காவிரிக்கு ஒரு கடிதம்
முகில் தினகரன்
(1) காவிரிக்கு ஒரு கடிதம்
அன்புள்ள காவிரியே!
என் நினைவின் பக்கங்களில்
மறைத்து வைத்திருக்கிறேன்
நீ
தளும்பித் தளும்பிச் சிரித்த
அந்தக் கருப்பு வெள்ளைக் காட்சிகளை!
உன்னில் மூழ்கிக் குளித்து
உவகை ஊஞ்சலாட
நயாகரா நீர்வீழ்ச்சியே
விண்ணப்பமிட்ட காலமுண்டு!
புது வெள்ளக் காலத்தில்
பூப்படைந்த பெண்ணாய்
நாணம் பொங்க நீ நளினத்தோடு
வளைந்து நெளிந்து
வருவதைப் பார்த்த இந்தக் கண்கள்
இன்று நீரற்று
வெள்ளச் சேலை கட்டிய விதவையாய்…
மொட்டையடித்து நீட்டிப் படுத்திருக்கும்
உனைக் கண்டு சிந்திய கண்ணீர்
எப்போதோ உன்னிடம் பருகிய நீரின் எச்சம்!
உன் கரையில் நடந்து போகும்
உல்லாசத்திற்காக மட்டுமே
நாள் தவறாமல் பள்ளிக்குப் போனவன் நான்!
காவிரியே…
எங்களுக்கு நீதான்
எகிப்தின் நைல்..லண்டனின் தேம்ஸ்…
நியூயார்க்கின் ஹட்ஸன்…ஆக்ராவின் யமுனை!
ஆம்!
சங்கத் தமிழனின் பெருமை நீ
எங்கள் பழைய வாழ்க்கையின்
மிச்சம் நீ….ஆனாலும்
இந்த ஊரை விட்டுப் பலர் வெளியேற
உன்னோட வறட்சியே காரணமானதுதான்
இதயத்தைப் பிழியும் ரண காவியம்!
எங்கள் விவசாய இல்லங்களில்
விடிவிளக்காய் இருந்து விட்டு
இன்று
வறுமை இருட்டை அவர்களுக்கு
வாழ்க்கையாக்கி விட்டாயே..
எந்தப் பாவத்திற்கான பழி தீர்ப்பு இது?
ஓ…இங்கிருக்கும் சில
அரசியல் அகத்தியர்கள்
தங்கள் சுயநலக் கமண்டலத்தில்
உனை அடைத்து விட்டாரென்ற
கோபத்திற்கா?
இறுதியாய் காவிரி..
எனக்கு நம்பிக்கை இருக்கின்றது
மீண்டும் பொங்கிப் பெருகி நீ வருவாய்!
தளும்பித் தளும்பி நீ சிரிப்பாய்!
அப்போது..
உன் கரையிலிருக்கும்
ஏதேனுமொரு சுடுகாட்டில்
என் உடல் எரிந்து கிடக்கும்
ஆனாலும் நான் மகிழ்வேன்!
(2) எல்லைகளில்லா ஓர் உலகம் வேண்டும்.
தொல்காப்பியம் தந்த தொன்மைத் தமிழுக்கு…
வள்ளுவம் வழங்கிய வண்டமிழுக்கு….
இதிகாசங்கள் ஈந்த இயற்றமிழுக்கு….
குறள்நெறி கண்ட தெய்வீகத் தமிழுக்கு….
எல்லைகளில்லா ஓர் உலகம் வேண்டும்!……….
ஆம்!
கன்னித் தமிழும் கணிணித் தமிழும்
கைகோர்த்து நிற்க,
அறிவியல் தமிழும் ஆட்சித் தமிழும்
அரவணைத்து நடக்க,
சட்டத் தமிழும் மருத்துவத் தமிழும்
சம காலத்தைச் செழிப்பாக்கிட,
சென்னைத் தமிழும் செட்டிநாட்டுத் தமிழும்
மட்டிலாக் காப்பியமாய் மலர்ந்திருக்க,
தஞ்சைத் தமிழும் நெல்லைத் தமிழும்
தலைமுறை தாண்டித் தத்துவம் பொழிய,
மதுரைத் தமிழும் மலையகத் தமிழும்
மணிப்பிரவாளமாய் மாண்பு காட்ட,
கொங்குத் தமிழும் குமரித் தமிழும்
செங்கோலேந்தி சிம்மாசனம் அமர,
செந்தமிழ் சீர் பெற..
தனித்தமிழ் தரம் பெற…
நற்றமிழ் நயம் பெற…
முத்தமிழ் முழங்கியெழ…
எல்லைகளில்லா ஓர் உலகம் வேண்டும்!……….
ஆற்றுப் படைகளை
சேற்றுப் படைகளாக்கி
அந்தாதிகளைப் பந்தாடி
ஏலாதிகளை ஏலம் கூவி
நிகண்டுகளை நிர்வாணமாக்கும்
சொத்தைச் சமூகத்தின் சுயம் தொலைத்த
வித்தைத்தமிழரை விரட்டியடித்து
வீரத் தமிழரின் விலாசங் கூற
எல்லைகளில்லா ஓர் உலகம் வேண்டும்!……….
சொல்லை அறிந்து…அதன்
பொருளை அறிந்து!
தூய்மை அறிந்து….இடத்
தன்மை அறிந்து!
பயனுறுத்தும் பாவலரும்
நயனுறுத்தும் நாவலரும்
தனித் தமிழ் ரதத்தில் தடையின்றி உலா வர…
எல்லைகளில்லா ஓர் உலகம் வேண்டும்!………… .
அஹிம்சை வேதத்தால் அவனியழுக்கை
அமைதியாய்க் கழுவிய அண்ணல் காந்தியும்!
அன்புத் தேனை ஆன்மீகச் சங்கில்
வார்த்துத் தந்த வள்ளலாரும்!
எழுதுகோலில் நெருப்பை நிரப்பி
கனல் கவி கக்கிய பாரதியும்!
மரணிக்காது உலவும் மாத்ரு பூமி வேண்டும்!……
படத்திற்கு நன்றி:
http://www.nivalink.com/orangecounty/