சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

அரசியல் என்பது இன்று பல  கோணங்களில் இருந்து பலவகையான கண்ணோட்டத்திற்கு உள்ளாக்கப்படுகின்றது. ஆனால் தெரிந்தோ, தெரியாமலோ அன்றி சரியாகவோ , தவறாகவோ இவ்வரசியலே மனிதர்களுடைய அன்றாட வாழ்க்கையைத் தீர்மானிக்கும் காரணியாகிறது.

வெளிப்படையாக இது தெரியாவிட்டாலும் பலருடைய மனங்களில் அரசியலும், தம்முடைய வாழ்க்கையும் வேறுபட்டன எனும் எண்ணம் இருந்தாலும் இரண்டும் ஒன்றோடொன்று பின்னப்பட்டிருப்பது தவிர்க்கப்படமுடியாத உண்மையாகும்.

ஆனால் ஒவ்வொருவரும் இவ்வரசியலில் எத்துனை தூரம் பங்குபெறுகிறார்கள் என்பது ஒருவருக்கொருவர் வித்தியாசப்படுகிறது. சிலர் “ராமன் ஆண்டாலென்ன ? இராவணன் ஆண்டாலென்ன ? தட்டிலே சோறும், பையிலே பணமும் இருந்தால் சரி ” எனும் வகையில் நடந்து கொள்வார்கள். வேறு சிலரோ தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் அரசியலே நிர்ணயிக்கிறது எனவே அதைப்பற்றிய தனது கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது என்று நூறு சதவிகிதம் அரசியலோடு தம்மைப் பிணைத்துக் கொள்வார்கள்.

மற்றும் சிலரோ இவை இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு நிலையை எடுத்துக் கொள்வார்கள்.

தான் வாழும் நாட்டினதும், தனது மக்களினதும் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதில் தமக்கு முக்கிய பங்கு இருக்க வேண்டும், தான் சார்ந்த சமூகத்தின் அபிலாஷைகளை உரக்க உச்சரிக்கும் உரிமை தனக்கு வேண்டும் என்னும் மனிதர்கள் தமது வாழ்வாதாரத்தையே அரசியலில் தங்க வைத்து அரசியல் கட்சிகளில் தம்மை இணைத்துக் கொண்டு பணியாற்றுவார்கள்.

மனிதர்கள் அனைவரும் மனிதர்களாக வாழ்கிறார்கள் என்பது யதார்த்தமாகாது. மனிதர்களின் மனதை பேராசை ஆட்டிப்படைக்கிறது. ஆனால் அது ஒவ்வொருவருடைய மனங்களிலும் வித்தியாசமான விகிதங்களில் வித்தியாசமான வடிவங்களை எடுக்கிறது.

அத்தகைய வடிவங்களில் ஒன்றாக சில சந்தர்ப்பங்களில் அரசியலைத் தமது பேராசைகளுக்கு சாதகமான ஒரு கருவியாகப் உபயோகிக்கும் சில அரசியல்வாதிகளைப் பார்க்கிறோம் அதற்காக அனைத்து அரசியல்வாதிகளும் அத்தகைய மனப்பான்மை கொண்டவர்கள் எனும் கருத்தை உள்வாங்கிக் கொள்வது சரியாகாது.

என்ன சக்தியின் இக்கருத்து எதற்கு நம்மை அழைத்துச் செல்கிறது என்று எண்ணுகிறீர்களா ?

இன்று அதாவது 10ம் திகதி ஜனவரி மாதம் 2013 இலிருந்து ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் இங்கிலாந்தின் பிரபல்யமான கருத்தாடல் வானொலியான எல்.பி.சி (L.B.C) எனும் வானொலியில் காலை ஒன்பது மணிக்கு இங்கிலாந்தின் கூட்டரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான லிபரல் டெமகிரட்ஸ் கட்சியின் தலைவரும். இங்கிலாந்தின் உதவிப் பிரதருமான திரு.நிக் கிளெக் (Nick Clegg) அவர்கள் மக்களுடனான நேரடி வானொலிக்கூடான கருத்தாடல் ஒன்றில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.

இவ்வானொலியின் புகழ் பெற்ற பல விருதுகளைப் பெற்ற அறிவிப்பாளரான நிக் வெராரி (Nick Ferrari) அவர்கள் நடத்தும் காலை நிகழ்ச்சியிலே இவரது கருத்தாடல் நிகழ்கிறது.

மிகவும் பிரபல்யம் இழந்த நிலையிலுள்ள கூட்டரசாங்கத்தின் தலைவர்களில் ஒருவர், தனது கட்சியின் செல்வாக்கு நிறைந்த ஒரு காலப்பகுதியில் இத்தகைய துணிச்சல் மிக்க ஒரு நடவடிக்கையில் இறங்கியதன் பின்னனியில் இரு காரணங்கள் இருக்கலாம்.

முதலாவதாக தான் கொண்ட கொள்கையில், தான் மேற்கொண்ட நடவடிக்கையில், தான் தனது கட்சியை இட்டுச் சென்ற பாதையில் தனக்கிருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கையின் அடித்தளத்தில் இருந்து எழுந்த ஒரு உத்வேகமான நடவடிக்கையாக இருக்கலாம்.

இரண்டாவதாக தனது கட்சியோ செல்வாக்கு இழந்து விட்டது. இக்கூட்டரசாங்கத்தின் செயல்பாடுகளின் விளைவுகள் எதிர்மறையாகத்தான் இருக்கப் போகிறது, இன்னும் இரண்டரை வருடங்களில் பொதுத்தேர்தலை எதிர்கொள்ள‌ வேண்டிய நிலையில் இனி இழப்பதற்கு எதும் இல்லை எனும் “தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன ? முழமென்ன ? ” என்பது போன்ற ஒரு தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த நடவடிக்கையாக இருக்கலாம்.

நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு வித்தியாசமான யுகம். இங்கு  தர்மத்தின் வழி நடந்தால் வெற்றி நிச்சயம் என்று நம்பும் தலைமுறை குறுகிக் கொண்டே செல்கிறது. காந்தி, காமராஜர், மொரார்ஜி தேசாய், அறிஞர் அண்ணா போன்ற அரசியல் தலைவர்கள் அருகிக் கொண்டு வருகிற காலம்.

இன்றைய அரசியல் களம் வெறும் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் மட்டுமல்ல சமூகவலைத்தளங்கள் இன்றைய அரசியலில் பெரும் பங்களிக்கிறது.

இது எவ்வாறாயிருப்பினும் இன்றைய காலகட்டத்தில் இங்கிலாந்தின் உதவிப் பிரதமர் இக்கருத்தாடலில் பங்கு கொள்ள முன்வந்திருப்பது மிகவும் ஒரு துணிச்சலானதும், வரவேரற்கப்படக் கூடிய ஒரு விடயமாகும்.

உலகமெங்கிலும் ஜனநாயக அரசியல் ஒரு ஆட்டம் கண்டு தளர்ந்த நிலையிலுள்ளது. இளைய தலைமுறையினர் அரசியலிலும், ஜனநாயகத் தேர்தல்களிலும் சலிப்படைந்து கொண்டு வருகிறார்களோ என்று எண்ணத்தோன்றும் வகையில் சமீபத்திய தேர்தல்களில் மக்களின் பங்கெடுப்பின் விழுக்காடு அச்சமடைய வைத்திருக்கிறது.

இப்போது எமக்குத் தெவையானது எமது அரசியல்வாதிகள் தாம் நடத்தும் அரசியல் நேர்மையானதும் சமூகத்தின் வளர்ச்சியிலும், நல்வாழ்வினிலும் அக்கறை கொண்டுள்ளது எனவும் மக்களுக்கு உணர்த்தும் வகையில் முன்னெடுக்கும் நேர்மையான அரசியலே ஆகும்.

ஒவ்வொரு அரசியல் கட்சியும் அதில் போட்டியிடும் வேட்பாளர்கள், தலைவர்கள் வெவ்வேறு அபிப்பிராயங்களைக் கொண்டிருப்பதே யதார்த்தம். ஆனால் தமது கொள்கைகளில் அவர்களுக்கு உண்மையான பிடிப்பும், அதன் அடிப்படையில் தாம் எடுக்கும் நடவடிக்கைகளை நியாயப்படுத்தக்கூடிய வலுவும் இருந்தால் மக்களுடன் எத்தகைய கருத்தரங்குகளிலும் ஈடுபடுவதில் தயக்கம் காட்ட வேண்டிய தேவையிருக்காது.

இன்று காலை நடைபெற்ற கருத்தரங்கிலே திரு.நிக் கிலெக் அவர்களிடம் மிகவும் சிக்கலான கேள்விகள் தொடுக்கப்பட்டன. அவரது கட்சித்தொண்டர் ஒருவர் அவரிடமன் தமது கட்சி செல்லும் பாதையைக் கண்டு தான் வெட்கப்படுவதாகக் கூறி தனது கட்சி அங்கத்துவ அட்டையைக் கிழித்தெறிவதாகக் கூறினார்.

தான் எதிர் நோக்கிய சிக்கலான வினாக்களுக்கு அவர் அளித்த விடைகள் எத்தனை துல்லியமானவை என்பதோ அன்றி கட்சியின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்த அங்கத்தவர்களை அவர் சமாளித்த விதத்தையோ ஆதரிப்பதோ அன்றி எதிர்ப்பதோ அல்ல எனது நோக்கம்.

இவரது இம்மாதிரியான ஒரு வழிகாட்டுதல் இங்கிலாந்தில் மட்டுமல்ல உலகெங்கிலும் ஒரு திடகாத்திரமான அரசியல் கருத்தாடலுக்கு வழிவகுக்கும் என்பதைச் சுட்டிக் காட்டுவதே எனது நோக்கமாகும்.

இவரது இந்நடவடிக்கை சரிந்து போயிருக்கும் இவரது செல்வாக்கையும், இவரது கட்சியின் செல்வாக்கையும் தூக்கி நிறுத்துமா ? அன்றி இன்னும் சரித்து விடுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *