதைத் தரட்டுமா?…என்று சொல்கிறார்.

    கொள்ளையனும் ‘சரி சொல்லும்’ என்கிறான்

    சன்னியாசி அவரிடம் “நீ கொள்ளை அடிக்கும் பொருட்களை உமது குடும்பத்தார் ஏற்றுக் கொள்கிறார்களா?..

    மகிழ்ச்சியாக ஏற்கின்றனர்….என்கிறான் கொள்ளைக்காரன்.

    இந்த மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும், உன்னோடு பங்கிட்டுக்கொள்ளும் உனது குடும்பத்தார், உனக்கு நேர்கின்ற துன்பத்திலும், பாபத்திலும் சரிபாதியை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?…என்று கேட்டு வந்து என்னிடம் சொல் என்கிறார் சன்னியாசி.

    மறுநாள் சன்னியாசியைத் தேடிவந்த கொள்ளைக்காரன், ஒரு மாறுதலான முகத்துடன், முனிவரே நீங்கள் சொல்வது சரிதான், குடும்பத்தார் யாவரும் இதற்கு உடன்பாடில்லை. ஒருவரும் எனக்கு நேர்கின்ற துன்பத்திலோ, பாபத்திலோ பங்கெடுக்க விரும்பவில்லை என்று கூறுகிறான்.

    பிறகு அந்த முனிவர் (நாரதமுனி) அவனுக்கு மந்திரோபதேசம் செய்து அவனை மாமுனிவராக்கிய கதை எல்லோருக்கும் தெரியும். கொள்ளைக்காரனாக இருந்த ரத்னாகரன், தன் மனதை மாற்றிக்கொண்டு, தவமகிமையால் வால்மீகி என்ற பெயர்பெற்று, ‘இராமாயணம்’ என்ற அழியாக் காப்பியத்தைப் படைத்தான்.

    ஒவ்வொரு செயலிலும், நிகழ்ச்சியிலும் அவ்வப்போது மாற்றத்தை விரும்பும் சாதாரண மனிதர்கள், வாழ்க்கையில் கடைபிடிக்கும் ஒழுக்க நெறிகளில், பண்புகளில் தம்மை மாற்றிக் கொள்ள முன்வருவதில்லை. தற்கால சூழ்நிலைக்கேற்றவாறு, தமது பிள்ளைகளை வளர்க்கும் முறைகளிலும் பெரிய அளவில் மாற்றத்தையும் கொண்டுவர விரும்புவதில்லை. இன்றய வாலிபர்களிடம் காணும் தகாத பழக்கவழக்கங்களுக்கெல்லாம் முழு முதற்காரணம் அவர்கள் இளம்பிராயத்தில் வளர்க்கப்படுகின்ற முறைகளில் காணும் முரண்பாடுகள் என்பது பெரியோர்களின் வாதம். ஒரு மனிதனின் சுபாவத்தைத் தீர்மானிப்பது, அவனுடனை ஜீன் என்பது இப்போது பழய கதையாகிவிட்டது. மனிதனுடைய பிறப்பும், வளர்ப்பும் ஒன்றோடென்று பின்னிப் பிணைந்தது என்பது தற்போதைய கண்டுபிடிப்பு. நம் ஜீன்களில் சுவிட்ச் ஒன்று உள்ளது என்றும், அதனை ப்ரமோட்டர் என்று அழைக்கிறார்கள். இதனுடன் என்ஹான்சர் என்ற ஒன்றும் சேர்ந்தும் ஊக்கப்படுத்தப்படுகிறது. இந்த சுவிட்ச் எப்போது போடப்படுகிறது, அணைக்கப்படுகிறது என்பதைப் பொருத்தே பிறப்பின் ரகசியம் வெளிப்படுகிறது. வெறும் பிறப்பினால் மட்டும் மனிதன் உருவாவதில்லை, மற்ற விஷங்களை அனைத்தையும் தீர்மானிப்பது வளர்ப்பினால் ஏற்படும் சூழ்நிலையேதான் என்று ஒரு ஆய்வரிக்கை கூறுவதாக தினத்தந்தியில் வெளியாகியிருந்த செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கிறது. நாகரீகம் என்ற பெயரில் மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருப்பது நல்வாழ்க்கைக்கு உதவாது. ஒரு காலத்தில் ஒற்றுமையுடனும், ஒழுக்கத்துடனும், மனித நேயத்துடனும் வாழ்ந்த கிராமிய வாழ்க்கை கூட இன்றைக்கு மாறி நாகரீகத்தால் சுற்றுப்புறச் சூழலும், மனதும் கூட மாசுபடத் தொடங்கிவிட்டது. அனைத்துத் துறைகளிலும் நிகழ்ந்த அபரிமிதமான வளர்ச்சியினால் குக்கிராமம் கூட காலமாற்றத்தில் சிக்கி உருக்குலைந்து வருகின்றன. குளங்கள், ஆலயங்கள், பூங்காக்கள், பசுமை நிறைந்த வயல் வெளிகள் இவைகள் தரும் சுகத்தினால் இன்புற்று இருந்த காலம் மாறி இயற்கை நமக்கு அளித்த கொடைகளை மற்ற உயிரிடத்திலிருந்து பிடுங்கி நாம் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தால் மனிதர்கள் மன அமைதியின்றி வாழ்கின்றனர் என்பதை சமூக ஆர்வலர்கள் அவ்வப்போது எடுத்துச் சொல்கிறார்கள். ஆன்றோர்களும், சான்றோர்களும், மாமனிதர்கள் என்று போற்றப்படுகின்ற மகான்களும், நல்வாழ்க்கைக்கு வேண்டிய மாற்றத்தையும், அவசியத்தையும் காலம் தவறாது நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள்.

    காலச்சக்கரத்தோடு, வாழ்க்கைச் சக்கரமும் விடாமல் சுழன்று கொண்டிருக்கும் போது, அதனோடு மாற்றங்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்ற உலக நியதியை, எல்லொரது வீட்டிலும் அழகுக்காக சுவற்றிலே தொங்கவிடப்பட்டிருக்கும் “கீதாச்சாரம்’’ தெளிவுபட ‘மாற்றத்தின் நியதியை’ என்றென்றும் நினைவு படுத்திக்கொண்டே இருக்கும். வாழ்க்கை முறையில் மாற்றம் என்பது வரவேற்கத்தக்கதே, ஆனால் அந்த மாற்றம் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் விதமாகமும், வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதாகவும் அமைந்திருக்க வேண்டும்.

    தொடரும்…………

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (42)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அரசியல் என்பது இன்று பல  கோணங்களில் இருந்து பலவகையான கண்ணோட்டத்திற்கு உள்ளாக்கப்படுகின்றது. ஆனால் தெரிந்தோ, தெரியாமலோ அன்றி சரியாகவோ , தவறாகவோ இவ்வரசியலே மனிதர்களுடைய அன்றாட வாழ்க்கையைத் தீர்மானிக்கும் காரணியாகிறது.

    வெளிப்படையாக இது தெரியாவிட்டாலும் பலருடைய மனங்களில் அரசியலும், தம்முடைய வாழ்க்கையும் வேறுபட்டன எனும் எண்ணம் இருந்தாலும் இரண்டும் ஒன்றோடொன்று பின்னப்பட்டிருப்பது தவிர்க்கப்படமுடியாத உண்மையாகும்.

    ஆனால் ஒவ்வொருவரும் இவ்வரசியலில் எத்துனை தூரம் பங்குபெறுகிறார்கள் என்பது ஒருவருக்கொருவர் வித்தியாசப்படுகிறது. சிலர் “ராமன் ஆண்டாலென்ன ? இராவணன் ஆண்டாலென்ன ? தட்டிலே சோறும், பையிலே பணமும் இருந்தால் சரி ” எனும் வகையில் நடந்து கொள்வார்கள். வேறு சிலரோ தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் அரசியலே நிர்ணயிக்கிறது எனவே அதைப்பற்றிய தனது கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது என்று நூறு சதவிகிதம் அரசியலோடு தம்மைப் பிணைத்துக் கொள்வார்கள்.

    மற்றும் சிலரோ இவை இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு நிலையை எடுத்துக் கொள்வார்கள்.

    தான் வாழும் நாட்டினதும், தனது மக்களினதும் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதில் தமக்கு முக்கிய பங்கு இருக்க வேண்டும், தான் சார்ந்த சமூகத்தின் அபிலாஷைகளை உரக்க உச்சரிக்கும் உரிமை தனக்கு வேண்டும் என்னும் மனிதர்கள் தமது வாழ்வாதாரத்தையே அரசியலில் தங்க வைத்து அரசியல் கட்சிகளில் தம்மை இணைத்துக் கொண்டு பணியாற்றுவார்கள்.

    மனிதர்கள் அனைவரும் மனிதர்களாக வாழ்கிறார்கள் என்பது யதார்த்தமாகாது. மனிதர்களின் மனதை பேராசை ஆட்டிப்படைக்கிறது. ஆனால் அது ஒவ்வொருவருடைய மனங்களிலும் வித்தியாசமான விகிதங்களில் வித்தியாசமான வடிவங்களை எடுக்கிறது.

    அத்தகைய வடிவங்களில் ஒன்றாக சில சந்தர்ப்பங்களில் அரசியலைத் தமது பேராசைகளுக்கு சாதகமான ஒரு கருவியாகப் உபயோகிக்கும் சில அரசியல்வாதிகளைப் பார்க்கிறோம் அதற்காக அனைத்து அரசியல்வாதிகளும் அத்தகைய மனப்பான்மை கொண்டவர்கள் எனும் கருத்தை உள்வாங்கிக் கொள்வது சரியாகாது.

    என்ன சக்தியின் இக்கருத்து எதற்கு நம்மை அழைத்துச் செல்கிறது என்று எண்ணுகிறீர்களா ?

    இன்று அதாவது 10ம் திகதி ஜனவரி மாதம் 2013 இலிருந்து ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் இங்கிலாந்தின் பிரபல்யமான கருத்தாடல் வானொலியான எல்.பி.சி (L.B.C) எனும் வானொலியில் காலை ஒன்பது மணிக்கு இங்கிலாந்தின் கூட்டரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான லிபரல் டெமகிரட்ஸ் கட்சியின் தலைவரும். இங்கிலாந்தின் உதவிப் பிரதருமான திரு.நிக் கிளெக் (Nick Clegg) அவர்கள் மக்களுடனான நேரடி வானொலிக்கூடான கருத்தாடல் ஒன்றில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.

    இவ்வானொலியின் புகழ் பெற்ற பல விருதுகளைப் பெற்ற அறிவிப்பாளரான நிக் வெராரி (Nick Ferrari) அவர்கள் நடத்தும் காலை நிகழ்ச்சியிலே இவரது கருத்தாடல் நிகழ்கிறது.

    மிகவும் பிரபல்யம் இழந்த நிலையிலுள்ள கூட்டரசாங்கத்தின் தலைவர்களில் ஒருவர், தனது கட்சியின் செல்வாக்கு நிறைந்த ஒரு காலப்பகுதியில் இத்தகைய துணிச்சல் மிக்க ஒரு நடவடிக்கையில் இறங்கியதன் பின்னனியில் இரு காரணங்கள் இருக்கலாம்.

    முதலாவதாக தான் கொண்ட கொள்கையில், தான் மேற்கொண்ட நடவடிக்கையில், தான் தனது கட்சியை இட்டுச் சென்ற பாதையில் தனக்கிருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கையின் அடித்தளத்தில் இருந்து எழுந்த ஒரு உத்வேகமான நடவடிக்கையாக இருக்கலாம்.

    இரண்டாவதாக தனது கட்சியோ செல்வாக்கு இழந்து விட்டது. இக்கூட்டரசாங்கத்தின் செயல்பாடுகளின் விளைவுகள் எதிர்மறையாகத்தான் இருக்கப் போகிறது, இன்னும் இரண்டரை வருடங்களில் பொதுத்தேர்தலை எதிர்கொள்ள‌ வேண்டிய நிலையில் இனி இழப்பதற்கு எதும் இல்லை எனும் “தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன ? முழமென்ன ? ” என்பது போன்ற ஒரு தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த நடவடிக்கையாக இருக்கலாம்.

    நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு வித்தியாசமான யுகம். இங்கு  தர்மத்தின் வழி நடந்தால் வெற்றி நிச்சயம் என்று நம்பும் தலைமுறை குறுகிக் கொண்டே செல்கிறது. காந்தி, காமராஜர், மொரார்ஜி தேசாய், அறிஞர் அண்ணா போன்ற அரசியல் தலைவர்கள் அருகிக் கொண்டு வருகிற காலம்.

    இன்றைய அரசியல் களம் வெறும் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் மட்டுமல்ல சமூகவலைத்தளங்கள் இன்றைய அரசியலில் பெரும் பங்களிக்கிறது.

    இது எவ்வாறாயிருப்பினும் இன்றைய காலகட்டத்தில் இங்கிலாந்தின் உதவிப் பிரதமர் இக்கருத்தாடலில் பங்கு கொள்ள முன்வந்திருப்பது மிகவும் ஒரு துணிச்சலானதும், வரவேரற்கப்படக் கூடிய ஒரு விடயமாகும்.

    உலகமெங்கிலும் ஜனநாயக அரசியல் ஒரு ஆட்டம் கண்டு தளர்ந்த நிலையிலுள்ளது. இளைய தலைமுறையினர் அரசியலிலும், ஜனநாயகத் தேர்தல்களிலும் சலிப்படைந்து கொண்டு வருகிறார்களோ என்று எண்ணத்தோன்றும் வகையில் சமீபத்திய தேர்தல்களில் மக்களின் பங்கெடுப்பின் விழுக்காடு அச்சமடைய வைத்திருக்கிறது.

    இப்போது எமக்குத் தெவையானது எமது அரசியல்வாதிகள் தாம் நடத்தும் அரசியல் நேர்மையானதும் சமூகத்தின் வளர்ச்சியிலும், நல்வாழ்வினிலும் அக்கறை கொண்டுள்ளது எனவும் மக்களுக்கு உணர்த்தும் வகையில் முன்னெடுக்கும் நேர்மையான அரசியலே ஆகும்.

    ஒவ்வொரு அரசியல் கட்சியும் அதில் போட்டியிடும் வேட்பாளர்கள், தலைவர்கள் வெவ்வேறு அபிப்பிராயங்களைக் கொண்டிருப்பதே யதார்த்தம். ஆனால் தமது கொள்கைகளில் அவர்களுக்கு உண்மையான பிடிப்பும், அதன் அடிப்படையில் தாம் எடுக்கும் நடவடிக்கைகளை நியாயப்படுத்தக்கூடிய வலுவும் இருந்தால் மக்களுடன் எத்தகைய கருத்தரங்குகளிலும் ஈடுபடுவதில் தயக்கம் காட்ட வேண்டிய தேவையிருக்காது.

    இன்று காலை நடைபெற்ற கருத்தரங்கிலே திரு.நிக் கிலெக் அவர்களிடம் மிகவும் சிக்கலான கேள்விகள் தொடுக்கப்பட்டன. அவரது கட்சித்தொண்டர் ஒருவர் அவரிடமன் தமது கட்சி செல்லும் பாதையைக் கண்டு தான் வெட்கப்படுவதாகக் கூறி தனது கட்சி அங்கத்துவ அட்டையைக் கிழித்தெறிவதாகக் கூறினார்.

    தான் எதிர் நோக்கிய சிக்கலான வினாக்களுக்கு அவர் அளித்த விடைகள் எத்தனை துல்லியமானவை என்பதோ அன்றி கட்சியின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்த அங்கத்தவர்களை அவர் சமாளித்த விதத்தையோ ஆதரிப்பதோ அன்றி எதிர்ப்பதோ அல்ல எனது நோக்கம்.

    இவரது இம்மாதிரியான ஒரு வழிகாட்டுதல் இங்கிலாந்தில் மட்டுமல்ல உலகெங்கிலும் ஒரு திடகாத்திரமான அரசியல் கருத்தாடலுக்கு வழிவகுக்கும் என்பதைச் சுட்டிக் காட்டுவதே எனது நோக்கமாகும்.

    இவரது இந்நடவடிக்கை சரிந்து போயிருக்கும் இவரது செல்வாக்கையும், இவரது கட்சியின் செல்வாக்கையும் தூக்கி நிறுத்துமா ? அன்றி இன்னும் சரித்து விடுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • வால்ட் விட்மன் வசன கவிதை -8

     

    என்னைப் பற்றிய பாடல்

    (Song of Myself)

    (1819-1892)

    (
    புல்லின் இலைகள் -1)

    மூலம் : வால்ட் விட்மன்

    தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

     

    என்னைப் பாராட்டிக் கொள்கிறேன்

    என்னைப் பற்றிப் பாடுகிறேன்

    எதனை நான் ஊகிப் பேனோ

    அதனை நீயும் செய்ய வேண்டும் !

    காரணம் :

    எனக்குள் இருக்கும் ஒவ்வோர் அணுவும்

    உனக்குள் இருப்பதை ஒத்திருப் பதே !

    ஊர் சுற்றி நான்

    என் ஆத்மாவை ஈடுபட அழைப்பேன்

    கண்ட நேர மெல்லாம் திரிந்து

    களைத்துச் சாய்வேன்

    வேனிற் காலத்துக்

    கானகப் புல்லின் முட்களைக்

    கண்ணோக்கி !

     

    என் நாக்கும், குருதியில் உள்ள

    ஓவ்வோர் அணுவும்,

    இந்த மண்ணிலும்,

    இந்தக் காற்றிலும் உருவானவை !

    இங்கு பிறந்த பெற்றோருக்கு

    இங்கு பிறந்தவன் நான் !

    என் பெற்றோரும் அவ்விதமே !

    அவரது பெற்றோரும் அப்படியே !

    முப்பத்தி ஏழு வயதான எனக்கு

    பூரண உடல் நலம்

    ஆரம்பம் !

    மாறாமல் சீரிய நலமிருக்கும் நான்

    மரிக்கும் வரை !

     

    மத நெறிகள், கல்விக் கூடங்கள்

    இவற்றை நான்

    ஒதுக்கி வைத்தேன் !

    ஓய்வெடுத்துச் சிறிது காலம்

    போது மென இருந்தேன்.

    ஒருபோதும்

    மறக்க வில்லை நான் அவற்றை !

    நல்லதோ, தீயதோ துறைமுகத்தில்

    நன்கூரம் பாச்சுகிறேன்.

    ஒவ்வோர்

    அபாயம் நேரும் போது முன்வந்து பேச

    அனுமதி உள்ள தெனக்கு !

    இயற்கை தனைத் தடை யின்றி

    ஏற்கும் என் உள்ளம்

    எந்தன் மூல ஆற்ற லோடு !

     

    +++++++++++++

    தகவல்:

    1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

    2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]

    3. Britannica Concise Encyclopedia [2003]

    4. Encyclopedia Britannica [1978]

    5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]

    6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/

    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

    ********************

    jayabarat@tnt21.com [S. Jayabarathan] (January 23, 2013)

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • இஸ்ரேல் பயணம் 7

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இப்போதைய ஜெருசலேம் நகரின் கிழக்குப் பகுதியில் இருக்கும் புராதன நகரம்தான் (old city) ஆதியில் இருந்த ஜெருசலேம் நகரம்.  இது மிகத் தொன்மை வாய்ந்தது.  கி.மு. பதினோராம் நூற்றாண்டில் டேவிட் (King David) என்னும் யூத மன்னன் இந்த ஊரை ஒரு குன்றின் மேல் உருவாக்கியதாகப் பைபிளில் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருக்கிறது.  இதன் அடிப்படையில் தாங்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து வாழ்ந்துவந்ததாக யூதர்கள் இந்த நகருக்குச் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.  அது எப்படியாயினும் இந்த நகரோடு யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் ஆகிய மூன்று மதத்தினர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.  இந்த மதங்கள் சம்பந்தப்பட்ட பல புண்ணிய தலங்கள், தேவாலயங்கள், துறவி மடங்கள், மசூதிகள் இங்கு இருக்கின்றன.  அதனால் மூன்று மதத்தவர்களும் இந்த நகருக்குச் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.  இதற்குள் நுழைந்துவிட்டால் சரித்திர காலத்திற்கே போய்விட்டது போன்ற பிரமை ஏற்படுகிறது.

    இந்நகர் கி.மு.வுக்கு முன்னும் கி.மு.வுக்குப் பின்னும் பல மதங்களைச் சேர்ந்தவர்களின்  கையில் இருந்திருக்கிறது. முதலில் யூதர்கள், பின் ரோமானியர்கள், அதன் பிறகு கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மறுபடி கிறிஸ்தவர்கள் என்று பலர் ஆட்சியின் கீழ் இருந்திருக்கிறது.  இதனால் இம்மூன்று மதங்களின் இறைவழிபாட்டு இடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.  அதிலும் ஒன்றன் மேல் ஒன்றாகக் கட்டப்பட்ட பல கட்டடங்களை அகழ்ந்து எடுத்திருக்கிறார்கள். இப்போதுள்ள பல இடங்கள் எந்த மதத்திற்கு உரியது என்ற சர்ச்சை நடந்துவருகிறது.  நம் நாட்டில் இந்துக் கோவிலான ராமஜென்ம பூமியை இடித்துவிட்டு அதற்கு மேல் பாபர் மசூதியைக் கட்டியதாக சர்ச்சை நடந்து வருவதைப் போல.  பல இடங்களில் இன்றும் அகழாய்வு நடந்துகொண்டிருக்கிறது.

    1967-இல் நடந்த அரேபிய-இஸ்ரேல் சண்டையில் (இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பிறகு இஸ்ரேலுக்கும் சிரியா, எகிப்து, ஜோர்டன் ஆகிய அரபு நாடுகளுக்கும் இடையே ஆறு போர்கள் நடந்திருக்கின்றன.  இவற்றில் இஸ்ரேல் 1948-இல் ஐ.நா. பாலஸ்தீனத்திற்குக் கொடுத்த பல இடங்களைப் பிடித்துக்கொண்டது.)  இஸ்ரேல் ஜோர்டனிடமிருந்து இந்த நகரத்தைக் கைப்பற்றியது.  பிறகு 1980-இல் ஜோர்டான், இதை உலகப் பாரம்பரியச் சொத்துகளில் (World Heritage Sites) ஒன்றாகச் சேர்க்க வேண்டும் என்று ஐ.நா.-வுக்குக் கோரிக்கை விடுத்ததை ஐ.நா. ஏற்று, அந்தப் பட்டியலில் இந்த நகரை இடம் பெறச் செய்திருக்கிறது.

    இதனுடைய பரப்பளவு 0.9 சதுர கிலோமீட்டர்தான்.  இதைச் சுற்றிக் கற்களாலான மதில் சுவர் இருக்கிறது.  இந்தச் சுவர் பல காலத்தில் பல மன்னர்களால் இடிக்கப்பட்டும் திரும்ப எழுப்பப்பட்டும் இருந்திருக்கிறது.  இப்போதுள்ள மதில் சுவர் ஆட்டோமான் பேரரசராகிய சுலைமான் என்பவரால் (Suleiman, the Magnificent) 1538-இல் கட்டப்பட்டது.  இந்த மதிலின் நீளம் 2.8 மைல்.  உயரம் 16 அடியிலிருந்து 49 அடி வரை இருக்கிறது.  சில இடங்களில் இதன் பருமன் 10 அடி கொண்டதாக இருக்கிறது.  இதில் 43 காவல் கோபுரங்களும் (Surveillance Towers) பதினொரு நுழைவாயில்களும் (Gates) இருக்கின்றன.  இப்போது ஏழு நுழைவாயில்களே உபயோகத்தில் இருக்கின்றன.  மூடப்பட்ட நுழைவாயில்களில் ஒன்றான தங்க வாயில் (Golden Gate) வழியாக யூதக் கடவுள் அவருடைய தூதரை அனுப்பும்போது அவர் இந்த வாயில் வழியாகத்தான் வருவார் என்று யூதர்கள் நம்புகிறார்கள்.  தூதர் வருவதைத் தடுக்க முஸ்லீம் மன்னன் ஒருவன் இதை மூடிவிட்டானாம். அப்படி மூடிவிட்டாலும் இவ்வளவு தூரம் வந்தவர் உள்ளே வருவதற்கு என்ன தயக்கம் இருக்க முடியும் என்று யூதர்கள் கூறிக்கொள்வார்களாம்.  1887-ஆம் ஆண்டு வரை எல்லாக் கதவுகளும் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மூடப்பட்டு, மறு நாள் சூரிய உதயத்திற்குப் பிறகுதான் திறக்கப்படுமாம்.

    இந்த நுழைவாயில்கள்  நேராக அமைக்கப்படாமல் L வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன.  எதிரிகள் குதிரைகளின் மேல் வேகமாக வரும்போது வாயில் இந்த வடிவில் இருந்தால் அது அவர்களின் வேகத்தைக் கட்டுப்படுத்துமாம்.  மேலும் யூதர்களின் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள சில வாயில்களில் பெரிய துவாரங்கள் இருக்கின்றன.  எதிரிகள் உள்ளே நுழையும்போது அவர்கள் மேல் காய்ச்சிய திரவத்தை ஊற்றுவதற்காக இந்த ஏற்பாடாம். இன்று இந்த மதில் சுவரின் மேலே நடந்து பார்த்தால் ஜெருசலேம் நகரம் முழுவதும் மிக அழகாகக் காட்சியளிக்கிறது.

    புராதன நகரின் தெருக்கள், சாலைகள் முழுவதும் cobble stones என்னும் ஒரு வகைக் கூழாங்கற்களால் அமைக்கப்பட்டிருக்கின்றன.  இந்தக் கற்கள் பல நூற்றாண்டுகளாக இருந்து வருவதாகக் கூறுகிறார்கள்.

    இந்த நகர் கிறிஸ்துவப்  பிரிவு, யூதர்கள் பிரிவு, முஸ்லீம்கள் பிரிவு, ஆர்மீனியர் பிரிவு என்ற நான்கு பிரிவுகளைக் கொண்டதாக இருக்கிறது.  அதிகபட்சமாக எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு வசிக்கிறார்களோ அந்த மதத்தின் பெயரால் அந்தப் பகுதி வழங்குகிறது.  அதனால் இப்படிப் பல பிரிவுகளாக இருந்தாலும் ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் இன்னொரு மதப் பிரிவில் இருக்க வாய்ப்பு இருக்கிறது.  ஒரு சிறிய மொரோக்கன் பிரிவும் இருக்கிறது.  இந்தப் பிரிவுகள் சம அளவில்  இல்லை.  டமாஸ்கஸ் (Damascus Gate) வாயிலிலிருந்து ஸயான் வாயில் (Zion Gate) வரை ஓடும் தெரு இந்நகரை கிழக்கு, மேற்காகப் பிரிக்கிறது.  ஜாஃபா வாயிலிலிருந்து (Jaffa Gate) சிங்க வாயில் (Lion’s Gate) வரை ஓடும் தெரு நகரை வடக்கு, தெற்காகப் பிரிக்கிறது.  நகரின் வடகிழக்குப் பகுதியில் முஸ்லீம் பிரிவும் வட மேற்கில் கிறிஸ்தவர்கள் பிரிவும் தென்மேற்கில் யூதர்கள் பிரிவும் தென்கிழக்கில் முஸ்லீம்கள் பிரிவும் இருக்கின்றன.

     

    கிறிஸ்தவப் பிரிவில் 40 தேவாலயங்கள், கிறிஸ்தவத் துறவி மடங்கள் (Monasteries), கிறிஸ்தவ பயணிகள் தங்குமிடங்கள் ஆகியவை இருக்கின்றன.  கிறிஸ்தவர்களுக்கு மிகவும் புண்ணிய தலமாகக் கருதப்படும் Church of the Holy Sepulcher இங்குதான் இருக்கிறது.  இயேசு குற்றவாளி என்று ரோமானிய அரசன் பிலாத்து தீர்மானித்து அவருக்கு மரண தண்டனை வழங்கிய இடம் முஸ்லீம் பிரிவில் இருக்கிறது.  அங்கிருந்து தொடங்கி இயேசு சிலுவையில் அறையப்பட்டுக் கடைசியாக உயிர் துறந்து அவர் உடல் புதைக்கப்பட்ட இடம் வரை உள்ள பாதையைப் பதினான்கு பிரிவுகளாகக் குறித்திருக்கிறார்கள்.  அவற்றை ஆங்கிலத்தில் stations என்று குறிப்பிடுகிறார்கள். இயேசு தன்னுடைய கடைசி யாத்திரையை நோக்கி நடந்த பாதையை Via Dolorosa என்கிறார்கள்.  பாதையின் ஆரம்பத்தில் இயேசுவைக் குற்றவாளி என்று குற்றம் சாட்டிய இடம், பின் அவர் சிலுவையைத் தூக்கி வருமாறு ஆணையிட்ட இடம், அவர் சிலுவையின் சுமையால் விழுந்த இடம், பின் அவர் தன் தாயைக் கூட்டத்தில் சந்தித்த இடம், அவர் தன் ஆதரவாளர்களோடு பேசிய இடம், ஜெருசலேம் பெண்களைச் சந்தித்த இடம் என்று கூறப்படும் இடங்கள் முஸ்லீம் பிரிவில் இருக்கின்றன.  இயேசு சிலுவையின் சுமையால் மறுபடி விழுந்த இடம், ரோமர் சிப்பாய்கள் அவருடைய ஆடைகளைக் கழைந்த இடம், அவரைச் சிலுவையில் அறைந்த இடம், அவருடைய உடலைக் கீழே இறக்கி வைத்த இடம், அவருடைய கல்லறை ஆகியவை பின்னால் கட்டப்பட்ட Church of the Holy Sepulcher-குள்ளே இருக்கின்றன.  இயேசுவை அறைந்த சிலுவையை ஊன்றிய கல் இந்தக் கோயிலுக்குள் இருக்கிறது.  அதில் ஒரு சிலுவையை நட்டு இப்போது வழிபடுகிறார்கள்.  உலகின் பல கோடியிலிருந்தும் கிறிஸ்தவர்கள் இங்கு வருகிறார்கள்.  நாங்கள் சென்றிருந்தபோது ஆந்திராவிலிருந்து ஒரு கோஷ்டி வந்திருந்தது.  (கிறிஸ்தவர்களின் இந்தப் புண்ணிய தலத்திற்கு வர விரும்பும் கிறிஸ்தவர்களில் வருடத்திற்கு 500 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரூ.20,000 உதவிப் பணமாகத் தமிழ்நாடு அரசு வழங்கப் போவதாகச் செய்தித்தாளில் படித்தேன்.)  இயேசுவின் உடல் கிடத்தப்பட்ட இடம் என்று ஒரு கல்மேடை இருக்கிறது.  கிறிஸ்தவர்கள் அதில் தங்கள் தலையை வைத்து வழிபடுகிறார்கள்.  இயேசுவின் கல்லறையைப் பார்க்க மக்கள் பொறுமையாக வரிசையில் காத்திருக்கிறார்கள்.  ரோமானிய அரசன் கான்ஸ்டாண்ட்டின் (இவன்தான் கிறிஸ்தவ மதத்தை மறுபடித் துளிர்க்கச் செய்தவன்) காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோவில் பல முறை இடிக்கப்பட்டு மறுபடியும் கட்டப்பட்டது.  இப்போதைய கோவில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாம்.  இந்தக் கோவிலின் அதிகாரம் யார் கையில் இருக்க வேண்டும் என்பதில் பல கிறிஸ்தவ மதப் பிரிவினர்களுக்கிடையே நடந்த சச்சரவால் இதனுடைய பெரிய மரக் கதவுகளுக்கான சாவி ஒரு முஸ்லீம் கையில் ஒப்படைக்கப்பட்டதாம்!  இப்போதும் பத்து அங்குல நீளமுடைய இதன் சாவி ஒரு முஸ்லீம் கையில் இருக்கிறது.  அவர் காலையில் கதவைத் திறந்துவிட்டு மறுபடி இரவு எட்டு மணிக்கு வந்து கதவைப் பூட்டிவிட்டுச் செல்வாராம்.

    இயேசுவின் இந்தக் கடைசி  யாத்திரை வழியாக ஒவ்வொரு  வெள்ளிக்கிழமையும் இப்போது  ஃப்ரான்ஸிஸ்கன் (Franciscan) பிரிவைச் சேர்ந்த குருமார் தலைமையில் பக்தர்கள் பாடிக்கொண்டும் ஜபித்துக்கொண்டும் நடக்கிறார்கள்.  இப்போது இருக்கும் பாதைதான் இயேசு நடந்த அதே இடம் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள்.

    இயேசு தன் சீடர்களுடன்  கடைசியாக உணவருந்திய இடம் (Last Supper) என்ற ஒரு இடம் இருக்கிறது.  இது கிறிஸ்தவர்களுக்குரிய புண்ணிய தலம் என்று கருதி போப் இதைக் கிறிஸ்தவர்களுக்குக் கொடுத்துவிடும்படி இஸ்ரேல் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.  அப்படிக் கிடைக்கும் பட்சத்தில் ஸ்பெயின் நாட்டிலுள்ள யூதக்கோவில் ஒன்றை இஸ்ரேலுக்குக் கொடுத்துவிடுவதாக வாக்களித்திருக்கிறாராம்.

    யூதர்கள் பிரிவில் Western Wall என்னும் யூதர்களுடைய இரண்டாவது கோவிலின் இடிபாடுகளில் மிஞ்சிய மேற்குச் சுவர் இருக்கிறது.  இந்தச் சுவரின் மிகப் பெரிய கல்லின் எடை பத்து லட்சம் பவுண்டிற்கும் மேலானது.  நீளம் 45 அடி, உயரம் 15 அடி, ஆழம் 15 அடி.  இந்தச் சுவரின் உயரம் 65 அடி.  யூதர்களின் இரண்டாவது கோவில் இடிக்கப்பட்டது கி.பி. 70-இல்.  கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருஷங்களாக இது இருந்து வருகிறது.  தங்களுடைய இரண்டு கோவில்களும் இடிக்கப்பட்டுவிட்டதால் மூன்றாவது கோவிலை எப்படியும் மறுபடியும் கட்டிவிட வேண்டும் என்று யூதர்கள் நினைக்கிறார்கள்.  யூதர்கள் பகுதியில் உள்ள ஒரு சதுக்கத்தில் மெனோரா (menorah) என்னும் யூதர்களின் ஏழு தீப விளக்கு ஒன்று இருக்கிறது.  இது யூதர்களுக்கு மிக முக்கியமான விளக்கு.  இதில் எரிவதற்கு மிகச் சுத்தமான ஆலிவ் எண்ணெய்தான் உபயோகிக்க வேண்டுமாம். மிகப் பழங்காலத்தில் ஒரு முறை ஒரு நாளைக்கு மட்டுமே போதுமான ஆலிவ் எண்ணெய்தான் இருந்ததாம்.  ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த எண்ணெயிலேயே ஏழு நாளைக்கு தீபம் எரிந்ததாம்..  அதிலிருந்து இந்த விளக்கை ஏழு முகம் கொண்டதாக அமைத்தார்களாம்.  யூதர்கள் பகுதியில் இருக்கும் மெனோராவின் அடியில் ‘மூன்றாவது கோவிலை நாம் காலத்திற்குள் கட்டிவிடுவோம்’ என்று எழுதப்பட்டிருக்கிறது.

    1948-இல் நடந்த இஸ்ரேல்-அரேபிய யுத்தத்தில் ஜெருசலேம் ஜோர்டனின் கீழ் வந்தது.  ஜோர்டானிய அரசு இங்கு வாழ்ந்துவந்த யூதர்களை இங்கிருந்து வெளியே அனுப்பிவிட்டது.  மறுபடி 1967-இல் நடந்த சண்டையில் ஜெருசலேம் முழுவதையும் பிடித்துக்கொண்ட இஸ்ரேல் மறுபடி யூதர்களை அங்கு குடியேற்றியது.  ஆங்காங்கே யூதர்கள் சென்ற இடங்களில் எல்லாம் அவர்களுடைய யூதக்கோவில்களைக் (synagogues) கட்டிக்கொண்டாலும் பழைய நகரத்தில் உள்ள மேற்குச் சுவர் யூதர்களைப் பொறுத்த வரை மிகவும் புனிதமானது.  கி.பி.70-இல் ரோமானியர்கள் யூதர்களின் இரண்டாவது கோவிலை இடித்தபிறகு இது மட்டும் மிஞ்சியிருக்கிறது.  ரோமானியர்கள் கோவிலை இடித்த போது இது கோவிலின் சுற்றுச் சுவருக்கு வெளியே இருந்திருக்க வேண்டும் என்றும் இது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை என்று நினைத்து அதை இடிக்காமல் விட்டிருக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள்.  அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என்று இடிக்காமல் விடப்பட்ட இந்தச் சுவரே இத்தனை பிரமாண்டமாக இருக்கிறதென்றால் கோவில் எத்தனை பிரமாண்டமானதாக இருந்திருக்க வேண்டும்!  நவீன கட்டடக் கலை உத்திகள் எதுவும் இல்லாத அந்தக் காலத்தில் கற்களைக் கொண்டே இப்படி ஒரு பிரமாண்டமான மதில் சுவரைக் கட்டியிருக்கிறார்கள். இப்போது இது யூதர்களின் தலைசிறந்த புண்ணிய இடமாகக் கருதப்படுகிறது.  உலகிலுள்ள யூதர்கள் எல்லோரும் இதைத் தரிசிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.  1948-லிருந்து 1967 வரை இது பாலஸ்தீனர்களின் கையில் இருந்தபோது பல யூதர்களால் இதைத் தரிசிக்க முடியவில்லையாம்.  அதனால் பலர் மிகவும் சோகப்பட்டார்களாம்.  எங்கள் அமெரிக்க யூத நண்பர் ஒருவர் அவருடைய தாத்தாவும் பாட்டியும் ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவிற்கு வந்து குடியேறியவர்கள் என்றும் இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்ட பிறகு அங்கு சென்று இந்தப் புண்ணிய இடத்தைப் பார்க்க விரும்பியதாகவும் ஆனால் அது அப்போது ஜோர்டனின் கீழ் இருந்ததால் அதைப் பார்க்க முடியாமல் போனதாகவும் அதனால் மிகவும் மனவேதனை அடைந்ததாகவும் கூறினார்.

    இந்த மேற்குச் சுவரை (Western Wall), Wailing Wall என்று கூறுவோரும் உண்டு.  இந்தச் சுவரின் முன்னே நின்று யூதர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.  இந்தப் பகுதி ஆண்களுக்கு ஒரு பெரிய பிரிவாகவும் பெண்களுக்கு ஒரு சிறிய பிரிவாகவும் ஒரு வேலி மூலம் பிரிக்கப்பட்டிருக்கிறது.  இந்தச் சுவரின் அருகில் நின்று பிரார்த்தனை செய்பவர்கள் ஒரு சிறு தாளில் தங்கள் வேண்டுகோளை எழுதிச் சுவரில் உள்ள இடுகல்களில் சொருகிவிடலாம்.  இறைவன் அந்த வேண்டுகோள்களை நிறைவேற்றுவார் என்று நம்புகிறார்கள்.  அவர்கள் உருக்கமாகப் பிரார்த்திப்பதால் Wailing Wall என்று இதற்குப் பெயர் வந்ததாம்.  நாங்களும் எங்கள் வேண்டுதல்களை ஒரு தாளில் எழுதி சுவரில் செருகிவிட்டு வந்தோம்.  குறை தீர்க்கும் கடவுள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தால் என்ன?

    இதை அடுத்து இருக்கும்  இடத்திற்குப் பெயர் கோவில் குன்று (Temple Mount). இதில் அல்-அக்ஸா (Al-Aksa) என்னும் மசூதியும் குன்றின் மேல் கூண்டு (Dome of the Rock) என்னும் மசூதியும் இருக்கின்றன.  இவை இரண்டும் அழிக்கப்பட்ட யூதர்களின் கோவிலின் இடத்தில் கட்டப்பட்டது என்று யூதர்கள் நம்புகிறார்கள்.  இந்த இரண்டு மசூதிகளிலும் முஸ்லீம்களின் ஐந்து பிரார்த்தனை நேரங்களிலும் சுற்றுலாப் பயணிகள் உள்ளே நுழைய முடியாது.  இந்த இரண்டு மசூதிகளுக்குள்ளும்  முஸ்லீம் அல்லாதவர்கள் உள்ளே செல்லவே முடியாது.  ஆனால் இந்த மசூதிகளின் வளாகத்திற்குள் முஸ்லீம் அல்லாதவர்களும் போகலாம்.

    கோவில் குன்று என்று  அழைக்கப்படும் Temple Mount-இல் தான் யூதர்களின் இனத்தை ஸ்தாபித்த ஆபிரகாம், இறைவனின் ஆணைக்கு இணங்கி தன் மகன் ஐஸக்கைப் பலியிடத் தயாரானாராம்.  இதே இடத்தில்தான் முஸ்லீம் மத ஸ்தாபகரான முகம்மது தன் குதிரையின் மீது ஏறி சொர்க்கத்தை நோக்கிச் சென்றாராம்.

    இந்த இரண்டு புராணச்  சம்பவங்களாலும் யூதர்களும் முஸ்லீம்களும் இதற்குச் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.  புராதன காலத்தில் இவை யூதர்களுக்குச் சொந்தமான இடமாக இருந்தன  என்றும் மசூதி இருக்கும்  இடத்தில்தான் யூதக் கடவுள் ஒரு கல்லிலிருந்து உலகைப் படைத்தார் என்றும் யூதர்கள் நம்புவதால், அவர்கள் அல்-அஸ்கா மசூதிக்குள் எப்படியாவது சென்று அங்கு வழிபட விரும்புகிறார்கள்.  அப்படி சிலர் நுழைய முயலும்போது கலவரங்கள் வெடிக்கின்றன.  இவற்றைத் தவிர்க்க இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த யூதர்கள் யாரும் அங்கு போகாதவாறு அந்த இடங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் இஸ்ரேல் காவலர்கள் அங்கு போகும் எல்லோரையும் அவர்கள் இஸ்ரேல் பிரஜைகள் அல்ல என்று சரிபார்த்துக்கொள்கிறார்கள்.  (1967 சண்டைக்குப் பிறகு இந்த இடம் இஸ்ரேலின் கீழ் இருந்தாலும் இஸ்ரேலுக்கும் ஜோர்டானுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் அந்த இடங்களின் பராமரிப்பு இப்போது ஜோர்டன் கையிலும் அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடு இஸ்ரேல் கையிலும் இருக்கின்றன.)  எங்களிடமும் எங்கள் பாஸ்போர்ட் பற்றிக் கேட்டார்கள்.  நாங்கள் எங்கள் பாஸ்போர்ட்டுகளை எடுத்துச் சென்றிருக்கவில்லையாதலால் என் கணவருடைய அமெரிக்க டிரைவர் லைசென்சைச் சரிபார்த்துவிட்டு எங்களை உள்ளே விட்டார்கள்.

    கோட்டைச் சுவரில்  ஒரு ஒலி-ஒளிக் காட்சி உண்டு.  இது கோட்டைச் சுவரின் பின்னணியில்  காட்டப்படுகிறது.  இஸ்ரேலின்  வரலாற்றை ஆதிகாலத்திலிருந்து இயேசு காலம் வரை யூதர்களின் பார்வையில் இக்காட்சி காட்டுகிறது.  அந்தச் சூழ்நிலையும் பிரமாண்டமான  காட்சியமைப்பும் நம்மை  புராதன காலத்திற்கே கொண்டுசெல்கின்றன.  இந்தக் காட்சி இரவில் நடக்கிறது.  பகலில் சுவரில் உள்ள பல அறைகளில் இஸ்ரேலின் வரலாற்றுக்கால  நிகழ்ச்சிகளை காட்சிப் பொருள்களாக வைத்திருக்கிறார்கள்.  இவற்றில் ஜெருசலேம் மற்றும் பிற  நகரங்களின் மீது யார், எப்போது, எதற்குப் படையெடுத்தார்கள் என்பதை விளக்கமாகக் காணலாம்.  ஒரு அறையில் வரலாற்றைத் திரைப்படமாகக் காட்டுகிறார்கள்.  கோட்டைச் சுவரின் உச்சியில் ஒரு தொலைநோக்கிக் கருவி இருக்கிறது.  ஜெருசலேமின் முக்கியமான இடங்களை விளக்கும் ஒலிப் பேழையை வைத்துக்கொண்டு தொலைநோக்கி மூலம் பார்த்தால் ஜெருசலேமின் வரலாறும் சிறப்பும் நம் கண் முன்னே நிற்கும்.

    (தொடரும்)

    ஜெருசலேமில் என் மகள் மெல்லி எடுத்த புகைப்படங்களின்  ஆல்பத்தை இந்த இணைப்பில்  விரும்புபவர்கள் பார்க்கலாம்.  இந்த ஆல்பத்தில் புராதன நகரின் முக்கிய கட்டடங்கள், தெருக்கள், இயேசுவின் கடைசி யாத்திரைப் பாதை ஆகிய படங்களைப் பார்க்கலாம்.

    https://picasaweb.google.com/108173580006522327175/OldJerusalem?authkey=Gv1sRgCJeW6_aWko-T_AE

    Old Jerusalem  Views

    Dome of the Rock:

    https://picasaweb.google.com/108173580006522327175/OldJerusalem?authkey=Gv1sRgCJeW6_aWko-T_AE#slideshow/5835971938641884274

    Grape leaves:

    https://picasaweb.google.com/108173580006522327175/OldJerusalem?authkey=Gv1sRgCJeW6_aWko-T_AE#slideshow/5835963078573758306

    Dresses:

    https://picasaweb.google.com/108173580006522327175/OldJerusalem?authkey=Gv1sRgCJeW6_aWko-T_AE#slideshow/5835968513212583826

    Jewish lamp

    :https://picasaweb.google.com/108173580006522327175/OldJerusalem?authkey=Gv1sRgCJeW6_aWko-T_AE#slideshow/5835966967605652066

    Store:

    https://picasaweb.google.com/108173580006522327175/OldJerusalem?authkey=Gv1sRgCJeW6_aWko-T_AE#5835969088319312386

    Old Jerusalem view:

    https://picasaweb.google.com/108173580006522327175/OldJerusalem?authkey=Gv1sRgCJeW6_aWko-T_AE#slideshow/5835963622904367954

    Old Jerusalem view:

    https://picasaweb.google.com/108173580006522327175/OldJerusalem?authkey=Gv1sRgCJeW6_aWko-T_AE#slideshow/5835963669435672962

    Credit Melli Annamalai

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 55

    மலர் சபா

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    (10)

    வலைகொண்டு வாழ்வு நடத்துபவர்
    வாழ்கின்ற சேரிதனிலே
    வலை உலர்த்தியிருக்கும் முற்றத்திலே
    பூங்கொத்து ஒன்றினைக் கைதனில் ஏந்தி
    விற்பதற்குரிய வற்றல் மீன்களைக்
    காத்து நின்றாள் கன்னியொருத்தி.

    அவள்தானும்
    தான் வேண்டிய உருவம் எடுத்துக் கொண்டு,
    கொலைத்தொழில் புரியும்
    நீண்ட வேல்போன்ற விழிகளுடன்,
    அலைகின்ற நீரையுடைய குளிர்ந்த கானகத்தில்
    இங்ஙனம் வாழ்ந்து வருவதை
    முன்னரே நான் அறியேனே!
    அறிந்திருந்தால் அங்குதான்
    சென்றிருக்க மாட்டேனே!

    (11)

    நிலை வரி
    தமியளாக இடத்து எதிர்ப்பட்ட தலைவியை நோக்கித் தலைமகன் கூறுதல்

    கண் எனக் கயலையும்
    புருவம் என வில்லையும்
    கூந்தல் எனக் கார் மேகத்தையும்
    இவற்றுடன் சேர்த்து
    எதிர்வரும் என்னையும்
    வருத்துகின்ற கொடுந்தொழிலையும்
    எழுதி வைத்துள்ள
    இவளது முகம்தான் திங்களோ?!

    அழகிய பரப்புடைய
    வானத்தில் இருந்தால்
    பாம்புகள் விழுங்கிவிடுமோ
    என்று அஞ்சியே
    மீன்பிடிக்கும் படகுகள் கொண்டு
    வாழ்க்கை நடத்திவரும்
    பரதவர் வாழும் சிற்றூரில்
    தான் வந்து வாழ்கின்றதோ?!

    அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram19.html

    படத்துக்கு நன்றி:
    http://www.shutterstock.com/pic-41345068/stock-vector-fishing-boat-with-seagulls-in-the-night.html

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் … (41)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.
    இன்றைய இங்க்லாந்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி இப்புது வருடத்திலே எத்தகையதோர் திருப்பத்தை எடுக்கப் போகிறது என்பது இப்போதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    இங்கிலாந்து நாட்டின் பிரதமர் டேவிட் கமரன் அவர்கள் தனது புதுவருடச் செய்தியில் ” 2012ம் ஆண்டு மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடிகளைப் பற்றி நன்கு உணர்ந்துள்ளேன். இந்த நெருக்கடி ப்ழைய அரசாங்கத்தின் ஆடம்பரச் செலவினாலும், அனைத்துலக பொருளாதார பாதிப்பினாலும் எழுந்த விளைவுகளேயாகும். இந்தப் பிரச்சனையை வெகுவிரைவாகத் தீர்த்து விடுவோம் என்று கூறுமளவிற்கு எம்மிடம் கைவசம் ஒருவிதமான மந்திரஜாலங்களும் இல்லை. எம் கண் காணும் முன்னேற்றப் பாதை இன்னும் கரடுமுரடானதாகவே இருக்கிறது. இருப்பினும் நாம் போகும் பாதை முன்னேற்றத்தை நோக்கியே செல்கிறது என்னும் நம்பிக்கை எமக்குள்ளது ” எனும் வகையிலான கருத்தை முன்வைத்துள்ளார்.

    எதிர்க்கட்சிகளும் சில பொருளாதார நிபுணர்களும் இவ்வரசாங்கம் எடுக்கும் திட்டங்கள் மிகவும் அதீதமானவை அவை சிறிது மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று கூறிவருகின்ற போதிலும், அரசாங்கம் தமது தீவிர பொருளாதாரக் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் மட்டுமே நாட்டை பொருளாதாரச் சிக்கலில் இருந்து விடுவிக்கும் என்று கூறிவருகிறார்கள்.

    தமது பொருளாதாரக் கட்டுப்பாட்டுத் திட்டங்களின் படி அரசாங்கத்தின் செலவுகளை மட்டுப்படுத்தும் வழிகளைக் கண்டறிந்து நடைமுறைப்படுத்தும் பணியில் தீவிர கவனம் செலுத்துகிறார்கள். அதில் ஒரு பகுதியாக வருமானம் குறைந்த மக்களின் வருமானத்தை ஈடுகட்டும் முகமாக அளிக்கப்பட்டு வந்த உதவித் தொகையில் உள்ள சீர்கேடுகளைக் களைவதால் ஏறத்தாழ 300 மில்லியன் பவுண்ட்ஸ் அளவிலான தொகையை மீதப்படுத்தலாம் எனும் கணிப்பை முன்வைக்கிறார்கள்.

    இது தொடர்பாக ஆராய்ந்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் படி பிரதமர் டேவிட் கமரனால் முன்னாள் கன்சர்வேடிவ் கட்ச்சித் தலைவர் “இயன் டன்கன் சிமித்” அவர்கள் பணிக்கப்பட்டார்.

    இரண்டுவருட கால ஆராய்ச்சியின் பின்னால் அவர் தனது அறிக்கையில் லேபர் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த இந்த குறைந்த வருமானவுள்ளவர்களுக்கான உதவித்தொகையின் பால் சுமார் 171 மில்லியன் பவுண்ட்ஸ் வரை செலவிடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    இவ்வுதவித் தொகை ஒன்றே இங்கிலாந்து அரசாங்கத்தின் சமூக சேவை பட்ஜெட்டில் ஏறத்தாழ 60% பங்கை வகித்திருந்தது எனவும் இதன் நடைமுறையாக்கல் சரியான வகையில் பரிசோதிக்கப்படாததினால் பலர் இதனைச் துஷ்பிரயோகம் செய்து முறைகேடாக நிதி உதவியைப் பெற்றுள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அது மட்டுமன்றி இவ்வுதவித் தொகைகளை பெறுவது மிகவும் இலகுவாக இருந்த காரணத்தினால் இங்கிலாந்துக்குள் சட்ட விரோதமாக நுழைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    இவரின் இக்குற்றச்சாட்டுகளை இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் அப்போதைய அரசாங்கத்திலிருந்த லேபர் கட்சி வெறும் ” அரசியல் லாபத்திற்காக தம்மீது சுமத்தப்படும் கீழ்த்தரமான குற்றச்சாட்டு ” என்று மறுதலித்துள்ளார்கள்.

    ஆனால் அரசாங்கத்தின் சார்பான “இயன் டன்கன் சிமித்” அவர்களோ அனாவசியமான செலவு மட்டுமல்ல அது. சம்பந்தப்பட்ட மக்களுக்கு உதவுவதைக் காட்டிலும் அவர்களை வருமைக் கோட்டிற்குக் கீழே தள்ளி அங்கேயே வைத்திருக்கும்படியான ஒரு செய்கையே இது என்றும் கூறியுள்ளார்.

    இவரின் கூற்றில் ஒருவகை உணமை இருப்பது போலவும் தென்படுகிறது. வாழ்க்கையின் அடிமட்டத்திலிருப்பவர்களுக்கு உதவுவது எத்துனை அவசியமோ அவர்கள் அந்நிலையிலிருந்து வெளியே வந்து தமது உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெற எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டியதும் ஒரு அரசாங்கத்தின் கடமையாகும்.

    இல்லையேல் அரசாங்கம் அளிக்கும் உதவித் தொகையில் தங்கியிருக்கும் ஒரு பரம்பரையை உருவாக்கும் செயலை ஊக்குவிப்பதாக இத்திட்டங்கள் அமைந்து விடும்.

    அதே சமயம் வேலையில்லாமல் திண்டாடும் மக்கள் கெளரவத்துடன் வாழ்வதற்கு நாட்டின் அடிமட்ட வாழ்க்கைச்செலவு என்று கனிக்கப்பட்ட தொகையை அளிக்கும் அரசின் சமூகக் கடமை பாராட்டப்பட வேண்டியதொன்றாகிறது.

    அர்சாங்கமோ அன்றி அரசியல்வாதிகளோ தனியான இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல அவர்களும் சாதாரண மனிதர்களே ! தமக்க%E

    Share