நான் அறிந்த சிலம்பு – 55
மலர் சபா
புகார்க் காண்டம் – 07. கானல் வரி
(10)
வலைகொண்டு வாழ்வு நடத்துபவர்
வாழ்கின்ற சேரிதனிலே
வலை உலர்த்தியிருக்கும் முற்றத்திலே
பூங்கொத்து ஒன்றினைக் கைதனில் ஏந்தி
விற்பதற்குரிய வற்றல் மீன்களைக்
காத்து நின்றாள் கன்னியொருத்தி.
அவள்தானும்
தான் வேண்டிய உருவம் எடுத்துக் கொண்டு,
கொலைத்தொழில் புரியும்
நீண்ட வேல்போன்ற விழிகளுடன்,
அலைகின்ற நீரையுடைய குளிர்ந்த கானகத்தில்
இங்ஙனம் வாழ்ந்து வருவதை
முன்னரே நான் அறியேனே!
அறிந்திருந்தால் அங்குதான்
சென்றிருக்க மாட்டேனே!
(11)
நிலை வரி
தமியளாக இடத்து எதிர்ப்பட்ட தலைவியை நோக்கித் தலைமகன் கூறுதல்
கண் எனக் கயலையும்
புருவம் என வில்லையும்
கூந்தல் எனக் கார் மேகத்தையும்
இவற்றுடன் சேர்த்து
எதிர்வரும் என்னையும்
வருத்துகின்ற கொடுந்தொழிலையும்
எழுதி வைத்துள்ள
இவளது முகம்தான் திங்களோ?!
அழகிய பரப்புடைய
வானத்தில் இருந்தால்
பாம்புகள் விழுங்கிவிடுமோ
என்று அஞ்சியே
மீன்பிடிக்கும் படகுகள் கொண்டு
வாழ்க்கை நடத்திவரும்
பரதவர் வாழும் சிற்றூரில்
தான் வந்து வாழ்கின்றதோ?!
அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram19.html
படத்துக்கு நன்றி:
http://www.shutterstock.com/pic-41345068/stock-vector-fishing-boat-with-seagulls-in-the-night.html